“நாம் தினமும் அலட்சியமாகவும் அவசரமாகவும்
கூட்டத்துடன் கூட்டமாகக் கடந்துவிடும் ஒரு தெருவைப் பற்றி
கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது?”
செந்தில் முருகன் ஜவுளிக்கடை இருக்கும் அந்த ரங்கநாதன் தெருவில் ஒரு பரதேசியைப் போல அலைந்து திரிந்தால் மட்டுமே இத்துனை நுட்பமாக அந்தத் தெருவின் மனிதர்களைப் பற்றியும் அந்தத் தெருவின் கதையைப் பற்றியும் சொல்ல இயலும். தெருவோர வியாபாரிகளும் தெருவில் படுத்துறங்கும் தொழிலாளர்களுமென படம் முழுக்க சமூகத்தின் பொருளாதார இடைவெளியில் சிக்கி சிதையும் சமூகத்தின் மீதங்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்கள் வெறும் புத்திஜீவிகளின் மதிப்பீடுகளுக்காகக் கொண்டு வரப்படும் பரிதாப கதைப்பாத்திரங்கள் கிடையாது. நமது எல்லாம் வகையான மதிப்பீடுகளையும் மீறி வாழ்ந்துவிட்டுப் போகும் நிதர்சனம்.
வசந்தபாலன் என்கிற மனிதர் இந்த அங்காடித் தெருவில் புறக்கணிப்பட்டுத் திரியும் யாருமற்ற தனிமையின் பிம்பமாகவோ அல்லது தெருவில் படுத்துறங்கிவிட்டு வெயில் அடங்கியதும் எழுந்து நகரும் ஒரு சாதாரண நாயை போலவோ மிகவும் பிடிமானத்துடன் அலைந்து திரிந்து ஒரு கலையையும் சில மனிதர்களையும் கண்டைந்திருக்கிறார். கலை ஒரு சமூகத்தை வாழ வைக்கும் என்பார்கள். வசந்தபாலனின் மூலம் அங்காடித் தெருவில் கவனிக்கப்படாத ஒரு கலையை சினிமா என்கிற வடிவத்தின் மூலம் சிறு சிறு சமரசங்களுக்குப் பழக்கப்படுத்தி முன்னிறுத்தியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் மலேசியா வந்திருந்த இயக்குனர் ராசி அழக்கப்பன் அவர்களின் உரையாடலிலிருந்து புரிந்துகொண்ட இந்திய சினிமாவின் உலகத்தைப் பிடித்து வைத்திருக்கும் வர்த்தக அடைவையும் செயல்பாடுகளையும் முன்வைத்து பார்த்தால் வசந்தபாலன் இப்படத்தில் பாடல் காட்சிகளையும் நகைச்சுவைக் காட்சிகளையும் புகுத்தியிருப்பது, இன்னும் இரண்டாண்டுகளில் மீண்டும் இது போன்ற தரமான படத்தை வழங்குவதற்கான எதிர்கால (நியாயமான) வர்த்தக திட்டம் என்பதை அறிய முடிகிறது. மூன்று மதிப்பீடுகளை முன்வைத்து இந்த அங்காடித் தெருவின் முன் வந்து நம்மால் நிற்க முடிகிறது.
1. ரங்கநாதன் தெருவின் வாழ்வு
2.சுரண்டப்படும் உழைப்பும் தொழிலாளிகள் மீதான முதலாளித்துவத்தின் அத்துமீறலும்
3. வறுமை என்கிற பிடியின் முன்னால் தப்பிப்பதற்காக அவர்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு காதல்
1. ரங்கநாதன் தெருவின் வாழ்வு
பெரும்பாலும் தமிழ் சினிமாக்களில் சண்டைக் காட்சிகளிலும் அல்லது வில்லன் மாமுல் வசூல் பண்ணும் காட்சிகளிலும் மட்டுமே இது போன்ற அங்காடித் தெருக்களைக் காட்டியிருக்கிறார்கள். அந்தக் காட்சி முடிந்தவுடன் மிகவும் நேர்மையாக நாம் அதையெல்லாம் கடந்துவிடுவோம். ஆனால் காமிராவை அங்காடித் தெருவின் இரைச்சலுக்கும் நகர்விற்கும் நடுவில் நிறுத்திவிட்டு, ஒரு நத்தையின் அசைவுகளை நிதானமாகத் தரிசிப்பது போல ஒரு தெருவின் வாழ்வைக் காட்டியிருக்கிறார் வசந்தபாலன். ஒரு தெருவின் வாழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்ட சினிமா என்பதன் மூலம் இப்படம் இந்திய பொருளாதாரம் எளிய மக்களின் மீது ஏற்படுத்திய வன்முறையை அதன் கலாச்சார நிலப்பரப்பு சார்ந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நுகர்வுத்தன்மையும் தேர்வுகளும் வரண்ட இயந்திரங்கள் பாய்ந்தோடும் நதியின் ஓட்டத்தை மனிதர்கள் எனும் குறியீட்டின் மூலம் நிறைவு செய்து உவமைப்படுத்தி அங்காடித் தெருவெங்கும் நம்மை அலையவிடுகிறார் இயக்குனர்.
யூ டியூப் வீடியோ ஒன்றில் வசந்தபாலன் இரவில் அந்த அங்காடித் தெருவில் நடந்து அலைந்து திரிந்து எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது. அவர் அசலைத் தேடி அலைந்திருக்கிறார். அவர் கண்டடைந்த அந்த அங்காடித் தெருவையும் அதனை மையமாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் எளிய மனிதர்களையும் ஒரு கலை படைப்பாக தருவதற்குரிய அத்துனை முயற்சிகளையும் அங்காடித் தெரு-வில் உணர முடிகிறது. உடல் ஊனமுற்றவர்கள் சமூகத்தில் எல்லாரையும் போல இயல்பாக எல்லாம்விதமான அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பெற்று வாழத் தகுதி இல்லாதவர்கள் எனவும் முழுமை பெற்ற ஒருவன் பெறும் பொருளாதார பலத்தை உடல் ஊனமுற்றவனால் பெற இயலாது எனவும் பொருளாதார சிந்தனைகளை வலுவாக முன்வைக்கும் முதலாம் உலக நாடுகள் நம்புவதாக “Readers Diegest” இதழில் படித்திருந்தேன்.
அங்காடித் தெருவில் வரும் உடல் ஊனமுற்றவர்கள் சமூகத்தில் சாதரணமாகவும் இயல்பாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் பிறரை தன்னுடன் ஒப்பீட்டு பொருளாதார பின்னடைவை உணர்ந்து சோர்ந்து போகாமல் உழைப்பை நம்பி வாழ்பவர்களாகத் தோன்றுகிறார்கள். தெருவில் அமர்ந்து பொருட்களை விற்கும் கண் தெரியாதவரும், அதே தெருவில் விலைமாது ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கே வந்து போகும் குள்ளரும் என உடல் ஊனமுற்றவர்களை வெறும் பரிதாபத்தைச் சம்பாரிக்கும் பிம்பமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவர்களின் யதார்த்த வாழ்வின் மீதான நியாயத்தை மீறாமல் வசந்தபாலன் காட்டியிருப்பது சிறப்பாக அமைந்திருந்தது. மனிதனுக்கு மனிதன் வேறுப்படும் அறம், பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம் என எல்லாம் ஏற்றத் தாழ்வுகளையும் வேறுபாடுகளையும் உற்பத்திக்கும் ஓர் இயந்திரத்தின் வயிறுதான் ரங்கநாதன் தெரு.
“வெயில்” திரைப்படத்தில் நெருப்பெட்டி செய்யும் தொழிலாளர்களின் தெருவை சிறிது நேரம் காட்டிய வசந்தபாலனின் பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ஒரு சமூகத்தின் வாழவையும் அதன் நெருக்கடிகளையும் சலிப்பு தட்டாமல் எந்த விநியோகத்தையும் செய்யாமல் அசலாகக் கொடுத்திருக்கிறார் என்கிற மதிப்பீடு எனக்குள் ஏற்பட்டது. அந்தச் சில காட்சிகளையே(தெருவின் வாழ்வு) ஒரு சினிமாவாக ஆக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அங்காடித் தெருவின் வாழ்வை மேலும் அடர்த்தியான காட்சிகளுடன் பதிவு செய்திருக்கலாமே எனவும் தோன்றியது. படத்தில் அங்காடித் தெருவில் பிரபலமான பேரங்காடியான செந்தில் முருகன் ஜவுளிக்கடையின் உள்ளே நிகழும் கொடுமைகள்தான் அதிகமாகக் காட்டப்பட்டது, கொஞ்சம் வெளியே வந்தபோதும் அது முழுமையான அழுத்தத்தைக் கொடுக்காதது போன்று தோன்றியது. அப்படி முழுமையாகவும் எதிர்ப்பார்க்க முடியாது என்பதும் தெரிந்ததே. ஒரு பார்வையாளனின் வலுக்கட்டாயமான எதிர்ப்பார்ப்பு மட்டுமே.
2. சுரண்டப்படும் உழைப்பும் தொழிலாளிகள் மீதான முதலாளித்துவத்தின் அத்துமீறலும்
இப்பொழுது அங்காடித் தெருவிலிருந்து அங்கே பிரபலமாக இயங்கி வரும் தொழிலதிபர் அண்ணாச்சியின் அடுக்குமாடி பேரங்காடியான “செந்தில் முருகனுக்குள் நுழைவோம். அங்கே எல்லோருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சீருடையும் இறுக்கமான விதிமுறைகளும் இயந்திரத்தனமான கட்டளைகளும் நிரம்பி இருக்கின்றன. முதலாளித்துவம் என்கிற அதிகார அமைப்பிலிருந்து எல்லாம்விதமான கட்டளைகளும் ஒடுக்குமுறைகளும் நேர்த்தியாக நிர்வாக பிம்பத்துடன் அளிக்கப்படும் கொடூரத்தை அங்கே பார்க்க முடிகிறது. அங்கு வேலைக்காகக் கொண்டு வரப்படுபவர்கள் பெரும்பாலும் கிராமப் பின்னனியும் வறுமை பின்னனியும் கொண்டவர்கள் என்பதால் அவர்களை தனது அதிகாரத்திற்குள் வைப்பதிற்கும் உழைப்பைச் சுரண்டுவதற்கும் வசதியாக இருக்கும் என்கிற உண்மையை அப்பட்டமாகக் கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் ஒரு ரூபாய் அவர்களின் சம்பளத்திலிருந்து வெட்டப்படும் என்கிற மிரட்டல் தொழிலாளர்களிடமிருந்து முதலாளிகளால் எதிர்ப்பார்க்கப்படும் உழைப்பின் நேர்மையைக் கட்டமைக்கும் ஓர் அதிகார முயற்சி. முதலாளிகளுக்காக உழைத்துக் கொடுப்பதில் ஓர் உழைப்பாளி என்கிற முறையில் தனது பரிசுத்தமான கடமை என்கிற புரிதலை அவனுக்குள் எந்தச் சலனமும் இல்லாமல் அவனகளிக்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பாக அவனை நம்ப வைத்து கழுத்தறுக்கும் ஒரு வன்முறையை அந்தப் பேரங்காடிக்குள் தாராளமாக நிகழ்ந்துகொண்டிருப்பதை வசந்தபாலன் காட்டுகிறார். இதற்கு முதலாளித்துவத்தின் மீது பயங்கர வெறுப்பும் எதிர்வினையும் இருக்க வேண்டும். அத்தகையதொரு வெறுப்புத்தான் பேரங்காடியில் எல்லாம் தொழிலாளர்களையும் கொடுமைப்படுத்தும் இரண்டாம்தர முதலாளியான சூப்பர்வைசர் கதைப்பாத்திரத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. பார்வையாளன் ஒட்டுமொத்த வெறுப்பையும் அந்தக் கதைப்பாத்திரத்தின் மீது காட்டக்கூடிய ஒரு படைப்பு அந்த அண்னாச்சியின் நம்பிக்கைக்குரிய மேற்பார்வையாளன்.
மையக்கதைப்பாத்திரமான லிங்கு அந்தப் பேரங்காடியில் வேலை செய்து பிற்கு வெளியே வீசப்பட்ட ஒரு பழைய தொழிலாளியைத் தெருவில் சந்திக்கிறான். இந்தப் படத்தில் மிக முக்கியமான கம்யூனிச உரையாடல் இங்குத்தான் நிகழ்கிறது. அந்தத் தொழிலாளி சொல்வது முதலாளி வர்க்கத்தின் ஆக வினோதமான அதே சமயம் உக்கிரமான கொடுமையையும் ஆக்கிரமிப்பையும் முன்வைக்கிறது. முழு உழைப்பும் சுரண்டப்பட்டு, உடல் பாதிக்கப்பட்டது அல்லது தேவையில்லை எனக் கருதப்பட்டு வெறும் சக்கையாகத் தூக்கி வெளியே வீசிவிட்டார்கள். அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்ததால் கால்கள் இரண்டும் நோயால் பாதிக்கப்படு அழுகி நாசமடைந்திருக்கின்றன. அந்தத் தொழிலாளி அவனின் கால்கள் இரண்டையும் காட்டும்போது நமது முகம் மட்டும் சுழிக்கவில்லை, கூடவே உழைப்பாளியின் கால்களை நக்கி நக்கி அதன் மொத்த ஆரோக்கியத்தையும் சுரண்டி தின்ன கொடூரமான முதலாளிகளின் நாக்குகளும் அறுவறுக்கத்தக்க முறையில் நம் முகத்தைச் சுழிக்கச் செய்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் வசனத்தின் உக்கிரம் இங்கு அதிகமான அழுத்தத்துடன் அவரது அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது.
பெரும்பாலும் நீண்டகால பள்ளி விடுமுறைகளில் சுங்கைப்பட்டாணியிலுள்ள பலவகை தொழிற்சாலைகளில் தற்காலிக வேலைகளைச் செய்திருந்த அனுபவம் எனக்குண்டு. அங்கு வெளிநாட்டு தொழிலாளிகள் மிகவும் மோசமாக வழிநடத்தப்படுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அதையும் முதலாளிகளின் தரகர்களான நம் இந்தியர்களே சிலர் செய்வதையும் பார்த்திருக்கிறேன். அதிகாரத்தைக் கடனுக்கு வாங்கி அதை எந்த வலிமையுமற்ற எளிய மனிதர்களின் மீது செலுத்திப் பார்ப்பதில் பலருக்கு சுகம். அவர்களின் எந்த வசதியும் இல்லாத மாட்டுக் கொட்டாய் போன்ற இருப்பிடமும்கூட அங்காடித் தெருக்களில் வரும் தொழிலாளிகளின் நெருக்கடியான இருப்பிடம் போல் ஒத்திருப்பதால் இந்தப் படத்தில் வரக்கூடிய தொழிலாளிகள் தொடர்பான அவதானிப்புகள் எனக்கு பரிச்சியமான விஷயங்களாக இருந்தன. குறிப்பாக கோலாலம்பூரில் வீடியோ கடையில் வேலை செய்தபோது அந்த மேல்மாடியில் தங்கியிருந்த உணவகத்தின் தொழிலாளிகளான இந்தியர்களின் வாழ்வையும் துன்பத்தையும் 14ஆவது வயதிலேயே நேரில் கண்டிருக்கிறேன்.
அங்காடித் தெருவின் ஒரு உபரியாக அங்கே முதலாளிகளின் அதிகார கட்டமைப்பு வெறும் பணம் உற்பத்திக்கும் நோக்கத்திற்காக மிகவும் வலுவாக வன்முறையாக அப்பாவி கிராமத்து இளைஞர்களின் மீது பாவிக்கப்படுகிறது. இதை வசந்தபாலன் மிகவும் துணிச்சலாகச் செய்திருக்கிறார்.
2. வறுமை என்கிற பிடியின் முன்னால் தப்பிப்பதற்காக அவர்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு காதல்
இந்தப் படத்தின் வலுவான சர்ச்சைக்குரிய முதலாளித்துவ எதிர்ப்பையும் ரங்கநாதன் தெருவின் வாழ்வின் உக்கிரத்தை மட்டும் காட்டியிருந்தால் ஏற்கனவே இந்திய சினிமா உலகத்தில் உருவாகி ஆக்கிரமிப்பு செலுத்திக் கொண்டிருக்கும் வர்த்தக அதிகாரம் நிச்சயம் வசந்தபாலனைத் தூக்கி வெளியே வீசியிருக்கக்கூடும் என நினைக்கிறேன். எதிர்நிலையில் சில தேவையான சமரசங்கள் அவருக்குத் தேவைப்பட்டிருக்கக்கூடும். ஆகையால்தான் அத்துனை நெரிசல்களுக்கும் மனித இரைச்சல்களுக்கும் நடுவே ஓர் அழகான காதல் கதையை இயக்குனர் சொல்லியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.
லிங்கு கனி என்கிற இரு இளம் தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்படும் காதலை கவனமாக நகர்த்தி கதையின் உள்ளோட்டமாக அவர்களின் இருப்பை உருவாக்கி கடைசிவரை இழுத்துக் கொண்டு போய் அந்த அங்காடித் தெருவில் நிறுத்துகிறார். இருவரும் எல்லாம்வகையான முதலாளித்துவ கோடுரங்களையும் எதிர்த்து உடைத்து மீண்டும் அந்த அங்காடித் தெருவிலேயே அவர்களின் வாழ்க்கையைப் புதிய நம்பிக்கையுடன் தொடங்குவதாகப் படம் நிறைவடைகிறது.
தொடக்கத்தில் கனி அறிமுகம் ஆகும் காட்சிகள் சினிமாவின் கதைநாயகிகளுக்கே உரிய (கொஞ்சம் மாறுதலுடன்) பாணி. அடிக்கடி காமிரா அவர்களின் காதலுக்குள்ளும் அவர்களின் உணர்வுகளுக்குள்ளும் மூழ்கி மிதப்பதையும் அவ்வப்போது தோன்றும் பாடல்களும், இருவரின் பழைய காதல் கதைகளை மீட்டுணர்தல்களும் சினிமாவின் தீவிர பார்வையாளனுக்கு சலிப்பூட்டுவதாக இருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் அதன் தேவையை இந்திய வணீக ஆக்கிரமிப்பிற்குள் இருந்து பார்ப்பவனுக்கு மட்டுமே தெரியக்கூடும்.
படத்தின் முதல் காட்சியில் கனியின் கால்கள் அவளுக்கருகில் இருக்கும் லிங்குவின் கால்களை மிதிக்கின்றன. இது நடப்பது ரங்கநாதன் தெருவிலுள்ள ஒரு பேருந்து நிலையத்தில். படத்தின் இறுதி காட்சியில் அதே கனி இரு கால்களையும் இழந்து சக்கர வண்டியில் அமர்ந்துகொண்டு பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறாள். வாழ்வு தொடங்கும் புள்ளியிலிருந்து அது விரியும் அற்புதத்தின் முரணை இங்கே அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். தப்பித்தல் என்பது அன்றாட வாழ்வின் சலிப்பில் கரைந்து சுமையாகத் தேங்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது என ஏதோ ஆன்மீகப் புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். இறுக்கமான விதிமுறைகள், இயந்திரத்தனமான பின்பற்றுதல்கள் என வாழ்வின் துயரத்திலிருந்து தப்பிக்க மனம் ஒரு மாயை உலகை தனக்குள்ளாகவோ அல்லது தன்னுடன் வாழும் பிறருடனாகவோ உருவாக்கிக் கொள்ள முற்படும். அத்தகைய ஒரு தப்பித்தலின் வடிவம்தான் காதலும்கூட எனச் சிந்திக்க வாய்ப்பிருக்கிறது. கனியும் லிங்குவும் வேலை உலகத்தின் துயரப் பிடியிலிருந்து தப்பிக்க ஒருவர் மீது ஒருவர் அன்பைக் காட்ட முயல்கிறார்கள். இந்த உணர்வு நமது சொகுசான எல்லாம் மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது.
நெருக்கடியான அதிகாரத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டிருக்கும் அடிமை மனத்தின் இருண்ட பகுதியிலிருந்து உறைந்து வெளிப்படும் ஓர் உணர்வுக்கு பல பெயர்களில் காதலும் ஒரு பெயர். அந்தக் காதலில் எத்துனை நேர்மை தேவை என்பதை கனிக்கும் லிங்குவிற்கும் ஏற்படும் மனப்போராட்டமும் சண்டையும் விவாதமும் நிருபிக்கின்றன. பகிர்தல் என்பது மிக உன்னதமாகப் போற்றப்படும் இடத்தில் அந்தப் பகிர்தலில் யாரும் கொடுக்கா முடியாத அன்பிற்க்கு நிகரான ஒரு நேர்மையைத் தூய்மையை மனம் எதிர்ப்பார்ப்பது யதார்த்தமாகும். இத்தகைய சூழலில் கனிக்கும் லிங்குவிற்கும் ஏற்படும் சண்டையும் புறக்கணிப்பும் கவனிக்கத்தக்க அவர்களே உருவாக்கி வாழும் அறத்தைச் சார்ந்ததாகும்.
வசந்தபாலனின் நண்பரான சூர்யாவிடம் கேட்டப்போது, வசந்தபாலன் ஒரு மாதம் அங்காடித் தெருவில் தங்கி அந்தத் தெருவைச் சிறுக சிறுக உள்வாங்கியுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கலைஞனுக்குரிய பார்வையும் அவதானிப்பும் ஒரு அருமையான நேர்மையான கலை படைப்பு உருவாவதற்கு மிக முக்கியமாகும். அதைத் தனது கலை ஆய்வின் மூலம் வசந்தபாலன் சாதித்துள்ளார். பின்னனி இசை அவருக்குக் கைகொடுக்காதபோதும் அந்தக் குறைபாடு அவரின் கலை எழுச்சிம்மிக்க படைப்பில் எங்கோ தூரத்தில் கேட்கும் ஓர் இரைச்சல் போல மறைந்துவிடுகிறது.
மேலும் பேரங்காடியில் அடிக்கடி தொழிலாளிகள் உதைக்கப்படுக்கிறார்கள், அடிக்கப்படுகிறார்கள், கடுமையான சொல்லால் திட்டப்படுகிறார்கள், வதைக்கப்படுகிறார்கள். இவை யாவும் கடைக்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்களின் முன்னிலையில்தான் கொடூரமாக நடக்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களின் சிறு முகப்பாவனைக்கூட இந்தப் படத்தில் எங்கிலும் காட்டப்படவில்லை. அப்படியென்றால் செந்தில் முருகன் ஜவுளிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் என்ன வெறும் பிணமா? உணர்வுகளும் எதிர்வினையுமற்ற ஜந்துக்களா? எனக் கேட்கத் தோன்றுகிறது. எந்த இடத்திலும் அவர்களின் கண் முன்பே நடத்தப்படும் வன்முறையை அதிகாரக் கொடூமையை நோக்கி அவர்கள் என்ன செய்தார்கள் எனக்கூட காட்டாமல் பெரும் நெருடலை ஏற்படுத்திவிட்டார் என அதை மறுக்காமல் நேர்மையாக முன்வைக்கத் தோன்றியது.
இதை மட்டும் தவிர்த்துவிட்டால் அங்காடித் தெருவின் மனிதர்களின் இரைச்சல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்துவதற்காக அவர்கள் எதிர்க்கொள்ளும் பொழுதுகளையும் நெருக்கடிகளையும் இப்படியொரு ஆக்கமாக வேறு யாரும் சொல்லிராத மொழியுடன் பதிவு செய்ததற்காக வசந்தபாலனை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் சில காட்சிகளை ஒட்டி விமர்சிக்க எண்ணமிருந்தும் அதை நீட்டிக்க விருப்பமில்லை. பூப்படைந்த கனியின் தங்கையை எந்தத் தீட்டுதலுக்கும் உரிய பிம்பமாகக் கருதாமல் கோவிலுக்குள் கொண்டு வந்து அவளுக்காக நடத்தப்படும் சடங்குகள், மொத்தமாக இந்துத்துவ அறங்களுக்குப் பின்னனியில் உருவான பிற்போக்கு கற்பிதங்களை உடைத்திருக்கிறது. சபாஷ் வசந்தபாலன்.
“மலேசியாவில். . தைப்பூச தெரு வியாபாரிகளைக் கடக்கும்போது அங்கொரு பலூன்களை விற்பவர் வெகுநேரம் பலூன்களைக் காட்டி காட்டி குழந்தைகளிடம் ஏதாவது சாகசம் செய்து கொண்டிருப்பார். மனம் அவர் கையில் வைத்திருக்கும் பலூன் போல உப்பிவிடுகிறது. அந்தத் தெரு வியாபாரியிடம் அப்படி என்ன இருக்கப் போகிறது அவரது வாழ்வைவிடவும். . “
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி
7 comments:
கலைஞனின் வேலையே மனித ஆன்மாவை விழிப்படைய செய்வதுதான்.
உங்களுக்கு வார்த்தைகள் அருவியாய் கொட்டுகிறது.
அருமை பாலமுருகன்..
எனக்கு வேறு வார்த்தைகளில்லை.
இன்னும் படத்தை பார்க்கவில்லை. இந்த விமர்சனம் படத்தினை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
மிக்க நன்றி நண்பர்களே. ஆனால் எழுத்தாளர் சாரு அவர்கள் அங்காடித் தெருவை எதிர்மறையான சூழலில் வைத்து விமர்சித்துள்ளார்.
ஒருவேளை வசந்தபாலன் சாருவிற்கு கதாநாயகன் வேடம் கொடுக்காததாலும் அந்த்தப் படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியதாலோ என்னவோ சாரு வழக்கம் போல பாசாங்கு செய்திருக்கிறார் விமர்சனத்தில். இருந்தும் சில விசயங்கள் கவனிக்கத்தக்கவையே
நல்லதொரு அலசல்
ஆழ்ந்த பார்வை
//உடல் ஊனமுற்றவர்க// Could you change this to Special need in english or "Mattru thiran padaithtavargal" .
நன்றி. நல்லொதொரு பதிவை பகிர்ந்தமைக்கு.
tanggalin tamil aarvathirkku mikka nandri
Post a Comment