Tuesday, May 25, 2010

தலைப்பு: சத்தியமா இது ஒரு பேய்க்கதை. நம்புங்க

முன் அறிவிப்பு: இதயத் துடிப்பு, டப் டப் டப் டப் என சப்தம் கேட்டால், தயவு செய்து இந்தக் பேய்க்கதையைப் படிக்க வேண்டாம். (அசரீரி: இதயம் டப் டப் ன்னு துடிக்காம என்ன டிப்பு டாப்பு கும்மாங் குத்துன்னா துடிக்கும் கொய்யாலெ)

கதைக்கு வரலாம். நாலு பேரு நாலு விதமா குரல் கொடுப்பாங்க. அதைப் பத்திலாம் நமக்குக் கவலை இல்ல. பேய்க்கதைன்னா முதல்ல எல்லாம் கொஞ்சம் பயப்படனும். என்ன? சரியா? ஒன்னு ரெண்டு மூனு எனச் சொல்லுவேன், எல்லாம் ஒன்னா பயப்படனும், அப்பொழுதுதான் என்னால் கதையைத் தொடங்க முடியும்.

“ஐயா சாமி. எனக்கு இப்பயே நடுக்கமா இருக்கு”

யாருப்பா அது? ஓ நீயா. நீதான் என்னுடைய உண்மையான வாசகன். ம்ம்ம்ம்ம் நல்லா நடுங்கட்டும், ஆகட்டும் ஆகட்டும். இதுல என்ன வந்திருச்சி கழுதெ.

சரி நாம் கதைக்கு வரலாம். இது ஒரு பயங்கரமான பேய்க்கதை. அப்படிச் சொல்லி ஆரம்பித்தால்தான் சூடு பிடிக்கும். (அசரீரி: சூடு பிடிக்கறதுக்கு அது என்ன கேஸ் அடுப்பா? பார்த்து பத்திக்கப் போது)

அது ஒரு இருண்ட வீடு. . . .

“ஐயோ! அம்மா. . எனக்குக் காய்ச்சல் வந்துருச்சி”

யாருப்பா அது? அடடா எனக்குப் புல் அரிக்குது. (அசரீரி: உன் உடம்புலெ எப்படா புல்லு முளைச்சிச்சி? சரி நாலு கம்போங் பாசா மாடுங்கள அனுப்பி வைக்கறென் மேயட்டும்,)

சரி கதைக்கு வரலாம். அது ஒரு இருண்ட வீடு. . . ஏன் தெரியுமா இருண்ட வீடு? வீடு இருண்ட பிறகுத்தான் பேய் வரும் என ஒரு நம்பிக்கை இருக்கிறது. இங்கேதான் நீங்க கவனமா இருக்க வேண்டும்.

“ஏன் சார் கவனமா இருக்கனும்?”

யாருப்பா அது? ஓ நீயா? கவனம் இல்லை என்றால் பேய்க்கு ஒரு மரியாதை இருக்காது. அப்பறம் என்ன பேய்? புரிகிறதா?

பிறகு திடீர் என ஒரு சத்தம். . . உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். (அசரீரி: யாருக்குப்பா உஸ் வந்திருச்சி? ஓடுங்க. . .)

தூரத்தில் ஒரு பாடல் ஒலி கேட்கிறது.

“சார் அது கண்டிப்பா பெண் குரல்தானே?”
“இல்ல இல்ல அது வெறும் ஹம்மிங்தானே சார்?”

யாருப்பா அது? ஓ நீங்களா? ஆமாம் பெண் குரல்தான். வருவதற்கு முன்பு நானே வருவேன்னு சொல்லிவிட்டு வரும் பேய் நம் தமிழ் பெண் பேய்களாகத்தான் இருக்க முடியும். அதனால் கண்டிப்பாக அது பெண் பேய்தான். இனிமையான குரல். (அசரீரி: சுஜாதா குரலா இல்லை சாதனா சர்க்கம் குரலா?)

போதனா! போதனா! எனக்குக் கோபம் வருவது போல இருந்தாலும், இது பேய்க்கதை என்பதால் பயமும் நிதானமும் ரொம்ப அவசியம். ஆதலால் கதைக்கு வரலாம். இது ஒரு கொடூரமான பேய்க்கதை.. . .

சார். . கூட்டத்துலெ ஒருத்தன் செத்துட்டான்”

யாருப்பா அது? ஓ நீயா?

(இப்படியாகக் கதை கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக இறக்கத் துவங்கினார்கள், இறுதியில் கதை சொல்பவருக்குப் பயங்கரமான கொடூரமான பேய்ப் பிடித்திருந்தது. கட்டாயம் இரண்டு கோரப்பற்களும் இருந்தன)

பின்குறிப்பு: இந்தக் கதையைப் படித்து முடிக்கும்போது தயவு செய்து உங்கள் அறையின் சன்னல் மூடியிருக்கட்டும். கடைசி வரியைப் படிக்கும்போது, மறவாமல் “ஐயோ அம்மா! பயமா இருக்கே” எனச் சொல்லிவிடுங்கள். கதையில் வந்த பேய்க்கு நீங்கள் காட்டும் விசுவாசம் அது மட்டுமே.

நீதிநெறி விளக்கம்: பேய்க்கதை கேட்ட நல்ல பிள்ளையா பயப்படனும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

2 comments:

வால்பையன் said...

பேயை கூட சமாளிச்சிரலாம் போலயே!

Unknown said...

“ஐயோ அம்மா! பயமா இருக்கே” Sujjike kacjel pa... unnge pei kataiye nethethan padicen athum nitele... appa vanthe kacjel innum kunam agelai... ammma inthe kathaiyil yarre pei???