Thursday, August 18, 2011

கவிதை: மௌனத்திற்குள் நிகழும் கொலை


1
சுவரோடு ஒரு தூசியைப் போல
படிந்து கிடப்பவர்களும்
படுக்கைக்குள் குழி விழுந்து
மூழ்கிப் போனவர்களும்
சன்னல்களின் இடுக்குகளில்
தன் மூச்சுக் காற்றை
ஒளித்து வைத்தவர்களும்
ஒளி இழந்த கண்களுக்குள்
ஆயிரமாயிரம் இரவுகளின்
தனிமையைப் பத்திரப்படுத்தியவர்களும்
எப்பொழுதும் பயணிக்காமல்
வீட்டின் அறைகளுக்குள்ளும்
அதிகாரத்திற்குள்ளும்
காலத்தை வெட்டியறுத்தவர்கள்.

2

வீட்டிலிருந்து தப்பித்துச் சென்ற
ஒற்றை எறும்பிடம் இருந்தது
என் அறையின் மௌளனமும்
காலம் காலமாக
நிரம்பிக் கிடந்த எங்களின் உடல் சூடும்.

3

பல்லாண்டுகள்
தண்ணீர் தொட்டிக்குள்
நீந்திக்கொண்டிருந்த
மௌனங்களின்
மூச்சி முட்டும் சப்தம்
மந்திரங்களாகவோ ரிங்காரமாகவோ
பறவைகளின் ஒலிகளாகவும் கேட்டுவிடுவதால்
அதனைக் கொன்று குவித்து
தொட்டிகளுக்குள் நுழைத்திருக்கிறோம்.

எப்பொழுதும் இரைச்சல்களை
சாகடித்துவிட்டு அமைதிக்குள்
பதுங்கும் மனிதர்கள்
உறங்கியப்பிறகு
மிதக்கின்றன வீச்சமடித்து
வியர்த்துக்கொட்டிய பொழுதுகள்.

கே.பாலமுருகன்

No comments: