Tuesday, September 22, 2015

சிறுகதை: கொலையாளிக்கும் கொலைக்கும் கொல்லப்படுபவனுக்கும்



“என்னால ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியாது…உன்னைக் கடத்த சொன்னாங்க…கொலை செய்ய சொன்னாங்க…அவ்ளத்தான்”

“கொஞ்ச டைம் கொடுங்க. நான் பேசணும். சாகப் போறவனோட கடைசி ஆசைனு நினைச்சிக்குங்க சார்”

“பேசு…நீ பேசி முடிஞ்சோன உன் கழுத்தை இந்தக் கத்தியால அறுப்பேன்”

“எனக்கு ரெண்டு பிள்ளைங்க. இப்பத்தான் ஒன்னுக்கு 5 வயசு இன்னொன்னுக்கு 2 வயசு. மனைவி இல்ல. ஒரு விபத்துல செத்துட்டாங்க”

“உன் குடும்பக் கதைய ஏன் என்கிட்ட சொல்ற?”

“கேளுங்க சார்…ப்ளிஸ்… என்ன சாகடிக்கப் போற நீங்க யாருன்னும் தெரியல. ஏன் என்னைக் கொலை செய்யப் போறீங்கன்னும் தெரியல. உலகத்துல இப்படிப்பட்ட சாவுத்தான் கேவலமானதுன்னு நினைக்கறன் சார்”

“உனக்கே தெரியுதுல. அப்ப செத்துரு”

“ப்ளிஸ்…முதல்ல நான் பேசறத கேட்டுருங்க… எனக்கும் என் சொந்தக்காரவங்களுக்கும் நிறைய சொத்து பிரச்சனை. என் அக்காவோட பையன நான் படிக்க வைக்கலனு, என் அக்கா கோச்சிக்கிட்டுப் போச்சி. எனக்கு ஒரே மாமா அவரும் வெளிநாட்டுக்குப் போய்ட்டாரு. மத்தப்படி எல்லாமே தூரத்து சொந்தம்தான். இப்ப இவுங்க யாருகிட்டயும் உதவி கேட்கவும் முடியாது…யாரும் உதவிக்கும் வரமாட்டாங்க. என் பிள்ளைங்க அனாதையா நிக்குங்க சார்”

“டேய்ய்ய் உன் வாயில இந்தக் கத்திய சொருவி வயித்துல எடுத்துருவன்…நானும் அனாதைத்தான் தெரியுமா? யாரும் இல்லாத்தைப் பத்தி என்கிட்ட கதை அளக்காத…நான் மடிய மாட்டென்”

“அனாதையா வாழ்றதோடு கொடுமை உங்கள விட வேறு யாருக்கும் தெரியும் சார்? நீங்களே புரிஞ்சிக்கலன்னா எப்படி?”
“தெரியவும் வேணாம் புரியவும் வேணாம்…எனக்கு காசு கொடுத்துருக்காங்க. என் வேலைய செஞ்சிட்டு நான் போய்க்கிட்டே இருப்பேன்”

“சார் சார்…நீங்க கொலை செய்யும்போது உங்களால கொலை செய்யப்படறவனோட கண்ணைக் கடைசியா பார்த்திருக்கீங்களா?”

“இல்ல…ஏன்?”

“சார் ஒரு தடவ பாருங்க சார்…கொலை செய்றதுக்கு முன்னால என் கண்ணை மட்டும் பாருங்க…சார் வாழ்றதோட அருமை சாவின் கடைசி நுனிக்குப் போற வரைக்கும் தெரியாதாம்…நான் அங்கத்தான் சார் இருக்கென். எனக்கு நல்லா தெரியுது சார்”

“டேய்ய்ய்! சும்மா பேசிக்கிட்டு இருக்காத…எனக்கு எந்த ம…..தெரிய வேண்டாம்…எனக்கு மணியாச்சி”

“சார் உங்களுக்கொரு குடும்பம் மனைவி பிள்ளைங்க இருந்திருந்தா இப்படி யோசிப்பீங்களா?”


“டேய்ய்ய் எனக்கு யாரும் இல்லடா நாயே! பூத்தாவா பேசிக்கிட்டு இருக்காதே...சொல்லிட்டென்”

“சார்…யாரும் யாரையும் கொலை செய்யப் படைக்கப்படல சார்…உங்களைக் கேட்டா நான் பொறந்தேன்? பின்ன ஏன் சார் என்னைக் கொலை செய்றீங்க? நான் உங்களுக்கு என்ன பாவம்…”

“டேய்ய்ய் நிப்பாட்டு. நான் என்ன பாவ மன்னிப்பா கொடுத்துக்கிட்டு இருக்கென்…உனக்குக் கொடுத்த டைம் முடிஞ்சிருச்சி. நான் கொஞ்சம் மண்ட ஓடி சொல்லிட்டென்… இப்படில்லாம் பேச விட்டுவிட்டு கேட்கலாம் மாட்டென்…உன் அதிர்ஷ்டம் இன்னிக்கு”

“சார் நீங்க எத்தனையோ பேரைக் கொன்னுருப்பீங்க. என்னை ஒரேயொரு முறை வாழ விட்டுருங்களேன் சார்….நான் யாருக்கும் தெரியாமல் என் பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு ஜொகூர், மலாக்கான்னு போய் தலைமறைவா இருக்கென் சார்…பிளிஸ் சார்…கெஞ்சி கேட்டுக்கறன்…வாழவிடுங்க சார்”

“டேய்ய்ய்ய் நாதார நாயே!...சொன்னா விளங்காது? அப்படியெல்லாம் விட முடியாது. மேல இருந்து உத்தரவு…இப்ப நான் விட்டன்னா என்னிக்காவது நீ உயிரோடு இருக்கறது தெரிஞ்சிச்சினா என்னை மாதிரி கூலி எப்படிப் பொழைப்பு நடத்துவான்? கொஞ்சம் யோசிச்சிப் பாத்தீயா? என்ன வெளாட்டுக் காட்டிக்கிட்டு இருக்க?”

“சார்… என் கைய அவுத்துவிட முடியுமா?”'

“எதுக்குடா?”

“உங்க காலைப் பிடிச்சிக் கெஞ்சுறேன் சார்…எனக்கு வாழ்றதுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க சார்…”

“டேய்ய்ய் வேலைக்கு ஆகாது. இந்தக் கத்திலெ உன் கழுத்தை அறுக்குறேன்…ஒழுங்கு மரியாதையா செத்துரு”

“சார் சார் கொஞ்ச நேரம்…நான் ஏன் சாகறேனு மட்டும் சொல்லிடுங்க சார்…அது தெரியாமல் சாவறது கேவலமா இருக்கு”

“டேய்ய்ய்ய் என் உயிரெ வாங்கறடா நாயே!”

“சார் ப்ளிஸ் சொல்லுங்க சார்….என் சாவு இவ்ள கொடூரமா இருக்கக் கூடாது சார்”

“அப்படில்லாம் உண்மைய சொல்ல முடியாது…யாரு எவரு…அதெல்லாம் சொல்ல முடியாது”

“சார் சாகப் போறவன்கிட்ட உண்மைய சொல்ல ஏன் தயங்குறீங்க?”

“அதெல்லாம் தெரியாதுடா. சொல்ல முடியாது. நீ சாவு…அப்பத்தான் என் வேலை முடியும். நானும் வீட்டுக்குப் போகணும்”

“சார் கத்திலலாம் அறுக்காதீங்க. என்னால வலி தாங்க முடியாது. ஏதாச்சம் விஷம் இருந்தா கொடுங்க”

“நான் என்ன இங்க சாகறப் போட்டியா நடத்துறென்? இது இல்லன்னா அதுன்னு சொல்லிக்கிட்டு இருக்க? உனக்கு இந்தக் கத்திலத்தான் சாவு”

“சார்…கொஞ்சம் கருணை காட்ட முடியுமா? நான் எந்தப் பாவமும் செய்யல சார்… நீங்க என்னைக் கொல்லாமல் விட்டுட்டா உங்களுக்குப் புண்ணியமா போகும் சார்”

“டேய் அழுந்துகிட்டு இருக்காதெ. உன்னைப் பேசவிட்டுதே பாவமா போச்சி…இதுல என்ன புண்ணியம்…???”

“சார் இதுக்கப்பறம் நான் எப்பவுமே பேச மாட்டென் சார்….கண் காணாத இடத்துக்குப் போய்டறென் சார்..ப்ளிஸ் கெஞ்சிக் கேட்டுக்குறென்”

“டேய்ய்ய் ம…பேசியே டாச்சர் பண்ணாதெ. சரி மணியாச்சி. உனக்குக் கொடுத்த டைம் முடிஞ்சிச்சி…அவ்ளத்தான்”

“சார் சார்…உங்க அம்மாவே நேர்ல வந்து கேட்குற மாதிரி நினைச்சிக்குங்க… என்னை விட்டுருங்க சார்”

“டேய்ய்ய் நான் சார்லாம் இல்ல. ஏன் என்னைத் தூக்கி மேல வைக்குற? செஞ்சிட்டுப் போய்க்கிட்டெ இருப்பென். இன்னிக்கு வழக்கமா போடுற மாலாஜீன் ஏத்தல… சூரா ஆய்ருந்தனா நீ பேசிக்கிட்டுலாம் இருக்க முடியாது”

“சார் சார் இதான் விதி சார், நான் சாகக்கூடாதுன்னு இருக்கறதுனாலத்தான் இப்படிலாம் என்னைப் பேசவிட்டுருக்கீங்க….ப்ளிஸ் சார் காப்பாத்துங்க”

“டேய்ய்ய் விதி கதின்னு சொல்லிட்டுத் தப்பிக்கலாம்னு நினைக்காதெ. நீ சாகணும் அதான் விதி…அதுவும் என் கையில…”

“சார் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க… கொலை செய்றது நல்ல காரியமா? ஏன் சார் இவ்ள கொடூரம்? ஒரு உயிர்னா அவ்ள எளக்காரமா சார்? மனசாட்சியே இல்லயா?”

“யோசிக்கலாம் முடியாதுடா…பேப்ப்ப்… நல்லா வாயில வருது. காசு வாங்கியாச்சி… சாவு”

“………………………………………..”

-    கே.பாலமுருகன்

No comments: