Friday, January 14, 2011

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்

பெருங்கதையாடல் நிகழ்த்த வேண்டிய அத்துனை சந்தர்ப்பங்களையும் சாமர்த்தியங்களையும் தருணங்களையும் குறைந்த நிமிடங்களிலேயே குறும்படம் மூலம் நிகழ்த்த வேண்டிய சவால் குறும்பட இயக்குனர்களுக்கு உண்டு. “அலட்டலின்றி, மிகை இன்றி, போலித்தனமின்றி, ஒப்பனையின்றி இந்த வாழ்வையும் மனிதர்களையும் பார்க்கிறேன்” என உலக திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா தன் வாழ்நாள் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல குறும்படம் அத்தகையதொரு கண்ணோட்டத்தையும் உள்ளடக்கத்தையும் பின்பற்றுவதன் மூலமே உச்ச கலை படைப்பாக வெளிப்பட முடியும்.

சினிமா மூலம் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் போலித்தனங்களையும் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கைக்கு மிகத் தொலைவாகப் போய்விட்ட நிதர்சனத்தைத் தன் அடர்த்தியின் மூலம் மீட்டுக் கொண்டு வருவதற்காகவே குறும்படம் என்கிற வடிவம் உருவானது என திரையுலகமும் குறும்பட வட்டமும் ஒப்புக்கொள்கின்றன. இந்த அளவுக்கோலை முன்னிறுத்தியே இன்றைய குறும்படங்களை மதிப்பிடும் ஆற்றலை நாம் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தொடர்ச்சியாக 4 குறும்படங்களை இயக்கிய‌தன் மூலம், நான் அடைந்த தோல்வியையும் பலவீனங்களையும் 3 வருடத்திற்கும் மேலான குறும்படம் சார்ந்த எனது தேடல்களின் மூலம் வாசிப்பின் மூலம் சரிப்படுத்தியுள்ளேன். இது போன்ற தேடலும் உலகின் முக்கியமான குறும்படங்களைப் பார்ப்பதன் மூலம், பார்த்த அந்தக் குறும்படங்கள் குறித்து உரையாடுவதன் மூலமும் தரமான ஒரு படைப்பை நம்மால் அடையாளம்காண இயலும்.

கடந்த மூன்று வருடமாக ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் மலேசியாவின் இளம் படைப்பாளர்களை / திரைப்படக் கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் குறும்படப் போட்டியை நடத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் தேர்வான குறும்படங்கள் கதை சார்ந்தும் தொழிட்நுட்பம் சார்ந்தும் பலவகையான போதாமைகளைத் தழுவியிருந்தது. மேலும் குறும்படத்திற்குரிய கலை அம்சங்களும் அவற்றில் காணப்படவில்லை. த‌மிழ‌க‌த்தில் ஒரு குறும்படம் போட்டி நடத்துவதற்கு முன்பாக அங்குள்ள ஆர்வம் நிறைந்த இளைஞர்களுக்குக் குறும்பட பட்டறை நடத்தி, உலகில் சிறந்த குறும்படங்களைத் திரையிட்டு, அவர்களுக்குப் போதுமான அனுபவமும் தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகையால் அங்கிருந்து சிறந்த படைப்புகளும் விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இங்கு அப்படி ஒரு சூழல் இல்லாததையொட்டி போட்டியை மட்டும் நடத்துவதில் தொடர்ச்சியாக இளைஞர்களின் படைப்பு தரத்தை மேம்படுத்த இயலுமா என்கிற கேள்வி ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்குத் தோன்றியிருக்கக்கூடுமா?


இருந்தபோதும் தொடர்ந்து இந்தப் போட்டி நடத்தப்படுவதால், குறும்பட வடிவத்தில் ஆர்வம் ஏற்பட்டவர்கள், அதனைச் சார்ந்து தன் அனுபவங்களையும் அறிவையும் சுயமாக வளர்த்துக் கொண்டார்கள் என்பதை இவ்வாண்டு தேர்வான குறும்படங்களில் காண முடிகிறது. ஓரளவிற்குத் தன்னையும் தன் குழுவையும் கலை நுண்ணறிவு சார்ந்து முன்னகர்த்தி, அடையாளப்படுத்தக்கூடிய சில முயற்சிகளை மலேசிய கலைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக இவ்வாண்டின்
குறும்படங்களில் பெரும்பாலும் காட்சிகளை வித்தியாசமாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற முயற்சி மேலோங்கி, குறும்படத்திற்கான எளிமையிலும் கதைச்சொல்லல் முறையிலும் வலுக்குறைந்து போயிருக்கின்றன.

இவ்வாண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்கள் கையாண்டிருக்கும் உத்திகளையும் கதையின் கருவையும், அந்தக் கருவை கதையின் மையத்தை எப்படி அவர்கள் வளர்த்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசலாம்.

(குறிப்பு: இது என்னுடைய தர வரிசை அல்ல.)


1. School சப்பாத்து

செல்வன் இயக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம் சில காட்சிகளில் கேமரா இயக்கம் சார்ந்து குறும்படத்திற்கான உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் முழுவதுமாக இந்தக் குறும்படம் பல
இடங்களில் செயற்கையின் பிரதிபலிப்பாக தனது வலுவை கதைப்பாத்திரங்களின் பலவீனமான வெளிப்பாடுகளால் இழக்க நேரிடுங்கின்றன.

குறிப்பாக சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் குறும்படங்கள் கூடுதலான உழைப்பைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரும்பாலும் சிறுவர்களுக்கு கேமரா குறித்த பிரஞ்சை அதிகமாக இருக்கும். தனக்கு முன் கேமரா இருப்பதை நன்கு உணர்ந்தவாறுதான் தன் இயல்பை மறைத்துக் கொண்டு அவர்கள் வேறொருவராக மாறியிருப்பார்கள். அந்தச் சமயங்களில் அவர்களால் யதார்த்தமான படைப்பை வழங்க முடியாமல் போய்விடும். ஆகையால் தொடர் பயிற்சியின் மூலமே அவர்களை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியுமே தவிர தனக்கு முன் கேமரா இருப்பதை அவர்களால் மறுக்கவே முடியாது.

இந்தக் குறும்படத்தில் குணன் என்கிற சிறுவன் தன் பள்ளிக் காலணி குறித்து அவமானமும் கவலையும் அடைகிறான். பள்ளியில் ஆசிரியர் அவனுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை அவனை வருத்தம் அடைய செய்கிறது. ஆனால் இவையாவற்றையும் அவன் எந்த இடத்திலும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஒரு கதைப்பாத்திரம் அடையும் உணர்வை மிகக் கூர்மையாக இரண்டு விசயத்தில் வெளிப்படுத்தலாம். முகப்பாவனையும் உரையாடலுமே இதற்குத் தகுந்த இடம். ஆனால் இக்குறும்படத்தில் சிறுவன் தனது அவமானத்தையும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறியிருக்கிறான். சிறுவனின் கதைப்பாத்திரத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

மேலும் பின்னணி இசை கதையின் காட்சிகளோடு ஒவ்வாமல் தனித்து ஒலிக்கிறது. தபேலா ஓசையைப் பயன்படுத்தியிருக்கும் விதம் சிறுவனின் சூழலுக்கு அப்பாற்பட்டு ஏதோ நகைச்சுவை காட்சிக்குத் தகுந்தாற்போல ஒலிக்கிறது. இக்குறும்படத்தின் கூடுதலாக க‌வ‌ரும் அம்சம் சில காட்சிகளை அவர்கள் பதிவு செய்திருக்கும் விதம். எடுத்துக்காட்டாக குறும்படத்தின் தொடக்கக்காட்சியில் சிறுவன் தன்னுடைய கிழிந்த காலணியை அணிந்துகொண்டு நடந்துகொண்டிருக்கிறான். அவனுடைய காலணி வாய்ப்பிளந்து பாதையில் கிடக்கும் கற்களை விழுங்கிக் கொள்கிறது. அதனை உதறியபடியே ஒவ்வாமையைக் கால்களின் வழி காட்டி நடந்து செல்கிறான் சிறுவன். இந்தக் காட்சியை சிறுவனின் முகத்தைக் காட்டாமல் அவனுடைய முட்டிக்குக் கீழாகவே பதிவு செய்திருப்பது காட்சியின் யதார்த்தத்தைக் காப்பாற்றியிருக்கிறது. இப்படிச் சில காட்சிகள் அன்றாட வாழ்வில் நடப்பது போன்ற எளிமையைத் தற்காத்து வைத்துக் கொண்டு பதிவாக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் வசனமும் உரையாடல்களும் கதையோடு ஒட்டாமல் செயற்கைத்தனத்தைப் பூசிக்கொண்டு நகர்வதால் பார்வையாளர்களின் கவனம் மையக்கதைக்குள் நுழையாமல் சிரமப்படவும் வாய்ப்புண்டு. வசனத்தின் மூலம் கதையின் நேர்த்தியையும் உணர்வையும் உக்கிரத்தையும் அடைய செய்வதென்பது ஒரு தனித்த‌க் கலை. அதனைக் கொஞ்சம் திறமையுடன் கையாண்டிருக்க வேண்டும். கூடுதலான வகுப்பறை காட்சிகளைக் குறைத்திருக்கலாம். கிழிந்த காலணி மூலம் அவன் அடையும் மனநெருக்கடியின் மீது கவனத்தைக் குவித்திருக்கலாம். இறுதி காட்சியில் அவனது வகுப்பாசிரியர் அவனுக்குப் புதிய காலணியைப் பரிசாகக் கொடுக்கும்போது கூட அந்தச் சிறுவனிடமிருந்து வெளிப்படும் உணர்வு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. மையப்பாத்திரத்தைச் சுற்றி பின்னப்பட்ட அத்தனை பலவீனமான காட்சிகளும் அவனுடைய பங்கைச் சிதைத்துவிடுகிறது.

இந்த மாதிரி காலணியைச் சார்ந்த ஒரு திரைப்படம் ஈரானில் படமாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven) எனும் தலைப்பில் சிறுவர்களின் உலகத்தையும் குடும்ப வறுமையைப் புரிந்துகொண்டு அவர்கள் இயங்கும் விதத்தையும் மிகவும் கலைநயத்துடன் காட்டியிருப்பார்கள். இயக்குனர் கட்டாயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். காலணி என்பதன் குறியீட்டைக், கதைக்குள் அதன் உக்கிரமும் பயன்பாடும் பிசகாமல் எப்படிக் கதைப்பாத்திரங்களோடு நகர்த்துவது என்பதைப் பற்றி விரிவாக அடையாளம் காணலாம்.

2. நிரந்திரமில்லை

பிரான்சிஸ் டாரேன் சுரேஷ் எனும் இயக்குனரால் (இயக்குனர்களால்) இயக்கப்பட்ட இந்தக் குறும்படம் மிக நேர்த்தியான குறும்படத்திற்கான கதைச்சொல்லல் முறையைக் கையாண்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே கதை தொடங்கி வீட்டிற்குள்ளேயே முடியும் விதம் குறும்படத்தை மேலும் அடர்த்தியாக்கி நெருக்கமாகத் தன் கதையைக் காட்ட முயல்வதை உணரலாம்.

இந்தக் குறும்படத்தில் வரும் கிழவர் தன் மனைவியை இழந்து தனிமையில் தன் நாளை நகர்த்துவதாகக் காட்டியிருப்பார்கள். தன் மனைவியை இழப்பதன் மூலம் ஒரு சராசரி மனிதன் எப்படியெல்லாம் அவதிக்குள்ளாகுகிறான் என்பதையும் எப்படியெல்லாம் தனிமையை எதிர்க்கொள்ளமுடியாத தடுமாற்றத்தை அடைகிறான் என்பதையும் முழு நீள குறும்படத்தில் 12 நிமிடம்வரை பல சந்தர்ப்பங்களில் காட்டப்பட்டிருக்கின்றன. ஓர் ஆண் தன் அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் முதலில் மனைவிடமிருந்தே தொடங்குகிறான். இன்றைய குடும்ப உளவியலின் வழி ஆண்களிடமுள்ள அதிகார உணர்வு முதலில் மனைவியிடமே உக்கிரமாகப் பிரயோகிக்கப்பட்டு பிறகு சமூகத்திற்குள் நுழைவதாகச் சொல்லப்படுகிறது. குடும்ப அதிகாரம் என்றால் வதைப்பது கொடுமைகுட்படுத்துவது என்று மட்டுமல்ல. அது வேறொரு பகுதி. மனைவிக்கும் சேர்த்து முடிவெடுப்பது, அவளுக்குத் தேவையானவற்றை முன்னின்று நிறைவேற்றுவது, குடும்ப பிரச்சனைகளுக்கு சிக்கல்களுக்குத் தன் ஆளுமையின் வழியே தீர்வுக்காண முடியும் என நம்புவது முதல் எல்லாமே அதிகாரத்தின் பல வடிவங்கள்தான்.

மனைவி முழுக்கவும் தன்னைச் சார்ந்தவள் என்கிற தீர்க்கமான புரிதலை ஓர் ஆண் முதலில் இந்த ஆணாதிக்க சமூகத்தின் சடங்குளின் வழியாகவே பெறுகிறான். அது தார்மீகமான அதிகாரமாகவும் அல்லது கொடூரமான அதிகாரமாகவும் மாற்றம் கொள்வது அவரவர் சூழலையும் மன அமைப்பையும் பொருத்தவை. ஆனால் தன் மனைவியை இழக்கும் ஒருவன் பெரும் தடுமாற்றம் கொள்வதற்குக் காரணம் தன் அதிகாரம் எங்கோ பலவீனம் அடைந்துவிட்டதாக அவன் கருதுகிறான். அதிகாரத்தின் வழி அவன் நிறைவேற்றி வந்த கடமைகள் ஒடுக்கப்படுவதன் மூலம் தன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை இழக்கிறான். அவனது இருப்பு பெரும் கேள்விக்குள்ளாகுகிறது. தனது எல்லா வகையான அதிகாரத்திற்கும் ஆணாதிக்க மனதிற்கும் உடன்பாடாக இருந்த ஓர் அடையாளம் தொலைவதன் மூலம் ஆண் வழி சமூகத்தின் விளைவான ஓர் ஆண் வாழ்க்கை கசந்துவிட்டதாக எண்ணுகிறான். மனைவியை இழந்துவிட்ட கணவனின் வருத்தத்திற்கும் தடுமாற்றத்திற்கும் பின்புலத்தில் இத்தகையை உளவியல்கள் இருப்பதைக் கண்டறிவதற்கு இந்த ‘நிரந்திரமில்லை’ குறும்படம் உதவியாக இருக்கிறது.

அன்பிற்கும் அதிகாரத்திற்கும் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி, அன்பை முன்னிறுத்தி உறவுகளை நியாயப்படுத்தும் தன்மையிலிருந்து விடுப்பட்டு, அன்பு செலுத்துவதிலும் அதிகாரம் செயல்படுவதை, குடும்ப அமைப்பின் உளவியல் செயல்பாடுகள் சார்ந்து வேறொரு கண்ணோட்டத்துடன் இதனைப் புரிந்துகொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. உலகையே தன் அதிகாரத்தின் கீழ் ஆட்டிப்படைத்த ஹிட்லருக்கு மிகவும் அந்தரங்கமான காதலி இருந்தாள் என்பதையும் அவள் மீது அளவில்லா காதலையும் அன்பையும் ஹிட்லர் கொண்டிருந்தான் என்பதையும் வரலாறு சொல்வதை நாம் கவனித்தாக வேண்டும்.

இந்தக் குறும்படத்தில் தனக்குத் துணையாக இருந்த மனைவியை இழப்பதன் மூலம் அன்றாடங்களின் மீது அவருக்குத் திடீர் திகைப்பு ஏற்படுகிறது. எல்லாவற்றையும் விநோதமான மனநிலையுடன் பார்க்கிறார். அவர் உலகம் தனது காட்சிகளையும் வர்ணங்களையும் இழந்துவிட்டது போல இருண்டும் போய்விடுகிறது. அவர் தொடர்ந்து எதையோ தேடிக்கொண்டே இருக்கிறார். தனக்கு முன் விரியும் காட்சிகளின் மீது எந்த உணர்வுமற்று மௌனத்தில் ஆழ்ந்து போவதென்பது இழப்பை முன்னிறுத்தி ஒருவன் அடையும் மனநோய்க்கான அறிகுறிகள் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ஓர் உக்கிரத்தை நோக்கியே குறும்படத்தின் மையப்பாத்திரம் நகர்த்தப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே தன்னை எப்படித் தொலைப்பது எனத் தொடர்ந்து சலனமடைந்தே காணப்படுகிறார்.

ஒரு காட்சியில் வீட்டிலிருந்து வெளியேறி பூங்கா ஒன்றிற்குச் செல்கிறார். அங்கு அமர்ந்துகொண்டு தூரத்தைப் பார்த்து சிரிக்கிறார். அது தன் துயரத்தைக் கடப்பதற்கான செயற்கையான முயற்சி. மிகவும் வலி மிக்கவையும்கூட என உணர முடிகிறது. தப்பித்தலுக்கு முன் மனிதன் எப்படியெல்லாம் செயல்படுகிறான் என்பதன் ஒரு வடிவம் அந்தக் காட்சியில் சொல்லப்படுகிறது. தன் மனைவியின் இழப்பையும் தன்னையே ஒட்டுமொத்தமாக இயக்கிக் கொண்டிருக்கும் தன் அதிகாரத்தின் இழப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் தேவைகளைத் தானே செய்துகொள்ள முற்படுகிறார். தேநீரில் சுவையில்லை, ஒரு முட்டையைக்கூட பொரிக்க இயலாமல் தடுமாறுகிறார். தன் இருப்பு மேலும் இடறுவதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகுகிறார்.

இன்னொரு கண்ணோட்டத்தில் முதுமை காலத்தில் தனக்குத் துணையில்லாமல் போவதென்பது மிகவும் கொடூரமான வாழ்க்கை என்பதை உணர்த்துவதையும் குறும்படம் செய்கிறது. குறும்படத்திற்கான கச்சிதமான வசனம், ஒரே மையப்பாத்திரம், மற்றும் தொடக்கத்திலும் இறுதி காட்சிகளிலும் வந்துபோகும் அவருடைய மகளைத் தவிர ஒரு பூனையும் இருக்கிறது. மேலும் மையப்பாத்திரத்தின் நடிப்பாற்றலும் முகப்பாவனைகளும் அபாரமான வெளிப்பாடு. மலேசியாவில் இப்படித் துல்லியமாக தன் உணர்வுகளை வசனமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலுடையவர் இருக்கிறார் என அடையாளப்படுத்த முடிகிறது. இறுதி காட்சியில் அவர் அழுவதன் மூலம் தன் துயரத்தின் தனிமையின் இறுக்கத்தையெல்லாம் உடைத்து எறிகிறார். நிரந்திரமில்லை குறும்படத்தின் சாத்தியங்களைக் கொண்டு அதற்கான எல்லையை அடைந்திருக்கிறது.

3. சூரியன்

அஷிசான் ரஷிம் அவர்கள் இயக்கிய இக்குறும்படம் அப்பா என்கிற பிம்பத்தைச் சுற்றி அமைக்கப்படுகிறது. அப்பா தனக்கு கற்றுக்கொடுத்தவை வாழ்வில் சில தருணங்களில் அர்த்தமுள்ளதாக மாறுவதை முன்வைத்து அப்பாவைத் தன் வாழ்வின் முன்னுதரணமாகக் கொண்டு நகரும் கதை. கதை தொட்டிருக்கும் கரு வித்தியாசமானவை அல்ல.

ஏற்கனவே நான் சொன்னது போல இக்குறும்படத்திலும் சிறுவன் மையப்பாத்திரமாக இருப்பதால், அவனுடைய பாத்திரப்படைப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக அப்பாவாக நடித்திருக்கும் நடிகரின் வசனங்கள் மிகவும் சாதரணமாகக் கதைக்கு வலு சேர்க்காமல் நழுவுகிறது. குறும்படத்தில் வசனமும் உரையாடல் பகுதியும் அதிகம் நீளமாக போய்விடுவதையும் மிகையான தொனியில் ஒலிப்பதையும் கட்டாயம் தவிர்த்தாக வேண்டும். அதுவும் குறும்படத்தின் கச்சிதத்தைக் காப்பாற்றும். உரையாடல்கள் சில இடங்களில் நெகிழ்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற அவசரத்தில் மிகவும் செயற்கையாக ஒலிக்கிறது.

இந்தக் குறும்படம் தன் கதையைப் படைக்கும் விதத்தில் ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிறுவன் தன் கதையைச் சொல்ல, கதை அடுத்து அடுத்து நகர்கிறது. சிறுவன் கதைச்சொல்லி என்பதால், அவனுடைய வார்த்தைகளும் வாக்கியங்களும் சிதறுகின்றன. இதை யதார்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம். குறும்படத்தில் இந்த உத்தி அதற்குக் கூடுதலான கலை அம்சத்தைச் சேர்க்கக்கூடியவையாகும். காட்சி அமைப்பில் கவனம் செலுத்தப்பட்டு ஓரளவிற்கு வித்தியாசமான முயற்சிகளை எடுத்துள்ளார்கள். குறிப்பாக அப்பாவும் மகனும் மோட்டாரில் பயணிக்கும்போது அவர்களின் முகம் மிக நெருக்கத்தில் காட்டப்படுகிறது. அந்தக் காட்சி அமைப்பில் அவர்கள் இருவரின் முகப்பாவனையும் எந்தவித சலனமும் இல்லாமல் வெளிப்படுகிறது. நெருக்கமான காட்சிகள் சில இடங்களில் மட்டுமே காட்டப்படுவதன் மூலம் கதைப்பாத்திரங்களின் இருப்பை பார்வையாளனுக்கும் குறும்படத்திற்குமான இடைவெளியைத் தகர்க்கப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் அதிகமாகக் கதைப்பாத்திரங்களின் முகத்தை நெருக்கத்தில் காட்டினாலும், அந்தப் பாத்திரத்தின் தனித்துவத்தை இழக்கவும் செய்து சலிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடும். மிக கவனமாகவும் சொற்பமாகவும் கையாளவேண்டிய கேமரா உத்தி அது.

ஓர் உயிரைத் தொலைத்து குற்றவுணர்வு உருவாகிய இடத்தை இன்னொரு உயிரைக் காப்பாற்றுவதன் மூலம் தவிர்க்க முடிவதை உளவியல் சார்ந்து வெளிப்படுத்துகிறது குறும்படம். இருந்தபோதும் அம்மாவின் உயிர் போவதற்குக் காரணமான ஒரு சிறுவனின் மனநிலை உண்மையில் வேறுவிதமான விநோதங்களையும் உக்கிரத்தையும் அடைந்திருக்கும், ஆனால் இக்குறும்படத்தில் சிறுவனின் அகநிலையும் மனதின் நெருக்கடியும் குற்றவுணர்வின் பிரதிபலிப்பும் மேலோட்டமாகவே சொல்லப்படுகின்றன. அவனுடைய குற்றவுணர்வை உடைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு அப்பா பேசும் வசனமும் கொஞ்சம்கூட அடர்த்தியின்றி உளவியல் கூறுகளின்றி தட்டையாக ஒலிக்கிறது. இது கதை எடுத்துக்கொண்டிருக்கும் உளவியல் மையத்தை பலவீனப்படுத்துகிறது.

மேலும் கதைக்குப் பின்புலத்தில் ‘முதலுதவி’ உயிரைக் காப்பாற்றும் ஆகையால் முதலுதவி செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிற பிரச்சாரமும் கூடவே குரலெழுப்புவதையும் தவிர்க்க முடியவில்லை. மாணவர்களுக்குப் பாடத்திட்டம் உருவாக்கும்போது, “முதலுதவி கற்போம் வாரீர்” எனும் தலைப்பை வைப்பது போல இக்குறும்படத்தின் இறுதி காட்சி நகைப்பாகச் சொல்லி செல்கிறது. இறுதி காட்சியில் சக நண்பன் ஒருவன் காற்பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிடுகிறான். அவனுடைய அப்பா அவனுக்குக் கற்றுக்கொடுத்த முதலுதவியைப் பிரயோகித்து அந்தப் பையனைக் காப்பாற்றுகிறான் சிறுவன். உடனே சந்தர்ப்பம் பார்த்து அங்கு வந்து சேரும் அப்பா அவனைப் பாராட்டுகிறார். நீ ஓர் உயிரைக் காப்பாற்றிவிட்டாய் எனப் புகழ்கிறார். அவனுக்குள் இருந்த குற்ற உணர்ச்சி மெல்ல விலகுகிறது. இந்த இடத்தில் கதையோடு ஒட்டாத விசயம் என்னவென்றால் மயங்கி விழுந்த பையனின் அப்பா யாரோ எங்கோ ஒரு பையன் பாதிக்கப்பட்டதுபோல கொஞ்சமும் உணர்வில்லாமல் சாதாரணமாக தோன்றுவது. எங்கேயோ சென்று கொண்டிருந்தவரைப் பிடித்து இழுத்து நகைச்சுவை செய்தது போல இருந்தது.

கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்தியிருந்தால் இந்தக் குறும்படம் மேலும் வலுவான உத்தியை வளர்த்தெடுத்து நல்ல உளவியல் படைப்பாக வந்திருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் இதில் கையாளப்பட்டிருக்கும் கருவையொட்டி பிரச்சார நெடியை நீக்கிவிட்டுப் பார்க்கும்போது குற்றவுணர்வுக்கு ஆளாகும் சிறுவர்களின் உலகை இலேசாகத் தொட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

4. 3D

எஸ். பாலசந்திரன் இயக்கிய இந்தக் குறும்படம் பலவகைகளில் 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் மையப்படுத்தப்பட்ட மனச்சிதவை முதன்மைப்படுத்தி பேசியிருக்கிறது. மனநோய் என்பது எங்கிருந்து உருவாகிறது என்பதன் பின்னணியை முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பின் அந்தக் கருவைச் சினிமாவில் கையாள்வது மிகவும் முக்கியமாகும். அப்படியொரு முயற்சியும் தேடலும் தமிழ் சினிமாவில் குறைந்து காணப்படுவதால்தான் மனச்சிதவையும் பைத்தியநிலையையும் ஒன்றாகக் கற்பித்து பெரிய குழப்பத்தையும் வேடிக்கையையும் உருவாக்குகிறார்கள்.

இந்தக் குறும்படத்தைப் பார்க்கும்போது முழுமையாக எனக்கு 7G Rainbow Colony கதையில் வரும் மனசிதைவு ஏற்பட்ட கதைப்பாத்திரம்தான் சட்டென ஞாபகத்திற்கு வருகிறது. அந்தப் படத்தில் அவன் மனம் சிதைந்து போவதற்கான காரணம் காதலியின் சாலை விபத்து என்றால் இக்குறும்படத்தில் மனைவியின் விபத்து. மேலும் அவன் உணவகத்தில் அமர்ந்துகொண்டு தன் காதலி தனக்கு முன் அமர்ந்திருப்பதாகச் சுயக்கற்பனை செய்து கொள்வது போல, குறும்படத்திலும் அப்படியொரு காட்சி வருகிறது. 3D குறும்படத்தின் இயக்குனர் அந்த 7G Rainbow Colony படத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு, பாதிக்கவும் பட்டுள்ளார் என நினைக்கிறேன். அதனால்தான் 7G Rainbow Colony படத்தின் மையத்தைத் திரட்டி சுருக்கமாக குறும்படமாகப் படைத்திருக்கிறார். மனச்சிதவைக் கருவாக எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியதுதான். ஆனால் அதை எப்படிச் சினிமா சார்பில்லாமல் வளர்த்தெடுப்பது என்பதில் குறைவான கவனத்தைக் காட்டி பல இடங்களில் தடுமாறியிருக்கிறார்.

இதுபோல மனச்சிதைவு கதைப்பாத்திரத்தைப் பல படங்களில் பிரயோகித்துவிட்டார்கள். இதற்கு அப்பாற்பட்டு எப்படி அத்தகையதொரு கதைமாந்தரை குறும்படத்தில் முன்வைக்கப்போகிறோம் என்கிற ஆக்கப்பூர்வமான சிந்தனை இயக்குனருக்கு உருவாகியிருக்க வேண்டும். படத்தின் இறுதி காட்சியில் திரையில் தோன்றும் வசனம் குறும்படத்திற்கான அத்துனைச் சாத்தியங்களை உடைத்து ஒரு விளம்பரமாக மறுவடிவம் பெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. “Don’t Drink and drive” எனும் செய்தியைச் சொல்வதற்காகத்தான் இவ்வளவு தூரம் மெனக்கெட்டுள்ளார்களா என்பதைப் அறியும்போது குறும்படம் என்கிற கலை நேர்த்தியைச் சிதைத்திருப்பது தெரிய வருகிறது. ஆக சினிமாவிற்கே உரிய அதிர்ச்சி சம்பவங்களை உள்ளடக்கி மது அருந்தி தன் மனைவியைக் கொன்ற குற்ற உணர்வின் விளைவாக மனம் சிதையும் ஒருவனின் கதையைக் கொண்டு சமூகத்திற்கு நேரடியாகப் பிரச்சாரம் செய்யும் பாணி முழுக்கக் கையாளப்பட்டுள்ளது. இது குறும்படத்திற்கான அம்சம் அல்ல என்பதை யார் உணர்த்திருக்க வேண்டும்? இந்தப் போட்டியை நடத்திய தொலைக்காட்சி நிறுவனம்தானே?

குறும்படத்திலுள்ள நல்ல விசயங்களைக் குறிப்பிடுவது மிகவும் அவசியமானது. சில காட்சிகள் அவனுடைய சிதைந்த அகத்தின் வெளிப்பாடுகளைப் படிமமாகக் காட்டுவதில் நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளன. மேலும் இதில் நடித்திருக்கும் விஸ்வா கதைப்பாத்திரத்தின் நடிப்பு ஆற்றல்மிக்கதாக இருக்கிறது. எப்பொழுது ஒரு மனம் சிதைகிறது என இப்படத்துடன் ஒப்பிட்டுச் சொல்ல முடியும். அந்த வகையில் நம்பகத்தன்மையைக் கடைப்பிடித்துள்ளது.

நம் நினைவுகளின் அடுக்கில் நமக்கு உச்சமான அதிர்ச்சையையும் கோடுரமான சம்பவத்தைப் பார்த்த பாதிப்பும் கொண்ட நினைவுகள் தனியாகத் துண்டிக்கப்பட்டு சுயேச்சையாக இயங்குவதன் மூலம் நனவு மனதில் ஊடுருவி நோய்க்குறிகளை வெளிப்படுத்தும். இந்த நோய்க்குறி அதாவது மனச்சிதைவு என்பது சாலையில் சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடும் பைத்தியநிலை அல்ல. அதிர்ச்சிகரமான அந்தச் சமபவம் நனவு மனதிலிருந்து மறக்கப்பட்டும்கூட திடீரென ஒருநாள் அந்த மறக்கப்பட்ட பகுதி மையம் கொண்டு நனவு மனதிற்குள் நுழைந்து நினைவுவெளியைச் சிதைக்கும் என உளவியல் கூறுகிறது. அது ஒரு மனிதனின் ஆளுமையை இரண்டாகப் பிளந்து, ஒன்று அன்றாட கடமைக்கு உட்பட்ட ஒருவனையும், இன்னொன்று சுயேச்சையாக இயங்கும் சிதைந்த பகுதியிலிருந்து வெளிப்படும் நோய்க்குறிகளுக்கு உட்பட்ட ஒருவனையும் ஒரே சமயத்தில் சாமர்த்தியமாக இயங்க வைக்கும். இதுதான் மனச்சிதைவு. இப்படி மனச்சிதைவிற்கு ஆழமான விளக்கங்களும் உதாரணங்களும் அடையாளங்களும் இருக்க, இன்னமும் எதிரில் ஒருவர் இருப்பதைப் போல கற்பனை செய்து உரையாடும் ஒரேவகை நோய்குறியைக் கையாண்டு இப்படிப்பட்ட படங்களை எடுப்பது சலிப்பை ஏற்படுத்தாதா?

5. உயிர் விடும் மூச்சு

முனிஷ் ராம் அவர்களின் இயக்கத்தில் வழக்கமான பிரச்சார வாசகத்தை முன்வைத்து இயக்கப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி என இக்குறும்படத்தைச் சொல்லலாம். குறும்படத்திற்கென கலை உச்சமும் எல்லையும் கச்சிதமும் இருப்பதென்பதைத் தொடர்ந்து நான் நினைவுறுத்திக் கொண்டே வருகிறேன். குறும்படம் என்பது சினிமாவின் சிறிய வடிவமோ அல்லது விளம்பரத்தைச் சுருக்கிக் கூறும் வடிவமோ அல்லது சமூகத்தின் மையப்பிரச்சனையைக் கதையாக்கி திரட்டிக் கூறப்படும் கருத்துருவமோ அல்ல. அதிகம் பேசாமல் அதிகம் ஒப்பனை இல்லாமல் அதிகம் கருத்தாக்கங்கள் இல்லாத மௌனத்தின் அடர்த்தியுடன் உச்சத்தைத் தொட வைக்கும் ஒரு கவித்துவமான வடிவம்.

உயிர் விடும் மூச்சு குறும்படம் எனக்குக் கங்காதுரை எழுதி அநங்கம் இலக்கிய இதழில் பிரசுரமான ஒரு சிறுகதையை அப்படியே ஞாபகப்படுத்துகின்றது. அந்தச் சிறுகதையின் மறுஆக்கம் போலவே ஒத்திருக்கிறது. குறும்படத்தின் ஆரம்பக் காட்சி ஓர் உயிர் கருவில் உருவாகும் அறிவியல் சுழற்சியை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இது தொழில்நுட்பம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. மேலும் இந்தக் குறும்படம் முழுக்க தொழில்நுட்பத்தின் இரண்டு பக்கங்களையே காட்டி நிற்பதால், சமக்காலத்தன்மையைத் தொட்டு அலசுகிறது.

அம்மாவின் வயிற்றில் கருவாக வளர்ந்துகொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பின்னணியில் பேச கதை நகர்வது வித்தியாசமான கலை முயற்சி. அதெப்படி குழந்தை கதை சொல்ல முடியுமென நமது தர்க்கப்புத்தி விவாதிக்க முயல்வது இயல்புதான். ஆனால் இதைத்தான் படைப்பு சுதந்திரம் என அடையாளப்படுத்த முடியும். இன்று சமூகத்தில் நிகழும் கரு கலைப்பிற்கு எதிராகக் கலகக் குரலைப் பதிப்பிக்க இயக்குனர் கருவில் வளரும் குழந்தையையே பேசும்படி செய்துள்ளார். இக்குறும்படத்தின் நம்பகத்தன்மை விவாதத்திற்குரியது என்றாலும் சமூகத்தின் பிரச்சனையைப் பேசுவதற்கு சமூகத்தின் கொடூரமான செயலைக் கண்டிப்பதற்கு ஒரு பிரச்சார பிரதியாக இக்குறும்படத்தை இயக்குனர் பயன்படுத்தியிருப்பதால், இனியும் நம்பகத்தன்மைகளைப் பற்றி பேசுவதற்கு அவசியம் இருக்க வாய்ப்பில்லை.

கதையின் கருவை முன்னெடுக்க அவர்கள் பயன்படுத்தியிருக்கும் உத்தியும் கதை நகர்வும் குறும்படத்திற்கான கச்சிதத்தைச் சிதைக்கவில்லை என்றே சொல்லலாம். மையப்பாத்திரம் என்பது கருவில் வளரும் குழந்தை என்பதால், இக்குறும்படத்தில் வரும் பெரியவர்களின் முகங்கள் நெருக்கமாகவோ முதன்மையானதாகவோ காட்டப்படவில்லை. இது கதையின் மையத்தைக் காப்பாற்றுகிறது. ஆனால் குழந்தையின் வசனம் சிவாஜி கணேசன் பேசுவதைவிட அதிகமாகவே நீள்கிறது. பிறகு குழந்தையின் அப்பாவின் உடல்மொழி பாவனைகளுக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப எதிரொளிக்கிறதா என்பதும் கேள்விக்குள்ளாகுகிறது. கருவிலுள்ளது பெண் குழந்தை எனத் தெரிந்ததும் அவர் தன் கைவிரல்களை மேசையில் வைத்து சொடுக்குவது யதார்த்தமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் எடுக்கப்பட்டு, அது மிகை யதார்த்தமாகத் தொக்கி நின்றுவிடுகிறது. மேலும் அவர் குழந்தையைக் கலைத்துவிடும்படி சொல்லும்போது உதடுகளை வாய்க்குள் வைத்து மூடி தம் கட்டுவதும் செயற்கையாகத் தெரிகிறது. உதடுகளின் சிறு அதிர்வில்கூட சூழலைக் காட்ட முடியும் என்கிற சாத்தியத்தைத்தான் குறும்படத்தில் காட்ட வேண்டுமே தவிர கடுமையான உடல்மொழிகள் அல்ல. மற்றபடி ஒரு நல்ல முயற்சியையும் சமூகத்தின் முக்கியமான பிரச்சனையையும் தொட்டு பேசியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

6. பெருச்சாலி


விக்கி இயக்கியிருக்கும் இக்குறும்படம் மிகவும் நகைச்சுவையான சொல்லாடல்களைக் கொண்டு நகர்ந்து இறுதியில் வடிவ ரீதியிலும் கதை ரீதியிலும் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தி குறும்படம் என்கிற கச்சிதத்திலிருந்து வெளியேறுகிறது. பொதுவில் ஆங்கிலம் பேசுவதற்குத் தயங்கும் ஒரு பெண்ணுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக ஒரு கதை சொல்லப்படுகிறது. அந்தக் கதைத்தான் குறும்படம். விக்கிரமாதித்யனின் தோளில் அமர்ந்துகொண்ட வேதாளம் மீண்டும் கதை சொல்லத் தொடங்கியது என்பது போன்ற தொனியின் அடிச்சரடில் குறும்படம் படைக்கப்பட்டிருப்பது பலவீனமே.

ஆனால் பெருச்சாலி என்கிற மையக்கதை ஓர் அருமையான தேர்வு. இப்படிப்பட்ட உளவியல் சார்ந்த படைப்பைக் குறும்படமாக்குவதென்பது மிக விசித்திரமான முயற்சி மேலும் சவால் மிக்கதும்கூட. நான் ஏற்கனவே கூறியது போல மனச்சிதவை எப்படி வித்தியாசமாக எந்தச் சினிமா சாயலும் இல்லாமல் காட்டுவதென்பதன் எதிர்ப்பார்ப்பை இக்குறும்படத்தின் பிரச்சனை நிறைவேற்றுகிறது. ஆனால் குறும்பட இயக்குனர் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் மனச்சிதைவு தொடர்பான கருவின் முக்கியத்துவத்தை அறியாமல் அதனை மிகவும் வேடிக்கையான இடத்தில் வைத்து படமாக்கியுள்ளார்.

தன்னை ஒரு பெருச்சாலி என நினைத்துக் கொண்டு தனது அறைக்குள்ளே தன்னை இருத்திக் கொண்டு எலிக்குரிய அனைத்து பாவனையையும் செய்கிறான் கதையில் வரக்கூடிய கதைமாந்தர். மனித மனம் என்பது விசாலமான எல்லையைக் கொண்டது. ஆக தன்னை ஒரு எலியாகப் பாவித்துக்கொள்வதென்பது மனதை மேலும் மேலும் இறுக்கி தன் சுயத்தை இழந்து/தொலைத்து எலி எனும் சிறிய உயிரின் மனதைப் பெற்று அதன் தன்மையை முழுமையாக ஒப்புவிப்பது என்பது மிகவும் கடுமையான மனநோய்தான். எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய ‘நகுலன் வீட்டில் யாரும் இல்லை’ எனும் குறுங்கதை தொகுப்பில் ஒரு கதையைக் குறிப்பிட்டிருப்பார். அதாவது திடீரென காலையில் விழிக்கும்போது ஒரு கரப்பான்பூச்சியாக மாறிவிட்ட ஒரு மனிதனின் கதை. அன்று முழுவதும் அவன் தன்னைக் கரப்பான்பூச்சியாக நினைத்துக் கொண்டு வெளியில் அலைந்து திரிவான். அவனுடைய அனைத்துச் செயல்களும் கரப்பான்பூச்சியை ஒத்திருக்கும். மனிதனின் நகர வாழ்வில் ஒவ்வொருவரும் கரப்பான்பூச்சியைப் போலத்தான் ஆகிவிட்டார்கள் என்பதைக் கிண்டலடிக்கும் ஒரு நாட்டார்கதை அது.

ஆகவே இந்தக் குறும்படத்தில் மிகப் பயங்கரமான ஒரு மனநோயை ‘போமோ’ மந்திரவாதியை வைத்துக் குணமாக்குவது போன்ற சித்தரிப்பில் நம்பிக்கையின்மை தெரிகிறது. அறை முழுக்க தன் விரல்களால் கீறி அறையின் வெளிச்சத்தை விழுங்கி மிகவும் கோரமாக வாழும் ஒருவனை சக நண்பர்கள் இப்படித்தான் அணுகி குணப்படுத்துவார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. ஆனால் குறும்படத்தின் இறுதியில் இவையாவும் இன்னொரு பெண்ணுக்கு மனரீதியில் நம்பிக்கை அளிப்பதற்காகச் சொல்லப்படும் ஒரு புனைவு கதையாக மாறிவிடுகிறது. அத்தனை தூரம் பார்வையாளனைக் கதைக்குள் கொண்டு வரும் குறும்படம் அதன் அடர்த்தியைக்கூட எட்டுவதற்கு முன் கதைக்குள்ளிருந்து தூக்கி வீசுகிறது. மேலும் குறும்படத்தில் சொல்லத்தவறிய இன்னொரு விசயம், எப்படி அவன் தன்னை ஒரு எலியாக நினைத்துக் கொள்ளும் அளவிற்குச் சிதைவுக்குள்ளான் என்பதாகும். அறைக்குள்ளே அடைந்துகிடப்பதால்தான் அவன் மனம் நெருக்கடிக்கு ஆளாகிறது என்பதைப் பற்றி உரையாடலின்போது அழுத்தமில்லாமல் சொல்லப்படுகிறது. ஒருவனின் எண்ணங்கள் குறித்து மிகவும் தட்டையான ஓர் அணுகுமுறையைக் கொண்டு இவ்வளவு வலுவான ஒரு கருவை வளர்த்துச் சொல்வதென்பது கடினமான சவால்தான்.

“நம்ப எலி இல்லைன்னு நமக்கு தெரிந்தால் போதும், ஊர்ல உள்ள பூனைகளுக்கு அதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனும் கருத்தைச் சொல்வதற்காக ஒரு கதையைப் போதனையாக, மையக்கதைக்குள்ளே வைத்து சொல்லமுடியாமல், அதை இன்னொருவருக்குச் செய்யும் பிரச்சாரமாக குறும்படம் என்கிற வடிவ நேர்த்தியிலிருந்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறது. குறும்படத்தில் இடையிடையே சொல்லப்படும் நகைச்சுவைகள் இரசிக்கும்படியாக இருக்கிறது. சில இடங்களில் தமிழ் சினிமாவைக் கிண்டலடிக்கும் வகையிலும் நகைச்சுவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ‘பெருச்சாலி’ குறும்படத்தில் எனக்குப் பிடித்த இடம், கண்ணாடியை அவனிடம் காட்டி அவனது சுயத்தை அறிமுகம்படுத்துவது. இது ஒரு முக்கியமான உளவியல் கூறு. தன்னைப் பெருச்சாலியாக நினைத்துக் கொண்டு வாழும் அவனை மீட்பதற்காக அவனிடம் கண்ணாடியைக் காட்டி, ‘நீ மனுசண்டா” எனக் கூறுகிறார்கள். முன்பொருமுறை குழந்தையின் வளர்ச்சி உளவியல் பற்றி படிக்கும்போது, குழந்தைகள் தன் சுயத்தைச் சிறுக சிறுகத்தான் கற்றுக் கொள்கிறார்கள் என்றும் கொஞ்சம் வளர்ந்த குழந்தை கண்ணாடியைப் பார்க்கும்போது தன் சுயம் குறித்த முதல் தெறிப்பு குழந்தைக்குள் உருவாகும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. இக்குறும்படத்தில் அது போன்ற ஓர் உத்தியைச் சுமாராகப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

7. கை கொடுக்கும் கை

ராஜேந்திரன் ராஜா அவர்களின் இயக்கத்தில் செந்தில் குமரன் ஒளிப்பதிவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம் படத்தொகுப்பிலும் ஒளிப்பதிவிலும் முதிர்ச்சியான அம்சங்களைக் கையாண்டுள்ளது. குறிப்பாக அந்தச் சீன இளைஞன் தொடக்கக்காட்சியில் சைக்கிளில் வருவதும், வயதான அப்பா படுத்துக் கிடக்கும் அறையிலிருக்கும் ஒழுங்கின்மையும் என கலைவேலைப்பாடுகளில் கொஞ்சம் அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்றே சொல்லலாம். தன் பிள்ளையால் கைவிடப்பட்ட அப்பாவை ஒரு சீன இளைஞன் காப்பாற்றி அவருக்குத் துணையாக இருந்து அவரைப் பராமரிக்கிறான்.

ஊடகத்தைச் சார்ந்தவர்கள் இந்தச் செயலை ‘ஒரே மலேசியா’ எனும் கோட்பாட்டுக்குள் வைத்து விளம்பரப்படுத்துகிறார்கள். தொலைக்காட்சியின் மூலம் அப்பாவின் இருப்பைக் கண்டறியும் மகன், குற்றவுணர்வு தாளாமல் அவரைப் பார்ப்பதற்கு வருகிறான். ஆனால் அவன் வரும் நேரம் அப்பா இறந்துகிடக்கிறார். இதற்கிடையில் ஊடகம் அவர்களுடைய வாழ்வைப் பதிவு செய்வதாகக் கதை நீள்கிறது. வழக்கமாக இது போன்ற நிகழ்ச்சியை நாம் தொலைக்காட்சியில் பார்த்த அனுபவம் உண்டு. எடுத்துக்காட்டாக கண்ணாடி நிகழ்வு விளிம்புநிலை மனிதர்களின் துயரமான வாழ்வைப் படம் பிடித்து மக்களுக்குக் காட்டுகிறது. பிறப்பில் இந்துவான அந்த அப்பாவை ஒரு சீன இளைஞன் பராமரித்துக் காப்பாற்றுவதென்பது நெகிழ்ச்சியான ஒரு செய்திதான்.

ஆனால் குறும்படம் எந்த இடத்திலும் ‘ஒரே மலேசியா’ கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்வதற்காகத் தன் கலைத்தன்மையை இழந்துவிடும் என்கிற பயத்தை உருவாக்கிக் கொண்டே போகிறது. அப்படி ஒரு அனுமானம் உருவாவதையும் தவிர்க்க முடியவில்லை. குறும்படத்தின் இறுதி காட்சியில் சரியாக மகன் வரும் நேரம் பார்த்து அப்பா இறந்து போவது கதையின் மீதான பரிதாபத்தை அதிகரிப்பதற்காகச் செய்யப்பட்ட முயற்சி போலவே தெரிகிறது.

இந்தக் குறும்படத்தில் அப்பாவாக நடித்திருக்கும் கரு. கார்த்திக் அவர்களின் நடிப்பு சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டதாகவே கருதுகிறேன். மிகவும் இயல்பான மிகையில்லாத நடிப்பாற்றலைக் காட்டியிருக்கிறார். தொலைக்காட்சி நேர்காணலின்போது அவரது முகப்பாவனை எந்த நேரத்திலும் செயற்கையான சோகத்தை வெளிப்படுத்திவிடும் என்கிற அச்சம் எனக்கு உருவானது. ஆனால் அவரின் முகப்பாவனை தொடர்ந்து ஒப்பனையில்லாமல் வெளிப்பட்டது. ஒரு படைப்பாளியை/நடிகரைச் சொற்பமான நேரத்தில் முழுமையாகப் பயன்படுத்தும் ஆற்றல் குறும்படத்திற்கு இருப்பதை இங்கு உணர முடியும். தொடர்ந்து பல இடங்களில் உரையாடல் ஊடகத்தைச் சார்ந்தே உயர்ந்து ஒலிப்பதால் அது குறும்படத்திற்கான எளிமையை மீறிவிடுகின்றன. மகன் வந்துதான் தனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என அப்பா விருப்பப்படுவது வழக்கமான சடங்கு சார்ந்த அப்பாவின் ஆழ்மனதைப் பிரதிபலிக்கிறது. இந்த யதார்த்தம் துணிச்சலான வெளிப்பாடு என்றாலும் அப்பா கதைப்பாத்திரத்தின் மீது திடீர் கோபத்தை உருவாக்குகிறது.

8. முகத்திரை

ஜெயசுதா அவர்களால் இயக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம் மலேசிய வாழ்கைக்கு ஒவ்வாமல் அவ்வப்போது நழுவியபடியே வந்து சேர்கிறது. மேல்தட்டு கலை குடும்பத்தின் உறவு முறிவைப் பற்றி மேம்போக்காகப் பேசி செல்லும் குறும்படம் எந்த இடத்திலும் தன் தீவிரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகாமல் நேர்காணல், ஊடகம் என சொற்ப காட்சிகளில் நகர்கிறது. மேலும் ஏதோ சில தமிழ் சினிமாக்களை ஞாபகப்படுத்தும் கதையாகவே அறிமுகமாகிறது. கதையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் தனக்குள்ளே பல முகங்களைக் கொண்டிருக்கும் மனிதர்களின் முகத்திரையைக் கிழித்து எறியும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில்கூட ஆஸ்ட்ரோ தங்கத்திரையில் ‘பெண் சிங்கம்” எனும் திரைப்படத்தைப் போட்டார்கள். அந்தப் படத்தின் கதைநாயகன் ஓர் எழுத்தாளன். திருமணத்திற்கு முன் பெரிய பாரதிபித்தனாகவும் கொள்கை சார்ந்தவனாகவும் தன்னைக் காட்டிக் கொண்டு கதைநாயகியைத் திருமணம் செய்து கொள்கிறான். திருமண‌த்திற்குப் பிறகு பெண் அடிமைத்தனப் புத்தியுள்ளவனாகச் சித்தரிக்கப்படுகிறான். இதையே மையமாக வைத்து ஒரு திரைப்படமாக்கப்பட வேண்டிய கருவைச் சுருக்கி, ஒரு சில காட்சிகளைப் பிடுங்கி எடுத்து சிறிய காட்சி தொகுப்பாக ‘முகத்திரை’ குறும்படத்தைப் படைத்துள்ளார்கள். வேறு ஏதும் வித்தியாசமான கலைபடைப்பை இதில் பார்க்க முடியவில்லை. ஊடகத்தில் தன் பிம்பத்தைப் பெரிதாகக் கட்டி எழுப்பிவிட்டு, வீட்டில் அதற்கு முரணாக நடந்துகொள்ளும் காட்சிகளை அடுத்து அடுத்து காட்டி அவனின் பிம்பத்தை உடைக்கும் வித்தை பல படங்களில் கையாளப்பட்ட பழைய உத்தியாகும்.

குறும்படத்தின் இறுதி காட்சி, உரையாடல் தொடர் கார் புள்ளியாகி மறைகிறது. அவர்களின் குரலும் ஓய்கிறது. இந்த ஒரு காட்சியும் பிறகு இருவரும் ஓர் உணவகத்தில் தனியாக அமர்ந்து குறைவான வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருக்கும் காட்சியும் நல்ல முயற்சி.

9. வேட்கை

விக்கினேஷ்வரன் இயக்கியிருக்கும் இந்த வேட்கை குறும்படம் யதார்த்தை மீறிய ஒரு திகில் புனைக்கதை போல எடுக்கப்பட்டிருக்கிறது. வங்கிக் கொள்ளை சம்பவத்தை முன்வைத்து கதைமாந்தர் ஒரு திரைக்கதையை எழுதி, வாய்ப்புக்காக அலைகிறார். இறுதியில் ஒரு திரைப்பட நிறுவனம் என தன்னைக் காட்டிக் கொள்ளும் இருவர் அவனுடைய திரைக்கதையைக் கேட்டு, அதைப் படமாக்கலாம் என்கிற முடிவுக்கும் வருகிறார்கள். அவனுடைய திரைக்கதையை அந்த இருவரும் பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிடுகின்றனர். மறுநாள் அவர்கள் சொன்ன அலுவலகத்திற்கு வந்து சேரும் முதன்மை கதைமாந்தர் தான் ஏமாற்றப்படுவதை உணர்கிறான். அன்றைய இரவே அவனுடைய திரைக்கதையைப் பயன்படுத்தி ஒரு வங்கியைக் கொள்ளை அடித்ததாகச் செய்தியில் காட்டப்படுகிறது. மேலும் இந்தத் திரைக்கதையை வைத்துதான் கொள்ளையர்கள் திருடியிருகிறார்கள் என்பதும் கண்டுப்பிடிக்கப்படுகிறது.

இதுதான் இந்தக் குறும்படத்தின் மொத்த நகைச்சுவை. மன்னிக்கவும் மொத்த கதை. கதை திருடப்பட்டு அதை அடுத்தவர் பிரயோகித்து முன்னேறுவது போன்ற கதை கரு பல படங்களில் பிரயோகிக்கப்பட்டாகிவிட்டது. கதையா இல்லை நம்மிடம்? மலேசியச் சூழலைக் காட்டக்கூடிய மலேசிய வாழ்வைக் காட்டக்கூடிய நம்முடைய கதைகள் எத்தனையோ இருக்கும் என்பதை உணராதவரை உண்மையான கலைஞர்கள் உருவாகவே மாட்டார்கள். இறுதியில் ஆஸ்ட்ரோவின் கவனத்தைத் திருப்புவதற்காகக் குறும்படப் போட்டியின் செய்தி விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவதாகவும் அதைக் கதைமாந்தர் பார்த்து அதில் பங்கெடுக்க முடிவெடுத்ததாகவும் காட்டப்படும். இது திட்டமிட்ட செயற்கைத்தனம். இதெல்லாம் குறும்படத்தின் வடிவத்தைச் சிதைக்கும் என்பதைப் படைப்பாளர்கள் உணர வேண்டும்.

மேலும் இந்தக் குறும்படத்தில் சக ஆணைக் கிண்டலடித்து அவரது இயல்பைப் பகடியும் செய்திருக்கிறார்கள். மனித இயல்பையும் அவர்களுக்கும் சமூகத்தில் ஓர் இடம் உண்டு என்பதையும் நன்கு உணர்ந்து ஒவ்வொரு காட்சியையும் புரிதலுடன் பதிவு செய்ய வேண்டிய கடமை படைப்பாளனுக்கு உண்டு.

10. காதல் 2010

மனிஷா சாய் இயக்கியிருக்கும் காதல் 2010 குறும்படம் ஒரு மையக்கதைப்பாத்திரத்தை கதைகளத்திற்கு நடுவில் அனுப்பிவிட்டு சுற்றி நிகழும் காட்சிகளைப் பற்றி நம்மிடம் கருத்துரைப்பது போல எடுக்கப்பட்டிருக்கிறது. இது குறும்படம் என்பதைவிட ‘காதல் 2010 ஓர் அலசல்’ எனும் தலைப்பில் சமூக மனிதர்களின் தற்கால காதலைப் பற்றி பொதுமக்களிடம் பேசும் ஒரு நிகழ்ச்சியாகக் கருதக்கூடும்.

திடீரென கதைக்குள் வரும் ஒருவர் தன்னைச் சுற்றி காதல் காட்சிகள் மட்டுமே நிகழ்வதைக் காட்டி, அதனைச் சார்ந்து தனது கருத்துகளையும் பார்வையையும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார். இறுதியில் அவரும் காதலில் தோல்வியுற்றவர் என்கிற அதிர்ச்சியை அளிக்கிறார்கள். கதைமாந்தர்களின் நடிப்பில் அத்தனை சிறப்பான வெளிப்பாடுகள் இல்லை. குறும்படத்திற்கான கருவும் கதையும் அமையப்படாத போதாமையை உணர முடிகிறது.

மீள்பார்வை:

ஆக இந்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 10 குறும்படங்களும் பல இடங்களில் படைப்பாளர்களின் திறமைகளை அடையாளம்காட்டுவதற்குப் பயன்பட்டிருக்கிறது. தொடர்ந்து குறும்படம் சார்ந்த தன் அனுபவத்தையும் அறிவையும் பயிற்சியையும் வளர்த்துக் கொள்வதற்குப் படைப்பாளர்கள் அடியெடுத்து வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

குறும்படம் என்பது சமூக நிகழ்வின் ஒரு தருணத்தை எடுத்து அதனைக் கலை படைப்பாகத் தருவதாகும். மனித உணர்வுகள், காட்சி பதிவுகள், வசனங்கள், இருளையும், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வர்ணங்களையும் ஆங்காங்கே திறமையாகக் காட்டி, படிம உத்தி, குறியீட்டு உபயோகங்கள் எனத் தன் அனுபவத்தைப் படைப்பாளன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதன் மூலம் மலேசிய குறும்படத் தரத்தை உயர்த்த முடியும்.

 குறும்படம் சார்ந்த ஆளுமைகளை நீதிபதிகளாக அமர்த்தி, ஓர் ஆய்வுக்குழுவை ஏற்படுத்தி, சிறந்த குறும்படத்தைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியை ஆஸ்ட்ரோ மேற்கொண்டிருந்தால் நியாயமான தீர்ப்பை நம்மால் எதிர்ப்பார்க்க முடியும். அப்படியொரு குழு அமர்த்தப்பட்டுள்ளதா என்கிற விவரம் தெரியாததால் அது குறித்து இப்போதைக்குப் பேசுவதைத் தவிர்த்தாக வேண்டும். ஆனால் மக்கள் ஓட்டுப் போட்டு குறும்படத்தைத் தேர்ந்தெடுப்பதென்பது கொஞ்சம் வேடிக்கையான விசயம்தான். குறும்படம் சார்ந்த நுண்ணர்வுகள் இல்லாமல் எப்படி வெகுஜன மக்களுக்கு நேர்மையான மதிப்பீடுகளைக் கொண்டு சிறந்த குறும்படத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்? எது மயிரைச் சிலிர்க்க வைக்கிறதோ அதுதான் சிறந்த குறும்படம் எனத் தீர்மானிக்கப்படுமோ? கலை வடிவங்கள்/படைப்புகள் முறையான பயிற்சிப்பெற்ற அனுபவம் வாய்ந்த குறும்பட இயக்கத்தில் நீண்டநாள் தேர்ச்சியுடைய ஆளுமைகளால் மட்டுமே தேர்ந்தெடுத்து மதிப்பிட முடியும். மக்கள் தேர்வு என்பதில் கட்டாயம் நியாயம் இருக்காது. அதற்கு ஒரே காரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்பட இயக்குனர்கள் தன்னைச் சார்ந்தவர்களை வைத்து தன் குறும்படத்திற்கு அதிகமான ஓட்டுகளைப் போடச்சொல்லி தீர்ப்பையே மாற்றி அமைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதுதானே? சிந்திப்போமாக.

அண்மைய தகவல்: குறும்படப் போட்டியின் இறுதி முடிவு வெளியீடப்பட்டுள்ளது:

1. கை கொடுக்கும் கை 
2. முகத்திரை
மக்கள் தேர்வு: சூரியன்

நன்றி: வல்லினம் டிசம்பர் 2010
கே.பாலமுருகன்
மலேசியா

1 comment:

Tamilvanan said...

குறும்ப‌ட‌த்தை ப‌ற்றிய‌ நிறைய‌ த‌க‌வ‌ல்க‌ளோடு எழுத‌ப்ப‌ட்ட‌ ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌க் க‌ட்டுரை.