Tuesday, June 14, 2011

மௌனம் இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரை: ஆளுமையை அடையாளம் காண்பதிலும் தேக்கநிலையே.


கடந்த சனிக்கிழமை (11.06.2011) 3 மணி அளவில் மலாக்காவிலுள்ள கல்லூரி ஒன்றில் மௌனம் சிற்றிதழ் வெளியீடும் கலந்துரையாடலும் நடைப்பெற்றன. நான், பா.அ.சிவம், பச்சைபாலன் மஹாத்மன் அவர்களும் கோலாலம்பூரிலிருந்து காரில் சென்றிருந்தோம். எதிர்பார்த்திருந்தபடி 35 பேர் மண்டபத்தில் கூடியிருந்தனர். மௌனத்தில் வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் அறிமுகமான நாணல், ரிவேகா போன்றவர்கள் இருந்தனர். பச்சைபாலன் நிகழ்ச்சியை வழிநடத்த பெரியவர் தோ.கா.நாராயணசாமி வரவேற்புரை வழங்கினார். அங்குக் கூடியிருந்தவர்கள் அனைவரையும் மேலோட்டமாக அறிமுகம் செய்து வைத்தார்.

நான் ஆற்றிய உரையின் சுருக்கம்:

மலேசியாவின் இன்றைய கவிதை குறித்த பிரக்ஞை எப்படி இருக்கிறது என்பதை விவாதிப்பதன் மூலம் அல்லது முன்வைப்பதன் மூலமே மலேசியாவில் எழுதப்படும் நவீன கவிதைகள் பற்றி பேச முடியும் என நினைக்கிறேன். ஒரு கவிதை குறித்த சமூகத்தின் ஒட்டுமொத்தமான புரிதல் அல்லது பல்வேறான புரிதலை அறிந்துகொண்டு அதனை விமர்சனப்பூர்வமாக ஆழமாக விவாதிக்காதவரை அவற்றை அடைவது சிரமம். அதற்கான முயற்சியாகவே எனது இந்த உரையைக் கருதுகிறேன். 


சினிமாவுக்குப் பாடல்கள் எழுதுபவர்களையும், மேடையில் சத்தமிட்டு ஆக்ரோஷமாகக் கொந்தளிப்பு நிலையில் கதறுபவர்களையும் உண்மையான கவிஞர்கள் என நம்பிக்கொண்டிருக்கும், அரசியல்வாதிகளின் பிறந்தநாளுக்குச் சொற்களை அவர்களின் கூலிகளாக்கி பாதத்தைக் கழுவும் அளவுக்கு அதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களைக் கவிஞர்கள் என நம்பிக்கொண்டிருக்கும், வாரம் வாரம் ஞாயிறு பதிப்புகளில் துண்டு துண்டாக்கப்பட்டு, குதறப்பட்டு, வரிக்கு வரி நிறுத்தற்குறிகளைப் போட்டு வெளியிடப்படுபவைகளைக் கவிதைகள் என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு சூழல்தான் மலேசிய கவிதை குறித்தான பொதுவான பிரக்ஞை நிலை. அதற்கு மாற்றாக ஒரு சிறு கூட்டம் கவிதை முயற்சிகளைச் செய்து வருவதும் இந்தக் காலக்கட்டத்திலேயே நடந்துகொண்டிருப்பதும் வரவேற்க்கத்தக்கது.

தமிழ் மொழி தெரிவதாலும் அல்லது தமிழில் ஒரு வாக்கியத்தையோ சொல்லையோ வாசிக்கமுடிவதாலும் தமிழில் எழுதப்படும் கவிதையை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியும் என நினைப்பதே அபத்தமானது. வாசிப்பு என்பது எப்படிப் பயிற்சி சார்ந்ததோ அதே போலத்தான் இலக்கிய வாசிப்பும் தனித்துவமான பயிற்சியின் வழி அடையக்கூடியது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாசிப்பை ஒரு சமூகம் வெவ்வேறான முறையில் முன்னெடுத்திருக்கின்றது. முன்பு ஒரு பிரதி வாசிக்கப்பட்ட விதமும் அதே பிரதி இப்பொழுது வாசிக்கப்படும் விதமும் வேறானவையாக இருப்பதற்குக் காரணம் வாசிப்பின் மீது வெவ்வேறு காலக்கட்ட மனிதர்கள் தங்களின் பயிற்சியைப் புதுப்பித்துக்கொண்டு மீள்வாசிப்பு மறுவாசிப்பு என் முன்னகர்ந்து தன்னை வளர்த்துக்கொண்டதால்தான் என நினைக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட காலம்வரை சமூகத்தில் புதுக்கவிதை கவிதையின் மாற்று வடிவமாக தமிழுக்குள் நுழைந்து பெரும் சலனத்தை ஏற்படுத்தி மரபிலக்கியவாதிகளுக்கும் புதுக்கவிதையாளர்களுக்கும் சண்டையை ஏற்படுத்தின. இதுவே அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த மிகச்சிறந்த வேடிக்கை. எப்படிச் சிறுகதை தமிழுக்குள் புதிய வடிவமாக நுழைந்து தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொண்டதோ அதே போலத்தான் கவிதைக்குள்ளும் இது நிகழ்ந்தது. கவிதைக்கு இரண்டாயிரமாண்டு மரபு இருக்கும் ஒரே காரத்திற்காகத்தான் சிறுகதை நுழைந்துபோது அதை ஏற்றுக்கொள்வதும் கவிதைக்குள் மாற்றம் நிகழும்போது அதை நிராகரிக்கவும் என இருவகையான சூழல் ஏற்பட்டது. ஒரு பக்கம் தமிழுக்குள் நெகிழ்ச்சியையும் இன்னொரு பக்கம் இறுக்கத்தையும் என தமிழுக்குள் நடந்தது மாபெரும் அதிசயம்.

மாற்று வடிவமென தமிழுக்குள் நுழைந்த சிறுகதையின் வழி பல நல்ல படைப்பாளிகள் தமிழுக்குக் கிடைத்தது போல புதுக்கவிதையின் வழி சொற்பமான படைப்பாளிகளே அடையாளம் காணப்பட்டார்கள். வானம்படி கவிஞர்கள், திராவிட கவிஞர்கள் என இவர்கள்தான் புதுக்கவிதையை வீச்சுத்தன்மையுள்ள வடிவமாக மாற்றி மேலோட்டமாகவும் மேடைகளிலும் முழங்க வைத்து அதன் கூர்மையை மழுங்கடித்தார்கள். சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழ் வழி நவீன கவிஞர்கள் புதிய சிந்தனைகளுடன் புதிய மாற்றங்களுடன் தமிழ்க் கவிதைகளைத் தமிழுக்குள் கொண்டு வந்தார்கள். அதில் முக்கியமானவர்களாக ந.பிச்சைமூர்த்தி, ஞானக்கூத்தன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஏறக்குறைய இதுதான் நவீனக் கவிதையின் துவக்கம் எனச் சொல்லலாம்.

இன்று தமிழின் மறுக்கமுடியாத பிம்பமாகக் கருதப்படும் பாரதிதான் தமிழின் முதல் நவீன கவிஞன் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். பாரதி மட்டுமே உலக இலக்கியத்தையும் சர்வதேச அரசியலையும் புரிந்துகொண்டு தமிழுக்குள் சுருங்கிவிடாமல் உலக பிரக்ஞையோடு கவிதைகளை எழுதினான். மேலும் உலகத்தில் எழுதப்படும் அனைத்து இலக்கியங்களும் கவிதைகளும் மீ மொழியில் எழுதப்படுவதைப் புரிந்துவைத்துக்கொண்டு கவிதையை எழுதுகிறான். காலனிய ஆதிக்கத்திற்குப் பிறகு எல்லைகள் உடைந்து உலகம் பிரென்ச், ஆங்கிலயர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தபோது உலகின் பல நிலப்பரப்புகளின் இலக்கியங்கள் ஆங்கிலத்திற்கும் பிரென்ச் மொழிக்கும் மொழிப்பெயர்க்கப்பட்டன. அதே போல அம்மொழி இலக்கியங்களும் காலனிய நாட்டு மொழிக்குள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுதான் உலக இலக்கியத்தின் உருவாக்கம் என ஜெயமோகன் மலேசியா வந்தபோது குறிப்பிட்டிருந்தார். அதை முதலில் எதிர்க்கொண்டது பாரதி. அதனால்தான் வசனக்கவிதைகளை அறிமுகப்படுத்தி எழுதத் துவங்கியதும் பாரதி ஆகும்.

ஒவ்வொரு மொழிக்கும் அடுக்குகள் இருப்பதைப் பற்றி முதலில் நாம் பயின்றாக வேண்டும். மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மொழியின் எல்லாம்வகையான சாத்தியங்களையும் உள்வாங்கிக்கொண்டு புரிந்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. மனிதர்கள்தான் அந்த ஆற்றலுக்குப் பயிற்சிக்கொடுக்காமல் மொக்கையாக வைத்திருக்கிறோம் எனக் கூறுகிறார். மொழிக்குள் இயங்கும் இன்னொரு அடுக்கில்தான் இன்று இலக்கியமே படைக்கப்படும்போது எப்படி ஒரு மொழியின் நேர்த்தன்மையில் வைத்து கவிதையைப் புரிந்துகொள்ள முடியும்? ( நகர்த்துதல், படி போன்ற உதாரணங்களின் வழி சொற்களுக்குள் செயல்படும் இரண்டாவது அடுக்கு, மீ மொழி போன்றவற்றிற்கான விளக்கம் அளிக்கப்பட்டது)

இன்றைய மொழி என்பது வெறும் மரபு சார்ந்தது மட்டுமல்லாமல் அது தற்கால அரசியலையும் அதன் பாதிப்புகளையும் உள்வாங்கிக்கொண்டுதான் ஒலிக்கிறது. உலகத்தில் அனைத்து நிலப்பரப்புகளும் இரண்டு விதமான மனிதர்களைத்தான் சந்தித்து வந்துள்ளன. ஒன்று அடிமைப்படுத்தியவன் மற்றொன்று அடிமைப்படுத்தப்பட்டவன். ஆகவே சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு மதம், குடும்பம், அரசியல் எனத் தொடர்ந்து சிதைக்கப்பட்ட வாழ்வின் அனைத்துவிதமான குரல்களைத்தான் இன்றைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. மதத்தின் போலித்தனங்களாலும், குடும்ப உறவு சிக்கல்களாலும், நகரம் ஏற்படுத்தும் தனிமையினாலும், பெருநகர் எச்சங்களினாலும் சிதறுண்டுபோன ஒரு நவீன மனிதனின் வாழ்வை அப்பட்டமாக ஒலிப்பவையும் நவீன கவிதையென புரிந்துகொள்ளலாம். இப்படி மாறுப்பட்ட காலக்கட்டத்தின் மிகவும் அந்தரங்கமான வெளிப்பாடாக கவிதை எழுதப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நவீன கவிதைகள் ஏன் புரிவதில்லை என்பதைவிட மிகவும் மேலோட்டமாக அலங்காரங்கள் நிரம்பிய ஒரு சாதாரண கவிதை புரிந்துவிடுவதுதான் இன்றைய வாசகனின் சிக்கலாக இருக்கிறது. ஆகவே இலக்கியத்தின் ஒவ்வொரு மாற்றங்களையும் எதிர்க்கொள்ளும் இன்றைய வாசகனுக்குத் தேவை தீவிரமான வாசிப்பும், தொடர் வாசிப்பும்தான் என நினைக்கிறேன். சங்கக் காலக் கவிதைகளுக்கு உரை ஆசிரியர்கள் இருந்தார்கள். விளக்க உரைகள் வழங்கினார்கள். அதனால் அந்தக் கவிதைகள் வாசிப்பிற்கு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நவீன கவிதைகளுக்கு உரை ஆசிரியர்கள் இல்லை மேலும் கவிதையை எழுதிவிட்டு கீழே விளக்கம் கொடுக்கும் அளவிற்கு அபத்தங்களைச் செய்யவும் யாரும் தயார் இல்லை. ஆகவே நவீன கவிதைகளை விவாதிப்பதன் மூலம் கலந்துரையாடுவதன் மூலமும் மட்டுமே புரிந்துகொண்டு எதிர்க்கொள்ள முடியும் என நினைக்கிறேன். நவீன கவிதைக்குள் இருக்கும் மீ மொழியை அடைவதற்கு இதுவே நல்ல வாய்ப்பாக இருக்கும். நன்றி.

உரைக்கு அப்பாற்பட்டு:

சிற்றிதழ் என்பது ஒவ்வொரு கால்லக்கட்டத்திலும் இலக்கியத்திலும் கலையிலும் ஏற்படும் புதிய சிந்தனைகளை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதற்கு மாற்று வடிவமாகச் செயல்படத்தொடங்கிய களமாகும். அது போன்ற தீவிரமான களமான சிற்றிதழ்கள் போட்டிகள் நடத்துவது அதன் தீவிரத்தை வலுவிழக்கச் செய்துவிடும் என நினைக்கிறேன். மேலும் தனிநபர்களைக் கொண்டாடும் ஒரு களமாக சிற்றிதழ்கள் மாறிவிடக்கூடாது. அந்தக் காரியத்தையெல்லாம் நடுநிலை இதழ்கள் செய்துகொள்ளக்கூடும். 

அடுத்ததாக மலேசிய வாழ்வின் எந்தப் பரிச்சயமும் இல்லாதவர்களை நீதிபதியாக அமர்த்துவது மிகவும் தவறான ஒன்றாகும். கவிதை வெறும் கோட்பாடு சார்ந்தவை அல்ல, அது ஒரு காலக்கட்டத்தின் மக்களின் வாழ்வையும் மனங்களையும் கலாச்சாரங்களையும் ஊடுருவி பிறக்கக்கூடியவை. அந்தச் சமூகத்தில் வாழாத அந்தச் சமூகத்துடன் அனுபவம் இல்லாதவர்களை எந்த அடிப்படையில் நம் மண்ணின் வாழ்வைப் பிரதிபலிக்கும் அல்லது இங்கு வாழ்ந்தவர்களின் உணர்வுகளை மதிப்பிட்டு அதனை அடையாளப்படுத்த முடியும்?

மௌனம் இதழை வாசிக்க நேர்ந்தது. மௌளனம் தற்கால கவிதைகளுக்கான களம், ஆனால் புதுக்கவிதை மட்டும் எழுதி அனுபவமுடைய சை.பீர்முகமதுவை நவீன கவிஞனின் நாயகன் போல அவருக்கென தனிச்சிற்றிதழைக் கொண்டு வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. மேலும் அவருடைய சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் நேர்காணலில் அவரே இப்படிக் குறிப்பிடுகிறார், “ நவீன கவிதை எனும் தற்போதைய கவிதை இயக்கம் அல்லது போக்கு, கவிதை உலகத்தையே சாகடித்துக்கொண்டிருக்கிறது”. இந்தக் குற்றச்சாற்றை முன்வைத்துவிட்டு, அந்த நவீன கவிதையின் ஒரு இயக்கமாகச் செயல்படும் மௌளனம் சிற்றிதழ் போடும் தனிச்சிறப்பிதழுக்கு மட்டும் எல்லாம்விதமான சம்மதத்தையும் அளித்து கொண்டாட்டத்திற்குத் தயாராகிவுள்ளார். எப்படித் தன்னை முன்னெடுக்கும் இதழுக்கு ஆதரவாக இருந்துகொண்டு அந்த இதழ் மேற்க்கொள்ளும் கவிதை இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்க முடிகிறது? உண்மைத்தான். சை.பீர் குறிப்பிட்டிருப்பது போல தற்கால கவிதை இயக்கம் அவரைப் போன்ற கவிதைக்குள் எந்தப் பெரிய முயற்சியும் செய்யாதவர்களுக்கெல்லாம் தனிச்சிறப்பிதழ் போட்டு கவிதை உலகைச் சாகடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் மலேசியாவில் எழுதப்படும் கவிதைகள் வெறும் நகல்களாக மட்டுமே இருப்பதாகத் தன் நேர்காணலில் பீர்முகமது குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் நவீன கவிதை பாதிப்பு வருவதற்கு முன்பாக வைரமுத்து மேத்தா போன்ற வானம்படி கவிஞர்களின் நகலாக ஒரு கூட்டம் இருந்ததைப் பற்றியும், கவிதைக்குள் ஆழ்ந்த படிமங்களை உருவாக்க முயலாமல் மொண்ணையாகச் சமூகப் பிரச்சனைகளை மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திலிருந்துதான் இவரும் கவிதைகள் எழுதியுள்ளார் என்றும் கொஞ்சம்கூட பிரக்ஞையில்லாமல் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லாம் காலக்கட்டங்களிலும் யாரோ ஒருவரின் பாதிப்புடன் எழுதத் துவங்கும் பல எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். இது ஆரோக்கியமற்ற விசயம் கிடையாது. அந்தப் பாதிப்பிற்குப் பிறகு எப்படி ஒரு எழுத்தாளன் தனக்கான சுயத்தை அடையாளம்கண்டு தனக்கான கதை/கவிதை மொழியை உருவாக்கிக்கொள்கிறான் என்பதுதான் முக்கியமானது. மலேசியாவில் தற்சமயம் எழுதிக்கொண்டிருப்பவர்களில் சிலர் அப்படியொரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதைப் பற்றி சிறிதும் புரிதல் இல்லாமல் கடந்தகால கருத்தாக்கங்களையே இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் சை.பீரின் விமர்சனம் மிகவும் பலவீனமானதாகும். (படிக்க மௌனம் இதழ் நேர்காணல்)

மௌனம் நிகழ்வில் பரிசு கிடைத்த மூன்று கவிதைகளும் மிகவும் நேரடியானவையாகும். எந்தச் சிரமமும் இல்லாமல் புரிந்துகொள்ளக்கூடிய கவிதைகள். குறிப்பாக வரிக்கு வரி ஆச்சர்ய குறியைப் போட்டு ஆணாதிக்கச் சமூகத்தின் சுரண்டல்களைக் கவிதையாக எழுதிய சை.பீர்முகமதுவின் கவிதையாகும். ஒரு நல்ல படிமத்தை அல்லது குறியீட்டை கவிதை முழுக்கவும் உருவாக்க முயன்று பிறகு அங்கேயே வீச்சையும் பிரச்சாரத்தையும் செய்து அந்தக் குறியீட்டைப் பலவீனமாக்கியுள்ளார். கூட்டத்தில் அவர் கவிதையின் மீது எந்த விமர்சனம் எழவில்லை மாறாக அவர் கவிதையில் பாவித்திருக்கும் தசரதனுக்கு எத்தனை மனைவி எனும் சர்ச்சையே பெரிதுப்படுத்தப்பட்டது.

குறைந்தபட்சம் மலேசிய நவீன கவிதைகளின் மீது விமர்சனம் வைக்கும் முன்பதாக அதன் சார்ந்த ஒரு உரையாடலையோ அல்லது கவிதை முயற்சியையோ செய்திருக்க வேண்டும். தன்னால் புதுக்கவிதை மட்டும்தான் சாத்தியம் என்ற தனது இயலாமையைச் சரிக்கட்ட கவிதையின் அடுத்தக்கட்ட வளர்ச்சியின் மீது வெற்றுப்புகார்களை முன்வைப்பது மிகவும் தவறான ஒன்றாகும். எத்தனை நவீன கவிதைகளை அதன் பிரக்ஞையோடு அணுகி விமர்சிக்கப்பட்டுள்ளது? இங்குக் கவிதை பட்டறைகளில் இன்னமும் திடீர் கவிதை, ஒரு வரி கவிதை, தலைப்புக் கொடுத்து கவிதை எழுதுவது எனும் மொக்கையான முயற்சிகளே பரிந்துரைக்கப்படும்போது மாற்றங்களை உணர வைக்க முடியுமா? ஆகவே இதையெல்லாம் கவனத்தில்கொண்டு மௌளனம் இதழ் தன்னை மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டு நகர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். யார் உண்மையான ஆளுமைகள் என அடையாளும் காணும் விசயத்திலாவது முதிர்ச்சியுடன் செயல்படுவோம். ஆளுமையை அடையாளம் காண்பதிலும் தேக்கநிலையையே உருவாக்க முடிந்தால் அடுத்து அழிவு நிச்சயம். அல்லது ஆளுமையே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, முயற்சிகள் நியாயமானதாக இருக்கட்டும்.

ஒரு இதழ் ஆசிரியன் என்கிற முறையில் சமக்காலத்து இலக்கிய சூழலின் அரசியல்களைப் புரிந்துகொண்டு தார்மீகமாகச் செயல்படுவது அவசியம் எனக் கருதுகிறேன். படைப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் படைப்பாளனே பொறுப்பு என விலகிக் கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும் தான் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் இதழ் ஆசிரியர் மிகுந்த கவனத்துடன் சமக்காலப் பிரக்ஞையுடன் எழுத்தாளர்கள் முன்வைக்கும் கருத்துகளைப் பரிசிலித்துப் பிரசுரிப்பது முக்கியமாகும். தற்சமயம் இணையங்களில் படைப்பிலக்கியங்களைக் காணமுடிவதில்லை எனச் சை.பீர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு எப்படிப்பட்டது என ஓர் இதழாசிரியருக்கு அதை அனுமதிக்கும் முன் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? சிறுகதை விமர்சனம், கவிதை விமர்சனம், நாவல் விமர்சனம், சினிமா விமர்சனம் எனத் தொடர்ந்து மலேசிய சூழலில் ஆழமான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் வல்லினத்தின் சமீபத்திய தொடர்கள் எத்துனை முக்கியமான முயற்சி என இவர்களுக்குத் தெரியவில்லையா? மேலும் இந்தப் படைப்பிலக்கிய முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் அனைவரும் இளைஞர்களே என்பதும் கவனிக்கத்தக்கவை. இளைஞர்கள் பொறுப்புடன் படைப்பிலக்கிய சூழலில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு காலக்கட்டத்தில் இணையத்தில் நல்ல இலக்கிய முயர்சிகளை வாசிக்க முடிவதில்லை எனச் சொல்வது அபத்தமான பார்வை.

சை.பீர் தனது நேர்காணலில் முன்வைத்திருக்கும் அனைத்துக் கருத்துகளும் காலாவதியானவை என்பதை மௌனம் ஆசிரியர் தேவராஜன் அவர்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன். ஆகையால் இதற்கான எல்லாம்விதமான பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டு வல்லினத்தின் அண்மைய முயற்சிகளைப் புரிந்துகொள்ளாமல், இளைஞர்களின் இலக்கிய ஈடுபாட்டைக் கேவலப்படுத்தும்வகையில் சை.பீர் வெளியீட்ட தவறான கருத்துகளையொட்டி அடுத்த மௌனத்தில் பகிங்கரமான மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

கே.பாலமுருகன்

கட்டுரை எழுத உதவிய தளங்கள்
நன்றி: ஜெயமோகன் வலைத்தளம்

No comments: