Friday, June 15, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 4 - எம்.ஜி.ஆர் கொலை வழக்கு - ஷோபா சக்தி

இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளியாக அடையாளங்காணப்பட்டு வருபவர் ஷோபா சக்தி. புனைவு எல்லைக்குள் தங்களின் தீவிரமான மறுவாசிப்பைச் செய்யும் யாவரும் ஷோபா சக்தியை மிகச் சிறந்த கதைச்சொல்லியாக உணர்கிறார்கள். இவர் எழுதிய ‘கொரில்லா ‘ மற்றும் ‘ம்’ நாவல் இரண்டுமே தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதும் கவனப்படுத்தப்பட்ட படைப்புகளாகும்.

எம்.ஜி.ஆர் கொலை வழக்கும் எம்.ஜி.ஆர்களும்

ஷோபா சக்தியின் நான்காவது சிறுகதை தொகுப்பு இது. தலைப்பைப் படித்ததும் வாசிக்க ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்பது இத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை. இந்தப் பகுதியே கொரில்லா நாவலின் துவக்கம். அந்த நாவலைப் படிக்கும்போதே இந்தப் பகுதி ஒரு சிறுகதைக்குரிய தன்மையில் இருந்ததை உணர்ந்திருந்தேன். இப்பொழுது இதைச் சிறுகதையாக இங்கு வாசிக்கும்போது என் ஊகம் சரியாகியிருப்பதை மீட்டுணர முடிகிறது.


எம்.ஜி.ஆர் என்றதுமே அந்தப் பெயரின் மீது 19ஆம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த பொது இரசனையும் படிந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு கால் நூற்றாண்டு தமிழ் சினிமாவையும் தமிழ்நாட்டு அரசியலையும் தன் வசப்படுத்தி வைத்திருந்த கலைஞர். மார்க்சியம் பேச முனைபவர்கள் எளிய மக்களுக்கு அதை உணர்த்துவதற்கு எம்.ஜி.ஆரையும் அவருடைய தத்துவப் பாடல்களையும் உதாரணம் காட்டினாலே போதுமானது. தன் கருத்துகளாலும் அதனைத் தன் படங்களில் பிரச்சாரப்படுத்தியதன் மூலமும் நேரடியாக மக்கள் மனதைக் கவர்ந்தவர். அக்காலக்கட்டத்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியலை அப்படியே தமிழ் சினிமாவில் எந்தப் பாசாங்கும் இல்லாமல் பிரதிபலித்தவர் எம்.ஜி.ஆர். இப்பொழுதுள்ள நடிகர்களுக்கு முதலில் சமக்காலத்து அரசியல் உணர்வு என்பதே வெறும் கனவாக மட்டுமே தேங்கியிருக்கின்றது. கமர்சியல் கதைநாயகனாக இருந்தாலும் எம்.ஜி.ஆரின் அரசியல் வெளிப்பாடு அக்காலக்கட்டத்து அரசியல் மையத்தை உள்வாங்கிக்கொண்டதாக அமைந்திருந்தது.

ஆகையால், எம்.ஜி.ஆர் மரணம் என்பது தமிழ்நாடு, இலங்கை முழுக்க பரவிக்கிடந்த பல்லாயிரம் இரசிகர்களை நிலைக்குழைய செய்தது என்றே சொல்ல வேண்டும். இன்றும் எம்.ஜி.ஆர் நற்பணிமன்றம், எம்.ஜி.ஆர் தமிழ் மன்றம் என மக்கள் எம்.ஜி.ஆரை ஜீவித்திருக்கவே செய்கிறார்கள். ஷோபா சக்தியின் இந்தத் தொகுப்பின் தலைப்பு ஒரு தலைமுறையைப் பதற்றப்படவும் ஆர்வப்படுத்தும் ஒன்றாகும். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு இயற்கை மரணத்தை எய்தவர் என்பது உலகத்துக்கே தெரிய, ஷோபா சக்தி 'எம்.ஜி.ஆர் கொலை வழக்கு' எனும் அதிர்ச்சியை நமக்களிப்பது போல இந்தத் தொகுப்பை அளிக்கிறார். எம்.ஜி.ஆரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்ற பரப்பரப்புடன் ஒரு வரலாற்றை மீட்டுணர்ந்தவாறே கதைக்குள் நுழைய வேண்டியுள்ளது. நிதர்சனமாக பதிந்துபோன ஒரு வரலாற்றின் மேற்பரப்பைக் களைத்துப் போடுவதன் மூலம் கதையின் தலைப்பு தேர்விலேயே ஷோபா சக்தி வெற்றிப்பெற்றுள்ளார் என்பதை உணர முடிகிறது.

நானும் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனே. 1989களில் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி பெரிய மோட்டாரில் முடி திருத்தம் செய்யும் ஜேம்ஸ் அண்ணன் வருவதுண்டு. அவர் எம்.ஜி.ஆர் பாடலைத் தவிர வேறு எதையும் பாடமாட்டார். முடி திருத்தம் செய்யும் போதும் மோட்டாரில் பயணிக்கும்போதும் சீட்டி அடித்துக்கொண்டே எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிக்கொண்டே இருப்பார். கருப்பு கண்ணாடி முகத்திற்குப் பொருத்தமில்லாமல் வீங்கியிருந்தாலும், அவருக்கு எம்.ஜி.ஆர் தோற்றத்தை அளிக்கிறது என நம்பியிருந்தார். அந்த ஜெம்ஸ் அண்ணன் மூலமே நானும் எம்.ஜி.ஆர் இரசிகன் ஆகியிருந்தேன். அவருடன் சேர்ந்துகொண்டு எம்.ஜி.ஆர் மாதிரி நடனமெல்லாம் ஆடியிருக்கிறேன். ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றன் மீது ஒன்று வைத்து, பிறகு மூக்கின் அடியில் நடுவிரலை வைத்து அதற்குக் கீழ் இருக்கும் ஆள்காட்டி விரலை மூக்கின் அடியை உரசிக் கொண்டு மேலேற, “ஆஆஆஆ” என்பார். அது எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் செய்யும் ஸ்டைல். ஓடி வந்து ஒற்றைக் காலில் மூன்று முறை விட்டு விட்டு பிரேக் வைப்பார். உதட்டை பல்லுடன் தேய்த்துக்கொண்டே ரோமேண்டிக் ஆக பார்ப்பார். ஆக மொத்தம் அவர் நான் பார்த்தவரை ஒரு பிற்கால எம்.ஜி.ஆர் போலவே நடமாடிக்கொண்டிருந்தார்.

ஜேம்ஸ் அண்ணனுக்கு இரண்டு மனைவிகள். எப்பொழுதும் அவருக்குப் பிரச்சனைகள் இருந்துகொண்டிருக்கும். சோகத்துடன் வீடுவரை வந்துவிட்டு வெளிவரந்தாவில் அமர்ந்து புலம்பிவிட்டுப் போய்விடுவார். அப்பொழுது மட்டும் அவர் அவராகவே இருப்பார். எந்த எம்.ஜி.ஆர் பாவனையும் அவரிடம் இருக்காது. வாழ்வின் விளக்க முடியாத துயரங்களுக்கு முன் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் எப்படியிருப்பினும் நாம் யாரோ ஒருவரைப் போல நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் அக்காலத்து மனிதர்களுக்கு எம்.ஜி.ஆர் மட்டுமே வழிப்பாட்டுக்குரிய பிம்பமாகும். அவருடைய மறைவிற்குப் பிறகும் பல எம்.ஜி.ஆர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள். உற்றுக் கவனித்தால் யாரோ ஒருவர் குரலை மாற்றி எம்.ஜி.ஆர் போல பேச முயற்சித்துக்கொண்டிருக்ககூடும்.

ஷோபா சக்தி இக்கதையில் காட்டும் எம்.ஜி.ஆர் என்பவரும் நிஜ எம்.ஜி.ஆர் அல்ல. தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் எம்.ஜி.ஆர் இரசிகர் ஒருவரின் மரணத்தின் மீதான ஒரு முடிச்சவிழ்ப்புத்தான் கதை. எம்.ஜி.ஆர் இயற்கை மரணமடைந்திருந்தாலும், அவருக்குப் பின் உருவான பல எம்.ஜி.ஆர்கள் காலம்தோறும் வெவ்வேறு வகையில் மரணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்ல உலகின் பல இடங்களில் சினிமா தன்னுடைய செல்வாக்கை இப்படிப் பலவகைகளில் செலுத்திக்கொண்டுத்தான் இருக்கின்றன.

யார் இந்த டொனாஸ்?

கதையில் வரும் கதைச்சொல்லியான ‘மாமா’ பாரிசின் தலைநகரான முலோனிலுள்ள நியூட்டனின் வீட்டில் பிடிப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் டொனாஸைச் சந்திக்கப் போவதாகக் கதை ஆரம்பமாகின்றது. யாரோ ‘பௌசரிடம்’ மாமா கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். அந்த பௌசர் அநேகமாக நாமாகத்தான் இருக்க முடியும். கேளுங்கள் பௌசர் என்றவுடன் கதையுடன் மனம் ஒட்டிக்கொள்கிறது. எத்தனை அற்புதமான தொடக்கம் அது. ஷோபா சக்திக்குள் இருக்கும் கதைச்சொல்லி நம்மைச் சட்டென அவனுடைய மனதிற்கு நெருக்கமாக்குகின்றான். மாமாவுடன் சேர்ந்து நாமும் டொனாசைச் சந்திக்கச் செல்கின்றோம். டொனாஸ் ஊரில் இயக்கத்தில் இருந்து கொண்டு சனங்களைக் கொன்று குவித்ததாக அறிமுகப்படுத்தப்படுகிறான். மாமா அவன் குறித்த நினைவுகளை மீட்டுணர்கிறார்.

இலங்கை தமிழர்கள் உலகம் முழுக்க அகதிகளாகச் சிதறிப் போகத் துவங்கிய காலக்கட்டம். மாமா அந்த ஊரைவிட்டு வெளியேறும்போது டொனாஸுக்கு 5 வயது மட்டுமே. மீண்டும் டொனஸை இங்குப் பார்க்கும்போது மாமா கொஞ்சம் அமைதியாகின்றார். நாற்காலியில் கட்டி வைத்து அவனை மாறி மாறி நியூட்டனின் வீட்டில் கூடியிருந்த இளைஞர்கள் அடிக்கிறார்கள். டொனாஸ் மாமாவை உற்று கவனிக்கின்றார். அவரால் தன்னை விடுவிக்க முடியும் என டொனாஸ் நம்புகின்றான். மாமா அவனை விசாரிக்கத் துவங்குகிறார். ஏற்கனவே ரத்தினத்தின் கடையில் நுழைந்து 8 பேரை டொனாஸ்தான் சுட்டுக்கொன்றான் என விசாரிக்கப்படுகிறது. தொடர்ந்து டொனாஸ் இயக்கத்திலிருக்கும்போது செய்த கொலைகள் குறித்து மாமா கேட்டுக்கொண்டே இருக்கிறார். டொனாஸ் தொடர்ந்து தன் மீதான குற்றங்களை மறுத்தப்படியே இருக்கின்றான். முன்பு தன் மகனை இயக்கத்தினர் கடத்திக் கொலை செய்வதற்கு இந்த டொனஸ்தான் காரணம் என நம்பிக்கொண்டிருக்கும் திரவியம் பதறியடித்துக்கொண்டு உள்ளே வருகிறார். தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆழமான துயரத்தை வன்மையாக்கி அவனை அடித்துத் தள்ளினார்.

அவன் மீது பாய்ந்து அடித்து நொறுக்க முயன்ற திரவியத்தால் அவனுடைய சட்டையை மட்டும்தான் கிழிக்க முடிந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. சோர்ந்து போய் தரையில் அமர்ந்திருக்கும் டொனஸைப் பார்த்து மாமா சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகிறார். நீ ஒரு கொலையைக்கூட செய்யவில்லை என சாதிப்பது சந்தேகமாக இருக்கிறது எனக் கூறுகிறார். டொனஸ் மனதைத் திடப்படுத்திக்கொண்டு எம்.ஜி.ஆரை தவிர தான் யாரையும் கொலை செய்யவில்லை எனச் சொல்லி முடிக்கின்றான். எல்லோரும் ஆச்சர்யத்தில் உறைந்து போகிறார்கள். இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் தற்கொலை செய்து கொண்டதாகவே அறியப்பட்டிருந்த ஒரு விசயம் கொலை எனத் தெரிய வருகிறது.

யார் இந்த எம்.ஜி.ஆர்?

அல்லைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் மாமாவும் டொனாஸும். அந்தக் கிராமத்தை அல்லைப்பிட்டி என்று சொல்வதைவிட ‘எம்.ஜி.ஆர் பட்டி’ என்றே சொல்லலாம் எனக் கதைச்சொல்லி விவரிக்கின்றார். அப்பொழுதும் எம்.ஜி.ஆர் இரசிகர்களும் பக்தர்களும் அங்கு நிரம்யிருந்திருக்கிறார்கள். வீட்டைவிட்டு ஓடிப்போகும் சிறுவர்கள் சினிமா பார்த்துவிட்டு பிறகு கடைசி பேருந்தைப் பிடித்து அயலூர் சென்று வேலையில் சேர்வது அக்கிராமத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது. சினிமா என்பது அவர்களுக்குப் பொழுதுபோக்காக இல்லை மாறாக வாழ்க்கை முறைமையாகவும் இலட்சியமாகவும் இருந்திருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆர் சினிமா என்பது அக்கிராமத்தில் மிக உன்னதமான இலட்சியமாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது.

ஊர் வாசகசாலைக்கு, 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் பெயர் வைப்பது, எம்.ஜி.ஆர் படம் வெளியான நாட்களில் கஞ்சி காய்த்து மக்களுக்கு வழங்குவது, மற்ற நடிகர்களின் மீதான விருப்பங்களைக் கொன்று எம்.ஜி.ஆரின் தீவிர இரசனையை மட்டுமே நிறுவுவது என தமிழ்நாட்டிலிருந்து சினிமா மோகம் இலங்கையிலும் இருந்ததற்கான அடையாளமாக இக்கதையைச் சொல்லலாம். ஊரில் இருந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்குத் தலைவராக இருந்த பரிமளகாந்தனைத்தான் ஷோபா சக்தி எம்.ஜி.ஆர் என இக்கதையில் உருவகிக்கிறார். பரிமளகாந்தன் நல்ல கலைஞர் என்பதோடு மட்டுமல்லாமல் கடைசிவரை எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகராகவே வாழ்ந்தவர். அவருடைய இருப்பைப் பற்றியும் அவருக்குள் எம்.ஜி.ஆர் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ததைப் பற்றியும்தான் கதை ஆழமாக உரையாடுகிறது.

நாடக விழா நடத்தில் ஊரில் உள்ள பொடியன்கள் முதல் இளையோர்வரை எல்லோருக்கும் நாடகத்தில் கதாபாத்திரம் கொடுத்து அவர்களை நடிக்க வைப்பார். நாடகம் நடந்துகொண்டிருக்கும்போதே வந்து சேரும் பொடியன்களுக்கு ஏதாவது ஒரு கதைப்பாத்திரத்தைக் கொடுத்து அவர்களைச் சாமர்த்தியமாக உள்ளே நுழைத்துவிடும் அளவுக்கு நாடகக் கலையுடன் எல்லாம்வகையிலுமே ஒன்றி போயிருந்தார் பரிமளகாந்தன். அவரை அனைவரும் ஒரு முழு எம்.ஜி.ஆர் இரசிகராகவும் தேர்ந்த நாடக கலைஞருமாகவும் பார்த்துப் பழகியிருந்தனர்.

எம்.ஜி.ஆரின் தனிமை

எம்.ஜி.ஆர் படங்கள் அல்லைப்பட்டியில் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதன் பிறகு ஊரையே திருப்பிப் போட்டுவிடுகிறது. யாழ்பாணத்தில் ஓடிக்கொண்டிருந்த ‘கிழக்கே போகும் இரயில்’ படத்தைக் காணச்செல்ல குமரிப்பெண் ஒருத்தி அனுமதி கேட்டும் அவளுடைய பெற்றோர்கள் அனுமதிக்காததால் அவள் தற்கொலை செய்து கொள்கிறார். இந்தச் சம்பவம் ஊர் முழுக்க பெரும் பரப்பரப்பை ஏற்படுத்துகிறது. ஒரு மரணத்திற்குப் பிறகு சினிமாவின் மீதிருந்த செல்வாக்கு மெல்ல ஆட்டம் கண்டது என்றே சொல்ல வேண்டும். நாடகம் போடுவதைக்கூட மக்கள் வெறுப்புடன் பார்க்கத் துவங்கியிருந்தார்கள். அப்பொழுது எம்.ஜி.ஆராகவே வாழ்ந்து கொண்டிருந்த பரிமளகாந்தன் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தார். அதையோ ஒன்றை இழந்தது போன்ற துயரத்துக்கும் ஆளாகின்றார். அதே சமயத்தில் அவருடைய மனைவியும் இறந்துபோக பரிமளகாந்தன் தனிமைக்குள்ளாகின்றார். இரவு நேரங்களில் எம்.ஜி.ஆர் புகைப்படங்களைக் கையில் வைத்துக் கொண்டு தனிமையில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய ஆளுமை வெறும் எம்.ஜி.ஆரால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. சினிமா என்ற ஒன்றின் மூலம் எழுப்பப்பட்டிருக்கும் நம்பிக்கை தளர்ந்துபோகும்போது அவருடைய வழிப்பாட்டு பிம்பமான எம்.ஜி.ஆரை நோக்கியே தன்னுடைய புலம்பல்களை வெளிப்படுத்துகிறார்.

எம்.ஜி.ஆர் கலாமன்றத்தில் இருந்த பாதிப்பொடியன்கள் இயக்கத்திற்கும் மீதி பேர்கள் வெளிநாட்டுக்கும் போய்விட்டிருந்தனர். அநேகமாக அதன் பிறகு கலாமன்றம் தொய்வடைந்து போனது என்றே சொல்ல வேண்டும். மெல்ல மெல்ல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஊரில் இல்லாமல் போனார்கள். பரிமளகாந்தன் மட்டும் எம்.ஜி.ஆர் ஆகவே வாழ்ந்து வந்தார். 1987இல் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் மரணத்தை அறிந்து பரிமளகாந்தன் மொட்டையடித்துக்கொண்டு சாலையில் போவோர் வருவோரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். மொட்டைத்தலையை மறைக்க எம்.ஜி.ஆர் அணிவது போன்றே வெள்ளை தொப்பியை அணிந்துகொள்வதும், கருப்பு கண்ணாடி மாட்டிக்கொண்டு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து கொள்வதும் என எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப் பிறகு பரிமளகாந்தன் முழு எம்.ஜி.ஆராகவே மாறுகிறார். ஊர் பொடியன்களும் அவரை அப்பொழுதிலிருந்துதான் எம்.ஜி.ஆர் என அழைக்கத் துவங்கியிருக்கின்றனர்.

மாமா ஊரைவிட்டு வந்த பிறகு கடந்த வருடம், பரிமளகாந்தன் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக அறிந்திருக்கிறார். மாமாவின் அம்மா தொலைப்பேசியில் அந்தத் தகவலைச் சொல்லும்போது, ‘எம்.ஜி.ஆர் தூக்குப் போட்டுச் செத்துப்போனான்’ என்றுதான் சொல்கிறார். எம்.ஜி.ஆர் எத்தனைமுறைத்தான் இறப்பார்? எம்.ஜி.ஆர் ஒவ்வொரு வருடமும் எங்கோ ஓர் இடத்தில் இறந்துகொண்டுத்தான் இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் கொலைக்கு முக்கிய காரணம்

மாமா டொனாஸை நெருங்கிக் கொலைக்கான காரணத்தை விசாரிக்கிறார். டொனாஸ் இலங்கையில் இருந்த பல இயக்கங்களில் ஒன்றில் போராளியாக இருந்தவன். அவர்களின் அல்லைப்பட்டி மற்றும் மேலும் சில ஊர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது. ஆனால் பரிமளகாந்தன் என்ற எம்.ஜி.ஆர் கொட்டிக்கு (விடுதலை புலி இயக்கத்திற்கு) ஆதரவாக இருந்தது இயக்கப் பொடியன்களுக்குத் தெரியவர, அவரைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்கள். பரிமளகாந்தன் கொட்டிக்கு பல கோடி பணத்தைக் கொடுத்துள்ளார் என்றும் டொனாஸ் சொல்கிறான். ஆகையால்தான் அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் கழுத்தை நெருக்கிக் கொன்றுவிட்டு அவரைத் தூக்கில் போட்டுவிட்டு வந்தேன் என்றும் டொனாஸ் சொல்கின்றான்.

தமிழ்நாட்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் விடுதலை புலிக்குமான உண்மையான தொடர்பு என்ன என்பதை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான்கு குழுக்களாக இருந்த போராளிகளுக்குள் பெரும் பிளவு வர ராஜிவ் காந்தியும் கருணாநிதியும் காரணமாக இருக்க எம்.ஜி.ஆர் மட்டுமே பலவகைகளில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். 19866ஆம் ஆண்டு, நவம்பர் முதல் நாள் தீபாவளியன்று சூளைமேட்டு வீதியில் இந்திய உளவுத் துறையின் கைபாவையாகி போன டக்ளசு தேவானந்தா, பிரபாகரனையும் அவரது புலிப்படைகளையும் பயங்கரவாதிகள் என உலகிற்குக் காட்ட வேண்டி, மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த அவ்வீதியில் யந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாய் மக்கள் மீது குண்டு பாய்ச்சினான். ‘புலிகள் சுடுறானுங்க” என்ற புறளியைக் கிளப்பிவிட்டார்கள். அதன் விளைவாக விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து புலி தளபதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்கள். விடுதலை புலிகளின் தலைமையகம் உடைக்கப்பட்டு ஆயுதங்களும் ஆவணங்களும் சூறையாடப்பட்டன. தகவல் அறிந்து பதறிப்போன எம்.ஜி.ஆர் தான் அவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, அவர்கள் மீண்டும் செயல்பட உறுத்துணையாக இருந்திருக்கிறார். ஆயுதங்களை மீட்டும் கொடுத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் கொட்டிக்கு ஆதரவு எனக் கதையில் இடம்பெறும் ஒரு வரி இலங்கைக்கும் உண்மையான எம்.ஜி.ஆருக்கும் இடையிலுள்ள உறவை மறுபார்வை செய்வதாகவே உணர்கிறேன். கதாசிரியரான ஷோபா சக்திக்கு புலிகள் மீது இருக்கும் விமர்சனத்தையும் புனைவில் வரும் எம்.ஜி.ஆரை அவர் டொனாஸின் மூலம் கொல்வதையும் ஒரு சாதாரண சம்பவமாக என்னால் பார்க்க முடியவில்லை. எப்படியிருப்பினும் தீர்க்கமான அரசியல் பார்வையுடைய ஷோபா சக்தியின் புனைவுக்குள் ஏன் அவருடைய அரசியல் மாற்றுக்கருத்து நுழைந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது? அப்படித் தேடி அலைவது யாரைக் காட்டிக்கொடுக்க என்ற கேள்வியும் எனக்குள் எழுந்துவிடுவதால் அந்த விசாரணையை முடித்துக்கொள்கிறேன். மீண்டும் புனைவுக்குள் வருவோம். எம்.ஜி.ஆர் இரசிகனாகவே வாழ்ந்த பரிமளகாந்தன் எம்.ஜி.ஆர் விடுதலை புலிகளுக்கு உதவி செய்ததைப் போலவே அவரும் உதவி செய்திருக்கிறார். ஆக, சினிமாவின் மூலம் மட்டும் அல்ல தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளினாலும் எம்.ஜி.ஆர் பலரை ஆக்கிரமித்துதான் வைத்திருந்திருக்கிறார்.

இலங்கை போன்ற யுத்தப் பூமியில்கூட ஒரு தமிழ்நாட்டு சினிமா நடிகனின் ஆதிக்கம் வலுவாக இருந்ததற்கு எம்.ஜி.ஆர் மட்டுமே சிறந்த உதாரணம். தங்களின் நிலம் குறித்த சுய அரசியல் உணர்வை உருவாக்கிக்கொள்ள முடியாமல் பலர் தடுமாறிப் போவதற்கு எம்.ஜி.ஆர் போன்று தமிழ்நாட்டில் உருவான பல சினிமா நட்சத்திரங்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த இழப்பின் ஒட்டுமொத்த வெறுப்பின் குரலே கதையின் இறுதி கட்டத்தில் ஒலிக்கிறது. கால் நூற்றாண்டு, மக்கள் தங்களின் சுரண்டலையும் வலியையும் மறந்து சினிமா மோகத்தில் ஆழ்ந்திருக்கச் செய்த எம்.ஜி.ஆர் ஒரு குற்றவாளியாகக் கதைக்குள் மறைமுகமாக நிறுத்தப்படுகிறார்.

தொடரும்...
 கே.பாலமுருகன்
thanks vallinam april issue 2012

No comments: