Monday, November 4, 2013

மூடர் கூடம்: கஞ்சா விற்பனின் அபத்தமான கம்யூனிச உணர்வு


கதைச்சுருக்கம்: மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு இரகசியமாக ஓடத் திட்டமிட்டிருக்கும் ஒரு பணக்காரனின் வீட்டில் திருடுவதற்காக நுழையும் நான்கு அடித்தட்டு இளைஞர்கள், எப்படி இறுதியில் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட்வாதிகளாக மாறி எல்லோரையும் விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதே. வர்க்க ரீதியில் பிரிந்து சிதைந்து கிடக்கும் சமூகத்திடம் ஒரு பொதுவான அற உணர்வையும் நியாத்தையும் நிறுவ முயன்று படம் விழிப் பிதுங்கி நிற்கின்றது. 


கடவுள் என நாம் சொல்லக்கூடிய ஒன்று முழுக்க கம்யூனிசம்தான். இந்த நிலம், இந்தக் காற்று, இந்த ஆகாயம், இந்த நிலத்தில் விளையும் அனைத்துமே எல்லோருக்குமானது. ஆனால் கடவுள் வழிபாட்டை/ கடவுள் நம்பிக்கையை முன்னெடுக்கும் சில நாடுகளில் 'கம்யூனிசம்' தடை செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயமாகும். மூடர் கூடம் படமும் முழுக்க கம்யூனிசத்தைத்தான் கொஞ்சம் காலாவதியான முறையில் பேசுகிறது.

படத்தின் ஒரே ஆறுதல்: 

படத்தின் திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவின் புதிய அலை என்று கட்டாயம் சொல்லலாம். அதன் திரைகதையே. இதுதான் தமிழ் சினிமாவின் அடுத்த நிலை. பழைய முறையிலேயே கதையைச் சொல்வது கசந்துவிடும். மூடர் கூடம் படம் கொஞ்சம் கவனத்தைப் பெற்றதற்குக் காரணம் அதன் கதையல்ல, அப்படத்தின் திரைக்கதை முயற்சியும், கதைச்சொல்லல் முறையும்தான். குறிப்பாக ஒவ்வொன்றிற்கும் ஒரு 'முன்கதை' இருப்பதைப் போல காட்டியிருக்கும் விதம் படத்தின் திரைக்கதையைப் பலப்படுத்துகிறது. அந்த வீட்டில் இருக்கும் நாய் எப்படிப் பலவீனமான ஒரு நாயாக்கப்படுகிறது என்பதற்குக்கூட ஒரு முன் கதை வைத்திருப்பதும், அந்த வீட்டிலிருந்த ஒரு பொம்மையின் முன் கதையைச் சொல்லும்போது வாழ்க்கையே ஒரு பொம்மைப் போலத்தான் எனச் சொல்ல முற்படுவதும் படத்திற்கான முக்கியமான இடங்கள். அதே போல படத்தின் மையக்கதைப்பாத்திரங்கள் ஒவ்வொருவரின் முன்கதையியும் வெவ்வேறு முறையில் மிகச் சுருக்கமாக பல்வேறு உத்தியில் சொல்லியிருப்பது புதுமை. 'சிக்காக்கோ' என்ற படத்தின் கதைமொழியைப் போன்ற சாயல் இருந்தாலும் இது தமிழுக்கு மிகப் புதிது.

அடுத்ததாக, அத்தியப்பன் சிவாவின் எடிட்டிங், நடராஜன் என்பவரின் பின்னணி இசை, டோனிசனின் ஒளிப்பதிவு, பிரேம் நவாசின் கலை என அனைத்துமே அறிமுகமில்லாத திரைக்கலைஞர்களின் கூட்டு முயற்சியில் படம் ஒரு புதிய திரைமொழியை அடைகிறது. இப்படத்தின் இவர்கள் யாவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக இப்படத்தின் இசை கிண்டலுக்குரியது. பணத்திற்கு முன் அனைவரின் வாழ்க்கையும் கோமாளித்தனமாகிவிடுவதை ஓங்கி ஒலிப்பதைப் போல உணர முடியும்.

படம் முன்வைக்கும் அரசியலின் மீதான விமர்சனம்

வர்க்க யதார்த்தம், வர்க்க முரண்பாடு, மார்க்சியம் போன்ற விசயங்கள் இன்று உரையாடல் , சிந்தனை, இலக்கியம், கலை ரீதியில் ஆழமாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில் அதைப் பற்றிய முதலாம் ஆண்டு வகுப்பெடுக்க நினைக்கும் 'மூடர் கூடம்' தீவிர அரசியல் பார்வையுடைய மனிதர்களைக் கவர முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் இதைவிட மார்க்சியத்தைத் தீவிரமாகக் காட்டிய படங்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றன என்றே கருதுகிறேன். 

அடுத்ததாக, தமிழ் சினிமாவின் பழைய ருசியிலேயே உறைந்துகிடப்பவர்களை, இயக்குனர் நவீனின் மேதாவித்தனமான உரையாடல்கள் சற்றும் அசைக்கப்போவதில்லை என்பது உறுதி. அவர் பேசும் வசனங்களைக் கூர்ந்து கேட்க வேண்டும், அது அழுத்தமான அதே சமயம் படப்படவென காணாமல் போகும் ரகம். கட்டாயம் விசில் அடித்து ஆர்பாட்டம் செய்ய வரும் இரசிகர்களை அது சிந்திக்க வைக்கப்போவதில்லை. ஆகையால், இதுபோன்ற இரசிகர்களையும் மூடர் கூடம் அடையவில்லை.

பிறகு யாரைத்தான் மூடர் கூடம் இரசிக்க வைக்கும்? நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இதற்கு முன் விதிக்கப்பட்ட தங்கள் மீதான இழிவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளப் போராடிக் கொண்டும், மேல்தட்டு மனிதர்களின் சாயல்களில் கொஞ்சத்தைப் பிரதியெடுத்து அவர்களைப் போன்ற பாவனையில் வாழ்ந்து கழிக்கும் நகரத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்க மனிதர்களை 'மூடர் கூடம்' படம் சிரிக்க வைக்கலாம். அடித்தட்டு மனிதர்களின் அல்லது வர்க்க நிலையில் பொருளாதாரத்தில் தொய்ந்துபோய் வாழ அடுத்தவனிடம் பிச்சையெடுக்கும் நிலையில் வாழும் மக்களின் முட்டாள்தனத்தை 'மூடர் கூடம்' படம் நெடுக கிண்டலடித்துள்ளது. செண்ட்ராயன், குபேரன் கதைமாந்தர்கள் எத்துனை முட்டாள்தனமாக இருக்கிறார்கள்/செயல்படுகிறார்கள் என்பதையும் அதனை நவீன் என்கிற கதைப்பாத்திரம் நெறிப்படுத்திக் கொண்டே வருவதையும் படம் நெடுகிலும் பார்க்க முடிகிறது. இதுவேதான் படத்தின் மைய நகைச்சுவை காட்சிகளும்கூட. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் நகைச்சுவைகளைவிட மிகவும் ஆபத்தான நகைச்சுவை காட்சிகள் ' மூடர் கூடம்'.

பிராமணர்கள் மீதான அதீத வெறுப்பின் காரணமாக ஒரு சில காலக்கட்டங்களில் அவர்களின் கையாலாகத்தனத்தையும் அற்பப் புத்தியையும் காட்டி கிண்டலடித்துப் படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதே போல காலம் முழுக்க போராடி போராடி ஏதோ கொஞ்சமாய் வாழ்ந்து சாவும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களி தீடிர் அறச்சீற்றத்தையும் காட்டி படம் வெளிவந்துள்ளது. ஆனால், மூடர் கூடம் படம் மக்களை ஏமாற்றிவிட்டு பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடவிருக்கும் ஒரு முதலாளியைப் பழி வாங்கும் இடத்தில் துவங்கி முழுக்க முழுக்க கஞ்சா விற்கும் நிலைக்கு ஆளான இந்திய இளைஞன். ஒரு தேநீர் வாங்கக்கூட வழியில்லாத விளிம்புநிலை இளைஞர்கள் எவ்வளவு முட்டாள்தனமாகச் செயல்படுவார்கள் எனக் காட்டி சிரிக்க வைக்கிறது. படம் அது எடுத்துக் கொண்ட அரசியலிலிருந்து விலகி ஆபத்தான ஒரு விமர்சனத்தில் போய் நிற்கிறது.

ஆக மொத்தம், மூடர் கூடம் என படம் முன்வைப்பது யாரை? வாழ வழியில்லாத அதிகார வர்க்கத்தால் சுரண்டப்பட்டு காலம்தோறும் ஏமாற்றப்பட்டு சமூகத்தின் விளிம்புநிலைக்கு வந்து நிற்கும் மனிதர்களையா? அப்படிப்பட்ட உதிர் மனிதர்களின் வாழ்வை ஆழமாகச் சென்று அடைந்திருக்கிறதா படம்? கஞ்சா விற்கும் இளைஞன் திடீரென அறம் செய்ய விரும்புகிறவனாகக் காட்டப்படுகிறான். தனக்கு கிடைத்த மொத்த 2 லட்சத்தையும் அந்த வேலைக்காரியிடம் திடீரென எடுத்து நீட்டுகிறான். அப்படியென்றால் இயக்குனருக்கு வேண்டியது என்ன? அவருசைய மார்க்சிய சிந்தனையை, கஞ்சா விற்கும் இளைஞன் மீது திணித்து ஒரு பொதுப்புத்தியை நிறுவிக் காட்டி இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக வேண்டும். ஆனால், கஞ்சா விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு விளிம்புநிலை இளைஞன் எப்படிச் செயல்படுவான் என்பதைக் காட்டவோ ஆராயவோ இயக்குனர் தவறிவிட்டார்.

அப்படியென்றால் அந்த மூடர்களை ஒழுங்குப்படுத்தி வழிநடத்தும் 'நவீன்' என்ற கதைப்பாத்திரம் யாரைக் குறிக்கின்றது? அதிகாரத்தின் நிழலில் கொஞ்சமாய் அண்டிக்கொண்டு எந்த சூழ்நிலையிலும் எப்படியும் வாழ என்ன வேண்டுமென்றாலும் செய்யும் எதை வேண்டுமென்றாலும் இழக்கும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையா? அப்படிப் பார்த்தாலும் அந்த மனிதர்களையும் அசலாகக் காட்டத் தவறிவிட்டது படம். அவர்களின் வேலை என்ன அடித்தட்டு மனிதர்களை ஒழுங்குப்படுத்தி நெறிப்படுத்தி வாழ்வதா?

மூடர் கூடம் படம் நம்பியிருக்கும் ஓரே அரசியல், மேல்தட்டு மனிதர்களின் மீதிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் கோபமே. முதலாளிகளின் மீது கோபப்பட்டுக் கொண்டும் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டுக் கொண்டும் அவர்களைப் போன்ற பாவனையில் தங்கள் மீதிருக்கும் வர்க்க யதார்த்ததைக் கடப்பதற்காகவும் அந்த இடைவெளியைக் குறைப்பதற்காகவும் காலம் முழுக்கப் போராடிக் கொண்டிருக்கும் நடுத்தர மனிதர்களின் அற உணர்வயே, கோபத்தையே, நியாயத்தையே 'மூடர் கூடம்' பேசுகிறது. ஆனால், அதைப் பேசுவதற்கு அப்படம் பயன்படுத்திய ஆட்கள் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்கள். இந்த இடத்தில்தான் படம் வர்க்க முரண்பாட்டைப் பெரிதும் கருத்தில் கொள்ளாமல் மார்க்சிய தத்துவமெல்லாம் பேச முற்பட்டுத் தோல்வியடைகிறது. 

நவீன் மற்றும் வெள்ளை கதைப்பாத்திரத்துடன் மற்ற குபேரன் சான்ரயன் என்ற இரு கதைப்பாத்திரங்களும் பெரிதும் முரண்படக்கூடியவை. ஆனால், படம் நால்வரையும் ஒரே பிரச்சனைக்குரிய மனிதர்களாகவும் ஒரே தேவைக்குட்பட்டவர்களாகவும், ஒரே சமூகத்திலிருந்து வந்தவர்களைப் போலவும் காட்டுவதுதான் படத்தின் அரசியல் தவறு. இருப்பினும் இதைப் போன்ற படங்களைக்கூட நாம் ஆதரிக்கவில்லை என்றால் பிறகெப்படி தீவிர சினிமா தமிழில் உதயமாகும் எனக் கேடகப்பட வாய்ப்புண்டு. திரைமொழி வித்தியாசமாக இருக்கிறது என்பதற்காக அப்படம் கொண்டிருக்கும் தவறான அரசியலை ஒப்புக்கொள்வது அதைவிட ஆபத்தானது. 

- கே.பாலமுருகன்

No comments: