Friday, April 3, 2009

அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது "சிறந்த ஆகஸ்ட் மாதத்திற்கான கதையாகத் தேர்வுப் பெற்றது





இருள் வீட்டின் கூரையில் படியத் துவங்கும் நேரம் பார்த்து சொக்கப்பன் செட்டியார் வந்தார். அவருடைய முகம் பிரகாசமாக இருந்தது. பலகையால் செய்யப்பட்ட இருக்கையில் அமரும்போது அவரின் நாக்கு நுனியில் செய்தி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டின் மூலையில் படுத்திருந்த என்னை ஆயாசமாகப் பார்த்துக் கொண்டே அய்யப்பன் நாதரின் அறையைப் பார்த்தார்.

“என்னா சொக்கு தாத்தா. என்னா இந்த நேரத்துலெ?”

அப்பொழுதுதான் வீடே இருண்டிருப்பதைக் கவனித்தேன். வெளியிலிருந்து கிடைத்த கொஞ்ச வெளிச்சத்தில் சொக்கப்ப செட்டியைப் பார்க்க முடிந்தது. அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு சுவருக்கு மத்தியில் முதுகு கொடுத்து அமர்ந்திருந்த சுகத்திலிருந்து எழுந்திருக்க மனமில்லை.

“எங்கடா ஒங்க தாத்தா? ஏஞ்சிருக்கலயா?”

சொக்கப்பன் செட்டியார் இருக்கையிலிருந்து எழுந்து அய்யப்பன் நாதர் தாத்தாவின் அறையை நெருங்கினார். அவர் உடல் மட்டும் வெளிச்சத்திலிருந்து அகன்று இருளுக்குள் நகர்ந்தது.

“தாத்தா இன்னும் ஏஞ்சிருக்கல போல. . ஏன் என்னா விசயம்?”

“ஒங்க தாத்தன் இன்னிக்கு செத்துருவான்டா. . ஒரு மணி நேரத்துலெ”

சிலிர்த்துக் கொண்டே அவர் சொன்னதைக் கேட்டு பேயறைந்தது போல எழுந்து நின்றேன். ஒரு பைத்தியக்காரக்குரிய அனைத்து சுபாவங்கள் மொத்தமாக வந்துவிட்டது போல தெரிந்தார் சொக்கப்பர். அவர் நின்றிருந்த காட்சியே வேறுமாதிரியாகத்தான் இருந்தது.
“என்னாடா ஏதோ நான் பொய் சொல்ற மாதிரி பாக்கறெ?”

“என்னா நக்கல் பண்றிங்களா தாத்தா?”

“நான் யேண்டா நக்கல் பண்ணனும்? நீ வேணும்னா போய் பாரு. . அவருக்கு மூச்சி இழுத்துக்கிட்டு இருக்கும்”

அய்யப்பன் நாதரின் கதவைத் திறந்தேன். அய்யப்பன் நாதர் எனக்குச் சொந்த தாத்தா இல்லை. எங்கள் வீட்டில் முன்பு அவரும் அவருடைய மனைவியும் வாடகைக்குத் தங்கியிருந்தார்கள்.அவர் மனைவி இறந்த பிறகு எங்களுடனே இருந்துவிட்டார். தாத்தாவுடன் கழிந்த நாட்கள் வீட்டிற்கு வெளியிலேயும் உள்ளேயும் எனக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. என்னால் தினமும் அதை நுகர முடிந்தது. தாத்தாவுடன் கடந்த ஒவ்வொரு சம்பவங்களும் கதைக்கான அனைத்து அம்சங்களுடன் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

உள்ளே நுழைந்ததும் அய்யப்பன் நாதர் தாத்தா மல்லாந்து படுத்திருந்தார். அவரது உடலைப் போர்வை பாதிவரை மூடியிருந்தது. பக்கத்தில் சென்று அவருடைய முகத்தைப் பார்த்தேன். என் திடீர் நுழைவு குறித்து அவரிடத்திலிருந்து எந்தச் சலனமும் வராததை உணர்ந்தபோது வெளியில் நின்று கொண்டிருக்கும் சொக்கப்ப செட்டியார் கடவுளாகக் காட்சித் தருவதாகப் பட்டது. சுதாரித்துக் கொண்டு அய்யப்பன் நாதர் தாத்தாவைத் தட்டி எழுப்பினேன். பெரும் மூச்சிரைப்பு பூதமாகக் கிளம்பி அவரின் வாயிலிருந்து வெளிப்பட்டது. சடாரென கைகள் கீழே விழுந்தன.

“தாத்தா! தாத்தா! என்னாச்சி?”

அம்மாவும் அண்ணனும் வெளியில் போயிருந்தார்கள். தடுமாற்றம் ஏற்பட்டதும் கைகள் செய்வதறியாமல் தாத்தாவின் உடலை நேர்ப்படுத்த முயன்றேன். வாய் பிளந்து உள்காற்று வீச்சத்துடன் வெளியில் வந்து சிதறியது. அய்யப்பன் தாத்தா வேறு எங்கோ தவறிக் கொண்டிருந்தார். சொக்கப்பன் செட்டியாரைப் பார்த்தேன். அவர் அங்கு இல்லை. வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன். முன்வாசல் கதவு அகல திறந்து கிடக்க மகா வெளிச்சம் உள்ளே கோடுப் போட்டிருந்தது.
மீண்டும் அய்யப்பன் தாத்தாவிடம் போனேன். அவருக்குப் பலமான மூச்சிரைத்தது. நெஞ்சு பகுதி விம்மி தனிந்தது. ஒவ்வொருமுறையும் சுவாசத்தின் பெருக்கம் எழும்பி மடியும்போது அசூரத்தனமான சப்தம் கேட்டது. அதிர்ந்து போனேன்.

“ஒங்க தாத்தன் இன்னும் ஒரு மணி நேரத்துலே செத்துருவான்”

சொக்கப்பன் செட்டியார் அந்த வார்த்தையைச் சொல்லும்போது அவருக்குப் பின்புறத்தில் நான் எதையும் கவனிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். சொக்கப்பன் செட்டியார் நின்ற காட்சிகள் மங்கலாகவே நினைவில் தப்பி தப்பி பாய்ந்தன.

வீட்டைவிட்டு வெளியில் ஓடி வந்தேன். 15 நிமிடங்கள் கடந்திருந்தன. பக்கத்திலுள்ள கேசவன் மாமாவை அழைத்துக் கொண்டு வருவதற்குள் 20நிமிடங்கள் கடந்திருக்கும். அய்யப்பன் தாத்தாவின் வாய் பிளந்தபடியேதான் இருந்தது.

“முடியாதுடா. . உயிரு கடசி நேரத்துலெ இருக்கு! ஆம்புலன்ஸ் போன் போடுங்க”

10 நிமிடத்தில் அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து வண்டி வந்தது. அய்யப்பன் தாத்தா மருத்துவனையில் போய் சேரும் போது சொக்கப்பன் செட்டியார் சொன்னதுபோல அவர் இறப்பதற்கு இன்னும் 10 நிமிடங்களே இருந்தது. தாத்தா சொக்கப்பன் செட்டியை வென்றுவிடுவாரா? அப்படி நடந்துவிட்டால் முதலில் செட்டியைத் துரத்தி துரத்தி அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எவ்வளவு திமீர்? ஆனால் அவர் சொன்னது உண்மைதானே? அப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது.

அம்மாவும் அண்ணனும் வீட்டிற்குப் போய் சேய்தியறிந்து பதறியடித்துக் கொண்டு ஓடி வரும்போது அய்யப்பன் நாதர் தாத்தா இறந்திருந்தார். அப்பொழுதுதான் மருத்துவர் சொல்லிவிட்டுச் சென்றார்.

“ஐயோ! தாத்தா!. . அய்யப்பா!”

யார் யாரோ கதறிக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். வழக்கமான சம்பிரதாய சோக ஓலங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் எங்கேயோ சொக்கப்பன் செட்டியாரைப் பார்த்ததாகத் தோன்றியது. சிவநேச அண்ணன் சட்டை போடாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார். நன்றாகத் தேடினேன். அப்படி யாரையும் பார்க்க முடியவில்லை. ஒருவேளை சொக்கப்பர் வந்திருக்கலாம். முதலில் அவருடைய கால்களில் விழ வேண்டும் போல தோன்றியது.
சிறிது நேரம் செயலற்ற அய்யப்பன் நாதரின் உடலையே வெறித்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒரு கிழவி அவளுடைய ஒப்பாரியில் அதையும் சேர்த்தே ஒப்புவித்தபோதுதான் நான் எனது இருப்பிலிருந்து தடுமாறி எங்கேயோ விழுந்துக் கொண்டிருந்தேன்.

“சொக்கப்பன் செட்டியாரு செத்து போய் ரெண்டு மணி நேரம்கூட ஆகலெ. . அதுக்குள்ள இந்த மனுசனும் போய்ட்டாரே”

ஆக்கம்: கே.பாலமுருகன்

1 comment:

Tamilvanan said...

கதை நன்று.