Thursday, May 23, 2013

Gandhi Is My Father – ஓர் இந்துத்துவ தந்தையின் அதிகாரம்


வரலாற்றில் பற்பல முறை உடைத்து உடைத்து மீண்டும் கட்டியெழுப்பப்பட்டவர் காந்தி. எழுத்தாளர் ஜெயமோகன் முதல் நடிகர் கமல்ஹாசன் வரை எல்லோராலும் மீண்டும் மீண்டும் புனையப்பட்ட அடையாளம்தான் காந்தி. சிலர் காந்தியின் அமைதி போராட்டத்தை வைத்து இந்தியாவின் மிகச் சிறந்த எதிர்ப்புணர்வு உண்ணாவிரதம்தான் எனக் கூறினார்கள். சிலர் காந்தியைச் சுதந்திர தந்தை என அடையாளப்படுத்தினார்கள். இன்னும் சிலர் காந்தி தன் ஆண்மையைத் தன் பேத்திகளிடமே பரிசோதித்துப் பார்த்தவர் என அவரின் ஒழுக்கத்தை விமர்சித்தார்கள். மேலும் சிலர் காந்தியின் அரசியல் தவற்றை வன்மையாகக் கண்டித்தனர். சிலர் காந்தியை இராமருக்கு நிகரான சமய அடையாளமாகப் புனைந்தார்கள். ஒரு பக்கம் அவரைக் கட்டியெழுப்பியவர்களும் இன்னொரு பக்கம் அவரை நிர்முலமாக்கியவர்களும் காலம் முழுக்க இருக்கவே செய்தார்கள்.

காந்தியின் வரலாற்று படமான ‘காந்தி’ 1982-இல் வெளியாகி ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஒரு வழக்கறிஞர் எப்படி இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதியாக மாறுகிறார் எனும் வரலாற்றை தகவல்கள் அடிப்படையில் மட்டுமே கொண்டு போய் சேர்த்த அப்படத்தை விட்டுவிடலாம். காந்தி குறித்து எந்தக் கேள்வியுமே எழுப்பாத முயற்சி அது. ஆனால், பிறகு வெளிவந்த இரு முக்கியமான படங்கள் கவனத்திற்குரியவை. இரண்டுமே இந்தி திரைப்படங்கள் ஆகும். இவ்விரண்டு படத்தையும் புரிந்து கொள்வதற்கு நமக்கு காந்தியைப் பற்றிய குறிப்புகளும் அவரின் அரசியல் ஈடுபாடுகளும் தெரிந்திருக்க வேண்டும்.


அரசியல் புரிதல்

நம் வட்டாரத்தில் நடக்கும் அரசியல் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதற்கும் உலக அரசியலைப் புரிந்துகொள்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. இங்கு நம் வட்டாரங்களில் ஆண்டுதோறும் நிகழும் ‘நல்லெண்ண விருந்தை’ தவிர அப்படியென்ன அரசியல் முன்னெடுப்புகள் நடந்துவிடுகின்றன? ஆகையால், வட்டாரங்களில் அரசியல் கட்சிகள் ஏழைகளுக்குப் பொட்டலங்கள் கொடுப்பதுதான் அரசியலின் மையம் என நினைத்துவிடுவது மிகப்பெரிய அறியாமை. ஒரு வட்டத்திற்குள்ளேயே நம் அரசியல் பார்வையைச் சுருக்கிவிடக்கூடாது. தொடர்ந்து உலக அரசியலில் நிகழும் அனைத்தையும் கவனிக்க வேண்டும். எந்த சர்வதிகார அரசியல் நிலைப்பாட்டுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் எந்த அரசியல் கட்சியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் உலக அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது கவனமாக எதிர்க்கொள்ள வேண்டிய விசயம்.

காந்தி எனும் அரசியல் அடையாளம் வெறும் இந்திய எல்லைக்குள்ளேயே முடிந்துவிடக்கூடியது அல்ல. உலகம் முழுக்க அறியப்பட்டு விமர்சிக்கப்பட்டவர். அவரை ஒரு இந்திய எல்லைக்குள்ளிருந்து ‘சுதந்திர தந்தை, புனிதர், போராட்டவாதி’ என மட்டும் தட்டையாக அவதானிக்கக்கூடாது. உலக அளவில் காந்தியை எதிர்க்கொண்ட அரசியல் கருத்துகள் எப்படி மாற்றம் கண்டன எப்படி வளர்த்தெடுக்கப்பட்டன, காந்தியின் அரசியல் தவறுகள் என்ன என்பதை விரிவாக அணுகும் மனபான்மைக்கு நாம் வர வேண்டும். யாரோ சொல்லி வைத்த கருத்தில் எந்த உழைப்புமின்றி போய் ஒன்றிக்கொள்வது மாற்று அரசியலுக்குரிய தன்மை கிடையாது. நாமும் காந்தியைப் பூஜிக்க வேண்டாம். மாற்று அரசியல் பார்வையுடன் குறிப்பிட்ட இந்த படத்தின் வழி புனையப்பட்ட காந்தியைக் காண்போம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னரும் அதற்கு முந்தைய பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்த பின்னரும் உருவான இந்து முஸ்லீம் பிரச்சனை/பிரிவினை என்பது வெவ்வேறான அரசியல் தாக்கங்களை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். இப்பிரச்சனைகள் தொடர்பாக இந்திய சினிமா எடுத்த படங்கள் இரண்டே மனோநிலைகளைத்தான் சார்ந்திருந்தது.

அ. இஸ்லாமிய படைப்பாளிகளின், அச்சமூகத்தின் இயக்குனர்களின் அடிப்படையில் அவர்களின் அரசியல் பின்புலத்துடனும் வாழ்வியல் அனுபவங்களுடனும் வெளியான படங்கள்

ஆ.இந்து மக்களையும் இந்து மக்களின் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்கள்

மேலே குறிப்பிட்ட இருவகையான பிரிவினை யமுனா இராஜேந்திரன் அவருடைய சினிமா கட்டுரை ஒன்றில் மேற்கோள் காட்டியிருந்தார். அந்த வகை மாதிரிகளை வைத்துப் பார்க்கும்போது ஹேராம், பம்பாய் போன்ற தமிழில் வெளிவந்த படங்கள் யாவும் இரண்டாவது வகையான திரைப்படமே. இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்த இந்தி திரைப்படம்(Gandi is my father) இந்த இரண்டு வகைக்கும் அப்பால் செல்வதுதான் சிறப்பான அம்சமாகும். மிகத் துல்லியமான வரலாற்று சம்பவங்களையும் அதன்பால் உருவான தீவிரவாதங்களையும் முன்னெடுக்கும் படங்கள் ஒரு பக்கம் வந்தாலும் வரலாற்றின் ஒரு பகுதியில் யாராலும் கண்டுக்கொள்ளப்படாத மறந்துபோன சில விசயங்களை மீட்டுக் கொண்டு வரும் இரண்டு முக்கியமான சினிமாவே gandi is my father and Maine Gandhi ko nahin mara. ஆகவே முதலில் இந்தத் தொடரில் காந்தி என் அப்பா எனும் இந்தி திரையைப் பற்றி உரையாடலாம்.

Gandi Is My Father

இப்படம் இந்தி திரைப்பட இயக்குனரான அப்பாஸ் கான் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியானது. உலகளவில் மிகத் துணிச்சலான படம் என விமர்சனத்தைப் பெற்ற படமாகும். காந்திக்குப் பின்னணியில் அவரின் அரசியல் நிழலால் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட அவரின் மூத்த மகனான ஹரிலாலின் வாழ்க்கையைப் பேசிய படமாகும். சமூகத்தால் கொண்டாடப்பட்ட ஒரு பிம்பத்தின் பலவீனத்தை உலகிற்குக் காட்டிய படம். இப்படிப் பல வகைகளின் கவனப்படுத்தப்பட்ட படம் ‘காந்தி என் அப்பா’.

1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி சரியாக 5.17 மணிக்கு கோட்சேவால் காந்தி மூன்று முறை சுடப்பட்டுச் சாகடிக்கப்பட்டார். அந்தச் செய்தி விரிவாக வானொலியில் சரியாக மாலை ஒலிப்பரப்பப்படும்போது கேட்பாரின்றி தாடி வளர்த்து உடல் மெலிந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறான் காந்தியின் மூத்த மகன் ஹரிலால். காந்தியின் மரணத்தை முக்கியத்துவப்படுத்திய உலகம் அவரால் வாழ்வைத் தொலைத்துச் சிதறிப் போய் காணாமல்போன அவருடைய மூத்த மகனைக் கண்டுக்கொள்ளவேயில்லை. இப்படம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

காந்தியைப் போல சட்டம் பயின்று சிறந்த கல்வியாளராக இருக்க வேண்டும் என்பதே ஹரிலாலின் திட்டம் மற்றும் எதிர்க்கால சிந்தனை. தனக்கான வாழ்வைத் தானே உருவாக்கிக்கொள்ளும் உரிமை தனக்கிருப்பதாக அவன் நம்பினான். தன் ஆசையைக் காந்தியிடம் சொல்கிறான். ஆனால், பிரிட்டிஷ்க்கு எதிராகத் தன் அஹிம்சாவாத போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த காந்தி தன் மூத்த மகனையும் அதில் சேர்த்து களமிறக்க நினைக்கிறார். ஆகையால் ஹரிலால் வெளிநாடு சென்று படிக்கும் திட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

ஹரிலால் தனக்கு மேற்படிப்பு படித்துச் சட்டத்துறையில் பட்டம் பெற வேண்டும் எனும் எண்ணத்தை எவ்வளவு எடுத்துக் கூறியும் காந்தி அதனை மறுக்கிறார். ஹரிலாலைப் போன்ற வயதை ஒத்த மற்ற இளைஞர்கள் உதவித் தொகையில் வெளிநாடு சென்று படிப்பதை ஆதரித்தக் காந்தி செய்த மிகப்பெரிய தவறு தன் மகனை வீட்டோடு அடக்கியது. தன் மூத்த மகனைத் தன்னுடைய அரசியல் செயல்பாடுகளுக்குப் பலியாக்க முற்படுகிறார். ஹரிலாலுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், ஹரிலால் தன் தந்தையின் அரசியல் கொள்கைகளில் ஈடுபாடற்று வெறுப்பை மட்டுமே சேகரித்துக் கொள்கிறான்.

அதன் பிறகு ஹரிலால் தன் நண்பர்களுடன் சேர்ந்து பணம் சேர்ப்பதிலேயே கவனம் கொள்கிறான். சட்ட விரோதமான வியாபார/கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றான். அவற்றில் தோல்வியும் அடைகிறான். வறுமையும் வெறுப்பும் அவனைத் துரத்துகின்றன. மனைவியால் வெறுக்கப்படுகின்றான். இவற்றை அறியும் காந்தி அவனைக் கடுமையாகச் சாடுகிறார். ஒரு போராட்டவாதியின் மகன் இப்படிப்போய்விட்டான் என மனம் வருந்துகிறார்.

தொடர் தோல்விகளால் சிறுக சிறுக அவன் குடும்பம் உடைகிறது. வாழ்க்கைக்கு வெளியே தூக்கி வீசப்படுகின்றான். காந்தி என்கிற மிகப்பெரிய கொண்டாட்டப் பிம்பத்தின் கடுமையான அனலில் பொசுங்கிப் போகின்றான் அவருடைய மூத்த மகன் ஹரிலால். ஒரு குற்றவாளியாக யாருக்கும் அடையாளம் தெரியாமல் காணாமல் போகின்றான்.

காந்தி என் அப்பா எனும் இப்படம் நாம் நம்பிய வரலாறு தன்னுடைய இன்னொரு பக்கத்தில் சேமித்து வைத்திருக்கும் உண்மையைச் சொல்கின்றது. உலகமே போற்றிய காந்தி என்கிற தலைவர் தன் மகனின் வாழ்க்கைக்குள் எப்படித் தன் அதிகாரத்தைச் செலுத்தினார் எனும் நெருக்கடிகள் நிரம்பிய சினிமா. காந்தி மேற்கொண்ட அரசியல் தவறுகள் தொடங்கி இந்தியா பிரிவினையில் காந்தியின் மிக மோசமான அரசியல் முன்னெடுப்புகள் வரை விமர்சித்த பல படங்கள் வந்த காலக்கட்டத்தில் காந்தியின் இன்னொரு பக்கத்தை அவர் அணிந்திருந்த தந்தை வேடத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது ‘Gandi is my father’.

இந்தத் திரைக்குள் ஒலிக்கும் குரல் என்பது ஒருவகையில் காந்தியால் ஒடுக்கப்பட்ட தனக்கென விருப்பங்கள் இருந்த ஒரு மகனின் குரல். அது ஓர் உயிரின் குரலாகவும் இருக்கக்கூடும். காந்தி என் அப்பா எனும் வசனத்திற்குள் வெறும் தகவல் மட்டும் ஒளிந்திருக்கவில்லை, காட்டிக்கொடுத்தலும் இருக்கின்றது. காந்திதான் என் அப்பா, நீங்கள் உத்தமர் என நினைக்கும் காந்திதான் என் அப்பா, என் வாழ்நாளை என்னிடமிருந்து பறித்து வாழ்க்கைக்கு முன் என்னைக் குற்றவாளியாக்கிய காந்திதான் என் அப்பா எனும் குரல் காந்தியின் நினைவாக வரலாறு சேர்த்து வைத்திருக்கும் குற்ற உணர்வே.

குடும்ப அதிகாரமும் ஓர் இந்துத்துவ தந்தையுமான காந்தியும்

இப்படம் எனக்கு நினைவூட்டிய முதல் விசயம் குடும்ப அதிகாரமாகும். ஒரு சிறுவன்/சிறுமிடம் தன் குடும்பப் படத்தை வரைய வாய்ப்பளித்தால், அவர்கள் முதலில் அப்பாவைத்தான் வரைவார்கள். அடுத்ததாக அப்பா கட்டாயம் எல்லோரையும் விட உயரமாக இருக்க வேண்டும். இதுதான் குடும்ப அமைப்பு குழந்தைகளுக்குள் செலுத்தும் அதிகாரத்தின் முதல் வெளிப்பாடு.

காந்தியும் தவறாமல் தன் குடும்பத்தின் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறார். தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அவருடைய கண்கானிப்பின் கீழ் வைத்திருக்கிறார். ஓர் இந்துத்துவ தந்தை செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் அவர் அதிகாரத்தின் வழி தன் மகன் மீது செலுத்தியிருக்கிறார். ஓர் இந்துத்துவ தந்தையின் கடமைகள் என்பது என்னென்ன? தந்தை வழி சமூகத்தின் உறுப்பிய செயல்பாடுகளை உறுதிப்படுத்துவது. குடும்பத்தைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது. தன் கொள்கைகளை மத நம்பிக்கைகளை குடும்பத்தாரிடம் திணிப்பது, குடும்ப வன்முறையை முன்னெடுப்பதன் மூலம் தன் ஆண்மையை நிறுவுவது. மதத்தின் வழி ஆண்டாண்டு காலமாக உருவாகிய தந்தைமார்கள்தான் இத்தகைய குணமுடையவர்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தன் உடலை துன்புறுத்திக் கொண்ட காந்தி, தவறாமல் தன் மகனின் உடல் உள்ளம் மீதும் வன்முறையை கட்டியெழுப்புகிறார். அவர் நாட்டிற்காக உருவாக்கிக்கொண்ட உடலைப் போன்றே தன் மகனும் அவருடைய கொள்கைகளின் வழி அதே உடலைப் பெற வேண்டும் எனும் முடிவுக்கு வருகிறார். இதுவே அவர் தன் மகனின் மீது ஓர் இந்துத்துவ தந்தையாகச் செலுத்தும் கடுமையான செயல் எனப் படம் அழுத்தமாகச் சொல்கிறது.

இத்தனை நாள் இந்திய வரலாறு காட்டிய காந்தி என்கிற அடையாளத்தின் மறுப்பக்கம். அதன் மீது விமர்சனத்தை வைத்திருக்கும் அப்பாஸ் கான் அவர்களுக்கும் அவருடைய படக்குழுவினருக்கும் நாம் நன்றியும் பாராட்டும் செலுத்தியாக வேண்டும். இதைப் போலவே நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான சிங்கை இளங்கோவன் அவர்களும் காந்தியின் இன்னொரு அடையாளத்தை விமர்சித்தவர் ஆவர். இது போல காந்திக்கு எதிரான விமர்சனங்கள் கட்டவிழ்ப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன. வரலாறு தன்னை மறுப்புனைவு செய்துகொள்ளும்.

2 comments:

puvan said...

Thank you so much to share it. Appreciate your words.

puvan said...

Thank you so much to share it.Appreciate your words.