திரைக்கதை/இயக்கம்: மதன் குனதேவா
ஒளிப்பதிவு : சண்முகநாதன்
கருத்தாக்கம் : ரஞ்சித்
பிக்ஷெல் நிறுவனம் வழங்கியிருக்கும் “மௌனம்” குறும்படத்தை அண்மையில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மதன் குணதேவா அவர்களால் இந்தியாவில் எடுக்கப்பட்ட இக்குறும்படம் சுமார் 10 நிமிடங்கள்வரை நீளக்கூடியது. தற்போதையை சூழலில் குறும்படங்களுக்கான கருப்பொருள் பெரும்பாலும் வாழ்வின் பெருந்துயரத்தின் மீது படரக்கூடிய அடர்த்திகளைத் தகர்க்கும் வகையிலும் அல்லது அதன் யதார்த்தங்களை முன்வைக்கும் வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
மௌனம் குறும்படம் மரணத்தைப் பற்றி மிக நீளமான ஒரு படிமத்தில் வைத்து காட்டப்படுகிறது. பிண அறையும், பிணங்களும், அந்தப் பிண அறையின் பாதுகாவலரின் பொழுதுகளும் என, வார்த்தைகளற்ற, வசனங்களற்ற காட்சிப்பதிவுகளைக் கடக்கும்போது ஓர் அடர்த்தியான மௌனம் நம்மைப் பற்றிக் கொள்வதை உணர முடிகிறது.
10 நிமிட குறும்படத்தில், பிண அறையில் வெண்துணியால் சுற்றப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும் பிணங்களின் அசையாத காட்சிகளே அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது, மரணம் என்கிற பெருந்துயரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் யதார்த்தங்களைக் கடக்க இயலாமல் தேங்கிப் போன மௌனத்தின் உக்கிரத்தை எந்த வசன விவரிப்புகளுமின்றி கடந்து செல்ல முற்பட்டிருப்பதை அவதானிக்க வாய்ப்புண்டு. ஒரு மரணத்தைச் சுற்றி வீசப்படும் ஓலக் குரல்களும், ஆழ்ந்த பரிதாபங்களும், அழுக்குரல்களும், வசைப்பாடல்களும், துக்க வசனங்களும் என எல்லாமும் கரைந்துவிட்டப் பிறகு, பிணத்தின் அருகே இன்னமும் படுத்திருக்கும் மரணத்தின் மீது மீதமாய் அர்த்தமற்று தேங்கிக் கிடப்பது வெறும் மௌனம் மட்டுமே, அந்த மௌனம் பிண அறையின் சுவர்களிலும் பிண அறையின் பாதுகாவலர் மீதும் ஒழுகிக் கொண்டேயிருப்பதை கலைத்தன்மையுடன் மிக அமைதியாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டதலுக்குரிய முயற்சியாகும்.
செத்த மனிதர்களின் உடலை எந்த உணர்வுமின்றி வெறித்திடும் பிண அறை பாதுகாவலரின் முகப்பாவனை, மரணம் என்ற யதார்த்தம் கொடுத்திருக்கும் முதிர்ச்சியின் குறியீடு அல்லது மரணத்தை ஒட்டிய சலிப்பு என்றும் சொல்லக்கூடும். கடைசியாக வந்திருக்கும் ஒரு பிணத்தைத் துணியில் கட்டும்பொழுது அவரைச் சுற்றியும் அந்தப் பிணத்தைச் சுற்றியும் உருவாகி பெருகி வரும் ஒரு மௌனத்தை அடையாளங்காண முடிகிறது.
சில குறும்படங்கள் வசனங்களைத் தொலைப்பதிலும் வெற்றிப் பெறக்கூடும், அதன் கலையம்சம் அவ்வளவு அடர்த்திற்குரியவை. பிண அறையை இவர்கள் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களில் ஒன்று, ஒரு மரணம் ஆகக் கடைசியாக சந்திக்கும் மனித இரைச்சல்களுக்கு அப்பால் அடையக்கூடிய மௌனம் பொது புத்திக்கு முரணான துயரத்தைக் கொண்டவையாகும் என அவர்களின் தர்க்க விவாதங்களுக்கு எட்டியிருக்கக்கூடும். அதைக் கையாளும் வகையில் பிணங்களின் அறையின் உக்கிர மௌனத்தினூடாக நுழைந்து அந்த அர்த்தமற்று பிணங்களின் நெடுக வளர்ந்து அடரும் துயரத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குறைந்த ஒளியும் திடிரென அப்பிக் கொள்ளும் இருளும் என எல்லாவற்றையும் உதறியும், மரணத்தின் மீது மீதமாக ஒட்டிக் கொள்ளும் ஒரு மௌனத்தைப் பற்றிய கதை இது. வாழ்த்துகள்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி
2 comments:
இம் மாதிரியான குறும் படங்கள் குறுந்தட்டுக்களில் உள்ளதா? எங்கு பெறுவது?
வாழ்த்துகள்
Post a Comment