Wednesday, April 28, 2010

“தனி” குறும்படம் விமர்சனம் - தனியனின் பொழுதுகளில் கரையும் உலகம் -

3 வருடங்களுக்கு முன் பார்க்க நேர்ந்த what is that என்கிற குறும்படம்தான் சினிமா மீதான எனக்கிருந்த தேடலையும் புரிதல்களையும் தீவிரப்படுத்தியது என்று சொல்லலாம். அதுவரை பல ஆஸ்கார் விருது பெற்ற உலக சினிமாக்களை வாங்கி பார்ப்பதில் ஒரு பைத்தியக்காரன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது, ஆஸ்கார் படங்கள் சொல்ல முடியாததை அப்படி என்ன இந்தக் குறும்படம் சொல்லிவிடப் போகிறது என்ற அலட்சியமான பார்வையுடன் இந்தக் குறும்படத்தைப் பார்த்தபோது, 2 மணி நேர சினிமா உடைக்க நினைக்கும் வாழ்வின் உச்சங்களை வெறும் 5 நிமிடங்களில் ஒரு சிறு மௌனத்தினூடாக சில சொற்களுடன் உடைத்துக் காட்ட முடியும் என்கிற அசாதரண பிம்பத்தைக் கொண்டிருந்தது அந்தக் குறும்படம்.

மனிதனுடைய மிகப்பெரிய பலவீனமே சக உறவுகள் வெளிப்படுத்தும் அன்பைக்கூட புரிந்துகொள்ள முடியாததுதான். சமக்காலத்தில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பதுபோல அதன் நிதர்சனங்களைக் காட்டியது அந்தக் குறும்படம்.

“நான் வளர்ந்துவிட்ட மனிதனல்ல, வளர்ந்துகொண்டிருக்கும் மனிதன், நான் திறமை சாலியல்ல, வலுவானவனும் அல்ல, பிரத்யேக மனிதனும் அல்ல, எனக்குக் குறைபாடுள்ள கதாபாத்திரங்களை மிகவும் பிடிக்கும் காரணம் என்னவென்றால் எத்தனை வயதானாலும் நான் இன்னும் முழுமையற்ற மனிதனாகவே இருக்கிறேன், அலட்டலின்றி, மிகை இன்றி, போலித்தனமின்றி, புனைவின்றி, ஒப்பனையின்றி, இந்த வாழ்வையும் மனிதர்களையும் பார்க்கிறேன்” என்கிறார் உலக திரைப்பட ஆளுமை அகிரா குரோசோவா. போலித்தனங்களையும் ஒப்பனைகளையும் தூக்கி எறிந்துவிட்டு தனது மாற்று வடிவத்தை உருவாக்கிக் கொண்டதுதான் குறும்படம் எனலாம்.

உலக போருக்குப் பிறகு முதன் முதலில் அகிரா குரோசாவின் ரெஷொமோன் படம் திரையிடப்படும்போது, ஜப்பானிய வாழ்வியலையும் மனிதர்களையும் கலை பார்வைக்குள் கொண்டு வரும் ஒரு புதிய கலாச்சார புரட்சியைத் தோற்றுவிக்கிறார் அகிரா, வீழ்ச்சியடைந்த ஜப்பானி நிலப்பரப்பை அதன் கலாச்சாரம் சார்ந்து தூக்கி நிறுத்தியதில் ஒரு திரைப்பட ஆளுமையான அகிராவின் சினிமாக்களுக்கு இருந்தது என்றால், சினிமா வெறும் வணிக கேலி கூத்து அல்ல, சந்தைக்குள் கூழிக்கு மாறாடிக்கும் வடிவமும் அல்ல, அது நம்மை நமது வாழ்வை, நமது கலாச்சாரத்தின் எழுச்சியை வீழ்ச்சியைக் காட்டும் கண்ணாடி போன்றது. “”ஒருவனின் படைப்பைக் காட்டிலும் அவனை அதிகமாகச் சொல்லக்கூடியது எதுவுமில்லை” என்று இந்திய திரைப்பட ஆளுமை சத்ய ஜித்ரே சொல்கிறார்.

அத்தகைய தீவிரமான இலக்கிய நேர்த்திகள் குறையாத வடிவமாக இன்று குறும்படம் பரவலாக தனக்கான களத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. சமக்கால நிகழ்வுகள் தொடங்கி வாழ்வின் மீதான பிடிமானங்கள்வரை தவறி விழும் நினைவுகளின் அடுக்குகளைப் பதிவு செய்வது முதல் மானுட தோல்விகள்வரை எல்லாவற்றையும் காட்சியமைப்பில் கொண்டு வரும் சாத்தியம் குறும்படத்தில் இருக்கிறது. குறுகிய நேரத்தில் ஒரு பெரும்கதையாடலை நிகழ்த்தி காட்டுவதன் அசாதரணம்தான் குறும்படம் என நினைக்கத் தோன்றுகிறது.

தனி குறும்படத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தபோது, அதன் கேமரா எல்லாம்விதமான காட்சியமைப்பு ஒழுங்குகளையும் கேமரா இலக்கணங்களையும் உதறி தள்ளிவிட்டு பயணிப்பதாக, அவனின் தனிமையை கேமரா கதைச் சொல்லியாக இருந்து விவரிப்பதாக கதை விரிகிறது.

அய்யப்பன் மாதவனின் இயக்கத்தில் வந்திருக்கும் இந்தத் தனி குறும்படம் வீட்டிற்கு உள்ளேயே, புறக்கணிக்கப்பட்ட ஒரு வாழ்வின் மீதமாக தனியாக கிடக்கும் ஒருவனின் இருப்பைக் காட்டுகிறது. குறும்படத்தின் நீளம் சிறியதாக இருந்தாலும் காட்சியமைப்புகளில் படிந்திருக்கும் வெறுமை நம்மை சலிப்புடன் இழுத்துக் கொண்டு போகிறது. அந்தத் தனியின் பரப்பளவு மிக விசாலனமானது, கொடூரனமானது, சோம்பலானது, ஆபத்தானது என்று சொற்களில்ன்றி மௌளனத்தில் உறைந்து கிடக்கும் ஒரு தனியனின் தீராத பொழுதுகள்தான் இந்தக் குறும்படத்தில் கடந்து செல்கிறது.

தனி குறும்படத்தில் நான் இணையும் கட்டங்கள் அதன் ஒளிப்பதிவுகள்தான். பெரும்பாலும் காமிரா சொல்லும் காட்சிகளை அதிக கவனம் எடுத்து தரிசிக்க முயல்வேன், அந்த முயற்சியின் போது தனி குறும்படத்தின் இன்னொரு கதாபாத்திரத்தின் இருப்பை வழுவாகக் காட்ட காமெராவின் பிரேம் தீவிரமாக படைப்புடன் உழைத்துள்ளது என்றே சொல்லலாம். தனி குறும்படத்தின் தொடக்கம் மிக முக்கியமான கட்டம். இதை அடையும் பார்வையாளன் மட்டுமே படைப்பிற்குள் நுழைய முடியுமென கருதுகிறேன். குறும்படத்தின் தொடக்க ஒளிதான் பார்வையாளனைக் கதைக்கான, படைப்பிற்கான மொத்த தரிசனங்களை அடைய வாயிலாக வருகிறது.

தனி குறும்படத்தின் கதாபாத்திரமான அந்த ஆண் அறைக்குள் படுத்திருக்கிறார். அவருடைய தலைக்கு இடதுபக்க மூலையில் மெல்லிய வெளிச்சத்துடன் சன்னல் இருக்கிறது, சிறிது நேரத்திற்குப் பிறகு விடியலின் முதல் வெளிச்சம் சன்னலின் வழியாக அறைக்குள் நுழையவிடும் காட்சியமைப்பு, அந்த வெயில் போடும் கோடுகள் போல மிக அழகாகவும் அவனது தனியான இருப்பைக் காட்டுவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வெளிச்சம் உள்நுழையும் காட்சியமைப்பின் வழியாக வெறுமை ஒரு கதாபாத்திரமாக குறும்படத்தின் பிரேம்க்குள் வருகிறது. ஒளிக்கு உணர்வு இருப்பதாகச் சொல்வார்கள். ஒளியின் வர்ண பிரதிபலிப்பு மனிதர்களின் அகத்தையும் சூழலின் பிரக்ஞையையும் காட்டக்கூடிய தன்மை இருக்கிறதை இந்தக் குறும்படத்தின் தொடக்கத்தில் பார்க்க முடிகிறது.

ஒடுக்கப்பட்ட மனிதர்களின் முகத்தையும் அவர்களின் பிராந்திய அமைப்புகளையும் காட்டும்போது இலேசான மஞ்சள் ஒளி பரவியிருக்க, முகங்களின் இடதுபுற மேற்பரப்பில் இருளைக் கசியவிடுவது அந்த ஒடுக்கப்பட்டநிலையை இன்னும் காத்திரமாக அல்லது தீவிரமாக காட்சிப்படுத்த முடியும்.

நமக்கு இதுவரை சினிமா பார்த்துப் பழகியதன் மூலம் பாரம்பரியமான ஒரு பார்வையும், மதிப்பீடுகளும், புரிதலும் உருவாகியிருக்கும். இது மசாலா சினிமா, வணிக சினிமா, கலை சினிமா என்று வேறுப்படும். நமது கலாச்சாரம், வரலாறு, முந்தைய அனுபவம், பொது நம்பிக்கை தரும் இந்த அனைத்து பாரம்பரியமான மரபான பார்வைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாற்று வடிவமாகத்தான் குரும்படத்தை என்னால் உணர முடிகிறது. சினிமாவின் அத்துனை கோட்பாடுகளையும், வழக்கமான உத்திகளையும் கடந்து ஒரு இயங்குத்தளத்தில் சுதந்திரமாக இயங்கக்கூடியதாக குரும்படத்தை அவதானிக்க முடிகிறது. குறுகிய நேரத்தில் ஒரு பெருங்கதையாடலை நிகழ்த்திக் காட்டும் அசாத்தியம் குரும்படத்திற்கு உண்டு. அதைக் கையாளும் முறையைப் பொருத்தது.

அய்யப்பன் மாதவன் இயக்கிய தனி குரும்படம் மரபான சினிமா சூழலிலிருந்து விடுபட்டு தனித்து புதிய மொழியுடன் நிற்கக்கூடியதாகவே கருதுகிறேன். இந்த விலகல், புதிய முயற்சி தமிழ்ச் சூழலுக்கு மிக அவசியமானது. வாழ்வு குறித்து நமக்கிருந்த நமது கருத்துருவாக்கங்களின் பரப்பைக் கடந்து செல்லக்கூடிய இன்னொரு புலனை நமக்களிக்கும் ஒரு அசாதரண முயற்சி கையாளப்பட்டுள்ளது. தனிமைக்கும் தனிக்கும் வித்தியாசமான அணுகுமுறை உண்டு. தனிமை என்பது இயல்பு, ஆரோக்கியமானதாகவும் கருதலாம். குளியல் அறையில்கூட நாம் தனிமையில்தான் இருக்கிறோம், அது ஒரு சம்பவம் அவ்வளவே. ஆனால் தனி என்பதன் சொல்லுக்குப் பின்னனியில் ஒரு புறக்கணிப்பும் வலியும் இருப்பதாக உணரக்கூடும். இந்தக் குரும்படம் முழுக்க கதையாக்க நுட்பமாக ஒரு தனியனின் பொழுதுகளே கொண்டுவரப்பட்டிருக்கிறது.

குறும்படம் நெடுக்க தனித்து விடப்பட்டவனின் பொழுகளை இரு பரிணாமங்களை, இரு வர்ணங்களில் காட்சியப்படுத்தியிருப்பது, ஒளிப்பதிவின் ஆளுமையைக் காட்டுகிறது. குறும்படத்தில் வரும் பல காட்சியமைப்புகளில் இரு வர்ணங்கள் அல்லது ஒளி மிக துல்லியமாகப் பயன்படுத்தப்பட்டுருக்கிறது. சன்னலிலிருந்து வரும் வெளிச்சம்/வெயிலின் கோடுகள் ஒரு பக்கமும், அதன் அருகாமையில் இருக்கும் தனியன் கதாபாத்திரத்தின் உடலில் படிந்திருக்கும் மெல்லிய மஞ்சள் ஒளியும் இருளும் கலந்த வர்ணம் ஒரு பக்கமும், குறும்படத்தின் மையப் பொருளாக இன்னொரு கதாப்பாத்திரமாகக் கையாளப்பட்டுள்ளது. சன்னலிலிருந்து வரக்கூடிய வெளிச்சம், அல்லது வெயிலின் கோடுகள் வெளியுலகத்தையும், இருள் படிந்து தனியாக இருக்கும் அந்தத் தனியனின் கதாபாத்திரம் வெளியுலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு வடிவமாகவும் காட்டப்பட்டிருப்பது கலையின் நவீன நேர்த்தியையும் கலை தொழில்நுட்பத்தின் புதிய முயற்சியையும் காட்டுகிறது.

அடுத்தபடியாக, தனி குறும்படத்தில் பூனை ஒரு கதாபாத்திரமாக அல்லது ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கதையின் கருவை வலுவாக்குகிறது எனலாம். நகுலன் தனது படைப்புகளில் பூனையை தனிமையின் குறியீடாகவும் மரணத்தின் குறியீடாகவும் பாவித்திருப்பதைப் போல தனி குறும்படத்தில் பூனை தனியனின் அக உலகத்தை அதன் கட்டமைப்புகளைப் பிரதிபலிக்கும் இன்னொரு அடையாளமாக குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மூடிய சன்னலின் வழி வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்ட நிலையில் பூனையின் போராட்டத்தின் மூலம், தனியனுக்கு அளிக்கப்பட்ட பறிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட வாழ்வை உணர்த்துவதாக உள்வாங்கிக் கொள்ள முடியும் எனப்படுகிறது.

தொடர்ந்து, தனி குறும்படத்தில் இருமுறை படிக்கட்டு காட்சிகள் பதிவாகியுள்ளன. தனியன் கதாபாத்திரம் கீழே இறங்கி மீண்டும் மேலே ஏறும் காட்சிகள். படிக்கட்டுகள் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம், எனக்கு வங் கார் வாய் இயக்கிய in the mood of love என்கிற படத்தில் இடம்பெறும் அற்புதமான படிக்கட்டுக் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். அப்படி நினைவுக்கு வரும்போதெல்லாம், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட அனைத்து படிக்கட்டு காட்சியமைப்புகளும் தோல்வியடைந்ததாகவே கருதுகிறேன். கீழிருந்து வரும் நகரத்தின் வெளிச்சமும் மேலேயிருந்து பரவும் இருளுக்கும் நடுவில் அழகான இசையுடன் அந்தப் படத்தில் படிக்கட்டுகளில் இறங்கி மேலேறும் கதாபாத்திரங்களைக் காட்டியிருப்பார்கள். தனி குறும்படத்தில் வரும் படிக்கட்டு காட்சிகள் முழுக்க அடர்த்தியான மஞ்சள் ஒளி மட்டுமே பாவித்திருப்பது கொஞ்சம் சலிப்பை உண்டாக்குகிறது.

தொடர்ந்து ஒரு சராசரியான பார்வையாளனுக்கு சொற்கள் அல்லது உரையாடல் ஏதுமின்றி வெறுமையைப் படமாக்கிய இந்தக் குறும்படம் முழுக்க சலிப்பையும் கேள்விக்குறிகளையுமே எழுப்பும் என்பதிலும் சந்தேகம் இல்லை. உணர்வுகளைப் படமாக்குவது மிகவும் வரவேற்க்கத்தக்க முயற்சியாகும். அண்மையில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமண்யபுரம் படம் துரோகத்தைப் படமாக்கியது போல, வர்ணங்களின் ஒளியின் மூலம் தனியை, வெறுமையை சொற்களின்றி மௌனத்துடன் குறும்படமாக்கிய தனி குறும்பட வட்டத்திற்கு எனது வாழ்த்துகள். நமது பாரம்பரியமான பார்வைகளையும் மதிப்பீடுகளையும் அகற்றும் ஒரு அடையாளமாக தனி குறும்படத்தை அடையாளம்காண்கிறேன்.

குறிப்பு: சிங்கப்பூர் அம் மோ கியா நூலகத்தில் தனி குறும்பட வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட விமர்சனம்- 2009

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

No comments: