Sunday, September 25, 2011

திரை விமர்சனம்: எங்கேயும் எப்பொழுதும்


பேருந்து பயணம்

இரு பேருந்துகள் எதிரெதிரே மோதிக்கொள்கின்றன. ஏராளனமானவர்கள் இறந்து போகிறார்கள். கவனக்குறைவும் அதிவேகமும் விபத்தையும் மரணத்தையும் இழப்பையும் கொண்டு வருவதை மிகக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். கதைக்குள் எந்த நெருடலும் இல்லாமல் பொருந்தி வரும் கதைப்பாத்திரங்கள் மிகையில்லாமல் வந்து போகிறார்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திருச்சியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கும் போகும் பேருந்துகள் விழுபுரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி சாலையில் வாகனத்தைக் கவனக்குறைவாக ஓட்டுபவர்களுக்கான எச்சரிக்கை. நம்மைச் சுற்றி உள்ளவர்கள், நம் அன்பிற்குரியவர்கள் நாம் கார் ஓட்டும்போது நடுக்கத்துடனும் பயத்துடனும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அரை மனமாய் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?


வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ஊர் திரும்புபவர்கள், பேருந்தில்தான் வாழ்க்கையையே அடையாளம் கண்டு கொண்டவர்கள், 5 வருடம் துபாயில் வேலை செய்துவிட்டு பிறந்ததிலிருந்து பார்க்காத தன் மகளைப் பார்க்க ஆவலாக இல்லம் திரும்பும் அப்பா, புதுமனைவியை விட்டுப் போக மனமில்லாமல் அவளுடனே பயணிக்கும் கணவன், காதலனைத் தேடி ஊர் திரும்பும் காதலி என ஒவ்வொரு பயணிகளும் அற்புதமானவர்கள். அவர்களின் மரணம் மனதை வருத்துகிறது. அன்றாடம் நாம் நாளிதழில் ஒரு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு நகரும் சாலை விபத்துகளின் மீது நம் கவனத்தைத் திருப்ப வைக்கும் முக்கியமான முயற்சி இப்படம். ஒரு கருத்தைச் சொல்ல இப்படத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் படம் நெடுக எங்கேயும் பிரச்சார நெடியில்லாமல் கதை இயல்பாகச் சம்பவங்களை நேர்கோடற்ற முறையில் நகர்த்திச் செல்கிறது. புது இயக்குனர் சரவணன் முதல் படத்திலேயே பாலாஜி சக்திவேல் போன்ற தாக்கத்தை அளிக்கக்கூடியவராக இருக்கிறார். 

பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்திலும் பேருந்து தீவிபத்து கடைசி காட்சியாக அமைக்கப்பட்டு பெரும் தாக்கத்தை உருவாக்கியது. இப்படத்தின் தொடக்கக் காட்சியே இரு பேருந்துகளின் விபத்திலிருந்துதான் தொடங்குகிறது. அந்தச் சம்பவத்திலிருந்து காட்சிகள் இரண்டாக நகர்வது வித்தியாசமான திரைக்கதை அமைப்பு. பேருந்திற்குள் வந்தமரும் ஒவ்வொரு பயணிகளும் கதைக்குள் செயற்கையாக நுழையாமல் யாரோ வழிப்போக்கர்கள் போல வருவதுதான் ஆச்சர்யமான விசயம். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவங்கள் எங்கேயும் உறுத்தவில்லை. கதை நான்கு மையக் கதைப்பாத்திரங்களைச் சுற்றி பின்னப்பட்டிருப்பினும், அவர்களை விட்டு அதீதமாக நகராமல் கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஜெய்க்கு தலையில் அடிப்பட்டு அவர் காதில் இரத்தம் வடிவதைப் பார்த்தும் எந்தப் பதற்றமும் இல்லாமல் ஒரு தாதிக்குரிய முதிர்ச்சியுடன் அஞ்சலி செயல்படுவது படத்தில் கவனப்படுத்தப்படாவிடிலும் மனதில் நிலைக்கிறது. அவரை அங்கிருந்து உடனேயே மருத்துவனைக்கு வண்டியில் அனுப்பி வைத்துவிட்டு, பிறருக்கு உதவி செய்யத் துவங்குகிறார். எல்லாம் முடிந்து மருத்துவமனைக்குக் கிளம்பும்போது மட்டுமே ஜெய்க்கு தலையில் கடுமையான காயம் பட்டிருப்பதைச் சொல்லி அழும் இடம் முக்கியமான காட்சி. மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தன் காதலியிடம், அவளைத் தேடித்தான் அவன் 4 மாதங்களாக அலைந்துகொண்டிருக்கிறேன் எனச் சொல்லி அழும் இடத்தில் யாவும் நடிகர்களைவிட மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது.

பேருந்து விபத்துக்குள்ளாகும் காட்சியை 5 நிமிடம் இடைவிடாமல் காட்சிகளை மெதுவாக்கி மிக அருமாகையில் காட்டுவது மிகச் சிறந்த தொழில்நுட்ப வேலை. தலை கண்ணாடியை மோதுவது, கால் நசுங்குவது, நாற்காலிகள் பெயர்ந்து வெளியேறுவது என அனைத்துக் காட்சிகளும் அவதானிக்கவே முடியாத ஒரு சாலை விபத்தின் கொடூரத்தை நமக்கு நெருக்கமாக்கி காட்டுகிறது. இது ஒரு படம் என்பதைவிட சாலை விபத்தை நாம் நேரடியாகச் சந்திக்கும் அனுபவமாக மாற்றுகிறது. வாழ்வில் எங்கோ ஏதோ ஓர் இடத்தில் ஒவ்வொருநாளும் நிகழ்ந்துகொண்டிருக்கும் சாலை விபத்துகளைக்கூட சினிமாவில் மையப்பொருளாக அடையாளப்படுத்த முடியும் என்பதற்கு ‘எங்கேயும் எப்பொழுதும்’ நல்ல உதாரணம்.

அந்த விபத்து நிகழ்ந்த சாலை பிறகு அடையும் மாற்றம், அதைப் படத்தில் ஒரு கண நேர காட்சியாகக் காட்டி படத்தை முடித்த விதம், நடைமுறை எப்படி தனக்கான வெளியை எப்படிப்பட்ட சூழலிலிருந்தும் மீட்டு வடிவமைத்துக்கொள்ளும் என்பதை உணர முடிந்தது. மறுநாள் தொடங்கியதும் அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல ஆரம்பிக்கின்றன. மெதுமெதுவாக அவ்விடம் குருதியையும் குப்பைகளையும் இழக்கிறது. பிறகு மீண்டும் பழைய தோற்றத்திற்குத் திரும்புகிறது. இறுதியில் இரண்டு முக்கியமான சாலை பலகைகள் அந்த இடத்தில் அமைக்கிறார்கள். “விபத்துகள் நடக்கும் சாலை, ஜாக்கிரதை’ என்றும் “go slow” என்றும் காட்டப்படுகிறது. ஒரு கொடூரமான சம்பவத்திற்குப் பிறகும் பல உயிர்களின் இழப்புகளுக்குப் பிறகும் இந்தச் சமூகம் அடையும் விழிப்புணர்வைக் கேலி செய்வது போல அக்காட்சி நடைமுறையின் யதார்த்தத்தைத் தழுவி நிறைவடைகிறது.

“அப்பா வேகமா ஓட்டாத்தீங்க..பயமா இருக்கு” இப்படி வெளியே சொல்லமுடியாமல் மனதிற்குள்ளே அல்லல்படுவது உங்கள் குழந்தையாகக்கூட இருக்கலாம்”

கே.பாலமுருகன்

1 comment:

Philosophy Prabhakaran said...

ரொம்ப லேட்டாக விமர்சனம் போட்டாலும் நன்றாகவே இருக்கிறது...