Thursday, July 12, 2012

சிறுகதை: வீட்டைத் தொலைத்தவர்கள்


நான் மணியத்தின் மகன் சிவா

அப்பா பெயர் மணியம். அப்படிச் சொன்னால் சிலருக்கு மட்டுமே தெரியும். வழக்கமாக அவரைக் ‘கட்டை மணியம்’ என்றுத்தான் அழைப்பார்கள். வழியில் சந்தித்தத் தெரிந்தவர்களிடம் ‘கட்ட மணியத்தெ பாத்தீங்களா?” எனக் கேட்டேன். தெரியாதவர்களிடம், “ தலை சொட்டெ, இலேசா கூன் வலைஞ்சிருக்கும், கட்டையா இருப்பாரு... சொந்தமா பேசிக்கிட்டு இருப்பாரு..அவரெ எங்காவது பாத்தீங்களா?” எனக் கேட்டேன். அங்கு யாரும் யாரையும் தேடுபவர்கள் கிடையாது. அதிர்ச்சியைத் தரக்கூடிய எந்தவொரு கேள்வியையும் அவர்கள் சந்திக்கத் தயாரில்லை. அதிர்ச்சியான விசயங்கள் அவர்களின் நேரத்தில் சிலவற்றை பிடுங்கிக்கொள்ளும் என்கிற அச்சம். சாரை சாரையாகக் கடந்து போகும் வாகனங்களுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் கட்டை மணியம் எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?

எங்குத் தேடியும் அப்பா கிடைக்கவில்லை. வெகுநேரம் மங்கிய வெளிச்சத்துக்கு மத்தியில் நகரம் முழுக்கவும் தேடி அலைந்துவிட்டு சீன ஆப்பே கடையில் வந்து அமர்ந்துவிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் விட்டுவிட்டு மின்னும் வெளிச்சமும் இருளும்தான். சாலைகள் பாம்பு போல பளபளவென நெளிந்தன. வெள்ளை காற்சட்டை, கோடு போட்ட நீல சட்டை. அப்பா வீட்டிலிருந்து வெளியேறும்போது அணிந்திருந்த உடையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திவிட்டு வருவோர் போவோரைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.


அப்பா வேலையைவிட்ட நாளிலிருந்து வீட்டுக்குள் அடைப்பட்டே கிடந்தார். சோர்வான பொழுதுகளை ஓர் ஓரமாக அமர்ந்து நாள் முழுக்கக் கவனித்துக்கொண்டே இருப்பார். அவரிடம் உயிர்ப்பு இருக்காது. என்னிடம் முகம் கொண்டு ஏதும் பேசமாட்டார். வீட்டுக்குள் நுழையும் யாரையும் பொருட்படுத்தமாட்டார். வெற்றுச்சுவரையே பார்த்துக்கொண்டிருப்பார். 5மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேறி கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வருவதற்காக மட்டுமே பல மணி நேரங்கள் காத்திருப்பது போல தோன்றும். குளித்து முடித்து, பவுடர் பூசிக்கொண்டு அழகான உடைகளை அணிந்துவிட்டு வீட்டுக்கு வெளியில் வந்து நிற்பார். உலகத்தை அன்றுதான் தரிசிக்கும் குழந்தையின் ஆர்வம் அவர் முகத்தில் அப்பொழுது மட்டுமே தெரியும்.

ஒரு மணி நேரம் அவரால் வெளியே நடக்க முடியும். ஏதோ அவசரமான வேலை இருப்பதைப் போல வேகமாக நடப்பார். தனிமையை வெல்ல அவருக்குக் கூடுதலான வலிமை தேவைப்பட்டிருக்கும். அப்பாவுக்கு நண்பர்கள் இல்லை. வேலை செய்யும் காலக்கட்டத்தில் ஒரு சில நண்பர்கள் வந்து போவார்கள். அதில் அப்பாவுக்கு நெருக்கமான நண்பர் எம்.ஜி.ஆர் மாமாதான். அவரை நாங்கள் அப்படித்தான் அழைப்போம். பெரிய மோட்டோரில் கறுப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு தடுப்பான மீசையை வைத்திருப்பார். அவருடைய குரலில் அவர் பேசி நான் கேட்டதில்லை. எம்.ஜி.ஆரைப் போலத்தான் பேசிக்கொண்டிருப்பார். ஆள்காட்டி விரலை நடுவிரலுக்குக் கீழ் வைத்து அழுத்தி பிறகு மூக்கின் அடிப்பகுதியில் வைத்துத் தேய்த்துக்கொண்டே வெளியே எடுத்துவிட்டு, ‘ஆஆஆஆ’ என்பார். அது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். எம்.ஜி.ஆர் மாமா வீட்டுக்கு வந்துவிட்டால் அப்பா உற்சாகமாய்விடுவார். இருவரும் வீட்டுக்கு அருகிலுள்ள மாங்காய் மரத்தடியில் அமர்ந்துகொண்டு நாள் முழுக்கக் கதையடித்துக்கொண்டிருப்பார்கள். இடையிடையே எம்.ஜி.ஆர் மாமா எழுந்து ஏதோ வசனம் பேசி அப்பாவைச் சிரிக்க வைப்பார்.

மாமாவுக்கு ஒரு கண் பூ பூத்திருக்கும். கொஞ்சம் வெள்ளையாக கண்ணைப் பார்க்கவே பயமாக இருக்கும். இதனால்தான் அவர் கறுப்புக் கண்ணாடி போடத் தொடங்கியிருக்கக்கூடும். எம்.ஜி.ஆராக மாறுவதற்கு மாமாவுக்குக் கிடைத்தக் காரணம் அதுவாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு முழு எம்.ஜி.ஆராகத்தான் வாழ்ந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் என அப்பா சொல்லிக் கேட்டதுண்டு. பிறகு ஒரு நாள் மாமா வீட்டைவிட்டு ஓடி விட்டதாக அப்பா அழுது கொண்டே வந்து சொன்னார். எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. குடும்பச் சண்டையைச் சமாளிக்க முடியாமல் மாமா தன்னுடைய மோட்டாரைக்கூட எடுக்காமல் எங்கோ ஓடிவிட்டதாகக் கேள்விப்பட்டோம். அப்பாவுக்கு ஒரு கை உடைந்தது போல இருந்தது. எதையோ பறிக்கொடுத்தவராக எதிலுமே ஆர்வம் இல்லாமல் தனியாக இருக்கத் துவங்கினார்.

‘எம்.ஜி.ஆர்’ மாமா காணாமல்போன மூன்று வருடத்தில் அப்பா வேலையைவிட்டு நிற்க வேண்டிய சூழல் உருவானது. கீழே விழுந்து தோல் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் மேற்கொண்டு வேலை செய்ய முடியவில்லை. அதன் பிறகுதான் அவர் வீட்டிலேயே இருந்தார். யாருடனும் பேசமாட்டார். பிறகொருநாள் சொந்தமாகப் பேசத் துவங்கியதை அறையிலிருந்தபடியே கேட்டு அதிர்ந்து போனோம். அதைக் குணப்படுத்தவும் முடியவில்லை. தன் உலகத்தை இழந்த மனிதனை எப்படித் துறப்பது எனத் தெரியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக அவரைச் சட்டை செய்வதைக்கூட குறைத்துக்கொண்டோம். அவர் அவராக எங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டு வாழ ஆரம்பித்தார். சிறு முனகலாகத் தொடங்கும் அவர் பேச்சு பிறகு பேரிரைச்சலாக மாறும். கத்துவார். எதையாவது போட்டு உடைப்பார். பிறகு உறங்கிவிடுவார். அப்பாவின் நாட்களில் இரைச்சலும் நிம்மதியின்மை மட்டுமே தேங்கியிருந்தன.

“ணே..அப்பாவெ பாத்தீங்களா? சாய்ங்காலம் வெளில போனாரு.. ஆளே காணம்.. எப்பவும் சீக்கிரம் வந்துருவாறு. ரொம்ப தூரம்லாம் போவ மாட்டாருணே” எதிரில் இருந்தவரிடம் கொஞ்சம்கூட சலனமில்லை. நிதானமாகத் தான் பார்க்காததைக் கூறிவிட்டு அவசரமாகப் போய்விட்டார். ஆப்பே கடையிலிருந்து வெளியேறி முச்சந்திக்கு வந்தேன். அப்பா காணாமல் போயிவிட்டார் என்பதை அப்பொழுதும் என்னால் நம்ப முடியவில்லை. உலகில் தூரமாகப் பார்த்துப் பழகிய அந்நியமாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் என் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்துவிட்டதைப் போல பதற்றமாக இருந்தது. ஒருமுறை மூச்சை அழுத்தமாக உள்ளிழுத்து வெளியேற்றினேன்.

அப்பா மாதிரியே அவசரமாக நடந்தேன். வீட்டை விட்டு அவரால் எத்தனை தூரம் நடந்து எல்லைகளைக் கடந்திருக்க முடியும்? வழக்கமாகப் போகும் இடங்களில் அவர் இல்லை. தனிமையில் உழன்று வெறுத்துப் போனவர்கள் இந்த உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கத் திடீரென சாகசம் செய்யக்கூடும் எனச் சொல்வார்கள். அப்பா ஏதும் சாகசம் செய்யக் கிளம்பிவிட்டிருப்பாரோ? காவல்துறையில் வழக்கம்போல கடமைக்காகப் புகார் கொடுத்தும் என்னால் இருப்புக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சொல்லும் தகவலுக்காக என்னால் காத்திருக்கவும் முடியவில்லை. இருள் பார்ப்பவர்களின் முகத்திலெல்லாம் சுருண்டு படுத்திருந்தது. எதையோ தொலைத்தவனைப் போல இருளில் நின்றிருந்தேன்.

நான் மணியம் அல்லது ‘கட்ட’ மணியம்

வேகமாக நடக்க வேண்டும். இன்னும் இன்னும் வேகமாக நடந்தாக வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நடக்க வேண்டும் எனத் தோன்றியது. பொழுது மங்கி வெளிச்சம் குறையத் துவங்கிய நேரம் சடாரென நிற்கத் தோன்றியது. அப்பொழுது நான் எங்கோ ஒரு தொழிற்சாலை பகுதியில் இருந்தேன். தொண்டை வரண்டிருந்தது. தலை சுற்றியது. உடல் வியர்த்துக் கொட்டியது. எங்காவது அமர வேண்டும் என்பது போல் இருந்ததில் கிடைத்த இடத்தில் அமர்ந்தேவிட்டேன். தூரத்தில் சோகமாகத் தலைக் கவிழ்த்து எரிந்து கொண்டிருந்த சாலை விளக்கைத் தவிர வேறொன்றும் அங்கு இல்லை.

என் பெயர் மட்டும் ஞாபகத்தில் இருந்தது. வீடு எங்கு இருக்கிறது என்பதை மறந்திருந்தேன். முடிந்தவரை ஞாபகப்படுத்தினேன். என்னால் முடியவில்லை. சத்தமாகக் கத்த வேண்டும் எனத் தோன்றியது. தலையைப் பலமுறை தட்டினேன். எதுவுமே ஞாபகத்தில் இல்லை. எந்தப் பக்கத்திலிருந்து நடந்து வந்தேன் என்றும் தெரியவில்லை. வீட்டுக்கு நான் சென்றாக வேண்டும். வீட்டில் இதற்கு முன் நான் எப்படியிருந்தேன். நான் என்ன வேலை செய்கிறேன்? இப்பொழுதும் வேலை செய்கிறேனா? எனக்கு எத்தனை வயது? கால் சட்டைக்குள் கையைவிட்டுத் தேடினேன். காலியாக இருந்தது. இன்று திகதி என்ன? எந்தக் கிழமையில் நான் இப்படி நடக்கத் துவங்கியிருப்பேன்?

கண்கள் சோர்வாக இருந்தது. எதையும் கூர்ந்து கவனிக்க முடியவில்லை. இருட்டிக்கொண்டு வந்தது. எழுந்திருக்கலாம் என்றாலும் உடலில் வலு இல்லை. இனி கால்கள் நடப்பதற்குரிய ஆற்றலை இழந்திருப்பதாகப் பட்டது. முட்டியை நிமிர்த்தி கால்களை நீட்டிப் பார்த்தேன். வலி எங்கும் பரவியிருந்தது. கையில் ஒரு தூக்குச் சட்டியை எடுத்துக்கொண்டு இரண்டு பங்களாடேசுக்காரர்கள் வருவது தெரிந்தது. அருகில் வந்ததும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

“அப்பா ஜாடி டத்தோக்?” அவர்கள் பேசிய மலாய் நன்றாகவே புரிந்தது.

“ரூமா சயா சுடா ஹீலாங்” மீண்டும் என்னைப் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டே போய்விட்டார்கள். நான் வீட்டைத் தொலைத்துவிட்டேனா அல்லது வீடு என்னைத் தொலைத்துவிட்டதா எனத் தெரியவில்லை. எழுந்து அவர்கள் போகும் வழியிலேயே சக்தியைத் திரட்டி சேமித்துக் கொண்டு நடந்தேன். இன்றுத்தான் ஏதோ ஆறாவது அறிவு தலையில் தனியாக முளைத்துத் தொங்குவதைப் போல ஆயிரம் கேள்விகள் உருவாகிக்கொண்டே இருந்தன.

சிவா, மல்லிகா, முருகேசு, கமலா என ஞாபகத்தில் வந்தவர்களின் பெயரையெல்லாம் ஒருமுறை அழைத்தேன். மூளை வலிப்பது போல இருந்தது. இத்தனை நாள் எங்கிருந்தேன் என மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது நனவு மனம். எப்பொழுது காணாமல் போயிருப்பேன்? எம்.ஜி.ஆர் குமாரு திரும்பி வந்திருப்பானா? என்னைத் தேடிவிட்டு மீண்டும் எங்காவது ஓடிப் போயிருப்பானா? எதையுமே உறுதிப்படுத்த முடியவில்லை. நினைவில் எதிர்ப்பாராத முதுமை தட்டியிருந்தது. நினைவு அடுக்குகள் சீர்குலைந்ததைப் போல எந்த ஞாபகமும் ஒரு நிமிடத்திற்கு மேல் கரைந்துவிடுகின்றது.

“முருகேசா.. எங்கடா இருக்கே? டேய் சிவா.. அப்பா எங்கடா இருக்கேன்? ஒன்னுமே புரியலையெடா.. உங்கள எல்லாத்தையும்தாண்டா இவள நாளா தேடிக்கிட்டு இருந்தேன்??” தொண்டை குழிக்குள் வெகுகாலம் சேமித்துக்கிடந்த சொற்களைப் போல எல்லாமும் சட்டென உடைந்து கொட்டியது.

“தாத்தா இங்க என்னா பண்றீங்க?” ஏதோ நெருக்கமான குரல். உலகத்தை உருண்டையாக உருட்டி கையில் கொடுத்ததைப் போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன். மோட்டார் பல்ப் வெளிச்சம் கண்களைக் கூசியது. யாரென்று தெரியவில்லை. முருகேசுவின் குரல் மாதிரி இருந்தது.

“முருகேசா.. அப்பாவா தேடி வந்துட்டியா? தோ..வந்துட்டென்” பதற்றத்தில் எப்படி நடப்பது எனத் தெரியவில்லை. சிறிது நேரம் ஸ்தம்பித்துப் போனேன். கால்கள் ஏதோ பழக்கமில்லாத ஓர் அசைவுக்கு தடுமாறின. அருகில் போனதும் முகத்தை உற்றுக்கவனித்தேன். அது மோட்டாரில் அமர்ந்திருந்த பையனுக்கு அசௌகரிகத்தை ஏற்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். முகத்தை அந்தப் பக்கமாகத் திருப்பிக்கொண்டு பேசினான்.

“எங்காவது போயி இறக்கி விடனுமா? சொல்லுங்க..”எனக் கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவனும் சிரித்துவிட்டு ஓடிவிட்டால்? 

“எங்க வீடு காணாம போச்சியா..இல்ல..எனக்கு என் வீடு எங்க இருக்குன்னு தெரிலெ” எனக் கூறியதும் அவன் ஆச்சர்யமாகப் பார்த்தான்.

“என்ன குடிச்சிருக்கியா?” என அதட்டலாகக் கேட்டான். கொஞ்சம் பயமாக இருந்தது. குரலைச் சரிப்படுத்திக்கொண்டு நான் குடிக்கவில்லை எனக் காட்ட வேண்டும்.

“இல்ல தம்பி.. எப்படி இங்க வந்தென்னு தெரிலெ..வீடு எங்க இருக்குன்னு தெரில” என் உலறல் அவனுக்கு வேடிக்கையாகவும் எரிச்சலாகவும் இருந்திருக்க வேண்டும். முறைத்துப் பார்த்துவிட்டுக் கத்தினான்.

“நீங்க மோட்டர்லெ ஏறுங்க. முன்னுக்கு எறக்கி விடறென். வீட்டுக்குப் போற வழியப் பாருங்க” எனக் கூறிவிட்டு மோட்டாரைத் திருப்பினான். கட்டளைகளுக்கு முன் மனம் சட்டென அடிமையாகின்றது. ஏறி மோட்டாரில் அமர்ந்துகொண்டேன். எல்லாமும் புதியதாக இருந்தது. ஒரு கிலோ மீட்டர் வந்ததும் நகரத்திற்குள் நுழையும் பெரிய சாலை பக்கமாக வந்து சேர்த்தான். இரைச்சலாக இருந்தது.

“தாத்தா..வீட்டுக்குப் போற பஸ்ஸெ பிடிச்சி போய் சேருங்க.. போன் நம்பர் இருக்கா?” எனக் கேட்டுவிட்டு சுற்றிலும் பார்த்தான். காற்சட்டை பைக்குள் மீண்டும் கைவிட்டுத் துழாவினேன். எதுவுமே தட்டுப்படவில்லை. தலையை இரு மருங்கிற்கும் ஒருமுறை ஆட்டினேன்.

“சரி எனக்கு வேலைக்கு மணியாச்சி.. வீடு போய் சேருங்க”
மோட்டார் பெரும் புகைகளுக்கு நடுவே சட்டென காணாமல் போனது. வாகனங்களின் பேரிரைச்சல் மனதை என்னவோ செய்தது. மீண்டும் எதையோ மறப்பதைப் போல தோன்றியது. வேகமாக நடந்தேன். பசி சிறுக சிறுக குடலைத் தின்று கொண்டிருந்தது. நான் இப்பொழுது இருப்பது கனவாக இருக்குமோ? எங்காவது மயங்கி விழும்போது ஒருவேளை நான் நிஜ உலகத்திற்குத் திரும்பக்கூடும். கனவிலிருந்து விழித்ததும் நான் வீட்டின் கட்டிலில் இருக்கக்கூடும். சிவா, மல்லிகா எல்லோரும் என்னை வியப்போடு பார்த்துக்கொண்டிருப்பார்கள். இது கனவு. வெறும் கனவுத்தான். நடந்தால் எல்லாம் சரியாகிவிடும். 

‘மல்லிகா.. தோ.. வந்துட்டேன்மா.. இது கனவுமா...டேய் சிவா..ஒழுங்கா வேலைக்குப் போறியா இல்லையா? தோ.. அப்பா வந்துட்டேன்.. இவ்ள நாளா எங்கப் போனென் தெரியுமா? கனவுல்லே இருந்தேண்டா” எது நிஜம் எனத் தெரியாமல் வேகமாக நடந்தேன். உண்மையைக் கண்டறிய வேகமாக நடப்பதுதான் ஒரே வழி. கால்கள் வலு இழந்துவிடக்கூடும். தூரத்தில் வெளிச்சங்களும் இரைச்சல்களும் தனது அகால கைகளை விரித்து வைத்திருந்தன.

எம்.ஜி.ஆர் குமார் தூண்களுக்கு மத்தியில் நிற்பது போல தெரிந்தது. அவனேதான். 

“டேய்..குமாரு.. எங்கடா போனே.. எம்.ஜி.ஆரு....யேண்டா ஓடிப்போனெ? நீ இல்லாம தனிமை கொல்லுதுடா..” சாலையைக் கடப்பதற்குள் பாதி உயிர் போய்விட்டது. எந்த வாகனமும் சாமான்யனுக்கு இடம் கொடுப்பதில்லை. பெரிய தூண்கள். இடையிடையே சிலர் பாய் விரித்துப் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர். சட்டையில்லாமல் மேல் வாய் வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, பெரும் குரட்டையில் ஆழ்ந்து போயிருந்த கிழவனின் வலது கை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. கால்கள் இரண்டையும் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு சுருண்டு படுத்திருந்த சீனக்கிழவியை எங்கோ பார்த்ததைப் போல இருந்தது. சட்டை, பழைய துணி என அனைத்தையும் கீழே போட்டு அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் குமாரை அங்கே வைத்துப் பார்த்ததாகத்தான் ஞாபகம். ஆனால் அவன் அங்கு இல்லை. தூண்கள் உயர எழுந்து திடமாக நின்றுகொண்டிருந்தன. மயக்கம் தலையைச் சுழற்றிக்கொண்டிருந்தது. நகரத்தைப் பாதி இருள் கவ்வியிருந்தது. எனக்கருகில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் வீடு எப்படி இருந்திருக்கும்? இப்பொழுது அவர்களின் வீடுகளுக்கு என்னவாகியிருக்கும்? அவர்கள் எப்பொழுது வீட்டைத் தொலைத்திருப்பார்கள்? எழுப்பி அவர்களைக் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. மனமில்லை. உடல் சோர்வின் விளிம்பில் கடைசி உற்சாகத்தையும் தொலைத்திருந்தது. அப்படியே ஒரு தூணுக்கு முதுகை முட்டுக்கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டேன்.

வீட்டின் முன் நான் ஜோனி நாய்க்குட்டிக்குக் கட்டி வைத்தப் பெரிய கூண்டு இப்பொழுது இருக்குமா? வெளிச்சுவரில் அழகாக அடுக்கி வைத்துவிட்டு வந்த பூச்செடிகள் இப்பொழுது பெரிதாக வளர்ந்திருக்கும். சிவா பையன் சுவரில் முன்பு கிறுக்கி வைத்ததைச் சாயம் அடித்து அழிக்காமல் பாதுகாத்து வந்தேன். அதை யாராவது சாயம் அடித்து மறைத்திருப்பார்களா? இலேசாகப் பிடுங்கிக்கொண்ட முன் கதவின் தாழ்ப்பாளை சரிச்செய்துவிட்டேனா? ஒன்றுமே தெரியவில்லை. வீடு ஞாபகமாக இருந்தது. உறக்கமும் பசியும் ஒரு சேர கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. இப்பொழுது உறங்கினால் மறுநாள் வீட்டில் இருப்பேன். யாராவது வந்து தூக்கிக்கொண்டு போவார்கள். வீடு இங்குத்தான் எங்கோ இருக்கிறது. கண்களை மூடினேன். நகரம் குருடாகிப் போக, இரைச்சல்கள் மங்கின. வாய் மட்டும் ஏதோ உளறியது.

“நான் கட்டெ மணியம்..கட்டெயா இருப்பென்.. வீடு....ஆஆஆஆ..பெருசா இருக்கும்..பூச்செடி நெறையா இருக்கும்..ரெண்டு பிள்ளைங்க...ஜோனி...”

-முடிவு-
கே.பாலமுருகன்
Thanks : thinakural sunday edition

5 comments:

Kalaivani said...

கதை படிப்பதற்கு சுவாரிசியமாகவும் நன்றாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்...

Unknown said...

தங்களின் சிறுகதைகளில் நான் வாசித்த முதல் கதை இது.. இதுவரையில் சிறுகதைகளின் மேல் எனக்கு இருந்த தோற்றம் யோசிக்க வைத்தது... நன்றி..

Unknown said...

தங்களின் சிறுகதைகளில் நான் வாசித்த முதல் கதை இது.. இதுவரையில் சிறுகதைகளின் மேல் எனக்கு இருந்த தோற்றம் யோசிக்க வைத்தது... நன்றி..

Unknown said...

கதை சிறப்பாக உள்ளது.இறுதியில் அதிகம் யோசிக்க வைத்தது. நன்றி..வாழ்த்துக்கள்

Unknown said...

கதை அருமையாக இருந்தது. யோசிக்க வைத்த ஒரு கதை...வாழ்த்துக்கள்