Thursday, October 6, 2011

திரை விமர்சனம்: வாகை சூட வா (கண்டெடுத்தான் காடும் கண்டெடுக்க முடியாத கலையுணர்வும்)


கண்டெடுத்தான் காடு எனும் ஒரு குக்கிராமத்தின் கதை இது. ஒரு பூர்வகுடி சாயலில் வாழும் மக்கள். செங்கல் அறுத்து அதை ஒரு சிறு முதலாளியிடம் விற்று வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். செங்கல் சூரையில் பெரியவர்கள் முதல் பிள்ளைகள்வரை வெயிலில் காய்ந்தவாறு வேலை செய்கிறார்கள். அவர்கள் கடைசிவரை நம்பி வாழ்வதே அந்த மண்ணையும் மண் கொடுக்கும் செங்கலையும்தான். படம் 1966 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. புழுதி பறக்கும் கிராமத்தின் மூலையில் இலையுதிர்ந்து நிற்கிறது ஒரு மரம். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்கிற இலட்சியத்துடன் வாழும் விமல், ஒரு தனியார் அமைப்பின் மூலம் கண்டெடுத்தான் காட்டிற்கு வாத்தியாராக வந்து சேர்கிறார்.

இந்தக் கிராமத்தில் 6 மாதங்கள் வேலை செய்தால் அவருக்கு அரசாங்க வேலை கிடைப்பது உறுதி என்பதாலே அப்பாவின் கோரிக்கையின் பேரில் கண்டெடுத்தான் காட்டுக்கு வருகிறார். இந்த ஒரு சந்தர்ப்பம் எனக்கு ஆசிரியர் வேலை நமக்களிக்கும் அனுபவத்தையும் மனிதர்களையும் ஞாபகப்படுத்துகிறது. நமக்கு சிறிதும் அறிமுகமில்லாத ஒரு ஊருக்கோ அல்லது சூழலுக்கோ செல்லும்போது வாழ்வின் அடுத்த திருப்பத்தை அல்லது இரகசியத்தை எதிர்க்கொள்ளும் ஒரு மகத்தான அனுபவம் கிட்டுகிறது. அப்படியொரு அனுபவம்தான் இப்படத்தில் விமலுக்கும் அமைகிறது.

கொஞ்சம் வசதியான ஒரு கிராமத்திலிருந்து எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு தனிமைப்பட்டுக்கிடக்கும் ஒரு குக்கிராமமான கண்டெடுத்தான் காட்டிற்கு வரும் விமல் அங்குள்ள பின்னடைந்த சூழலுக்குத் தன்னை உடனேயே தயார்ப்படுத்திக் கொள்வது கிராம மனநிலையைக் காட்டுகிறது. இருந்த போதும் எப்பொழுதும் புதியதாக ஓர் இடத்திற்கு வந்து சேர்பவனின் மிகப்பெரிய சவாலே அங்குள்ள சமூகத்துடன் இணைந்து வாழ்வதுதான். பண்முக கலாச்சார சூழலில் இது மேலும் சிரமமான ஒன்றாகும். விமல் சந்திக்கும் மனிதர்கள் கல்வி கற்காதவர்கள். எப்பொழுதுமே கல்வியின் முக்கியத்துவத்தையும் அறியாதவர்கள். அவர்களின் குழந்தைகள் உழைப்பதன் மூலம் அவர்களால் வாழ முடிகிறது ஆகையால் வாழ்வதைத் தவிர வேறொன்றும் முக்கியமில்லை எனத் தீர்க்கமாக நம்புகிறார்கள். அப்படியொரு சமூகத்திற்குக் கல்வியின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பணியைத்தான் விமல் செய்கிறார்.

கண்டெடுத்தான் காடு மக்கள் இன்னமும் ஒரு காலனிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போலவே காணப்படுகிறார்கள். சிறு முதலாளிக்கு உழைத்துக்கொடுக்கும் வேலையை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அதிகாரத்திடம் சரணடைந்து வாழ்வதில் இரண்டு வகை உள்ளன. ஒன்று வாழ்வின் தேவையைக் கருதி சூட்சமமாகத் தன்னையும் அடிமையாக்கி தன்னைச் சார்ந்தவர்களையும் அடிமையாக்கியிருப்பவர்கள். இது பெரும்பாலும் நவீன காலக்கட்டத்தில் உருவான மனநிலை. சமூகத்திடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தி தன்னை மட்டும் வளர்த்துக்கொள்ள அதிகாரத்திடம் சரண்டைந்து கிடப்பவர்களை இப்படிக்குறிப்பிடலாம். இவர்களில் பெரும்பாண்மையானவர்கள் படித்தவர்களாக இருப்பார்கள்.

அடுத்ததாக விழிப்பற்ற நிலையில் ஆண்டான் மீதான விசுவாசத்தின் பேரில் அடிமையாகி வாழ்வது. இது பெரும்பாலும் காலனிய காலக்கட்டத்திற்குப் பிறகு சிறு முதலாளிகள் மூலம் உருவான சூழல் ஆகும். வாழவைக்கும் முதலாளியை ஒரு தெய்வமாக கருதுவதோடு ஒரு வழிப்பாட்டு மனநிலைக்கும் அவர்கள் ஆளாகிறார்கள். கண்டெடுத்தான் காட்டில் அவர்கள் அறுக்கும் செங்கல்களை விலைக்கு வாங்கி அதை விற்பனை செய்யும் வியாபாரியையே அவர்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். இது மிகவும் இயல்பாக இந்திய கிராமங்களிலும் பல படங்களிலும் நாம் கண்டிருக்கிறோம். படத்தில் இந்த விசயம் கவரவில்லையென்றாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இது போன்ற அடிமைத்தனங்கள் மீதுள்ள நியாயங்களைப் பொது கவனத்திற்குக் கொண்டு வருவது முக்கியமானதே.

படம் 1966 ஆம் காலக்கட்டத்திற்குரிய மிகப் பெரிய உழைப்பை வேண்டி நிற்கிறது. ஆனால் இயக்குனர் மிகவும் சாமர்த்தியமாக வானொலி, வானொலியில் வரும் அக்காலக்கட்டத்திய செய்திகள், அலங்காரங்கள் என மிகவும் சொற்பமாகத் தன் வேலையை முடித்திருக்கிறார். சுப்ரமண்யம்புறம் படத்தைப் போல ஒரு கிராமத்தை பல தடயங்களின் வழி அடையாளம் காட்டாமல் குடிசைகள் குடிசையில் வாழும் மக்கள் என ஒரு பொதுவெளிசூழலில் சுருக்கமாக முடித்துக்கொண்டார். கண்டெடுத்தான் காட்டின் 1966களில் இதைத் தவிர வேறொன்றுமில்லையா என ஏதோவொரு போதாமைகள் தென்படுகின்றன. நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்கள், பொதுப்பரப்பில் குடிசைகளை அமைத்துக்கொண்டு வாழ்வது போன்ற ஒரு அந்நியத்தைக் கண்டடைய முடிகிறது.

மேலும் படம் ஒரு கட்டத்தில் முற்போக்கு படம் போன்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதாக உணர்கிறேன். பெரியாரும் காந்தியும் சொன்ன கருத்துகளை மையமாக வைத்து படத்தை இயக்கியிருப்பது போல ஒரு அனுபவத்தை அடைய முடிகிறது. கிராமங்களுக்கும் நகரங்களுக்குமுள்ள இடைவெளிகள் தகர்ப்பட வேண்டும் என காந்தி பிரச்சாரம் செய்தார். ‘கல்வி விழிப்புணர்வே கிராம மக்களை மேம்படுத்தும் மேலும் குழந்தை தொழிலாளர்கள் குறைவதன் மூலமே நம்மால் உண்மையான மேன்மையை உணர முடியும்’ என பெரியார் பிரச்சாரம் செய்தார். இந்தக் கருத்தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டு உருவான ஒரு பிரச்சார முற்போக்கு படைப்பாக இதைக் கருத வாய்ப்புண்டு. இந்த மாதிரி சினிமாவைச் “சமர்ப்பணம் வகை’ சினிமாவாகக் குறிப்பிடலாம். வாகை சூட வா படம் உலகம் முழுவதும் உள்ள குழந்தை தொழிலாளர்களுக்காகச் சமர்ப்பணம் செய்யப்படுவதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சினிமா என்பது ஒரு பார்வையாளனுக்குக் கொடுக்க வேண்டிய அனுபவம் தான் என்ன? அதை அவனே கண்டடைவதுதானே கலை மீதான அவனிக்கிருக்கும் உரிமையும் வெளியும். சமர்ப்பண வகை சினிமாக்களைவிட அதை இறுதியில் அறிவிப்பு செய்வது ஏதோ ஒரு லேபளை மெனக்கெட்டு ஒட்டுவது போல தோன்றுகிறது.

அப்படியென்றால் எல்லாம் படங்களும் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தையோ பற்றித்தான் பேசுகிறது. பேசும் விதத்தில் சில படங்கள் மேலோட்டமாகவும் சில படங்கள் தட்டையாகவும் ஏதோ சில படங்கள் மிகவும் ஆழமாகவும் பேசுகிறது. அதை அறிவிப்பு செய்வதுதான் ஏதோ ஒரு வழிந்து புகுத்தும் பாவனை போல தெரிகிறது. ‘வாகை சூட வா’ படம் கல்வியின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் சினிமா என எனக்கு கிடைக்கவிருந்த அனுபவத்தை, இல்லை இது குழந்தை தொழிலாளர்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட படம் அதனால் இது குழந்தை தொழிலாளர்களின் வாழ்வை மட்டுமே பேசும் படம் என எனக்கு பதிலாகப் படம் தன்னைத் தீர்மானித்துக்கொள்கிறது. இது படைப்புக்கும் நுகர்வாளனுக்கும் மத்தியில் செயற்கையாக ஏற்படுத்தும் இடைவெளி.

எடுத்துக்காட்டாக ‘எந்திரன்’ படம் ஒரு கமிர்சியல் படமாக இருந்தாலும், அந்தப் படத்தின் இறுதி கட்டத்தில் இப்படி அறிவித்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்:

1.   எந்திரன் = தன் வாழ்நாளை அர்ப்பணித்து அறிவியல் துறையில் வேலை செய்யும் தொழில்நுட்ப உழைப்பாளிகளுக்கு இப்படத்தைச் சமர்ப்பிக்கின்றோம்.
2.   சுரா – இன்னமும் வறுமையிலிருந்து மீட்க முடியாத மீனவ சமூகத்தின் எழுச்சிக்காக இப்படத்தைச் சமர்ப்பிக்கின்றோம். ( லேபள்கள் ஏன் அநாவசியமானது என இப்பொழுது புரியும் என நினைக்கிறேன்).

ஒரு முக்கியமான படமாகக் கருதப்படும் படைப்புக்கு இது போன்ற நேரடியான அறிவிப்புகள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன். இப்படம் ஒரு முற்போக்கு கட்சியின் பிரச்சார படமாக இருந்தால் இது போன்ற அறிவிப்புகளைப் போட்டுக்கொள்வதில் நியாயம் இருக்கும். சற்குணன் ஒரு மிக முக்கியமான படத்தைக் கொடுத்துவிட்டு அதை ஒரு பிரச்சார பிரதியாக மாற்றுவதன் மூலம் அதிலுள்ள கலை வேலைப்பாடுகளின் முக்கியத்துவங்களை இழப்பது போல உணர்கிறேன்.

மேலும் எப்படியொரு பின்தங்கிய கிராமமாக இருந்தாலும் பின்னடைந்த சூழலாக இருந்தாலும் கதைநாயகி மட்டும் ஒரு மறைக்கப்பட்ட அழகுடன் படம் நெடுக அப்பாவியாகவும், காதல் மிகுதியுடனும், மனதைக் கவரும் பாடல்களுடன் வந்துவிட்டுப் போகிறார். அதுவும் கண்டெடுத்தான் காடு ஒரு வரட்சியான நிலப்பரப்பு. அதில் வரும் கதைநாயகி வியக்க வைக்கிறார். சட்டென படத்திற்குள்ளிருந்து நம்மை வெளியே அனுப்பி சிந்திக்க வைக்கிறார். மிகுதியான ஒரு வரட்சியையும் சோகத்தையும் காட்டும் படத்தில் கானல் நீர் போல இது போன்ற சில விசயங்கள் தெளிக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதுவும் தண்ணீர்ல் மிதக்கும் நிலாவின் பிம்பத்தை அள்ளி வேறொரு பக்கம் வீசும் காட்சியில் இருக்கும் ஆக்கத்திறனைப் பார்த்து நான் அதிகமாகவே வியந்துவிட்டேன். “அந்த நிலாவைத்தானே கையிலே பிடிச்சேன் என் ராசாத்திகாக” எனும் 80ஆம் ஆண்டுகளில் பாடலைப் போல ஒரு ரொமண்டிக்சம் மட்டுமே நிரம்பி வழிகிறது.

கிராமத்தை எரித்துவிடுவதாகச் சொல்லிவிட்டுப் போகும் பொன்வண்ணன் அதன் பிறகு கடைசிவரை வராதது மட்டும் ஆதரவு அளிக்கிறது. வில்லன் கடைசி கட்டத்தில் வந்துதான் ஆக வேண்டும் என்கிற ஒரு சினிமாத்தன கட்டாயத்தை இப்படத்தில் தகர்த்திருப்பது பொது பார்வையாளனுக்கு ஓர் அசூசையாக இருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே.

பாராட்டத்தக்க விசயம்: ஒளிப்பதிவு. இவை மிகவும் கச்சிதமாக ஆங்காங்கே உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு நல்ல சினிமாவுக்கு இது போன்ற கவனமான ஒளிப்பதிவே மிக முக்கியம். ஒரு தேர்ந்த கலை உணர்வை இப்படத்தின் ஒளிப்பாதிவாளர் ஓம் பிரகாஷ் அவர்களிடம் காண முடிகிறது. ஒரு பாடல் காட்சியில் கதைநாயகனும் கதைநாயகியும் இருண்ட குளத்தில் நிலா வெளிச்சத்தில் ஆடுவதைத் தவிர மற்றதையெல்லாம் முக்கியமானதாகக் கருதலாம்.

கலை வேலைபாடுகளும் கவனிக்கத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. 1966ஆம் ஆண்டிற்குரிய முழுமையான ஒரு சூழலைக் கொண்டு வரமுடியாவிட்டாலும் ஒரு வரட்சி மிகுந்த கிராமத்தையும் எதார்த்தமான சில சூழல்களையும் படத்தில் கொண்டு வர முடிந்ததே பாராட்டத்தக்கதாகும். ஆட்டுக் கொட்டகை, செங்கல் அறுப்பு வேலைகள், அவர்களின் முகத்தில் வடியும் சோர்வும் களைப்பும், கிராமத்திற்கு வெளியே பரந்து விரிந்து கிடக்கும் வெறுமையும் வெயிலும் என பல விசயங்கள் அருமையாக வந்துள்ளன.

அடுத்ததாக இசை. பாடல்கள் யாவும் இரசிக்கத்தக்கவை. குறிப்பாக குருவிக்காரன் இறந்த பிறகு ஒலிக்கும் ஒப்பாரி பாடலும் அதன் பின்னணி இசையும் கிராம மக்களின் தொன்மையைக் காட்டியிருக்கிறது. இதற்குக் கூடுதலான உழைப்பே தேவைப்பட்டிருக்கும். அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் நம்பிக்கைக்குரியவராகத் தெரிகிறார். ஆனால் படத்தின் ஒட்டு மொத்த பின்னணி இசையும் சிறப்பாக வெளிப்படவில்லை என்றே சொல்ல முடியும். ஆங்காங்கா இளையராஜா செய்யும் தவறுகளைப் போலவே மேற்கத்திய இசை மாதிரியின் இரைச்சல்கள் வந்து போகின்றன. காட்சிக்கும் காட்சியின் மூலம் பிரதிபலிக்கும் உணர்வுக்கும் ஒட்டாத பின்னணி இசைகள் ஒரு சாபக்கேடாக தமிழ் சினிமா முழுக்க ஆங்காங்கே ஒலித்துக்கொண்டுத்தான் இருக்கின்றன.

செங்கல் சூரையில் வேலை செய்யும் சிறுவர்கள் மிக முக்கியமானவர்கள். அந்தக் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் போல மிகவும் எதார்த்தமாகக் காட்சியளிக்கிறார்கள். மண்ணைச் சாப்பிடுகிறார்கள், செம்மண் கல்லை வாயில் அள்ளி போட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் பேசும் கிராமத்து மொழியும் சரியாகப் பொருந்தி வந்துள்ளது. திரைக்கதையின் மீதான கவனத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே இயக்குனர் படத்தில் நடித்திருக்கும் சிறுவர்களின் பாத்திர படைப்பில் கவனம் செலுத்தியிருப்பதை உணர முடிகிறது.

எப்படியிருப்பினும் இது ஒரு நல்ல முயற்சிகளை உள்ளடக்கியிருக்கும் படமாகும். சில வேளைகளில் ஒரு படத்தை மதிப்பீடுவதில் நாம் எல்லோரும் வித்தியாசப்பட்டே இருக்கும். ஏதாவது ஓர் இடத்தில் என் விமர்சனத்துடன் முரண்படுபவர்களை நான் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறேன். அவை சில சமயங்களில் என் சினிமா பார்வையில் மாற்றத்தை நிகழ்த்துகின்றன. நன்றி.

கே.பாலமுருகன்

1 comment:

Appaji said...

நேற்று தான் இந்த படத்தை தியேட்டரில் பார்த்தேன்...எனக்கு புரிந்தவை...
ஏழ்மையின் வலி....பசியின் கொடுமை...உழைப்பின் ஒளி...வித்தியாசமான கிராமத்தின் யதார்த்தம்...
அப்படி ஒரு கிராமத்தில் பிறந்து இருக்க கூடாதா...என்ற ஏக்கம் ஏற்பட்டது.....
தங்களது விமர்சன பார்வையும்....புதிய கோணத்தில் இருந்தது..பாலமுருகன்...