'பள்ளிப்பருவத்து மாணவர்கள் பாலூறவில் எந்த ஆர்வமும் காட்டம்மாட்டார்கள் என்ற சமூகத்தின் பிரமையைத் தன் சினிமாவின் வழி கலைத்தவர் பாலு மகேந்திரா' - ராஜன் குறை.
நம் இந்திய சமூகம் பாலியல் கல்வியின் தேவையை இறுதிவரை புரிந்துகொள்ளமல் மிகவும் இறுக்கமாகப் பிள்ளைகளை வளர்க்கும் சமூகம் என்றால் அது மிகையில்லை. அதனால்தான் இந்தச் சமூகத்தில் கள்ளத்தனமான உறவுகள் குடும்பங்களைப் பெருமளவில் சிதைத்து வருகின்றன. அதிகமான மணமுறிவுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியக் குடும்ப அமைப்புகளை ஒருமுறை ஆழமாக ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரிய வரும். குடும்பம் சார்ந்த பல விசயங்களைத் தெளிவாகக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய/கற்பிக்க வேண்டிய தேவை இன்று இருக்கின்றது.
ஒரு சிறுமியைத் தன் குடும்பப்படத்தை வரையக் கூறினால், அச்சிறுமி நிச்சயம் அப்பாவை உயரமாகவும் அம்மாவைக் குட்டையாகவும் வரைந்து காட்டும். நான் செய்து பார்த்திருக்கிறேன். ஏன் இருவரையும் சமமாக வரைய முடிவதில்லை? குடும்ப அமைப்பு அவர்களின் மீது விதிக்கும் மனநிலை அது. குழந்தைகளுக்கு முன்னே சண்டை போட்டு அப்பா தன் வீரத்தை/ஆணாதிக்கத்தை அந்தக் குழந்தைக்குள் கட்டமைக்கிறார். அக்குழந்தை பெரிதாகும்வரை ஆண்கள் நம்மை விட பலமானவர்கள் என்ற ஒரு புரிதலுக்குள் சிக்கிக்கொள்கிறது.
மேலும் குடும்பப் பிரச்சனைகளைக் குழந்தைகளுக்கு முன்னே பேசிக்கொள்வது/விவாதிப்பது குடும்பம் என்றால் பிரச்சனையின் மையம் என்கிற தவறான ஒரு கற்றலை அவர்களுக்குள் விதிக்கிறது. பிறகு எப்படிக் குடும்பத்தை மீறலாம் என அவர்கள் பால்ய வயதில் முயற்சிக்கிறார்கள். குடும்பத்தை வெறுக்கத் துவங்குவதன் முதல் கட்டமாகக் குடும்பத்தை விட்டுத் தப்பிக்கிறார்கள்.
இதற்கெல்லாம் ஒரு துவக்கக் கட்டமாக பெற்றோர்கள் தன் குழந்தைகளுடன் பாலியல் கல்வியை இயல்பாகப் பேசும் ஒரு மனநிலைக்கு வரலாம். அதுவே குழந்தைகளை பெற்றோர்களுடன் நெருக்கமாக்கும். அவர்கள் கட்டற்ற பொதுவாழ்வின் சிக்கல்களினால் பாதிக்காமல் காப்பாற்ற முடியும். ஒரு சிறுமி/ சிறுவன் பாலியலைப் பற்றி தன் நண்பர்களிடமிருந்து தெரிந்துகொள்ளும் இடம் மிகவும் ஆபத்தானவை.
ஆசிரியராகிய நான் நலக்கல்வியில் பாலுறுப்புகளைப் பற்றி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறேன். பாடத்திட்டத்தில் அந்தத் தலைப்பு இருக்கின்றது. ஆண்குறி, பெண்குறி என்று அடையாளமிட்டு விளக்கும் வகையிலான பயிற்சிகள் புத்தகத்தில் உள்ளன. அவற்றை கற்பிக்கும்போது எவ்வித தயக்கமும் தேவையில்லை. அது ஒரு தார்மீகமான தேவையான கற்றல். பெற்றோர்களும் இவற்றின் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும். உடலைப் பற்றிய ஆழமான தேடலும் புரிதலும் நமக்கு அவசியம். உடலைக் கடப்பதைப் பற்றிய ஆன்மீகத்தைவிட இப்பொழுது இந்த நொடியில் நமக்கிருக்கும் இந்த உடலின் தேவை என்ன என்பதை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.
- கே.பாலமுருகன்
No comments:
Post a Comment