Thursday, September 17, 2009

எழுத்தாளர் பாவண்ணனுடன் அநங்கம் இதழுக்காக கேள்வி/பதில்

அநங்கம் இதழ் 3க்காக (பிப்ரவரி 2009) எழுத்தாளர் பாவண்ணனை மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொண்டு சில கேள்விகளை முன் வைக்க வாய்ப்புக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுடன் ஏற்கனவே மின்னஞ்சலின் மூலம் நட்பு இருந்ததால், அதன் அடிப்படையில் அவருடன் இந்தக் கேள்வி/பதிலை நடத்தினேன்.

1. இன்றைய இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம், மாய எதார்த்தம் போன்றவற்றின் பாதிப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் குறிப்பிடும் பின்நவீனத்துவம் என்பது இலக்கியம் உட்பட்ட பிற அறிவுத்துறைகளையும் கலைத்துறைகளையும் மதிப்பீடு செய்கிற ஓர் உலகப்போக்கு. மாய எதார்த்தம் என்பது ஓர் இலக்கிய உத்தி. இரண்டுமே வேறுவேறானவை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இவ்விரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்கிற அவசரம் நிலவியது. ஆனால் அந்த அவசரம் இப்போது இல்லை. ஆவேசங்கள் மெல்லத் தணிந்து, இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் நிதானம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் கைவந்திருக்கிறது. அதீத கற்பனை என்பது நம்முடைய கதைமரபில் தொடக்க காலத்திலிருந்தே இடம்பெற்று வந்திருக்கிற ஓர் அம்சம். நம் புராணங்களில் அது அழகான உத்தியாக நன்கு பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
எதார்த்தவாதப் பார்வை நம் மண்ணில் காலூன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் வாழ்க்கையை மண்ணின் தளத்தில் வைத்துப் பரிசீலிக்கிற எதார்த்த இலக்கியப் போக்கு உருவானது.


மன இயக்கங்களையும் புதிர்களையும் சிக்கல்களையும் எதார்த்த வாழ்விலிருந்தே கண்டடைகிற குறிப்புகள் வழியாகவும் படிமங்கள் வழியாகவும் எதார்த்தவாத இலக்கியப் படைப்புகள் முன்வைக்கத் தொடங்கின. ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியின் முடிவில் இக்குறியீடுகளும் படிமங்களும் பழகிவிட்டன என்பது ஒரு காரணம். சிக்கல்களின் தீவிரத்தை உணர்த்த எதார்த்தவாதம் போதுமான அளவுக்கு இடம் தரவில்லை என்பது இன்னொரு காரணம். புதிய குறியீடுகளையும் படிமங்களையும் கண்டடைகிற ஒரு மனநெருக்கடிக்கு ஆளானார்கள் படைப்பாளிகள்.


இதன் விளைவாக அதீத கற்பனை உத்திகள் பயன்பாட்டுக்கு வந்தன. இது எதார்த்தவாதப் பார்வைக்கு எதிரான ஒன்றல்ல. எதார்த்தவாதப் பார்வையின் எல்லையில் கண்டறியப்பட்ட இன்னொரு கிளைப்பாதை. மாய எதார்த்தவாதப் படைப்பகள் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலில் உருவாகின. அந்நாடுகளின் அரசியல் சமூகச்சூழல்களும் நெருக்கடிகளும் மாய எதார்த்தவாத உத்திகளைக் கையாளும் வேகத்தை அந்த நாட்டுப் படைப்பாளிகளுக்குத் தந்தன என்பது மிகையான கூற்றாகாது. நம் கதைமரபின் அதீதக் கற்பனைக்கும் மாய எதார்த்தத்துக்கும் இடையே ஒரு சில நுட்பமான வேறுபாடுகள்மட்டுமே உண்டு. அதீதக்கற்பனையில் நாம் இன்னொரு உலகத்தையே உருவாக்கி, பாத்திரங்களை உலவவிடமுடியும். ஆனால் அப்பாத்திரங்களின் உணர்வுகள் உண்மையானவை. மானுடப் பாத்திரங்களைப்போலவே எண்ணுபவை. கனவில் உரையாடுவதுபோல. மாய எதார்த்தத்தில் நாம் வாழும் உலகமே இடம்பெறுகிறது. ஆனால் எங்கோ ஒரு சில தெருக்களை அல்லது பூங்காக்களை அல்லது கட்டிடங்களை அல்லது மனிதர்களை நம் தேவைக்கு ஏற்றவகையில் அதீதமான குணாம்சங்களோடு புனைய முடியும். அந்தப் புனைவுதான் ஒரு படைப்பாளி முன்வைக்க விரும்புகிற விமர்சனம் அல்லது கிண்டல் அல்லது சீற்றம் என்று சொல்லலாம்.


இப்படித்தான் இந்த உத்தி செயல்படுகிறது. தமிழ்ச்சூழலில் இந்த உத்தி அறிமுகமான தருணத்தில், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் நடுவே அதீத அளவுக்கு ஆர்வம் பொங்கியிருந்தது. இப்போது சற்றே தணிந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பின் நவீனத்துவப் பார்வை படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் மனஉலகையும் பார்வையையும் விரிவாக்கி வளப்படுத்தி இருக்கிறது. விளிம்பில் இடம்பெற்றிருந்த பல அம்சங்கள் இன்று மையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அலசி ஆய்வுக்குள்ளாவதை பின்நவீனத்துப்போக்கின் சாதனை என்றே நான் நம்புகிறேன்.

2. எத்தகைய சிறுகதைகள் உங்களைக் கவர்கின்றன?

ஒரு சிறுகதையின் முடிவுப்புள்ளி என்பது மிகமுக்கியமான ஒரு கணம் அல்லது தருணம். சில சிறுகதைகளில் இது ஒரு திருப்பமாக இருக்கலாம். அல்லது மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை தன் பயணத்தின் ஊடே மண்ணைத் தீண்டும் இறுதிக்கணமாக இருக்கலாம். ஓர் ஓவியன் தூரிகையால் இழுக்கும் கோட்டின் கடைசிப்புள்ளியாகவும் அமையலாம். அப்புள்ளி கிட்டத்தட்ட ஒரு ரகசியக்கதவாகச் செயல்படுகிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்தைநோக்கி தாவவைத்துவிடுகிறது. இப்படி தளமாற்றங்களுக்கு வாய்ப்புகள் கூடுதலாக இருக்கிற சிறுகதைகள் என்னை எப்போதும் கவர்கின்றன.

3. வளரும் இளம்எழுத்தாளர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல நினைக்கிறீர்கள்?

ஆலோசனை என்பதைவிட பகிர்ந்துகொள்வதற்கான ஒரு விஷயமாக ஒன்றை முன்வைக்க விரும்புகிறேன். விரிவான வாசிப்பை விரும்புகிறவர்களாகவும் ஆழ்ந்த விவாதங்களில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எழுத்துப் பயிற்சிகளில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். நம் சாதனைகளே நமக்கான தடைக்கற்களாக மாற நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எழுத்தாளன் என்பவன் இடையறாது விண்ணிலேறி பறந்தபடி இருக்கும் பறவை போன்றவன். பறத்தல் ஓர் அனுபவம். பறத்தலே ஒரு வாழ்க்கை.

4. மலேசிய இலக்கியம் படைப்புகள் குறித்த உங்களின் பார்வை?

ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்கிற அளவுக்கு அதிக அளவில் நான் மலேசிய இலக்கயப்படைப்புகளை நான் வாசித்ததில்லை என்பதால் இக்கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமாக உள்ளது.


குறிப்பு: இனியாவது புலம்பெயர் தமிழர்களின் இலக்கியம் மீது உங்களின் வாசிப்பை முன் வைய்யுங்கள். மலேசிய இலக்கியம் இன்று அடைந்துள்ள நவீனத்துவ வளர்ச்சியும் படைப்பாக்க முயற்சிகளும் மிக முக்கியமான இடத்தை எட்டியுள்ளது.


நன்றி: அநங்கம் பிப்ரவரி 2009 இதழ்


-கே.பாலமுருகன்-

Tuesday, September 15, 2009

புரட்சியின் குறியீடு சே (விளிம்புநிலைகளின் எதிர்க்குரல்)





சே குவேரா என்கிற போராளியின் மிகவும் முக்கியமான புத்தகங்களில் "பொலிவியா நாட்குறிப்புகள்" மிக முக்கியமான பதிவுகளாகும். தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு முதன் முதலில் வெளிவந்த சே-வின் புத்தகம் இது. காலனியமும், ஏகாதிபத்தியமும் சுரண்டும் எல்லா நாடுகளையும் போல கியுபாவும் பொருளாதாரத்தில் சுருங்கிய நிலையிலும் விளிம்பு மனிதர்களை உற்பத்திக்கும் களமாகவும் இருந்ததைத் தனது புரட்சிக்கரமான எதிர்க்குரலில் மூலம் சுரண்டப்பட்டவர்களுக்காக ஒலிக்க்ச் செய்கிறார் சே.

-கே.பாலமுருகன்



சே-பற்றிய அறிமுகம்


சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ( ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்சியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.

கவனம் பெறும் நிகழ்வுகள்





•1929 ஜூன் 14 - பிறப்பு
•1945 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்
•1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்

•1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்
•1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.
oஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்

•1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
oஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.

•1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
oஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
•1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
oடிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.

•1959
oஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
oஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
oஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
oஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
oமே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
oஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
oஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
oஅக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
oநவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

•1960
oஅக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
oநவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.

•1961
oஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
oபெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
oஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரஙகில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.

•1962
oமே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
oஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்

•1963
oஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
oஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.

•1964
oபெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
oமார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
oஅக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
oடிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.

•1966
oநவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
•1967
oமார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
oஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
oஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
oசெப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
oஅக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
oஅக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்

•1968
oஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய
நாட்குறிப்புகள் கியூபாவில் வெளியிடப்படுகிறது.

•1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.

•1997
oஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
oஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
oஅக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
oஅக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.


மூலம்: வீக்கியோபிடியா

கே.பாலமுருகன்

Monday, September 14, 2009

மொழியும் இலக்கியமும் - மீண்டும் ஓர் உடைதல்

1. இது பின்நவீனத்துவமல்ல என்ற இரு கட்டுரை தொடரிலும் நம்முடைய பிந்தைய சமூகம் எப்படி பின்நவீனத்துவ கற்பிதங்கள் இல்லாமலே பின்நவீனத்துத்தில் கையாளப்பட்டிருக்கும் மொழி/அரசியல்/வாழ்வியல் கூறுகளை வாழ்ந்து சென்றிருக்கிறது என்று கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தேன். அது மேலும் தொடரும்.
2. இக்கட்டுரை மரபின் இறுக்கங்கள் பற்றியது. இருப்பின் அடையாளமும் அடையாளத்தின் இருப்பும் தற்கால அரசியல் சூழலின் மிகப்பெரிய சவால். அதை அதன் தன்மைகளுடன் புரிந்து கொண்டு விவாதிப்பதே சரியாகும்.
மொழி தனியான ஒரு மரபில் திடீரென்று தோன்றியது கிடையாது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் மரபு உருவாகிய பின்புலத்தில் சில வாழ்வியல் தர்க்கங்களும், வரலாற்று ஆக்கமும், நிலவியல்/ மனிதவியல் கூறுகளும், பல குறியீட்டுத் தன்மைகளும் என்று பலவேறான தளத்தில் வைத்து ஆழமாக விவாதிக்கவும் தேடவும் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளன. மொழியின் மீது பற்றும் அதீத இருப்பும் கொண்டதால் அதைக் கேள்விக்குள்ளாக்கும் போது மிகுந்த கோபமும் தடுமாற்றமும் ஏற்படுகின்றது.

நம்மைச் சார்ந்த எதையுமே நாம் ஆராயலாம், கேள்விக்குட்படுத்தலாம். இன்று தமிழ் உலக அளவில் வளர்ந்து திடமாக உருவாகவே பல அறிஞர்கள், மொழி ஆய்வாளர்கள் தமிழை விவாதப் பொருளாகவும், ஆய்க்குட்படுத்தியும், தேடலின் களமாகவும் அதைக் கட்டுடைத்து மீண்டும் கட்டுவதிலிருந்து வளர்த்துள்ளார்கள்.

"தமிழ்" சோறு போடுவதால் அதைக் கேள்விக்குள்ளாக்குபவனைத் துரோகி என்பது சரியன்று. தமிழை தொழிலாகவோ/ சோறு போடும் கருவியாகவோ பார்க்கக்க்கூடிய மதிப்பீடுகள், மிகப் பெரிய தவறு. இங்கு நமது கேள்வியும் வினாவும் மொழியைக் குறித்தும் மொழியின் மரபு குறித்து மட்டுமே. நிறுவப்பட்டவைகளை தலைமுறை தலைமுறையாக அப்படியே அதன் புனித கட்டுமானங்களுடன் ஏற்பது ஒரு வழி தோன்றலின் பின்பற்றுதல். அதற்கு முரணாகச் சிந்திக்கக்கூடியவன் அல்லது கேள்விகளை எழுப்பக்கூடியவன் சமூகப் பார்வையிலிருந்து வேறானவனாகவும் புறம்பானவனாகவும் காட்சிப்படுத்தப்படுவதும் அடையாளப்படுத்தப்படுவதும் மரபின் அரசியல். தவிர்க்க முடியாதவை.
ஒவ்வோரு காலமாற்றத்திலும் தமிழ் தனக்குரிய தனித்தன்மையுடன் தன்னை வளர்த்துக் கொண்டது. மரபை மீள்கட்டுமானம் செய்து கொண்டது. பல அறிவியல் புரட்சிகளை எதிர்க்கொள்ள தன் மரபை மீள் உருவாக்கம் மூலம் புதுப்பித்துக் கொண்டது. இன்னும் காலம் வளர வளர மாற்றங்களுக்குத் தகுந்தாற்போல தமிழ் தனக்கான தனித்துவங்களை மரபின் நீட்சியாக மேலும் வலுப்படுத்திக் கொள்ளும்.

நமது வாழ்வின் வெளிப்பாடுகளின் ஒரு வடிவம் மொழி. இன்னும் ஆழமாக மனிதவியல் கோட்பாடுகளில் வைத்து மதிபீட்டால், மொழி பிறருடன் தொடர்புக் கொள்ளக்கூடிய ஒரு வடிவம். அதன் தனித்தன்மையை இழக்கவிடாமல் பாதுகாப்பது மனிதனின் கடமையும்கூட. ஆனால் அதன் தனித்தன்மையின் உள் அமைப்புகளை வரலாற்றுச் சான்றுகளுடனும் எதார்த்தவாத அமைப்பியல்வாதங்களுடன் அணுகக்கூடிய முற்போக்குவாதம் மிக அவசியமானது.

மேலும் தமிழ் இந்துக்களால் மட்டும் பேசப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு மொழியல்ல. தமிழ் ஒரு தேசியம். இஸ்லாமியர்கள், கிறிஸ்த்துவர்கள் என்று பல இனத்தவர்கள் தங்கள் மதத்தை/கலாச்சாரங்களைப் பிராச்சாரம் செய்ய தமிழைப் பயன்படுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக எம்.ஏ நுக்மான் எழுதிய இக்கட்டுரையைப் பார்க்கவும்:

மொழியும் இலக்கியமும்- எம்.ஏ.நுக்மான்



மொழி பிரதானமாக ஒரு தொடர் பாடல் சாதனம் என்ற வகையில் மொழிமரபு நவீன தொடர் பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்ப்பாடல் திறனை இழந்துவிடக்கூடாது.

பிறமொழி சொற்களை நீக்குதல் அல்லது அவற்றை தமிழ் மயமாக்குதல் தொடர்பாக இன்னும் ஒரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழித்தூய்மையாளர்கள் தமிழ் ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவினருக்கு உரியதாக அன்றி பல்லின, பல்கலாச்சார சமூகத்திற்குரிய மொழியாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது என்பதை மறந்துவிடுகிறார்கள். மறைமலை அடிகள் தமிழ் மொழி வளர்ச்சியை சைவத்தோடு மட்டுமே இணைத்துப் பார்த்தார்.

அவரது கருத்துப்படி பண்டைக்காலம் முதல் தமிழைப் பயன்படுத்தியவர்களும் வளர்த்தவர்களும் சைவர்களே. பின்னர் வந்த பௌளத்தர்களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்த்தவர்களும், முஸ்லீம்களும், தங்கள் மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக மட்டுமே தமிழைப் பயன்படுத்தினார்கள். எந்தவித கட்டுபாடுமின்றி வடச்சொற்களையும் பிறமொழி சொற்களையும் கலந்து ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை வழக்கில் இருந்து அழிந்து போகச் செய்ததில் இருந்தே அவர்கள் தமிழை வளர்க்க வரவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்றும், தமிழ்மொழிக்கு மட்டும் உரிய சைவத் தமிழர்களே தமிழை அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தி அதனை வளர்த்தனர் என்றும் அவ்ர் கருதுகின்றார். (மறைமலை அடிகள் 1972).

மொழிமாற்றம், வளர்ச்சிப்பற்றி எவ்வித ஆழ்ந்த அறிவும் இன்றி, வெறும் உணர்ச்சி நிலை நின்று மறைமலை அடிகள் பிரச்சனையை நோக்கியிருக்கிறார் என்பது தெளிவு. எந்த மக்கள் கூட்டமும் மொழியை வளர்க்கும் நோக்கில் மொழியைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக மொழியைப் பயன்படுத்துவதன் மூலமே மொழி வளர்கின்றது. பழைய சொற்கள் வழக்கிலிருந்து மறைவதும், புதிய சொற்கள் வழக்குக்கு வருவதும் மொழி வளர்ச்சியின் இயல்பான நிகழ்வாகும். சங்க காலத்தில் வழங்கிய ஆயிரக்கணக்கான சொற்கள் இடைக்காலத்தில் வழக்கிறந்தன என்றால், தமிழரின் பண்பாடு பெரிதும் மாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது என்பதே பொருள். பல்வேறு பண்பாட்டை உடைய மக்கள் ஒரு மொழியைப் பயன்படுத்தும்போது அம்மொழி பன்முகப்பட்ட வளர்ச்சி பெறுகின்றது.

ஆங்கிலம் உலகப் பெருமொழியாக இவ்வாறே வளர்ந்தது. தமிழும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளது. பௌளத்தர்களும், சமணர்களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் தேவைகளுக்காகத் தமிழ் மொழியைப் பயன்படுத்தியபோது தமிழ் அதற்கெல்லாம் வளைந்து நெகிழ்ந்து கொடுத்து வளர்ந்துள்ளது. அதன் சொல்வளமும் பொருள்வளமும் பெருகியுள்ளன. ஒரு வாழும் மொழியின் இயல்பு இது.

மறைமலை அடிகள் கருதுவது போல் பழந்தமிழ் மரபைச் சைவத்தமிழ் மரபாகக் காண்பதும், பிற பண்பாட்டுக் கலப்பினால் தமிழ் மரபில் ஏற்படும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் தமிழின் அழிவாகக் கருதுவதும், தூய சைவத்தமிழ் மரபு எனத் தாம் கருதுவதைப் பிற பண்பாட்டினர் மேல் திணிப்பதும் சமூகவியல் நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் ஆரோக்கியமற்றதாகும். கிருட்டினன் என்பதைவிட கிருஷ்ணன் என்றும், கிறித்தவர் என்பதைவிட கிறிஸ்த்தவர் என்றும், இசுலாமியர் என்பதைவிட இஸ்லாமியர் என்றும் எழுதுவதையே அச்சமூகப்பிரிவினர் விரும்புவராயின் மொழி மரபிற்கு விரோதமானது எனக்கூறி தடுப்பது மொழி வளர்ச்சிக்கு எதிரானது என்பதோடு ஒரு பல்லினச் சமூக நோக்கில் உகந்ததல்ல என்பதையும் நாம் அழுத்திக்கூற வேண்டும்.


வழங்கியவர்: மா.சண்முகசிவா (அநங்கம் இதழ் ஆகஸ்ட்)


1. பேச்சு மொழி/ வட்டார மொழியைப் பற்றி ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் (சிறிது காலம் கழித்தே வரக்கூடும்- உடனடி பதில் சரியான முரண் ஆகாது)


2. அடுத்து (ஜெயமோகன் இணையத்தளத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த திருக்குறள் எப்படி கடவுள் மையமாக்கப்பட்டது என்ற சமணப் பார்வையின் ஒரு கட்டுரையுடன். . ) விவாதிக்க வேண்டிய ஒரு கட்டுரை அது


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

டாக்டர் சண்முகசிவாவின் இலக்கிய உரை-(கலை இலக்கிய விழா (காணொளி)


"தனக்கு எது தேவை என்கிற உணர்வுடன் இளைஞர்கள் முரண்பட வேண்டும் ஆனால் அவர்களின் முரண்பாடுகள் தனது மொழியையும் இனத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போக வேண்டும். . மாற்றுச் சிந்தனையுடன் செயல்படுவது இளைஞர்களின் சிந்தனையை வலுப்படுத்தும், நான் சிந்திப்பது போல நீ சிந்திக்காதே, நீ வேறு மாதிரி சிந்திக்க வேண்டும். . . . "

"பெரியார் தனது புதிய சிந்தனைகளினால்தான் இளைஞர்களைக் கவர்ந்தார். .

இளைஞர்கள் எப்பொழுதும் எதிர்க்கக்கூடிய சக்தியாக இருக்கிறார்கள், இது தமிழ்ச் சூழலுக்கு ஆரோக்கியமற்ற தோற்றம் என்கிற தவறான கருத்துச் சொல்லப்படுகிறது. . "

"நிகழ்கால பிரச்சனைகளை நீ எதிர்க்கொள்ளும்போது, இலக்கியத்தின்வழியாக, எப்படிப் புதிய மொழியைப் பயன்படுத்தப் போகிறாய், எப்படிப் புதிய சிந்தனையைப் பயன்படுத்த போகிறாய், என்று பார்க்க வேண்டும், காரணம் இது புதிய பிரச்சனையல்லவா. . "

"புதிய மொழியாடலை அதன் தர்க்கம் சார்ந்து எதிர்க்கொள்ள இயலாததால், அதைக் கொச்சையான மொழியென்று முத்திரை குத்துகிறோம், ஆனால் அதிலிருந்துதானே நாம் வந்தோம். . "-Dr.sanmugasiva
கே.பாலமுருகன்

Sunday, September 13, 2009

விமர்சனங்கள் எதற்காக?

இளைய படைப்பாளிகள் விமர்சன துறைக்கு வருவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலர் மாற்றுச் சிந்தனையாகத் தெரியப்படுத்துகிறார்கள். ஆகையால் இதற்கு முன் இருந்த மரபார்ந்த விமர்சன அம்சங்களை முழுவதும் பின்பற்றாமல் தனக்குரிய பார்வையில் புதிய வடிவத்துடன் அல்லது சில மாற்றங்களுடன் விமர்சனம் செய்வது ஏதுவாக இருக்கிறது. இது பயிற்சியாக இருக்கட்டும்.

விமர்சனங்களில் விரைவான புரிதலையும் எளிமையான விவரிப்புகளையும் அல்லது முழுமையான திருப்திகளையும் எதிர்பார்ப்பென்பது ஒரு சோம்பேறித்தனத்தின் அறிகுறி. விமர்சனம் மூலமே எல்லாவற்றையும் அல்லது படைப்பின் எல்லாம் தரிசனங்களையும் உடைத்துக் காட்டி வாசிப்பவனுக்கு மூலை உழைப்பைத் தவிர்த்து விடுவதாக விமர்சனம் மீது பலருக்கு மோகமுண்டு. ஆகையால் சில விமர்சனங்களின் மீது அதிருப்தியும் ஆற்றாமையும் ஏற்படுவது இயல்பு. விமர்சனங்கள் படைப்பின் கணத்தை சிறுக சிறுக இலகுவாக்கி மேற்பரப்பிற்குக் கொண்டு வருவதோடு அதன் வேலை முடிந்துவிடும் என்று நம்புகிறேன். இனி அதை அடைவது வாசகனின் தனித்திறமையைச் சார்ந்தது. விமர்சனங்கள் இன்றி சுயமாகப் படைப்பை அணுகக்கூடியவர்களுக்கு விமர்சனங்களே அனாவசியமாகிவிடும்.

மலேசிய சூழலைப் பொருத்தவரை விமர்சனம் கவனிக்கப்பட வேண்டிய வரவேற்க்கப்பட வேண்டிய அம்சமாகும். மலேசிய படைப்பாளிகளின் படைப்புகளை நேர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தி அதைப் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும். நமக்கான படைப்பாளியை (அவர் யார் என்பது முக்கியமில்லை) நம்மிடம் உள்ள படைப்பாற்றல்மிக்க ஒரு படைப்பாளியைப் பரவலாக பலரும் அறியும்படி சொல்வது ஒரு அக்கறை சார்ந்த விஷயமாகும். நவீன இலக்கியத்தின் முக்கியமான அம்சம் இது.

இதற்கு ஏன் தனிப்பட்ட அக்கறை? ஒரு படைப்பாளியின் புத்தகம் பிரசுரம் கண்டு அது பொது மக்களை அடைந்த பிறகு, அதன் மீது யார் வேண்டுமென்றாலும் விமர்சனங்களை முன் வைக்கலாம். அதன் முக்கியத்துவங்களை, பலவீனங்களை யாரும் சுட்டிக் காட்டலாம். இதில் தனிப்பட்ட யாரையும் வசீகரிக்க வேண்டுமென்ற நோக்கங்கள் கிடையாது. (பெரும்பாலும் ஒரு சக படைப்பாளியைப் புகழ்வதில்கூட இன்னமும் நம்மிடம் சொற்கள் இல்லாமல் நிராயுதபானியாக நின்று கொண்டிருக்கிறோம்). நமக்கு வேண்டியவர்களை, நம்முடைய விருப்பமானவர்களைப் புகழ்வது வேறு, நமக்கு தொடர்பே இல்லாத, அல்லது நமது எதிரியாகவும் இருக்கலாம், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாது அந்தப் படைப்பை மட்டும் அணுகி விமர்சனத்தை முன் வைப்பது வேறாகும். இது மிக அவசியமானது. முதுகு சொரிந்துவிட வேண்டாம் ஆனால் படைப்பின் நிதர்சனத்தைச் சொல்லும்போது அது நிறைவாக இருந்தால் அதை வெளிப்படுத்துவதில் தயக்கமும் காட்டக்கூடாது.

சிங்கையில் இருக்கும் கண்ணபிரான் அவர்கள், யுவராஜன் அவர்களின் காதல்/வல்லினத்தில் வந்த சிறுகதைகளை விமர்சனம் செய்து யுவராஜனை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். யுவராஜனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அதை யுகமாயினிக்கும் அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தார். (வல்லினம் மூலம் ஏற்கனவே யுவராஜன் என்கிற படைப்பாளி வெளிநாடுகளில் பரிச்சயமானர்வதான்)
சிங்கையில் கண்ணபிரானைச் சந்தித்தபோது, “யுவராஜன் நல்ல படைப்பாளி, எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய மலேசிய படைப்பாளி” என்று ஒரு அக்கறையுடன் இதைத் தெரிவித்தபோது அவரைக் கண்டு மகிழ்ந்தேன். முக்கியமாக, “மலேசிய படைப்பாளி” என்கிற சொல் எனக்குள் ஆழமான நெருடலை ஏற்படுத்தியது. இதுவரை எத்தனை மலேசிய படைப்பாளியின் படைப்புகள் குறித்து நான் அக்கறை காட்டியுள்ளேன்/ விமர்சித்துள்ளேன், என்கிற சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. இனி விமர்சன உரிமைகள் மூத்த இலக்கியவாதிகளிடம்தான் இருப்பதாக எந்தக் கற்பிதமும் இல்லாமல், என் நுகர்வு சார்ந்து, வாசகப் பார்வை சார்ந்து சக படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. கையில் இருப்பது மஹாதமன் சிறுதைகள்தான் ( புத்தக வடிவில்). அடுத்ததாக கோ.புண்ணியவான் சிறுகதைகளையும் விமர்சிக்க வேண்டும்.. தொடர்ந்து சை.பீர்முகமது. . இனி அடுத்த படைப்பாளிகளின் புத்தகங்களுக்குக் காத்திருக்க வேண்டும்.

3 வருடத்திற்கு முன்பே மஹாத்மனின் சிறுகதைகளை வல்லினம் இதழிம்/ காதல் இதழில் படித்த அனுபவம் இருப்பதால் நான் அவருடைய வாசசன் என்பதில் எனக்கே எந்த முரணும் இல்லை. ஒரு சிலர் எனக்கு அழைத்து, “ஏன் இவ்வளவு நீளமான விமர்சனம்?” என்று கேட்டபோது, என்னால் முடிகிறது நான் செய்கிறேன் என்றேன். அழைப்புத் திடீரென்று துண்டித்துக் கொண்டது. இன்னும் ஒருவர், “மஹாதமன்தான் உங்களை அப்படி விமர்சனம் செய்து கேலியெல்லாம் செய்துள்ளாரே, பிறகு ஏன் அவருக்கு இதையெல்லாம் செய்து, இறங்கிப் போகிறீர்கள்? ” என்று. எனக்கு மஹாதமன் என்கிற முழு தனி நபர் அனாவசியம். என் கைகளுக்குக் கிடைத்தவிட்ட அவர் முழு தொகுப்பில் வெளிப்படும் மஹாத்மன் என்கிற படைப்பாளியும் 3 வருடமாக அவர் கதைகளைப் படித்து வரும் வாசகன் என்பதாலும் நான் எப்படி வேண்டுமென்றலும் விமர்சனம் செய்யலாம். அது வாசகனுக்குரிய உரிமை. இதைக்கூட சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் அளவிற்கு உங்கள் மனதில் ஏதோ ஒரு குரோதம் வளர்ந்திருக்கிறது” என்றதும் அவர் அமைதியாகிவிட்டார். இந்த விமர்சனத்தை எழுதுவதால் மஹாதமன் என்ன எனக்கு பணமா கொடுக்கப் போகிறார்?

அடுத்து வரும் மஹாத்மனின் சில கதைகளில் என் பார்வையின் அடிப்படையில் தெரிந்த சில பலவீனங்களும் உண்டு. அந்தப் பலவீனங்களை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த முயல்வேன். அவர் அதை ஏற்றுக் கொள்வாரா அல்லது புறக்கணிப்பாரா என்கிற கவலைக் கொஞ்சம்கூட இல்லாமல், தொடர்ந்து விமர்சிப்பேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Friday, September 11, 2009

கடவுளின் சட்டையும் மாணவர்களும்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வியாழக்கிழமையும் சபையில் தேசிய பாடல் ஒலிக்க துவங்கியதும் மாணவர்கள் உடல் உற்சாகம் பெரும். உடலை நிமிர்த்தி நேர்க்கோட்டில் வைத்து வானொலியில் பாடல் ஒலித்ததும் அதனுடன் சேர்ந்து வாயை அசைப்பார்கள். அருகில் செல்ல நேரும்போது அவர்கள் பாடலை இராகம் தப்பியும் வரிகள் விட்டும் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும்.

சில ஆசிரியர்கள் பாடலை உடனேயே நிறுத்திவிட்டு மாணவர்கள் தவறவிட்ட சொற்களை அல்லது வரிகளைச் சீர்ப்படுத்தி மீண்டும் பாடலை ஒலிக்கச் செய்து பாட வைப்பார்கள். அப்படியும்கூட இன்னமும் ஒரு சில மாணவர்கள் வாயை மட்டும் அசைத்துக் கொண்டு முகப்பாவனைகளால் ஏமாற்றுவதை அறிய முடிகிறது. நாம் மாணவர்களுக்கு நாட்டுப் பற்றை உணர்த்துவதில் காட்டும் அக்கறையைக்கூட சில சமயங்களில் தேசிய பாடல் அல்லது நாட்டுப் பற்று பாடலைக் கற்றுக் கொடுப்பதில் அவ்வளவாகக் கவனம் செலுத்துவது கிடையாது. பள்ளியின் முதல்நாளில் எல்லோருக்கும் பாடல் வரிகள் அடங்கிய தாளைப் பிரதியெடுத்து வழங்கி அவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பழக்குவோம். வாசிக்கத் தெரியாத மாணவர்களின் கைகளிலுள்ள பாடல் வரிகள் பூச்சாண்டியைப் போல அவர்களைப் பயமுறுத்துமே தவிர அது அவர்களுக்குப் பரிச்சியமாகப் போவதில்லை.

பள்ளிக்குப் புதியதாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் சில மாதங்களுக்குத் தேசிய பாடல் வாயில் நுழைய சிரமப்பட்டு மறுத்துக் கொண்டிருக்கும். அவர்களைப் பாடச் சொல்லி கேட்கும்போது அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் மழலைத்தன்மை அடைந்து ஒரு குழந்தைத் தவழ்ந்து வருவது போல இருக்கும்.

அப்படியொருமுறை ஒர் ஒன்றாம் ஆண்டு மாணவனைப் பாடச் சொல்லிக் கேட்கும் அனுபவம் கிடைத்தது. மிகவும் உற்சாகமாக உடலை நிமிர்த்தி கைகளைப் பக்கவாட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு பாடத் துவங்கினான்.

“tuhan baju. .”

என்கிற ஒரு வரி பாடலின் இடையில் சிக்கியிருந்தது. மீண்டும் பாட சொன்ன போது அதே வரி மீண்டும் ஒலித்தது. அந்த மாணவனை மீண்டும் அந்த வரியை உச்சரிக்கச் சொல்லி அதைத் திருத்தினேன். “tuhan kurniakan. “ மீண்டும் அவன் அந்த வரியை விடமுடியாமல் அதையும் இழுத்துக் கொண்டே பாடலைப் பாடிய போது சிரிப்பு வந்தது.

“டே. . கடவுளோட சட்டையா? அப்படி இல்லடா. . இப்படி. . என்ன சொல்லுவியா ஒழுங்கா? நீ என்ன கடவுளோட சட்டைய பத்தில்லாம் பேசறெ?”

“tuhan baju. . “

“தம்பி. .யப்பா. . கடவுள் என்ன சட்டை போட்டிருப்பார்னு தெரியுமா?”

“தெரியும் சார். . சுக்குல் சட்டை போட்டுருப்பாரு”
தனது சட்டையைக் காட்டி அதைக் கூறினான். அப்பொழுதுதான் அவனுடைய சட்டையில் இரண்டு பட்டன்கள் இல்லாமல் அதில் ஊக்கு சொருகி குத்தியிருப்பது தெரிந்தது. சட்டை பாக்கெட்டில் பள்ளியின் சின்னம் இருக்க வேண்டிய இடத்தில் வெளிறிய வேறு ஒரு பள்ளியின் சின்னம் உருகுலைந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.

“யாரோட சட்டெ இது?”

“எங்க அண்ணனோட சட்டெ சார்”

“உனக்குன்னு சட்டெ இல்லையா?”

“அப்பா அடுத்த வாரம் பாசார் மாலாம்லெ வாங்கி தரேனு சொல்லிருக்காரு சார்”

“சரி நீ வகுப்புக்குப் போ. . உனக்கு புது பள்ளிச் சின்னம் தரச் சொல்லி உங்க வாத்தியார்கிட்ட சொல்றேன்” என்றதும் கடவுளின் சட்டையைச் சரிசெய்துவிட்டு அவன் நகர்ந்தான். அவன் உடலில் தொங்கிக் கொண்டிருப்பது கடவுளின் சட்டையாகத்தான் இருக்க முடியும்.

நமது அன்றாட அவசர அலுவல்களுக்கு நடுவில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் சீறுடைகளைக் கொஞ்சம் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக உடுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சில மாணவர்களின் சட்டையில் பட்டன்களுக்குப் பதிலாக சிறியதும் பெரியதுமான ஊக்குகள்தான் பல்லிழித்துக் கொண்டிருக்கும். அவர்கள் அதை மறைப்பதற்காகச் செய்யும் சாகசங்கள் மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கும். வகுப்பில் பிற மாணவர்களை எதிர்க்கொள்ள துணிவில்லாமல் எப்பொழுதும் சட்டையை மேசையின் விளிம்பில் வைத்து மறைத்துக் கொண்டு அமர்ந்தே இருக்கத்தான் முயற்சி செய்வார்கள்.

“சட்டெ யேண்டா கிழிஞ்சிருக்கு? தைக்க முடியாதா?”

“சட்டெ யேன் இப்படி வெளுத்துப் போச்சி? உங்க வீட்டுல ஒரு சட்டை வாங்கித் தர மாட்டாங்களா உனக்கு?”

“நாளைக்கு சட்டையில பள்ளிச் சின்னம் இருக்கனும், இல்லைனா அப்பறம் அவ்ளத்தான் நீ”

மாணவர்களின் சட்டைகளில் தென்படும் கிழசல்களையும் நேர்த்தியின்மைகளையும் நாம் அணுகும் விதமே ஒரு மிரட்டலாகவும் தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு நாட்டாமையாகவும்தான் இருக்கிறதே தவிர அதன் பின்னனியை அறிந்து அந்தக் கடவுள்களின் சட்டையைச் சரிசெய்ய ஏதாவது ஒரு முயற்சியை எடுக்கும் சிந்தனைகள் மிகக்குறைவாகத்தான் இருக்கின்றன போல. குறைந்தது அந்தச் சட்டையுடன் அவனைப் பிறமாணவர்களுக்கு நிகராக நடத்துவதற்காகவாது நாம் முயற்சிக்க வேண்டும்.

“சார் பாக்கெட்டு கிழ்ஞ்சி தொங்குது பாருங்க”

சில சமயங்களில் நமது சக்திக்கேற்ப எல்லாம் மாணவர்களுக்கும் உதவ முடியாமல் போகும்போது, நம்மிடம் இருப்பது அவர்களுக்கான ஆதரவும் அல்லது அவர்களின் நிலையைச் சரிப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக் கண்டறியும் அக்கறையும்தான். இன்றும் பேருந்தில் கண்ணாடியோர சன்னலைத் தேடிப் பிடித்து தனது புத்தகப்பையால் தனது சட்டையை மறைத்துக் கொண்டு ஏதும் அறியாத பாவனையில் பள்ளிக்கு வந்திறங்கும் மாணவர்கள் அணிந்திருக்கும் கடவுளின் சட்டையை நீங்கள் பார்த்ததுண்டா?

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Thursday, September 10, 2009

“ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் - தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்


மலேசிய படைப்பாளியான மஹாத்மன் சிறுகதைகள், வல்லினம் (மலேசியா)பதிப்பகத்தின் வெளியீடாக அன்மையில் வெளியீடு கண்டது. மறுவாசிப்பிற்கும் ஆழ்ந்த விமர்சனங்களுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டிய கதைகள் மஹாத்மனுடையது. முழு தொகுப்பையும் வாசித்து முடித்தபோது, புத்தகத்திலுள்ள 10 கதைகளையும் ஒரே தளத்தில் ஒரே புரிதலில் வைத்து மதிப்பீடுவது அல்லது விமர்சிப்பது சிரமமானது. ஒவ்வொரு கதையும் தனக்கான களத்தைக் கண்டடையும் நுட்பம் அனுபவ ரீதியிலான வெளிப்பாடுகளின் தனித்தனி சரடுகளாகும்.

ஏற்கனவே மலேசிய படைப்பாளி மஹாத்மனின் “கடவுள் கொல்ல பார்த்தார்” , “அலறலும் பரதேசியின் நடையும், மூன்றாவது அற்புதம் போன்ற கதைகளை வாசித்தபோது, முதன் முதலில் புதுமைப்பித்தனின் “கயிற்றரவு” சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வுகளை இனம்காண முடிந்தது.

சராசரி மனோபாவங்களுக்குள் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்ப்பது போல இது வெற்றியடைந்தவனின் வரலாறோ, சுகமான வாழ்பனுபவத்தின் சாதனை கதைகளோ கிடையாது. தனக்கான அனுபவம், கண்டடைந்த விரக்தி, தன்னைக் கடந்து தன் இருப்பைத் தூக்கிக் கொண்டு அலையும் சந்தர்ப்பங்கள், போதாமைகளின் அடுக்குகளில் சிக்கிய எச்சங்களாக, ஒரு பரதேசியென கொள்கைகள் அற்று, பிடிப்புகள் அற்று, பல கூர்மையான கேள்விகளுடன் படைத்தவனைத் தேடி அலையும் ஒரு மனிதனின் விளிம்பு கதைகள் மஹாத்மனின் களம் என்பது போல தோன்றியது. முன்பு அவரிடம் இதைப் பற்றி உரையாடியபோது அவரின் வெளிப்பாடுகளும் தன் கதை தன்னை வெளிப்படுத்திக் கொண்ட உணர்வையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மஹாத்மனின் வாழ்பனுபவம் மலேசிய சூழலிலிருந்து சராசரி மனிதனின் வாழ்க்கை சுழற்சியிலிருந்து சற்று விலகி வாழ்வின் மகத்துவங்களின் கால்களில் சிக்கிக் கொண்டு தனது பிம்பத்தை மற்றொரு இருண்ட பரிணாமத்தில் தூக்கி வீசக்கூடிய எல்லாம் தனித்துவங்களையும் கொண்டது. அந்த வாழ்வைக் கொண்டாடுவதன் மூலமாகவோ அல்லது படைப்பாக்குவதன் மூலமாகவோ மஹாத்மனுக்குள் இருக்கும் படைப்பாளன் வெற்றிப் பெற்றுள்ளான். மீண்டு வருவது அல்லது இயலாமைகளைச் சரிக்கட்டுவது அசாதரணமானது. தனது பரதேசி அடையாளத்தைப் பதிவு செய்வது, பதிவு செய்து வெற்றிப் பெறுவது, சமூக அங்கீகாரங்களுக்கு சமூக புறக்கணிப்புகளுக்கு அஞ்சாமல், மிகத் துணிவாக தன்னுடைய சுயத்தை தன்னுடைய அனுபவத்தை பொது நியாங்களின் நெருக்குதல்களைத் துண்டித்துவிட்டு, வெளிப்படுத்துகிறார் மஹாத்மன். அவருடன் பயணிக்க நீங்களும் பரதேசியைப் போல சாலையில் படுத்துறங்கியும் அலைந்தும், சிறைப்பட்டும், தண்டிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், மதத் தீவிரத்தில் சிக்குண்டும், மீண்டும், எதிர்த்தும், ஒட்டு மொத்தமாக சாமான்ய வாழ்விலிருந்து தூக்கி வீசப்படவும் வேண்டும். இல்லையென்றால் ஒரு சராசரி பார்வையாளனாக, விளிம்பு நுகர்வற்ற, பின்புலமற்ற வாசகனாக மட்டுமே மஹாத்மனின் அனுபவங்களின் ஆழத்தின் மேற்பரப்பில் மிதக்கக்கூடும். மிதத்தல் சுவையான அனுபவம். மஹாத்மன் கண்டடைந்த ஆழத்தின் அபாயங்களும், இருளும் ஒரு செய்தியாக மட்டுமே நம்மை வந்தடைகிறது.

முதலில் “ஓ லாவே” என்ற கதையிலிருந்து என் விமர்சன பார்வைக்குள் நுழைகிறேன். இதுவரை விமர்சனங்களுக்கு ஒரு மரபார்ந்த வடிவம் இருந்திருக்கலாம். அவ்வளவு மரபாக விமர்சிக்க முடியாவிட்டாலும் கதையின் போக்குடன் அதன் மேற்பரப்பில் நான் மிதந்து வந்து அடைந்த ஒரு புரிதலை மட்டும் பகிர்கிறேன்.


ஒரு நட்சத்திரமில்லாத தங்கும் விடுதியில் இருக்கும் இரு நண்பர்களுக்கிடையேயான நட்பின் பின்னனியில் இயங்கக்கூடிய கதைக் களம், தனது சீன நண்பனை மையப் பாத்திரமாக வடிவமைத்துக் கொண்டு இன்னொரு கதைச் சொல்லியின் மூலம் கதை நகர்த்தப்படுகிறது. வழக்கமான உத்தி. எவ்வித புதுமையும் கிடையாது. சிறுகதைகளில் பெரும்பாலும் கையாளப்பட்டவைத்தான்.

கெசினோ ரோலட் என்கிற சூதாட்டத்தில் எல்லாம் பணத்தையும் கரைத்துவிட்ட பிறகு ஏற்படும் அடுத்த நகர்வை ஒரு சம்பவம் சார்ந்ததாக கட்டமைத்து, கொண்டு வரப்படுகிறது. தொலைத்த பணத்தை ஈடுகட்ட ஒரு சாமி சிலை கிடைக்கிறது, அதைக் கொண்டு போய் கடை கடையாக விற்பனை செய்கிறார்கள். எல்லாம் இடத்திலும் வேண்டாமென்கிறார்கள். விற்பனையாகாத சிலையை இரவில் எழுந்து தடவிப் பார்க்கிறான். மறுநாள் சிலையைக் காடொன்றின் ஆற்றோரத்தில் வைத்துவிட்டு வருகிறார்கள். பிறகு இரு நண்பர்களும் பிரிய நேரிடுகிறது. மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும்போது சிலை வைத்த இடத்திற்குச் சென்று பார்க்கும்போது அங்கு ஒரு கோவில் உருவாகியிருப்பதைக் கண்டு “ஓ லாவே” என்று வியக்கிறான் சீன நண்பன் என்பதாகக் கதை முடிகிறது. இந்த “ஓ லாவே”க்கும் அவனுக்குள் இருக்கும் இன்னொரு “ஓ லாவே”க்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு இருப்பதை உங்களால் கண்டறிய முடியுமானால், வாசிப்பு அடுத்த கட்டத்தில் மீண்டும் தொடங்கும்.

ஓ லாவே என்ற சொல்லுக்கு அர்த்தம் சீனர்களின் ஒரு பிரிவினர், ஹோக்கின் மொழியைப் பேசக்கூடியவர்கள், தனக்கு வியப்பை அளிக்கக்கூடிய ஒன்றைப் பார்த்து அதிசயித்து உச்சரிக்கக்கூடிய ஒரு சொல்லாகும். அதிசயங்களுக்கு முன் அவர்கள் மண்டியிட வைக்கும் ஓர் உணர்வுதான் “ஓ லாவே”. அன்றாடங்களின் சலிப்பிலிருந்தும் அதன் நேர்த்தியான ஒழுங்கு அளிக்கக்கூடிய இறுக்கங்களிருந்தும் தப்பித்துக் கொள்ள அடுத்த வடிவமாக இருந்தது சூதாட்டம், மது, மாது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அப்படியொரு தப்பித்தலில் மனோநிலையில் சூதாட்டம் கொடுக்கக்கூடிய சிற்றின்ப அதிசயங்களுக்கு முன் மனிதன் எப்படி மண்டியிட்டுக் கிடக்கிறான் என்பது போன்ற ஓசையுடன் துடிக்கிறது ஓ லாவே சிறுகதை.

கெந்திங் மலையில் இருக்கும் கெசினோ சூதாட்ட களத்தில் பெரும்பாதியான கதை நடக்கிறது. தன் சக சீன நண்பன் சூதாட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு மீண்டும் அதை நாடும் சூட்சம வஸ்த்துவின் எதார்த்தங்களை முன் வைக்கும்போது எளிமையான நடையால் எந்த இடத்திலும் குழப்பம் தட்டாமல் வெகு இயல்பாக கதையுடன் இணையக்கூடும். சூதாட்டம் அளிக்கக்கூடிய சிறிது நேரப் போதையில் முழுவதும் தொலைத்துக் கொள்ளும் ஒரு பிம்பத்தைக் காட்டும்போது அந்தப் பிம்பத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தையும் நாம் அடையக்கூடும்.

பத்துடுவா கம்பத்தில் இருக்கும்போது, அம்மா ஒரு சீனக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். முன்பகுதி செலவு பொருள்கள் விற்கும் கடை, பின்பகுதியில் சீன முதலாளியின் மிதமான ஆடம்பர வீடு. அம்மாவுடன் அந்தச் சீனனுடைய வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் ஒரு காயா ரொட்டி இலவசமாகக் கிடைக்கும், மேலும் சீன காமிக்ஸ் புத்தகங்களும் கிடைக்கும். அதிலுள்ள படங்களைக் கிழித்து பறக்கவிடுவது எனது பொழுதுபோக்கு. அந்தச் சீன் முதலாளியின் வீட்டில் எப்பொழுதும் சீட்டாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கும். எல்லாம் நேரங்களிலும் அங்குள்ளவர்கள் வட்டமாக அமர்ந்துகொண்டும் புகைப்பிடித்துக் கொண்டும் ஆயாசமாகவும் சிரித்துக் கொண்டும் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கைகள் இலாவகமாக சீட்டுத் தாள்களை விரித்துக் காட்டும். மேசையில் சில்லறை காசுகளும் பண நோட்டுகளும் அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது. .”ஓ லாவே” என்று சொல்லியிருக்கக்கூடும். (அப்பொழுதே இந்தச் சிறுகதையைப் படித்திருந்தால்)

அடுத்ததாக கோலாலம்பூரில் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், வீட்டு வசிப்பிடத்திலுள்ள குதிரை பந்தயம் வீடியோ கேமில் சீன சிறுவர்கள் குவிந்து கிடந்து நாள் முழுக்க அங்கேயே கதியாகக் கிடக்கும் அந்தக் கூட்டத்தின் ஆர்வத்தையும் சூதாட்டத்தில் அவர்களுக்கிருக்கும் அதிசய உணர்வுகளையும் பார்க்க நேர்ந்தது. என்னுடைய பள்ளிப் பருவம் முழுக்க சீன நண்பர்கள் சூதாட்டம் குறித்த அதீத ஈடுபாட்டு உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அவர்களின் பொழுதுகளைச் சீட்டுக் கட்டுகளும், தாயங்களும் நிரப்பியிருப்பதை நேரிலேயே காணக்கிடைத்தது.

மஹாத்மனின் “ஓ லாவே”வில் ஒரு இனம் சூதாட்டத்தின் நகர்வில் தன்னை நிறுவிக் கொண்டு அதன் உள் அமைப்புகளாக, எல்லாம்வித உளவியல் சிக்கல்களுக்கும், வாழ்வியல் தோல்விகளுக்கும், ஆளானதைக் காட்டப்படுகிறது. சூதாட்டம் ஒரு மனிதனை எங்கு கொண்டு நிறுத்தும் என்கிற விரிந்த மனோத்துவ அணுகுமுறையுடன் மஹாதமன் அவருடைய கதையில் தற்கொலைகளின் உச்சத்தில் அதன் வீழ்ச்சியில் நம்மையெல்லாம் அமர வைத்து, சூதாட்டமும் அதன் போதையும் உருவாக்கிய மரண பாதாளங்களையும் அதன் இடுக்குகளில் வீழ்ந்து மரணித்த முகங்களையும் காட்டுகிறார். பயங்கரமான தற்கொலைகளின் பின்னனியில் பெரும்பாலும் ஒரு சூதாட்டத்தின் வீழ்ச்சியும் குரோதமும் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

நாம் வாழும் சமூகத்திலேயே இது வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. பிறரை ஏமாற்றுவதன் மூலமே இன்னொருவன் முன்னேற முடியும் என்பதாகப் பொருளாதார சிந்தனைகள் ஒரு இயல்பாகிவிட்டதென்றும் சொல்லக்கூடும்., பொருளியல் தேடலின் அதீத மாயாவாத புத்தி தரக்கூடிய போராட்டமே இந்தச் சூதாட்டம்தான் என்று அடையாளம் காணக்கூடிய அளவிற்கு சூதாட்டம் வெளிப்படுத்தக்கூடிய மாயை, புராணக் காலங்களிலும் ஒரு வரலாறாக இழப்புகளின் குறியீடுகளாக இருந்ததை, பாண்டவர்களின் வீழ்ச்சிகளைக் கதையுடன் சேர்த்துக் காட்டுவதன் மூலம் நிறுபிக்கிறார் மஹாத்மன்.

மேலும் கதையின் ஆழத்தை உங்களுக்கு நான் சொல்வதைவிட நீங்களே வாசிக்கும்போது அதன் எளிமையான உள் அடுக்குகளைக் கண்டறிய முடியும். மஹாத்மனின் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளிலே மிக இயல்பாக எளிமையாக பலரும் அடையக்கூடிய களத்தைக் கொண்டுள்ள கதை இது மட்டுமே. எவ்வித இருண்மைகளும் இல்லாத நடை, எளிமையான கதையாடல். சிக்கலில்லாத மொழி.

தொடரும் விமர்சனம்
கே.பாலமுருகன்

Wednesday, September 9, 2009

பழ.நெடுமாறன் மலேசியா வருகை (இன்று சுங்கைப்பட்டாணியில் எழுச்சி உரை)






அறிவிப்பு: இன்று சுங்கைப்பட்டாணி (மலேசியா)வில் சுப்ரமண்ய ஆலய தேவஸ்தானத்தின் அண்னாசாமி மண்டபத்தில் பழ.நெடுமாறன் அவர்களின் எழுச்சி உரை நடைபெறவிருக்கிறது. கீழ்க்கண்ட விவரத்தின்படி:

திகதி: 09.09.2009(புதன்) இன்று
நேரம்: மாலை மணி 7.30க்கு
இடம்:சுங்கைப்பட்டாணி அண்ணாசாமி மண்டபம் (சுப்ரமண்ய தேவஸ்த்தானம்




பழ. நெடுமாறன் (1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.

தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு

1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.சி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.சி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.

1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.

1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.

1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம்[1] மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.

1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.

1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின.

20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார்.

1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.

1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.

மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.


1969-இல் காங்கிரசு கட்சியில் இருந்த போது, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத காலம் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பொய் வழக்கு என்று வெளிப்படுத்தியே வெளி வருவேன் என்று பிணையில் வெளிவர மறுத்து விட்டார். ஆறு மாத காலம் முடிவதற்கு ஓரு நாள் இருந்த போது உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று தீர்ப்புரைத்தது. இதற்காக பெருந்தலைவர் காமராசர் நெடுமாறனை மாவீரன் என பாராட்டினார்.

1993 - தடா சட்டத்தின் கீழும் 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.

2002ஆம் ஆண்டு பொடாவில் கைது[4] செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.

பிணையில் வெளியே வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டு காலம் வாய்ப்பூட்டுப் போடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டார்.

இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்காக 1 வாரம் பத்து நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் பிணையில் வெளிவந்து தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதும் தொடர்கிறது


சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் உள்ளவர்கள், ஈழ போராட்டம் குறித்த தகவல்களுக்கும் உண்மை நிலவரங்களுக்கும் இந்த எழுச்சி உரையைக் கேட்க தவறாமல் வரலாம்.

கே.பாலமுருகன்

தகவல்: தமிழ் வீக்கியோபிடியா

Monday, September 7, 2009

கால் முளைக்கும் பென்சில்கள்

பள்ளிப் பருவத்தில் நாம் அதிகமாகத் தொலைத்தது பென்சிலாகத்தான் இருக்க முடியும். என் ஒன்றாம் ஆண்டு பருவத்தை மீட்டுணர்ந்து பார்க்கும் தருணங்களிலெல்லாம் பென்சிலைத் தொலைத்துவிட்டு வகுப்பில் அழுது கொண்டிருந்த காட்சிகள்தான் அதிகமாக நினைவுக்கு வருகிறது. கணித ஆசிரியர் மாரியம்மா அவர்கள் உள்ளே வந்ததும் முதலில் எல்லோரையும் பென்சிலை எடுத்து மேசையின் மீது வைக்கச் சொல்லி, பென்சில் கொண்டு வராதவர்களைத் தண்டிப்பார். அப்பொழுதெல்லாம் காதைப் பிடித்து திருகுவது உயர்ந்த தண்டனையாக இருந்தது. தினமும் 5 மாணவர்களாவது பென்சிலைத் தொலைத்துவிட்டு அடி வாங்குவார்கள்.
மாணவர்களிடமிருந்து அதிகபடியாகத் தொலைந்துபோகும் பொருளாக ஏன் இந்தப் பென்சில் இருக்கிறது? அதெப்படி பென்சில் இவ்வளவு எளிமையாக நம்மிடமிருந்து தொலைந்து போகிகிறது? பென்சிலுக்குக் கால்கள் முளைத்து ஓடி போய்விடுவதாக நம்பும் மாணவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பென்சிலைத் தொலைத்துவிட்டு வீடு திரும்பிய நாட்களில் என் அம்மா என்னிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.

“எப்படிடா உன் பென்சிலுக்கு மட்டும் கால் முளைச்சி ஓடிருதா?”

அந்தக கேள்விக்கு அடுத்தபடியாக முதுகில் ஒரு அறையும் விழுந்துவிடும். இரவில் கடவுளிடம் கேட்டுருக்கிறேன், ஏன் என் பென்சிலுக்குக் கால்கள் முளைக்கிறதென்று. இன்றும் தெரியவில்லை அதற்கான பதில்.

இப்பொழுது ஆசிரியராக பணியாற்றும் காலத்தில் எப்பொழுதும் வகுப்பிற்குச் செல்லும்போதெல்லாம் கையில் 2 பென்சிலாவது கொண்டு செல்வதுண்டு. ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் போதிக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டால் அது ஆச்சார்யப்படுவதற்கில்லை. எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர், ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பாசிரியராக இருப்பதால், அவர் எப்பொழுதும் ஒரு பெட்டி பென்சில்களுடன்தான் காட்சியளிப்பார். அந்தப் பென்சில்களைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு ஒன்றாம் ஆண்டு மாணவனைப் போல மிகப் பத்திரமாக வகுப்பிற்கு நுழைவார்.


“எங்க சார், இந்தப் பிள்ளைங்க ஒவ்வொருநாளும் பென்சலெ காணாடிச்சிட்டு பாடம் செய்யாம உக்காந்துருக்காங்க. என்னாத்தான் பண்ண முடியும் சொல்லுங்க? நம்பளே பென்சில் வாங்கிக் கொடுக்கனும் போல, அப்பத்தான் முடியும். அதான் கொடுத்துட்டு உடனே வாங்கி வச்சிக்குவேன் சார்”


மாணவர்களுக்குப் பென்சிலைத் தொலைப்பது ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டிருக்கிறது. பென்சிலைத் தொலைக்காமல் வீட்டிற்குச் செல்லும் மாணவர்கள் அனேகமாக மேல்வகுப்பு மாணவர்களாகத்தான் இருக்க முடியும். ஒன்றாம் – இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வீடு திரும்புகையில் ஒரு பென்சிலையாவது விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். கால் முளைத்த அவர்களின் பென்சில்கள் வகுப்பறை முழுவதும் பள்ளிக்கூடம் முழுவதும் சுற்றி அலைந்துகொண்டிருக்கக்கூடும்.


“சார் என் பென்சிலே காணம் சார். இங்கத்தான் வச்சேன்”


“சார் இவன் என் பென்சில எடுத்துக்கிட்டுக் கொடுக்கவே மாட்டறான் சார்”


“சார் என் பென்சிலெ எடுத்துக்கிட்டு அவனோட பென்சிலுன்னு சொல்றான் சார்”


வகுப்பினுள் நுழைந்ததும் இப்படிப்பட்ட பென்சில் புகார்கள் ஓயாமல் வந்துகொண்டே இருக்கும். பல மாணவர்கள் ஆசிரியர் மேசைக்கு முன் வந்து நின்றுவிடுவார்கள். குழந்தைத்தனமான சொற்களுடன் தன் பென்சில் தொலைந்த கதையை அல்லது திருட்டுப் போன பென்சிலைப் பற்றிப் பேசத் துவங்குவார்கள். நான் எல்லாவற்றையும் இரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஆக மொத்தத்தில் ஒரு மாணவனின் பென்சில் தொலைந்த சம்பவத்தில் எல்லோருக்கும் பங்கு இருப்பது போல், சம்பந்தபட்ட மாணவன் எல்லாம் மாணவர்களின் மீது புகார் கொடுத்துக் கொண்டிருப்பான். எவ்வளவு திறமையாக விசாரித்தும் பரிசோதனை செய்தும் காணாமல் போன அந்தப் பென்சிலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.


ஒருநாள் அடிக்கடி பென்சிலைத் தொலைக்கும் ஒரு மாணவனின் அம்மா வகுப்புவரை வந்து சண்டையிட்டார். தன் மகனின் பென்சில்கள் எங்கே போய்விடுகின்றன என்றும் யார் அதைத் திருடுகிறார்கள் என்றும் அதட்டிக் கொண்டிருந்தார். மாணவர்கள் மீது திருட்டு என்கிற சொல்பிரயோகம் கடுமையான ஒன்றாகவே கருதுகிறேன். சக மாணவனின் பென்சிலை எடுத்துக் கொள்வதற்குப் பெயர் எப்படித் திருட்டு என்று அவ்வளவு பெரிய சுமையை அவர்களின் சுட்டித்தனத்தின் மீது சுமத்த முடியும்?


என் பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களிடம் இருக்கும் வர்ணப் பென்சில்கள் மீது ஆசை அதிகமாக எழும், வீட்டிற்குச் செல்லும்போது அவனுடைய பெண்சில் பெட்டியிலிருந்து அந்தப் பெண்சிலை எடுத்துக் கொள்வேன். அதற்குப் பெயர் திருட்டு என்று பிறகுத்தான் பெரியவர்களால் கற்பிக்கப்பட்டன. ஆனால் நாம் அதைத் திருட்டு என்று அணுகுவதைவிட அவனுக்கு வேறு வகையில் அப்படிச் செய்வது தவறு என்று வலியுறுத்தி அவன் மனம் பாதிக்காதபடி செய்ய வேண்டும். ஒன்றாம் ஆண்டு மாணவர்களிடையே காணாமல் போகும் பென்சில் சம்பவங்களுக்கு அதை ஒரு திருட்டு என்று அவர்களின் குழந்தை உலகத்தைச் சிதைப்பதைவிட, காணாமல் போகும் பென்சில்களுக்குக் கால்கள் முளைத்துவிட்டது என்று சொல்லி அவர்களின் உலகத்தைக் காப்பாற்துவதே மேல் என்று நினைக்கிறேன்.


இன்றும் வகுப்பில் ஒரு பென்சில் காணாமல் போய்கொண்டே இருக்கின்றன. அந்தத் தொலைந்தபோன ஒவ்வொரு சம்பவங்களுக்கும் நான் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது, மாணவர்கள் அதை ஒரு திருட்டு என்று உணராதவரை அவர்களின் உலகத்தைக் காப்பாற்ற முயன்று வருகிறேன்.
நம்முடைய பால்ய வயதில் நாம் தொலைத்த பென்சில்களெல்லாம் இப்பொழுது திரும்ப கிடைத்தால் என்ன நேரும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கு அருகில் ஒரு பென்சில் மலை உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


“சார் என் பென்சிலுக்குக் கால் முளைச்சிருச்சி சார்” என்று சொல்லும் ஒரு மாணவனைப் பார்த்து என்ன சொல்லப் போகிறீர்கள்?


“டேய், அது இல்லைடா, எவனோ உன் பென்சிலே திருடிட்டாண்டா” என்று சொல்லப் போகிறார்களா? அவர்களின் கால் முளைத்த உலகத்தை உடைக்காதீர்கள்.


ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா


நன்றி : யுகமாயினி ஆகஸ்ட்

Friday, September 4, 2009

சரியாக இசை கேட்பது பற்றியான உயிர்மை விவாதங்களை முன் வைத்து ( இசை ஒழுங்குகளின் உச்சமும் பாமரர்களும்)

கடந்த உயிர்மை 3 இதழ்களிலும் இசை கேட்பதன் இலச்சணங்கள் குறித்து அதன் தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதைக் வாசித்தேன். ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகள் பலவிதமான அனுபங்களையும் இசை குறித்த மரபறிவை கடந்த அணுகுமுறைகளையும் கற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம். ஷாஜியின் முழு தொகுப்பையும் தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு மலேசியாவில் அது கிடைப்பதற்கான சாத்தியங்களை இன்னமும் கண்டறியவில்லை. முழு தொகுப்பையும் வாசிக்கும்போது ஒட்டுமொத்தமான இசையைப் பற்றிய விரிவான பார்வையும் பயிற்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

மே உயிர்மை இதழில் பிரசுரமான சாருவின் ‘யுவன் சந்திரசேகருக்கான பதில்” கட்டுரையில் மிகவும் கவர்ந்த இசையைப் பற்றியான பல்வேறு புதிய தகவல்களையும் அதன் இணையத்தள இணைப்புகளையும் கொடுத்திருந்தார். இசையைப் பற்றி ஆரம்ப அறிவுள்ள பலருக்கு மேற்கத்திய, தமிழ்நாட்டைக் கடந்த, பூளோக வரையறைகளைக் கடந்த இசைகளை அறிமுகப்படுத்தும் என்பதிலிருந்து இசையின் பாமர இரசனை குறியீடுகளை உடைத்தெறியும் என்றே கருதுகிறேன்.

கடந்த 6 வருடமாக ரஹ்மான் இசைகளைக் கேட்டு வருகிறேன். அவர் பயன்படுத்தும் இசை கருவிகள், அதன் பயன்பாடுகள், எந்த இடத்தில் எந்த இசைக் கருவியை எவ்வளவு நேரம் பாவிக்கிறார் மேலும் அவரின் இசை குழுவில் உள்ளவர்களின் ஆளுமைகளை எப்படி ரஹ்மான் முக்கியத்துவப்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார் என்று மட்டுமே கவனித்துள்ளேன். அதுவும் அரைகுறையாகத்தான். எடுத்துக்காட்டாக ரஹ்மான் இசையில் வெளிவந்த இந்திய தேசியப் பாடலான “ஜனகனமன” பாடல் ஆகும். பல பன்மொழி இசைகலைஞர்களையும் இசை கருவிகளின் ஆளுமைகளையும் ரஹ்மான் இணைத்துள்ளார். பாலைவன பிரதேசத்தின் பின்னனியில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்களையும் இசை கலைஞர்களையும் ஒன்றாக இணைத்து, ரஹ்மான் கடற்கரை பாறையின் மீது நின்றுகொண்டு பியானோ வாசிக்கும்பொது ஒரு நிமிடம் அழுது கரைந்து அந்த இசையில் சரணடைந்துவிடுகிறேன்.

பிரபல பாடகர்களான லதா மங்கேசஷ்கர், பட்டமல், பிம்ஷேன் ஜோஷி, டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, ஜக்ஜித் சிங், உஷ்தாட் ரஷ்சிட் கான், சுருதி சடோலிக்கார், உஷ்தாட் குலாம், சுதா ரகுநாதன், பாலசுப்ரமணியம், ஹரிஹரன், ஆஷா போஷ்லே, கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னிகிருஷ்ணன், நித்யா மேலும் இசை ஆளுமைகளான புல்லாங்குழல் ( ஹரி பிரசாத்) , சரோட் ( உஷ்தாட் அம்ஜாட், அமான் அலி, அயான் அலி) , கடம் ( விக்கு விநாயக்ராம், உமா சங்கர்) , வீனை (விஷ்வ மோஹன் பாட்), சித்ரவீனை ( ரவிகிரன்), சித்தார்( பண்டிட் கார்த்தி குமார், நிலாட்ரி குமார், வைலின் (குமரேஷ், கணேஷ்) என்று பல இசை கலைஞர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவாக தேசிய பாடலைக் கேட்கும்போது ஆரம்ப இசை இரசனையாளர்களின் உடல் சிலிர்த்து வைக்கும். இசையைப் பற்றி ஆழமான நுட்பமான விரிவான அனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களுக்கு இப்படி உடல் சிலிர்த்து இரசிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியபோவதில்லை.

சாரு குறிப்பிட்டது போல இசை கேட்கும் இலச்சணங்கள் குறித்து பொதுவில் எல்லோர் மேலும் வீசுவது, அல்லது பூளோக வரையறை தாண்டாத இசை பைத்தியங்கள் மீது வீசுவதோ எந்த அளவிற்கு ஏற்புடைமை என்று பார்க்க வேண்டியிருக்கிறது. துறை சார்ந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தி சாரு அவர்கள் பல இசை மேதைகளைப் பற்றியும், அந்த இசை நுட்பங்களைப் பற்றியும் எந்த மாதிரியான இசைகளைக் கேட்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். அது அவரின் இசை குறித்தான தேடலையும், அக்கறையையும் காட்டுகிறது. இருக்கட்டும். வாசிக்க தெரிந்த இசை ரசிகர்கள் அவரின் அக்கறைகேற்றவாறு மொராக்கோவையோ, அசிங்கத்தின் தொட்டிலையோ, ராய் இசையையோ கேட்டறிந்து உணரலாம், இதுவரை கேட்டு வந்த அடித்தட்டு “சுரண்டலின் மன்னன்” தேவாவின் இசையை ஒப்பிட்டு காரி உமிழலாம். ஆனால் பாமரர்கள் என்று பல மேதாவிகளால் வகைப்படுத்தப்படும் படிப்பறிவு இல்லாத மக்களிடம் எப்படி இசை குறித்த உங்களின் ஆளுமைத்தனங்களைப் புகுத்த போகிறீர்கள்? எனக்கு தெரிந்த இங்குள்ள(மலேசியாவில்) ஒரு ஊரில் முன்பொரு காலகட்டத்தில் இளையராஜாவைத் தாண்டாத ஒரு மக்கள் கூட்டம் இருந்தது. அதைப் பற்றி ஒரு சிறுகதையே எழுதலாம்.

அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பத்து டுவா என்று சொல்வார்கள். 9 வயதுவரை நானும் அங்குத்தான் இருந்தேன். மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. தமிழர்கள் ஒரு 30 குடும்பங்கள் அங்கு வசித்தனர். எல்லோர் வீட்டிலும் காலையில் இளையராஜாவின் ஏதாவது ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் அப்பொழுது வானொலி இல்லாததால் ஓசியிலேயே இளையராஜாவின் பாடலை (எந்தவித இசை குறித்தான அறிவும் இல்லாதவனாக) கேட்பேன். நாங்கள் காலையில் பள்ளிக்குக் கிளம்ப துவங்கும் அதிகாலை பொழுதிலே ஏதோ ஒரு வீட்டில், “சென்பகமே சென்பகமே” பாடல் சத்தமாக ஒலிக்கத் துவங்கும். மிகவும் குறுகிய பூளோக வரையறையைக் கடக்காத மக்களின் இரசனை இலையராஜாவின் இசையாகவே இருந்தது.

8 மணிநேர தொழுற்சாலை வேலை முடிந்து, ஒரு இயந்திரத்திற்கு நிகராக நேர்த்தியான இயக்கங்களுடன், சலிப்பூட்டும் கருவிகளுடன் இருந்துவிட்டு வீடு திரும்பும் அவர்களின் உலகை (எந்தவித இசை நுட்பமும், பயிற்சியும் அற்றவர்களான) மகிழ்ச்சிப்படுத்தியது, நிம்மதியை ஏற்படுத்தியது, களைப்பை மறக்கடித்தது தமிழ்நாட்டு கலாச்சார இசைவெளியைக் கடக்காத இளையராஜாவின் இசைத்தான். இது வரலாற்றுக் குற்றம் என்றும், முட்டாள் மக்களின் அறிவின்மை என்றும் பாமரத்தன இசை அனுபவம் என்றும் சில கிறுகெடுத்த ஆளுமைகள் வகைப்படுத்தலாம். தவறில்லை. தொழிலாளர்களால் ஆன (பெரும்பான்மை மலாய்க்காரர்களோடு அடிமைத்தனமான சமரசங்களுக்கும் ஆளாகி) இந்த நிலப்பரப்பில் வாழ்ந்திருந்தால், அவர்களின் வாழ்வை அந்த வாழ்வில் அவர்கள் கேட்டுப் பழகிய ஒரு இசையை அந்த இசை கேட்கும் இலச்சணங்களை என்னனென்று சொல்ல வேண்டும் என்று புரிந்திருக்கும்.

இன்று அந்தக் குடியிருப்பு மக்கள் புலம்பெயர்ந்து நகரத்தில் சிதைந்துவிட்டார்கள். ஆளுக்கொரு திசைகளில் வாழ்வு மாற்றம் ஏற்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தற்செயலாக அவர்களின் யாரேனும் ஒருவர் வீட்டிற்குப் போனாலும், இன்னமும் இளையராஜா பாடலை அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் மடத்தனமா? அல்லது பெரிய பெரிய இசைக்கருவிகளில் பாடல் கேட்காத அவர்களின் இழப்புகளா?குற்றமா? நீங்கள் சொல்லும் இசை பயிற்சிகள் ஒரு பொது புத்தியென நிறுவுவது இன்னமும் தனது இசைக் கலாச்சாரத்தில் ஊறிப் போன, அதிலிருந்து அவர்களை மீட்க முடியாத சாத்தியங்களுடன் அதுனூடே வாழ்ந்து ஒன்றாகிவிட்ட ஒரு சமூகத்த்தினரையோ அல்லது ஒரு வகையினரையோ புறகணிப்பதாகக் கருதப்பட வாய்ப்புண்டு.

சாரு சொல்வதைப் போல பன்மொழி, கலாச்சார இசைகளைக் கேட்டு இரசிக்கும் அல்லது பழகும் ஆற்றலும் வாய்ப்பும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குச் சாத்தியப்படும். ஆனால் அதே வேளையில் இந்த வாய்ப்பு கிட்டாமலே இசைக் கேட்பதை வாழ்வின் ஒரு அனுபனமாகவே கருதி இன்றும் அதிலிருந்து வெளிவராத சிலரை “இசை பயிற்சியில்லாத முட்டாள்கள்” என்று சொன்னால், அவர்களை(அப்படிச் சொல்பவர்களை) எதைக் - - - - - - - - - - - - - - - - - - - - - - - சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் ஒரு சிலர் இசை கேட்பதை ஒரு பொழுது போக்காக பாவிக்கிறார்கள். வாழ்வின் ஒரு தருணமாக, அதிசயமாக இசை கேட்பதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த இசைக் கேட்கும் வாழ்வனுபத்தில்கூட, “பயிற்சி” , வழிமுறை” என்று சொல்லி அவர்களை பயமுறுத்துவது போலவே தோன்றுகிறது. மனிதன் இன்னமும் சுதந்திரமாகச் செய்யக்கூடியவையாக அவனவனின் பொழுது போக்குகளைத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் பயிற்சி, ஒழுங்கு, என்று சொல்லி வைத்தால் எல்லாவற்றிலும் தேர்ச்சிப் பெற்ற தேர்ச்சிப் பெறாத என்கிற அளவுகோல்கள் வந்து சிலரை முட்டாளாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இசையைப் பற்றி தெரிந்து கொள்வதும் இசையைப் பற்றி உரையாடுவதும் என்றுமே தவறென சொல்ல முடியாது. இசையை வெறும் நுகர்வு பொருளாகப் பார்க்கும் மனிதர்களும் நியாயமானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இசை பல்வேறு மனிதர்களால் பலவகையில் புரிந்து கொண்டும் அனுபவிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அந்த நிதர்சனத்தில் தற்போதையை “இசை ஒழுங்குகளை” கொண்டு அவர்களை இசைபாமரர்கள் இசை ஆளுமைகள் என்று வகைப்படுத்துவதுதான் அறியாமை என்று நினைக்கிறேன்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com