அதிகாலை 12மணிக்கு மேல்தான் இருள் அடர்த்தியாக படர்ந்திருக்கும். சலனங்கள் தோன்றும்படியான சூழ்நிலை அங்குமிங்கும் இருப்பினும், 12மணிக்கு மேல் எப்பொழுதுமான ஒரு அமைதி பரவியிருக்கும். இந்தச் சமயத்தில் சத்தம் போட்டு பேசினால்தான் மகிழ்ச்சியை மிக அதீதமாகப் பகிர்ந்து கொள்ள முடியும் போல.
அப்படியென்றால், 12மணிக்கு மேல்தான் சரியான நேரம். எத்தனை பேர்? சுந்தர், யோகேஸ்வரன், மாதவன், கோமலன் மேலும் ஒருவன் இருந்தால் போதுமானதாகப் படுகிறது. அந்த ஒருவன் நானாகவே இருந்து கொள்கிறேன். இடம்? கடற்கரையோரம் நிச்சயம் பலமான காற்று வீசும். குளிர்ச்சியில் உறைந்து போகலாம். கைகள் இரண்டையும் இரண்டாகக் கோர்த்து, மார்போடு இறுக்கிக் கொண்டு உடல் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வார்த்தைகள் தடுமாறிப் போக, மகிழ்ச்சியை மிக பகிங்கரமாக வெளிப்படுத்திக் கொள்ளலாம்தான்.
“டேய் மாதவன். . . டேய் யோகேசு. . . அங்க பாருடா கோமலன். . . டேய் கைய உடுடா, இவன பாரேன், டேய் சுந்தரு. . .” மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றாமல் போகும் அந்தக் கணத்தில் வார்த்தைகள் தடுமாறுவது யதார்த்தமானதுதான். அப்படியென்றால் கடற்கரையோரம் இன்னும் பல யதார்த்தங்களைக் கொண்டு வரும் என்று நினைக்கிறேன். காற்று, அலைகள் மோதி கொள்ளும் ஓசையும், அந்த ஓசைகளின் இடையிடையே அலைகள் பாறையின் மீது ஏறி சரிந்து கொள்ளும் முனகலும், நாங்கள் நடந்து கொண்டிருக்கும் காலடிச் சப்தங்களும், எல்லாமும் அன்றைய பொழுதில் எங்களின் தனிமையைக் கடந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்.
கோமலன் சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடியவன். மாதவனின் மௌனம் திடீரென்று களைந்து வெடிக்கும். யோகேஸ்வரன் அனைத்தையும் வேடிக்கையாக அவதானிக்கக்கூடியவன். சுந்தர் சோம்பலான அசைவு கொண்டவன். ஏதாவது கவிதைச் சொல்லிக் கொண்டே இருப்பான். இவர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் நான் கோமாளித்தனமாகப் பேசிப் பழகக்கூடியவனாகத்தான் இருக்கிறேன். ஏதாவது பேசி அடிக்கடி சிக்கிக் கொள்வேன். மூச்சுத் திணறும் அளவிற்குத் தடுமாற்றம் நிரம்பி ஓடிக் கொண்டிருக்கும். நான் அப்படி இருந்துவிடுவதுதான் உத்தமம் என்று தோன்றும் போதெல்லாம் நான் அப்படியாகத்தான் இருந்து விடுகிறேன்.
தத்துவம். நகைச்சுவை, விமர்சனம், கவிதை, இரசனை, இசை, ஆபாசம், கடவுள், பேய், உறவுகள், பாரதி என்று எங்களின் உரையாடலைக் கடற்கரையோரம் நிகழ்த்தினால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதற்காகத்தான், கடற்கரையைத் தேர்தெடுத்துருக்கிறேன்.
“இரவுகள் பற்றி நீ என்னா நெனைக்கறெ?”
“அது இயற்கை, எப்பவும் இருக்கும், வரும் போவும், வேற என்னா இருக்கு?”
“நெறைய இருக்கலாம். இரவு எப்பவும் அத வெளிப்படுத்திகாதுனு நான் நெனைக்கறென்”
“ எல்லாம் நம்ப பார்க்கற பார்வைலதான் இருக்கு, கோமலன்”
“ இந்த இரவு எங்க இருக்குனு தெரியுமா? யேன் இதோட வர்ணம் கறுப்புனு எல்லாரும் நெனைக்கறோம்?”
“ என்னாடா கொளப்பறிங்க? இரவுனு தனியா ஒன்னு இல்ல. பகல் இல்லாத நேரம்தான் இரவு”
“அப்படினா பகல்னா என்னா? அது எங்க இருக்கு?”
“அட இவனுங்க ஒருத்தனுங்க. எல்லாத்தையும் அறிவியலா பாத்துட்டா எந்தக் கோளாறும் இல்ல”
“இரவு பகல் எப்ப உணர பட்டுச்சுனு தெரியுமா? அந்தச் சமயத்துல அறிவியல்னா என்னானு தெரிஞ்சிருக்குமா? ஏன் மனுசன் தூங்கறதுக்கு இரவை தேர்ந்தெடுத்தான்?”
“இருளைப் பார்க்க மனுசனுக்குப் பயம்தானே? அதனாலதான் போல உறக்கம் உணரப்பட்டிருக்கும்”
கோமலனும் சுந்தரும் மாறி மாறி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். திடீரென்று மகிழ்ச்சிக் குறைகிறது. வழக்கமான ஒரு தடுமாற்றம் எழுந்து வந்து முகத்தில் அப்பிக் கொள்கிறது. அவர்கள் இரவின் உடலைக் கண்டறிவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். சடாரென்று சுந்தர் கடற்கரையில் அமர்ந்து கொள்கிறான். வானத்தைப் பார்த்து ஏதோ கவிதை கூறத் தொடங்குகிறான்.
“வானம் இருளைப் போல் அல்லவா
எங்கும் விரிந்து கொண்டே போகிறது!
இரவின் எல்லையைக் கடக்க இயலாத
மனிதர்கள்தான் உறங்கிப் போகிறார்கள்!
பகலில்லாத பொழுதுகள் இரவென்றால்
பகல் ஏன் இல்லாமல் போகிறது?
அறிவியலா? அதிசியமா? இயற்கையா?
எல்லாமும் மனிதனுக்குள். . “
யோகேஸ்வரன் அன்று மட்டும் எதையும் வேடிக்கையாக அணுகாமல், அவனும் வானத்தைதான் பார்த்துக் கொண்டிருக்கிறான். சுந்தர் கூறிய கவிதையை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எல்லோரும் ஒன்று சேர வானத்தை மல்லாந்து வெறித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குத் திடிரென்று இருள் பிடிக்க தொடங்குகிறது. கோமலன் எல்லாரையும் கடற்தரையில் அமரும்படி கேட்டுக் கொள்கிறான்.
அவன்தான் பேசத் தொடங்குகிறான்.
“டேய், நம்பலாம் சேந்து ஒரு காரியம் பண்ணனும், எப்படி முடியுமா?”
“எல்லாம் சேந்துனா எது வேணும்னாலும் செய்யலாம், சொல்லு”
“ நம்ப யேன் செத்துப் போயி பாக்க கூடாது?”
“செத்துப் போயி எத பாக்க போற?”
“ நம்ப இல்லாம இந்த உலகம் இரவுல எப்படி இருக்கும்னு பாக்கனும்”
“எப்பவும் போலத்தான் இருக்கும். இதுல நீ யாரு நான் யாரு. எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்”
“இல்ல நம்ப அப்படி நெனைச்சிக்குறோம். நம்ப இல்லாத இந்த உலகம் இரவுல ஏதாவது ஒரு மாற்றத்துல நகர்ந்துகிட்டு இருக்கும்னு நெனைக்கிறேன்”
“ நீ கடவுளா மாற போறியா?”
“யேன் கடவுள்னு சொல்றெ?”
“செத்துப் போயிட்டா எல்லாரும் கடவுளா ஆயிறுவோம்னு சொல்லித்தான் எங்க வீட்டுல என்ன வளர்த்துருக்காங்க”
“சரி, அப்படினா யேன் நம்ப எல்லாம் ஒன்னா கடவுளா ஆகக்கூடாது?”
“எனக்குக் கடவுளா ஆவறதுல விருப்பம் இல்லனா? நான் இருக்கத்தான் விரும்பறேன், அதுவும் இங்க, இப்படிக் கடற்கரையில, இந்த இரவு நேரத்துல, இந்த மாதிரி நண்பர்களோடு”
“ நீயும் கடவுளா ஆகனும், அதான் இயற்கை. மாத்த முடியாது”
“அப்படினா சுந்தரை ஒரு கவிதைச் சொல்ல சொல்லு”
சுந்தர் மீண்டும் வானத்தை மல்லாந்து பார்த்துக் கொள்கிறான்.
“இரவும் மரணமும்
ஒன்று போல் தெரிகிறதே!
இரண்டையும் மீட்பது
எளிதாகத் தெரியவில்லை!
வாழ்வு அற்றுப் போகும் தருணம்
எல்லாமும் இரவில் போய் முடிந்து விடுகிறதோ?
இரவு பீதியூட்டுகிறது!”
எல்லாரும் ஒரு அமைதியில் உறைந்து கிடக்கிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாமல் இரவு அடர்ந்திருந்தது. 12 மணிக்கு மேல் மட்டும் ஏன் இரவு இவ்வளவு பயங்கரமாகத் தோன்றுகிறது? இந்த நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த சரியானதல்ல. கோமலன்தான் மீண்டும் பேசத் தொடங்கினான்.
“ நம்ப உடனே இல்லாமல் போகனும்டா”
“அவ்ள சுலபமா அதைச் செஞ்சிறலாமா?”
“ சுந்தர் சொன்ன மாதிரி எல்லாமும் நமக்குள்ளதான். தைரியமும், சாந்தமும், அமைதியும், வார்த்தைகளும், மரணமும்கூட”
“உனக்கு யேன் இந்த மாதிரி எண்ணம் வந்துச்சு?”
“தெரியல, ஒரு நாள் இரவுலதான் நான் எங்கப்பாவெ பார்த்தென். ஜன்னலோரமா நின்றுருந்தாரு. ரொம்ப நேரம். இரவு முழுக்க நின்றுருந்தாரு.”
“உங்க அப்பாவுக்கான இருப்பின் கால அளவை யாரு முடிவு செஞ்சானு தெரியுமா?”
“அது பத்தி அவ்வளவா அக்கறை இல்லையே”
“கோமலன் நீயோ நானோ புதுசா சிந்திக்க தொடங்குற விஷயம் இல்ல இது, இந்த இரவுகூட பழசுதான் தெரியுமா?”
“எதுமே தெரியலெ, ஆனா அப்பா அன்னிக்கு ரொம்ப அமைதியா சாந்தமா நிண்டுகிட்டு இருந்தாரு. அது மட்டும்தான் கண்ணுலே இருக்கு”
“என்னா சொன்னாரு?”
“மரணம்னா விடுதலைனு சொன்னாரு. இன்னோனும் சொன்னாரு. மரணத்தைப் பத்தி இரவுல சிந்திக்க தொடங்குனு சொன்னாரு”
திடீரென்று அனைவரும் மரணத்தைப் பற்றி சிந்திக்க தொடங்கினோம். எல்லோரின் முகத்திலும் இரவு பினைந்திருந்தது. கோமலனின் முகம் வெளிரிக் கொண்டே போனது. மீண்டும் பேசத் தொடங்கினான்.
“ நாந்தான் இதையெல்லாம் ஆரம்பிச்சிருக்கேன். அப்படினா நாந்தான் மொதல்ல இல்லாம போகனுமா? இந்தக் கடல் எல்லாத்துக்கும் பதில் சொல்லும் போல”
“அவ்ள சாதரணம் இல்ல, கோமலன். இருப்பும் இல்லாமையும் எல்லா இடத்துலயும் நடந்துகிட்டுதான் இருக்கு. உன் பக்கத்துல என் பக்கத்துல, அதோ அந்தப் பக்கம் திரிஞ்சிகிட்டு இருக்கும் எல்லா மனுசாளுங்க பக்கத்துலயும் எப்படி இரவு நகர்ந்துகிட்டு இருக்கோ, அது மாதிரிதான் இல்லாமையும் மரணமும் எப்பவும் கூடவே இருக்கு”
“எல்லாரும் அத பழகிகிட்டோம்தானே? பிறகு எதற்கு ரொம்பவும் வியாக்கியானம்? இருப்பை நம்ப முடிவு செய்ற மாதிரிதானே இல்லாமையும் நம்பலே தேர்ந்தெடுக்க போறம்”
“கோமலன், நீ கடவுளா ஆகப் பாக்கற, அதான் இப்படிலாம் தோனுது”
“எனக்கு இந்த உடம்போடு வாழ பிடிக்கல மாதவன். உனக்குக்கூட பிடிக்காதுதான். நல்லா யோசிச்சி பாரு.புரியும். கொஞ்ச நேரம்தான். அப்பறம் நமக்கே தெரியாத ஒரு சூன்யத்துல நம்பலாம் கரைஞ்சி போயிறலாம்”
அனைவரின் இருப்பும் சிறிது நேரத்திற்குக் கடற்கரை இருளோடு ஒரு ஆழ்ந்த மௌனத்தில் குவிந்து கொண்டது. யாருடைய முகத்தையும் பார்க்க முடியவில்லை. எல்லாரும் ஓர் இருளாக மாறிக் கொண்டிருப்பது போல பிரமையாக இருந்தது. கோமலன், சுந்தர், யோகேஸ்வரன், மாதவன் எல்லாரும் ஒன்று போலவே தெரிகிறார்கள்.
கடற்கரை வெகு நீளமாக எதையோ கடந்து கொண்டே போகிறது. அதன் எல்லை சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக தெரிகிறது. கடல் அலைகள் கால்களைத் தொடும்வரை உண்மையிலேயே உறைந்துதான் போயிருந்தேன்.
இப்பொழுது, சுந்தர் வானத்தை மல்லாந்து பார்த்துக் கவிதைச் சொல்ல தொடங்குகிறான். அவன் மட்டும்தான் இருக்கிறான். அவனுடைய இருப்பு மட்டும்தான் இரவைப் பலமாக வலியுறுத்துகிறது. மாதவனோ, கோமலனோ அல்லது யோகேஸ்வரனோ, இவர்கள் யாருமற்ற ஒரு கடற்கரை யாருக்காகவோ நீண்டு வளர்ந்திருக்கிறது.
“தவறுதலாக
நான் கடவுளாகிவிட்டேன்!
இல்லாமல் போவதைப் பற்றி
சம்பாஷனை செய்யலாமா?
நீ நான் அவர்கள்
எல்லாரும் மகிழ்ச்சியை
இரவில்தான் வெளிப்படுத்த வேண்டும்!
அதன் எல்லையை கடற்கரைகள்
முடிவு செய்யட்டும்!”
சாவகாசமாக இந்தக் கவிதையை ஒப்புவித்துவிட்டு, வானத்தை மல்லாந்தவாறே சுந்தர் எழுந்து நின்று கொள்கிறான். அவன் முகமில்லாமல் வெறும் இருளாக போய் கடலில் மறைந்து கொண்டான். அதன் பிறகு நான் மட்டும்தான். நானேதான். கடற்கரை பயங்கரமானதாகத் தோன்றுகிறது.
யாருமற்ற ஒரு வெளி. சிறிது நேரத்தில் அப்பா தூரத்தில் நடந்து வருவது தெரிகிறது. கோமலன் கூறியதைப் போல அப்பா மிகவும் நிதானமாக நெருங்கிக் கொண்டிருந்தார். அவருடைய கண்களில் உலகமற்ற ஒரு பிரதேசத்தின் ஒளி ஊடுருவி தனிந்து கொண்டே இருந்தது. அவர் இரவை வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வந்தார்.
“ஐயா. பயப்பாடதெ. நான் இப்ப உன்ன பத்திதான் பேச வந்துருக்கேன்”
அப்பாவின் குரல் மிகுந்த நேசத்துடன் ஆறுதலாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஐயா, நீ இரவைப் பத்திக் கவலப்படறதெ விடுயா. நல்லா கண்ண மூடி தூங்குயா, பகல் வந்தோனே எல்லாம் சரியாயிரும். நீ மனுசன்யா. இந்த ஒடம்பு இருக்கே, அது இப்ப எதுக்கும் தயார் ஆகலயா. மறுபடியும் சொல்றேன்யா உன்ன நீ மனுசனா நெனைச்சிக்கோ. உனக்கும் வலி இருக்குயா. இரவுல இப்படி தனியா வெளிய வராதெ. . . . உன்ன நீ தனிமைப்படுத்தி ரொம்ப நாளா ஆச்சு. அது உன்னோட சுயவிருப்பம். மொதல்ல உன்னோட கற்பனைல இருக்கும் அந்தக் கோமலன், யோகேஸ், சுந்தர் இவுங்க எல்லாத்தையும் கொன்னுறுயா.. . . உன்ன பைத்தியம்னு நிறைய பேரு பேசிக்கறாங்க. வேதனையா இருக்குயா. நல்லா நிம்மதியா தூங்குயா. எல்லாம் சரியாயிரும்னு நெனைச்சிக்கோ. பிரச்சனைகளும் தீர்வுகளும் நமக்குள்ளத்தான் இருக்குயா. மனச போட்டுக் கொளப்பிக்காதெ. எழுந்து திடமா நடந்து பழகு. மனுசாளுங்ககூட பேசிப் பழகு. உன்னோட இரவுலேந்து வெளிய வந்து பாருயா, பகல் ரொம்ப வெளிச்சமா பிரகாசமா உனக்காகவே விரிஞ்சி கிடக்கு.”
அப்பா எழுந்து சிரித்துக் கொண்டே மீண்டும் எதையோ நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இல்லாமல் போகும்வரை அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா கடவுளாகிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் சூன்யம். கடற்கரை. இருள். எந்தத் தருணத்திலும் இரவைத் தவிர்க்க முடியாமல் போய் விடுமோ? பயம் ஏற்பட்டதும், எழுந்து வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். கடற்கரையிலிருந்து விடுபடுவதே விமோச்சனமாகப் படுகிறது. தூரமாக நடந்து வந்துவிட்டேன்.
எல்லோரும் இரவில் தூக்கமின்றி அலைய தொடங்கினால், தூக்கமின்மை ஒரு மன நோயாக தெரியாமல் அன்றாட இயல்பாகிவிடும் போலும். வேகமாக நடக்க தொடங்கினேன். நடந்து கொண்டே இருந்தேன். எல்லோரும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி என்னுடன் நடக்க வேண்டுமென்று இன்னும் வேகமாக நடக்க தொடங்கினேன். இருளில் சாலை முழுவதும் இப்பொழுது மனிதக் கூட்டம் நிரம்பி கொண்டே போகிறது. வீட்டைத் தொலைத்தவர்கள், தூக்கத்தைத் தொலைத்தவர்கள் எல்லோரும் என்னுடன் நடக்க தொடங்குகிறார்கள்.
கோமலன், மாதவன், யோகேஸ்வரன். . இப்பொழுது புதிதாக ஆண்களும் பெண்களும் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மற்றுமொரு கடற்கரைக்கு விரைந்து கொண்டிருந்தோம். இரவு மகிழ்ச்சியை வெளிப்படுத்த சரியான தருணமாக மாறுகிறது. தூக்கமின்மை ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. மனம் காற்று போல் உணர்கிறது. எல்லோரும் வானத்தை மல்லாந்து பார்த்துக் கவிதைச் சொல்ல தொடங்குகிறோம்.
நாங்கள்
இரவாக மாறிவிட்டோம்!
கடவுளாகிவிட்டோம்!
தூக்கத்தைக் கடந்தவர்கள் நாங்கள்!
அமைதியும் சாந்தமும் எங்களுக்குள்ளே!
ஒரு கட்டத்தில் எங்களின் ஊர்வலம் திடீரென்று நின்று கொண்டது. எல்லோரும் ஒட்டு மொத்தமாக அசடு வழிந்தோம். இறுதியாக மீதமிருக்கும் என் முகமும் தொலைந்து போவதற்கு முன் ஒருமுறை வேகமாகக் கதறிப் பார்த்தேன்.
ஒர் அகலமான கட்டில்
இரவுகள் மிகவும் தீர்க்கத்தரிசனமாய்
என் மீது படுத்துக் கிடக்கிறது!
ஒவ்வொரு இரவிலும் தூக்கம்
புரண்டு எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருக்கிறது!
தூக்கமின்மை மன நோயாகத்தான் தோன்றுகிறது. அகலமான சொகுசான கட்டில் மட்டும்தான் ஒரு சூன்யமாகக் கிடக்கிறது.
கே.பாலமுருகன்
bala_barathi@hotmail.com
No comments:
Post a Comment