Monday, February 4, 2013

டேவிட்: திரைவிமர்சனம் - முன்முடிவுகளும் கலையும்


டேவிட் திரைப்பார்வை: அநேகமாகப் பல வலைத்தல விமர்சகர்களும் முகநூல் நண்பர்களும் அதிகமாக வெறுத்தொதுக்கிக் கொண்டிருக்கும் படமாக டேவிட் இருக்கக்கூடும். முதலில் நாம் சினிமா குறித்த முன்முடிவுகளை மேலும் விரிவாக ஆராய வேண்டும். சினிமாவை நோக்கிய ஒரு சாமான்யனின் எதிர்பார்ப்புகள் என்ன?

 1. படம் அவனை மகிழ்ச்சிப்படுத்தவதாகவே இருக்க வேண்டும். சோகமும் சோம்பலும் மற்ற மனித உணர்வுகளின் உச்சங்களும் அவனுக்கு அநாவசியம்.
 2. பொழுதைக் கழிக்க மட்டுமே அவன் சினிமாவைத் தேடி வருகிறான்.
3. சினிமா மிக எளிமையானதாக இருக்க வேண்டும். அதிகம் மூளை உழைப்பைப் பார்வையாளனிடமிருந்து கோராத சினிமாவே வேண்டும். இவையனைத்தும் சினிமாவை கலை என்பதிலிருந்து நகர்த்திக் கொண்டு போய்விட்டது.

இப்பொழுது சினிமா என்பது நிச்சயம் கலை இல்லை எனும் முன்முடிவுகளை அழுத்தமாக நம்புகிறவர்களிடம் இப்படம் குறித்து நான் விமர்சிக்கவே தேவையில்லை. அவர்களுக்குரிய படமே இல்லை.

அடுத்ததாக, சினிமா ஒழுக்கத்தைக் கற்பிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என நம்பும் சமூகக் காவல்துறை அதிகாரிகளின் முன்முடிவுகள். ஆனால், ஒரு சமூகம் ஒழுக்கம் எனும் நம்புவதை இன்னொரு சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? இல்லாதவேளையில் அது போதனையாகவோ அல்லது பிரச்சாரமாகவோ திணிப்பாகவோ மாறிவிடும் என யாரும் கவலைப்படுவதற்கில்லை. இவர்களைப் போன்றவர்கள் உலகில் உள்ள அனைத்துக் கலைகளும் சமூக ஒழுக்கத்தைப் பேணும் கருவி என்றே நம்புகிறவர்கள். கல்வியிலும், இலக்கியத்திலும், சினிமாவிலும், மேடைப்பேச்சுகளிலும் என எங்கிலும் அவர்களுக்கு வேண்டியது ஒழுக்கப் போதனைகள். அப்படியென்றால் இந்த உலகமே ஒரு குருகுலம். எல்லோரும் வாயைப் பொத்திக்கொண்டு உபதேசம் மட்டுமே கேட்கக் கடமைப்பட்டவர்கள். நிசத்திற்கும் உண்மைக்கும் முன் நாம் என்றுமே நிற்க முடியாது என்பதுபோல் ஆகிவிடும். காலம் முழுக்கவும் நமக்கு ஒழுக்கப் போதனைகள் தேவைப்படுகிறது. இதுபோன்ற முன்முடிவுகள் உள்ளவர்களிடமும் டேவிட் படம் குறித்துப் பகிர்வதற்கு ஒன்றுமில்லை. மன்னிக்கவும்.

டேவிட்: மிகவும் மெதுவான திரைக்கதை. ஒரு நத்தை நகர்வதை எவ்வளவு நேரம் பொருமையாக அமர்ந்து தரிசிக்க முடியும்? ஆனால், அதை வெறுப்பவர்கள் கிடையாது. பார்க்க முடியும் என்பதற்கு ஆர்வமும் இரசனையும் பொருமையும் தேவைத்தான். குறிப்பாக விருப்பத்தின் அடிப்படையில் உருவான பயிற்சியும் தேவை. ஆனால், டேவிட் திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் விருவிருப்பாக நகர்வதற்குச் சாத்தியமுள்ள ஒன்றா எனக் கவனிக்க வேண்டும். உலகில் டேவிட் என்கிற பெயரில் எத்தனையோ மனிதர்கள் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குடிக்காரனாக இருக்கக்கூடும். ஒரு மீனவனாக இருக்கக்கூடும். ஒரு இசைக் கலைஞனாக இருக்கக்கூடும். ஒரு மதப்போதகராக இருக்கக்கூடும். டேவிட் என்கிற பெயரில் உள்ள கோடி மனிதர்கள் இப்பொழுது இந்தக் கணத்தில் என்ன செய்து கொண்டிருக்கக்கூடும்? ஒரு மரத்தடியில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கலாம். ஒரு சண்டை முடிந்து இரத்தக்காயத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கலாம், பரப்பரப்பற்ற ஒரு மாலையில் தேநீர் அருந்து கொண்டிருக்கலாம்.

நமக்கு பிடித்த மாதிரியோ அல்லது நாம் நினைக்கும் அளவிற்கோ அவர்கள் வாழ மாட்டார்கள். டேவிட் திரைக்கதையும் அந்தப் போக்கிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. டேவிட்டாக உலகில் பல மூலைகளில் வாழும் மனிதர்கள் ஏன் நல்லவர்களாக்கத்தான் இருக்க வேண்டுமா? அல்லது கடவுள் பக்தியாளர்களாக இருக்க வேண்டுமா? அல்லது ஒழுக்கச் சீலர்களாக இருக்க வேண்டுமா? அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் தருணங்களில் நாம் நுழைந்து பார்க்கிறோம். நமக்கு வசதியானதை ருசிக்கிறோம், பிடிக்காததை உதறித் தள்ளிவிட்டு வெளியேறுகிறோம். டேவிட் அப்படியொரு வாய்ப்பை வழங்குகிறது. வாழ்க்கை குறித்த மிகவும் எளிமையான பார்வை இது. பார்வையாளனை அதிகம் தத்துவச் சிக்கலிலோ ஆராய்ச்சியிலோ இறக்காமல், இதுதான் இந்த உலகில் வாழும் ஒரு சில டேவிட்டுகள் என்பதாக நகர்கிறது.

ஒளிப்பதிவு: படத்தின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுகள் சொல்லியே ஆக வேண்டும். பெரும்பாலான காட்சிகள் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. இரவு வேளையில் விக்ரமும் இன்னொரு பெண்ணும் அதிகம் உறுத்தாத நிலா வெளிச்சத்தில் படகில் செல்லும் காட்சியும், ஜீவா குடியிருக்கும் அடுக்குமாடி காட்சிகளும் இரசிக்கத்தக்கவை.

இசை/பின்னணி இசை: பெரும்பாலான காட்சிகள் பின்னணி இசை இல்லாமல் வெறும் வசனங்களால் நகர்வதே பார்வையாளர்களுக்குச் சலிப்பை உருவாக்கிவிடுகிறது. வழக்கு எண் 18/9 படத்தில் இசையே இல்லாமல் வந்த பாடல்களும் நமக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கவில்லையா? மேலும் பயிற்சி தேவை என நினைக்கிறேன். அதிரடியான கதாநாயகத்துவ பின்னணி இசைகளைக் கேட்டுப் பழகியதால் டேவிட் அலுப்பூட்டவேக்கூடும்.

கவனிக்கத்தவறிய விசயங்கள்: திரைக்கதை அமைப்பு. வேறு மாதிரியும் யோசித்திருக்கலாம். அதிகபடியான சலிப்புக்கு இடம் கொடுக்காமல். (இப்படிச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது எனத் தெரியவில்லை, ஆனால் பழக்கப்படுத்தப்படாத பார்வையாளர்களின் சார்பில் சொல்லியாக வேண்டும்).

பாராட்ட வேண்டிய விசயங்கள்: 1. முழுக்க ஒரு கிருஸ்த்துவ வாழ்க்கைமுறைக்குள் வைத்துப் படம் சொல்லப்பட்டிருக்கிறது. விக்ரமின் அம்மா வயதான ஒரு கிருஸ்த்துவப் பெண்ணையே முழுக்கப் பிரதிபலிக்கிறார்.

2. அடிக்கடி பேயாக வந்து விக்ரமுடன் பேசும் அவரின் இறந்த தந்தை. அவர் விருப்பத்திற்கு எல்லோர் உடலிலும் நுழைந்து வருகிறார். இதை இரு நகைச்சுவையாக மட்டுமே நினைத்துக் கடந்துபோனால் பிரச்சனையில்லை. ஆனால், விவாதத்திற்கு உட்படுத்தினால், இதுவே படத்தின் மற்றொரு பலவீனம். ஒருவேளை அது விக்ரமின் கற்பனை என அமைக்கப்பட்டிருந்தாலும் சிறப்பாக இருந்திருக்கும்.

வாழ்க்கை நாம் நினைக்கும் ஒழுக்கம் என்கிற மதிப்பீட்டுக்குள் இல்லை என்பதே நிஜம். ஆனால், அதை ஏன் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்றே பலர் நினைக்கிறார்கள். நான் செய்யும் ஒழுக்க மீறல்களை ஏன் இன்னொருவன் சினிமாவாக எடுத்து அம்பலப்படுத்த வேண்டும் என்பதே கலையை நோக்கி ஒருவனின் கேள்வியாக இருக்கிறது? அக்கணத்தில் ஒரு காவல்துறை அதிகாரியின் மனநிலைக்குள் அவன் தள்ளப்பட்டு கலை என்பது ஒழுக்கத்தைப் போதிக்கும் கருவி அல்லவா எனத் தீர்மானிக்கிறான்.

டேவிட் படத்தின் அதிகம் விமர்சிக்கப்பட்ட காட்சிகள்
1. படிக்கட்டில் அமர்ந்து ஜீவாவும் அவன் சகோதரியும் சிகரேட் புகைக்கிறார்கள்.
2. கடையொன்றில் விக்ரம் ஒரு பெண்ணை முகத்தில் குத்துகிறார். திருமணமாகி கணவனை இழந்த பெண்ணொருத்தியுடன் ஜீவா நெருங்கி பழகி அன்பைப் பகிர்கிறார். இது போன்ற காட்சிகளின் மீது சமூக போலிஸ்கள் அதிகபடியாக வெறுப்பை அடைகிறார்கள். காரி உமிழ்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தையே இக்காட்சிகள் சீரழித்துவிடும் எனப் பதறுகிறார்கள்.

 நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளும் கேள்விகள் சில
1. கலை ஏன் அசுத்தங்களையும் இரத்தங்களையும் கொடூரங்களையும் நிசமான வாழ்வையும் சொல்லக்கூடாதா

2. ஒரு சினிமா சமூகத்தைச் சீரழித்துவிடும் என்றால் சினிமாவே அதிகம் புழக்கமில்லாதா நிலங்களில் இவர்கள் நினைக்கும் அத்துமீறல்களை சமூக சீர்கேடுகளை யார் கற்பிக்கிறார்கள்? சினிமாவில் எதையும் போதிக்கவில்லை, தேவையானதை தேவையான அளவு காட்டுகிறார்கள். அது அந்தச் சினிமாவுக்கும் அது எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களத்திற்கேற்ப மாறுபடும். இனியொரு சினிமாவைப் பார்த்துதான் இச்சமூகம் சீரழிய வேண்டுமா என்ன? அல்லது சீரழிப்பவர்கள் என்ன சினிமாவைக் காலை ஒருவேளை மாலை ஒருவேளை பார்த்துவிட்டா செயல்படுகிறார்கள்? சமூகச் சீரழிவிற்குக் காரணங்களையும் அதன் ஆழத்தையும் ஆராய முடியாத சோம்பேறிகள் போகிற போக்கில் எல்லாம் சினிமாவையும் காரணமாகக் காட்டிவிட்டுத் தப்பித்துவிடுகிறார்கள்.

எது புறக்கணிக்கப்பட வேண்டிய அல்லது விமர்சனத்திற்குட்படுத்த வேண்டிய சினிமா? வாழ்வை முழுமையாக ஆராயாமல் ஒரு மாயையைக் கற்பிக்க முயலும் சினிமா, மேம்போக்கான விசயங்களைக் கொண்டாடிவிட்டு குசிப்படுத்த முயலும் சினிமாக்கள், வரலாற்றையும், உண்மையையும் ஒரு பக்கச்சார்பாகப் போதிக்க முயலும் சினிமா, வரலாற்றைப் பிழையாகச் சொல்ல முயலும் சினிமா, ஒடுக்கப்பட்ட தன் மக்களின் வாழ்வில் எந்தத் துரோகமும் இல்லை என்பது போல் தப்பிக்க முயலும் சினிமா, கவனப்படுத்த வேண்டிய விசயங்களை நிராகரித்துவிட்டு வணிக போட்டியில் குதிக்கும் சினிமா, எல்லாம் செயல்களுக்கும் ஒன்றையே அதிகபடியாகக் காட்டிவிட்டு தப்பிக்க முயலும் சினிமா, கதாநாயகர்களைக் கொண்டாடும் சினிமா. இப்படி ஒரு சினிமாவைப் புரிந்துகொண்டு நாம் வகைப்படுத்தி விமர்சிப்பதும் பேசுவதும் சாத்தியமே. ஆனால், நமக்கு பழக்கமில்லாத, நம்மை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய அம்சங்கள் இல்லை என நினைக்கும் ஒரு படத்தை முற்றிலுமாக நிராகரிப்பது பலவீனமே

ஒரு சினிமாவுடன் தர்க்கம் செய்யலாம். உரையாடலாம். அதற்கான இடம் அப்படத்தில் இருக்க வேண்டும். டேவிட் படத்தை அப்படி ஒதுக்கிவிட முடியாது. ஆனால், விவாதிப்பதற்கும் பேசுவதற்கும் அப்படத்தில் பார்வையாளனுக்குரிய இடைவெளி நிச்சயம் இருக்கின்றது
- கே.பாலமுருகன்

1 comment:

எஸ்.கருணா said...

இந்த விமர்சனத்தில் பெரும்பாலானவை யோசிக்க வேண்டியவையே.வாழ்த்துக்கள்