Friday, April 3, 2009

"அலமாரி" 2008 மாதாந்திர கதை தேர்வில் ஜனவரிக்கான சிறந்த கதை





1


அன்று பக்கத்து வீட்டில் இரண்டு பருமனான உடல் கொண்ட மனிதர்கள் வந்து வெகுநேரம் நின்றிருந்தார்கள். அவர்களின் தோற்றம் பயில்வான்களைப் போல இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தேன். மருதாணி அக்காள் அவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள். பிறகு மூவரும் வீட்டினுள்ளே சென்றுவிட்டார்கள்.

“ஐயா. . கணேசா! எழுந்துருயா”

அம்மா அறைகதவோரம் நின்று கொண்டு கதவைத் தட்டினார். கட்டிலிலிருந்து எழுந்து போய் கதவைத் திறந்தேன்.

“ஏஞ்சிட்டியாடா? பக்கத்து வீட்டுலெ அந்த அலமாரியெ தூக்கி வீச போறாங்களா, போய் கொஞ்சம் ஒதவி செஞ்சிருயா, பாவம்”

“அதான் யாரோ வந்துருக்காங்களேமா, நான் எதுக்கு?”

“போய்ட்டு வாடா, எதுக்கும் ஒதவியா இருக்கும், அந்த அலமாரி என்னா கொஞ்ச நெஞ்ச பாரமா?”

உடலில் பயங்கர சோம்பல். அதையும் பொருட்படுத்தாது சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டேன். அந்த அலமாரி இந்த இடத்திலிருந்து போய்தான் ஆக வேண்டும் என்ற கடைசிகட்ட நிலைக்கு வந்தாயிற்று. வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து வீட்டுக்குப் போய் கொண்டிருந்த போது அந்த அலமாரியை அசைத்துப் பார்க்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. புரதான அறையிலிருக்கும் புரதான அலமாரி. ஒரு 40 வருடத்திற்கு முன்பிருந்த மனிதர் பயன்படுத்திய அலமாரி.

“வாங்கயா! கொஞ்ச ஒதவி பண்ணிருங்கயா, அண்ணனோடெ கூட்டாளிங்க ரெண்டு பேரு வந்துருக்காங்க நீங்களும் போங்கயா”

வீட்டினுள்ளே செல்வதற்கு முன்பதாக தூரத்திலிருந்து ஒரு லோரி அந்த வீட்டை நோக்கி வருவதைப் பார்க்க முடிந்தது. நீளமான லோரிதான். அந்த அக்காள் நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில்தான் இருந்தார்.

“யேன்கா, வெறும் அலமாரி மட்டும்தானெ?”

“ஆமாம்யா, அதெ இங்கேந்து எடுத்து போட்டாதான் நிம்மதியா, ஒரெடியா இன்னிக்கோட அதெ ஒளிச்சி கட்டிருனும்யா”

அந்த அக்காள் மிகவும் ஆவேசமாகப் படப்படத்த சூழ்நிலையில் பேசிவிட்டு லோரியை நோக்கிச் சென்றாள்.

“வாங்க தம்பி, தோ இப்பெ எடுத்துருவோம் அலமாரியெ, தூக்க போறாங்க கொஞ்சம் நில்லுங்கெ”

அந்தப் பழைய அறைக்குள் நுழைந்த போதே அறை முழுவதும் சீதிலமடைந்து கிடப்பதை உணர முடிந்தது. ஒரு 6 மாதத்திற்கு முன்பு இங்கு வந்து சென்றிருந்தேன். பிறகு இப்பொழுதுதான் வருகிறேன். அறையின் ஒரு மூலையில் அலமாரி சாய்வாக நின்று கொண்டிருந்தது. அந்த அலமாரியை எட்டிய தூரத்தில் ஒரு பழைய கட்டிலும் கிடந்தது. மெத்தையில் வலுவான கரைகள் படிந்து போய் தூசு மண்டி போயிருக்க வேண்டும். அதன் வர்ணம் யூகிக்க முடியாததாகத் தெரிந்தது.

“இழுத்துருலாமா?”

“காலு ஒடைஞ்சிருக்கு, வேகமா இழுத்தா பேந்துகிட்டு வந்துரும் போல, எப்படி?”

அந்த அலமாரியின் முன் நின்று கொண்டு இரு பயில்வான்களும் அலமாரியை நகர்த்துவதற்கான முயற்சியில் பலவீனமான சிந்தனைகளுக்கு உட்பட்டுப் போயிருக்க வேண்டும் போலும். அலமாரியின் உடைந்த கால்கள் அல்லது மாரியாயி பாட்டியின் தளர்வான அந்த கால்கள் அதற்கு இடமளிக்கவில்லை போல. அந்த அலமாரியை நெருங்குவதற்கு எனக்கு தைரியம் இல்லாமல்தான் போயிருந்தது. வெகு நேரம் தயங்கிக் கொண்டே அறையின் விளிம்பில் காத்திருந்தேன்.

“தம்பி, யேன்யா இன்னும் நவுத்தலெ? . . . டேய் நவுத்திராதிங்கடா படுபாவிங்களா. . . இது இங்க இருக்க கூடாதுயா, சட்டுனு நவுத்திருங்கெ. . . டேய் என் பொழப்புலெ மண்ணெ அள்ளிப் போட்டறாதிங்கடா. . . ”

காதுக்குப் பக்கத்தில் வந்து அக்காள் அப்படிக் கூறும் போது அவளுடைய குரலினூடே ஒரு வயதான கிழவியின் ஓய்ந்து போன குரலையும் கேட்பது போன்ற ஒரு திடிர் பிரமை. இரண்டு வகையான குரல் தொனி. சிறிது நேரம் அசந்து போய் அந்த அலமாரியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அலமாரியின் கதவுகள் திறந்து கிடந்தன. உண்மையின் புரதான தோற்றம்தான்.

2


1970களின் தொடக்கத்தில்தான் இந்த இடத்தில் பழகை வீடுகள் கட்டப்பட்டன. கம்போங் ராஜா என்ற பெயரில் அதிகளவில் சீனர்கள்தான் குடி புகுந்திருந்தார்கள். நான்கைந்து இந்தியக் குடும்பங்களும் இருந்தன. எங்கள் குடும்பமும் பக்கத்து வீட்டில் மாரியாயி கிழவியின் குடும்பமும்தான் கம்பத்து பாதையின் முதல் சந்திப்பில் இருந்தோம். மற்ற குடும்பமெல்லாம் பாலத்தையொட்டிய வரிசைகளில்தான் இருந்தார்கள்.

மாரியாயி கிழவி சுறுசுறுப்பானவர். கம்பத்திலேயே இடியாப்பம் விற்பனை செய்துக் கொண்டிருந்தாள். காலையிலேயே இடியாப்பம் தயார் செய்வதற்காகச் சுப்ரபாத ஓசையுடன் எழுந்து கொள்வாள். பிறகு 10மணியைப் போல இந்தக் கம்பத்திலும் பக்கத்துக் கம்பங்களிலும் இடியாப்பம் விற்பதற்காகச் சென்று விடுவாள். அப்பொழுது எனக்கு 8வயதிருக்கும். பாட்டியுடன் நல்ல சினேகம் இருந்தது. எப்பொழுதும் எனக்கு இலவசமாகவே இடியாப்பத்தைக் கொடுத்து வைப்பாள்.

பாட்டிக்கு கால்யாணமாகிய இரண்டு மகன்களும் மருமகள்களும் இருந்தார்கள். அதில் ஒன்றுதான் மருதாணி அக்காள். மிகவும் நல்லவர். அம்மாவுடன் அணுக்கமான சினேகம் இருந்தது அவளுக்கு. எப்பொழுதாவது பாட்டியின் வீட்டில் பயங்கரமான குடும்பச் சண்ட உருவாகி கம்பத்தையே உலுக்கிவிடும் அளவிற்குப் பரவிவிடும். யார் யாரோ பாட்டியின் வீட்டிற்கு நியாயம் கற்பிக்கவும் அறிவுரைகள் கூறிச் செல்லவும் குவிந்துவிடுவார்கள். பாட்டிதான் பாவம். தனியான அறையில் எப்பொழுதும் அவளுக்கென்றே ஒரு உலகம் இருந்தது.

பாட்டியின் அறைக்கு நான் பலதடவை சென்றிருக்கிறேன். வாசல் கதவிலேயே வினாயகரின் படம் இருக்கும். உள்ளே சென்ற மறுகணத்திலேயே கண்களை உறுத்திக் கொண்டு நிற்பது பாட்டியின் அந்தப் பலகை அலமாரிதான். என்னைப் போல 6 சிறுவர்கள் ஒரே நேரத்திலேயே அந்த அலமாரியில் நுழைந்து வசதியாகப் படுத்துக் கொள்ளூம் அளவிற்கு அந்த அலமாரியின் உள்பகுதி காட்சியளிக்கும். பாட்டியின் துணிகள் ஒரு பக்கம் குவிந்திருக்க, அலமாரியின் கீழ் டுரோவரில் ஒரு சிறிய பூட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது.

“பாட்டி இதெ மட்டும் யேன் பூட்டி வச்சிருக்கிங்க?”

“அங்கதான் பாட்டி காசுலாம் வெச்சிருக்கென்யா. நானே சேத்து வச்ச காசு. யாரும் தொடக் கூடாது”

அந்த அலமாரிக்கு மூன்று கதவுகள். ஒரு கதவு மட்டும் சாத்தி வைத்தாலும் திறந்து கொள்ளூம். நாதாங்கி பலவீனமாக இருந்தது போல, திறக்கும் போது பயங்கர முனகலை ஏற்படுத்திவிடும். அலமாரியின் முகத்தில் ஒரு மாரியம்மன் படம் ஒட்டப்பட்டிருந்து பின்னாளில் அது வெளுத்துப் போய் சிதைந்து போயிருக்கு வேண்டும். அதன் வடுவும் மாரியம்மனின் தெளிவற்ற தோற்றமும் தெரிந்து கொண்டிருக்கும்.

எங்கள் வீட்டின் முதல் அறையும் பாட்டியின் அறையும் 2 ஆள் இடைவெளியில்தான் பிரிந்திருக்கும். இரவு நேரங்களில் அந்த அலமாரி திறந்து மூடும் சத்தமும், டுரோவரைத் திறந்து நிதானித்துவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் டுரோவரை மூடி பூட்டுப் போடும் சத்தமும் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கும். தூரத்தில் கேட்பது போல தெரிந்தாலும் நாளடைவில் அந்த ஓசைகள் பழகிப் போயிருந்தது.

சிறிது காலங்களுக்குப் பிறகு ஒரு நாள் மருதாணி அக்காள் பதறியடிட்துக் கொண்டு எங்கள் வீட்டை நோக்கிக் கதறுவது கேட்டதும் எல்லோருமே அவள் வீட்டிற்கு ஓடினோம். மாரியாயி பாட்டி அவளுடைய கட்டிலில் சாய்ந்து இறந்து கிடந்தாள். இரவோடு இரவாக மாரடைப்பில் செத்துவிட்டாள் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். பாட்டியின் அலமாரியின் ஒரு கதவு மட்டும் வழக்கம்போல திறந்தே கிடந்தது எந்த சலனமுமின்றி. கீழ் டுரோவின் பூட்டுத் திறந்து கிடந்தது. வீட்டிற்கு வந்ததும் அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது நன்றாகவே கேட்டது.

“நேத்து ராத்திரிலெ பாட்டி ரூம்புலெ எந்த சத்தமும் கேக்கலெ, எப்பவும் கேக்கும் அந்த அலமாரி சத்தம்கூட கேக்கலடி, அப்பயெ சந்தேகமா இருந்துச்சு”

அப்பா கூறியது என்னமோ இறப்பிற்குப் பிறகு சொல்லப்படும் சடங்கு அடையாளங்களைப் போலவே தெரிந்தது. இருந்தாலும் நேற்று இரவு பாட்டி அறையில் எந்தச் சத்தமும் கேட்கவில்லைதான்.

3

காலங்கள் கடந்தோடின. மாரியாயி பாட்டி இல்லாத வீடு அடிகடி வழக்கமான சண்டைகள் தோன்றி மறையும் தடமாக மட்டுமே இருந்தது. அந்த வீட்டு மனிதர்கள்கூட யாருடனும் நெருங்கி பழகும் குணமில்லாதவர்களாக இருந்தார்கள். மருதாணி அக்காள் மட்டும் அவ்வப்போது அம்மாவிடன் வந்து பேசிவிட்டுப் போவாள்.

அன்று அப்பா ஏதோ வேலையாக வெளியூர் போயிருந்தார். அம்மா வீட்டு ஹாலில் படுத்துக் கொண்டார். அன்றென்னமோ பெளவர்ணமி வெளிச்சத்தை உணர வேண்டும் என்பதற்காக அப்பா அறையில் போய் படுத்துக் கொண்டேன். மணி 12க்கு மேல் ஆகியும் தூக்கம் எட்டவில்லை. வெறுமனே கட்டிலில் சரிந்திருந்தேன்.

“காசு காசுனு பொணம் தின்னுறானுங்கடா, திருட்டுப் பையலுங்கெ”

அந்த நிசப்தத்தில் திடீரென்று யாரோ முரட்டுத்தனமாகக் கத்துவது கேட்டதும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டேன். உடலெல்லாம் நடுங்கிப் போயிருந்தது. ஜன்னல் வழியாக மிக நெருக்கத்தில் பாட்டியின் இருண்ட அறைதான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளாமல் ஜன்னலை இலேசாகத் திறந்து பார்த்தேன். வெளி நிலா வெளிச்சத்தில் விரட்டியடிக்க இயலாத கொஞ்சம் இருளுடன் அமைதியில் சுருண்டிருந்தது. பாட்டியின் அறை ஜன்னல் இலேசாகத் திறந்து கிடந்தும் வெளிச்சம் உள்ளே நகரவில்லைதான்.

பிரமையாக இருக்கலாம் என்று மீண்டும் கந்த கஷ்டி உச்சரிப்புடன் படுத்துக் கொண்டேன். இப்பொழுது என் உடல் பாரமாகிப் போய்க் கொண்டிருந்தது. எந்தப் பக்கமும் திரும்பவியலாத உறுதியான பிடிப்பு எங்கிருந்தோ என் மீது கவிழ்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பல வருடங்களுக்கு முன் நான் கேட்டுப் பழகிப் போன அதே சத்தம் எனக்கு சமீபத்தில் வெகு இயல்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது. மாரியாயி பாட்டியின் அலமாரி திறக்கும் சத்தம்தான்.

“மா நேத்து நான் கேட்டன்மா, இவ்வள நாள் ஒங்களுக்கு ஏதும் கேக்கலையா?”

“இல்லெடா, அப்படி ஏதும் இருக்காது. சும்மா பயந்துகிட்டெ படுத்திருப்பெ, அதான்”

“இல்லெமா நான் நிதானத்துலெதான் இருந்தேன். நல்லா கேக்க முடிஞ்சது, பாட்டியோட அலமாரியெ யாரோ தொறந்தாங்கம்மா”

அப்பாவும் அந்தச் சத்தத்தைப் பல தடவை கேட்டுருக்கிறார் என்ற உண்மையும் அப்பொழுதுதான் வெளிப்பட்டது. இவ்வளவு நாள் அதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பதுகூட அப்பொழுதுதான் தெரிந்தது. அப்பாவின் தைரியத்தையும் அதே சமயம் அந்த ஓசைகளின் பீதியையும் நினைத்துக் குழம்பிப் போயிருந்தேன்.

மறுநாள் இரவிலும் என் அறையிலிருந்து கொண்டே அதே ஓசைகளைக் கேட்க முடிந்தது. பாட்டியின் அலமாரி கதவுகள் திறக்கும் சத்தமும் அதே போல கீழ் டுரோவரைத் திறந்து மூடும் சத்தமும்.

விடிந்ததும் மருதாணி அக்காள் வீட்டிற்கு வெளியில் வெளுத்துப் போன முகத்துடன் நின்றிருந்தாள். சில வருடங்களாக அவளுடைய தோற்றம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது நோயாக இருக்கலாம் அல்லது மூப்பு காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டதுண்டு. அக்காவிடம் பேசியும் பல மாதங்கள் ஆகியிருக்கும்தான்.

“கா. . ஒங்ககிட்டெ ஒன்னு சொல்லனும்கா”

அவள் பதிலேதும் சொல்லாமல்தான் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கா முந்தா நேத்துலேந்து பாட்டி ரூம்புலேந்து ஏதோ சத்தம்கா, முன்ன மாதிரியெ பாட்டி எப்பவும் அலமாரியெ மூடற சத்தம். நல்லா கேட்டென் கா”

அக்காவின் முகத்தில் அப்பொழுது ஏதோ வினோதமான கலவரத்தைப் பார்க்க முடிந்தது. அவளுடைய கண்கள் சிவந்திருந்தன.

“ஒனக்கும் கேட்டுச்சா? நான் அன்னாடம் செத்துக்கிட்டு இருக்கெண்டா. . அந்த மாரியாயி கெழவியோட தொல்லெ தாங்கலடா. . சத்தம் காதுலெ கேட்டுக்கிட்டெ இருக்கு. . அந்த அலமாரியோட சத்தம். யாருமெ நம்ப மாட்டுறாங்க. . நான் செத்துக்கிட்டு இருக்கென்”

தூக்கிவாறிப் போட்டது எனக்கு. சிறிது நேரத்தில் சுயமிழந்து போய் அக்காவுடன் பல வருடங்களுக்கு முன் சென்றுவிட்டு வந்தது போல இருந்தது. சுதாரித்துக் கொண்டு பார்க்கும் போது அக்காள் வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தாள்.

சில நாட்களுக்குப் பிறகு அக்காவிற்குப் பயங்கர காய்ச்சள் ஏற்பட்டு, பல மருத்துவர்களைச் சந்தித்தும் குணமாகாமல் பல சாமியார்களையும் பார்த்து விட்டார்கள். அந்தச் சமயங்களிலெல்லாம் பாட்டி அறையில் கேட்கும் அந்தச் சத்தம் குறைந்ததில்லைதான். எனக்கு, அப்பாவிற்கு மேலும் அக்காவிற்கு மட்டும் கேட்கும் அந்தச் சத்தத்தின் அடையாளத்தை நிரூபிக்கவும் முடியாமல் தெளிவடையவும் முடியாமல் தவித்துப் போயிருந்தோம்.

பிறகு ஏதோ மலாய்க்காரச் சாமியாரின் வார்த்தைகளில்தான் நம்பிக்கை ஏற்பட்டு, பாட்டியின் ஆவி இன்னமும் இந்த வீட்டில் அலைந்து கொண்டிருக்கிறது, அவர் இந்த அலமாரிக்காகத்தான் இந்த வீட்டையே சுற்றி வருகிறார் என்றும் சொல்லி, சில சாங்கியங்களும் செய்து கொடுத்தார்.

4

அலமாரியை மெதுவாக தூக்கியும் நகர்த்தியும் வீட்டின் வாசல்வரை கொண்டு வந்து சேர்த்து விட்டோம். இவ்வளவு கனமான ஒரு பொருளை இதுவரை நான் உணர்ந்ததே இல்லைதான்.அவ்வப்போது கதவுகள் திறந்து கொண்டு தடங்கலாக இருந்தன. கதவுகளை ஒரு கயிற்றால் கட்டிவிட்டோம். அலமாரியை நான்கு பேர் தூக்கியும் லோரியில் ஏற்ற முடியவில்லைதான். வெறும் அலமாரி இவ்வளவு கனமாக இருக்காது என்பது மட்டும் எனக்குத் தெளிவாக மனதில் பட்டது.

“பக்கத்து வீட்டுலெ அந்தச் சீனனெ கூப்டுங்கெகா கொஞ்ச நேரம் தூக்கி வச்சிரலாம்”

மேலும் இரண்டு பேர் வந்தது கொஞ்சம் சுலபமாக இருந்தது. சிரமப்பட்டு அலமாரியைத் தூக்கி லோரியில் ஏற்றிவிட்டோம். அலமாரி சாய்வாக நின்று கொண்டிருந்தது. கயிறு அறுந்து போய் கதவுகள் மீண்டும் திறந்து கொண்டன.

“சரிங்கங்கெ, காசெ அவரு வந்தோனெ செட்டல் பண்ணிட சொல்லிடுறென்”

லோரி கிளம்புவதற்குத் தயாரானது. எல்லோரும் போய் விட்டனர். நான் மட்டும் லோரி கிளம்பிச் செல்லும்வரையில் வீட்டு முன்கதவைப் பிடித்துக் கொண்டு வெறித்துக் கொண்டிருந்தேன். அலமாரியின் கனம் தாள முடியாமல் லோரி ஒரு சிரமத்துடன் அங்கிருந்து கிளம்பி பெரிய சாலைக்குச் சென்று கொண்டிருந்தது.

ஆக்கம்: கே.பாலமுருகன்


--------------------------------------------------------------------------------




bala_barathi@hotmail.com

No comments: