Wednesday, August 20, 2014

சிறுகதை: பெரியாத்தா

வீட்டு வாசலிலேயே பெரியாத்தா உட்கார்ந்திருப்பார். வீட்டுக்கு வருபவர்களின் கண்களில் சட்டென பட வேண்டும் என்பதுதான் அவளுடைய திட்டம். தங்கையின் வீட்டில் வந்து உட்கார்ந்து 5 வருடங்கள் ஓடிவிட்டன பெரியாத்தாவிற்கு.

தோள் துண்டை குறுக்காக மாட்டிக் கொண்டு பவுடர் பூசிக் கொள்வாள். வீட்டுக்கு வெளியில் போகவும் அனுமதியில்லை.

வாங்க தம்பி! உட்காருங்க

நான் பெரியாத்தா. என் தங்கச்சி வீடுதான் இது. குளிச்சிக்கிட்டு இருக்கா? இதோ வந்துருவா. உட்காருங்க

நான் பெரியாத்தா. அப்படித்தான் கூப்டுவாங்க முன்னலாம். நானும் நல்லாத்தான் இருப்பேன். அழகா எலும்பா... என் புருஷன் பத்து வருசத்துக்கு முன்னாடியே செத்துட்டாருயா

எப்படி செத்தாருனுத்தானே நினைக்கற?”

எல்லாம் குடிதான். நல்லா சீன சாராயம் குடிச்சாரு. பச்சையா குடிப்பாரு. திடீர்னு செத்துத் தொலைஞ்சிட்டாரு


இங்க என் தங்கச்சி இருக்காளே!!! என்னத்த சொல்றதுயா? அடிப்பாயா. யாராவது வீட்டுக்கு வந்து நான் பேசிட்டனா நீங்க போனோனே என்னைப் போட்டு அடிப்பா

ஏதும் சொல்லிடாதீங்கயா. புருஷன் இல்லாத பொம்பளை. பிள்ளைங்களும் விட்டுருச்சிங்க. அதான் பொலம்பிகிட்டு இருக்கேன். தப்பா நினைச்சுக்காதீங்க

நீ எங்கேந்துயா வர்றே? உனக்கு அம்மா அப்பா எல்லாம் இருக்காங்களா? அவுங்கள நல்லா பாத்துக்கயா. அது போதும். வீட்டை விட்டு வெரட்டிறாதே. எங்க போவாங்க?”

ஏன்யாஎன் தங்கச்சி உனக்கு என்னா வேணும்? அடிக்கடி வர்றே போர்றே. உன்னை மாதிரியே இன்னும் 4-5 பேரு வருவானுங்க. அதான் கேட்டேன். என் தங்கச்சி புருஷன் சிங்கப்பூருக்குப் போனவந்தான். வருச கணக்குலே அங்கயே வேலை செஞ்சி சாவறான். அவன் ரொம்ப நல்லவன்யா. வந்தானா பெரியாத்தாவுக்கு ஏதாச்சம் வாங்கித் தருவான்

சாப்பாடுலாம் நல்லா சாப்டலாம்யா. அப்படித்தான் வாங்கிப் போடுவான்

இவ இருக்காளே! நான் ஒரு மீனு துண்டு எடுத்தாலும் மொறைப்பாயா. பாதிதான் போடுவா. சோறு கொஞ்சம் கூட போட்டுட்டனா அன்னிக்கு எல்லாம் சொல்லிக் காட்டுவாயா

நான் யாரு? தண்டச்சோறு. வீட்டுல பிள்ளைங்களும் இல்லை. இருந்தாலும் அதுங்கள பாத்து சாப்பாடு காசைக் கழிச்சுக்குவேன்

தம்பி. கீழேலாம் ஒரே குப்பையா இருக்கு. அப்புறமாதான் கூட்டணும்யா. அன்னாடம் அதை மட்டும்தான் செஞ்சிக்கிட்டே இருக்கேன். அது என்னானு தெரியலை, கூட்டுனாலே மண்ட என்னனமோ நினைக்க சொல்லுது

யப்பாஎன் தங்கச்சிக்கிட்ட எதும் சொல்லிடாதப்பா. புருஷன் இல்லாத பொம்பள நான். வீடும் இல்ல. எங்க போவ முடியும்?”

முன்ன வீடு வாசல் எல்லா இருந்துச்சி. மூத்த மக எடுத்துக்கிச்சி. அதுக்குனு ஒன்னும் செய்யலை. அப்புறம் அதுவாவே எடுத்துக்கிச்சி

நான் ஏன் அங்கயே இருக்கலைனு கேக்குறியா?”

இப்படி வீட்டு முன்னுக்கு மூதேவி மாதிரி இருந்துகிட்டு தொல்லை பண்றேனு மருமயந்தான் வெளில வரைக்கும் வந்து அடிச்சி தொரத்தனான். அவன் நல்ல பலசாலியா. வீட்டோடே இருந்துட்டான். நாந்தான் சோறு போட்டேன் அத்தன வருசம்

அன்னிக்கு என்னானு தெரியலை. போட்டு அடிச்சிப்புட்டான். மக ஏதாச்சம் சொல்லிருக்கும். அதான் அப்படிச் செஞ்சிட்டான்

“இங்க பின்னாடி தலை இருக்குலே? அங்கத்தான் விழுந்துச்சி பாரு ஒரு அடி. மண்ட கிர்ர்ர்னு ஆச்சியா. அப்படியே சுருண்டு விழுந்தடிச்சிட்டு ஓடிட்டேன்”

உனக்கு அக்கா தங்கச்சி எல்லாம் இருக்காங்களா? இருந்தா தூரமாவே இருந்துக்கோயா. அப்பத்தான் மதிப்பாங்க. இவ இருக்காளே பள்ளிக்கூடத்துக்கே போக கஸ்டப்படுவா. நாந்தான் ஜடை பின்னி, புட்டாமாவுலாம் பூசி, சைக்கிள் பின்னாடி உட்கார வச்சி போய் விட்டுட்டு வருவேன். பிடிவாதம் பிடிச்சவா

ஆனா நல்லவத்தான். அவதான் கூட்டியாந்து என்னைப் பாத்துக்குறா

நீ சாப்டுட்டியா? ரொம்ப பசிக்குதுயா. இதோட ராத்திருக்குத்தான் சோறு போடுவா

இருளில் அமர்ந்து கொண்டு பெரியாத்தா விடாமல் பேசிக்கொண்டிருந்தாள். வந்தவனுக்கு மூச்சி முட்டியது. இருட்டில் அவள் முகமும் சரியாகத் தெரியவில்லை. குளித்துவிட்டுத் துண்டுடன் வெளியே வந்த பெரியாத்தாவின் தங்கை கமலம் இருவரையும் பார்த்து முறைத்தாள்.

நீ உள்ள வாயேன்என அவனைக் கைக்காட்டி அழைத்தாள்.

போங்கயாஏதும் சொல்லிடாதீங்க, அடிப்பாயா

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவன் வெளியேறினான்.

யா..ஆத்தாவுக்கு ஒரு 2 வெள்ளி இருந்தா கொடுயா

ஏதாச்சம் வாங்கி சாப்டத்தான். ரெண்டு வெள்ளி போதும்யா

பாக்கேட்டிலிருந்து எடுத்த இரண்டு வெள்ளியைப் பெரியாத்தா அருகில் விட்டெறிந்துவிட்டு அவன் வெளியேறினான்.

நீ நல்லாருப்பயா

உடையை மாற்றிவிட்டு வெளியே வந்த கமலம் அவன் கொடுத்த 100 வெள்ளியை பெரியாத்தாவுக்குத் தெரியாமல் எடுத்து கைப்பைக்குள் மறைத்தாள்.

பெரியாத்தாவும் அவன் கொடுத்த இரண்டு வெள்ளியை எடுத்து காலுக்கடியில் வைத்து மறைத்துக் கொண்டாள். வீடு சத்தமில்லாமல் இருந்தது.



-    கே.பாலமுருகன்

No comments: