1
இருளை அறுக்க இயலாத
ஒளியின் தோல்விகளென
திட்டுதிட்டாய் தூறுகின்றன
அதிகாலை.
கனவுகளின் மீதங்களாய்
துள்ளியெழுகின்றன
கடக்க முடியாத மரணங்களாய்.
வழக்கம்போல 6.30மணிக்கு எழுந்துவிட்டால் பிரச்சனை இருக்காது. ஆனால் ஒரு கெட்டியான இருள் விழிக்கும் சமயத்தில் எப்பொழுதும் கட்டிலுக்கடியில் அல்லது அருகாமையில் நகர மறுக்கும் பிடிவாதத்துடன் காத்திருக்கிறது.
கவிதைகள் போல மறுக்க முடியாத இருப்புடன், அதிகாலையைச் சந்திக்கிறேன். அநேகமாக அது மரணத்தைப் பற்றிய கவிதையாக இருக்கக்கூடும். எனக்குள் விரியும் காட்சிகளாக ஆல்பத்திலிருந்து விடுப்பட்ட அல்லது காணாமல் போன ஒரு பிம்பத்தின் உடைவுகள் போல எங்கோ ஒலிக்கிறது, சில சமயங்களில் சன்னமாக சில சமயங்களில் சமீபத்தில்.
அலாரம் வைத்துவிட்டுப் படுக்கும் நம்பிக்கையின்மை என்னிடம் இல்லை. அது சோம்பேறிகளுக்குத் தன்மீது இருக்கும் சந்தேகத்தின் குறியீடு. எப்பொழுதோ பால்யத்தில் நண்பன் ஒருவன் கற்றுக் கொடுத்த வழிமுறை இன்றும் நீங்காத கரங்கள் போல என்னைத் தட்டி எழுப்பிவிடுகிறது.
“நீ படுக்கும்போது, தலகாணிகிட்ட மூனு தடவே தட்டி தட்டி. . காலைலெ 6மணிக்கு எழுப்பிவிட்டுடு காலைலே 6மணிக்கு எழுப்பி விட்டுடுன்னு சொல்லிட்டு படுடா. . கண்டிப்பா சரியா ஏஞ்சிறுவ”
இந்த வழிமுறை பால்யத்தில் நிறைவேறவே இல்லை. என் தலையணை என்னைச் சுயமாக எழுப்பிவிடும் அதிசயம் நிகழும் முன்னே அம்மாவின் கரங்கள் தடதடவென மேலே விழும். “டே மணியாச்சி ஏஞ்சிரு. .குளிக்கனும்”
எனது ஒவ்வொரு அதிகாலையும் ஒரு பறவையின் முனகலைப் போல தொடங்கி காகத்தின் அரவம் போல விரியும். இன்று சுயமாக எழுந்து கொள்கிறேன். தனியாகக் கிளம்புகிறேன். யாருடனும் பேசுவதில்லை. அதிகாலை ஓர் அடர்த்தியான மௌனத்துடன் கணமிழந்து மிதந்து கொண்டிருந்துவிட்டு சடாரென்று கரைந்துவிடுகிறது.
அதிகாலையில் கேட்கும் அம்மாவின் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் குரலோ அல்லது அப்பாவின் அதிகாலை நடமாட்டங்களோ இல்லாத இல்லாமல் போன ஒரு வெறுமையான அதிகாலை பொழுதுகளில் வேறென்ன இருக்க முடியும்?
சனிக்கிழமைகளில் எப்பொழுதாவது வழக்கத்திற்காக எதிராக அதிகாலையில் விழித்துக் கொண்டால், அந்தக் கெட்டியான இருள் மேலும் நகர்ந்து நெருக்கத்தில் வந்திருக்கும். அது வெறும் உப்பிய இருளின் மாயையாகவும் இருக்கக்கூடும். அல்லது நினைவிலிருந்து நீங்க மறுக்கும் அதிகாலை என்பதன் நீள்பதிவாகவும் இருக்ககூடும். பொருட்படுத்துவதில்லை என்றாலும் அறையையும் அறையிலிருக்கக்கூடிய பொருள்களையும் சுருக்கி ஒரு புள்ளியாக்கி ஏதோ ஒரு மையத்தில் வட்டமிடுகிறது அதன் அடர்த்தியும் நெருக்கமும்.
“முருகா! இன்னிக்கு பஸ்ஸுகார அங்கிள் தூக்கி வெளிய எறிஞ்சிர மாட்டாரே?”
இருள் தனது முதல் சொல்லை அதன் பல வருட மௌனத்தினூடாக எல்லாம் இறுக்கங்களையும் ஊடறுத்து இன்று உரையாடத் துவங்கியது. அறை மெல்ல கரைந்து உடல் பற்றிய பிரக்ஞை களைகிறது. எனக்கு முன்பான அந்தக் கெட்டியான இருள் உடையும்போது சப்தமில்லாமல் அசைந்து கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை வெகு சமீபத்தில் அடைகிறேன்.
நீண்டதொரு சாலை எல்லைக்கோடுகளை கடந்து விரிந்து தாவர மேடு போல கிடக்கிறது. ஒவ்வொரு பேருந்தாக மேடுகளைக் கரைத்து மரணங்களைத் தூவுகின்றன. மரணம் ஒரு விதை போல நிலத்தின் அடிவேர்களாய் வளர்ந்து ஒரு இருளாக முளைக்கிறது. மீண்டும் ஒரு மஞ்சள் பேருந்து. அதற்குப் பிறகான சூன்யத்தில் சிறு கைகளும் இன்னும் சரியாக முளைக்காத கால்களுமாய் யார் யாரோ ஓடி வருகிறார்கள். மேடு இரைச்சல்மிக்க பிரதேசசமாக மாறுகிறது. சூன்யம் உடைய அங்குமிங்குமாக வீசப்படுகின்றன அதிகாலை என்கிற மௌனமும் மௌளனத்தைக் களைக்கும் ஒரு உரையாடலும்.
அதிகாலை உடையும் சாலை
அலாரத்தின் ஒலி காதுக்கு எட்டும்போது அப்பா முன்வாசல் கதவைத் திறந்துவிட்டு வெளியே நின்றிருப்பது தெரிந்தது. அனேகமாக சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்திருக்கக்கூடும். வீட்டின் நெருக்கமான பரப்பளவு மேலும் சுருங்கிப் போனது போல, கைக்கு அகப்படும் தொலைவில் எல்லாமும்.
கதவின் இடுக்கில் வெளி இருள் குளிர்ந்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. பின்கட்டு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்க நான் படுத்திருந்த அறையின் கதவு வெளியிலிருந்து கசிந்த அதிகாலை இருளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அப்பே பேருந்தில் ஏறும் நண்பர்கள் என்னைவிட 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க வேண்டும். அது வழக்கமாக நிகழும் ஒரு கட்டாயம். சரியாக 6.15க்கு கம்பத்தின் மேட்டுப் பாதையில் அப்பே பேருந்து வந்து நிற்கும். அதிகாலை இரைச்சலை ஏற்படுத்துவதற்காகவே ஒரு மிகப்பெரிய சீன மாணவர்களின் கூட்டம் அங்கு இருக்கிறது. 8.00 மணிக்கு தொழிற்சாலை வேலைக்குச் செல்பவர்களுக்கென்று தனியான
அலாரங்களோ கடிகாரங்களோ கிடையாது. அப்பே பேருந்து வந்தவுடன் உடையும் அதிகாலையின் அமைதி மட்டுமே அவர்களுக்கான விடியலின் முதல் புள்ளி. இரைச்சல்களும் வேகமாக ஓடும் கால்களின் சப்தங்களும் ஒரு கனவு தேசத்தின் சிதைவாக உறங்கிக் கொண்டிருப்பவர்களின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட உலகத்திலிருந்து அவர்களை மீட்டுக் கொள்ளும்.
“ புடாக் புடாக். .”
பெட்டிக்கடை கிழவன் முன்வாசல் கதவை திறந்துவிட்டு அரக்க பறக்க ஓடும் மாணவர்களைப் பார்த்து சில சமயங்களில் கெட்ட வார்த்தையில் திட்டுவான். சில சமயங்களில் அவனுக்குள்ளாக அது ஒரு முனகலாக புதைந்துகொள்ளும். அப்பே பேருந்து வந்தவுடன் அந்தக் கிழவனும் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வெளியே வைத்துவிட்டு கிளம்புவதற்குத் தயாராகிவிடுவான். அவனுக்கு அப்பே பேருந்துதான் அலாரம்.
தண்ணிமலை பேருந்து மிக நீளமானது. எங்கள் கம்பத்தில் நுழைய போதுமான இடவசதி இல்லையென்பதால் தண்ணிமலை அண்ணன் அங்கிருந்து மாணவர்களை ஏற்ற மாட்டார். ஒருமுறை பேருந்து தவறவிட்டதால், அம்மா பிடரியில் ஓங்கி அடித்து பெரிய சாலைக்கு இழுத்துக் கொண்டு போய் தண்ணிமலை அண்ணன் பேருந்தில் ஏற்றிவிட்டார்.
“சனியன். . பஸ்ஸ உட்டுட்டான். . ஏத்திட்டுப் போய்ட்டு விட்டுறங்கணே. . 1 வெள்ளி தந்துடறன்”
என் முன் சட்டை பையில் ஒரு வெள்ளியைத் திணித்துவிட்டு மீண்டும் பிடரியில் விழுந்த இரண்டாவது அடியுடன் தண்ணிமலை பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அந்தப் பேருந்து சரியாக 7.05க்கு எங்கள் கம்பத்தைக் கடந்து போவது பலருக்கு வசதியாக இருந்தது. பேருந்தைத் தவற்விடுபவர்களுக்கென ஒரு சேவை தண்ணிமலை பேருந்தில் கிடைத்தது. ஆகையால் பேருந்து தவறவிட்டாலும் விடுமுறை என்கிற மிகப் பெரிய சுதந்திரம் எங்களின் அதிகாலை கனவு போல வெகு சீக்கிரத்திலேயே களைந்துவிடும்.
எதிர்வீட்டில் உள்ள மாணிக்கம் அண்னனின் மகன் செல்வா பாதி உறக்கத்தில் அழுதுகொண்டே வாசலுக்கு வருவது கேட்டது. இந்தக் கம்பத்தில் எல்லோரையும்விட முதலில் விழிப்பவன் செல்வா. அவனுக்குரிய அலாரம் சரியாக 5மணிக்கு கதறும். அப்பொழுது நான் இரவின் கைகளுக்குள் ஆழ்ந்துகிடந்த பிரக்ஞையின் முதல் தடுமாற்றங்களுடன் விழிக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் உடல்வாகுவுடன் படுத்திருப்பேன். எனக்குள்ளிருந்து பாதி மங்கிக் கிடக்கும் சோம்பல் நெளிய துவங்கும் கணத்தில் செல்வா அதிகாலை குளிரைத் தனது உடலில் சரியவிட்டிருப்பான்.
அவன் வீட்டில் சுடுத்தண்னீர் கிடையாது. காலையில் தொட்டியில் குவிந்து கிடக்கும் தண்ணீரை அள்ளி உடலில் ஊற்ற வேண்டும். அவன் கைகளில் அதிகாலை நடுங்கிக் கொண்டிருக்கும். மெதுவாக இரவு முழுக்க வெளியே பரவிய குளிரை தனது மேற்பரப்பில் சேமித்து வைத்திருக்கும் தொட்டித் தண்ணீரைச் செல்வா அள்ளும்போது, குளிருக்கு கைகளும் கால்களும் முளைத்திருக்கக்கூடும். அதன் தீண்டலில் அவன் அழுவதை என்னால் பல சமயங்களில் கேட்க முடிந்தும் அதற்கு பதில் கொடுக்க இயலாத, அடுத்து விழிக்க போகும் எனது துர்சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பேன்.
மாணிக்கம் அண்ணன் காலை சந்தையில் மீன் வியாபாரம் செய்பவர். காலையில் 6.10 போலவே வீட்டிலிருந்து கிளம்பி தஞ்சோங் டாவாய் ஆற்று முகத்துவாரத்திற்குச் சென்றாக வேண்டும். காலை 7 மணி போல அங்கு மீன்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சுங்கைப்பட்டாணி காலை சந்தைக்கு ஓட வேண்டும். அவர் வந்து சேர்வதற்குள் பாதி சீனர்கள் அவர்களின் மீன்களைப் பேரம் பேசியிருப்பார்கள். மாணிக்கம் அண்ணனுடன் செல்வாவும் எழுந்துகொண்டு போகும் வழியில் அவனைப் பள்ளியில் இறக்கிவிட்டுவிடுவார். பள்ளியின் உள்வாசலுக்கு அருகில் இருக்கும் நீண்ட நாற்காலியில் கண்களுக்கு அகப்படாத ஓர் இருளுக்குள் அமர்ந்துகொண்டு உடலில் மீதமாகத் தேங்கிக் கிடக்கும் உறக்கத்தில் தொலைந்து மீண்டும் மீள்வதே அவனது நாட்கள்.
“ம்மா குளுருதும்மா. . நான் குளிக்கல”
அதிகாலை எப்பொழுதும் வீடு முழுக்க தனது குளிர்ந்த உடலை பரவவிட்டிருக்கிறது. கண்னாம்பூச்சி விளையாடும் குழந்தைகள் போல எழுந்த பிறகு எதிர்க்கொள்ளும் அதிகாலையுடன் போராட வேண்டியிருக்கிறது, ஒளிந்து கொள்ளவும் நேர்கிறது.
“உன் காலெ தரதரன்னு இழுத்துக்கிட்டு போய் தொட்டியில போட்ட தெரியும்” இது அம்மா. அவர் எழுந்ததும் தலையை வாரிக் கட்டிக் கொண்டு காலை பசியாறை சமைத்துவிடுவார். அடுப்பின் இன்னொரு அடுக்கில் எனக்கான சுடுத்தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.
“டே ஏஞ்சி வாடா. . தண்ணீ கொதிச்சிருச்சி, வெழாவ போறன்”
அப்பா இன்னமும் அதிகாலையின் மௌனத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மோட்டார் பட்டறையைச் சரியாக 6.30மணிக்குத் திறந்தாக வேண்டும். பட்டணத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் வேலைகளுக்குச் செல்லும் அதிகாலை மனிதர்களுக்கு அப்பா கண்டிப்பாகத் தேவைப்படுவார். பத்து டூவா பெரிய சாலையின் ஓரம் என்பது சாமர்த்தியான இருப்பு. காலையில் கல்லூரிகளுக்குச் செல்லும் பேராசியர்களின் கார் முதல் ஆசிரியர்களின் மோட்டார்வரை அவசரத்திற்கு பெட்ரோல் எண்ணை தேவையென்றால் உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு இயந்திரத்தின் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.
அப்பொழுதுதான் வானத்திலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கும் பகல். கடையின் வாசலில் லெண்டின் விளக்கை எரிய வைத்துவிட்டு அதிகாலை விலகுவதற்கு முன் உருவாகிக் கொண்டிருக்கும் சன நகர்வை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பார்.
“சுசி மணியாச்சி கெளம்புறேன்”
அப்பா கிளம்பும்போது நான் சிலுவாரை அணிந்துகொண்டு பாதி வெற்றுடலுடன் அறைக்குள் உறைந்து கிடந்தேன். மோட்டார் சத்தம் மெல்ல அகன்று தூரமாகும்வரை வெறுமனே நின்றிருந்தேன். தவுக்கே பேருந்தில் ஏறும் சீன மாணவர்கள் மௌனமாக என் அறையின் சன்னலைக் கடப்பது தெரிந்தது. அந்த தவுக்கே பேருந்தில் ஏறும் பல மாணவர்கள் பெண்கள்தான் என்பதால் எல்லோரும் காலையில் கிடைக்கக்கூடிய சிறு வெளிச்சத்திலேயே எதையாவது வாசிக்கத் துவங்கிவிடுவார்கள்.
10 நிமிடத்திலேயே முழுவதும் கிளம்பிவிட்டு புத்தகப்பையுடன் வெளியே வந்தேன். மணி சரியாக 6.40லிருந்து 6.45க்குள்தான் இருக்கும், மேட்டுப் பாதையில் மணியம் அண்ணன் பேருந்து வந்து நிற்கக்கூடிய நேரம். மேட்டுப் பாதையை அடைந்தவுடன் மிகப் பெரிய ஒரு ஹார்ணை அடித்துவிட்டு அதன் சத்தத்தின் அலைகள் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பலமான சத்தம்.
“சீக்கிரம் வாங்கடா! பாசாருக்குப் போற மாதிரி வருதுங்க பாரு. பிள்ளிங்களா பெத்துப் போட்டுருக்காங்க. . ஆங் ஆங் சீக்கிரம். . உடியாடா”
மணியம் அண்ணன் அவரது இருக்கையிலிருந்து எழுந்து தூரத்திலிருந்து வேகமாக பதற்றத்துடன் ஓடி வரும் எங்களைப் பார்த்துக் கத்தினார். எப்பொழுதும் இப்படித்தான் கத்துவார். இங்கிருந்து புறப்பட்டு சுங்கை ஈபோர் கம்பத்திலும் 4 மாணவர்களை ஏற்ற வேண்டும் என்பதால் அதிகாலையில் எல்லாம் அமைதிகளும் முதலில் மிகவும் வக்கிரமாக உடைவது மணியம் அண்ணன் பேருந்தில் வைத்துதான்.
“எவனாது எழுந்து தலையெ வெளிய நீட்டுனிங்கனா அறுத்துருவேன். . “
எல்லோரும் கால்கள் இரண்டையும் பெண் பிள்ளைகள் போல இறுக்கிக் கொண்டு அமர்ந்து கொண்டோம். வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அன்று ஐயா பிள்ளை சாப்பிட்ட நாசி லெமாக் பொட்டலத்தின் தாளைக் கசக்கி வெளியே எறிந்துவிட்டிருந்தான்.
“டே. . உங்கப்பனா வந்து கூட்டறான் ரோட்டெ. சிவராமன் மவந்தானே நீ? வெளுத்துருவாண்டா உன்னெ. எங்கடா பஸ்ஸு காசு? 25 வெள்ளி கொடுக்க வக்கு இல்லெ. .”
மணியம் பேருந்தில் 25 வெள்ளியைச் சரியான நேரத்தில் கட்ட முடியாத பல வக்கில்லாதவர்கள் இருந்தார்கள். மாதத்தின் ஆரம்பத்திலேயே 25 ரிங்கிட் கொடுத்துவிட்டு நீல நிற பாஸ் புத்தகத்தில் மணியம் அண்னனின் கையெழுத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.
“எல்லாம் கடன்காரனுங்களா வந்து சேந்துருக்கானுங்க!”
என் வீட்டு பின்புற வரிசையில் இருக்கும் காந்தராவ் பயத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு நாற்காலி தள்ளிதான் தனது முகத்தைக் காட்டாதவாறு பதுங்கிக் கொண்டிருந்தான்.
“யேண்டா?”
“பஸ்ஸு காசு எடுத்து வரலடா. .”
“நாளைக்குக் கட்டிக்கயேன்”
“உஷ்ஷ்ஷ். . “முருகா! இன்னிக்கு பஸ்ஸு கார அங்கிள் தூக்கி வெளிய எறிஞ்சிர மாட்டாரே?”
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவனைப் பேருந்தின் படிக்கட்டுகளின் மீது வைத்தே திட்டினார் மாணிக்கம்.
“ரோசம் இருந்தா. . 2 மாச காசு இன்னும் தரலே. கொண்டாந்து கொடுக்க சொல்லு. நாளைக்கு எடுத்து வரலே பஸ்லேந்து தூக்கி வெளிய வீசிருவேன் உன்னெ. புரியுதா?”
அவனது முகத்தில் தெரிந்த அவமானத்தின் சாயல் அவ்வளவு உக்கிரமானவை இல்லையென்றாலும் அன்று முழுவதும் ஒரு முதிர்ச்சிக்குரிய அழுகையுடன் தனியாகத் திரிந்து கொண்டிருந்தான். இன்றும் அவனுக்கு பணம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு கணமும் மணியம் அண்ணனின் கடுமையான வார்த்தைகளுக்கும் அந்த வார்த்தைகள் அவனைத் தூக்கி வெளியே வீசப் போகும் தருணத்திற்கும் மத்தியில் ஒரு திடப்பொருள் போல இறுகியிருந்தான்.
அதிகாலை இன்னமும் பின் தொடர்ந்தது. பள்ளியில் இறங்கும்போதுதான் இலேசாக விடிந்திருக்கும். சிங் தாத்தா பள்ளியின் வாசல் கதவைத் தரதரவென தள்ளிக் கொண்டும் சாத்திக் கொண்டும் அதிகாலை இரைச்சலின் கடைசி வருகையென நகர்ந்து கொண்டிருப்பார்.
பள்ளியின் வளாகத்தில் பேருந்து நுழைந்ததும், திடலின் வெகு தொலைவான மௌனத்திலிருந்து சிறுக சிறுக விடைப்பெற்றுக் கொண்டிருந்த இருளைப் பார்க்க முடிந்தது. எல்லோரும் இறங்குவதற்கு வரிசைக்கட்டி நின்றோம். தவறுதலாக காந்தராவ் வரிசையின் முதல் இடத்தில் நின்றிருந்தான். பேருந்து நின்றதும் இறங்கி ஓடி விட வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவு அவனை அவசரப்படுத்தியிருக்கக்கூடும்.
“டே. . கடன்கார பையா. .ஒளிஞ்சிக்கிட்டு ஓடப் பாக்கறியா?”
மணியம் அண்ணன் பேசி முடிப்பதற்குள் பதற்றத்தின் உச்சத்தில் இடறிய காந்தராவ் தடுமாறி பேருந்திற்கு வெளியே விழும்போது, கடைசியாகப் பார்த்த அவனது முகமும் விழுவதற்கு முன்பான யாருக்கும் கேட்காதபடிக்கு தவறிய அவனது சொற்களும், நடக்கப் போகும் அசம்பாவிதத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தனது உடலை நகர்த்தி வெளிச்சத்திற்குச் சௌகரிகமான இடமளித்திருத்துக் கொண்டிருந்த அதிகாலையின் கரைதலில் தொலைந்துபோயின.
உடைய மறுக்கும் அதிகாலை
இன்றும் அதிகாலை வருகிறது. உடலைத் தீண்டும் பனி கூட்டம் யாருக்கும் தனது பிம்பத்தைக் காட்டாமல் கரைந்துவிடுகிறது. முன்வாசல் பக்கமாக வந்து நிற்கும் போது சுற்றிலும் விரிந்துகிடக்கும் இரும்பு காடுகளின் மீது படர்ந்து தோல்வியுற்று உடையாமல் காந்தராவின் மரணத்தைப் போல அல்லது ஓர் அதிகாலையில் மரணித்த அப்பாவின் நினைவுகள் போல ஒரு திடப்பொருளாக மாறிவிட்ட அதிகாலையைப் பரிதாபமாக மட்டுமே தரிசிக்க முடிகிறது.
அப்பே பேருந்தோ தவுக்கே பேருந்தோ மணியம் பேருந்தோ, இப்பொழுது எங்கே ஓடிக் கொண்டிருக்கும்?
நன்றி: மாத இதழ் உயிர் எழுத்து(மே) இந்தியா
அநங்கம் காலாண்டிதழ் மலேசியா (டிசம்பர்)
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
No comments:
Post a Comment