Tuesday, October 21, 2014

விவாகரத்து (திரைப்படம்): குடும்ப அமைப்பின் ஒற்றை குரல்

vivaagarathu 1‘வெண்ணிற இரவுகள்’ படத்திற்கு முன்பு மலேசியத் தமிழ் சினிமாவின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்ததில்லை. அதற்கு மூன்று முக்கியமான காரணங்களை என்னால் கூற முடியும். ஒன்று, மலேசியத்தன்மை குறைந்து தமிழ்நாட்டு சாயல் அதிகமாகப் படிந்திருக்கும் நிலையில் அது மலேசிய சினிமா என்கிற அடையாளத்தை இழக்க நேர்ந்துவிடும். இரண்டாவது, போதுமான இயக்கப் பயிற்சியும் சினிமாவிற்கான நுட்பமான தேடலுமின்றி தேக்கநிலையில் கதை படமாக்கப்பட்டிருக்கும். மூன்று, பேய்க்கதையை விட்டால் வேறு வகையில் படம் செய்ய முடியாது என்ற பொதுநிலையாகும். இவை மூன்றையும் கொஞ்சம் உடைத்தது செந்தில் குமரன் முனியாண்டியின் ‘ஜெராந்துட் நினைவுகள்’, சஞ்சய் அவர்களின் ‘ஜகாட்’, பிரகாஷ் ராஜாராம் அவர்களின் ‘வெண்ணிற இரவுகள்’ மற்றும் ஷான் அவர்களின் ‘Sweet Dreams’ போன்ற படைப்புகள் ஆகும். இவர்களின் படைப்புகள், மலேசியத் தமிழ் சினிமா குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்து வருவதை அடையாளம் காட்டியது என்றே சொல்லலாம். ‘செம்மண் சாலை’ (2006) திரைப்படம், பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. ஆனால் அப்படம் தோட்டப்புற வாழ்க்கையையும் அந்த மனிதர்களையும் ஒரு நேசனல் ஜாகிராபி மனோநிலையிலேயே மிகவும் அந்நியத்துடன் காட்டிச் சென்றது.

இனி வரும் காலங்களில், மலேசியத் தமிழ்ப்படங்களின் விமர்சனத்தை நான் இரண்டாகப் பிரித்து முன்னெடுக்கவே விரும்புகிறேன். வெண்ணிற இரவுகளுக்கு முன், வெண்ணிற இரவுகளுக்குப் பின் என்ற அளவில் இனி மலேசியத் தமிழ்ப்படங்களைப் பிரித்தறியும் அளவிற்குப் பிரகாஷ் ராஜாராம் மெனக்கெட்டு ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.


மலேசியாவில் பெரும்பாலும் விமர்சனங்களை இரண்டு வகையில் பார்க்கிறார்கள். சண்டை பிடிக்க நினைப்பவர்கள் மட்டுமே எதிர்மறையாக விமர்சிப்பார்கள் என்றும் மற்றொன்று விமர்சனம் என்றாலே ஏதோ காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே வெளிப்படுகிறது என்றும் மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கு முன்பும் காத்திரமான விமர்சனங்கள் நம் உள்ளூர் படைப்புகளின் மீது வைக்கப்படுவது குறைவாகவே நடந்துள்ளது. விமர்சனம் எத்துனை காத்திரமாக இருந்தாலும் அது நம்முடைய படைப்பை மறுபரிசீலனை செய்யும் என்பது நிதர்சனமே. போகிற போக்கில் கொஞ்சமும் அடிப்படை இல்லாமல் நம் மீது திணிக்கப்படும் வெற்று புகழ்ச்சியும் பாராட்டுகளும் ஆபத்தானது. அதை மட்டுமே நம்பி நம்மால் படைப்பின் தரத்தையும் ஆழத்தையும் உயர்த்திவிட முடியாது.

ஆகவே, ரேவதி பவதாஸ் குமார் அவர்களின் ‘விவாகரத்து’ படத்தையும் மேற்குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையிலேயே விமர்சனம் செய்ய விரும்புகிறேன். உலகில் வேறெந்த சினிமாவையும் முன்வைத்து மலேசியப் படத்தை அளவிடுவது சாத்தியமாகாது.

திரைக்கதை

திரைக்கதையை மேலும் சாமர்த்தியமாக மையக்கதையை நோக்கி அழுத்தமாகப் பதிக்கும் வகையில் முயன்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நம்மை ஒரு வகுப்பில் உட்கார வைத்துப் பேராசிரியர் ஒருவர் இதெல்லாம் செய்யக்கூடாது, கவனமாக இருங்கள், புரிகிறதா? என்று எச்சரிக்கை செய்வதைப் போலவே படம் மனத்தின் ஆழத்தைத் தொட முடியாமல் நிற்கிறது. கதையின் மீதைவிட திரைக்கதையின் மீது நாடகத்தனமான படிமம் படம் முழுக்க ஊர்ந்து செல்கிறது.

திரைக்கதை உருவாக்கத்தில் ரேவதி கூடுதல் கவனத்தை செலுத்தி இருக்கலாம். மலேசிய திரைத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பவர்களின் கருத்து/அனுபவப் பகிர்வை கவனத்தில் கொண்டு திரைக்கதையை மேலும் செம்மை படுத்தி இருக்கலாம்.  சினிமா என்பது எப்பொழுதுமே தனிமனித வெற்றி கிடையாது. அது ஒரு குழுவின் உழைப்பால் உருவாவது. நமக்குப் போதுமான அனுபவம் இல்லாதபோது அதைக் கற்றுக்கொள்ள ஆளுமைகளுடன் கைக்கோர்ப்பது தவறில்லை.

விவாகரத்து சட்ட விரோதமா? சமூக விரோதமா?

விவாகரத்து வேண்டாம் என்ற பிரச்சாரம் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியைப் போல வெளிப்பட்டிருப்பதே படத்தின் முதல் பலவீனம் என நினைக்கின்றேன். விவாகரத்து ஒரு தவறான முடிவா என்பதே முதலில் முக்கியமான கேள்வியாகும். விவாகரத்து தவறுத்தான் என ஒற்றை பரிணாமத்திலேயே ரேவதியின் படம் பேசுகின்றது. அது சமூகத்தின் ஒற்றை குரல் மட்டுமே. இதே சமூகத்தில் எத்தனையோ தனி நபர்களை விவாகரத்து வாழ வைத்திருக்கிறது; வாழ வழிவிட்டுள்ளது. சகித்துக்கொண்டு ஒரு குடும்பத்திற்குள் வாழ முற்படும் தம்பதியர்களின் மன உளைச்சல் வன்முறையாகவும் அதீதமான வெறுப்பாகவும் மாறி அக்குடும்பத்தையே சிதைத்த எத்தனையோ செய்திகளைக் கேள்விப்படுகிறோம். அது தோல்வியடந்துபோன சகிப்புத்தன்மையின் வெளிப்பாடு என ஏன் நாம் விவாதிப்பதில்லை? மனம் வெறுத்துப் போன ஓர் உறவுடன் எத்தனை ஆயிரம் பழமைவாத காரணங்களை முன்வைத்தாலும் அதன் பின் வாழ என்ன உள்ளது? மண முறிவு என்பது ஆபத்தானதல்ல; மண முறிவு என்பது சட்ட விரோதமானதும் அல்ல; மண முறிவு என்பது குடும்பச் சிதைவும் இல்லை. உடன் சேர்ந்து வாழ முடியாத இருவர் பிரிந்து போக அவர்களுக்கு வழங்கப்படும் சட்ட ரீதியிலான சுதந்திரம்தான் விவாகரத்து.

கதை சொல்லப்பட்ட உத்தி

முதலில் 7 தம்பதிகளின் உச்சப் பிரச்சனை காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டிவிட்டு படத்தின் இடையில் ‘விவாகரத்து ஒரு தீர்வா?’ எனக் கேள்விக்குறியெல்லாம் போட்டு திரையில் ஓடவிட்டிருப்பது படத்தின் கதையோட்டத்திற்கு மிகப்பெரிய பாதிப்பையும் சோர்வையும் உருவாக்குகிறது. படத்திலிருந்து பார்வையாளனை உடைத்து வெளியேற்றி அவனுக்குள் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கான மனோபாவத்தை உருவாக்குவதைத் தடுக்க முடியவில்லை. கதை சொல்லாமல் கதையை உணர்த்த வேண்டும். இதுதான் திரை உத்தி. படத்தைப் பார்க்கும் பார்வையாளனுக்கு இது கூடவா தெரியாது? அதனை மெனக்கெட்டு பிரச்சாரம் செய்ய வேண்டுமா? இதுபோன்று திரையில் கதைக்கான சாரத்தை எழுத்து வடிவில் போட்டுக்காட்டுவது என்பதெல்லாம் சார்லின் சாப்லீன் காலம் என்றே சொல்லலாம். அக்காலக்கட்டத்தில் ஒலி வடிவம் இல்லை என்பதால் எங்கே பார்வையாளனுக்குப் படத்தின் வசனம் புரியாமல் போய்விடும் எனப் பயந்து பேசப்பட்ட வசனத்தைத் தனியாக எழுத்து வடிவில் மீண்டும் காட்டுவார்கள். அது 1920களில் தேவைப்பட்ட உத்தி. இப்பொழுது காட்சிகளின் வழியாகவோ அல்லது வசனத்தின் வழியாகவே கதைக்குத் தேவையான அனைத்தையும் சொல்லிவிடும் சூழல் இருக்கும்போது ரேவதி அவர்கள் படத்தின் இடையில் எழுத்து வடிவத்தில் திரையில் போட்டு வேறு காட்ட வேண்டுமா?

படத்தில் வந்த கிளை கதைகள், கிளை கதைப்பாத்திரங்கள் என்பது ஒரு நல்ல உத்திதான். தற்சமயம் வரக்கூடிய படங்கள் பலவற்றில் இது போன்ற உத்தி வழக்கமாகிவிட்ட சூழலில் அது பெரிய பாதிப்பை ஒன்றும் ஏற்படுத்தவில்லை என்றபோதும் அதை வரவேற்கலாம். ஆனால், அக்கிளை கதைகள் மையக்கதையுடன் மிகவும் நாடகத்தனமாகப் பயணித்ததாலேயே மனத்தில் ஒட்டாமல் அந்நியப்பட்டுப் போகின்றன.

கதையின் முதல் பாதி பிரச்சனையின் உக்கிரத்தையும் இரண்டாவது பாதியில் அதனை உடைத்துத் தீர்வு கொடுப்பதையும் கதையோடு கோர்ப்பதில் இயக்குனருக்குப் பலவிதமான தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதியும் இரண்டாம் பாதியும் நிரலான ஓட்டமின்றி உடைந்து வலுவில்லாமல் பட்டிமன்றத்தன்மையையோ அல்லது மேடைநாடகப் பாணியையோ அடைந்துவிடுகிறது.

நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு அடுத்த பலவீனத்தைத் தேடிக்கொடுத்திருக்கிறது. இவ்வளவு கனமான ஒரு கதைக்கு நடிப்பு மிக அவசியமாகின்றது. கதை சமூகத்தை நோக்கி விரியக்கூடியதாக இருக்கும் வேளையில் பலத்தரப்பட்ட மனிதர்கள், பலவகையான குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள் என இயக்குனர் ஒரு சமூகத்தை அவர்களின் வழி வெளிக்கொணர்ந்திருக்க வேண்டும். ஒரு கதைக்குத் தேவையான உணர்வுகளை ஒரு நடிகனிடமிருந்து பெறவேண்டியது இயக்குனரின் பங்கே. அப்படியிருக்க இப்படத்தில் எல்லோரும் அழுவது, அல்லது கத்துவது, அல்லது கோப்பப்படுவது அல்லது கெஞ்சுவது என ஒரு சராசரியான குடும்பப் பிரச்சனைகளைக்களுக்கான பின்விளைவுகளை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உறவுகளுக்கிடையேயான பிரச்சனைகளின் உச்ச வெளிப்பாடாக அழுகையும் கண்ணீரும் கெஞ்சலும் மட்டும்தான் கடைசியான ஒன்றாக இருக்க முடியுமா?

அப்படிச் சொல்லிச் செல்வதன் மூலம் நாம் குடும்ப அமைப்பையும் உறவுகளின் மீது படிந்திருக்கும் கசப்பு, வலி, வெறுமை, என இன்னும் இன்னும் பலவற்றை கவனிக்காமலே போய்விடும் ஒரு அபத்த நிலை உருவாகிவிடுவதையும் உணர வேண்டியிருக்கிறது. படத்தில் எல்லாம் முறிவும் ஒரு அழுகையிலும் ஒரு கோபத்திலும் ஒரு வெறுப்பிலும் மட்டுமே உச்சத்தை அடைவது போல காட்டியிருப்பது 1980களில் சரோஜாதேவியும் சிவாஜி கணேசனும் மனமுறிவு ஏற்பட்டுப் பிரியும் அதே பாணியிலான இரசனையையே ஞாபகப்படுத்துகிறது. நவீன சமூகத்தின் ஆழ்மனம் என்பது என்ன? நவீன மனிதர்களின் சிதைவுகள் என்பது என்ன? இந்த யுகத்தின் குடும்ப அமைப்பு எப்படி உள்ளது? வெறுப்பும் அன்பும் எத்தகைய வெளிப்பாடாக இருக்கின்றன? என்பதை எதையுமே ஆராயாமல் படம் கணவன் மனைவி முறிவை ஒரு சமூகத்தின் குற்றமான நிகழ்வாக மட்டுமே புலம்பிவிட்டுப் போகிறது. கதை தேர்வில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தக் காலக்கட்டத்தில் பேச வேண்டிய கட்டாயம் உள்ள கதை. ஆனால், அதனை விவாதிக்காமல் தன்னிலையில் மிகவும் மேலோட்டமாகவும் பலவீனமாகவும் வாதிட்டு ஒரு நியாயத்தை மட்டுமே சொல்லிவிட்டிருக்கிறது.

எஸ்.தி.பாலா ஒரு பெண்ணின் மீதான பாலியல் வன்கொடுமைக்கு அவள் உடுத்தும் உடையே காரணம் எனப் பட்டிமன்றம் நடத்தும் பாணியையே இப்படத்திலும் காண நேர்கிறது. ஒரு தனிமனிதனை குடும்பம் என்ன செய்கிறது? குடும்பம் என்பதன் சமூக ரீதியிலான கருத்தாக்கம் என்பது என்ன? இன்று பின்நவீனத்துவவாதிகள் குடும்பம் என்பதை ஒரு தனிமனிதனின் ஆயுள் வரையிலான உழைப்பை அதிகாரப்பூர்வமாகச் சுரண்டுவதற்கு மிகவும் வசதி நிறைந்த இடம் குடும்பமே என விமர்சிக்கிறார்கள். மேற்கத்திய இடதுசாரி அரசியல் கருத்தாக்கங்கள் குடும்ப அமைப்பின் மீது வைக்கும் விமர்சனம் இப்படியிருக்க நாம் இந்த யுகத்தில் நின்றுகொண்டு குடும்ப அமைப்பின் புனிதத்தைக் காக்க கற்பு, இல்லற அமைதி, தியாகம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் இதனை பின்னடைவு எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

குடும்ப அமைப்பும் இடதுசாரி அரசியல் கருத்தாக்கமும்

vivaagarathu 2ஒப்பந்த ரீதியில் இருவர் அன்பையும் உழைப்பையும் பெற்றுக்கொள்ள அரசு சட்ட ரீதியில் உருவாக்குவதே கணவன் மனைவி என்கிற உறவு. ஒரு குடும்ப அமைப்பிற்குள் வருபவன் கட்டாயம் அந்தக் குடும்ப வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தாக வேண்டிய நிலை உருவாகின்றது. ஆகவே அவன் எப்படியும் ஒரு நிறுவனத்திடமோ, அல்லது அரசிடமோ அடிமையாக வேண்டிய நிலை உருவாகின்றது. கேட்பாரின்றி அவனது ஆளுமை மெல்ல மெல்ல சுரண்டப்படும். இத்தனையையும் குடும்பத்திற்கான தியாகம் என்ற ஒற்றை வரியில் சமூகமும் அங்கீகாரம் கொடுத்து நியாயப்படுத்திவிடும். குடும்பம் என்ற அமைப்பை வளர்ப்பதே சமூகம்தான். சமூகத்தின் உறைவிடம் குடும்பம் என்ற நிலையில் அறிய வேண்டியுள்ளது. இப்படி உடல் ரீதியில் உழைப்பிற்குள்ளாகும் கணவனின் தியாகத்தை உணர்ந்து நடந்து கொள்பவளாகப் பெண் வடிவமைக்கப்படுகிறாள். உழைத்துவிட்டு வீட்டிற்கு வரும் கணவனுக்குச் சேவை செய்ய வேண்டியவளாகப் பெண் நிறுவப்படுகிறாள். அப்படிக் குடும்பத்திற்காக உழைக்கும் கணவனின் எல்லாம் தவறுகளையும் அந்தப் பெண்ணானவள் கேள்வி எழுப்பக்கூடாது என்பது ஆண்வழி சமூகத்தின் விதியாக மாறுகின்றது. இப்படியொரு குடும்ப அமைப்பு. இதையே இன்றைய பெண்ணியவாதிகள் கடுமையான விமர்சனமாக முன் வைக்கிறார்கள். இந்தப் பார்வையும் ரேவதியின் படத்தில் வெளிப்படவில்லை.

தற்காலத்தில் குடும்ப அமைப்பு கொஞ்சம் தளர்த்திவிடப்படுகிறது. ஆணுக்கு நிகரான பெண்ணின் ஆளுமை முன்னிறுத்தப்படுகின்றது. இதுவும் முன்பிருந்த குடும்ப அமைப்பிலிருந்தே தொடங்கப்படுகிறது. வேலைக்குச் செல்லும் ஆணிற்கு நிகராகக் குடும்ப வளர்ச்சிக்காகப் பெண்ணும் உழைக்கும் ஒரு நிலைக்கு வருகிறாள். அதாவது குடும்ப அமைப்பில் ஆணைப் போல சம அதிகாரத்தைப் பெற அவனைப் போலவே ஓர் உடல் உழைப்புத் தொழிலாளியாக மாற்றப்படுகிறாள். தன்னுடைய உழைப்பை அவளும் அரசிடமோ அல்லது ஏதேனும் நிறுவனத்திடமோ ஒப்புக்கொடுக்கிறாள். ஆணினுடையது என மட்டுமல்லாமல் அவர்களுக்கு நிகராக இப்பொழுது பெண்ணின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. அதுவரை கணவனிடம் பறிக்கொடுத்த உழைப்பைப் பெண்கள் குடும்ப அமைப்பில் சரிநிகர் ஆக பெயர் தெரியாத முதலாளிகளிடம் பறிக்கொடுக்கத் துவங்குகிறார்கள். அடுத்ததாக வளர்ந்து வரும் நவீன சமூகம் பெண்களைப் பிறந்ததிலிருந்தே நவீன சமூகத்தின் தேவைக்கேற்பவே வளர்க்கத் தொடங்குகிறார்கள். அவர்களும் ஏற்கனவே உள்ள குடும்ப அமைப்பில் வைத்துதான் வளர்க்கப்படுகிறார்கள். எந்தவொரு மனிதனும் தனியாக வளர்ந்துவிடுவதில்லை. குடும்ப அமைப்பின் இன்னொரு வளர்ச்சி நிலை இது. இவையும் இப்படத்தில் விவாதிக்கப்படவில்லை.

இக்காலக்கட்டத்தில் ஒரு புதிய குடும்பம் இந்தச் சமூகத்தில் உருவாகும் முன்பே பலவகையான தேவைகளை யந்திரத்தனமாக உருவாக்குகின்றது; ஒப்பந்தப்படுத்துகிறது. வேலை செய்யும் கணவன்தான் வேண்டும் என்றும் படித்த மனைவிதான் வேண்டுமென்றும் பலவகையான விதிமுறைகளை முன்வைக்கிறது. அதற்கு உடன்படுபவர்களே ஒரு புதிய குடும்பத்தை உருவாக்குகிறார்கள். மெட்றிமோனி (Matrimony) போன்ற நிறுவனங்களும்குடும்பத்தை உருவாக்குவதை ஒரு தொழிலாகச் செய்கிறன. குடும்பம் உருவாகுதல் என்பது முன்பு சமூக அரசியலாக இருந்த காலம் மறைந்து இப்பொழுது அது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட நிறுவனத்தில் உருவாகும் முறிவு என்பது எப்படியிருக்கும்? இந்த யுகத்தின் காதல் குடும்பமாகும்போது எத்தகையதொரு மனோபாவத்தை அடைகிறது என்று நிச்சயம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது. இன்றைய குடும்ப அமைப்பை ஒரு கலாச்சார வெளியாகவோ ஒரு தியாக வெளியாகவோ என மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. விவாகரத்து படமும் குடும்ப அமைப்பையும் உறவு முறிவையும் அப்படித்தான் பார்த்துச் சொல்லியிருப்பதாகக் கருதுகிறேன். ஆக மொத்தம் இப்படம் குடும்பத்தின் மீதும் குடும்ப அமைப்பின் அரசியல் மீது எந்தவொரு மாற்று பார்வையையோ புதிய சிந்தனையையோ முன்வைக்கவில்லை. மாற்றாக, ஏற்கனவே சொல்லப்படும் குடும்பப் புனிதங்களை மேலும் நிறுவிவிட்டு செல்கிறது.

நவீன சமூகத்தின் மனநிலையோடு இன்றைய சமூகப் பிரச்சனையைப் பேச வேண்டிய நிலை உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். ‘மெல்லத் திறந்தது கதவு’ படமும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்தே கதையை நகர்த்தியது. அந்தக் குற்றவாளியின் பக்கமிருந்து குற்றத்திற்கான இன்னொரு பக்கத்தைக் காட்டாமலேயே பலவீனமடைந்து போனது. இந்தத் தேக்கத்தை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சமூகத்தின் ஒரு நிலையிலிருந்து மட்டுமே நான் வாதிடுவேன் என்றால் அது சிறந்த கலை படைப்பாகாது. ஏற்கனவே காலம்தோறும் பேசப்பட்டு வரும் சமூக குடும்ப விழுமியங்களை மீண்டும் அதே போல விவாகரத்து பேசியுள்ளது. மலேசிய இந்தியக் குடும்ப அமைப்பின் மீது வெறும் ஒற்றை குரலை மட்டுமே பதிவு செய்யும் ‘விவாகரத்து’ திரைப்படம்  மறுவிசாரணைக்கு உட்பட்டதே

கே.பாலமுருகன்
நன்றி: வல்லினம்.காம்

No comments: