Friday, August 12, 2011

அழகர்சாமியின் குதிரை : நாட்டார் தெய்வமும் ஒரு சாமன்யனும்

இந்தியாவின் ஒரு கிராமத்தில்(மல்லையாபுரம்) நடக்கும் கதை இது. வழக்கம்போல திருவிழா நடத்துவதில் சிக்கல். பங்காளி பிரச்சனைகளால் பலமுறை திருவிழா தடைப்பட்டுப் போகிறது. ஆகையால் கிராமத்தில் மழை இல்லை எங்கும் வரட்சி பரவிக் கிடக்கிறது. சாமியாடியின் மூலம் அழகர்சாமி தன் மனக்குமுறல்களை முன்வைப்பதாக அந்தக் கிராமத்தின் கோடாங்கி நாடகமாடி திருவிழாவை நடத்த வேண்டும் என எல்லோரின் மனதிலும் எண்ணத்தை விதைக்கிறான். கிராமங்களில் திருவிழாவும் நாட்டார் தெய்வங்களும் எல்லை காவல் தெய்வங்களும் மிக முக்கிய தொன்ம குறியீடுகளாகும். அவர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவையும் பிரதிபலிக்கும் சில நம்பிக்கைகள் சார்ந்த கட்டுமானங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கின்றன.

அழகர்சாமிக்கு திருவிழா எடுத்தால்தான் அந்தக் கிராமத்திற்கு நல்ல காலம் ஏற்படும் என ஆழமாக நம்பும் கிராமத்தார்கள் உடனேயே திருவிழாவை அறிவிக்கிறார்கள். கிராமத்தில் உள்ள அனைவரின் ஆழ்மனதிலும் நிரம்பியிருப்பது இந்தத் திருவிழா குறித்த கற்பனைகள் மட்டுமே. அவர்களின் ஆக உயர்ந்த கேளிக்கையே திருவிழா காலம்தான். ஆகையால் கிராமத்தில் திருவிழா கலை கட்டுகிறது. கோவில் செயலவை உறுப்பினர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று திருவிழாவுக்காகப் பணம் வசூல் செய்கிறார்கள். இது ஒருவகையான சமூக உணர்வு என்றே சொல்லலாம். கோவில் என்பது பொது உடைமை. ஆக கோவில் சம்பந்தபட்ட எல்லாம் விசயங்களிலும் பொதுமக்களையும் சமூக வேறுபாடு கருதாமல் அதில் ஈடுப்படுத்துவது மிக முக்கியமான குடியியல் பண்பாக எல்லாம் தேசங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. கிராமத்திலுள்ள எல்லாம் வீடுகளுக்கும் சென்று பணம் வசூலிக்கும்போது ஒரு சிலர் ஏழ்மையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சேமித்தப் பணத்தைக் கொடுப்பதும், ஒரு சிலர் பணம் இல்லாததை மிகவும் குரூரமான பாவனையில் மறைமுகமாகச் சொல்வதும் என அந்தக் காட்சி நகைச்சுவையாக நீள்கிறது.

இதற்கிடையில் அழகர்சாமியின் குதிரை திடீரென ஒரு நாள் இரவு காணாமல் போகிறது. அதிர்ச்சியில் மூழ்கும் கிராமத்தார்கள் காணாமல் போன அழகர்சாமியின் குதிரையை முதலில் தேடி கண்டுபிடித்த பிறகே திருவிழா எனத் தீர்மானிக்கிறார்கள். அழகர்சாமியின் குதிரை காணாமல்போகும் அன்றிலிருந்தே கிராமத்தார்கள் பேய் பிடித்தது போல திரிய துவங்குகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் இழப்பும் சோகமும் உள்ளுக்குள் குருரமாகவும் ஒரு வன்முறையாகவும் வளர்கின்றன. கேரளா சாமியாடியை வரவழைத்து அழகர்சாமியின் குதிரை எந்தத் திசையில் காணாமல் போயிருக்கக்கூடும் என அறிய முற்படுகிறார்கள். மூன்று நாட்களில் குதிரை கிடைத்துவிடும் எனச் சொல்லும் அந்தச் சாமியாடியின் பொய்யான வாக்குப்படி அதே மூன்று நாட்களுக்குப் பிறகு அதே திசையில் ஒரு வெள்ளை நிஜக் குதிரை எதிர்பாராமல் அவர்களுக்குக் கிடைக்கிறது. அதுதான் காணாமல் போன அழகர்சாமியின் குதிர என ஆழமாக நம்புகிறார்கள். காணாமல் போன குதிரை உயிருடன் அந்தக் கிராமத்து மக்களைக் காப்பாற்ற திரும்பியிருக்கிறது என நினைக்கிறார்கள். அந்தக் குதிரையின் வருகைக்குப் பிறகே கிராமத்தில் பல நல்ல காரியங்கள் நடப்பதாக எல்லாவற்றுடன் அழகர்சாமியின் குதிரையைத் தொடர்புப்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு நாட்டார் குறியீட்டைச் சுற்றி எப்படிப் பொதுமக்கள் தங்களின் மூடநம்பிக்கைகளை மிகைப்படுத்தி வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதைப் படம் நெடுக காட்டியிருக்கிறார்கள். நமது பகுத்தறிவு பார்வையில் அது மூடநம்பிக்கைகளாகத் தெரிந்தாலும், கிண்டலையும் கேலிகளையும் கடந்து அதில் ஒரு வாழ்வியல் இருப்பதை உணர முடிகிறது. அந்தப் பகுதியில்தான் அழகர்சாமியின் குதிரை மேலும் மேலும் தெய்வ சின்னமாக அமர்த்தப்படுகிறது.

இப்படியெல்லாம் தெய்வீகமாகப் பாவிக்கப்படும் இந்தக் குதிரை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு அடித்தட்டு இளைஞனுடைய சவாரி குதிரையாகும். சிறு வயது முதலே அதை மிகக் கவனமுடன் பாதுகாத்து அதனுடனே வளர்ந்து தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்ட அப்புக்குட்டியின் குதிரைத்தான் அது. குதிரை மல்லையாபுரம் கிராமத்தில் இருப்பதைக் கண்ட அழகர் அதைக் கட்டியணைத்துக்கொண்டு அழுகிறான். இதைப் பார்க்கும் ஊர் மக்கள் தங்களின் நாட்டார் தெய்வத்தின் வாகனத்தை அவன் திருட முயல்கிறான் எனத் தடுக்கிறார்கள். ஊர்மக்களை எதிர்க்கும் அழகர்சாமியை அடித்துக் காயப்படுத்தி அங்கேயே கட்டிப் போடுகிறார்கள்.

காவல்துறைக்கு விசயம் எட்டியதும் பஞ்சாயித்துக் கூட்டப்படுகிறது. அதன் பிறகு திருவிழா முடியும்வரை அழகர் அங்கேயே தங்கி குதிரையை மீட்டுக்கொண்டு போகலாம் என முடிவெடுக்கிறார்கள். தன்னுடைய பிழைப்பும் வாழ்வும் இந்த ஒரு குதிரையை மட்டுமே நம்பியிருப்பதாகக் கூறி அழும் அப்புக்குட்டியின் சோகம் மனம் முழுக்க விரிகிறது. எப்படி ஒரு சாமான்யனின் உழைப்பு ஊர் மக்களின் நாட்டார் நம்பிக்கைகளுக்கு முன் வலுவிழந்து போவதுடன் கொடூரமாகப் போராட வேண்டியிருக்கிறது என்பதையும் படத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இறுதியில் தன் பிழைப்புக்காகவே கிராமத்து சிற்பி அந்த அழகர்சாமியின் மரக்குதிரையைத் திருடி தன் வீட்டுக்குள் பதுக்கி வைத்துக்கொள்கிறான் எனத் தெரிய வருகிறது. இப்படிச் செய்தால்தான் ஊர் மக்கள் புதிய மரக்குதிரை ஒன்றைச் செய்யச் சொல்வார்கள், அதன் மூலம் ஏழ்மையில் இருக்கும் அந்தச் சிற்பி கொஞ்சம் பணம் சம்பாரித்துக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்கிறான். கிராமத்திலுள்ள பகுத்தறிவுமிக்க இளைஞர்களின் உதவியுடன் திருடிய மரக்குதிரையை அழகர்சாமியின் கோவிலில் வைத்துவிடுவதோடு அப்புக்குட்டியையும் அவனுடைய குதிரையுடன் ஊரைவிட்டு அனுப்பி வைப்பதாகக் கதை நிறைவடைகிறது. சாமான்யனின் உழைப்புக்கும் அவனுடைய எளிமையான வாழ்க்கை சார்ந்த தேடலுக்கும், காலம் காலமாக கிராமத்து மனங்களில் ஊறிக்கிடக்கும் நம்பிக்கைகளுக்கும் மத்தியில் நிகழும் யுத்தத்த்தை மட்டும் சொல்லிச் சொல்லும் ஒரு சிறு பகுதியாகப் படம் இயக்கப்பட்டிருக்கிறது. நாட்டார் நம்பிக்கைகளின் வேர்கள் இன்று முளைத்தவை அல்ல. பல தலைமுறைகளாக அது வளர்ந்து மக்களின் மனதில் அடர்ந்துள்ளன. அதை எந்தப் பகுத்தறிவினாலும் நேரடியாகப் போராடி அசைக்க முடியாத அளவிற்கு வேறுன்றிவிட்டது. அதைக் கடந்து செல்ல மனிதர்களுக்குத் தேவை கொஞ்சம் சாமர்த்தியமும் தந்திரமும் மட்டும்தான் என்பதைப் படத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

எப்படி நாட்டார் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் உருவாகின? பழங்குடி மக்கள் இயற்கையை வழிப்படத் துவங்கியதிலிருந்து இது போன்ற வட்டார வழிபாடுகள் வரலாற்றில் எங்கும் இறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு தொல் சமூகமும் தனக்கான நம்பிக்கைகளையும் வழிப்பாடுகளையும் பிற்காலங்களில் உருவாக்கி அதை வலுவான பின்பற்றுதல்களாக நிறுவவும் செய்தன. இது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. அந்தச் சிந்தனையை இலேசாகக் கிளறிவிட்டதில் படம் இந்தச் சமூகத்தைக் கொஞ்சம் சிந்திக்க வைத்திருக்கின்றது.

இசை: 1980களில் தமிழ் சமூகத்தின் மனங்களை ரொமெண்டிக்ஸ் வகையான இசையில் அதீதமான சங்கீத மேதமையையும் வெளிப்படுத்தி தன் வசப்படுத்தியிருந்த இளையராஜா தற்போதைய சமூகத்தின் ஆழ்மனங்களை இசையின் வழி வெளிப்படுத்துகிறாரா? அவரின் இசையும் குரலும் எல்லாம் வகையான சினிமாக்களுக்கும் இயல்பையும் யதார்த்தத்தையும் ஏற்படுத்துமா? அழகர்சாமியின் குதிரை படத்தில் இளையராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசை படத்துடன் ஒட்டாமல் கதையைப் பலவீனப்படுத்தியிருக்கிறது.    என்னால் இளையராஜாவை சில படங்களில் அடையாளம் காண முடியவில்லை. நான் கடவுள் தொடங்கி இப்பொழுது அழகர்சாமியின் குதிரை வரை அவரால் அவரை நிறுபிக்க இயலாத ஒரு தனிமை அவரது இசைக்கு நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.

படத்தில் நிகழும் காலம் 1982, மற்றும் கதை நிகழும் களம் ஒரு மலைக்கிராமம். ஆனால் அவரின் இசை சற்றும் தொடர்பில்லாமல் படம் நெடுக ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துகிறது. அவன் இவன் படத்தில் யுவனின் இசை அடைந்த ஒரு தோல்வியைத்தான் இப்படத்திலும் நான் காண்கிறேன்.

அப்புக்குட்டி: படத்தில் உண்மையான குதிரைக்குச் சொந்தக்காரனாக நடித்திருக்கும் அழகர்சாமி கதைப்பாத்திரம். இப்படத்தில் பலரும் அசல் கிராமத்தான் தோற்றத்திலேயே காணப்படுவதால் அப்புக்குட்டியின் தோற்றம் உறுத்தவில்லை என்றாலும் ரொம்பவும் மிகைப்படுத்தி அவனைக் கொடூரமாகக் காட்டியிருப்பது போல தோன்றுகிறது. ஆனால் அவனுடைய நடிப்பு மிகவும் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. அப்புக்குட்டியைப் பாராட்டியே ஆக வேண்டும். கதைநாயகன் சகல அம்சங்களுடன் ஈர்க்கும்வகையில் இருக்க வேண்டும் என்கிற சினிமாத்தனமெல்லாம் இப்பொழுது தகர்க்கப்பட்டு வருவதை உணர முடிகிறது.

பாஸ்கர் சக்தி குருநாவலாக எழுதிய ‘அழகர்சாமியின் குதிரை’ கதையை  director susinthiren திரைப்படமாக இயக்கியுள்ளார். தங்கர்பச்சான், ச.தமிழ்செல்வன் வரிசையில் இப்பொழுது இலக்கியத்தைப் படமாக்கும் முயற்சியில் பாஸ்கர் சக்தியும் susinthiren இணைந்துள்ளது மகிழ்ச்சியையே கொடுக்கிறது. மக்களின் மனதில் காவியமாக படிந்துகிடக்கும் நல்ல இலக்கியங்களையும் அண்மைய சமூகங்களைப் பிரதிபலிக்கும் தரமான நவீன இலக்கியங்களையும் படமாக்கும் முயற்சிகள் சினிமாவின் முகத்தை மாற்றியமைக்கும் என்றே நினைக்கிறேன். ஒரு சில குறைபாடுகளுடன் படம் மனதில் நிற்கிறது.

கே.பாலமுருகன்

No comments: