Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன்- வரலாறு என்கிற புனைவின் மீதான கலை

1

சேர – சோழர் – பாண்டிய அரசுகளின் ஆக்கிரமிப்புகளும், ஆட்சி விரிவாக்கங்களும், வரலாறும், வீழ்ச்சியும் சங்க இலக்கிய பாடல்களிலும், கல்வெட்டுகளிலும், புவியியாளர்களின் குறிப்புகளிலிருந்தும், அகழ்வாராய்ச்சி நூல்களிலிருந்தும் மேலும் சில ஆவணங்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தாலும், கி.பி 1246க்குப் பிறகு ஆக இறுதியான சோழ மன்னன் என்று நம்பப்படும் மூன்றாம் இராஜராஜ சோழனின் மகன் மூன்றாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியின்போது பாண்டிய அரசின் படையெடுப்பால், வீழ்ச்சியடைந்த பிறகு சோழ பேரரசின் வலிமை வீழ்ச்சியடைந்துவிடுகிறது. அத்துடன் சோழர்கள் பற்றிய வரலாறு முடிவடைகிறது. அதற்குப் பிறகான சோழர்களின் வம்சமும் வரலாறும் ஆவணங்களில் இடம்பெறவில்லை. அந்தச் சோழர்களைப் பற்றிய அடுத்தக்கட்ட வரலாற்றின் பதிவின்மையின் மீது படரும் ஒரு அபார புனைவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் செல்வராகவனின் கற்பனை.

குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் என்கிற கற்பனை சோழர்களின் வீழ்ச்சியை நோக்கி விரிந்துள்ளது. கதையை மேலும் விவரிக்கத் தொடங்கினால், சோழர்களைப் பற்றிய நிச வரலாறும் செல்வராகவ்னின் சோழர்களைப் பற்றிய கற்பனை புள்ளியும் சந்திக்கும் நுட்பங்கள் பற்றியும் விரிவாக எழுத நேரலாம். செல்வராகவன் தனது முழுநேரத்தையும் முழு ஆளுமையையும் செலவு செய்து எடுக்கப்பட்ட பெரும் முயற்சியை விமர்சனம் என்கிற பெயரில் கிண்டலடிக்கவோ அல்லது அதன் வரலாறை ஆய்வு என்கிற பெயரில் கேலி செய்யவோ இடமில்லை என்னிடம். படத்தில் தேவையற்ற இடங்களில் பாடல்கள் வருவதும் வசனங்கள் இடம்பெறுவதும் என்கிற சிறு சிறு பலவீனங்களைக் கடந்து, சோழர் மன்னர்களின் வரலாற்றை நோக்கிய அவரின் கற்பனையாற்றலுக்கு பாராட்டைத் தெரிவிப்போம்.

ஆயிரத்தில் ஒருவன் முதலில் தமிழ் இரசிகர்களுக்குத் தரக்கூடிய பெரும் ஆச்சரியம், படத்தில் பயன்படுத்தியிருக்கும் கிராபிக் கிடையாது, (அதை இராமநாராயணன் படங்களிலே அரைகுறையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்), பண்டைய சோழ நாட்டு வட்டாரத் தமிழ் என படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் மொழிப்பயன்பாடுதான். திரையரங்கிலிருந்து வெளியே வந்தவர்கள் திரைக்கதையின் தடுமாற்றங்களினால் ஒரு சராசரி புரியாமைக்குள் சிக்கிக் கிடந்ததைப் பற்றிப் பேசியதைவிட, படத்தில் சோழப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பேசிய தமிழின் பயன்பாட்டைத்தான் மிகுந்த வியப்போடு “என்னாத்தான் பேசனானுங்க, ஒன்னும் புரியல” எனப் பிதற்றிக் கொண்டிருந்தனர்.

சங்க இலக்கியம் படித்தவர்களுக்கு, அந்தத் தமிழ் புரிந்து கொள்வதற்கு அவ்வளவு கடினம் எனச் சொல்ல முடியாது. அதற்காக அவர்களின் தமிழைப் புரிந்து கொள்வதற்கு ஏற்கனவே சங்க இலக்கிய தமிழ் பயிற்சி கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் சொல்வதற்கில்லை. (புரியாதவர்களுக்கு படம் ஒரு கோளாறு கிடையாது, தமிழில் கல்வி சார்ந்த அளவில்கூட வாசிப்பற்றுப் போன ஒரு சமூகத்தின் பின்னடைவே காரணம்)

படத்தின் துவக்கத்தில், “சோழ மன்னர்களின் வரலாறு வெறும் கற்பனையே” எனக் காட்டிவிடுவதன் மூலம், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்னனியில் கையாளப்பட்டிருக்கும் வரலாறு குறித்தும் அதன் கட்டமைப்பு குறித்தும் ஆழமாகக் கிளறி ஆய்வு செய்யவோ விமர்சனம் செய்யவோ அவசியம் இல்லாமல் போய்விடக்கூடும். விமர்சன ஆளுமைகளின் பிடியிலிருந்து படம் நழுவி கற்பனை / மேஜிக் படம் என்கிற வரையறைக்குள் விழவும் வாய்ப்புண்டு. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

2

படத்தின் கற்பனையின் தொடக்கம் தொடர்ந்து பார்வையாளனைக் கடைசிவரை இழுத்துக் கொண்டு போகும் வலிமையை படத்தின் இடைவேளைக்குப் பின்னர் சில காட்சிகளுக்குப் பிறகு இழந்துவிடுவதாக தோன்றுகிறது. பெரும் முயற்சியில் பல ஆய்வுகளை உட்படுத்தி, வரலாற்றின் பெரும் மர்மங்களைக் காட்சிப்படுத்த முயன்ற பயணத்தில், இறுதிவரை வலிமையுடன் தொரட இயலாத தடுமாற்றம் படத்தின் இறுதி காட்சிகளில் வெளிப்படுகிறது.

படத்தின் கதாநாயகனான கார்த்திக்தான் ஆயிரத்தில் ஒருவன் என மதிப்பிட வாய்ப்பளிக்கப்படும் வழக்கமான புரிதல்களுக்கு அப்பால், அந்த ஆயிரத்தில் ஒருவன் யாரென்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. சோழ நாட்டு வம்சாவழியினரின் கடைசி வாரிசைக் காப்பாற்ற வருவது கார்த்திக் என்பதால் அந்தக் கதாப்பாத்திரம்தான் ஆயிரத்தில் ஒருவனா அல்லது சோழ மக்களின் இறுதி வாரிசாக உயிர் தப்பிக்கும் அந்தச் சோழ நாட்டு மக்களின் கடைசி மன்னனின் மகன் தான் ஆயிரத்தில் ஒருவனா?

படத்தின் சில காட்சிகள் அப்பட்டமாக மேலைநாட்டு சினிமாவைப் போல நகலெடுத்திருப்பதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக Gladiotor படத்தில் வருவது போல பெரும் அரங்கத்தில் அடிமைகள் மோதிக் கொன்று சாகும் காட்சிகள் போலவே இங்கேயும் வேறு விதமான சாகசங்களோடு, அடிமைகளுக்குப் பதிலாக பைத்தியங்களை வைத்து சண்டையிட்டு வெல்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி படத்தின் கதாநாயகனின் வாழ்க்கை பின்னனியும், அவன்தான் சோழ மக்களின் கடைசி வாரிசைக் காப்பாற்ற வருபவன் என்பது பற்றியும் விரிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஓர் அற்புதம் போல எங்கோ ஓர் மூலையில் அவையனைத்தும் நிகழ்கின்றன. அப்பொழுதெல்லாம் படத்திலிருந்தும் படம் விவரிக்கும் அபாரமான கற்பனையிலிருந்தும் நாம் துண்டிக்கப்படுகிறோம்.

கார்த்திக் கதைப்பாத்திரத்தைப் படத்தின் இடைவேளைக்குப் பிறகு வசனங்கள் பிடுங்கப்பட்டு, திடீர் அதிசய குறியீடாகக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். படத்தின் ஓட்டத்திலிருந்து கார்த்திக் கதைப்பாத்திரம் நீக்கப்படும் கட்டத்தில் ரீமா சென்னின் கதைப்பாத்திரம் புதிய அடையாளத்துடன் உக்கிரமாக வளர்கிறது.

பின்குறிப்பு: படத்தின் அதீதமான வரலாற்றின் மீதான புனைவைக் கொஞ்சம் நீக்கிவிட்டு அணுகினால், பாண்டிய வம்சத்தின் குலத்தெய்வத்தை மீட்கப் புறப்படும் நவீன குழுவில்(ரீமா சென், அழகம் பெருமாள்) உள்ள அனைவரும் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருக்கக்கூடியவர்கள். தலைமுறை தலைமுறையாக சோழர்களை வீழ்த்துவதையும் அவர்கள் திருடிச் சென்ற தங்களின் குலத்தெய்வத்தை மீட்க வேண்டும் என்கிற இலட்சியம் மிகவும் வெறித்தனமாகப் புகட்டப்பட்டிருப்பது, வரலாறின் ஒரு பக்கம் மிகப்பெரிய வன்முறையாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.( குகைக்குள் வாழும் சோழ மன்னனை மயக்குவதற்கு ரீமா சென் தன் உடல் அரசியலைப் பயன்படுத்துவதும்கூட). மேலும் பாணடிய அரசின் மீதங்கள் தமிழகத்தில் உயர் பதவியில் இருந்துகொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் பதவிகளைப் பயன்படுத்தி தங்களின் குலப்பெருமையை மீட்பது போன்று காட்டியிருப்பதும், சோழர்கள் குகைக்குள் காட்டுமிராண்டிகள் போல மாமிசம் தின்று வாழும் நிலையில் இருப்பது போன்று காட்டி, பாண்டியர்களின் வம்சாவழிகள் உயர்மட்டத்தில் அரசாங்க பதவிகளில் இருப்பது போல காட்டி ஒப்பீடு செய்யப்பட்டிருப்பதும், பாண்டிய தலைமுறையின் நவீன படைகளோடு சோழர்களின் இறுதி படைகள்( காட்டுமிராண்டிகள் போல வாழும்) தோற்றுப் போவதும் தற்கொலை செய்து கொள்வதும், மீண்டும் சோழர்களின் பயணம் தொடர்வதும் என, பல கோணங்களில், சோழர்களை நோக்கிய புனைவில் ஏன் செல்வராகவன் வன்முறையைக் கையாண்டுள்ளார் என்றும் கேட்கத் தோன்றுகிறது. இது எனது விமர்சனம் மட்டுமே. சிலர் இதிலிருந்து முரண்படலாம்.

செல்வராகவனின் இந்த முயற்சியை, அலாவுடினின் கையில் கிடைத்த அற்புத விளக்குப் போல அவர் இந்தப் படத்தைக் கையாண்டிருப்பதையும் வரவேற்போம். நமது வரலாறு என்கிற மிகப்பெரிய புனைவின் அதிசயத்தை இப்படியாயினும் கையாளவும் கற்பனை செய்யவும் ஒரு கலைஞன் தேவைப்படுகிறான், ஒரு சில குறைபாடுகள் இருப்பினும்.

கூடுதல் அமசம்: படத்தில் வரும் சோழர்களின் வரலாறையும் வாழ்வையும் காட்டும் சுவர் சித்திரங்கள், அதன் தொன்மையான தோற்றமும் பிரமிக்க வைக்கிறது. பழங்குடி மக்களாக வரும் இரு வகையினரும், மிக இயல்பாக அபாரமான ஒப்பனைகளுடன் காட்டப்பட்டிருப்பது, கலை ஆளுமைகளின் வெளிப்பாடு. வரலாறு என்றாலே சோம்பல் தட்டுவதாக உணரும் மாணவர்கள் போல இன்றும் அது குறித்து ஆர்வம் எட்டாதவர்கள் அதிகம் இருக்கும் காலக்கட்டத்தில் இம்மாதிரியான முயற்சியை அதுவும் தமிழில் நிகழ்த்தியிருப்பது, புதிய முயற்சியாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                   மலேசியா

10 comments:

பாலாஜி சங்கர் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி 


தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

அஹோரி said...

படம் எனக்கு புடிச்சி இருக்கு. செல்வராகவன் ஒன்று செய்து இருக்கலாம், கமல் போன்றோரை பின்னணியில் பேசவைத்து கட்சி யோட்டத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி இருக்கலாம்.

sankarkumar said...

your review is good bala murugan!
sankarkumar
associate film drector

Deepan Mahendran said...

உங்கள் கருத்துகளை நல்லா தெளிவா வெளிப்படுத்தி இருக்கீங்க...,
இதுதான் படத்திலும் எதிர்பார்க்கப்பட்டது....!!!!

சீனு said...

// சோழர்கள் குகைக்குள் காட்டுமிராண்டிகள் போல மாமிசம் தின்று வாழும் நிலையில் இருப்பது போன்று காட்டி, பாண்டியர்களின் வம்சாவழிகள் உயர்மட்டத்தில் அரசாங்க பதவிகளில் இருப்பது போல காட்டி ஒப்பீடு செய்யப்பட்டிருப்பதும், பாண்டிய தலைமுறையின் நவீன படைகளோடு சோழர்களின் இறுதி படைகள்( காட்டுமிராண்டிகள் போல வாழும்) தோற்றுப் போவதும் தற்கொலை செய்து கொள்வதும், மீண்டும் சோழர்களின் பயணம் தொடர்வதும் என, பல கோணங்களில், சோழர்களை நோக்கிய புனைவில் ஏன் செல்வராகவன் வன்முறையைக் கையாண்டுள்ளார் என்றும் கேட்கத் தோன்றுகிறது.//

முதல் பாதி நன்றாக இருந்தாலும், பிற்பாதி சாமனியர்களுக்கு புரியவில்லை.

அது சரி, ஏன் சோழர்களை அவ்வளவு கேவலமானவர்களாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் என்று தெரியவில்லை. வெறும் ரத்தம், ரத்தம், ரத்தம். சைக்கோத்தனமான உள்ளது பல இடங்களில்.

இடைவேளையில் வரும் ட்விஸ்ட்+சஸ்பென்ஸும் அருமை.

மெக்கனஸ் கோல்ட், கிங் சாலமன் மைன்ஸ், மம்மி (வண்டுகள்), க்ளேடியேட்டர் என்று நிறைய டிவிடிக்கள் வாங்கியிருப்பார் போல தெரிகிறது.

டெக்னிக்கலாக, டபிள் ஷேடோ இமேஜினேஷன், சத்தத்தை வைத்து அடுத்தவரை கட்டுப்படுத்துவது என்று நிறைய செய்திருந்தாலும், ஏனோ மிக மிக கோரமாக இருக்கிறது. பெண்கள் படம் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். டாப்லஸ் சீன்கள் சில இருந்தாலும், அவை அசிங்கமாக தெரியவில்லை.

பெண்ணின் மார்பு காம்பிலிருந்து வழியும் இரத்தம், சில தலைகள் நசுங்குவது (உபயம், க்ளேடியேட்டர்) போன்ற காட்சிகள் எதற்கு?

ஏதோ 3 மெல்கிப்ஸன் படம் ஒன்றாக பார்த்தது போல் இருந்தது.

கே.பாலமுருகன் said...

@பாலாஜி

கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

@ அஹோரி
mind voice மாதிரி பின்னையில் வரலாறைப் பற்றி சொல்வதற்கென்று தனித்துவமான குரலைப் பயன்படுத்தியிருக்கலாம்தான். ஆனால் இவையாவும் பார்வையாளன் என்கிற ரீதியில் நமது எதிர்ப்பார்ப்பு. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

கே.பாலமுருகன் said...

@சிவன்

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

@ சங்கர்குமார்

thanks for your comment sir. you are welcomed. கருத்திற்கு மீக்க நன்றி.

@ சீனு

மிக நீளமான தங்களின் சினிமா குறித்த பார்வைக்கு மிக்க நன்றி நண்பரே. தப்பியோடிய சோழர்கள் ஒரு வந்தேறிகள் போல இப்படித்தான் வாழ நேர்ந்திருக்குமமென்கிற கற்பனையைத்தான் செல்வா முன் வைத்திருக்கிறார் ஆனால் கொஞ்சம் வன்முறை கலந்து.

Sabarinathan Arthanari said...

சிறப்பான விமர்சனம்

நன்றி

Tamilvanan said...

இன்னும் ப‌ட‌ம் பார்க்க‌ சூழ் நிலை ஏற்ப‌ட‌வில்லை. என‌து க‌ருத்தினை ப‌ட‌ம் பார்த்த‌ பின்பு சொல்கிறேன்.

Unknown said...

paddam parthe anake puriyeelai.. anal ungel vimarsanam mulliyamma purinththe.. nandri