Tuesday, October 19, 2010

வனத்தின் குரல் - சிறுகதை பார்வை

‘வனத்தின் குரல் – மிக ஆழமான இழப்பின் குரல்”

சீ.முத்துசாமி எழுதிய ‘வனத்தின் குரல்’ சிறுகதை 2006-ல் ஜூன் மாத காதல் இதழில் பிரசுரம் ஆகியிருந்தது. அந்த இதழை 2007-ல் நான் வாங்கியபோது வனத்தின் குரலைக் கடைசிவரை கேட்கவே இல்லை. தவறவிட்டு விட்டேன். மலேசிய நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பிலக்கியத்தின் குரல் சீ.முத்துசாமியினுடையது என்பதை அவருடன் பழகிய நாட்களிலும் அவருடைய மற்ற சிறுகதைகளை வாசித்த போதும் புரிந்துகொண்டேன்.


அண்மையில் எழுத்தாளர் யுவராஜன் அவர்களின் வீட்டில் அதிகாலை 5மணிவரை உரையாடிக் கொண்டிருந்தபோத சீ.முத்துசாமியின் படைப்புலகம் பற்றி கொஞ்சம் பேசினோம். அவருடைய பரிசு பெற்ற நாவலான ‘மண் புழுக்கள்’ பற்றி யுவாவிடம் கூறினேன். அவருடைய முக்கியமான படைப்பு அது என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. சீ.மு-வின் ‘வனத்தின் குரல்’ சிறுகதை மிக முக்கியமான சிறுகதை எனவும் கட்டாயம் வாசிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். நான் அப்பொழுது அந்தக் கதையை இன்னும் படித்திருக்கவில்லை. ஆகையால் மேற்கொண்டு அவரும் அக்கதையைப் பற்றி ஏதும் பேசவில்லை.

நேற்றுத்தான் வனத்தின் குரலைத் தேடி மீண்டும் கண்டடைந்தேன். பழைய காதல் இதழ்களை எடுத்துப் புரட்டியபோது சீ.முத்துசாமியின் அந்த வனம் இன்னமும் அப்படியே பசுமையாகத்தான் இருந்தது. சீ.முத்துசாமியின் ‘வெளி’ சிறுகதையின் மூலம், முக்கியமாக மண் புழுக்கள் மூலம் நான் அடைந்த வாசக பரிதவிப்பும் பாதிப்பும் இந்தக் கதையில் என்னால் அடைய முடியவில்லை. ஒருவேளை இந்தக் கதையை நான் 2007-லேயே வாசிக்க நேர்ந்திருந்தால் கட்டாயம் முதலில் தடுமாறியிருந்திருப்பேன்.

வனத்தைப் பற்றிய வர்ணனைகள் இந்தச் சிறுகதையில் அபாரமான தெறிப்புடன் வெளிப்படுகிறது. சீ.முத்துசாமியின் இந்தக்கதையில் ஒரு ஜென் கவிதையை போல மௌனத்துடன் படுத்திருக்கிறது மலை. வனத்தை உண்மையின் இருப்பாகக் காட்டத்துவங்கி பிறகு குரலாக, உருவமற்ற சத்தமாக கதையில் ஒலிக்கவிடுகிறார் கதையாசிரியர். பெருநகரத்தின் இரைச்சலையும் பரப்பரப்பையும் அவ்வப்போது கிண்டலடித்துவிட்டு வனத்தின் அதிசயத்தைக் கதை நெடுக வித்தியாசமான மொழிநடையில் முன்வைக்கிறார்.

நான் அந்தக் கதையைப் புரிந்துகொண்ட விதம் வேறுப்பட்டது. ஒரு சிறுகதை பலவகையான புரிதல்களையும் அனுமானங்களையும் ஏற்படுத்திவிடுவது மிக இயல்பான ஒன்றுதானே. வனம் அந்தக் கதையின் மையப்பாத்திரத்திற்குள் மிகவும் செழிப்பான ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. அந்த அதிசயத்தின் முன் தன்னை அதனுள் ஒரு அங்கமாக நிறுவிக்கொள்கிறான். சுகுணா மீதான காதலும் அந்த வனத்தின் ஒரு பகுதியாக நிகழ்கிறது. இறுதியில் சுகுணாவை அவன் விட்டு விலகிய பிறகு அந்த வனமும் அவனைவிட்டுப் போய்விடுகிறது. நமக்குள் புதியதொரு உறுப்புகளாகத் தோன்றும் துரோகம், வன்மம், பொறாமை, போன்ற குணங்கள் நமக்குள் இருக்கும் ஓர் அதிசயத்தக்க வனத்தை/செழிப்பை மெல்ல கொன்றுவிடுவதாக இந்தக் கதையில் நான் உணர்ந்தேன்.

கெட்டவர்களின் மனதில் கடவுள் வாழமாட்டார் எனச் சொல்லப்படுவது சமயத்தின் மிகவும் அடிப்படையான நம்பிக்கை, ஆனால் கெட்டவர்கள் நல்லவர்கள் என வித்தியாசம் பாராமல் கடவுள் எல்லோருக்குள்ளும் இருப்பார் என்கிற தத்துவத்தை முன்வைப்பது பகவத் கீதை. சீ.முவின் ‘வனத்தின் குரலும்’ வனம் என்கிற அடையாளம் கடவுளுக்கு நிகரான வழிப்படுதலில்தான் வைத்துக் கட்டமைக்கப்படுகிறது. எல்லோருக்குள்ளும் ஒரு வனம் இருக்கிறது என புதிய புரிதலை உண்டாக்குகிறது.

அந்த வனம் என்பது நிதர்சனத்தின் எல்லை. அதற்குமேல் பரிணாமல் என்கிற தோரனையில் வசதிகளை உருவாக்கிக் கொள்கிறோம் எனவும் முன்னேற்றங்களை வடிவமைத்துக் கொள்கிறோம் எனவும் கதையாசிரியர் கதையில் குறிப்பிடுகிறார். ஒரு பொம்மைக் கடைக்குள் நுழையும் மையக்கதைப்பாத்திரம் அங்குள்ள போலித்தனங்களைப் பார்த்து வியப்படைகிறார். கரடி பொம்மைகள், சிங்கம் புலி பொம்மைகள், கிளி பொம்மைகள் என வனத்தின் பல நிசங்கள் அங்கு நகலெடுக்கப்பட்டிருக்கும். இன்னும் சில காலங்களில் அநேகமாக வனம் ஒரு வரைப்படமாக மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படும் என்கிற அபாயமும் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் இழக்கும் வனம்/செழிப்பு அவனை ஒரு இயந்திரமாக மட்டுமே செயல்பட வைக்கும். வனம் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் வளர்வது போல அந்தக் கட்டிடத்தின் ஒரு செங்கல் போலவே நவீன வாழ்க்கையும் அதன் அபத்தங்களும் அவனுக்குள் சொருகப்பட்டிருக்கும் என்கிற அனுமானத்தைக் கதை உணர்த்துகிறது. ஆகையால்தான் கதையின் நகரத்தில் அலையும் அத்துனை மனிதர்களின் மீது ‘காடு தொலைத்த நினைவு கூட இல்லாதவர்கள்’ எனும் பார்வையை முன்வைக்கிறார்.

பெரும்பாலும் நாம் நமக்கு நேர்மையாக இருப்பதில் தவறிவிடுகிறோம் என்கிற எண்ணம் எனக்குண்டு. வாழ்வின் சில தருணங்களில் எதை எதையோ காரணம் காட்டி நேர்மையாக இருப்பது முடியாத காரியம் என அதனைவிட்டு ஓடியிருக்கிறேன். தப்பித்தலுக்கும் வியாக்கியானம் செய்து நியாயப்படுத்தும் செயல்பாடு வேறு யாருக்குக் கைவரும், மனிதனைத்தவிர? அப்படியொரு நேர்மையை இழப்பதும் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் வனத்தை இழப்பதும் ஒருவகையில் ஒன்றையொன்று சார்ந்திருந்திருக்கிறது எனச் சிறுகதையின் மூலம் உணர முடிந்தது.

சுகுணா கதையில் சில இடங்களில் சொற்பமாக வந்துவிட்டுப் போகிறாள். ஆனால் சுகுணாவின் மூலம்தான் மையக்கதைப்பாத்திரம் தனக்குள் அடரும் ஒரு வனத்தை இழக்க நேரிடுகிறது. தையின் தொடக்கத்திலிருந்து அவருக்குள் உருவாகும் வனம் குறித்த பிரமை, பிரமிப்பு எல்லாம் கதையின் இறுதியில் உடைக்கப்படுகிறது. மறுவாசிப்பிற்குப் பிறகு வேறு ஏதும் திறப்புகள் ஏற்பட வாய்ப்பை தனக்குள் வைத்திருக்கும் நல்ல கதை என்பதில் மறுப்பில்லை.

ஒரு சில பகுதிகளில் சிறுகதையில் சட்டென ஒரு புரிதலை அள்ளி வீச முடிகிறது. வனம் என்கிற குறியீட்டிற்கும் மனதிற்கும் நெருக்கமான ஒப்புவமை சொல்லப்பட்டிருப்பது போல தோன்றும். “காடு குறித்த பிரக்ஞை பூர்வமான விழிப்பு, எந்தப் புள்ளியில் தொடக்கம், என்பதைத் திட்டவட்டமாக நினைவு கூர இயலவில்லை” எனும் இடத்தில் மனம் என்கிற ஒரு அந்தரங்க பிரக்ஞை இருப்பது குறித்து எப்பொழுது நாம் அறிந்திருப்போம் அல்லது உணர்ந்திருப்போம்? திட்டவட்டமாகக் கூற முடியாதுதானே. ஒருவேளை முதல்முறை காதல் செய்யும்போது மனதின் இருப்பை நாம் உணர்ந்திருக்கக்கூடும். இந்தக் கதையில் வரும் மையக்கதைப்பாத்திரமும்  முதல் காதலை மனசுக்குள் பதியம் போட்டப் பிறகுத்தான் வனத்தை உணர்கிறான்.

கதையில் நான் சீக்கிரமே அடைந்த இடங்கள் பேருந்தில் போய்க்கொண்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் இரயில் பயணம் குறித்து மனப்பதிவையும் காட்சிப்பதிவையும் விவரிக்கும் இடங்கள். சிறுவயதில் அம்மாவுடன் அதிகமான இரயில் பயணங்களில் நாட்களைக் கழித்ததுண்டு. அத்துனைத் தூரமான பயணங்கள் இரயிலில் மட்டுமே சாத்தியம். தூரப்பயணங்கள் அதுவும் இரயிலில் பயணிக்கும்போது வனத்தை அளக்கவும் தரிசிக்கவும் வாய்ப்பாக அமையும். நகரத்தில் வாழ்ந்து பழகியவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் வனத்தில் இருப்பதே பெரிய கொடுமையாகவும் அசௌகரிகமாகவும் அமைந்துவிடுவதுண்டு. ஆனால் இரயில் பயணங்கள் வனத்தில் வெகுகாலம் இருந்துவிட்ட களைப்பையும் அனுபவத்தையும் தரவல்லது என்றே நினைக்கிறேன். கதை மேலும் பல சலனங்களைக் கொண்டிருக்கிறது. வெவ்வேறான வாசிப்பில் வெவ்வேறான விமர்சனங்களின்போது இந்தப் பார்வை மேலும் விரிவடையும்.

இந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன்பதாகவே ஜெயமோகன் எழுதிய ‘காடு’ நாவலை வாசித்துவிட்டுதால், வனம் குறித்த குறிப்புகள் இடம்பெறும் இடங்களிலும் வர்ணனைகளிலும் மனம் குறைவான பிரமிப்பையே அடைந்தது. இருந்தபோதும் சிறுகதைக்குரிய அத்துனைக் கச்சிதங்களும் தாராளமாக இடம்பெற்றுள்ளன. சீ.மு-வின் வனத்தின் குரலை வாசித்து முடித்தப்பிறகு “மனிதனின் மனம் இயற்கையின் முன்வைக்கப்பட்ட ஒரு துண்டு மரம் போல” என ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி சொன்ன குறிப்பு ஞாபகத்திற்கு வருகிறது. மனம் காதலினாலும் துரோகத்தினாலும் எப்படித் தன் செழிப்பை/வனத்தை இழக்கிறது என்பதைப் பற்றி மிகவும் துரிதமான மொழிநடையில் கதையாசிரியர் சொல்லியிருக்கிறார்.

மனித உணர்வுகள் மரத்தின் வேர்களாக அலைந்து திரிந்து ஊடுருவி ஒரு நேசத்தை நோக்கி, உயிர் வாழ்தலுக்கான போராட்டத்துடன் பாய்கிறது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


3 comments:

phurusotaman said...

வாழ்த்துக்கள்.

கே.பாலமுருகன் said...

மிக்க நன்றி.

suji said...

nice,,