Monday, May 5, 2014

சிறுகதை: வேட்டை நாய்

சரசு அக்கா தலையை ஒருபக்கமாகச் சாய்த்து முன்னாடி இருக்கும் தலைபிரட்டையைப் பார்த்தாள். அதுவொரு இரக்கமற்ற பார்வை. சதையைத் தின்னத் துடிக்கும் பசி மிகுந்த வேட்டை நாயின் பார்வையை ஒத்திருந்தது. கண்களை நாலாதிசையிலும் உருட்டியப் பிறகு தொண்டை கிழியக் கத்தினாள். ஒருவாரத்திற்குப் பிறகு இப்பொழுது மீண்டும் சரசு அக்காவிற்குப் பேய் பிடித்திருந்தது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வேனிற்குள்ளேயே அலறினாள். அநேகமாக அருகில் இருக்கும் மற்ற பெண்களுக்கு நகக்கீறல் சதையைப் பதம் பார்த்திருக்கக்கூடும். காயூ பாலாக் பாதையைக் கடந்துபோகும்வரை பீதி அனைவரின் முகத்திலும் உறைந்திருந்தது. சரசு அக்கா நாற்காலி மெத்தையை அழுத்திப்பிடித்து தன் உடலை மேலே தூக்க முயன்றாள். கால்கள் இரண்டையும் முடிந்தவரை பரப்பிப் பார்த்த பிறகு அது முடியாதபோது பாதி நாக்கு பல்லுக்கிடையில் சிக்கித் திணறியது. தொண்டைக்குள்ளிருந்து அலறியபோது அவளுடைய குரல் ஆணினுடையதாக மாறியிருந்தது. உச்சத்தை அடைந்து அடைப்பட்டு குமுறியது.

அவர்களுக்கு அது வாடிக்கையாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு முன் இப்படிப் பேய்ப்பிடித்த சுகுனா அக்கா பிறகு தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போனது பெரும் மிரட்டலாக எல்லோர் மனத்திலும் அப்பிக் கொண்டது. சுகுனா அக்காவின் கணவன் ஓடிப்போனதிலிருந்து அவள் பித்துப் பிடித்துதான் இருந்தாள். பிறகு பலகை தொழிற்சாலையில் லைனில் வேலைச் செய்யும் குமாருடன் தொடர்பு இருந்து அதுவும் 2-3 மாதத்தில் பிரச்சனையாகிப் போனதால் அவள் மனம் உடைந்துதான் இருந்தாள். குமாருடன் உறவில் இருந்த சமயத்தில் தற்காலிகமாக அவளுக்குப் பேய்ப்பிடிப்பதும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு அடிக்கடி பேய்ப்பிடித்து அலற ஆரம்பித்திருந்தாள். அவளுடைய பழைய காதலன் தான் செய்வினை செய்துவிட்டான் என்றும் அதனால்தான் அவளைப் பேய்ப்பிடித்து ஆட்டுகிறது என்றும் பரவலாகப் பேசிக்கொண்டார்கள். பேய்ப்பிடிப்பது முதலில் ஒரு அதிர்ச்சியாக இருந்து பிறகு ஒரு வாடிக்கையான சடங்காக மாறியிருந்த காலக்கட்டம் அது. அதைப் புரட்டிப்போட்டது சுகுனா அக்காவின் மரணம்தான்.


“சரசு..வேணாம்கா... வெளிய வா..வெளிய வா.. பேய்ப்பிடிச்சா செத்துப் போயிருவடி..” முன்னாடி அமர்ந்திருந்த பாக்கியம் அழுதுகொண்டே அலறினாள். அவளுக்கு உடலெல்லாம் வியர்த்திருந்தது.

பாக்கியம் சட்டை பாக்கெட்டிற்குள் வைத்திருந்த திருநீர் பொட்டலத்தைப் பயப்பக்தியுடன் வாயில் ஏதோ முனகிக் கொண்டே வெளியில் எடுத்தாள். சட்டென்று பிடிப்படாத ஒரு மந்திர உச்சாடனம் அது. அப்பொழுது அங்கே ஒரு பூசாரி தேவைப்பட்டது. அந்த வேனில் அமர்ந்திருக்கும் எல்லோரும் பலகை தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த பிறகுத்தான் மிகவும் சாமிப் பக்தியாக மாறினார்கள். குறிப்பாக நள்ளிரவு வேலை என்றால் எல்லோரின் பாக்கெட்டிலும் திர்நீரும் குட்டி சாமிப்படங்களும் வைக்கப்பட்டிருக்கும். திருநீர்  பேயிடமிருந்து மட்டுமல்ல இன்னும் பல அழுத்தங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு குறியாகவே அவர்களின் நெற்றியை அலங்கரித்திருக்கும்.

கட்டை விரலில் தடவிய திருநீரை வைக்க முயன்ற பாக்கியத்தின் கையை உதறிவிட்ட சரசு இடைநாக்கை மடக்கி வெளியே பிதுக்கினாள். அவளுடைய கண்கள் சொருகியிருந்தன. அவள் அடுத்து நாக்கைக் கடிப்பாள் என வனிதாவிற்குத் தெரியும். சரசுவின் தலையைப் பின்பக்கமாகச் சாய்த்து இரு கைகளையும் தாடைக்கு வாட்டமாகப் பிடித்து எதிர்த்திசையில் இழுத்தாள். சரசுவின் எச்சில் வனிதாவின் முகத்தை நனைத்தது. பல்லுக்கிடையிலிருந்து எச்சில் நுரை பீய்த்து அடித்தது.  

“தலைபெரட்ட சீக்கிரம் போ”

சரசு அக்காவை இழுத்துப் பிடித்திருந்த வனிதாவின் குரல் கணத்திருந்தது. தலைபிரட்டை வனிதாவிற்கு மூத்தார். தன் தம்பியின் மரணத்திற்குப் பிறகே வனிதா பலகை தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தாள். அதற்கு முன் இந்த வேனை வைத்திருந்தது தலைபிரட்டையின் தம்பித்தான். இப்பொழுது அந்த வேன் தலைபிரட்டையின் கைக்கு மாறியது. வனிதாவை வேலைக்கு ஏற்றிச்செல்வது, அந்த வீட்டையும் தம்பி பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதும் என வீட்டின் ஓரத்தில் வாழ்ந்து கிடக்கிறான். ஆனாலும் அந்த வீட்டுப் பிள்ளைகளுடன் அவன் விளையாடுவது கம்மித்தான். பெரிய பிள்ளைக்கு எப்படியும் 12 வயது இருக்கும். நன்கு பக்குவம் தெரிந்தவள். தலைபிரட்டை அவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தான்.

வீட்டுக்கு வெளியே வலது மூலையில் ஒரு கயிறு கட்டில். அதுவும் அவன் படுத்துப் படுத்துத் தொங்கிக் கிடக்கிறது. நாள் முழுக்க பகலையும் வெயிலையும் தின்று தீர்த்தக் களிப்பில் படுத்தே கிடப்பான். அல்லது வெளியில் கிடக்கும் வேனிற்குள்ளேயே படுத்துக்கொள்வான். அந்த வேன்தான் அவனுக்கு எல்லாமும். தம்பி விட்டுப் போன அந்த வேன் முழுக்க தலைபிரட்டையின் வாசம்தான். சட்டென வேனிற்குள் ஏறும் யாராலும் அது தலைபிரட்டையின் மீது வீசும் சாப்பாடு ஊசிப்போன வாடை எனத் தெரிந்துகொள்ள முடியும். பலநாள் அதற்குள்ளேயே படுத்து வாந்தியெடுத்து மயங்கியிருக்கிறான். வனிதாதான் அவனை வெளியே இழுத்து வேனைச் சுத்தம் செய்வாள். எவ்வளவு கழுவியும் அவனுடைய வாடை அங்கிருந்து நீங்கியதில்லை.

பசியெடுத்தால் அவனே வீட்டுக்குள் நுழைந்து சமயலறையில் வனிதா எதை ஆக்கி வைத்திருந்தாலும் எடுத்துச் சாப்பிடுவான். அவனுக்கென்று ஒரு தட்டு, குவளை. வனிதா கணவனின் மரணத்திற்குப் பிறகு தன் மூத்தாருக்கு வீட்டில் ஒரு இடம் வைத்திருக்கத் துவங்கினாள். தலைபிரட்டையும் கல்யாணம் காட்சி ஏதும் செய்துகொள்ளாமல் அந்த வீட்டையே அண்டிக் கிடக்கிறான். நன்றிக்குப் பொருளாய் நாயின் வாயிலிருந்து ஒழுகும் எச்சில் போல தலைபிரட்டை.

“டெய்..மதுரைவீரன் எல்லைக்குப் போயிருடா..வெரைப்பு அடங்கும்” பாக்கியம் ஒரு பூசாரியாகவே மாறியிருந்தாள்.பேய் இருக்கும் இடத்தில்தானே பூசாரிக்கு மவுசு. கடந்த சில மாதங்களாகவே பேய்ப்பிடிக்கும் பெண்களுக்கு பாக்கியம் அக்காத்தான் பூசாரி. அவள் நெற்றியில் எப்பொழுதும் வசியம் குறையாத திருநீர் பட்டை அடிக்கப்பட்டிருக்கும். பெரிய வட்டமான குங்குமப்பொட்டு. அந்தப் பொட்டுத்தான் அவளை மிரட்டலாகக் காட்டும். முகம் முழுக்க மஞ்சள் அப்பப்பட்டிருக்கும். பலகை தொழிற்சாலையின் கோடு போட்ட வெள்ளைச் சட்டையும் முழங்காலுக்குக் கீழே விரிந்திருக்கும் கருப்புப் பாவாடையும் அணிந்துகொண்டிருந்தாள். அதுதான் எல்லோரின் சீருடையாக இருந்தாலும் பாக்கியம் அக்காள் அதிலேயே ஒரு தனியான தோற்றத்தில் தெரிவாள்.

ஜாலான் லாமாவில் இடிக்கப்படுவதற்கு முன் அங்கிருந்த முனியாண்டி கோவிலில் இருந்த பூசாரி பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாகியிருந்தது கம்பத்திற்கே ஆச்சர்யத்தை அளித்தது. அதுவரை வேட்டிக் கட்டிக் கொண்டு, வேட்டித் துண்டை மார்பை மறைக்கும் வகையில் தோளில் இருவாக்குகளிலும் தொங்கவிட்டிருந்தவர், பிறகு சட்டை அணியத் துவங்கினார். அவர் நடையிலும் பாவனையிலும் ஒரு பெண் குடியேறிருந்தாள். சிலர் அவருக்குள் அம்மா வந்திருக்கிறாள் என்றெல்லாம் சப்பைக் கட்டினார்கள். பிறகொரு நாளில் அவர் பாவாடை கட்டிக்கொண்டு பூஜைக்கு வரத் துவங்கினார்.

பண்டாராயா அந்தக் கோவிலை இடித்துத் தள்ளுவதற்கு முன்பே பெக்கான் லாமா கம்பத்திலிருந்தவர்கள் அந்தப் பூசாரியை அடித்துத் துரத்திவிட்டனர் என ஊரே பேசிக்கொண்டது. அந்த ஜாலான் லாமா பூசாரியிடமிருந்துதான் பாக்கியம் அக்காள் சில வித்தைகளை ஆரம்பத்தில் கற்றிருந்திருக்கக்கூடும். அவள்தான் வெள்ளிக்கிழமை நாள் முழுக்க அந்த முனியாண்டி கோவிலில் பூசாரியுடன் அரட்டையடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பாள். பிறகு நள்ளிரவில் பூசாரியுடனே சைக்கிள் பின்னாடி ஏறிக்கொண்டு போய்விடுவாள். கம்பம் அவர்களைத் தப்பாகப் பேசியும் கேட்டதுண்டு. பாக்கியம் அக்காவின் கணவன் 2 வருடத்திற்கு முன்பே வெளிநாட்டிற்கு வேலைக்குப் போனவன் தான். அதன் பின் அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. பாக்கியம் அக்கா அதனைக் காலப்போக்கில் சாதரணமாக எடுத்துக் கொண்டாள். முதலில் கரகரக்கும் குரலில் தன் காணாமல்போன கணவனைப் பற்றி புலம்பத் துவங்கும் அக்காள், பிறகொருநாளில் அதை ஒரு செய்தியாக மட்டுமே சொல்லி வைப்பாள். அது அவளை அழுத்துப்போகச் செய்திருக்கும். இப்பொழுது முனியாண்டி கோவிலும் இல்லை, அந்தப் பூசாரியும் எங்கோ ஓடிப்போனவர்தான்.

பாக்கியம் அக்கா பேய்ப்பிடித்தவர்களை எதிர்க்கொள்ளும் விதம், கையில் வேப்பிலை இல்லாத குறைத்தான். பாக்கியம் அக்காள் முதலில் பேய்பிடித்தவர்களின் கண்களைத்தான் உற்று நோக்குவாள். எது பொய் சொன்னாலும் அவர்களின் கண்கள் பொய் சொல்லாது. அது அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பார்கள். யாரையும் சந்தேகிக்கவில்லை என்றாலும் அவர்களின் கண்களை ஒரு மருத்துவரின் கவனத்தோடு கூர்ந்து பார்க்கும் பழக்கத்தை முதலில் உருவாக்கியது பாக்கியம் அக்காத்தான். பேய்ப்பிடித்தால் கண்களைப் பார்த்துதான் கணிப்பார்கள். ஒருவேளை அது ஆணின் பேயாக இருந்தால் கண்கள் அதிகபடியாகச் சிவந்திருக்கும் என்றும், பெண் பேயாக இருந்தால் கண் முழியை நான்கு திசைகளிலும் உருட்டிக் கொண்டே இருக்கும் என்றும் திருமணம் ஆகாத இளம் பேயாக இருந்தால் தரையையே பார்த்து வெட்கப்படும் என்றும் குழந்தை பேயாக இருந்தால் கண்களைச் சிமிட்டி சிமிட்டி விளையாடும் என்றும் துறைசாமி பூசாரி முன்பு சொல்லியிருக்கிறார்.

இந்தச் சமயங்களில் காயூ பாலாக் பாதைக்குள் புகுந்து வெளியேறுவதற்குள் தலைபிரட்டைக்கு மூச்சு முட்டும். தனது வேனின் இரட்டை பல்ப் வெளிச்சத்தைத் தவிர வழிநெடுகிலும் வெறெந்த ஒன்றையும் பார்த்திட முடியாது. சட்டென எதிரில் வந்துவிழும் வெட்டுமரத்தை பலமுறை அவனுடைய வேன் மோதியிருக்கிறது. அதுவொரு வெட்டுமரங்கள் திரள்கள் போடப்பட்டிருக்கும் பகுதி. ஒவ்வொரு வெட்டுமரமும் ராட்சத அளவில் இருக்கும். 4-5 அடுக்குகளில் வெட்டுமரங்களைச் சேர்த்து வைக்கப்பட்டிருப்பதால் சாதரணமாகவே மரக்கட்டைகள் உருண்டு சாலைக்கு வந்துவிடும். அது உருண்டு வந்து சாலையில் குபீர் என விழும் கணம் மண்டை கிரங்கடிக்கும்.

சாலை விளக்குகளே இல்லாத அப்பகுதியில் அது எப்பொழுதும் நிகழும் என வாகனமோட்டிகளுக்குத் தெரியாது. அதனாலேயே தலைபிரட்டைக்குத் தொடை நடுங்கும். கும்மிருட்டைக் கிழித்துக் கொண்டு தைரியமாக வேனை ஓட்ட மிகமோசமான ஒரு பழக்கம் தேவை. தலைபிரட்டையை எல்லோரும் ஒரு மரக்கட்டை என்றுத்தான் அழைப்பார்கள். சொன்னப்படி கொஞ்சமும் பிசகில்லாமல் வேனை ஓட்டுவான் தலைபிரட்டை. பின்னாடி உள்ளவர்கள் யார் யாரென்று எந்தப் பிரக்ஞையும் அவனுக்கு அநாவசியம். ஏற்கனவே திட்டமிட்டதைப் போல சொற்களை அடுக்கியே பேசுவான். வேனில் ஏறும் பெண்களுக்கு முதலில் உள்ளேயிருந்த தலைபிரட்டை என்கிற ஆணின் மிகமோசமான வாடை எரிச்சலூட்டியது. ஆனால், அவர்கள் நாளடைவில் அதைப் பழகிக் கொண்டார்கள். சொல்லப்போனால் அந்த வாடையை அவர்களால் துல்லியமாக நுகர முடிந்தது.

தலைபிரட்டை காலையில் ஒரு நடை, மாலையில் ஒரு நடை , இறுதியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒரு நடை என வேனை எடுத்துக்கொண்டு சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல ஒரே மாதிரி சுற்றுவான். வேனில் ஏறும் எந்தப் பெண்களிடமும் தலைபிரட்டை அவ்வளவாகப் பேசியதில்லை. பாக்கியம் அக்கா மட்டுமே கொஞ்சம் உரிமையுடன் தலைபிரட்டையை அதட்டுவாள். அவனுடைய முகம் குறுக்கலாக ஒரே இடத்தில் குவிந்திருப்பதைப் போல இருக்கும். கறுத்து மெலிந்திருப்பான். தன்னை அவன் ஒரு அசிங்கமான ஒன்றாகக் கருதியதால்தான் அப்படி இருக்கிறான் எனப் பலர் சொல்லிக் கேட்டதுண்டு. பலமுறை வேன் ஓட்டும்போது தன் தலையைத் தானே ஓங்கி தட்டிக்கொள்வான். அது தூக்கத்தைக் களைத்துக்கொள்ள என முதலில் நினைத்தார்கள். ஆனாலும் நிதானமான இருக்கும் கணங்களிலும் அவன் அப்படிச் செய்துகொள்வதுண்டு.

அன்று வேனை அவன் வழக்கத்திற்கு மாறாக ஓட்டியாக வேண்டும். எதிரில் வந்து குபீரென்று விழும் மரக்கட்டைகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் காயூ பாலாக் பாதையைக் கடந்தாக வேண்டும். ஒரே வாகனம் மட்டுமே வசதியாகச் செல்லக்கூடிய மிகக் குறுகலான பாதை. எதிரில் இன்னொரு வாகனம் வந்துவிட்டால் யாராவது ஒரு ஆள் வழிவிட்டு சரிவில் இறங்க வேண்டும். மீண்டும் திமிறி மேலேறி வருவதற்குள் சாலைக்கு இரு மருங்கிலும் இருக்கும் செம்மண்ணைக் கிளற வேண்டியிருக்கும். மரக்கட்டைகள் விழுந்து பள்ளமான சாலை என்பதால் குண்டும் குழியுமாகவே இருக்கும். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கடை முற்சந்தியில் பிரியும் வலது சாலையில் நுழைந்துவிட்டால் எதிரில் ஜாலான் லாமா மதுரைவீரர் கோவில். சாலையைப் பார்த்தவாறு கையில் அரிவாளுடன் கண்கள் மிரள அமர்ந்திருப்பார். யாரையோ வெட்டிச் சாய்க்க ஆக்ரோஷமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்த ஒருவரைச் சிலையாக்கிக் கடத்திக் கொண்டு வைத்திருப்பதைப் போல அச்சிலையில் எப்பொழுதும் ஓர் உயிர்ப்பும் மிரட்டலும் இருக்கும். சட்டென காருக்குள்ளிருந்து கவனக்குறைவுடன் பார்க்கும் கணம் யாரோ நம்மீது பாயத் தயாராக இருப்பது போன்று காட்சியளிக்கும். எல்லோருக்கும் அது வசதியாகவும் இருந்தது. அங்குக் கொண்டுபோய் வேனைச் சேர்த்துவிட்டால் பிடித்தப் பேய் தானாகச் சமாதானம் ஆகும் என்ற நம்பிக்கை. ஆனாலும் அப்படிப் பேய்ப்பிடித்த பெண்கள் வீடு சேரும்வரை உறுமிக் கொண்டே வருவது நடக்கும்.

தலைபிரட்டைக்குத் தலை சுற்றியது. பாதை ஒரு உருண்டையாக மாறி வளைந்து சுழன்றது. இருள் வேனைத் தவிர மற்ற அனைத்தையும் கௌவ்வியிருந்தது. சரசு அக்கா இப்பொழுது உச்சத்தில் கதறி குரலை வெடிக்கச் செய்தாள். மீண்டும் சரசு அக்கா முன்னாடி இருக்கும் தலைபிரட்டையைத்தான் கூர்ந்து கவனித்தாள். இப்பொழுது அவள் பார்வையில் ஆக்ரோஷம் பரவியிருந்தது. சரசு அக்கா கணவனை இழந்தவள். வனிதாவிற்கும் அவள் மீது தனி இறக்கமும் கவனமும் இருக்க அதுவே காரணமாக இருந்திருக்கலாம். 3 குழந்தைகளுடன் தன்னந்தனியாகப் போராடி வருகிறாள். பலகை தொழிற்சாலையே கதி என்றே இருப்பாள். முடிந்தவரை காலையில் வேலைக்கு வருபவள் ஓட்டி கிடைத்தால் அதையும் நள்ளிரவு வரை இருந்து செய்துவிட்டுத்தான் போவாள். வெறும் கட்டையைப் போல இறுகியிருந்த உடல். சீவப்பட்டு தோலுரிக்கப்பட்டு இயந்திரத்தில் தட்டையாக்கப்பட்டு வந்து விழும் உயிரற்ற பலகை.

அதுவரை அவளுடைய தோளைக் கெட்டியாகப் பிடித்திருந்த வனிதாவின் பிடி மெல்ல தளர்ந்தது. அவளுக்கு அதற்கு மேல் திராணியில்லை. அவள் உள்ளே அணிந்திருந்த வெள்ளை கச்சை தெரியும் அளவிற்கு முன்சட்டை வியர்வையால் நனைந்து ஒட்டிப்போயிருந்தது. வனிதா இங்கு வேலை செய்யத் துவங்கியிதிலிருந்து முதலில் இப்படிப் பேய்ப்பிடிப்பது அவளுக்குப் பீதியைக் கொடுத்திருந்தாலும் பிறகு அவளுக்கு அது பழக்கமாகியிருந்தது. சட்டென எழுந்து பிறகு சமாதானம் ஆகும் ஒரு அன்றாடமாகவே அது இருந்தது. தலைபிரட்டையின் வேனில் ஏறும் பெண்களில் இதுவரை பலருக்குப் பேய்ப்பிடித்த அனுபவம் உண்டு. வனிதாவிற்குப் பேய்ப்பிடித்த பெண்கள் மீது அதீத கவனமும் இறக்கமும் வர என்னவோ காரணம் இருந்ததாகவே அவள் உணர்ந்தாள். அவர்கள் திமிறி அலறும் போதெல்லாம் முன்னாடி இருக்கும் தலைபிரட்டையைக் கூர்ந்து கவனிப்பது அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அதென்ன பேய்களுக்குத் தலைபிரட்டையின் மீது அத்துனையொரு கவனம் என அவளே வெறுப்பேற்றிக் கொள்வாள். பேய்ப்பிடித்துக் கொண்டவர்களின் வீடு வரும்வரை அவர்களை அடக்குவது வனிதாதான். அவள் மட்டுமே உடல் வாகு கொஞ்சம் பெரியதாக இருக்கும். வாட்டம் சாட்டமாகக் காணப்படுவாள். கொஞ்சம் குட்டை. உடல் இறுகியிருக்கும். தலைபிரட்டை தம்பியின் மரணத்திற்குப் பிறகு 3 வருடங்களில் அவள் இறுகியே போயிருந்தாள்.

முனியம்மா அக்காவிற்கு ஜனவரி இறுதியில் பேய்ப்பிடித்த போதும்கூட வழியில் வேன் பழுதடைந்துவிட்டதால் வனிதா வெகுநேரம் முனியம்மா அக்காவுடன் போராட நேர்ந்தது. வேனைவிட்டுக் கீழே இறங்கி முதலில் தலைபிரட்டையின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். அவனுக்கும் அது திகைப்பாகவும் அலறலாகவும் இருந்தது. அவன் கையைப் பிடித்து உதறவும் வேனைவிட்டு ஓட முயன்ற முனியம்மா அக்காவை வனிதாதான் தாங்கிப் பிடித்து தம் கட்டினாள். கும்மிருட்டில் அவள் ஓடி சட்டென மறைவது அல்லது காணாமல்போவது வெகு சுலபத்தில் நடந்துவிடும் என்பதால் வனிதா ஜாக்கிரதையாக முனியம்மாவைக் கையாண்டாள். கைகள் இரண்டையும் மார்பில் அடித்துக் கொண்டு நாக்கை மடக்கி சுர்ர்ர்ர் சுர்ர்ர் என அலறிய முனியம்மாவின் பின்னந்தலை முடியைப் பிடித்துக் கையில் சுருக்கிக் கொண்டு அவள் நெஞ்சைப் பிடித்தழுத்தி அமர வைக்கும் சாமர்த்தியம் வனிதாவிற்கு மட்டுமே இருந்தது. மல்லுக்கட்டி முடியாத நிலையில் தனக்குப் பின்னே இருக்கும் வனிதாவை ஓரக்கண்ணால் முறைக்கும் முனியம்மாவின் கண்களை வனிதாவிற்கு நன்றாகத் தெரியும். அது அவளுடைய பார்வையே இல்லை. அவளுடைய கண்கள் இப்பொழுது வேறுமாதிரி மாறியிருந்தன. அப்படிப் பேய்ப்பிடித்த ஒரு பெண்ணின் கண்களை மிக சமீபத்தில் பார்த்தது அதுவே வனிதாவிற்கும் தலைபிரட்டைக்கும் முதல்முறையாகும்.

“தலபெரட்டெ தூக்கு ..” முனியம்மாவை மீறி எழ முடியாத வனிதா தடுமாறினாள். தலைபிரட்டை முனியம்மா அக்காவை மெல்ல தூக்க முயலும்போது முனியம்மாவின் கண்களை அவனால் மிக அருகாமையில் பார்க்க முடிந்தது. அதற்கு முன் பார்த்த முனியம்மா அக்காவின் கண்கள் இல்லை அது. கண்கள் சிவந்து சொருகியும் சொருக விடாதபடிக்கு மல்லுக்கு நிற்கும் தோரணையிலும் அது வேறொரு நபரின் கண்களாக மாறியிருந்தன. வேன் சரியானதும் வனிதாவும் தலைபிரட்டையும்தான் முனியம்மா அக்காவைத் தூக்கி வேனிற்குள் உட்கார வைத்தார்கள். இதெல்லாம் அவர்களுக்கு சம்பளம் இல்லாத வேலையாக இருந்தது. வேன் வருமானத்திற்கு இவர்கள்தான் படி அளக்கிறார்கள். இவர்களும் ஏறவில்லை என்றால் தலைபிரட்டை மீண்டும் கயிற்றுக் கட்டிலை வெறுமனே சூடாக்க நேரிடும். பேய்ப்பிடித்தாலும் சாமிப்பிடித்தாலும் அவர்களைக் கொண்டு சேர்த்தாக வேண்டும். உயிர் வாழ்ந்து தொலைவதற்கான ஒரு கட்டாயத்தின் உந்துதல்.

“இந்தச் சனியன் பிடிச்ச பேய் எங்கருந்துதான் வருதோ.. மாரியாத்தா” பலகை தொழிற்சாலையில் வேலைச் செய்யும் பெண்கள் புலம்பி புலம்பி தீர்த்த வசனம் அது. எங்கிருந்து எந்தக் கணத்திலிருந்து அந்தப் பேய்கள் வருகின்றன என யாருக்கும் தெரிந்ததில்லை. முதலில் அது பேயல்ல பைத்தியம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், மறுநாள் அவர்கள் சுயநினைவுக்குத் திரும்பும்போது மீண்டும் சாதாரணமாகிவிடுவதுதான் ஆச்சர்யமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வேலை வரும்போது வனிதா வேனில் தயாராக இருப்பாள். ஏன் எப்படி எனத் தெரியாமல் பேய்ப்பிடித்துத் தொலையும் பெண்களைச் சமாளிக்க அவளிடம் தெம்பிருந்தது. அல்லது வலிந்து அந்தத் தெம்பை அவள் உருவாக்கிக்கொண்டாள். அவ்வப்போது முன்கண்ணாடியில் தெரியும் தலைபிரட்டையின் முகத்தை அவள் பார்த்துக் கொள்வாள். அது அவளுக்கு ஓர் ஆரோக்கியமான மனநிலையைக் கொடுக்கும். தலைபிரட்டையின் உயிரற்ற பார்வை, காலங்களைக் கடந்து தேங்கும் ஓடை. அவள் அதில் வெறும் உடலாக மிதக்கிறாள். அவளுக்கு ஒரு தெம்பு. அவன் பார்க்கக்கூட வேண்டாம். அவனுடைய அசையாத அக்கண்களை நிமிடத்திற்கு ஒருமுறை அவள் பார்ப்பாள். புத்துயிர் கிடைத்ததைப் போல அடுத்த நாளைத் தைரியமாகக் கடத்த வேண்டிய சக்தி கிடைத்ததாக உணர்வாள்.

தலைபிரட்டைக்கும் அவன் தம்பி மூர்த்திக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவன் தோற்றத்தில் கொஞ்சம் சுமாரான கலரில் இருப்பான். தலைபிரட்டையைவிட கொஞ்சம் உயரமாக இருப்பதோடு அவன் கண்கள் வசீகரமாக இருக்கும். மூர்த்திக்குக் கொஞ்சம் பொம்பளை ஜோறு அதிகம் என்பார்கள். அவன் வேனில் ஏறும் பெண்களோடு சாவகாசம் இருந்ததாகச் சொல்லப்பட்டு வனிதா வேன் கண்ணாடியை உடைத்துத் தள்ளி மூர்த்தியிடம் மல்லுக்கு நின்றாள். அன்றுத்தான் தலைபிரட்டையின் மனிதாபிமானத்தை வனிதா கண்டாள். மூர்த்தி எட்டி உதைக்கும்போது வனிதாவை அவன் பிடித்துத் தாங்கவில்லை என்றால் அன்றோடு அவள் பின்மண்டை இரண்டாகத் தெறித்திருக்கும். இதுநாள்வரை வெற்றுடல் என நினைத்துக் கொண்டிருந்த, உணர்வற்ற ஜடம் என நினைத்துக் கொண்டிருந்த தலைபிரட்டை பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து அவளைத் தாங்கி நின்றான். வனிதா எழுந்து நின்று மீண்டும் மூர்த்தியின் மீது பாய்ந்து அவனைப் பிடித்து நகத்தால் குதறினாள். இந்தத் தெம்பு ஆக்ரோஷம் என்னவோ தலைபிரட்டையின் பிடிமானம் அல்லது தலைபிரட்டையின் வருகையே அவளுக்குக் கொடுத்தது. வனிதா உடைந்து நதியானாள். அவ்வளவு சாமர்த்தியமாக அவள் உடைந்தாள். மூர்த்தியால் அவள் பெருக்கெடுத்து ஓடியதைச் சகிக்க முடியவில்லை. திமிறினான்.

அதன் பிறகே தலைபிரட்டைக்கும் சேர்த்துச் சமைப்பது, அவனுடைய துணிகளைத் துவைத்துப் போடுவது, அவனையும் ஒருவனாகத் தன் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டதெல்லாம் நடந்தது. மூர்த்தியின் அதிகப்படியான சேட்டைகளை அவள் பொறுத்துக்கொள்ளத் துவங்கினாள். இதற்கு முன் அவன் குடித்துவிட்டு வந்து அடித்தால் ஊரையே கூப்பாடு போடுவாள். முடியை விரித்துக் கொண்டு சாலைக்குள் நுழைந்து மூர்த்தியின் அட்டுழியங்களைத் தம்பட்டம் அடித்துக் கொண்டே ஓடுவாள். மூர்த்தி பின்னாடி ஓடிப்போய் அவளை அடித்துத் தற தறவென இழுத்துக் கொண்டு வருவான். அதன் பிறகு வனிதா அவனுடன் மல்லுக்கு நிற்பது குறைந்திருந்தது.

அன்றொருநாள் வனிதாவைப் பிடித்துத் தூக்கியதோடு சரி, அதன் பிறகோ அதற்கு முன்போ அவன் வனிதா இருக்கும் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். தலைபிரட்டையிடம் எந்த மாற்றமும் இருந்ததில்லை. அவன் மீண்டும் செத்த பிணம் போலத்தான் கிடந்தான். போத்தக்கடைக்கு வேலைக்குப் போய்விட்டு வருவதோடு சரி. மூர்த்தியிடம் கோபம் வரும்போது அவனிடம் மல்லுக்கு நிற்கும் வனிதா தலைபிரட்டையின் மீது வெறுப்பு வரும்போது அதிகப்படியாக மங்கையோ குவளையோ அவனிருக்கும் பக்கமாக விட்டடிப்பாள். அவன் அதையும் கண்டுகொள்ளாமல் வெறுமனே தரையைப் பார்த்தப்படி இருப்பான்.

“ஒங்காத்தா ஒன்னையெ எதுக்கு பெத்தா..சோத்துமாடு” என எங்கோ பார்த்துப் புலம்பிவிட்டுக் காறி துப்புவாள்.

இப்பொழுது தலைபிரட்டை கடை முற்சந்திக்கு வந்து வேனை வலது பக்கமாகத் திருப்பினான். அவனிடம் பதற்றம் அடங்கிப் போயிருந்தது. மதுரைவீரர் கோவில் பக்கமாக வந்ததும் வண்டியைக் கொஞ்சம் நிறுத்தினான். எல்லோருக்கும் மூச்சிரைத்தது. சரசு அக்காள் வெகுநேரம் அரற்றியதில் இப்பொழுது கொஞ்சமாக உறுமி கொண்டிருந்தாள். அவள் கண்களின் சிவப்பு மேலும் கூடியிருந்தது. அவளுக்கு மெல்ல தணியும் கணம் பக்கத்தில் இருந்த வேடி அக்காவிற்குச் சட்டென ஆட்டம் கிளம்பியது. வேன் கதவைப் படாரென திறந்தடித்துவிட்டு தலைபிரட்டை அமர்ந்திருக்கும் கதவு பக்கமாக இறங்கி வெறிச்சோடி போயிருக்கும் மதுரைவீரர் சாலையில் இறங்கி கத்திக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். வனிதா சரசை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“தலபெரட்டெ நீ போவாத...” என வாய்க்கிழிய சரசு அக்காவைப் பிடித்துக்கொண்டே கத்தினாள் வனிதா.

தலைபிரட்டை அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இறங்கி அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியபடியே ஓடினான். தொழிற்சாலை சப்பாத்தியைக் கழற்றி எறிந்துவிட்டு இரு கைகளையும் விரித்துக் கொண்டு வேடி அக்கா ஓடினாள். வேடி அக்கா வீட்டில் மூத்தப்பிள்ளை. கல்யாணமே பண்ணிக்கொள்ளாமல் 10 வருடம் கடந்து வந்துவிட்டாள். அவளுக்குக் கீழே இருந்த 3 தம்பிகளுக்கும் அவள்தான் பாதுகாப்பு எல்லாம். பெரிய மாமா அவளுடனே வீட்டில் தங்கி அவர்களுக்குத் தொந்தரவாகவும் சுமையாகவும் இருந்து வந்தார். அவருடைய தொல்லை தாங்காமல் பலமுறை தற்கொலை முயற்சிக்கு இறங்கியவள்தான் வேடி அக்கா.

தலைபிரட்டை காற்றில் களைந்து அலையும் வேடி அக்காவின் பின்மண்டை முடியை எக்கிப் பிடித்தான். பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருப்பதை அன்றுத்தான் அவன் மெச்சினான். இருவரும் சாலையில் விழுந்தனர். அநேகமாக தலைபிரட்டைக்கு முட்டி தேய்ந்திருக்கும். வேடி அக்காள் அவன் பிடிக்கு விட்டுக்கொடுக்காமல் முரடு பிடித்துக் கத்தினாள். நாக்கைக் கடித்துக் கொண்டதில் அவளுடைய வாயிலிருந்து இரத்தம் சொட்டியது. தலைபிரட்டைக் கொஞ்ச நேரத்தில் பதறிப்போனான். வேனில் இருந்த மற்ற இரு பெண்களும் கையில் வைத்திருந்த பொருளையெல்லாம் கீழே போட்டுவிட்டு தலைபிரட்டையை நோக்கி ஓடி வந்தனர். நள்ளிரவு குளிரில் சாலை தனித்திருந்தது. தூரத்தில் எரியும் தூங்கு மூஞ்சி சாலைவிளக்கைத் தவிர போதுமான வெளிச்சமும் இல்லை. இருட்டில் வேடி அக்காவின் முகம் பயங்கரமானதாகியிருந்தது.

வேடி அக்கா தரையை இரு கைகளாலும் அலசிக் கொண்டே உறுமினாள். பின்வந்த இரண்டு பெண்களும் அவளைக் கெட்டியாகப் பிடிக்கத் தலைபிரட்டை வேறு வழியில்லாமல் அவளைத் தூக்கிக் கொண்டு வேனிற்கு வந்தான். வேன் பக்கமாக வந்ததும் சரசை உள்ளேயே தம் கட்டிப் பிடித்திருந்த வனிதா தலைபிரட்டையை வெறுப்புக் கலந்த கோபத்துடன் பார்த்தாள். அவன் வேடி அக்காவை உள்ளே வைத்து அடைத்துவிட்டு சட்டென வேனைக் கிளப்பினான். இப்படி ஒரே தடவை இருவருக்குப் பேய்ப்பிடித்தது இதுவே முதல்முறை என்பதால் தலைபிரட்டைக்குக் குடல் பிரட்டியது. எப்படியும் இன்று கள்ளுக்கடையில் உடும்பு இறைச்சையைப் பதம் பார்த்தால்தான் அவனுடைய உடல் சோர்வு அடங்கும்.

வேன் ஜாலான் லாமா கம்பத்தை அடைந்ததும் எல்லோருக்கும் ஒரே பரப்பரப்பு. வீடுகள் மெல்ல விழித்துக் கொண்டன. எல்லோரும் சரசு அக்காவையும் வேடி அக்காவையும் தூக்கிக் கொண்டு துறை சாமி பூசாரியிடம் ஓடினர்.

தூரத்தில் யாரோ மாரியாத்தா கண் இல்லாதவளே எனப் பதறி கத்தும் சத்தம் கேட்க தலைபிரட்டை வேனை எடுத்தான். வனிதா அமைதியில் உறைந்தாள். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. நள்ளிரவில் பலகை தொழிற்சாலையில் பெண்களுக்குப் பேய்ப்பிடிக்கும் பிரச்சனை அப்பொழுது யாருக்கும் புதியதல்ல. வனிதாவிற்கு இதெல்லாம் தெரியும். அவள் அதை எதிர்க்கொண்டே வந்தாள். ஏதோ ஒரு சாகசத்தைக் கடமை உணர்ச்சியுடன் நிறைவேற்றிய ஆசுவாசம் அவளிடம் தெரிந்தது. முன் கண்ணாடி வழியாக வெகுநேரம் தலைபிரட்டையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய கண்கள் செத்திருந்தன. அது அவளுக்கு மேலும் எஇரிச்சலூட்டியது. சட்டென அவன் கண்களைப் பிடுங்கி அதில் காறி துப்ப வேண்டும் என அவளுக்குத் தோன்றியது.

குவிந்த முகம். கறுத்து இருளில் கரைந்திருந்தது. வனிதா இரு தொடைகளையும் இறுக்க மூடிக்கொண்டு வலது பக்கமாகப் பார்த்தாள். வேன் முழுவதும் தலைபிரட்டையின் வாடை. ஒரு அகன்ற நாக்கால் வேனின் அனைத்துப் பகுதிகளையும் அவன் நக்கியிருப்பான். எங்கும் அது பரவியிருந்தது. அதற்குள் வேன் வீட்டை அடைந்தது. தலைபிரட்டை இறங்கிவிட்டு தரையைக் கவனித்துக் கொண்டே நின்றிருந்தான். வனிதா பெருமூச்சி வாங்க வேனிலிருந்து கீழே இறங்கினாள். அவனின் மௌனம் அவளை நெருக்கடிக்குள் நகர்த்தியது.

அதுவரை அமைதியாக இருந்தவள் சட்டென கத்திக் கொண்டே தலைபிரட்டையின் மீது பாய்ந்தாள். வெறிப்பிடித்துக் கத்தியவள் பலம்கொண்டு உறுமினாள். பாவாடையெல்லாம் மேலேறி களைய அவன் மீது உடைந்து புரண்டாள். மரணத்திற்கு முன்பான ஒரு திட்டமிடப்படாத கரைதல் அது. வெறியேற்றப்பட்டு சங்கிலி அவிழ்க்கப்பட்ட ஒரு வேட்டை நாயின் பாய்ச்சல் அது. திகைத்துப்போன தலைபிரட்டை அவள் கண்களைப் பார்த்தான். அது எந்தச் சலனமும் இல்லாத வாடிக்கையான வனிதாவின் கண்கள்.

கே.பாலமுருகன்

நன்றி: மலைகள்.காம்(ஏப்ரல்)





1 comment:

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

இனிக்கும் வகையில் எழுதிய காதை
மனத்துள் மணக்கும் மலா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு