Wednesday, October 15, 2014

கவிதை: எதிர்ப்பாராத ஒரு மழைநாளில்


நான் அலட்சியமாகக் கவனித்துக்கொண்டிருந்த
ஒரு மழைநாளில்
கூடிவந்த சோம்பல்கள்
உடலைத் தீண்டி
தின்கையில்
வந்து சேர்ந்தன
நீ முன்பொருநாள் அனுப்பிய
அனைத்துக் காகிதக் கப்பல்களும்.

சொல்லத் தவறிய
உன் அனைத்து விளையாட்டுத்தனங்களும்
கவனியாமல் கடந்துபோன
உன் குறும்பு சிரிப்பும்
உயிர் பிழைத்துத் தப்பி
வந்திருந்தன.


காதலும் வாழ்க்கையும்
வாய்ப்பும் கல்வியும்
தீண்டாமையும்
உனக்களித்த சோர்வில்
உனது இறுதி நாளில்
நீ அன்னாந்து பார்த்த நிலத்தின்
உயரம் தாழ்வாகத் தெரிந்திருக்கலாம்.

முடிவெடுத்த அன்றையநாளில்
உனக்குச் சட்டென சிறகுகள்
முளைத்திருக்கலாம்.
அல்லது நிலமெல்லாம் கடலாகியிருக்கலாம்.

அம்மாவின் மடியிலிருந்தவாறு
உலகமறியாமல் மிகுந்த அசட்டுத்தனத்துடன்
நீ அன்று அனுப்பிய
காகிதக் கப்பல்கள்
இன்றொரு மழைநாளில்
எந்த அறிவிப்புமின்றி
வந்து சேர்ந்தன.

மொத்த அலட்சியத்துடன்
மீண்டும் மழையைக்
கவனிக்கத் துவங்கினேன்.
- கே.பாலமுருகன்

No comments: