Tuesday, September 3, 2013

ஓர் எழுத்தாளனின் நியாயமான கோரிக்கையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கமும்

உடனடியான கவனத்திற்கு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சர்ச்சையும் மலேசியப் படைப்பாளர்களும்.

மக்கள் ஓசை ஞாயிறு பத்திரிகைகளில் தொடர்ந்து 'தயாஜி' எனும் எழுத்தாளரின் மீது அடிப்படை நியாயமற்ற அவதூறுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. (வாசிக்க Makkal Osai, 01.09.2013). ஒரு சங்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஆற்றிய எதிர்வினைக்குப் பொறுப்பு வகித்து பதிலளிக்காமல் தயாஜி எனும் தனிநபர் உரிமை குறித்துக் கேட்டதற்காக எல்லோரும் ஒன்று திரண்டு பத்திரிகையில் அவருக்கு எதிராக அவதூறுகள் கிளப்புகிறார்கள். மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் சேகரிக்கப்பட்டு அதிலுள்ள தனிமனிதர் அவதூறுகள் தொடர்பான வரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் அவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.(இந்த வரிசையில் நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்களும் அடங்குவார்).

இந்த விவாதம் தொடங்கப்பட்டது: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.ராஜெந்திரன் அவர்கள் கோலாலம்பூரில் நிகழ்ந்த பெண்ணிய இலக்கியத் தொகுப்பு நிகழ்ச்சியின் மேடையில் இலக்கியத்திற்கு எதிரான கண்டனத்திற்குரிய கருத்துகளைச் சொல்லியிருந்தார். யோகியின் மூலம் அவர் ஆற்றிய உரை முகநூல் பார்வைக்கு வந்ததை அனைவரும் அறிவர். வீடியோ பதிவைக் காண: ( http://www.facebook.com/photo.php?v=549519475112486&set=vb.100001633141369&type=3&theater) ஆனால் இதுநாள் வரை தனக்கு எதிராக வந்த அந்தக் கண்டனம் குறித்து அவர் பொதுவில் கருத்துரைக்காதது வருத்தத்தை அளிக்கின்றது. ஆகையால், அதனைக் கண்டித்துத் தொடர்ந்து எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை பரிசளிப்பும் தொகுப்பு வெளியீடும் விழாவில் மூன்று எழுத்தாளர்கள் கலந்துகொள்ளவில்லை என்று முடிவெடுத்து முகநூலில் தெரிவித்திருந்தனர். (கே.பாலமுருகன், அ.பாண்டியன், தயாஜி).



மேலும், அம்மூன்று எழுத்தாளர்களும் முறைப்படி கடித்தத்தின் வாயிலாக தங்களின் எதிர்வினையைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தங்களுக்குரிய காப்பிரைட்டைத் தருவதில் சங்கம் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். இதனிடையே மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதை தேர்வுக் குறித்து வல்லினம் இதழ் வழியாக ம.நவீன், தயாஜி, பாண்டியன், கங்காதுரை, விஜயா, பாலமுருகன் எனப் பலர் எதிர்வினை கட்டுரையை எழுதியிருந்தனர். அந்த எதிர்வினையின் சாரம் பின்வருமாறு:

அ. 'பந்துவான்' சிறுகதை தேர்வு நூலில் இடம்பெற்ற அனைத்துக் கதைகளும் மலேசிய நாளிதழ்களில் கடந்தாண்டு பிரசுரமானவையாகும். அதனை எழுத்தாளர் சங்கம் ஒரு நீதிபதி குழு அமைத்துச் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து அதனைத் தொகுப்பாக்கி ஆண்டுதோறும் வெளியீடுகின்றது. மேலும் தேர்வுப்பெற்ற கதைகளை எழுதிய படைப்பாளர்களுக்குப் பரிசுத் தொகையும் வழங்கி வந்தது. (நானும்கூட இரண்டுமுறை அப்பரிசைப் பெற்றுள்ளேன்).

ஆ. வல்லினத்தின் வாயிலாக ஓர் எழுத்தாளரின் உரிமம், அவருக்குரிய காப்பிரைட் பணம், பிரசுர உரிமை, புத்தகம் அச்சாக்கம் போன்ற பல தகவல்களை எங்களால் அறிய முடிந்தது. ஆகையால், இவ்வளவு நாள் ஓர் எழுத்தாளனுக்கு உரிய முறையில் போய்ச்சேர வேண்டிய உரிமையை/உரிமத்தை எழுத்தாளர் சங்கம் 'பரிசுத்தொகை' என்கிற பெயரில் வழங்கி வந்ததை உணர்த்தவே எதிர்வினையாற்றினோம். எழுத்தாளர் இயக்கம் செய்யும் இலக்கியப் பணிகளில் எங்களுக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், அவர்களின் நடவடிக்கைகளிலுள்ள போதாமைகளைத் தெரியப்படுத்துவதில் இந்நாட்டு எழுத்தாளர்களுக்கு உரிமையும் தார்மீகமும் உண்டு என்பதை யாராவது மறுக்க முடியுமா?

இ. அடுத்ததாக, பத்திரிகையில் பிரசுரமான அக்கதைகளைப் புத்தகமாக அச்சாக்கம் செய்வதற்கு முன்பாகக் குறிப்பிட்ட ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சங்கம் முறைப்படி கடிதம் அனுப்பி அறிவிப்பு செய்திருக்க வேண்டும் அல்லவா? பொதுவாகப் பத்திரிகையில் செய்தியை வெளியிட்டோம் நீங்கள் பார்க்கவில்லையா என சிறுப்பிள்ளைத்தனமாகக் கேட்கும் வேலையெல்லாம் எடுப்படாது. இதை மேற்கொண்டது ஒரு சங்கமாக இருக்கும் வேளையில், அவர்கள் முறைப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவர்களின் கதை தேர்வானதையும் அவர்களின் கதைகள் புத்தகமாக்கப்படும் என்பதையும் தெரிவித்திருக்க வேண்டியது மிக அவசியம். எழுத்தாளன் என்பவன் சங்கங்களின் அடிமைகள் கிடையாது. அவனை அணுகுவதற்கும் வழிமுறைகள் உண்டு என்பதை உணர்த்தவே எதிர்வினையாற்றினோம்.

ஈ. வல்லினம் இதழில் பலர் எதிர்வினையாற்றியிருந்தாலும், தயாஜியின் எதிர்வினை கட்டுரையை மட்டும் தேர்ந்தெடுத்து எழுத்தாளர் சங்கம், ஆ.குணநாதனின் வாயிலாக அறிக்கை ஒன்றினைப் பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர்களுக்கு காப்பிரைட்/உரிமம் குறித்து அறிவிக்காதது சங்கத்தின் தவறு என ஒப்புக்கொண்டது. அப்படி அவர்கள் அதை மட்டும் செய்திருந்தால் கட்டாயம் நானே பாராட்டியிருப்பேன். இனி அத்தவறுகள் நடக்காது என பொதுவில் ஒப்புக்கொள்வது சங்கத்தின் பெருந்தன்மையைக் காட்டியிருக்கும். ஆனால், ஆ.குணநாதனின் அப்பத்திரிகை செய்தியில் தயாஜி என்கிற தனிமனிதன் மீது ஒட்டுமொத்த சமூகத்தின் வெறுப்பையும் திசை திருப்பும் வகையில் பல கண்டனங்கள் எழுப்பப்பட்டிருந்தது. தயாஜி ஒருவரால்தான் சங்கம் தனது சிறுகதை தேர்வையும் தொகுப்பு நூல் பிரசுரித்தலையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தது. எழுத்தாளர் சங்கம் தாங்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகள் குறித்து வருந்தாமல் ஏன் அத்தவற்றையெல்லாம் தயாஜி என்பவரின் மீது சுமத்தி தப்பிக்க வேண்டும்? ஆகவே, இதனால் எதிர்வினைகள் தொடர்ந்து இரு பக்கங்களிருந்தும் வெளிவந்தன.

உ. தினக்குரல் பத்திரிகையில் வல்லினம் நண்பர்களின் எதிர்வினைகள் தொடர்ந்து பிரசுரமாயின. ஆனால், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு எதிராக வரும் விமர்சனங்களை இனி பிரசுரிக்க வேண்டாம் எனச் சங்கத் தலைவர் நேரிடையாக அவர்களைத் தொடர்புக்கொண்டுள்ளார். ஆகவே, எங்களின் விமர்சனங்கள் வெளிவரத் தடையை உருவாக்கியதோடு எங்களுக்கு எதிராகப் பலரும் எழுத மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் இடம் கொடுத்திருக்கிறார்கள். இது என்ன பத்திரிகை தர்மம்? ஒரு சாரார் மட்டுமே எதிர்வினையாற்ற வாய்ப்புள்ள நிலையில் இந்த விவாதத்தை எப்படி நேர்மையாக எதிர்க்கொள்ள முடியும்? ஆகவேதான், நாங்கள் இது தொடர்பாக வழக்கறிஞர்களின் ஆலோசனையை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்று தயாஜிக்குப் பலவழிகளில் மிரட்டல்களும் ஆட்சேபனைகளும் வந்த வண்ணமே உள்ளன. முகநூல் சக்தி வாய்ந்தவை என நான் இன்னமும் நம்புகின்றேன். ஓர் எழுத்தாளனுக்கு இந்த மண்ணில் நிகழ்ந்த நியாயமற்ற சூழலுக்கு மலேசிய நண்பர்கள் அனைவரும் உடனே இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக மேலும் வாசிக்க தயாஜி வெள்ளை ரோஜாவின்(Tayag Taya G Vellairoja ) முகநூல் பக்கத்தில் போய் படிக்கலாம்.

எதற்கெடுத்தாலும் பாரதியின் கோபத்தையும் தார்மீகத்தையும் எதிர்ப்பையும் உதாரணம் காட்டும் நாம் பொதுவாழ்க்கை பாதிக்கும் எனப் பயந்து சுணங்கிப் போவதோ பின்வாங்குவதோ வரலாறு கவனிக்கும் அபத்தங்களாகிவிடும். தயாஜியின் எதிர்வினையில் குரலில் அப்படியென்ன நியாயமின்மையைக் கண்டுவிட்டோம்? படைப்பாளர்களின் உரிமையைக் கோருவது தவறா?


 - கே.பாலமுருகன்

மேலும் இதைப் பற்றி வாசிக்க:

1. http://vallinam.com.my/version2/?p=557

2. http://vallinam.com.my/version2/?p=542

3. http://vallinam.com.my/version2/?p=560

4. http://vallinam.com.my/version2/?p=544

5. http://vallinam.com.my/version2/?p=456

6. http://vallinam.com.my/version2/?p=469

7. http://vallinam.com.my/version2/?p=460




1 comment:

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் நண்பா...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள இணைப்பின் வழியாக சென்று பாருங்கள்...

http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4216.html

நன்றி.