Monday, December 7, 2015

மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 1 / அ.பாண்டியனின் வெதும்பல்: பால் திரிந்தோரின் சாபக்கேடுகள்

நாள்தோறும் மனித சிந்தனைகள் பல பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மனித உறவுகள் சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை பல முகங்களுடன் வந்து அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. இவற்றை வளைத்து மொழிக்குள் கொண்டு வர வேண்டியது ஒரு படைப்பாளிக்கான சவால்’- சுந்தர ராமசாமி (டிசம்பர் 2002)

பத்து வருடங்களுக்கு முன் ஒரு படைப்பாளியின் சிறுகதையைப் படித்துவிட்டு இப்பொழுதும் ஒரு படைப்பாளி அதே மொழி இயல்புடன் அதே போக்குடன் ஒரு சிறுகதையை எழுதியிருக்க வேண்டும் என ஒரு சமூகம் கோருவது அபத்தமாகவே தோன்றுகிறது. சமூகம் அறிந்த மொழிக்குள் ஒரு படைப்பைக் கொண்டு வருவது ஒரு ஜனரஞ்சகத்தனமான மேலோட்டமாகப் பேசப்படும் இலக்கியமாகவே போய்விடும். ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகம் அப்பொழுது எதிர்க்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் அடுக்குகளையும் கூர்ந்து கவனித்து வளைத்து அவனுக்குரிய ஒரு மொழிக்குள் கொண்டு வந்து வைக்கிறான். சமூகம் அவனுடைய கூறுமொழியின் தன்மைக்குள் தனது வாசக நிலைக்கேற்ப நுழைந்து ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இதைத்தான் சுந்தர ராமசாமியின் கூற்றும் விரிவாக்கிப் பேசுகிறது.

மலேசிய எழுத்தாளர் .பாண்டியன் அவர்கள் எழுதியவெதும்பல்சிறுகதையை அது பேசும் வாழ்வின் மூலம் முக்கியமானதொரு சிறுகதையாக உணர்கிறேன். விளிம்புநிலை மனிதர்களை ஏன் இலக்கியம் பேச வேண்டும் என்ற கேள்வியையும் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி இலக்கியத்தில் பேசலாமா என்ற கேள்வியையும் கேட்டு கேட்டு சலித்துவிட்டது. இலக்கியம் அனைவருக்குமானது எனும் ஜனநாயகத்தைப் புரிந்து கொண்டாலே மொத்த வாழ்வின் அனைத்து அடுக்குகளையும் மனிதர்களையும் பேசும் உரிமை இலக்கியத்திற்கு உண்டு என்பதையும் உணர முடியும்.

அவ்வகையில் .பாண்டியன் தன்னுடையவெதும்பல்சிறுகதையில் இச்சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் பால் திரிந்தோரின் அகவுணர்களையே முன்னிறுத்துகிறார். பெரும்பாலும் மலேசிய சிறுகதைகள் பால் திரிந்தோரைப் பற்றி எழுதியது மிகக் குறைவுத்தான். அப்படி எழுதியிருந்தாலும் அவர்களின் புறவாழ்வின் மீது சமூகம் எச்சமிடுவதைப் போலவும் அல்லது அவர்களின் மீதிருக்கும் பொது கசப்புகளை அல்லது தீண்டாமைகளை விலக்கும் பாணியிலான மேலோட்டக் கதைகளே வாசிக்கக் கிடைத்துள்ளன.

விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய சித்தரிப்புகளை நான் மூன்று வகையில் கவனிக்கின்றேன்.

1.   விளிம்புநிலை மனிதர்களின் புறவாழ்வைப் பேசுவது.
அதாவது சமூகத்தின் விளிம்பில் பொது அக்கறையின்றி பொது கவனமின்றி பெரும்பான்மையினரால் சிறுமைப்படுத்தப்படும் மனிதர்களாக வாழ்பவர்களைத்தான் விளிம்புநிலை மனிதர்கள் என்கிறோம். இதுபோன்றவர்கள் சமூகத்தால் கிண்டலடிக்கப்படுவதைக் காட்டுவது, அவர்கள் ஒதுக்கப்படுவதைக் காட்டுவது நாள்தோறும் அவர்கள்படும் இன்னல்களைக் காட்டுவது போன்றவையே புறவாழ்வைப் பேசும் இலக்கியமாகும். இதை எழுதும் எழுத்தாளர்கள் தன்னை மேலானவர்களாக நிலைநிறுத்தி விளிம்புநிலை மனிதர்கள் மனித பரிதாபங்களுக்குரிய சாதாரண மனிதர்களாகவும் சித்தரிக்க முனைவார்கள். விளிம்புநிலை மனிதர்கள் பற்றிய அவர்களின் கூச்சல் ஓங்கி ஒலிப்பதாக அமைந்திருக்கும். இவர்கள் தன்னை முற்போக்கு இலக்கியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

2.   பாதிப்புக்குள்ளாகும் விளிம்புநிலை மனிதர்களின் அகவுணர்வுகளைத் துல்லியமாக விவாதிக்க முயல்வது

இத்தகைய எழுத்தாளர்கள் தமிழில் தீவிரப் படைப்பாளர்கள் எனக் கருதப்படுகிறார்கள். விளிம்புநிலை மனிதர்களின் புறவாழ்வை ஒப்புவிப்பதன் மூலம் மட்டும் ஒரு தீவிரத்தன்மை உருவாகிவிடுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாற்றாக அவர்களின் அகவாழ்வை ஒரு பொது உரையாடலுக்குக் கொண்டு வந்து பொதுபுத்தியைப் பாதிக்கச் செய்வதால் இத்தகைய எழுத்து தற்காலத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் இலக்கியக் குரலாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பெரும்பாலும் எந்த வாசக உழைப்புமின்றி புரியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றன.


3.    விளிம்புநிலை மனிதர்களின் உள்ளார்ந்த வாழ்வின் சிடுக்குகளை உணராமல் அவர்களை இழிவுப்படுத்த முயல்வது.

      இத்தகைய இலக்கியங்கள் எல்லாம் காலங்களிலும் தண்ணுணர்வு இல்லாமல் தொடர்ந்து வேடிக்கைக்காக எழுதப்பட்டே வந்திருக்கின்றன. திருநங்கைகளைக் கொச்சைப்படுத்துவது, பிச்சைக்காரர்களை வைத்துக் கிண்டலடிப்பது என அந்த மூன்றாம்தர இலக்கியம் காட்ட முனைவதே ஆக மோசமான எழுத்தாகும். இதை வணிக எழுத்தின் ஒரு பகுதியாகச் சொல்லலாம். என் நிலையில் இது போன்ற இலக்கியத்தை மனித சமூகத்தைக் கொஞ்சமும் சிந்திக்க விடாததாகக் கருதுகிறேன்.

.பாண்டியனின்வெதும்பல்சிறுகதையில் அவர் விளிம்புநிலை மனிதர்களான பால் திரிந்தோரின் மன உணர்வுகளைக் கவனப்படுத்த முன்யன்றிருப்பதே கவனத்திற்குரியதாகும். ஆனால், அக்கதையின் மூலம் உருவாகும் வாசக அனுபவமும் எல்லையும் அவரவர் நிலைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும். நான் இக்கதையின் ஒரு வாசகனாக இருந்து பால் திரிந்தோரின் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்க்கிறேன். இதுவொரு புறவய சிக்கல் மட்டுமல்ல. இது மனம் சம்பந்தப்பட்டது என்றே உணர்கிறேன்.

நயன் தாராவின் காதல்…….

இக்கதையில் இடம்பெறும் நயன் தாரா கதாபாத்திரத்திற்கும் சுரேஸ் என்கிற கதாபாத்திரத்திற்கும் இடையே உருவாகும் மனம் தொடர்பான சிக்கலே பிரதானமாகப் பேசப்படுகிறது. நயன் தாரா யாரென்று கதையின் கடைசி பகுதியில் மிகவும் நுட்பமாக அதே சமயம் வாசக அதிர்ச்சியை அளிக்கும் வகையில் புலப்படுத்தப்படுகிறது. வாசகனுக்கு அதிர்ச்சியைத் தரும் ஒரு கட்டமாகக் கதையின் கடைசி வரி கருதப்பட்டாலும் அதுவே அடுத்தக் கணம் ஆழமான ஓர் எல்லைக்குள் கொண்டு சென்று கதையின் மீதான மதிப்பீடுகளை மாற்றியமைக்கிறது.

பால் திரிந்தோர் எனப்படுவோர் யார்? உடலளவில் ஆணாக இருந்து மனம் பெண்ணாக இருப்பதும், மனம் ஆணாக இருந்து உடல் பெண்ணாக இருப்பதும், உடல் ஆண் பெண் என இரண்டு நிலையில் திரிந்து மனம் நாளடைவில் சிதைவதும் எனப் பால் திரிந்தோரைப் பல வகைகளுக்குள் அடையாளப்படுத்தலாம். ஓர் ஆண் மன அளவிலும் நடத்தை ரீதியிலும் பெண்ணாக மாறுவதற்குப் பிறப்புத்தன்மையும் வளர்ப்புத்தன்மையும் காரணமாக அமைகிறது. சில சமயங்களில் மூன்று சகோதரிகளுடன் வளரும் ஒரு கடைசி பையன் பெண் தன்மைகள் அதிகம் பெற்றிருப்பதும், பெண் நடத்தைகளைப் போலித்தம் செய்து தன் செயல்பாடுகளில் கொண்டு வருவதும் வளர்ப்பு ரீதியிலும் உருவாக முடியும். வளரும் சூழல் உருவாக்கும் தாக்கம் எனச் சொல்லலாம். அதே சமயம் பிறப்பாலே ஓர் ஆண், பெண் மன உணர்வுகளைக் கொண்டிருப்பதும், பெண் ஆணுக்குரிய மன உணர்வுகளைக் கொண்டிருப்பதும் நடக்கின்றது.

.பாண்டியன் இக்கதையில் சொல்ல முயல்வது பால் திரிந்தோரின் மன உணர்விலிருந்து உருவாகும் உறவு குறித்தான சிக்கலே. இக்கதையை வாசிக்க முனைபவர்களுக்கு விளிம்புநிலை வாழ்க்கையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்படும் பால் திரிந்தோரின் அகவுணர்வைக் கண்டடைய முடியும். அதற்கான எளிய மொழியையே அவர் கையாண்டுள்ளார்மொழியைக் கையாள்பவர்களில் நான்கு வகையினர் உண்டு என்பதே என் கணிப்பு. அவர்கள் மூன்று வகையில் மொழியை இலக்கியத்திற்காக உபயோகிக்கிறார்கள். அது வாசகப் பரப்பில் சில விளைவுகளை விட்டுச் செல்கின்றன.

1.   எளிய வாழ்வையும் கடுமையான மொழியில் சொல்வது

இதுபோன்ற சிறுகதைகளில் இருக்கும் மொழி வாசகனை அலைக்கழித்து கதையின் ஆழத்தை அடையமுடியாமல் துரத்திவிடும். இவர்கள் தன்னை மொழி ஜாம்பவன்களாகக் காட்டிக்கொள்ளவே மொழியைத் தான் எடுத்து கொண்ட வாழ்வைச் சுற்றி கட்டியெழுப்புவார்கள். கொஞ்சம் வாசிக்கத் துவங்கியதுமே அது கரடு முரடான மொழி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு படைப்பாளி மொழியைத் தேர்ந்தெடுத்தப் பிறகு அதற்குள் கதையைப் பொருத்துவதால் ஏற்படும் விளைவு என்றே நினைக்கிறேன். பல நேரங்களில் ஒரு சாதாரண வாழ்வை அல்லது எளிய வாழ்வைச் சொல்ல முற்படும்போது என் மொழி சுருங்குவதையும் தொய்வடைவதையும் உணர்ந்துள்ளேன்.

2.   எளிய வாழ்வை எளிய மொழியிலேயே சொல்வது

எல்லோருக்கும் புரியும்படியான சிக்கலில்லாத மொழியில் எளிய வாழ்வைச் சொல்லும் எழுத்தாளர்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்ல வரும் வாழ்க்கையைப் பற்றியும் விரிவான தேடல் இருக்காது; மொழியும் அவர்களுக்குச் சிக்கலே இல்லை. போகிற போக்கில் எல்லோருக்குமான ஒரு மொழி என்கிற பிரமையிலேயே கதையை எழுதி முடித்துவிடுவார்கள். வெகு சுலபமாக அவர்களின் கதைக்குள் நுழைந்து வெளியேறிவிட முடியும். வெளிவந்த பிறகு எவ்வித தாக்கமும் குழப்பமும் நம்மிடம் இருக்காது. ஆமாம் அல்லது இல்லை என்கிற தெளிவான நிலையில் அக்கதையுடன் ஒத்துப் போவதும் முரண்படுவதும் இயல்பாக நடந்திருக்கும்.

3.   கடுமையான வாழ்வை எளிய மொழியில் சொல்வது

வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்கள் பலரால் வாசிக்கப்படுவதற்கு அவர்களின் மொழியே காரணம். அவர்களால் மிகப் பெரிய வாழ்வைத் தனது எளிமையான மொழிக்குள் சுலபமாகச் சொல்லிவிட முடியும். எத்தனை சிக்கலான வாழ்க்கையாக இருந்தாலும் அதனை நெளித்து வளைத்து எளிய நடையில் வைத்துச் சொல்லிவிடும் திறன் பலருக்கும் வாய்ப்பதில்லை. தமிழ் இலக்கியத்தில் கந்தர்வன், பிரபஞ்சன், .முத்துலிங்கம் எனப் பலரும் மனத்திற்கு நெருக்கமான இலகுவான மொழியின் ஊடாகவே இன்றும் தமிழ்ச்சூழலின் ஆழ்மனங்களில் தவிர்க்க இயலாத இடங்களில் நிற்கிறார்கள்.

4.   கடுமையான வாழ்வைக் கடுமையான மொழியிலேயே சொல்வது

நான் முன்பே சொன்னதைப் போல சில வாழ்க்கை அதற்குரிய மொழியை அதுவே தேடிக் கண்டடைந்து கொள்கிறது. அதைப் படைப்பாளன் வழிந்து உருவாக்குவதில்லை. அவன் எடுத்துக் கொண்ட கதையின் தீவிரத்தன்மை மொழியை பற்பல அடுக்குகளாக மாற்றி வெளிப்படுத்துகிறது. மலேசியாவில் சீ.முத்துசாமியின் கதைமொழி அத்தகையானது. ஒரு கதைக்கான புரிதலை உருவாக்கிக் கொள்ள அம்மொழி கொண்டிருக்கும் அடர்த்தியைத் தாண்டியே ஆக வேண்டும்.

இனி, நான் செய்யப்போகும் சிறுகதை பார்வையின் போது மொழியை இந்த நான்கு அடிப்படையில் வைத்தே அணுக வேண்டியிருக்கிறது. .பாண்டியனின் மொழி கடுமையான வாழ்வை எளிய மொழியில் சொல்ல முயல்வதாகும். ஆகவே, இக்கதையை வாசிக்கும் யாவரும் அக்கதை பேசும் சிக்கலை அடைய தடை இருக்காது. ஆனால், கதை பேசும் வாழ்வானது நம் சக மனிதர்களைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவும். பெண் நடை கொண்டிருக்கும் ஓர் ஆணைப் பார்த்துக் கிண்டலடிப்பதையும், ஆணைப் போல உடல் திடம் கொண்ட ஒரு பெண்ணை விநோதமாகப் பார்ப்பதையும் இன்னும் பல முகங்களுடன் சிதறிக் கிடக்கும் இவ்வாழ்க்கையையும் மனிதர்களையும் புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளதால் ஏற்படும் விளைவு என்றே அர்த்தம்.

சவ் கீட்எனும் பால் திரிந்தோர் நகரின் இருளுக்குள் எப்பொழுதுமே ஒரு வாழ்க்கை நகர்ந்தோடி கரைந்து கொண்டிருக்கிறது. எட்டிப் பார்ப்பதும் எட்டி உதைப்பதுமாக பெருநகர் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்க்கைக்கு வெளியே துரத்தியடிக்கப்படும் முன்பு எத்தகைய அவமானங்களுக்கு உள்ளாகி குரூரமானவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பதையும் .பாண்டியனின் வெதும்பல் கவனமாக உரையாடுகிறது. பால் திரிந்தோர் வர்க்கத்தை ஒரு பொது மனிதன் எவ்வாறு அணுக வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்ட அவர்களின் மனநிலைக்குள்ளிருந்து எழும் குரலாக பாண்டியனின் வெதும்பல் சிறுகதையைப் பார்க்கிறேன்.

.பாண்டியனின் இக்கதையில் காட்சிகள்/ சம்பவங்கள் சித்தரிக்கப்படும் இடங்களில் அவர் கூடுதல் கவனம் செலுத்தினால் கதை நகர்ச்சி கதை பேசும் விசயத்திற்கு உயிரூட்டுவதாக இருக்கும் என நினைக்கிறேன். வாழ்க்கையின் சிக்கலான பகுதியைத் தொட்டுப் பேசும் பாண்டியனின் இம்முயற்சிக்காகவும் இதுவரை இருந்து வந்த மலேசிய வாசக பொது எல்லையை ஒரு சராசரி வாசகன் கடந்து வருவதற்கும் அடுத்து வரவிருக்கும் களம் இதழில் பிரசுரமாகவிருக்கும்வெதும்பல்சிறுகதை அவசியம் வாசிக்க வேண்டியக் கதையாக மலேசியத் தமிழ் இலக்கிய சூழலில் இடம்பெறும்.

-    கே.பாலமுருகன்


No comments: