Tuesday, February 7, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 2 - ஆற்றல் மிகு கரத்தில் – கே. டானியல்அறிமுகம்: யாழ்ப்பாணத்தில் 1927-இல் பிறந்தவர் டானியல். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் இருந்தவர். தஞ்சையில் மார்ச்சு 1986-இல் மரணமடைந்தார். ஈழத்து பஞ்சமர் மக்களுக்காகத் தோழர் டானியல் தன் இலக்கிய இயக்கப் பணிகளை அர்ப்பணித்தவர். தமிழ் இலக்கியத் துறைக்கு நாவல், குறுநாவல், சிறுகதை என பல வடிவங்களில் தம் பங்களிப்பைச் செய்துள்ளார்.


கே. டானியல் எனும் கதைச்சொல்லி

கே. டானியல் என்ற பெயரை 'பஞ்சமர்' நாவல் பற்றிய அதிகமான பேச்சுக்களின் வழியே அறிந்திருக்கிறேன். 'பஞ்சமர்' நாவலை மையப்படுத்தி நாவலின் முக்கியத்துவம் குறித்து நிறைய விமர்சகர் சொல்லவும் கேட்டதுண்டு. தமிழ் இலக்கியச் சூழலில் ஒடுக்கப்பட்ட போர் சமூகத்தின் மனசாட்சியை இலக்கியமாக்கியதில் கே.டானியலின் பங்கு மிக முக்கியமானதாகும். ஈழ இலக்கியம் என்ற உரையாடலை கே.டானியலை நீக்கிவிட்டு நம்மால் தொடர முடியாத அளவிற்கு ஈழத்துத் தலித் இலக்கியத்திற்குப் பெரிதும் பங்காற்றிய கதையாசிரியர். ஈழ தலித் இலக்கியத்தின் முன்னோடியாகவே கே.டானியல் கருதப்படுகிறார்.

அ.மார்க்ஸ் முன்னுரையுடன் தொக்குக்கப்பட்ட ஈழத்துத் தலித் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து வாசிக்க நேர்ந்த 'ஆற்றல் மிகு கரத்தில்' எனும் சிறுகதையின் மறுபார்வை இது. சமீபத்தில் ரியாஸ் குறானாவை வல்லினத்துக்காக நேர்காணல் செய்தபோது, தமிழில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நல்ல விமர்சகர்கள் இருந்தும் ஏன் கே.டானியலின் 'பஞ்சமர்' நாவல் தொடர்ந்து கவனிக்கப்படவில்லை என்ற கேள்வியை முன்வைத்திருந்தோம். ஒரு நாவல் ஒரு சமூகத்தில் எப்படியெல்லாம் வாசிக்கப்பட்டிருக்கக்கூடும்? எந்தக் காலக்கட்டத்தில் ஒரு பிரதியின் மீது நிகழ்த்தப்பட்ட வாசிப்பு அப்பிரதியின் முக்கியத்துவங்களை மீட்டுணர்ந்திருக்கும் என விரிவாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ரியாஸ் குறிப்பிட்டிருப்பதைப் போல அனைத்துப் பிரதிகளையும் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஒரு வாசகநிலை 'பஞ்சமர்' நாவல் வந்த காலக்கட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளுக்குப் பிறகுத்தான் தலித் இலக்கியம் என்ற ஒரு பிரக்ஞை தமிழ் இலக்கிய சூழலுக்குள் வலுப்பெறத் துவங்குகிறது. இதை அ.மார்க்ஸ் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, தலித் இலக்கியமே தாமதமாகத்தான் தலித் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டின் மூலம் பெற்ற உந்துததால் தமிழுக்குள் வருகிறது. அதனைச் சார்ந்த விமர்சனமும் கவனமும் பரவலாகப் போய்ச்சேர மேலும் காலம் பிடித்திருக்கும். இந்தக் கால வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், ஏன் ஈழ இலக்கியம் பஞ்சமர் நாவல் வந்த காலக்கட்டத்தில்கூட சரியான கவனம் பெறவில்லை என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

‘ஆற்றல் மிகு கரத்தில்’ – கதை பின்புலம்

இக்கதை வேலன் என்ற இளைஞனின் அடிமை வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. வேலன் கமக்காரன் எனும் கிராம முதலாளிக்கு அடிமையாக ஒப்படைக்கப்படுகிறான். கமக்காரனும் கமகாரச்சியும் அவனை வீட்டில் ஒரு வேலைக்காரனாக வளர்க்கிறார்கள். அடித்தட்டு நிலையில் சோற்றுக்காகப் போராட வேண்டிய நிலை இந்தப் சாதிய பொருளாதார சமூகத்தால் தலித் மக்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். அல்லது சாதிய ரீதியில் அடிமையாக முதலாளிக்குக் கீழ் ஒடுக்கப்பட்டிருப்பார்கள். இதுதான் தலித் அனுபவிக்கக்கூடிய வாழ்க்கை. அவர்களுக்கு அளிக்கப்படும் இடம். இந்த சமூக அரசியல் இன்று பலதரப்பட்ட கருத்தியல் தளங்களில் வைத்து விவாதிக்கப்பட்டாலும் கே.டானியல் இக்கதையை எழுதியக் காலக்கட்டத்தில் தலித் சமூகத்தின் அவலங்களைப் பதிவு செய்ததில் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

வேலன் என்ற தலித் சிறுவயதில் தன் அம்மாவால் அங்கு வந்து ஒப்படைக்கப்படுகிறான். கதையின் துவக்கத்தில் அம்மாவை டானியல் சித்தரித்திருப்பது வித்தியாசமான பகுதியாகும். ‘அறிவு என்ற ஒன்று தெரிந்த பருவத்தில் கந்தப்புக் கமக்காரன் வீட்டில், ‘தாய்’ என்ற ஒரு உருவம் அவனை இட்டுச் சென்றதாக ஞாபகம்.’ மிகச் சுருக்கமாகத் தலித் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையால் தாய், குடும்பம் போன்ற மேல்தட்டு புனித வியாக்கியானங்கள் பொருட்படுத்தாத ஒரு சூழலை அடைந்திருக்கின்றன. தாய் என்பவளை வழிப்படும் ஒரு பிம்பமாகக் கருதப்படும் ஒரு காலக்கட்டத்தில் அவளை ஒரு உருவமாக மட்டும் பாவித்திருப்பது, தலித் வாழ்க்கை எப்படிச் சமக்காலத்திய புனிதங்களையும் கொண்டாட்டங்களையும் தவிர்த்திருக்கிறது எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

கமக்காரனும் கமக்காரச்சியும் அவனைத் தொடர்ந்து கொடுமைப்படுத்துவது கதையில் சொல்லப்படுகிறது. கமக்காரன் பிடரியில் அடிப்பான் என்றும் கமக்காரச்சி முதுகில் குத்துவாள் என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறது. உடல் ரீதியில் கொடுமைப்படுத்தப்படுவதே அடிமையின் மீதான அதிகாரமாக முதலாளிய சமூகம் நிறுவியிருக்கிறது. சுடுத்தண்ணீர் ஊற்றி வேலைக்காரிகள் கொடுமைப்படுத்தப்படுவது மலேசியா போன்ற நாட்டிலும் நடக்கின்றது. இஸ்த்திரி பெட்டியைக் கொண்டு உடலில் சூடு வைப்பது, கட்டையால் அடித்துத் துன்புறுத்துவது, சூடான எண்ணையை மேலே ஊற்றிக் காயப்படுத்துவது, பழைய உணவைக் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது என வேலைக்காரர்கள் மீது முதலாளிகள் நடத்தும் கொடுமைகள் எல்லாம் நாடுகளிலும் வன்மையானவையாகும்.

வேலனை கமக்காரனின் பிள்ளைகள், முகத்தில் எச்சில் துப்பி அவமானப்படுத்துகிறார்கள். அந்த வீட்டின் குழந்தை குட்டிகள் என அனைவரும் அவனை ஆளுக்கொருப் பக்கம் கொடுமைப்படுத்துகிறார்கள். அதிகாரங்களின் பலத்திற்கேற்ப அவன் அவதிக்குள்ளாகுகின்றான். பிறகு கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பித்து ஓடப்பார்க்கிறான். ஆனால் ஊர் மக்களாலேயே மீண்டும் பிடித்து கமக்காரனிடம் ஒப்படைக்கப்படுகிறான். இதுதான் அடிமை வாழ்க்கை என்பது. அடிமைகளால் தப்பிக்கவே முடியாது. குறிப்பாக வேலைனைப் போன்ற தலித்துகள் இறுதிவரை ஒரு வேலைக்காரனாகவும் தீண்டத்தகாதவனாகவும் வாழ்ந்து சாக வேண்டும் எனும் ஒரு கொடூரத்தைக் கதையாசிரியர் காட்டுகிறார்.

கமக்காரன் வீட்டில் இல்லாதபோது கமக்காரியின் கள்ள உறவைப் பற்றி வேலன் அறிந்துவிடுகிறான். அவனை அங்கிருந்து கமக்காரி தப்பிக்க உதவி செய்கிறாள். கமக்காரனின் வேட்டி சட்டைகள் சிலவற்றையும் 10 ரூபாயையும் கொடுத்தனுப்புகிறாள். அங்கிருந்து தப்பித்து வேலன் சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்கிறான். கதையின் பின்பகுதியில் கிராமம் எப்படிச் சாதிய ரீதியில் தளம் பிரித்துப் பாதுகாக்கப்படுகிறது என்பதை விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. வேலன் ஒரு பள்ளன் என்பதைக் கதையிலேயே குறிப்பிடுவதன் மூலம் அக்கிராமத்தில் பள்ளர்கள் மிகவும் மோசமாக அடக்குமுறைகளுக்கு ஆளாகி அடிப்பணிந்து வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

வேட்டியைக் கட்டிக்கொண்டு அழையும் வேலைனை மேல்சாதிக்காரர்கள் அசூசையுடன் பார்க்கிறார்கள். அவனுடைய தோற்றத்தைக் கண்டு வெறுக்கிறார்கள். தலித் மக்களின் மீது எந்த நேரத்திலும் எப்படியும் அதிகாரத்தையும் வன்முறையையும் அவிழ்த்துவிடலாம் என்பதை, அந்த மேல்சாதிக்காரர்கள் வேலனை அடித்து அவனுடைய வேட்டியை அவிழ்த்து நிர்வாணமாக்குவதன் மூலம் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு சிறு நடவடிக்கை மட்டுமே. மேல்தட்டு சாதிய முதலாளிகளின் அதிகாரத்தின் வேர்கள் அடர்த்தியாகச் சமூகத்தைப் பின்னியிருக்கின்றன.

அதன் பிறகு வேலனைப் பலவகைகளில் எல்லோரும் சிறுமைப்படுத்துகிறார்கள். அடித்துத் துன்புறுத்துகிறார்கள். தலித்துகளின் இருப்பை எப்படியெல்லாம் துயரத்துக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதை வேலன் எனும் கதைப்பாத்திரத்தின் வாயிலாக டானியல் முன்வைக்கிறார். சமூகத்திற்குள் ஒரு தலித்தின் இருப்பின் முக்கியத்துவம் எக்காலக்கட்டத்திலும் கவனப்படுத்தப்படவில்லை என்பதே இந்தத் தலைமுறையின் சாபம்.

ஆதவன் தீட்சண்யா நேர்காணலில் குறிப்பிட்டிருப்பதைப் போல, இந்து மதம் என்பதே சாதியக் கட்டமைப்பால் உருவானது. சாதியின் மூலன் ஒரு குழுசார் மக்களை ஒடுக்கி ஆள்வதற்கு எல்லாம் வசதிகளையும் அளிக்கக்கூடியவையாக இந்து மதத்தைக் குறிப்பிடலாம்.

தன் மீதான கொடுமைகளைப் பொறுக்கமுடியாத வேலன் தன்னுடைய அனைத்துச் சொந்தகளும் காலமானதற்குப் பிறகு சுடுக்காட்டுப் பக்கமாக இருக்கும் ஆலடி வயிரவன் கோவிலுக்கு வந்து சேர்கிறான். ஒரு தலித்தின் கடைசி இயலாமையாக இதைக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வயிரவன் கோவிலில் உருண்டு புரண்டு கண்ணீர்விட்டு அழுகிறான் வேலன். இந்தச் சமூகத்திலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதன் அவலத்தைச் சொல்லியும், தன்னை மேல்தட்டு வர்க்கம் துன்புறுத்தியதன் வலியை வெளிப்படுத்தியும் புலம்புகிறான். அது ஒரு ஈன பேரோசையாகக் கோவில் முழுக்க ஒலிக்கிறது.

வயிரவன் சாமி கோவில் சுடுக்காட்டுப் பக்கமாக இருப்பதாகச் சொல்லும் இடத்திலேயே டானியல் சிறுதெய்வமும் ஒருவகையில் ஒடுக்கப்பட்ட நிலையில்தான் அங்கு அமர்த்தப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார்.

வேலன் இறுதியில் அவன் மீதான எல்லாம்விதமான புறக்கணிப்புகளையும் எதிர்க்கொள்ள அசாத்தியமான சக்தியை வயிரவன் கோவிலில் வைத்துப் பெறுகிறான். இது ஒரு வகையான எதிர்ப்புணர்வின் மூலம் உருவாகும் உந்துதல். கோவிலை விட்டு வெளியேறுபவன் ஆக்ரோஷமாகக் காணப்படுகிறான். தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு திமிருடன் நடந்து வருகிறான். அவனை துன்புறுத்த வருபவர்களை திருப்பியடித்து ஒரு சண்டியராக மாறுகிறான். வன்முறைக்கு வன்முறையே சரியானது என உணர்ந்து அதன் வழியே தன்னுடைய அதிகாரத்தை எதிர்க்கும் அதிகாரத்தைக் கண்டடைகிறான்.

சாதியம்: உடலின் மீதான பாசிசம்

பிற உடலை ஒடுக்குவது அடக்குவது என்பது போர் காலத்திய ஒரு பாரம்பரிய கொடுமையாகவே அடையாளப்படுத்த முடிகிறது. போரில் தோற்றவர்களை உடல் ரீதியில் இம்சைப்படுத்தி எதிரியின் ஆளுமையைக் காட்டுவது ஒரு மரபாகும். இன்று இலங்கையில் போரில் தோல்வியுற்ற ஒரு சமூகமாக இராணுவத்திடம் சிக்கிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் உடல் ரீதியில் அடக்கப்படுகிறார்கள். அவர்களை வெளியிலிருந்து யாரும் சந்திக்க முடியாது. அவர்களின் உடல் அந்த எல்லையைக் கடந்து வெளியேற முடியாது. வன்கொடுமை, பசி, கொலைகள் என அவர்களின் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், இராணுவத்தின் உடல் வதை செயலாகும். இன்று போர் சமூகங்களாக, போரினால் பாதிக்கப்பட்டவர்களாக, அதே இராணுவ வதைகளை மீளுருவாக்கம் செய்து பிரயோகிக்கும் ஒரு சூழலுக்கு நம் சமூகங்கள் ஆளாகியுள்ளன.

வரலாற்றின் வழி இராணுவத்திடமிருந்து பெற்றுக்கொண்டு பாசிச உணர்வை இன்றைய சமூகங்கள் பிரதியெடுத்து அமல்படுத்துகின்றன. சாதியத்தின் அடிப்படையில் குடியியல் பெருமையை அடையும் ஓர் குழு, அந்தச் சமூகத்தில் இராணுவ நடவடிக்கைகளைத் தலித் மக்கள் மீது பாவிக்கின்றன. அவர்களின் உடலை வதைக்கின்றன. அவர்களின் உடலைத் தன் முதலாளிய தன்மைகளுக்குப் பலியாக்கின்றன. தனக்குக் கீழான சாதியைச் சேர்ந்த மக்களின் உடலை இம்சைப்படுத்துவதன் மூலமும் அந்த உடலைத் தன் ஆளுமைக்கு உட்பட்டவையாக மாற்றியும் அல்லது அவ்வுடல்களை ஆட்சி செய்யும் அதிகாரமாக உருவெடுத்தும் ஒரு சாதி சார்ந்த முதலாளிய அமைப்பு தன்னைப் பாசிச உறுப்பினராக மாற்றிக்கொள்கிறது.

தலித்துகளை ஒடுக்கியும் அவர்களை இம்சித்தும் தன்னுடைய மேட்டுக்குடி பெருமைகளை நிருபித்துக்காட்டிய அனைத்தையுமே எளிய மக்களின் உடல்களின் மீதான அதிகாரமாகவே பார்க்கிறேன். இதுவொரு இராணுவ மரபார்ந்த செயல்களாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அடிமையின் அரசியல்

அடிமை என்றதும் எனக்கு இரண்டு விசயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று அடிமை தான் அடிமையாக இருப்பதில் கடமைப்பட்டிருப்பதாகக் கருதி பணியாற்றுவதும், விசுவாசமாக இருப்பதும் என இயங்குவான். அல்லது வற்புறுத்தி அடிமையாக்கப்பட்டிருப்பான். தலித் சமூகத்தின் பெரும்பாலான பகுதியினர் இப்படி வற்புறுத்தி அடிமையானவர்களே. உத்தபுரம் தொடர்பான பிரச்சனை இதற்கு ஓர் உதாரணமாகும். உத்தப்புர சுவர் தலித்துகளுக்கு என்றுமே தடையாக இருந்தது. அது அவர்களைச் சிறுமைப்படுத்துவதாகவே உணர்ந்தார்கள். ஆகையால் அதற்கு எதிராக தலித்துகள் போராட்டம் நடத்தினார்கள். இதுவே பெரும் அரசியல் மாற்றுக்கருத்துகளை உருவாக்கின. இக்கதையில் கே.டானியல் உருவாக்கும் வேலனும் வற்புறுத்தி அடிமையாக்கப்பட்டவனே. அவனால் தன் எதிர்ப்புணர்வைக் காட்ட முடிகிறது. கதையின் இறுதியின் தன்னைத் தானே மீட்டுக்கொள்ள அடிமை சிந்தனையிலிருந்து வெளியேறுகிறான். அடிமைக்குள்ளிருந்து வெளிப்பட்டவன் ஒரு பாசிட்டிவ் அதிகாரமாக மாறி கடும் எதிர்வினை ஆற்றுகிறான்.

இதுடான் கே.டானியலின் தலித் அரசியல். தன் புனைவுகளின் மூலம் அவர் நிறுவும் அரசியல் கருத்துகளுக்கான ஒரு நல்ல உதாரணம் இக்கதை. தலித்துகளின் மீதான அனைத்துவிதமான சுரண்டலுக்கும் எதிர்வன்முறை மட்டுமே சரியான வழிமுறை என டானியல் முன்வைக்கிறார். அதனால் அவருடைய வேலன் கதைமாந்தர் ஒரு வலுப்பெற்று தன் முரண் உணர்வை வெளிப்படுத்துகிறார்.

கே. டானியலின் மீட்பும் பெருங்கனவும்

தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் இக்கதையின் இறுதியின் வேலனின் கோபமும் எதிர்ப்புணர்வும் ஓர் இயக்கமாக மாறுவதாகச் சொல்லியிருப்பார். ஒட்டுமொத்த இலங்கை உரிமை போராட்டம் எப்படி இயக்கங்களாக மாறுகின்றன என்பதை விவரிக்கும் வகையிலான ஓர் அனுபவத்தைப் பெற முடிந்தது. தனிமனிதர்கள் கூட்டுச் சக்தியாக ஒன்றிணைந்து ஓர் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகத்தான் ஈழத் தலித் சமூகத்தை அதிகாரத்தின் பிடியிலிருந்து மீட்க முடியும், அதற்கு இயக்கம் அவசியம் எனும் அரசியல் புரிதலை வலுவாகக் கொண்டிருக்கிறார் டானியல். அதன் தொடர்பாகத்தான் கதைகளும் அதே வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன.

இயக்கம் உருவாக்கம், மாற்றுப் பாசிச எதிர்ப்புணர்வு என அனைத்தையுமே நியாயப்படுத்தும் ஒரு வாழ்க்கை டானியல் வாழ்ந்திருக்கக்கூடும். அதன் வழியே தன் கதைகளைப் படைக்கிறார். வேலன் இலங்கையில் உருவான போராளிகளின் குறியீடு. வேலனை முன்வைத்து இலங்கையின் பாசிசத்திற்கு எதிரான உருவான முக்கியமான பிம்பங்களையெல்லாம் நினைவுப்படுத்திக்கொள்ள முடிகிறது. டானியல் சிறுகதைகளைவிட நாவல்(பஞ்சமர்) அனைவராலும் பேசப்பட்டவை. இக்கதையிலும் கூட கதை இறுதியை நோக்கி நகர நகர கதையின் மீதுள்ள பிடிப்பை இழந்து வருவதாகத் தோன்றியது. கடைசியில் கதையை அவசரமாக முடித்ததாகத் தெரிந்தது.

கே. டானியல் எழுதத் துவங்கிய காலக்கட்டத்தில் அவருடைய இலக்கியச் செயல்பாடுகள் வலுவான அரசியல் கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தன. அதைக் கொண்டு அவரால் ஒரு படைப்புலகை அரசியல் நிலத்துடன் சிருஷ்டித்துக்கொள்ள முடிந்தது.

கே. பாலமுருகன்
thanks vallinam  January

No comments: