“எத்தனை நாளா மாமா. . . வீட்டுக்கு வர்றது இல்லெ?”
மௌனம். பொருள்களின் மீதான அசைவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
“ஏண்டா. . மாமா வர்றது இல்லெதானே?”
கீழேயுள்ள மேசையின் மேற்பரப்பு கண்ணாடியிலானது. ஆகையால் அதிலிருந்து எதை நகர்த்தினாலும் அதன் ஓசை பெருக்கக்கூடியது. சிறிது நேரத்திற்குப் பிறகு மேசையிலிருந்து ஒரு பேனாவை நகர்த்திப் பார்ப்பது போன்ற ஒலி எழும்பியது. சிவா எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தால் அப்படிச் செய்வான்.
“உன்னத்தாண்டா, கேக்கறேன். . மாமா யேன் வர்றது இல்லெ?”
“அதை யேன் கேக்கறெ. . உன் வேலையெ பாரு”
அவனது குரலில் திடீர் தடுமாற்றம் அல்லது கோபம் தெரிந்தது. எங்கள் வீட்டில் படிக்கட்டின் ஓரத்தில் ஓர் அறை இருக்கிறது. எதற்காக இந்த வீட்டின் அமைப்பு மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என நாங்கள் தீவிரமாகச் சிந்தித்தது கிடையாது. இருப்பதை வெறுமனே ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சோம்பேறித்தனம் மிகவும் விருப்பமானதாக அமைந்துவிட்டது. அந்த அறைக்காக மட்டுமே தனியாகப் பலகை படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். இடை இடையே பெரிய சந்து. தவறுதலாக கால் இடறினாலும் முழு உடலும் அந்தச் சந்தில் விழுந்து கீழே சரிந்துவிடக்கூடும். எப்பொழுதும் என்னுடைய அறையில் இருந்துகொண்டுத்தான் சிவாவும் நானும் பேசிக் கொள்வோம். சிவாவின் அறை கீழ்மாடியில் வலது புறத்தின் மூலையில் அமைந்துள்ளது. பெரும்பாலான வேளைகளில் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு வானொலி கேட்டுக் கொண்டிருப்பது அவனது பழக்கம்.
“ஏண்டா. . இவ்ள கோவம்? சும்மா கேட்டாகூட ஏசுறே?”
படிக்கட்டு முடிவடையும் இடத்திற்கு மேலாக எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கு காற்றில் இலேசாக ஆடியது. ஒளி படிக்கட்டின் சரிவிலிருந்து விலகி தரைக்கு ஓடி மீண்டும் திரும்பும். சிவா கையை மேசையிலிருந்து எடுக்கவில்லை. மேலும் ஒரு பொருளை நகர்த்திப் பார்த்திருக்கக்கூடும். கீச்ச்ச்ச் என கண்ணாடி தரையிலிருந்து எழுந்த ஒலி பற்களைக் கூசியது. மணி 12க்கு மேல் ஆகியிருந்தது. வெளியில் இருளுடன் யார் யாரோ உரையாடிக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. பக்கத்து வீட்டிலிருக்கும் சீனக் கிழவன் வெளிவரந்தாவில் நாற்காலியைப் போட்டு இருளில் அமர்ந்திருப்பான். அவனாகவே பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே உறங்கிவிடுவான். அவனது பொழுதுகள் எப்பொழுதும் வரட்சிமிக்கவை. அவனைத் தவிர அவனது உலகில் வேறு யாரும் இருப்பதில்லை. எதிரில் இருப்பவர்களைத் தொலைத்துவிடுவதன் அலட்சியத்திலிருந்து அவனது நாட்களைத் துவங்கி, சுயமாக அவனுக்குள் நிகழும் உரையாடல் பற்றி அக்கறை இல்லாதவரை அர்த்தமற்ற இருப்பு வாடிக்கையாகத் தொடரும். சில சமயங்களில் அதுவும் இருளில் என் அறையின் சன்னலைத் திறந்து அவன் இருப்பதைப் பார்க்க நேரும்போது ஏதோ ஒருவகை அச்சமும் நடுக்கமும் பற்றிக் கொள்கின்றன.
“ஏண்டா சிவா. . இந்தக் கிழவனுக்கு என்ன வந்துச்சி? உனக்கு தெரியுமா?”
“அவனைப் பத்தி ஏன் இப்பெ? ஊருல உள்ளவனுங்க பத்தி கவலைப்பட்டுத்தான் நான் இப்டி இருக்கேன்”
சிவா வேறுவகையான தொனியைக் கொண்டிருந்தான். எப்பொழுதும் சிரிப்பூட்டும் வசனங்களும் சொற்களும் மட்டும்தான் அவனிடம் கைவசம் இருக்கும். இப்பொழுது ஆச்சர்யமாக விரக்தியும் பதற்றமும் கலந்த தொனியில் பேசுகிறான். கீழே இறங்கி அவனைப் பார்த்துவிட்டு வரலாம் எனத் தோன்றியது. ஆனாலும் இப்படி அறையில் மங்கிய வெளிச்சத்தில் சுவர்களில் நெளியும் வெறுமைக்கு நடுவே புத்தகம் படித்துக் கொண்டிருப்பதன் மூலம் எனக்குக் கிடைக்கும் ஆயாசத்தை இழக்க மனமில்லாததால் அப்படியே கிடந்தேன். கைகளிலும் கால்களிலும் சோர்வு படிந்திருந்தது.
“வீட்டுப் பக்கத்துலெ இருக்கும் ஒரு மனுசாளு பத்தி பேசாமெ என்னடா வாழ்க்கெ? சும்மா. . ஏன் இப்பெ கோபமா பேசறே?”
இந்த வீட்டின் அமைப்பு குறித்து எனக்குத் திடீர் சந்தேகமும் பிரமிப்பும் எழுந்தன. மேல்மாடி பெரியதாக உருவாக்க வேண்டும் என்று தொடங்கிய வேலைப்பாடுகள் வெற்றிப்பெறாததால் பாதியில் தேங்கிவிட்டதன் மிச்சம்தான் இந்த அறை எனத் தோன்றியது. கீழ்த்தரைக்கும் மேல்மாடிக்கும் 8 அடிவரைத்தான் இருக்கும். மேலிருந்து எங்கிருந்து பேசினாலும் சொற்கள் மிக நேர்த்தியாகத் தரை இறங்கி கீழுள்ள எல்லா இடங்களுக்கும் சென்றடைந்துவிடும். சிலசமயங்களில் எனக்குள்ளாக நான் முனகிக் கொள்ளும் சிலவார்த்தைகள்கூட கீழுள்ள சிவாவிற்குக் கேட்டுவிடுவதுண்டு. சொற்கள் என்ன ஆச்சர்யமாய் தன் மீதான இரகசியங்களைப் பகிங்கரமாகத் தெரிவிக்கன்றன.
“என்னடா சத்தமெ காணம்? எங்காவது போய்ட்டு வரலாமா? கடுப்பா இருக்கு”
“இல்ல வேணாம். .யேண்டா கமலன். . என்கூட உண்மையா பழகுறியா இல்லெ அவுஸ்மேட்னு வெறும் உறவா?”
அவனுக்கு எப்பொழுதும் பிறர் மீது நம்பிக்கை இருந்தது கிடையாது. தனது கேள்விகளின் மூலம் அவனை நெருங்க நினைக்கும் நமது பிம்பங்களை உடைத்து ஊனமாக்கிவிடுவான். வெறும் முனகலோடு அவனிடமிருந்து திரும்ப நேரிடும். அவனது வேலையிடத்தில்கூட நெருங்கிய நண்பர்கள் கிடையாது. எப்பொழுதும் அவர்களைப் பற்றி இரவு முழுக்க குறைப்பட்டுக் கொண்டே இருப்பான். சிலவேளைகளில் அவனது நாவு நீண்டு ஒரு பெரும் இரவாக மாறி எல்லோரையும் விழுங்கத் துவங்கிவிடும். அப்படி இன்னமும் அவனது பொழுதுகளிலிருந்து தொலையாமல் எதையோ கெட்டியாகப் பிடித்துத் தப்பித்துக் கொண்டது நான் மட்டுமே.
“உனக்கு எப்பவும் சந்தேகம்தானெ. உன் மேல முதல்ல உனக்கு ஏதாவது பிடிமானம் இருக்கா? சும்மா உளறாதெ. உன் மேல எனக்கு நட்பும் பாசமும் இருக்கு. பொய் இல்லெ. போதுமா?”
மீண்டும் மௌனத்திற்குத் திரும்பியிருந்தான். சிவா ஈப்போவில் ஏதோ ஒரு சீனக் குக்கிராமத்திகிருந்து வந்தவன். அவனது பின்புலத்தைப் பற்றி அவன் அவ்வளவாகக் கூறியது கிடையாது. கேட்கும்போதெல்லாம் அதனைக் கடப்பதற்கு ஏதாவது காரணம் வைத்திருந்தான். அவனிடம் மிகப் பாதுகாப்பாய் மிகவும் நெருக்கமாக இருப்பது அவனது யானை உண்டியல் மட்டுமே. பெரியதாக உப்பிக் கொண்டு எப்பொழுதும் அவனுடைய சில்லறைகளை உறிஞ்சி தனது வயிற்றில் சேமித்துக் கொள்ளும். “ஏண்டா உண்டியல்னு? கேட்டால், ஒருவேளை அவனது பணம் தீர்ந்து பற்றாகுறை ஏற்பட்டால் என்னிடம் கை ஏந்தும் நிலைமை வந்தால் அதைத் தவிர்ப்பதற்காக என வேடிக்கையாகச் சொல்வான்.
“டேய் சிவா. . உங்க மாமா என்ன குடிக்காரரா? கோவிச்சிக்காதெ. அன்னிக்கு சொன்ன அவருனாலெ வீட்டுலெ ஏதோ பிரச்சனைன்னு?”
“அப்படில்லாம் ஒன்னுமில்லெ. இப்பெ எல்லாம் சரியாச்சி”
“ம்ம்ம்ம். . நல்லது”
எனக்கும் சிவாவிற்கும் இருக்கும் மிக உன்னதமான இடைவேளியே இப்படி இருவரும் முகத்திற்கு முகம் சந்தித்துக் கொள்ளாமல் உரையாடிக் கொள்வதுதான். ஒருவேளை உறக்கம் தட்டி அவன் அறைக்குள் சென்றுவிட்டாலும் அல்லது நான் பேசிக் கொண்டே உறங்கிவிட்டாலும், மறுநாள் எப்பொழுது எந்த இடத்தில் எங்களது உரையாடல் துண்டிக்கப்பட்டிருக்கும் என அதிசயமாய் தோன்றும். யார் உதிர்த்த சொல் கடைசியாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்துவிட்டு சன்னல் வழியாகப் பறந்து போயிருக்கக்கூடும் என விந்தையாக இருக்கும்.
“நீ எப்பெ தூங்கனே” எனக் கேட்டால் இருவரிடமும் பதில் இருக்காது. தூரத்து உரையாடலில் எங்களுக்கு விருப்பம் இருந்ததற்குக் காரணமும் இதுவாகத்தான் இருக்கும். சடங்கு முறையிலான எந்த ஒத்திகையும் இல்லாமல் விருப்பத்திற்கு எப்பொழுதும் துண்டித்துக் கொள்ளவும் திடீரென எங்கிருந்தோ இணைத்துக் கொள்ளவும் இந்த உரையாடல் வசதியாக அமைந்துவிட்டிருந்தது.
“டே. . சிவா! தூங்கிட்டியா?”
“இல்லெ. . யேன்”
“ஒன்னுமில்ல. .”
உறக்கம் தட்டுவது போல இருந்தது. சோம்பலான உடலை மேலும் தளர்த்தி கையிலிருந்த புத்தகத்தை தலைமாட்டிலுள்ள மேசையில் வைத்தேன். 30 நிமிடத்திற்கு முன் இலேசாக நான் உறங்கியது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. அப்பொழுது முன்வாசல் கதவைச் சாத்திவிட்டு யாரோ ஏதோ பேசியவாறு வெளியேறியதும் நினைவில் இருந்தது.
“சிவா. . மொத வீட்டுக்கு யார் வந்தா?”
மௌனம். கைத்தொலைப்பேசி சத்தமில்லாமல் வெறும் ஒளியை மட்டும் காட்டி அலறியது.
“ஹலோ!”
“டே. . சிவா பேசறன். .எங்கயும் தலை வலி மாத்திரை கிடைக்கலடா. . அதான் பெரிய டவுனுக்கு வந்திருக்கென், எங்காவது 24 மணிநேர கடை இருக்கும், பாத்துட்டு வரேன், இன்னும் கொஞ்சம் லேட்டா ஆகும்டா மச்சான். நீ தூங்கறதுன்னா தூங்கு”
கைத்தொலைப்பேசியை வைத்ததும் கீழேயிருந்து மீண்டும் அதே குரல்.
“யாருடா போன்லெ?”
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா
5 comments:
scary......
உங்களைப் பயமுறுத்த வேண்டும் என்கிற புனைவுதான் இக்கதை. மிகச் சாதாரணமான கதைத்தான். வருகைக்கு மிக்க நன்றி.
நல்லாயிருன்க் கொஞ்சம் பயம்
panmuga tanmayudanaana tangalin padappatral valaitala virumpigalukku oru virunthu.
சிவசங்கர் @ பிரம்மாஸ்திரன்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே. இப்படித்தான் இது போல ஒரு கதையை முழுவதும் எழுதி கடைசி வரி எழுத முடியாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. அதென்ன மாயமோ அந்தக் கதை தன்னை முடித்துக் கொள்ள மறுக்கிறது. பயமும் பதற்றமும் அமானுடமும் நிரம்பிய கதை என்பதால் என்னவோ.
Post a Comment