Saturday, November 27, 2010

சிறுகதை: தனசேகர் தாத்தா மற்றும் அவரின் 3 வகையான தொல்லையும்

தனசேகர் தாத்தாவிற்கு மாதம் மாதம் ஓய்வூதியம் கிடைத்துவிடுவதால், அவருக்கென்ன கவலை. காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டு வீட்டுக்கு வெளியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொள்வார். நாள் முழுக்க அந்த நாற்காலி அவருக்கு மிகவும் வசதியாக இருந்துவிடுகிறது. மதியத்தில் சோறும் மாலையில் ஒரு குவளை காப்பியும் அவர் இருக்கும் இடத்திற்கே தேடி வந்துவிடும். அவருக்கு முன் விரிந்து வளரும் பகலின் ஒவ்வொரு கணத்தையும் அசைபோட்டே களைத்துவிடும் பொழுதுகள்.

“குமாரு. . என்ன வேலைக்கா?”

குமார். பக்கத்து வீட்டு வாலிபன். அடிக்கடி தனசேகர் தாத்தாவிற்கு அடிமையாகிவிடும் ரொம்ப நல்ல பையன். தொடக்கத்தில் அவருடன் வேடிக்கையாகக் கழிந்த தருணங்கள் மெல்ல மெல்ல துன்புறுத்தலாக மாறிவிட்டது. எப்படியாவது தனசேகர் தாத்தாவின் வாயில் விழாமல் ஓடிவிடுவதே அவனுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது.

“இல்லெ. . சுத்தி பாக்க”

“சுத்தி பாக்கெ எதுக்குடா டைலாம் கட்டி அழகா உடுத்திக்கிட்டு வெளியில போற? வீட்டுலெ இருந்துகிட்டெ சுத்தி பாரேன் படவா”

“உங்ககிட்ட மனுசன் பேச முடியுமா?”

“அப்பெ நீ என்ன நாயா? டேய் ஆளை ஏய்க்காதெ”

குமாருக்குக் காலையிலேயே கண் கலங்கிவிடும். அவரிடம் கோபப்பட்டாலும் அவனுக்கு எந்த நன்மையும் இல்லை. யாருடைய கோபத்தையும் அவர் மிகத் தந்திரமாக அலட்சியப்படுத்திவிடுவார். படியில் இறங்கி ஓடிவிட முயற்சித்தான் குமார்.

“காலைலெ ஏண்டா ஓடற? அமைதியா போ”

தனசேகர் தாத்தா இருப்பது 3 ஆவது மாடி என்பதால் மேலேயுள்ள 8 மாடிகள்வரை அவருக்கு வாடிக்கையான அடிமைகள் இருந்தார்கள். எல்லோரும் கட்டாயம் கீழே படியில் இறங்கித்தான் வரவேண்டும் என்கிற துணிச்சலிலும் நம்பிக்கையிலும்தான் தனசேகர் தாத்தா காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரிடமும் பேசுவதற்குத் தன்சேகர் தாத்தாவிடம் வலுவான காரணம் இருக்கத்தான் செய்தது. வெட்டியாக இருப்பதைவிட இப்படிப் பலரின் வாயில் விழுவதற்கு வேறு என்ன தகுதி இருந்திருக்க வேண்டும்? அதைத்தான் தனசேகர் தாத்தா செய்துகொண்டிருந்தார். நாள் தவறாமல் அவர் தொடர்ந்து பகல் பொழுதில் விழித்துக் கொண்டே இருந்தார். அவரைக் கடந்துபோகும் மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவரை அவரே நிறுவிக்கொண்டார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனசேகர் தாத்தாவைப் பற்றி பலர் பலமாதிரி சொல்லி வந்தார்கள். ஒவ்வொருவரும் அவர் மீதான வெறுப்பையும் சலிப்பையும் கோபத்தையும் காட்டத் தவறியதில்லை.

1. கிருஷ்ணன் 5 ஆவது மாடியிலிருக்கும் அடிமை
“அவரு யேங்க அங்க வந்தாரு? குடும்பத்தோடெ வெளிலகூட போக முடியலை. ஏதாச்சாம் குறுக்கெ புகுந்து கேள்வி கேட்டு தொலைக்கறாரு. தாங்க முடியலை. என்னிக்காவது எனக்குக் கோபம் வந்து அவரை அப்படியே நாக்காலியோட தூக்கிக் கீழெ வீசப்போறேன், அப்பெ தெரியும் என்னோட கொலை வெறி”

2. குப்புசாமி 4 ஆவது மாடியிலிருக்கும் அடிமை

“அந்தக் கெழவனைப் பத்தி யேன்கிட்ட கேக்காதீங்க பிளிஸ். அவரு இருக்கற மாடிக்கு இறங்கறத்துக்கு முன்பே உயிரையும் மானத்தையும் கழட்டி வெளில வச்சிட வேண்டியதுதான். அப்பெத்தான் பொழைக்க முடியும். இல்லன்னா காலைலே கழுத்து அறுத்து கையில கொடுத்துரும், கெழடு கெழடு. நானும் எத்தனையோ பேர அறுத்துருக்கேங்க. ஆனா, இவரு இருக்காரே . . .தலை போல வருமா. . . “

3. மூர்த்தி 7 ஆவது மாடியிலிருக்கும் அடிமை

“ ஐயா சாமி, அவரு தெய்வம். தெய்வத்தைப் பத்தி எப்படித் தப்பா பேச முடியும். அப்படிப் பேசறவன் பாயெல்லாம் புளு பூத்து போவும்யா. அவருக்கூட உக்காந்து பேசிக்கிட்டு இருந்தா உலகமே மறந்து போயிரும். அவ்ள அருமையாக உலகத்தெ பத்தி பேசுவாரு. எனக்குக் கண் கண்ட தெய்வம் அவரு. ஒருநாள் உக்காந்து அவருக்கூட பேசிப்பாருங்கய்யா, அப்பெ தெரியும் அந்த மனுசனோட அருமை”

4. முனியாண்டி 6 ஆவது மாடியின் அடிமை

“ அந்தக் கெழவன் என்னிக்கு என்கிட்ட வாங்கிட்டு ஓடப்போறான்னு தெரில. வாய் சரி இல்லன்னா அதான் நடக்கும். யார்கிட்ட எப்படிப் பேசனும்னு ஒரு இங்கிதன் தெரிஞ்சிருக்கனும். அதுக்கூட இல்லாம என்னா வயசாயி என்ன ஆகப்போது? காலைலே வந்து வெட்டி மிதிச்சிக்கிட்டு வாசல்ல வந்து உக்காந்துகிட்டு இருந்தா, என்ன பெரிய பிரதமரோட அப்பாவா ஆயிடலாமா? பாத்துதான் இருக்கனும். இல்லெ ஆளையே முழுங்கிடும் அந்த ஆளு”

5. உதயா – 4 ஆவது மாடியிலிருக்கும் அடிமை

“ அவன் பேச்செ கேட்டிங்களா? யாரா? அதான் அந்த 7ஆவது மாடியில இருக்கானே அந்த மூர்த்தி சொல்றதெ கேட்டுட்டுத் தனசேகர் ரொம்ப நல்லவருன்னு நினைச்சிடாதீங்க. அந்த மூர்த்தி ஒரு குடிகாரப் பையன். பக்கத்துலே வளர்ப்பு பிராணியெ வச்சிருக்க மாதிரிதான் மூர்த்தியெ வச்சருக்காரு அந்த தனசேகரு கெழவன். வாலாட்டா ஒன்னு வேணும்லெ. மத்தப்படி தனசேகர்னாலெ இங்க உள்ளவங்களுக்குத் தொல்லைத்தாங்க. வாயாடிக் கெழவன்கிட்ட வேற என்னத்தெ எதிர்பார்க்க முடியும்?

6. முனுசாமியின் மனைவி – 4 ஆவது மாடியிலிருக்கும் அடிமை

“ஐயோ! அந்த மனுசனா? உயிரை உறிஞ்சி எடுத்துரும். வேலைக்குப் போகலெல அதான் இப்படி. யாரைப் பாத்தாலும் வம்புக்கு இழுத்துடும். வாய் சும்மானே இருக்காதுக்கு அந்தக் கெழடுக்கு. என்னத்தான் பண்ணெ முடியும் சொல்லுங்க. சகிச்சிக்கிட்டு இருக்கவும் முடிலே, எமன் மாதிரி, கயிறுக்குப் பதிலா சொல்லெ போட்டு மனுசன் உயிரெ வாங்கிரும். பாத்துதான் இருக்கனுங்க”

தனசேகர் தாத்தாவின் 3 தொல்லைகள்

அவரால் அந்தக் குடியிருப்பில் எப்பொழுதும் ஒரு சலனமும் சலசலப்பும் நடந்துகொண்டே இருக்கும். இதுவரை 23 புகார்கள். வீடு தேடி வந்து சத்தம் போட்டுவிட்டுப் போனவர்களின் எண்ணிக்கை 17. சண்டையிட்டுப் போனவர்களின் எண்ணிக்கை 12, முறைத்துவிட்டுப் போனவர்களின் எண்ணிக்கை 9, தப்பி ஓடியவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. அவரிடமிருந்து அங்குள்ளவர்கள் அடையாளம் காணும் தொல்லைகளில் மிக முக்கியவானவை 5 மட்டுமே. அதிலிருந்துதான் யாரும் தப்பிக்க இயலவில்லை.

முதல் தொல்லை

படியிலிருந்து இறஙகி வருபவர்களின் பெயர்களை அவர் ஞாபகப்படுத்தி வைத்திருப்பது. அதுவும் மேலே ஏறி செல்பவர்கள் பற்றி அவருக்குக் கவலையே இருந்ததில்லை. அவருக்குப் பொருட்படுத்த வேண்டியவர்களாகப் படியிலிருந்து இறங்கி வருபவர்கள் மட்டுமே.

“யாரு முனியாண்டியா?”

“யாரு முனுசாமி பொண்டாட்டியா? கொஞ்ச நேரம் நிக்கறது! மனுசன் உக்காந்துருப்பது கண்ணுக்குத் தெரிலயா?”

“என்னப்பா இவ்ள அவசரம்? நீ போலனா என்னா குடியா முழுகிரும். ரொம்பத்தான் நடிச்சிக்கிட்டு ஓடறெ?”

“டே. . மாரிமுத்து. இங்கட்டு வந்துட்டு போடா. இந்தக் கெழவன்கிட்ட பேசிட்டுப் போனா இனிக்கு உன் வயிறு நிறையும்டா”

அவர்களின் பெயர்கள் அழைக்கப்படும்போது, இன்று சனி பகவான் ஏறி தன் முதுகில் அமர்ந்துகொள்வது உறுதியாகிவிடும் என நினைத்துக் கொள்வார்கள். சட்டென திரும்பிப் பார்க்காவிட்டாலும் கீழ் படியை அடையும்வரை பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே இருப்பார். சிறிது நேரம்வரை முனகலாக இருந்த அழைப்பு பிறகு கூப்பாடாக மாறியிருக்கும். எதற்கு அந்தத் தொல்லை என எல்லோரும் அவரின் காலை அர்ச்சனையைப் பெற்றுவிட்டுத்தான் போவார்கள்.

இரண்டாவது தொல்லை

தனசேகர் தாத்தாவிற்கு பசிப்பது மிகக் குறைவு. எபொழுதாவதுதான் மதியம் சாப்பிடுவார். மற்ற நேரங்களில் வெறுமனே காற்றை அசைப்போட்டுக் கொண்டிருப்பார் போல. அல்லது அடுக்குமாடி குடியிருப்பவர்களின் சாபங்களை விழுங்கிக் கொள்வதால் அவருக்குப் பசிப்பது இல்லை எனக் கூறலாம். ஆகையால் மதியம் சாப்பாட்டுக்கு வருபவர்களைப் பார்த்துக் கேலியாகப் பேசுவார். இதுதான் பலரால் சகித்துக் கொள்ள இயலாத தொல்லை.

“என்னப்பா சங்கரு. கரட்டா கொட்டிக்கறதுக்கு உடியாந்திட்டியா?”

“பசி கொடலைப் பிடுங்கி கைல கொடுத்துருக்குமே? சாப்டறத்துக்கே பொறந்தருக்கானுங்க”

“யேண்டா உதயா, எருமை மாதிரி வளர்ந்துருக்க. . .விரதம்லாம் எடுக்கவே மாட்டியா? எப்பயும் வாயில எதையாச்சம் போட்டுக்கிட்டே இருக்கனும்?”

“யாரு கிருஷ்ணனா? வாடா. . பசித்த மிருகமே. கொஞ்சம் பேசுட்டிப் போடானா அப்படியே சிலுத்துக்குவே, சாப்டறதுனா மட்டும் ஓட்டமா ஓடறே?”

மதியம் வீட்டுக்குப் போவதைப் பலமுறை சிலர் தவிர்த்திருக்கிறார்கள். இந்தக் கிழவனின் வாய்ச்சொல்லுக்கு ஆளாகிவிட்டுச் சாப்பிட்டால், சோறுகூட இறங்க மறுக்கிறது என எல்லோரும் புலம்புவார்கள்.

மூன்றாவது தொல்லை

தனசேகர் தாத்தா வயதாகிவிட்டாலும் பகலில் சிறிது நேரம்கூட உறங்கமாட்டார். அதெப்படி அவருக்கு மட்டும் தூக்கம் வருவதில்லை என்கிற கேள்வி சராசரி அங்குள்ள சிறுவர்களுக்கும் இருந்தது. நாற்காலியில் தலையைச் சாய்த்துக் கொண்டு மல்லாந்து பார்த்துக் கொண்டிருக்கும் தாத்தாவை ஒருவேளை அவர் தூங்கிவிட்டார் என அனுமானித்தால், அது பொய்யாகிவிடும். மல்லாந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவரது பார்வைக்கு நாலாப்பக்கத்தையும் உணரும் மிக விசாலான பிரக்ஞை இருந்திருக்க வேண்டும். அந்த இடத்தைக் கடக்கும் யாராக இருந்தாலும் அவர்களின் முகத்தை உற்றுக் கவனிக்காமலேயே பெயரைச் சரியாகக் கூறிவிடும் வித்தையைக் கற்று வைத்திருந்தார்.

அவர் பகலில் உறங்கிவிட வேண்டும் எனவே எல்லோரும் தவமாகக் காத்துக் கிடக்கிறார்கள். அவரை நெருங்கும் போதெல்லாம் தாத்தா உறக்கத்தில் தொலைந்து போயிருக்க வேண்டும் என்கிற வேண்டுதல்களே கறாராக ஒலிக்கும்.

“குமாரு! என்னா தூங்கிட்டேனு நெனைச்சியா? உங்களலாம் வழி அனுப்பாமே நான் எப்படிடா தூங்க முடியும்? உனக்கு வேணும்னா 10 மணி தூக்கம் வரும். . கும்பகர்ண பையலே”

“குப்புசாமி. . அப்படியே தூங்கலாம்னுதான் இருந்தேன். நீ வர்றது முன்னுக்கே தெரிஞ்சிருச்சிடா. அதான் காத்துக்கிட்டு இருந்தென். இங்குட்டு வாயேன்”

பகலின் தனிமையும் சோர்வும் அவரை இதுவரை ஒன்றுமே செய்யாமல் இருப்பது வியப்பாகவே இருந்தது. அவரை ஒன்று தூங்க வைத்துவிட வேண்டும் அல்லது அவரை அங்கிருந்து விரட்டியடித்துவிட வேண்டும் என்பதே காலையில் வேலைக்குப் போகும் ஆண்களின் இலட்சியமாகத் தேங்கிக் கிடந்தது.

தனசேகர் தாத்தாவை விரட்டியடிக்க மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்கள்

1. மேல்மாடியிலிருந்து அவர் அமர்ந்திருக்கும் இடம் பார்த்து ஈரத்துணிகளைக் காயப் போடுவது.
தாத்தாவின் தீர்வு: அவ்வப்போது குடையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பார்.

2. கைத்தொலைப்பேசியில் காவல்துறை அதிகாரியிடம் மிரட்டலாகப் பேசுவது போன்ற பாவனையைச் செய்வது.
தாத்தாவின் தீர்வு: எம்.ஜி.ஆர் படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்களை வீரத்துடன் பாடிக் கொண்டிருப்பார்.

3. கையில் பெரிய கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு படி இறங்குவது.
தாத்தாவின் தீர்வு: தன் கைத்தடியை எடுத்துத் தரையில் ஓங்கி அடித்து வன்மையான சத்தத்தை எழுப்புவது.

4. அடுக்குமாடியில் மரணத்தை வரவழைக்கும் நோய்கள் பரவுவதாகப் பீதியைக் கிளப்புவது.
தாத்தாவின் தீர்வு: மூக்கு முடியை அணிந்துகொண்டு அமர்ந்திருப்பார்.

தனசேகர் தாத்தாவை என்ன செய்தும் அவரை அங்கிருந்து விரட்டுவதை வெற்றிப்பெறச் செய்ய இயலவில்லை. அவரின் இருப்பு மிகவும் வலுவானதாக அங்கேயே நிலைத்திருந்தது. வெளுத்துப் போன கால்சட்டையுடன் சட்டை போடாமல், மார்பில் படர்ந்திருக்கும் வெள்ளை முடியுடன், பல் இல்லாத வாயிலிருந்து புன்னகையை வரவழைத்துக் கொண்டு தனசேகர் தாத்தா அங்குதான் இருக்கிறார்.

எந்தத் திகதி எனச் சரியாகச் சொல்ல முடியாத ஒரு மதியத்தில் தனசேகர் தாத்தா 3 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். காலையில் வேலைக்குப் போகும்போது முனியாண்டி தாத்தா இல்லாததைப் பார்த்துவிட்டு நிம்மதியுடன் படி இறங்கினாலும் மனதில் ஏதோ நெருடலாக இருந்திருக்கிறது. கீழே வந்ததும் தனசேகர் தாத்தா இரத்த வெள்ளத்தில் கைகள் முறிந்து விழுந்து கிடந்ததைப் பார்த்ததும் செய்தி அடுக்குமாடி முழுக்கப் பரவியது.

தனசேகர் தாத்தா அமர்ந்திருந்த நாற்காலியை அடித்து நொருக்கித் தூக்கிவீசிவிட்டார்கள். இப்பொழுது எல்லோரும் வழக்கம்போலப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு என ஓர் இலட்சியம் இல்லை. கனவுகளும் இல்லை. எந்தத் தொல்லையுமற்ற காலை. ஒரு சிலருக்கு மட்டும் மூன்றாவது மாடிக்கு இறங்கியதும் சட்டெனப் பார்க்கையில் தனசேகர் தாத்தாவின் நாற்காலி அங்கு இருப்பதைப் போலத் தோன்றியிருக்கிறது.

“முனியாண்டி சொன்னான். . தனசேகர் தாத்தா கூப்டற மாதிரி கேட்டுச்சாம்”

நன்றி: தங்கமீன் பதிப்பகம் இணைய இதழ்
கே.பாலமுருகன்
மலேசியா

No comments: