Friday, December 30, 2011

இந்தியப் பயணம்-4 அம்மாயும் கல்லநேந்தல் கிராமமும்


தஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு நானும் விஷ்ணுபுரம் சரவணனும் வந்து சேர்ந்தோம். பேராசிரியர் வெற்றிச்செல்வனிடமிருந்து விடைப்பெற்று புதுக்கோட்டைக்குப் பயணப்பட்டேன். தங்சாவூரிலிருந்து மேலும் ஒரு 3 மணி நேரம் பயணம். தஞ்சை பெரிய கோவிலைத் தரிசித்த பிரமிப்புகள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றின. புதுகோட்டை பேருந்து நிலையம் பரப்பரப்பாகவே காணப்பட்டது. பேருந்திலிருந்து இறங்கியதும் நீண்ட சாக்கடை. வரிசையாக ஐவர் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். சாக்கடை கருமையாகி ஓடிக்கொண்டிருந்தது.

அங்கிருந்து அறந்தாங்கி ஊருக்குப் பேருந்தைப் பிடிக்க வேண்டும். உறவுக்காரர் கார்த்திக்கை மீண்டும் அழைத்து ஊர் பெயரை உறுதிப்படுத்திக்கொண்டேன். அம்மா பிறந்த கிராமத்துக்குச் செல்வதாகத் திட்டம். அம்மாவுக்கு இன்னமும் சிவப்பு பாஸ்ப்போர்ட். மாற்றலுக்குப் பலமுறை முயற்சி செய்தும் தடைப்பட்டுக்கொண்டேயிருந்ததால் அவரால் இந்தியா வரமுடியவில்லை. ஆகையால் என்னைக் கட்டாயம் அவர் பிறந்த கிராமத்திற்குச் சென்று சொந்தக்காரர்களையும் அம்மாயியையும் பார்த்து வரச்சொன்னார். கார்த்திக் அம்மாயின் பேரன். அவர் கோலாலம்பூருக்கு வேலைக்கு வந்தபோதுதான் எங்களையெல்லாம் கண்டுப்பிடித்து உறவை ஏற்படுத்திக்கொண்டார். அம்மா பாட்டியுடன் 7 வயதில் அக்கிராமத்தைவிட்டு மலாயா வந்தவர். ஆகையால் கிராமத்தில் எல்லோரும் அம்மாவை மட்டும்தான் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.

அறந்தாங்கி பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டால் கார்த்திக் நேரில் வந்து அழைத்துப் போவதாகச் சொன்னார். அறந்தாங்கி போனால் கிராமம் அருகில்தான் இருக்கும் என்ற கற்பனையுடன் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அருகில் ஒரு நடுத்தரவயதையுடைய நபர் அமர்ந்திருந்தார். வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டிருந்தார். அவரே முதலில் பேசினார். அறந்தாங்கியில் யார் இருக்கிறார் எனத் தொடங்கிய பேச்சு ஜெயலலிதா அரசியல் மாற்றங்கள்வரை நீடித்தது. ஏதோ ஒருவகையில் என் ஒரு மணி நேரப் பேருந்து பயணத்தின் களைப்பைச் சரிக்கட்ட முடிந்தது. தொடர்ந்து 3 நாட்களாக அரசு பேருந்தில்தான் பயணம். ஆகையால் என் உடலின் சோர்வு குறித்த பிரக்ஞையை மறக்கவே முயற்சி செய்தேன். பயணம் அடுத்து எனக்கு வைத்திருக்கும் அதிசயங்கள் அனுபவங்கள் மீதுள்ள ஆர்வத்தைக் கூட்டினேன்.

அறந்தாங்கி சிறுநகரம். பேருந்தை விட்டு இறங்கியதும் கார்த்திக் சிரித்த முகத்துடன் அருகில் வந்தார். வேட்டிக் கட்டியிருந்தார். அவருக்கும் எனக்கும் ஒரே வயது. மீண்டும் இங்கிருந்து பேருந்து ஏறி ஆவுடையார் கோவில் போகவேண்டும் எனச் சொல்லிவிட்டு அடுத்தப் பேருந்தில் ஏற்றினார். அநேகமாக முதுகுக்கும் பிட்டத்துக்கும் வாயிருந்திருந்தால் கதறியிருக்கும். ஆவுடையார் கோவில் என்பதை அப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். கல்லநேர்ந்தல் அம்மா பிறந்த கிராமம். ஆனால் இப்பொழுது பலர் அங்கிருந்து ஆவுடையார் கோவில் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டார்களாம். ஆக, பெரும்பாலானவர்கள் ஆவுடையார் கோவிலில் வசிக்கிறார்கள். அவர்களின் வயல்வரப்பெல்லாம் கிராமத்தில் வைத்துப் பராமரிக்கப்படுவதாகக் கார்த்திக் கூறினார்.

ஆவுடையார் கோவிலுக்கு வந்ததும் கார்த்திக் வீட்டுக்குப் போனேன். அங்கு கார்த்திக் குடும்பத்தினர் அனைவரையும் பார்த்துப் பேச மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. மிகுந்த அன்புடன் கவனித்தனர். கார்த்திக் அம்மா எனக்கு சித்தி முறை வரும். மேலும் அம்மாயின் மகன்கள் ஒரு சிலர் வந்து என்னைப் பார்த்துவிட்டுச் சென்றனர். ஓரளவிற்குக் கிராமத்தைப் பற்றி மேலும் பல விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆவுடையார் கோவில் ஊரின் மிகச்சிறப்பான விசயம் அங்குள்ள ஆவுடையார் கோவில். அக்கோவிலின் பெயர்தான் அந்த ஊருக்கும். மறுநாள் காலையில் ஆவுடையார் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கார்த்திக் சொன்னார்.

7 மணி வரை எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மலேசிய வாழ்க்கைமுறை, குடும்பம் என அனைத்தையும் கேட்டு விசாரித்தனர். ஆவுடையார் கோவில் இரவில் குளிர்ச்சியாக இருந்தது. 7.30மணிபோல கிளம்பி கல்லநேந்தலுக்குச் சென்றோம். கார்த்திக்கின் மாமா அவருடைய பெரிய மோட்டாரில் என்னை ஏற்றிக்கொண்டார். 15 நிமிடத்தில் உள்ளே கிராமத்தைச் சென்றடைந்தோம். அம்மாயி வீடு கிராமத்தின் முடுக்கில் ஓரமாகத் தனித்திருந்தது. உள்ளே நுழைந்ததும் மலேசியா தோட்டப்புற வீடுகளின் ஒரு அடர்ந்த சூழலைப் போல உணர முடிந்தது. தூரத்தில் மண்ணெண்ணை விளக்கின் ஒளி சுவரில் நெளிந்து கொண்டிருந்தது. அது மட்டுமே வீட்டுக்கான வெளிச்சம். அம்மாயி என்னைப் பார்த்ததும், ‘சுசிலா மவனா? வாயா அம்மா எப்படி இருக்கு? சின்ன வயசுலே அது இங்கேந்து போவும்போது அழுந்து அழுந்து பிள்ளே பாவம்..வாடிருச்சி” என அவரிடம் அம்மாவைப் பற்றிய ஒரு நினைவு தொகுப்பு திடத்துடன் சேமிக்கப்பட்டிருந்தது. கதை கதையாக தாத்தா பற்றி நிறையவே சொல்லிக்கொண்டிருந்தார். அம்மா வழி தாத்தாவின் ஒரே தங்கைத்தான் இந்த் அம்மாயி.

அம்மா பிறந்த வீடு அது. ரொம்பவும் சிறியது. முன்பு ஓலையில் கட்டப்பட்டிருந்தது. இப்பொழுது அரைச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஆங்காங்கே கட்டி முடிக்கப்படாத பகுதி வானத்தையும் வெளியையும் வெறித்துக்கொண்டிருந்தன. மங்களான விளக்கு வெளிச்சத்தில் அம்மாயின் கையைப் பிடித்து 500 ரூபாயைக் கொடுத்தேன். “ஊருக்குப் போனனா அம்மாவெ ஒரு தடவ கூட்டியாந்து காட்டிருப்பா.. இன்னும் எவ்ள நாளு இருப்பேன்னு தெரில.. இந்த அம்மாயி சாவறத்துக்குள்ளாறே கூட்டியாந்துரு” எனக் கூறிவிட்டு திர்நீரையும் குங்குமத்தையும் ஒரு பொட்டலத்தில் கட்டிக்கொடுத்தார். இருள் கிராமம் முழுக்கப் பரவியிருந்தது. வண்ணநிலவனின் எஸ்தர் கதையில் ஆட்கள் காலியாகிவிட்ட கிராமத்தின் இருளை மிகவும் கூர்மையாகப் பதிவு செய்திருப்பார். அது ஒரு பயத்தைப் பற்றியது. இருள் சூன்யத்தை நினைவுப்படுத்தியே தீரும்.

“பாலா மணியாச்சி.. போலாம.. காலையிலெ வரலாம்”எனக் கூறிய கார்த்திக்கைப் பார்த்தேன். கல்லநேந்தல் கிராமம் இருண்டு போயிருந்தது.

-    தொடரும்-

கே.பாலமுருகன்

1 comment:

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.