Wednesday, October 8, 2014

வெள்ளைப்புலியும் பூனே வாலிபரும் சமூக மனநிலையும்

சமீபத்தில் பூனேயிலுள்ள மிருகக்காட்சிசாலையில் வெள்ளைப்புலி இருந்த வளாகத்திற்குள் ‘தவறி’ விழுந்த வாலிபரின் மரணம் குறித்து எல்லோரும் நெருக்கமாக உணர்வோம். ஏன் நெருக்கமாக உணர்கிறோம் என்றால் அவரின் கழுத்தைப் அந்தப் புலி கொவ்வி இழுத்துப் போகும் காணொளியைத்தான் நாமெல்லாம் பகிர்ந்தும் பார்த்தும் இரசித்தும் விட்டோமே.

நான் பெரும்பாலும் இதுபோன்ற படங்களையோ அல்லது காணொளிகளையோ பார்க்கத் தவிர்ப்பேன். எனக்கு ‘ஒரு புலி ஒரு வாலிபனைக் குதறி கொன்றுவிட்டது’ என்ற செய்தி மட்டுமே போதும். அதுவே ஆயிரம் கற்பனைகளுக்கு இட்டுச்செல்லும். அப்படியிருக்க ஏன் அப்புலி குதறுவதையும் கொவ்வுவதையும் நான் பார்க்க வேண்டும்? அது ஒருவிதமான கொடூர மனநிலைக்கு இட்டுச்செல்கிறது. சமீபமாக இதுபோன்ற நிக்ழ்ச்சிகளை நேரம் செலவிட்டு காணொளியாகப் பதிவு செய்ய எப்பொழுதும் சிலர் தயாராக இருக்கின்றார்கள். அது ஒரு பழக்கமாக மாறிக்கொண்டிருக்கிறது.

எனக்கு, பசியால் வாடி வதங்கி இறக்கப்போகும் ஒரு கருப்பினத்தின் சிறுவனைக் கொல்வதற்காகக் காத்திருக்கும் கழுகொன்றின் புகைப்படமும் அதனைப் புகைப்படம் எடுத்த உலகப் புகழ்ப்பெற்ற புகைப்படக்கலைஞரின் ஞாபகமும் வருகின்றன. பசியின் கொடுமையை உலகிற்குச் சொன்ன புகைப்படம் அது. பல விருதுகளும் கிடைத்தன. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார். பசியின் கொடுமையில் சிக்கியிருந்த அந்தச் சிறுவனுக்கு ஒரு பருக்கை சோற்றை அந்த நேரத்தில் கொடுக்க வக்கில்லாமல் புகைப்படம் எடுத்து அதன் மூலம் விருதையும் பணத்தையும் பெற்ற குற்ற உணர்ச்சியே அவரைக் கொன்றுவிட்டது.


அந்த வெள்ளைப்புலி மிரண்டு போவதற்கு யார் காரணம்? அருகாமையில் இருந்தவர்கள் கல்லை விட்டு எறிந்திருக்கிறார்கள். சத்தம் போட்டுக் கத்தியிருக்கிறார்கள். உங்கள் வீட்டுக்கு அப்படியொரு ஆபத்து ஏற்பட்டால் உடனே தன் வீட்டுக்குள் நுழைந்திருக்கு எதிரியை நாம் தாக்க முற்படுவோம்தானே? அவ்வித தற்காப்பு உணர்வே அந்தப் புலியை உடனடியாக அப்படி இயங்க வைத்துள்ளது. நம்முடைய பொதுபுத்தி என்பதன் மீது எப்பொழுதும் எனக்கொரு சந்தேகம் உண்டு. சமூகம் ஒட்டுமொத்தமாக எப்படிச் சிந்திக்கிறது? எப்படிச் செயல்படுகிறது? இந்தச் சமூகத்தில் ஓர் அறிவாளி மாட்டிக்கொண்டாலும் அவனை முட்டாளாக்க முனைவதே சமூகத்தின் இன்றைய பொதுபுத்தி என்றே நினைக்கிறேன்.

தனக்கு இதுபோன்ற ஒரு காணொளி வருகிறது என்றால் ஏன் அதை நாம் பொதுவில் பகிர்ந்துகொள்ள வேண்டும்? அத்தனை கொடூரமான ஒரு காட்சியை ஏன் இன்னொருவரும் பார்க்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்? சமூகத்திற்குச் செய்தி மட்டும் போதாதா? அதனை இத்தனை நெருக்கமாகக் காட்டி எதனை நிரூபிக்க விரும்புகின்றோம்? இந்த நேரத்தில் எனக்கொரு உளவியல் தொடர்பான வியாக்கியானம் ஞாபகத்திற்கு வருகிறது. அருவருப்புகளையும் கொடூரங்களையும்கூட நம்மால் இரசிக்க முடியும் என உளவியல் கூறுகிறது. அது மனித மனத்தின் இன்னொரு பக்கம். ஒரு கண் அதனைப் பார்க்கவிடாமல் தடுக்க இன்னொரு கண் அதனை இரசிக்குமாம். இதுதான் மனித மனத்தின் இருநிலை உளவியல். ( எங்கோ படித்த ஞாபகம்). அப்படிப்பட்ட நமக்குள் ஏற்கனவே இருக்கும் ஒரு மனநிலையை நாம் பூதாகரமாக வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நாளடைவில் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வெட்டித் தின்னும் காட்சியையும் பார்க்கும் பக்குவத்திற்கு வந்திருப்போம். இது ஒருவகையான ஆபத்தான நிலை என அறிய முடியவில்லையா?

இதில் துணிச்சல் என்றொரு அளவீடு இருக்கிறதா? இந்தக் கொடூரமான காணொளியைத் தன்னால் எந்த அருவருப்பும் தயக்கமும் இல்லாமல் பார்க்க முடிவதால் நான் தைரியசாலி என்று சொல்லிக்கொள்ள நினைக்கிறீர்களா? அப்படியென்றால் உடனடியாக நீங்கள் ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன். தயவு செய்து இதை நீங்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் காட்டி, சமூகத்தின் பொதுபுத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவிக் கொண்டிருக்கும் வன்முறைமிக்க மனநிலையைத் தீவிரமாக்கிவிடாதீர்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளும் இதைப் பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள் என்பதை உணரத் துவங்குங்கள். ‘வாட்சாப்’ போன்ற இணையச் சேவைகள் இதனை மேலும் துரிதப்படுத்திக் கொடுக்கின்றன.

இதைப் பார்ப்பதை நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால், அந்தப் புரிதலையும் தாண்டி நாம் உளவியல் குறித்துப் பேச வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்த்தவே விரும்புகின்றேன். நாளை இதனால் சமூகத்தின் மனநலம் பாதிக்கக்கூடும். வரியும் விலையும் ஏறிக்கொண்டிருக்கும்போதே எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை, இது மட்டும் என்ன செய்துவிடப்போகிறது என்று நினைக்கிறீர்களா?  மன்னிக்கவும் அப்படிச் செய்வது ஆரோக்கியம் என நினைத்தால், சொல்வதற்கொன்றுமில்லை. இது ஒரு பகிர்வு மட்டுமே. முடிவு உங்கள் கையில்.

'புலி ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நம் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் அந்தக் கொடூரமான புலித்தானே மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்?'


கே.பாலமுருகன்

No comments: