Saturday, June 19, 2010

திரைவிமர்சனம்: ராவணன்: காவிய மறுப்புனைவும் புனைவை மீறாத விவாதமும்

‘வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்,வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்’

பல சைவசமயத் தேவாரப் பாடல்களில் மட்டுமே இராவணனைப் பற்றிய உயர் மதிப்பீடுகளைக் காண இயலும். தென்னிந்தியர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய ஊடுருவல் ஆரியர்களின் ஆதிக்க விரிவாக்கமும் தென்னிந்தியர்களின்(திராவிடர்கள்) கலாச்சார வெளிகளை அபக்கரித்தலும், திராவிட நிலப்பின்புலங்களை அழித்தலும் என விமர்சிக்கப்படுகிறது. இன்றும் இராவணனை அரக்கனாகவும் அசுரனாகவும் பத்து தலை நிரம்பிய கொடியவனாகவும் சித்தரிக்கும் இராமயணக் காவியத்தை வடநாட்டு ஆரியர்கள் அந்தத் தென்னிந்திய நிலத்தையும் மக்களையும் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கும்; ஒடுக்கவும்; அடிமைப்படுத்தவும் புனைந்துள்ளார்கள் என்கிற சர்ச்சை நிலவுகிறது.

இராமயாணக் காவியத்தை முழுவதும் எந்தப் பக்கமும் சாராமல் அந்தப் பிரதியை அணுக நேர்ந்தால், அது முழுக்க ஆணாதிக்க சமூகத்தை வளப்பட செய்யும் அதிகார குரல்களை ஆங்காங்கே நிறுவப்பட்ட ஒரு பிரதியாகவும் பெண்களை மீட்பதும் பரிசோதிப்பதுமான கருவியாகப் பாவிக்கப்பட்டிருப்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்தக் காவியத்தைப் படித்து வளர்ந்த பின்விளைவுகளை இன்றைய சமூக நடப்பிலும் பல விடயங்களில் மறுமதிப்பீட்டின் மூலம் உணர வாய்ப்புண்டு. இராமாயணத்தை ஒரு பக்தி குறீயீடாகவும் அழித்தல் கடவுளின் ஆன்மீக வருகையின் பதிவாகவும் அதை மிக நுணுக்கமாக வழிப்படுதலுக்குரிய கருவியாகத் தென்னிந்திய மக்களுக்கு வழங்கியவர்கள் ஆரியர்கள் எனும் சர்ச்சையும் தொடர்ந்து திராவிட உணர்வுடையவர்களால் முன்வைக்கப்படுகிறது.

இராவணன் அன்று:

இலங்கை மண்ணைச் செழிப்புமிக்க தேசமாகவும் வளமிக்க பூமியாகவும் வளர்தெடுத்த சிறந்த அரசன் எனவும் கலைகளில் சிறந்த தேர்ச்சியுடைய மன்னனாகவும், பக்தி மிகுந்த சிவப்பக்தனாகவும் முக்கியமான சில பதிவுகளில் இடம்பெற்றுள்ளன. மேலும் திராவிட விவாதங்களிலும் இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆனால் இராவணனை (தென்னிந்திய மண்ணின் அரசனை) ஒரு ஆன்மிக புனைவாக மட்டுமே இராமாயணத்திற்குள் நுழைத்து அவனுக்கு ஏற்பட்ட மரணத்தையும் நியாயப்படுத்தும் இடமானது ஆரியர்களின் மிக முக்கியமான திட்டம் என்றே சொல்லலாம். ஆகையால்தான் இராவணனை இதற்கு முன்பே மகா விஷ்ணுவின் அவதாரத்தால் கொல்லப்பட்டு இறந்துபோன இரன்ய கசிப்புவின் இன்னொரு அவதாரம் எனவும், இவன் முன்பே சனாதன முனிவர்களால் சபிக்கப்பட்டவன் என்றும் அந்தப் பிறவி கடனைத் தீர்க்கவே கொடியவர்களாக அவதாரங்கள் எடுத்து 7 முறை மகா விஷ்ணுவால் கொல்லப்பட்டு மீண்டும் வைக்குண்டம் அடைவான் எனவும் இன்னொரு புனைவு இராவணின் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவை யாவும் வரலாற்றில் இராவணன் குறித்து திணிக்கப்பட்ட கட்டமைப்புகளா? அல்லது புராணம் என்பதே வெறும் கட்டுக்கதைகளின் கோர்வையா? அல்லது பார்ப்பன வெறியைத் தென்னிந்தியாவில் பரப்புவதற்காகப் பக்தி எனும் அடையாளத்தின் மூலம் விரிவாக்கப்பட்ட புனைவு பிரதியா?

இதைத் தொடர்ந்து விவாதித்தால், வழக்கமாக நிகழ்ந்தும் நிகழ்ந்து சலித்துப் போன கடவுள் இருக்கிறாரா என்கிற சந்தேகத்தில் முடிந்துவிடும் எனும் எண்ணமும் தோன்றுகிறது. ஆனால் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த ஒரு தமிழன். வடநாட்டு பக்தி பிரதிகளில் இராவணன் கேலிக்குரிய 10 தலை அசுரனாகக் காட்டப்பட்டிருப்பதும் உண்மை. மேலும் இராமன் என்கிற கடவுளின் அவதாரத்தால் அவன் கொல்லப்படுவதுதான் தர்மம் எனவும் நியாயம் வலுவாகக் கற்பிக்கப்பட்டு நிறுவப்பட்டிருப்பதும் உண்மை.

மனிரத்னத்தின் ராவணன்:

சிதைக்கப்பட்ட தென்னிந்தியாவின் தொன்ம அடையாளத்தைத் தனது படத்தின் மூலம் மீட்க முயலும் ஒரு முயற்சியைத் செய்திருக்கிறார். வரலாற்றையும் புரானத்தையும் காவியத்தையும் மறுபுனைவு செய்து பார்ப்பதில் மனிரத்னத்திற்குத் தனித்த ஆளுமையும் அடையாளமும் தமிழ் சினிமாவில் இருக்கிறது. வரலாற்றை மீட்டுணர்ந்த படமாக இருவர் படத்தையும், காவியத்தை மறுபுனைவு செய்த தளபதி படத்தையும் குறிப்பிடலாம். அதே களத்துடன் பார்ப்பன பிரதிகளில் கொடியவான சித்தரிக்கப்படும் இலங்கை மண்ணைச் சேர்ந்த இராவணனை மீள்புனைவு செய்து அவனைத் தென்னிந்திய வரலாற்றின் முக்கியமான அடையாளமாகத் திராவிட மனங்களுக்குப் புது தெம்பை அளிப்பது போல மீட்டெடுத்திருக்கிறார் மனிரத்னம்.

காட்டுவாசிகளின் நாட்டாமையாகவும் அவர்களுக்கு நல்லது செய்யும் நாட்டாரியல் கதைநாயகனுக்குரிய அடையாளமாகவும் விக்ரம் வீராசாமியாகப் படைக்கப்பட்டுருக்கிறார். (நாயகன் படத்தின் கமலை மீண்டும் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு மட்டுமே எழுகிறது) வீராசாமியின் தங்கை பிரியாமணியின் திருமண நிகழ்வில் சலசலப்பை ஏற்படுத்துவதோடு, அவனைக் கழுத்திலும் சுட்டுவிடுகிறார்கள் காவல் படை(பிருத்திவிராஜ் தலைமையில்). மேலும் பிரியாமணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுக்க மாற்றி மாற்றி கற்பழித்துவிடுவதோடு அவளின் தற்கொலைக்கும் காரணமாகிவிடுகிறார்கள். காட்டுவாசிகளின் மீதான அதிகாரிகளின் ஒடுக்குமுறையைக் கண்டிக்கும் வகையில் பிருத்திவிராஜ் என்கிற உயர் அதிகாரியின்( புராணப்படி இவர்தான் இராமன்) மனைவியைக் கடத்துகிறான் ராவணன்.

வனத்தினுள் அவளைக் கடத்திச் செல்லும் ராவணனைப் பின்தொடர்ந்து விரட்டுகிறது காவல்படை. படம் முழுவதும் வளம் மிகுந்த அடர்ந்த வனத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த வனத்தில் (அசோக வனமாகவும் கற்பித்துக் கொள்ளலாம்) சீதையின் கதைப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் ராவனணனுக்கும் இடையில் நிகழும் உரையாடலும் உணர்ச்சி போராட்டமும் இராமாயணத்தில் புனையப்பட்ட ஒழுக்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக நிகழ்த்தப்படுகிறது. இராமாயணத்தில் இறுதிவரை மாசுப்படாத கதைப்பாத்திரமாகச் சீதை படைக்கப்பட்டிருப்பதைக் கொஞ்சமும் தனது திரைப்படத்தில் சிதைக்காமல், கடத்திச் செல்லும் விம்ரமின் சுண்டு விரல்கூட அவள் மீது படாதவாறு அமைத்து சமூகம் நம்பியிருக்கும் ஒழுக்கக் குறியீட்டைக் காப்பாற்றியுள்ளார் மணி.

ஆனால், ஐஸ்வர்யாவின் வீரத்தையும் தற்கொலை முயற்சியின் காட்சியையும் நேரில் கண்டு பதறும் ராவணனுக்கு அவள் மீதான உணர்வு மாறுப்படும் இராசயண தருணத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். ஓர் அதிகாரியின் மனைவி என்கிற பிம்பம் களைந்து அவளின் புற உலகத்தைச் சூன்யமாக்கிவிட்டு, அவளை தன் மனதைச் சலனப்படுத்திய ஒற்றைப் பிம்பமாக ராவணன் தரிசிக்க முயல்வதோடு தனக்குள் இருக்கும் வளர்க்கப்பட்டிருக்கும் ஒழுக்க அமைப்புடனும் போராடுகிறான். (சூர்ப்பநகைத் தாக்கப்பட்டதன் மூலம் கோபமுறும் இராவணன் இராமனைப் பழி வாங்குவதற்காகச் சீதையைக் கடத்தி வருவதோடு அவளின் அழகிலும் மயங்கிவிடுவதாகப் புராணம் சொல்கிறது) ஆனால் புராணத்தில் எவ்விடத்திலும் ஒழுக்க ரீதியில் இராவணன் தனக்குள் போராடுவதை அல்லது சீதையின் மீது ஏற்பட்ட உணர்வைத் தர்க்கம் செய்வது போன்ற கதைகள்/சந்தர்ப்பங்கள் இடம்பெறவில்லை. இப்படத்தில் மணிரத்னம் மாற்றான் மனைவியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை உணர்வைத் தொடர்ந்து அகப்பிரச்சனையாக, அகப்போராட்டமாக அதைக் கடைசிவரை மீறாத படைப்பாகக் காட்டியிருக்கிறார். அதாவது குற்றம் இழைத்தவன் இராவணன் என்கிற பழி சுமத்தலுக்கு எதிராக மறுபுனைவின் மூலம் இராவணன் உண்மையில் நல்லவன் என்கிற செய்தியைச் சொல்ல முற்படுகிறார் என்பதாகப் படத்தைப் புரிந்துகொள்ளலாம்.

ஒளிப்பதிவும் கதைக்களமும் கலையும்

இப்படத்தில் ஒளிப்பதிவையும் கலையையும் தனித்துவமான பலமாகவும், படத்தின் கருவை மெய்ப்பிக்கும் யதார்த்தங்களை மீறாத உணர்வாகவும் அடையாளப்படுத்தலாம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இப்படத்தில் விருதுக்குரிய மதிப்பீடுகளையும் கடந்து ஒரு வனத்தின் வாழ்வை இதுவரை தமிழ் சினிமாவில் காணாத இயற்கையின் பரிணாமங்களை முன்வைக்கும் மிக முக்கியமான முயற்சியாக உணர முடிகிறது. இன்னமும் அந்தக் காட்டுவாசிகளின் வனத்தின் அடர்ந்த உலகத்திலிருந்து மீள முடியாத ஒரு நெருக்கமான புலனைக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அவரின் காட்சி பதிவுகள் பலரைப் பிரமிக்க வைக்காமல் போயிருக்கக்கூடும். எந்த இடத்திலும் தமிழ் சினிமாவில் இடம்பெறும் வழக்கமான காட்சி அமைப்புகளும் ஒளிப்பதிவும் அதிரடியும் இல்லாமல், ஏதோ ஒருவகையில் நம் புருவங்களை உயர்த்த செய்யும் அசாத்திய காட்சிகள் படம் முழுக்கப் பயணிக்கின்றன.

குறிப்பாக நதிக்கு நடுவில் பாதி உடைந்து நீளமாகப் படுத்திருக்கும் மகா விஷ்ணுவின் கருமையான சிலையும், அதன் மீது தெறித்து வீழும் நதியின் சாரலும், அந்தச் சிலைக்கு முன் நின்று தன்னை இன்னமும் காப்பாற்றி வைத்திருக்கும் இந்தக் கோபத்தை என்னிடமிருந்து பறித்துவிடாதே என மன்றாடும் ஐஸ்வர்யாவும், ஒரு சாரல் போல மனதைச் சலனிக்கச் செய்கிறார்கள். தொடர்ந்து ஐஸ்வர்யா மலை உச்சியிலிருந்து நீர்பாதாளத்தை நோக்கி குதிக்கும் காட்சி எந்தத் தொழில்நுட்ப ஒப்பனைகளும் நெருடலை ஏற்படுத்தாத வகையில் பதிவு செய்திருக்கிறார்கள். அவருடன் சேர்ந்து பார்வையாளர்களும் நீர்வீழ்ச்சியைப் போல பாதாளத்தில் குதிப்பது போன்ற அனுபவம் ஏற்படும். இது காமிராவின் அசைவும் நகர்வும் கையாளப்பட்டிருக்கும் விதத்தின் திறமையைக் குறிக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய கலை குழு, வனத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் காட்டுவாசிகளின் குடியிருப்பு பகுதிகளை அதே போல உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். காட்டுவாசிகளின் நடவடிக்கைகளையும் வாழ்விடங்களையும் கலை ஆய்வின் மூலம் அறிந்துகொண்டு பதிவாக்கியதாகப் புரிந்துகொள்ள நேரிடும். மழை நேரத்தில் காட்டுவாசிகளின் இருப்பிடத்திற்குள் நுழையும் அதிகாரிகளின் கொடூரமான செயல்களை அதன் உக்கிரம் குறையாமல் அதிகாரத்தின் தொனிக்கு பிரேம் போட்டு காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குனர்.

பின்னனி இசையும் பாடல்களும் வழக்கமாக ரஹ்மான் அவர்களின் இசை தனித்துவத்தை மீண்டும் வழங்கியிருக்கிறது. குறிப்பாக பின்னனி இசை காட்சியுடன் இயந்து யதார்த்தத்தையும் காட்சியின் உணர்வையும் புரிந்துகொண்டு சம அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பாடல் சீடியில் இடம்பெறாத ரஹ்மான் பாடிய படத்தின் இறுதி பாடல் படம் முடிந்தும் ஒருவித துன்பத்தின் கொண்டாட்ட உணர்வை உள்ளுக்குள் ஏற்படுத்துவது போல தோன்றுகிறது.

இரு தேசிய விருது பெற்ற நடிகர்களும் இடம் பெறும் ஒரு காட்சி ராவணன் படத்தில் தவிர்க்க முடியாத வலியைத் தருவதாக அமைந்திருக்கிறது. காவல் அதிகாரிகளால் பலமுறை கற்பழிக்கப்பட்ட பிரியாமணியும் விக்ரமும் பேசுவதாக இடம்பெறும் அக்காட்சியில், கொஞ்சம் நேரம் என்றாலும் இருவரும் மிகச்சிறப்பான அலட்டல் இல்லாத நிதர்சன உணர்வுகளையும் முகப்பாவனை மூலம் உணர்வை உந்தி வெளித்தள்ளும் விதத்தையும் செய்து காட்டி அசத்திவிட்டார்கள்.

படத்தில் புகுத்தப்பட்டிருக்கும் அரசியல்:

இருவர் படத்தின் மூலம் திராவிட அரசியல் கட்சிகளின் வளர்ச்சியையும் அந்தக் கட்சியின் மூலம் வளர்ந்த இரு முக்கியமான பிம்பத்தையும் காட்டி, இது வெறும் கற்பனை கதை என நழுவிய மணியின் அரசியல் பிரயோகம் இப்படத்திலும் இராவணுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுருக்கிறது. இப்படத்தில் ராவணன் ஐஸ்வர்யாவைக் கடத்துவதற்குப் பிரியாமணிக்கு நிகழ்ந்த கொடூரம்தான் காரணம் எனப் புரிந்துகொண்டு வெளிவருகையில், காட்டுவாசிகளின் மீது தொடுக்கப்படும் அதிகாரிகளின் அதிகார நடவடிக்கைகளையும் மேட்டுக்குடி மக்களுக்கு கீழ்தட்டு மக்களின் மீது இருக்கும் ஒடுக்கும் மனபான்மை குறித்தும் படத்தில் பேசப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் தவறுவதற்கும் வாய்ப்புண்டு. படம் பார்த்த சிலரிடம் படத்தைப் பற்றி கேட்டபோது இதைப் பற்றி யாரும் சிறிதளவும் குறிப்பிடவில்லை.

குறைகள்: நிறைய இடங்களில் நெருடலாகவும் சில இடங்களில் நகைச்சுவைகளாகவும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பழைய நடிகரான கார்த்திக்கை அனுமானாகக் காட்ட வேண்டும் என்கிற வெறியில் அவரைக் குரங்கு போல அங்குமிங்கும் தாவவிட்டு அவரின் மீதான மதிப்பைக் குறைக்கும்படி படைக்கப்பட்டிருப்பது நெருடலாக அமைந்திருக்கிறது. மேலும் ராவணன் கதைப்பாத்திரத்திற்குக் கொடுக்கப்பட்ட கவனமும் நேரமும் காட்டுவாசி மக்களின் வாழ்க்கைமுறையின் மீதும் அவர்களின் வன வாழ்வின் மீதும் காட்டி கதைக்களத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கலாம்.

மேலும் ராவணன் சில இடங்களில் காவல் அதிகாரிகள் தேடும் மக்களுக்கான நாட்டாமையாக மட்டுமே மிளிர்கிறார். சில இடங்களில் ஏற்கனவே பார்த்து சலித்துவிட்ட பிதாமகன் விக்ரம் போல தெரிகிறார். பிருத்திவிராஜ் கதையுடன் சற்றும் பொருந்தாமல் தள்ளி நின்றிருப்பதை உணர முடிகிறது. மீசை வழித்த அழகான வாலிபன் போல, காதல் படங்களின் கதைநாயகன் போல வலம் வருவதாகத் தோன்றுகிறது.

“நான் ஒடுக்கப்பட்ட கிராமத்தான்” எனும் வசனத்தை ராவணன் குறிப்பிடுவதைக் கொஞ்சம் வரலாற்றை நோக்கி பின்னுக்கு நகர்த்தினால், இலங்கை மண்ணைச் சேர்ந்த ராவணனையும் இன்றளவும் பாசிச அரசினால் கடுமையான ஒடுக்குதலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளான கொலைநிலமாகக் கருதப்படும் இலங்கையும் தமிழர்களையும் நினைவுப்படுத்த முடிகிறது. இறுதி காட்சியில் ராவணன் காவல் அதிகாரி படைகளால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டு மலையின் உச்சியிலிருந்து சரிந்து விழும் காட்சி, வரலாற்றில் தமிழன் எப்பொழுதுமே ஒடுக்கப்படுவான் அல்லது கொல்லப்படுவான் என்கிற நிதர்சன வலியை உணர்த்தி மனம் முழுவதும் பரவி நேர்மையற்ற அரசியலையும் அதிகாரத்தையும் காட்டுகிறது. கணத்த மனதுடன் அந்த உண்மையைச் சுமந்து கொண்டு வெளியில் வரநேர்வதன் கையறுநிலையை வேறு எப்படிச் சொல்வது?

ராவணனைப் படைக்க விரும்பிய மணிரத்னம், அந்தப் பாத்திரத்தைக் காவிய பிம்பமான இராவணனை மீட்பதாக மறுபுனைவு செய்தும், ஆதி புனைவின் ஒழுக்கத்தை மீறாமல் மறுபுனைவையும் அதே போல படைத்து நியாயப்படுத்தியும் அது வெற்றிப் பெறாதது போன்ற விமர்சனத்தையே தருகிறது. ராவணன் வெறும் முயற்சி மட்டுமே.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா



9 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விமர்சனம் மிக அருமை

ஆய்வு கட்டுரை போல் உள்ளது

butterfly Surya said...

அன்பின் பாலா,அருமையான அலசல்.இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.

Unknown said...

நல்ல கருத்துகளும், ஒப்பீடும் கொண்ட நேர்மையான விமர்சனம் இது..படத்தின் முடிவைப்பற்றிய உங்களின் கருத்து கண்ணீர் வர வைக்கின்றன. நன்றி நண்பரே..

கே.பாலமுருகன் said...

@ உலவு

மிக்க நன்றி

@சூர்யா:கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே. பார்த்துவிட்டு வாருங்கள்

கே.பாலமுருகன் said...

@ விஜய்

மிக்க நன்றி கருத்திற்கு. படத்தின் இறுதி காட்சியில் ராவணன் சுடப்பட்டு பாதாளத்தில் சரியும் போது பின்னனியில் ஒலிக்கும் ரஹ்மான் பாடிய பாடல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Tamilvanan said...

சில‌ ப‌திவுக‌ளில் ப‌ட‌ விம‌ர்ச‌ன‌த்தை ப‌டித்து ப‌ட‌த்தை பார்க்க‌ வேண்டாமென‌ இருந்த‌ போது, ப‌ட‌த்தினை பார்க்க‌லாம் எனும் ஆவ‌லை உண்டாக்கிய‌து இந்த‌ ப‌திவு.

Unknown said...

அருமையான விமர்சனம் பாலமுருகன். ;)))

கே.பாலமுருகன் said...

@தமிழ்வாணன்: தாராளமாக ஒளிப்பதிவிற்காகவும் ஐஸ்வர்யாவிற்காகவும் இப்படத்தைப் பார்க்கலாம். மிக்க நன்றி நண்பரே

@ உமா

மிக்க நன்றி வருகைக்கும் பதிவிற்கும் தோழி.

ஷாநவாஸ் said...

அன்புள்ள பாலாமுருகன்...

ராவணன் விமர்சனம் மிகவும் அருமை.

ஆதிவரலாற்றின் சமூக விழுமியங்களை தங்களின் படைப்புகளின் ஞாபக வெளிகளில் பதியவைத்து கலப்பில்லாத தொன்மங்களின் உயிரோட்டத்தை மக்களுக்கான அரசியலாக நிகழ்த்தும் படைப்புக்களை மணிரத்னம் மீட்டுருவாக்கம் செய்வது புதிய விசயமல்ல.

அடுத்து சிலப்பதிகாரத்தை மீட்டுருவாக்கம் செய்யுங்கள் தலைவா! என்று சில குரல்கள் ஆரோக்கியமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

என்னுடைய தங்களுக்கான கேள்வி
மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி மேல் கீழ் என்ற பேதமை நிலைத்திருப்பதற்கான சித்தாந்தங்களை நிலை நிறுத்திய கருத்துக்களை மக்களுக்கான நினைவு வெளிகளிலிருந்து அகன்றுவிடாமல் பார்த்துக் கொள்வதற்கான தேவைகள் இன்னும் இருக்கிறதா?