Sunday, November 1, 2009

ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் - உலகக் கொடுரங்களுக்கு அப்பாற்பட்ட சித்திரத்தின் வர்ணங்கள்

முதல் பகுதி

மலேசிய சிறுகதை விமர்சகர்களில் குறிப்பிடத்தக்கவர் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு  ஆவார். தொடர்ந்து பல மலேசிய இலக்கிய போட்டிகளில் விமர்சகராகவும் நீதிபதியாகவும் இருந்து வருவதோடு பல நல்ல சிறுகதைகளையும் படைத்தவர். அவருடைய படைப்பு குறித்து பலவகையான முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவியபோதும் விமர்சக துறையில் அவருடைய பங்கு மறுக்க முடியாதது.  எளிய வாசகனுக்கும் உரிய விமர்சன மொழி அவருடையது.

   ஒவ்வொரு படைப்பாளனின் படைப்புகளும் விமர்சிக்கப்பட வேண்டும். மலேசிய சூழலில் இலக்கியம் குறித்து அல்லது இலக்கியம் மீதான சம்பிரதாய விமர்சன கோட்பாடுகளுக்கு எதிராக மாற்று விமர்சனப் பார்வை முன்வைக்கப்பட வேண்டும். எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுச் சிந்தனை வழக்கமான அதிகாரங்களுக்கும் பதவி பீடங்களுக்கும் கூஜா தூக்கும் மனோபாவங்களை உடைக்க முற்பட வேண்டும். இளம் எழுத்தாளர்கள் மூத்த எழுத்தாளர்களை விமர்சிக்கக்கூடாது எனும் மேதாவித்தனமான பார்வைகளைக் களைந்து, விமர்சனத்தில் புதுமையைக் கொண்டு வர வேண்டும்.

அக்டோபர் மாத யுகமாயினி இதழில் மலேசிய ரெ.கார்த்திகேசுவின் “மல்லியும் மழையும்” எனக் கதையை வாசிக்க நேர்ந்தது. செப்டம்பர் மாத நவீன களத்தின் சந்திப்பில் கூலிம் நண்பர்களுடன் கார்த்திகேசுவின் முக்கியமான சிறுகதையான, “ஒரு சுமாரான கணவன்” குறித்து விவாதிக்கவும் விமர்சிக்கவும் பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருடைய இந்தக் கதையையும் வாசிக்கும்போது இரண்டிற்கும் முக்கியமான சில வேறுபாடுகளை அடையாளங்காண முடிந்தது.

“ஒரு சுமாரான கணவன்” கதையில் புலம் பெயர்ந்து நகரத்தின் அடுக்குமாடி வீடொன்றிற்கு புதியதாக திருமணம் ஆகி வரும் இரு தம்பதிகளின் அக உலகத்தை அதன் உளவியல் சார்ந்து மேலோட்டமாக ஆராய்ந்திருக்கிறது. நடுத்தர மனபாவங்களை முன்வைத்து வாழ்வின் மீதான மதிப்பீடுகளைக் கூர்மையாக்கும் கதையின் கடைசியில் ரொட்டி சானாய் எடுத்து வரும் அடுக்குமாடியின் கீழுள்ள கடைக்காரனின் பாத்திரத்தின் மூலம் வாழ்வின் புதிய எதார்த்தங்களை படைப்பிற்குள் கொண்டு வருகிறார். ரெ.கா-வின் எழுத்து சிக்கலானவை அல்ல, மொழிநடையும் மிக இயல்பாக எல்லாரையும் (சனரஞ்சக வாசகனையும்) கவரக்கூடியது. ஆனால் வெறும் கவர்ச்சிக்காக எழுதக்கூடியவரும் அல்ல. மிக எளிமையாக மேல்தட்டு – நடுத்தர மக்களின் வாழ்வைப் படைப்பாக்கியவர். (இன்னொரு மூத்த படைப்பாளி ஒருமுறை – ரெ.காவின் எழுத்து மேல்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமே சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தார்) இது எழுத்தாளனின் தேர்வு குறித்தது. அவருடைய “அந்திம காலம்” நாவல் மேல்தட்டு எழுத்து கிடையாது என்பதையும் தனது எழுத்தின் மூலம் காட்டியிருக்கிறார். ஆனால் ஒட்டு மொத்தமாக அவரது படைப்பை வாசிப்பவர்களுக்கு, அவரது எழுத்து மேல்தட்டு மக்களின் அக உலகத்தையும் சிக்கல்களையும் விநியோகம் செய்வதாகவே தோன்றலாம்.

“மல்லியும் மழையும்” கூட ஒரு மேல்தட்டு குடும்பத்தின் வாழ்க்கையையும் அந்தக் குடும்பத்திலுள்ள தாத்தா பேத்தியின் உறவையும் முன்வைத்து, குழந்தையின் அகவியலைத் தொட்டு எழுதியிருக்கிறார். கதையின் ஆரம்பத்தில் வீட்டின் சில வர்ணனைகளிலும், வீட்டில் பணிப்பெண் இருப்பதாகக் கூறும் இடங்களிலும் இது பணக்கார குடும்பம் என அவதானித்துக் கொள்ளலாம். அடுத்ததாக மல்லி கதைபாத்திரமும், தாத்தா கதைபாத்திரமும் உரையாடல்களில் சந்தித்துக் கொள்ளும் இடங்கள்தான் கதையின் மையம். சோர்வு தட்டிய தாத்தாவின் உலகம் தளர்ந்தவையாக வர்ணங்கள் இழக்கத் துவங்கும் இயலாமைகளாகப் புரிந்துகொள்ளப்படும் வேளையில் பேத்தியின் உலகம் வர்ணங்களால் நிரம்பக்கூடியதாக அபாரமான கற்பனைவாதங்களுடன் வளரக்கூடியதாகவும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

மல்லி வர்ணம் தீட்டும் ஓர் ஓவியத்தைப் பற்றி கதையில் விவரிக்கப்படும் இடம் மிக முக்கியமானவை. “ பிள்ளைகள் விளையாட்டுப் பூங்காவின் ஓர் ஊஞ்சல், ஒரு சறுக்குப் பலகை, ரெட்டை ஜடை போட்ட சிறுபெண் சடை பறக்க ஓட்டம், ஒரு பந்து, உதைக்க காலைத் தூக்கிய பையன், ஒரு குருவி, தூரத்தே மலைகளும் சூரியனும்” என்று அந்த ஓவியத்தைப் பற்றி விவரம் இடம் பெறுகிறது. ஒவியம் முழுக்க எல்லாமும் மிகவும் அழகானவை. ஆனந்தமான கொண்டாட்டங்களை முன்னிறுத்தக்கூடிய பொருள்கள், செயல்கள் என குழந்தைகளின் உளவியலை கட்டமைப்பது இந்த அழகியல்தான் எனச் சொல்லப்படுகிறது. அடுத்த வரியில், “ உலகின் கொடுமைகளைக் குழந்தைகளுக்குக் காட்டாமல் விளையாட்டையும் ஆனந்தத்தையும் மட்டுமே வடிக்கட்டி காட்டும் சித்திரங்கள்” என எழுதியிருக்கிறார். இதுவொரு குழந்தை உளவியல் அணுகுமுறை. உலகியல் உக்கிர நடப்பின் எல்லைகளிருந்து குழந்தைகளின் அக அமைப்பை அகற்றும்/கட்டமைக்கும் உத்தி.

எனக்கு மாணவர்கள் எழுதும் “கடற்கரை” குறித்த கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. “கடற்கரைக்குச் சுற்றுலா சென்றோம்” அல்லது “கடற்கரை” எனத் தலைப்பிட்ட கட்டுரையை 20 மாணவர்களுக்கு அளித்திருந்தேன். பிறகு அக்கட்டுரைகளைத் திருத்தும் பொழுது மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. ஒட்டு மொத்தமாக எல்லாம் மாணவர்களும் கடற்கரை குறித்து ஒரேவிதமான ஒழுங்குகளையே தனக்குள் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஏறக்குறைய ஒரேவிதமான கடற்கரையைத்தான் கட்டுரைக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக ஒரு தம்பி ஒரு தங்கை, இருவரும் கடலில் குளிக்கிறார்கள், கண்டிப்பாக அவர்களின் கையில் ஒரு பந்து இருக்கிறது, மேலும் சிலர் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பர், தூரத்தில் சிலர் நீச்சல் அடித்துக் கொண்டே இருப்பர், எல்லாம் அம்மாக்களும் உணவு பறிமாறிக் கொண்டிருக்கிறார்கள், இந்த அப்பாக்களுக்குக் கடற்கரைக்கு வந்தால் நாளிதழ் படிப்பதைத் தவிர வேறு சுவாரிசயங்கள் இல்லை போல(எல்லாம் அப்பாக்களும் இதைத்தான் செய்கிறார்கள் மாணவர்களின் கட்டுரையில்).

மாணவர்கள் ஏற்கனவே வாசித்த மாதிரி கட்டுரையின் அமைப்பை தன் அகத்தில் வலுவாக ஓர் ஒழுங்காக வைத்துக் கொண்டிருப்பதன் விளைவாக இதை அணுகலாம். அவர்களின் கடற்கரை ஆனந்தங்களின் கொண்டாட்டங்களாக மட்டுமே கட்டமைப்பக்கப்பட்டு போதிக்கவும் படுகிறது. இது எங்கிருந்து மாணவர்களின் அகத்தில் ஒட்ட வைக்கப்படுகிறது என்றால், ஒன்றாம் ஆண்டு இரண்டாம் ஆண்டுகளில் மாணவர்கள் வர்ணம் தீட்டும் எல்லாம் கடற்கரை ஓவியங்களும் இப்படிப்பட்ட சித்திரமாகத்தான் இருக்கிறது. என்னுடைய (1989) ஒன்றாம் பருவத்தில் நான் வர்ணம் தீட்டிய கடற்கரை ஓவியத்தின் ஒழுங்குகள்தான் இப்பொழுதும் (2009) இருந்து வருகிறது. மாணவர்களின் கடற்கரைகள் மாற்றமே இல்லாமல் அப்படியே இருக்க வைக்கப்படுகிறதா?

கதையில் மல்லி, மனிதர்களின் உடலுக்கு ஒழுங்குகளைச் சிதைக்கும் வகையிலான வர்ணங்களைத் தீட்டுகிறாள். ஒரு காலுக்கு மஞ்சள் வர்ணமும் இன்னொரு காலுக்கு பளுப்பு வர்ணமும் தீட்டி தாத்தாவின் சோர்ந்துபோன அகத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறாள். இதுவரை பார்த்து பழகிப் போன ஒழுங்குகளை அகற்றுவது தடுமாற்றத்தையும் பதற்றத்தையும் கொடுக்கும் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மல்லி சொல்கிறாள், “இது இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் தாத்தா, எல்லாம் ஒரே கலர்லே இருக்கறது நல்லா இல்லெ”. எல்லாவற்றின் மீதும் சோர்வளிக்கக்கூடிய பிம்பங்களின் மீதும் தனது படைப்பாற்றலின் மூலம் மாற்று வர்ணங்களைப் பூசி அதன் ஒழுங்கை உடைத்து அழகைக் காட்டுகிறாள் மல்லி. அது அவளின் தரிசனம், குழந்தைகளின் உளவியலின் மீதான நமது பாரம்பரிய புரிதலை மாற்றிக் காட்டும் பார்வை.

இரண்டாம் பகுதி

ஆனால் கதை நெடுக அதீதமான குழந்தையின் மொழி, எல்லாம் புத்திசாலித்தனங்களையும் ஆழமான சொல்லாடல்களையும் விவாதங்களையும் குழந்தைகள் பேசுவது போலவே சித்தரிப்பது, அவர்களின் எளிமையை மீறும் ஒரு வன்முறையாகவும் கருதக்கூடும். மழையின் வர்ணத்தை உணர்த்துவதன் மூலம் தாத்தாவின் உலகம் ஒரு மானுட உச்சத்தை எட்டுவதாக எழுதப்பட்டிருக்கிறது. தாத்தாவின் உள்ளத்தில் தோன்றும் உளக்குரலாகத் துவங்கும் கதை கடைசியில் அவருக்குள்ளே புதிய புரிதலுடன் சரிகிறது.

பல இடங்களில் கதையில் வரும் தாத்தா ஓர் இலக்கிய வாசகர் அல்லது எழுத்தாளர் எனப் புரிந்துக்கொள்ளக்கூடிய சாத்தியங்களின் மூலம் காட்டப்பட்டுருக்கிறார். காலச்சுவடு, சு.ரா, சிறுகதை என மீண்டும் அறம்/இலக்கியம் சார்ந்த கூறுகள். (வைரமுத்துவின் வரிகளைக் காட்டுவதன் மூலம், மழை குறித்து வைரமுத்து மட்டுமே எழுத முடியும் போல, அல்லது மழையைப் பார்த்தால் வைரமுத்துவின் வரிகள் மட்டுமே ஞாபகத்திற்கு வரும் போல என்கிற சலிப்பு உண்டாகுகிறது- இது என் பிரச்சனை)

இன்னொரு இடத்தில் “சிறுகதையை எழுதிவிட்டால், ஓர் எழுத்தாளன் தாங்கள் அதை வாசகனுக்கு விளக்க வேண்டியதில்லை, என்ற விதியைத் தாங்களாக வகுத்துக் கொண்டு அவர்களாக வாசகர்களிடமிருந்து ஒளிந்து வாழ முடிகிறது” எனக் கதையாசிரியரின் வரி முன்னுக்குப் பின் முரணாக வந்து விழுகிறது. இலக்கியத்தில் பாராம்பரியமான ஒழுங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்கிற ஒரு சிந்தனையை முன்னிறுத்தும் வகையைச் சேர்ந்த வரிகள் இவை.

அப்படியென்றால் இனி கதையை எழுதிவிட்டு, அந்தக் கதையைப் பற்றி வாசகனிடன் பக்கம் பக்கமாக விளக்கமளித்து வாசகனின் சுதந்திரத்திற்குள் தலையிட வேண்டுமா? அல்லது அவனது வாசக சுதந்திரத்தை அபக்கறிக்க வேண்டுமா? ஒரு புறப்பொருளையே தனது பேத்தி ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட வர்ணங்களில் தரிசிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கும் கதையில் வரும் தாத்தா, ஒரு படைப்பை, இலக்கியத்தை, ஏன் இவ்வளவு கராரான ஒழுங்குகளுடன் பரிந்துரை செய்கிறார் எனும் கேள்வி எழுகிறது.

2005 என நினைக்கிறேன், தனது “ஊசி இலை மரம்” சிறுகதை தொகுப்பை வெளியீடு செய்ய சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த எழுத்தாளர் ரெ.கா, “ஒரு கதை அதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் பல புரிதல்களை அல்லது எல்லைகளைத் தொடும் முயற்சிகளைக் கொடுக்க வேண்டும், அதுதான் சிறுகதையின் வெற்றி” என தனது விமர்சன உரையில் சொல்லியிருந்தார். அது அப்பொழுது அழுத்தமாக என் மனதில் பதிந்திருந்தது. இன்றும் அப்படியொரு (முன்பைவிட) மதிப்பீடுகள்தான் பற்பல வாசிப்புகளுக்குப் பிறகும் எனக்குள் இருக்கிறது. இது மாறுப்படலாம்.

இதைத் தவிர்த்து, கதையின் மற்றொரு பகுதிகளை, குழந்தைகளின் உலகையும் அதன் அதிசயத்தக்க வர்ணங்களையும் தரிசிக்கும் அழகியலான களமாகக் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. இது எனது விமர்சனம் மட்டுமே. –தொடரும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

2 comments:

ko.punniavan said...

ரெ.காவின் மல்லியும் மழையும் பற்றிய் உங்கள் பார்வையைப்பார்த்தேன். இக்கதையை ரெ.கா எழுதி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும்.இப்பொழுதெல்லாம் அவர் கதைகள் எழுதுவதில்லை.உன்னிப்பாகவே கவனித்துவருகிறேன். ஒரு முறை அதில் தனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறினார்.இருப்பினும் ஒவ்வொரு முறையும் அவரின் கதையைப்படிக்கும்போது ஒரு புதிய கதையை படிப்பதுபோன்ற அனுபவம் உண்டாகிறது. யுகமாயினியில் படித்தபோதும் அவ்வாறு நேர்ந்தது. குழந்தையின் அகம் சார்ந்த பண்புகளை இக்கால சமூகம் புரிந்துகொள்வதில்லை.புரிதல்களூக்கான இடம் அவர்கள் வாழ்வில் மிகவும் கம்மி.ம.மல்லியும் கதை அதனைத்தொட்டுப்பேசுகிறது.குழந்தையிடம் தங்களில் அபிலாசைகளைத்தினிக்கும் பெற்றோர்களின் பண்பு குழந்தை உளவியலுக்கு எதிரான வன்முறை.இதனை மிக மென்மையாகக்கையாள்கிறார் ரெ.கா. வெகு ஜன வாசகப்பரப்பை மலிந்து பெற்றுள்ள ரெ.கா தீவிர வாசகனுக்கான
மதிப்பீட்டுப் பார்வையையும் உள்ளீடாகக்கொண்ட படைப்பைத் தருபவர் என்ற கருத்தாக்கமும் அவர் மேல் உண்டு. ம.மயும் அந்த வகைமயைச் சேர்ந்ததுதான்.

கே.பாலமுருகன் said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி திரு.கோ.புண்ணியவான். அடுத்ததாக உங்கள் கதைக்குத்தான் காத்திருக்கிறேன், விரைவில். . .