Monday, January 5, 2015

மர்மத் தொடர் Part 1 : மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்


பதிவுப் புத்தகத்தை எடுத்து நீட்டிய பர்மா நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணின் கண்கள் உறக்கமில்லாமல் கறுத்துப் போயிருந்தன. கண்மணி குமாரை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் பதிவு புத்தகத்தைத் திறந்தாள்.

‘குமரேசன் – 21.11.2013
மாலா     - 21.11.2013
முருகன் & சுகுமாறி 17.09.2013
சியோங் லீங் – 09.08.2013….

என இங்கு வந்து தங்கியவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன. கண்மணிக்குச் சட்டென சந்தேகம் தட்டியது. அந்தப் பர்மா பணிப்பெண்ணைக் கவனித்தாள். ஒரு பழைய தகறக் குவளையில் குட்டையான ஒரு பெண்சில், அதனுடன் கட்டி வைக்கப்பட்ட ஒரு நீலப் பேனா. சுவரில் இந்த மலையின் பழைய படம் தொங்கவிடப்பட்டிருந்தது.

“குமார்…”
“என்னம்மா?”
“ஒரு வருசம் இங்க யாரும் வந்து தங்கல…இதைப் பாருங்க”

குமார் அந்தப் பதிவு புத்தகத்தை வாங்கிக் கவனித்தான். கடைசியாக வந்து தங்கியவனின் பெயர் குமரேசன், அதுவும் ஒரு வருடம் ஆகிறது. குமார் அந்தப் பர்மா பெண்ணிடம் மலாய் மொழியில் விசாரித்தான். அவளும் தட்டுத்தடுமாறியே பேசினாள்.

“சரிமா…விடு. அவங்க ஆட்கள் மொத்தமா குழுவா வந்து தங்குவாங்க அதனாலே குறிப்புப் புத்தகத்துலே எழுதறது இல்லையாம்”
“உண்மையாவா?”
“இது ரொம்ப பிரசித்திப் பெற்ற மலை…என்ன கவலை?”
“மனசுக்குச் சரியா படல…அதான் ரொம்ப யோசிக்கறன்…”
“ரொம்ப நாள் பிரிவுக்குப் பிறகு இப்பத்தான் சேர்ந்துருக்கோம் கண்மணி. இந்த்த் தனிமை வேறு எங்கயும் கிடைக்காது. மலையிலெ அடிக்கற குளிர், இதமான காற்று, ஆளே இல்லாத அமைதி. இதெல்லாம் எனக்கு வேணும் கண்மணி”


கண்மணி அதைக் கேட்டுத் தலையைச் சோர்வாகத் தொங்கவிட்டாள். குமார் பதிவுப் புத்தகத்தை வாங்கி பெயரெழுதிக் கையெழுத்திட்டான். பர்மா பணிப்பெண் எழுபது ரிங்கிட் எனக் கைகளிலேயே காட்டினாள்.

குமார் பணத்தைச் செலுத்திவிட்டுச் சாவியை வாங்கினான். சாவிக்குப் பக்கத்தில் மரத்தால் செய்யப்பட்ட முகம் சிதைந்த கரடி பொம்மை தொங்கிக் கொண்டிருந்தது. இருவரும் கைப்பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். குளிர்ச்சி மிகுந்த காற்று பேயோசையுடன் அவர்களை உரசி சென்றது. தூரத்தில் மலை வாய்ப்பிளந்து கிடந்தது.

குரோசன் மலை, குரூண் நகரிலிருந்து காட்டுப் பாதையில் 40 நிமிடங்கள் பயணிக்க வேண்டும். நிலத்திலிருந்து 3000 அடி உயரத்தில் கம்பீரமாக நிலைத்திருந்தது. பெரும்பாலும் குரூண் நகரமே மாலை 6மணிக்கு மேல் அமைதியாகிவிடும். ஆதலால், இந்த மலைக்கு வர எந்தப் போக்குவரத்து வசதியும் இருக்காது.

குமார் தனக்கு வழங்கப்பட்ட வீட்டைத் தேடினான். அங்கு எல்லாமே மர வீடுகள்தான். ஒவ்வொரு வீடும் 50 மீட்டர் இடைவேளியுடன் தனித்தனியாகக் கட்டப்பட்டிருக்கும். குமார் அறை எண் 7-ஐ திறந்தான். கும்மிருட்டு அறைக்குள் சுருண்டு படுத்திருந்தது.

“ச்சீ! எவ்ள தூசி! சுத்தமே பண்ண மாட்டாங்களா?” கண்மணி சலித்துக் கொண்டே கையில் பிடித்திருந்த பையைக் கீழே வைத்தாள்.
“யாருமே தங்கல…அதான் இப்படி இருக்கு போல” எனச் சொல்லிக்கொண்டே விளக்கைப் போட்டான்.

வெளிச்சம் குறைவான மஞ்சள் விளக்குத் திணறிக்கொண்டே எரியத் துவங்கியது. சுவரில் ஒரு ராணியின் ஓவியம் இருந்தது. கண்களில் ஏக்கமிக்க அவளுடைய தோற்றம் அச்சுறுத்தியது.

குமார் மெத்தையைத் தட்டி அதன் மேல் படர்ந்திருந்த தூசியைச் சுத்தம் செய்தான். கண்மணி அறைக்குள் இருந்த ஒரேயொரு கண்ணாடி சன்னலை மெல்ல திறந்தாள். கீழே பெரிய பள்ளத்தாக்கு தெரிந்தது. ஓலமிடும் காற்றின் ஓசை பாதாளத்திலிருந்து மேலெழுந்து வந்தது. மரக்கிளைகள் சன்னலை மிக நெருக்கமாக உரசிக் கொண்டிருந்தன.

“இன்னிக்கு ஒரு ராத்திரி ரொம்ப பயங்கரமா இருக்கப் போவுது” எனப் பயத்துடன் கண்கள் விரியக் கூறினாள்.

குமார் அவளை நிமிர்ந்து பார்த்தான். சற்று முன் சுவரில் இருந்த ராணி அவளுக்குப் பின்னே கண்ணாடி சன்னலின் ஓரம் நின்றிருந்தாள்.

-    தொடரும்-

கே.பாலமுருகன்
Thanks Nam Naadu Paper

No comments: