Monday, April 6, 2009

மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கமும் 2008க்கான சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு விழாவும்



இரண்டு நாள் நிகழ்வாக இந்தக் கருத்தரங்கம் கோலாலம்பூர் பசிபிக் விடுதியில் பல மூத்த - இளம் எழுத்தாளர்கள் வாசகர்கள் பங்கெடுக்க, கொஞ்சம் நகைச்சுவையும் கொஞ்சம் சிறப்பும் கொஞ்சம் மனநிறைவுடனும் நடந்து முடிந்தது. தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியரும் சகாத்ய அகடெமி விருதின் தேர்வு குழுவில் நீதிபதியுமான இரா.மோகன் அவர்களும் வடக்கோரியா பல்கலைக்கழகத்தின் பேராசியரும் மின் இதழ் வலைப்பதிவின் ஒருங்கிணைப்பாளருமான ந.கண்ணன் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முதல்நாள் அரங்கில் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் சிறுகதை ஒரு உலகியல் பார்வை எனும் தலைப்பில் அன்மைய சிறுகதை வளர்ச்சி குறித்து பேசினார். அவருடைய இறுதி அலசல்வரை, ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ அல்லது அதற்கு பிற்பாடான இளம் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள்வரை யாரையும் அவர் குறிப்பிடாதது அதிர்ச்சியளித்தது.

மாற்றுக் கருத்து தெரிவிக்க மேடையேறிய உள்ளூர் எழுத்தாளர் சைபீர்முகமது “பேராசிரியர்கள் எப்பவும் தமது படிப்புக்காக மட்டுமே இலக்கியத்தையும் படைப்பையும் அணுகுகிறார்கள், சிறுகதை என்று வரும்போது ஜெயமோகனையோ எஸ்.ரா அவர்களையோ தவிர்த்துவிட்டு, சுஜாதாவரை மட்டும் குறிப்பிடுவது வருத்தமளிக்கிறது, மேலும் அது சரியான ஆய்வாகவும் அமையாது” என்று தமது விமர்சனத்தைப் பதிவு செய்தார்.

மேலும் இரா.மோகன் அவர்கள் மலேசிய எழுத்தாளர்களின் 12 சிறந்த சிறுகதைகள் குறித்து தமது விமர்சனப் பார்வையைப் பதிவு செய்தார். ஒவ்வொரு கதைகளையும் நன்றாக அவர் சார்ந்த புரிதலில் உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பாத்திர படைப்பு தொடங்கி கதைப் பின்னல்வரை மிகவும் துல்லியமாகச் சொல்லியது பாராட்டுதலுக்குரியது. அங்கு வந்த சிலர், அவரது விமர்சனத்தில் கொஞ்சம் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தார்கள், கதைகளின் பலவீனங்களை ஆழமாக வெளிப்படுத்தாமல், வெறும் நிறைகளை மட்டும் மிகைப்படுத்திச் சொல்லிவிட்டார் என்றும் கூறப்பட்டது. நமது உள்ளூர் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், அவர்கள் எடுத்துக் காட்டிய சில நெருடல்களையும் பலவீனங்களையும்கூட அவர் குறிப்பிடாமல் ஒரு பாடத்தை ஒப்புவிப்பது போல் படைத்துவிட்டு கைத்தட்டலும் பாராட்டும் வாங்கிக் கொண்டது அதிர்ச்சியளிப்பதாக நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டுக் கொண்டனர்.



பிறகு , பரிசு கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமது கதை உருவான கதையைப் பற்றியும் தமது அனுபனங்களையும் பகிர்ந்து கொண்டனர். என்னுடைய அலமாரி கதையைப் பற்றி நான் குறிப்பிடுகையில் அந்தக் கதையைக் குறித்து உள்ளூர் ஆய்வாளரும் இரா.மோகன் அவர்களும் சொல்லாத சில விஷயங்களை எடுத்துக் காட்டினேன். ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படும்.






என்னுடைய அலமாரி கதையில் அலமாரியை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருப்பதாக பேராசியரியர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறியீட்டின் இருத்தன்மைகள் பற்றி நான் என் உரையில் குறிப்பிட்டிருந்தேன். நமது பெரியவர்களின் நினைவாக எப்பொழுதும் ஒரு பொருள் நமது வீட்டில் இருக்கும். அவர்கள் நம்முடன் வாழ்ந்த வாழ்வை நினைவுப்படுத்தும் பொருளாக அது இருக்கும். அந்தப் பொருளை அப்புறப்படுத்துவதென்பது அவர்களின் நினைவுகளைத் தொலைப்பதற்குச் சமம் என்கிற ஒரு பின்னனியை வைத்து எழுதப்பட்ட கதைதான் “அலமாரி”.
மேலும் உயிர் எழுத்து ஆசிரியரும் நவீன கவிஞருமான எழுத்தாளர் சுதீர் செந்தில் மலேசியாவிற்கு வருகைப் புரிந்திருப்பதையொட்டி அவருக்கும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் தமது உரையில் உயிர் எழுத்து இதழின் பங்களிப்பைக் குறித்தும் அது முன்னெடுத்துச் செல்லும் நவீன சிறுகதை இலக்கியத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினார். வா.மு.மோமு தொடங்கி வளரும் இளம் எழுத்தாளரகள் வரை எல்லோரும் நவீன படைப்பாளிகளாக உயிர் எழுத்தின் மூலம் இப்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் மார்ச் மாதம் உயிர் எழுத்தில் பிரசுரமான கே.பாலமுருகனின் சிறுகதையான “தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்” கதையைப் பற்றிக் குறிப்பிடுகையில் அந்தக் கதையை வாசித்துவிட்டு ஜெயமோகன் அளித்த விமர்சனம் பற்றியும் கூறினார். (“நண்பர் முனிஸ் சும்மா சீனு போட்டுக்கிட்டு இருக்காரு, நீங்க தப்பா நினைக்காதிங்க”
தமிழகத்திற்கு எழுத்தாளர்களைச் சந்தித்து, கலந்துரையாடலில் ஈடுபட புதிய திட்டத்திற்கு “பிளான்” பண்ணிக் கொண்டிருக்கிறார்.)

பிறகு பேராசிரியர் ந.கண்ணன் அவர்கள் இணையத்தில் தமிழ் இலக்கியம் என்கிற தலைப்பில் இணையத்தள பயன்பாடுகள் குறித்து மிகவும் சிறப்பாகப் பேசினார். இணைய அறிமுகம் இல்லாத பலருக்கு இது சிறந்த வழிகாட்டுதலாக அமைந்திருந்தது. மேலும் இளம் படைப்பாளிகள் உருவாவதன் மூலம் நல்ல இலக்கியத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு போக முடியும் என்றும் கூறினார். (“கொரியா பேராசிரியர் ந.கண்ணன் அவர்களுடன் அநங்கம் இதழாசிரியர் கே.பாலமுருகன். ரொம்ப உயரமான மனிதர் போங்க”)

கருத்தரங்கில் பல நம்பிக்கை தரும் வளரும் இளம் எழுத்தாளர்கள்-வாசகர்கள் பங்கெடுத்தனர். சல்மா(தினேஷ்வரி), முனிஸ்வரன், காமினி, கஸ்தூரி, ரவிந்தீரன், விக்னேஸ் மேலும் பலர். மூத்த எழுத்தாளர்களான சீ.வடிவேல், ப.சந்திரகாந்தம், ரெ.கார்த்திகேசு, சண்முகசிவா, எஸ்.பி.பாமா, மு.அன்பு செல்வன், ராஜகுமாரன் மேலும் பலர் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பைச் செய்தனர்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

(“எழுத்தாளர் ஆறுமுகம் கண்ணாடி போட்டுகிட்டு அசத்தறாரு. . அவர் மேடையிலே பேசி கலக்கிட்டாரு. . நகைச்சுவை மனிதர்”)

No comments: