Saturday, May 11, 2013

சூது கவ்வும் திரைவிமர்சனம்: புத்திசாலித்தனமில்லாத குற்றம்


சூது கவ்வும்: நலன் குமரசாமி இயக்கத்தில் வெளியான, 'பீட்சா' , 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' வரிசையில் விஜய சேதுபதியின் அடுத்த முக்கியமான திரைப்படம். திரைக்கதை எவ்வித கொள்கையும் இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நம்மை இழுத்துக் கொண்டு நகர்கிறது. மிகப்பெரிய மிரட்டலான ஆள் கடத்தலை, சிதறுண்டு சிறிய அளவில் கடைப்பிடிக்கும் விஜய சேதுபதியுடன் சென்னையில் பிழைப்பின்றி போகும் மூன்று இளைஞர்கள் இணைகிறார்கள்.

அதில் ஒருவன் திருப்பூரில் நயந்தாராவிற்குக் கோவில் கட்டிவிட்டு மக்களால் அடித்துத் துரத்தப்பட்டவன். மற்றொருவன் காலையிலேயே சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு தண்ணியடிப்பவன், மற்றொருவனும் ஒரு பெண்ணால் வேலையைப் பறிக்கொடுத்தவன். சென்னையில் உதாசினப்படுத்தப்பட்ட இளைஞர்கள் எப்படி வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு குற்றவாளிகளாக மாறுகிறார்கள் என்பதை மிதமானபோக்கில் அலட்டலில்லாமல் காட்டிச் செல்கிறது. 

ஆள் கடத்தல், இளம் குற்றவாளிகள் என்றால் இரத்தமும் சதையுமாக வன்முறை காட்சிகளை அதிகப்படுத்திதான் உண்மையை நிறுபிக்க முடியும் என்கிற சினிமா உத்தியைக் கட்டுடைத்துள்ள படம் இது. இதன் அவசரமில்லாத திரைக்கதையுடன் சுவாரிசயமாகப் பயணிக்க வேண்டுமென்றால் இப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பார்த்த மாத்திரத்தில் புரிந்துவிடும் வடிவேல், விவேக் போன்றவர்கள் காட்டும் நகைச்சுவை காட்சிகளாக இல்லாமல் இப்படத்தில் அவை திரைக்கதையினூடாக இயல்பாக வந்து நிற்கின்றன.

தன்னுடைய ஆள் கடத்தல் தொழிலுக்கு 5 கொள்கைகளை சேதுபதி விதித்திருப்பது நகைச்சுவயாக இருந்தாலும், அது அவனுடைய குருட்டுத்தனமில்லாத பயத்தையும் துணிச்சலையும் காட்டுகிறது. முதல் கொள்கையே அதிகாரத்தின் மீது கைவைக்கக்கூடாது. ஆனால், நிதி அமைச்சரின் மகனைக் கடத்தப் போய்த்தான் அவர்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். புத்திசாலித்தனம் இல்லாத குற்றவாளிகளின் கொள்கைகள் அது. அதனை மீறும் சேதுபதியின் கும்பல் இறுதிவரை துரத்த துரத்த போலிசாரால் தோற்கடிக்கப்படுகிறார்கள். பொதுமக்களையே மிரட்டும் வகையிலான புத்திசாலித்தமான திட்டங்களைப் போட்டு இலாவகமாகத் தப்பிக்கும் குற்றவாளி கும்பல் இல்லை அவர்கள். தன்னுடைய முதல் கொள்கையை மீறிய இடத்திலேயே தோற்கடிக்கப்பட்டு கைது செய்யவும் படுகிறார்கள். இதுவரை குற்றவாளிகள் அல்லது கடத்தல் கும்பல் தொடர்பான அனைத்துவிதமான மேலாதிக்க சிந்தனைகளையும் களைத்துப் போடுகிறது படம். சென்னையில் வாழ வழித்தேடி அதர்க்குரிய வாய்ப்புக் கிடைக்காமல் சிறிய குற்றங்களில் ஈடுப்பட்டு தோல்வியடையும் இளைஞர்களின் கதையைத்தான் இயக்குனர் மையப்படுத்திருப்பதாகத் தோன்றுகிறது.


அடுத்ததாக, விஜய சேதுபதி இப்படத்தில் மனதளவில் சிதைவுண்டவராகவே வருகிறார். அவர் கண்களுக்கு மட்டுமே தெரியும் தன்னுடைய மாமன் மகள், அவருடனே வாழும் அப்பெண்ணின் தோற்றம் சிதறுண்ட அவரின் மனத்தின் அளவுகோலைக் காட்டுகிறது. அந்த மனநோய்க்குத் தீர்வுக்காணும்போது தான் எத்தனை மோசமான தனிமையில் தள்ளப்பட்டுள்ளேன் என்பதை உணரும் அவர், மனநோயைத் தீர்க்க முற்படாமல் அதனைத் தனக்குள்ளே விட்டுவிடுகிறார். அவருக்கு மட்டும் தெரியும் அந்த மாமன் மகளின் இருப்பு அவருடைய தனிமையின் உக்கிரத்தைப் போக்குகிறது. மனநோய் தொடர்பாகக் கொடூரமாகக் காட்டப்பட்டிருக்கும் படங்களில் இப்படம் அதைக் கையாண்டிருக்கும் இடத்தில் மிகுந்த வித்தியாசத்தை எதிர்க்கொள்கிறது.

அடுத்ததாக, ஒரு கதாநாயகனின் மனநோய் ஒரு மனநல மருத்துவரால் தீர்க்கப்பட்டு நாம் பார்த்திருக்கக்கூடும் அல்லது தீர்க்கப்படாமலேயே போயும் பார்த்ததுண்டு. ஆனால், இப்படத்தில் விஜய சேதுபதிக்கு வரும் மனநோய் எந்த மருத்துவரின் துணையில்லாமலும் ஒரு கார் விபத்தில் மரணிப்பது, அதை இயக்குனர் காட்சிப்படுத்திருக்கும் விதம் அற்புதமான தருணமாகக் கருதுகிறேன். தன்னுடன் இருக்கும் அந்த மாமன் மகள் அந்தக் கார் விபத்தில் அடிப்பட்டு தன் மடியிலேயே இறப்பதைப் போல் விஜய சேதுபதி காண்கிறார். அது இல்லாத அந்தப் பெண்ணின் மரணம் அல்ல, அவருக்குள்ளேயே அவருடைய தனிமை முரண் உண்டாக்கிய மனநோயின் மரணம். மிகுந்த அசாத்தியமான காட்சி அது.

- கே.பாலமுருகன்

No comments: