காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து பரவவிடும் தகரங்கள், பாதி நீரை நிரப்பிக்கொண்டு பல நாட்களாக இடைச்சட்டத்திலேயே உட்காந்திருக்கும் குவளை, என அனைத்தையும் வெகுநேரம் பார்த்திருக்க முடியவில்லை. எல்லாமும் காலத்தை உறிஞ்சி தனக்குள் நகரவிடாமல் தடுத்து வைத்துக்கொள்கின்றன.
இன்று இந்த வீட்டைக் காலி செய்தாக வேண்டும். தரையில் நான் படுத்திருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தள்ளி சன்னல். கதவு திறந்தபடியிருக்க வெளியில் வீடுகளிலிருந்து திட்டு திட்டாக வெளிச்சம் ஒழுகியபடியே இருந்தது. வழக்கமாக மூன்று மாதமொருமுறை இப்படி வேறு வீடு தேடி அலைந்துகொண்டிருப்பது இந்தச் சிறுநகரத்தில் என்னைப் போன்ற குடும்பமற்ற மனிதனுக்கு மரபார்ந்த விசயம். அந்த மரபை உடைக்க முடியாமல் இடம்பெயர்ந்து இங்கு வந்து சேரும்போது நகரம் மழைக்காலத்தில் கரைந்திருந்தது.
இன்று இந்த வீட்டைக் காலி செய்தாக வேண்டும். தரையில் நான் படுத்திருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தள்ளி சன்னல். கதவு திறந்தபடியிருக்க வெளியில் வீடுகளிலிருந்து திட்டு திட்டாக வெளிச்சம் ஒழுகியபடியே இருந்தது. வழக்கமாக மூன்று மாதமொருமுறை இப்படி வேறு வீடு தேடி அலைந்துகொண்டிருப்பது இந்தச் சிறுநகரத்தில் என்னைப் போன்ற குடும்பமற்ற மனிதனுக்கு மரபார்ந்த விசயம். அந்த மரபை உடைக்க முடியாமல் இடம்பெயர்ந்து இங்கு வந்து சேரும்போது நகரம் மழைக்காலத்தில் கரைந்திருந்தது.
எண் 03-02- 01 பாயா நாகூ அடுக்குமாடி
இங்கு வந்து 2 மாதம் ஆகிறது. கார் கழுவும் வேலையில் இருந்தவரை மலாய்க்காரக் கம்பத்தில் நாட்கள் கழிந்தன. சாப்பட்டுக் கடையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அப்பு மாமா இங்கு வந்து விட்டுப் போனார். அவர்தான் இந்த வீட்டையும் பார்த்துக்கொடுத்தார். இந்த நகரத்தில் தனி வீடு எடுத்து தங்குவது செலவைச் சமாளிக்க முடியாது. ஆகையால் இரண்டே அறைக்கொண்ட அடுக்குமாடி வீட்டைத் தேடி அலைந்து மாமா பிடித்துக் கொடுத்தார். பெரும்பாலும் இங்கு வேலைக்கு வருபவர்கள் தங்கும் இடமாகத்தான் அது இருந்தது. நான் தங்கியிருந்த வரிசையில் எல்லோரும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள். பங்களாதேசக்காரர்களை எல்லாம் இடங்களிலும் பார்க்க நேர்ந்தது.
1
வீட்டுக்கு வந்த முதல் நாள், முன்சுவரில் வரிசை பிசகாமல் காய்ந்துகொண்டிருந்த துணிகளில் அன்று முழுவதும் ஒரு வாடை வீசிக்கொண்டே இருந்தது. அந்த வாடை எப்பொழுதும் நீக்க முடியாதது. சுவரில், கதவில், நாசித் துவாரத்தில் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருந்தது. மேல்மாடியில் காயப்போட்டிருந்த துணிகளிலிருந்து சொட்டுச் சொட்டாக விழுந்துகொண்டிருந்த நீர்த்துளி காலத்தைப் பற்றிய நினைவை மறக்கும்படி செய்தது. அதை அதன் ஒழுங்கை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தால் காலம் தப்பிவிடும்.
முதல் நாள் என் மீது கவிழ்த்திருந்த கசப்பையும் அந்நியத்தன்மையையும் எப்படிக் கடப்பது எனத் தெரியாமல் முன்கதவைச் சாத்தாமல் தரையில் படுத்துக்கிடந்தேன். வீட்டைக் கடக்கும் உருவங்கள் ஒவ்வொன்றாகத் தலையை உள்ளே நுழைத்துப் பார்க்கின்றன. அவர்களின் உடலில் பரவியிருக்கும் கதக்கதப்பு பகல் சூட்டோடு கலந்து நாசிக்குள் இறங்குகின்றன. என்ன கடுமையான வெயில்? வியர்த்த உடலுடன் நாக்கில் உறைந்து கிடக்கும் ஈரத்தை மேல்வாயில் வைத்து தேய்த்துவிட்டு சுற்றிலும் பார்த்தேன். கொண்டு வந்திருந்த பொருள்கள் அவிழ்க்கப்படாமல் அப்படியே கிடந்தன. வீடு முழுவதும் சூன்யம். எழுந்து நடக்கலாம் என்றால் உடலில் தெம்பில்லை. நான் இப்படி வெறுமனே பொழுதைக் கழித்தால் அப்பு மாமாவுக்கும் அம்மாவுக்கும் பிடிக்காது. வீட்டைச் சுத்தம் செய்தாக வேண்டும். அவர்கள் எந்த நேரமும் வீட்டிற்கு வரக்கூடும். அதுவும் அப்பு மாமா சட்டென வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டிருப்பார். அவர் எப்படி எந்தக் கணம் எங்கிருந்து புறப்பட்டு வருவார் எனத் தெரியாது. பழைய வீட்டை நான் காலி செய்துவிட்டு அங்கிருந்து ஓடி வர அவர்தான் காரணம்.
சன்னலை அடைத்துவிட்டு அங்கும் இங்குமாகக் கிடந்த பொருட்களையெல்லாம் எடுத்து அடுக்கி வைத்தேன். ஒவ்வொரு பொருளையும் அசைக்கும்போது அதில் பழைய வாடகை வீடுகளின் வாடை வீசுகின்றது. மூக்கைப் பொத்திக்கொண்டு அந்தக் கொடூரத்திலிருந்து என்னை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். பழைய குப்பை வீச்சம் அடிக்கின்றது. ஒவ்வொன்றும் ஒரு குப்பையான வாழ்வு. கண்ணாடி குடுவைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பழுப்படைந்த போர்வை, மெலிந்த மெத்தை என அனைத்திலும் ஒரு சோர்வான வாடை. பகல் பொழுதில் தூங்கிக் கழித்த பொழுதுகள் மிச்சமாகத் தேங்கி நாற்றமடித்து அழுகிய வாடையைப் பரப்பிக்கொண்டிருந்ததை என் போர்வையை எடுத்து உதறும்போது உணர்ந்தேன். எல்லாவற்றையும் எப்படி ஒழுங்குடன் அடுக்குவது எனத் தெரியாமல் தோன்றும் இடத்தில் வைத்துவிட்டு மேல்சட்டத்தைக் கவனித்தேன். குறுக்கு வெட்டாக சாயம் வெளுத்த கட்டைகள்.
கதவு தட்டப்படுகிறது. கட்டாயம் அப்பு மாமாவாகத்தான் இருக்கும். கதவைத் திறப்பதற்கு முன்பே அவர் உள்ளே இருந்தார். அவர் அப்படித்தான். சாதூர்யமான ஆள். கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு என்னை உற்றுக் கவனித்தார். அவருக்கு தெரியும் என்னை உற்றுக் கவனித்தால் எனக்கு வேலை ஓடாது என்பது. கைக்கால்கள் நடுங்கத் தொடங்கிவிடும். மனம் பதற்றமடையும். அப்பு மாமா வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு வெளிக்கதவு அசைந்துகொண்டிருந்தது. மாமாவைக் காணவில்லை. பலமுறை இப்படி என்னைப் பார்த்துவிட்டு பேசாமல் மாமா போய்விடுவதுண்டு. மீண்டும் பொருள்களை அடுக்குவதில் கவனத்தைச் செலுத்தத் துவங்கினேன். பொழுது சோர்வாகி பிறகு மங்கியது.
2
நேரம் நீடித்துச் சென்றதே தவிர அன்று வேலை முடிந்து வந்து குளித்துவிட்டு, படுத்தும் தூக்கம் வரவில்லை. மனதை இலேசாக எத்தனை விசயங்களைத்தான் மறக்க முயல முடியும்? ஒரு பெரும் மௌனம் எனக்குள். சன்னலைக் கொஞ்சம் திறந்துவிட்டாலும் இரவின் இரைச்சல் உள்ளே புகுந்துவிடும். எதிர்த்திசையிலுள்ள மாடியிலிருந்து வரக்கூடிய சத்தம் உச்சக்கட்ட உளைச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக வெத்தலை பாட்டியின் முணுமுணுப்பு. அவர் சுவரோரமாக இருந்துகொண்டு வெற்றிலை மென்ற எச்சிலை துப்பி துப்பி அந்தச் சுவரே வர்ணம் மாறியிருந்தது. ஆகையால் சன்னலைத் திறந்தால் காற்று உள்நுழைவதற்கு முன்பாக அந்த வெற்றிலையால் வெளுத்த சுவரின் வாடை முதலில் வந்து சேரும். நான் படுத்திருந்த மெத்தை முன்பே இந்த வீட்டில் இருந்தது. என்னுடையது படுத்து படுத்து மெலிந்து தரையோடு தரையாகிப் போனதால் இந்த மெத்தையில் படுத்துறங்கத் துவங்கினேன். அன்றிலிருந்துதான் அந்தக் கனவு வந்துகொண்டே இருக்கின்றது.
“எந்தக் கனவுடா?” அப்பு மாமா. எப்பொழுது உள்ளே வந்திருப்பார். எக்கிப் பார்த்தேன். அறைக்கதவும் வெளிக்கதவும் திறந்திருந்தது. மாமாவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே எல்லாம் கதவையும் சாத்திவிட்டேன். இரவு 12க்கு மேல் இங்குத் திருட்டு அதிகம் எனக் கேள்விப்பட்ட பிறகு இப்படியொரு பாதுகாப்பு உணர்வு வந்து தொலைந்தது.
“கனவுன்னா.. அதெ எப்படிச் சொல்றதுன்னே தெரிலெ மாமா, அதுல ஒரு வரிசலே இல்லெ”
மெத்தையில் வந்தமர்ந்ததும் மாமா பக்கத்திலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டார். “டே..கனவுனாலே வரிசைலாம் இல்லாததுதாண்டா. அதுலெ என்ன அதிசயம்?”
அப்பு மாமாவின் கண்கள் உக்கிரமாக இருந்தது. அடுத்து நான் சொல்லப் போகும் வார்த்தையை விழுங்க காத்திருக்கும் தோரணை அவர் முகம் முழுக்கவும் தெரிந்தது. நாக்கை ஈரப்படுத்திவிட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“அது என்னவோ ஒரு கனவு. கனவுலே நான் கனவு காண்றேன் மாமா. இதே ரூம்பு, இதே மெத்தெ, ஆனா அது நான் இல்லை. யாரோ ஒருத்தன். கனவு காண்றான். திடீர்னு எழுந்து, அங்க இங்கன்னு நடக்கறான், சட்டுன்னு எல்லாம் இருட்டுது. அப்பெ ஒருத்தர் உள்ளெ வர்றாரு. அப்பறம் ஏஞ்சிட்டேன்”
மாமா அமைதியாக இருந்துவிட்டு. இன்று அந்தக் கனவை முழுமையாகக் கவனிக்குமாறும் அந்தக் கடைசியில் உள்ளே வரும் அந்த நபரின் முகத்தைச் சரியாக அடையாளம் காணுமாறும் சொல்லிவிட்டுச் சென்றார். இன்றைய கனவுக்காகக் காத்திருந்தேன். தூக்கம் பிடிக்கும் அடுத்த கணம் கனவு ஆட்கொள்ளத் துவங்கிவிடும். எல்லா வாடகை வீடுகளும் ஏதோ ஒரு கனவைக் கொடுக்கிறது. இதற்கு முன்பிருந்த வீட்டில் அடிக்கடி தரையில் வழுக்கி விழுவது போல கனவு கண்டு சட்டென வியர்த்த உடலுடன் எழுந்துவிடுவதுண்டு. கனவுகள் தூக்கத்திற்குள் நடப்பவையா என்ற சந்தேகம் எப்பொழுதும் வருவதுண்டு.
காலையில் எழுந்து வேலைக்குப் போய்விட்டு சரியாக 5மணிக்கு மேல் வீடு வந்து சேர்ந்துவிட்டு வெறுமனே இருப்பவனுக்கு கனவின் மீதான ஆர்வம் வருவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. கனவு காணத் துவங்கியிருந்தேன்.
3
அதே கனவு. அதே அறை, ஆனால் கனவில் இருந்தவன் வேறொருவன். சற்றும் எனக்கும் அவனுக்கும் ஒற்றுமை கிடையாது. முகமும் அதற்குள் இருக்கும் பாவனையும் அவனை வேறுபடுத்தியது. இப்பொழுது நான் கனவுக்குள்ளிருந்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஆகையால் இந்தக் கனவின் குரலைக் கேட்க எல்லோரும் தூங்கியாக வேண்டும். ஆமாம் அன்று அந்த அடுக்குமாடியில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது அவன் என்னிடம் பேசத்துவங்குகிறான். நானும் அவனும் ஒரே அறைக்குள் வெவ்வேறு திசையில் இருந்தோம். அவனுடைய நிஜத்திற்குள் நான் கனவாக இருந்தேன். ஆகையால் அவனால் என்னைத் தீண்ட முடியாது. என் கழுத்தை நெறிக்க முடியாது. அவனால் என்னுடன் உரையாட மட்டுமே முடியும். ஆகையால் அவன் உதிர்க்கப் போகும் முதல் சொல்லுக்காகத் துணிவுடன் காத்திருந்தேன். இரண்டு வெவ்வேறான காலத்தில் நிகழ்ந்த மூச்சிரைப்புகள் இப்பொழுது ஒரே சமயத்தில் கேட்கிறது.
முன் கதவின் ஓரமாக யாரோ வந்து நிற்கிறார்கள். கட்டாயம் கனவுக்குள் நான் கண்ட அந்தப் புதிய நபராகத்தான் இருக்கும். அவன் வந்து நுழையும் கணம் கனவு முடிந்துவிடுமே. நானே பேசிவிடலாம் என என்னைத் தயார்ப்படுத்தினேன். ஆனால் அவனே தொடங்கினான். ஆனால் அவன் வாய் அசைவது மட்டுமே தெரிகிறது. சொற்கள் இல்லை. அல்லது சொற்களுக்கு ஒலி இல்லை. படாரென கதவு திறக்கப்படுகிறது. அந்த நபர் உள்ளே நுழைகிறார். எனக்கு எதிரில் அமர்ந்திருந்தவன் மிரள்கிறான். அவன் கண்களில் ஒரு மிரட்சி. அறை இரண்டாகப் பிளக்க, கனவு தீர்ந்து போகிறது. சொட்டு சொட்டாக எல்லாமும் கரைய இப்பொழுது வெளிச்சம். யாரோ சன்னலைத் திறந்து கொண்டிருந்தார்கள். அபாரமான வெளிச்சம் கண்களைக் கூசியது.
4
அந்தப் பங்களாதேசக்காரன் உள்ளே நுழைவான் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு காலி குவளை. கொஞ்சம் சுத்தமான நீர் வேண்டும் என வந்திருந்தான். இங்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறினான். ஒருவேளை என் கனவுக்குள் வரும் அந்த நபர் இவனாக இருக்குமா எனச் சந்தேகித்தேன். இல்லை. இவன் ஒல்லியாக இருக்கிறான். முகமெல்லாம் வரண்டிருந்தது. என் கனவுக்குள் வருபவன் உள்ளே நுழையும் போது ஏதோ பலசாலியான அடியாள் போல் தெரிகிறான்.
தரையில் அமர்ந்து நீரைக் குடித்துவிட்டு, அந்தக் குவளையை என்னிடம் காட்டினான். 8 வருடமாக இதுதான் என் குவளை என்றான். இங்கு ஒவ்வொருவருக்கும் பெயர் இருப்பது போல அவர்கள் உபயோகிக்கும் எல்லாம் பொருள்களுக்கும் பெயர் இருப்பதாகவும் அதை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதியில்லை என்றான். ஆச்சர்யமாக அவனைப் பார்த்தேன். மெலிந்திருந்தான்.
இந்த வீட்டைப் பற்றி அவன் என்னிடம் சொல்வதற்கு நிறைய இருந்திருக்கக்கூடும். வீட்டைச் சுற்றி மிகக் கவனமாக எல்லாம் பொருள்களையும் பார்த்துவிட்டு என்னிடம் மெதுவாகக் கூறினான். இந்த வீட்டில் முன்பிருந்தவன் தற்கொலை செய்துகொண்டான் எனவும் 2 ஆண்டுகள் இங்கு யாரும் வருவதில்லை எனவும் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான். ஒரு தற்கொலை செய்து கொண்டனின் வீட்டிற்குள் இருப்பதை நினைத்தவுடன் பயம் அதிகரிக்கத் துவங்கியது. இறந்தவர்கள் கொலை செய்வார்களா? அறை முழுவதும் இத்தனை நாள் மீதமாக வீசிக்கொண்டிருந்த வாடை அவனுடையது எனத் தெரிந்துகொண்டேன். செத்தவனின் வாடையை நுகர்வதற்கு என்னால் எப்படி முடிந்தது?
அப்பு மாமா வந்ததும் முதலில் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டேன். இன்னும் 2 மாதமோ அல்லது 3 மாதமோ மீண்டும் இந்த வாடகை வீடு காலியாகக்கூடும். அப்பொழுது எனக்கு பிறகு இங்கு வரும் இன்னொருவன் இரண்டு கனவுகள் காணக்கூடும். ஒன்றில் கட்டாயம் நான் இருப்பேன். ஏதோ ஒரு கனவில் சிக்கிக் கொண்டது போலவே உணர்வு. இந்த வீடு கனவுகளால் சூழந்திருக்கிறது. யாரோ இங்குக் கனவுகளை விட்டுச் செல்கிறார்கள். சற்று முன்பு வந்த அந்தப் பங்களாடேஷ்காரன் கூட அவனுடைய ஏதோ ஒரு பயங்கரத்தை இங்குக் கனவாக விட்டுச் சென்றிருக்கக்கூடும்.
5
வெகுநேரத்திற்குப் பிறகு உறக்கம் இலேசாகத் தட்டியது. அதற்குள் தூரத்தில் ஏதோ ஒரு வாடை என்னை நெருங்கி வருவது போல இருந்தது. யாரோ எதையோ கையில் வைத்துக் கொண்டு நம்மை நெருங்கி வந்தாலோ அல்லது கடந்து போனாலோ நாசியை எக்கித் தொடுமே வாசம்? அது போல இருந்தது. அந்த வாடை பலநாள் துவைக்காத ஒரு சட்டையினது என்பதை என்னால் உணர முடிகிறது. கட்டிலுக்கு அருகாமைவரை வந்த வாடை சட்டென காணாமல் போகிறது. அநேகமாக நான் உறங்கியிருக்கக்கூடும். இப்பொழுது ஒரு கனவுக்குள்ளிருந்து நான் பேசிக்கொண்டிருக்கலாம்.
ஒரு வெளுத்த முகம் உடையவன் எனக்கருகில் அமர்ந்திருக்கிறான். அவன் கண்கள் கலங்கியிருக்கிறது. என்னைக் கோபமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். நான் கையில் தடிமனான கயிற்றை வைத்துக்கொண்டிருக்கிறேன். அவன் கைகள் மேல் சட்டத்தைக் காட்டுகிறது. சட்டம் மிகவும் உறுதியானது என நானே சொல்லிக்கொள்கிறேன். பிறகு இருள் எங்கும் பரவியபடியே இருக்க, வீட்டினுள் ஒருவன் நுழைகிறான்.
“ஐயா கழுத்து வலிக்குதா?
அம்மாவின் குரல். மிக சமீபத்தில். சட்டென விழிப்பு. உடல் வியர்த்திருந்தது. அதிகாலை மணி 4 இருக்கும். விளக்கைத் தட்டி சூழலை அவதானிக்க விருப்பமில்லை. இருளில் அமர்ந்திருந்தேன். அடுக்குமாடி மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. முதல் ஒலி அநேகமாக இந்தச் சூழலை அச்சுறுத்தக்கூடும். மீண்டும் படுத்துக்கொண்டேன்.
6
அப்பு மாமா வந்திருந்தார். அவரிடம் கனவைப் பற்றி மீண்டும் புகார் செய்தேன். அவர் மிகவும் அலட்சியமாக என்னைப் பார்த்தார்.
“பங்களாடெஷ்காரன் எவனாச்சம் வந்தானா? இங்க உள்ளவனுங்ககிட்டலாம் பேசாதெ. புரியுதா?” அப்பு மாமா கதவைத் திறக்கும்போது அடுக்குமாடி வரந்தா மதிய வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. ஊர் சுற்றி. ஊர் ஊராக அலைந்து திரிந்து கிடைக்கும் இடம் சொர்க்கம். ஈப்போ, கோலாலம்பூர், அலோர் ஸ்டார் என நகரம்தோறும் அவருக்கு ஆள் இருக்கிறது. ஒவ்வொரு நகரமாகச் சென்று தங்கிவிட்டு வேலைக்கு ஆள் பிடித்துக்கொடுத்துட்டு வந்துவிடுவார்.
அப்பாவின் மரணத்திற்குப் பிறகுத்தான் எனக்கு கல்வியில் நாட்டம் போய்விட்டது என எல்லோரிடமும் பொய் சொல்லி சலித்துவிட்டது. பாடப்புத்தகத்தைக் காணாமல் ஆக்குவதற்காக அதைக் காட்டில் தூக்கிவீசிவிட்டு அதன் மேல் மூத்திரம் பெய்துவிட்டு வந்த கதையை அப்படியே எனக்குள் ஒளித்துக்கொண்டது இப்பொழுது திடீரென கணமாக இருக்கிறது. யாராவது வந்தால் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் எனத் தோன்றியது. எனக்குள் இருக்கும் கணத்தின் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். யாருக்கும் தெரியாமல் இந்தக் கனவிலிருந்து தப்பித்துப் பறந்துவிட வேண்டும். ஏதோ ஒரு கனவுக்குள் இருப்பது போலவே பிரமையாக இருந்தது. எழுந்து நின்று வெளியே பார்த்தேன். துவைத்த சட்டைகளின் வாடை. ஒவ்வொருவரும் பலமாதிரியான சவர்க்கார தூளைப் பயன்படுத்துவது தெரிந்தது. எல்லாமும் கலந்த ஒரு வாடை. தூக்கிப் போட்டது.
7
இத்தனை நாள் கண்டதெல்லாம் கனவு எனச் சொன்னால் எப்படி அதை ஏற்றுக்கொள்வது? இன்று கனவில் நான் சந்தித்த அவன் என்னை உடனே இங்கிருந்து வெளியேறும்படி கத்தினான். இது அவனுக்கு மட்டும் உரிய கனவு என்பது போல வாதாடினான். அவனின் கண்களும் முக உக்கிரமும் அதைத்தான் வெளிப்படுத்தியது. அப்படியே தூங்கி எழுந்ததும் குளித்துவிட்டு வெளிக்கதவைத் திறந்தேன். கனவில் அவன் முணுமுணுத்தது மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்பு மாமா வந்திருந்தார். என்னையே ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு உள்ளே வரும்படி அழைத்தார்.
“தம்பி இது கனவில்லெ. இந்த வேலைய ஒழுங்கா செய்யு. எங்கயும் ஓட நெனைக்காதெ. புரியுதா? போன வாடகை வீட்டுலெ என்ன செஞ்சன்னு தெரியுமா?”
அப்பு மாமா ஏதோ ஒரு கனவில் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என மட்டும் புரிந்தது. அவர் பேசுவது வேறு யாருடனோ. என்னுடன் இல்லை. நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
“டேய்.. சொல்றது வெளங்குதா? சும்மா கனவு அது இதுன்னு கற்பனை பண்ணிக்கிட்டெ இருக்காதெ. நான் அடிக்கடி வர முடியாது. இந்த வேலையாவது ஒழுங்கா செய்யு. இராத்திரிலே தூங்கறதுக்கு முன்னெ சாமி கும்புடடான்னா கேக்க மாட்டறெ. என்னாடா நீ. எத்தன வீடு மாத்தி மாத்தி உன்னெ தங்க வைக்கறது. சரி பாத்துக்கெ. கனவு அது இதுன்னு எனக்கு போன் பண்ணி பொலம்பாதெ. அப்படிலாம் ஒன்னும் இல்லெ. எல்லாம் பொய்”
அப்பு மாமா சென்ற பிறகு வீடு முழுக்க புதியதொரு வாடையை நுகர முடிகிறது. வாடை மற்ற வாடைகளைத் தின்று தீர்த்துவிட்டு அது மட்டும் தனியாகப் பரவிக் கிடக்கிறது. இப்பொழுது கனவுக்குள் நுழைந்த அந்த நபரின் வாடையாக இது இருக்கக்கூடும். அப்படியென்றால் கனவில் தினமும் புதியதாக உள்ளே நுழைந்து கனவைக் களைப்பது அப்பு மாமாவாகத்தான் இருக்கும். வாடகை வீட்டையும் பார்த்துக்கொடுத்துவிட்டு, இப்படி இரகசியமாக என் கனவுக்குள் நுழைந்து அத்துமீறுவது எவ்வளவு கொடூரமானது? அப்பு மாமா சதிக்காரர். என் பொழுதுகளை வீணடிப்பவர். இவர்தான் இத்தனை நாள் என் கனவுகளை நாசப்படுத்தியவர் எனத் தெரிந்துகொள்ள முடிந்தது.
என் அனுமதியின்றி அடிக்கடி என் கனவுக்குள் நுழைந்துவிடும் அப்பு மாமாவை எதாவது செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். என் கனவின் இறுதி கட்டத்திற்குள் நுழையும் அவருக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. கனவுக்குள் அவரால் என் கழுத்தை நெறிக்க முடியாது, என்னாலும் அவரின் கழுத்தைத் தொடக்கூட முடியாது. என் உடலைக் காயப்படுத்த முடியாது, என்னால் அவரின் மீது சிறு கீறலையும் உண்டாக்க முடியாது. இருப்பினும் இன்று கனவில் அவரைக் கொன்றாக வேண்டும். எப்படிக் கொல்வது? ஒன்று நான் கனவுக்குள் இறந்துவிடுவதன் மூலம் அந்தக் கனவை இல்லாமல் ஆக்க முடியும். அப்படிச் செய்ய நேர்ந்தால் அப்பு மாமா என் கனவுக்குள்ளே செத்துப் போவார். கனவைக் கொல்வதன் தந்திரம் எனக்கு தெரிந்திருக்க வேண்டும். கனவு உற்பத்தியாகும் தருணம் நான் வேறு ஒரு கனவுக்குள் இருந்தால் என்னை நான் மீட்க முடியுமா எனச் சந்தேகிக்கிறேன். எப்படியாவது அவரை மறுநாள் முதல் என் கனவின் நீட்சியைச் சிதைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அநேகமாக இந்த முடிவுகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டிருக்கும் இந்தக் கணம் என்னுடைய அடுக்குமாடி வீடான எண் 03-02-01-இல் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கொடூரமான கனவாகக்கூட இருக்கலாம். நாம் எல்லோரும் நான் விட்டுச் சென்ற ஏதோ ஒரு கனவுக்குள் இருப்பதாகத் தோன்றுகிறது.
8
இன்று இப்படியொரு கொலை நடக்கும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. அப்பு மாமாவின் வாடையை நான் இலேசாக நுகர தொடங்கியதும், உடனே ஆயர்த்தமானேன். அவரின் அத்துமீறல் என்னை மட்டும் அல்ல இங்கே இதற்கு முன் தூக்குப் போட்டு இறந்தவனையும் ஆக்கிரமித்துள்ளது. இது கொடூரம். இதை உடனே சரி செய்ய வேண்டும். என்னிடம் ஆயுதம் இல்லாதபோதும் எப்படியும் அப்பு மாமாவைக் கொன்றுவிட முடியும் என நம்பினேன்.
நானும் அவனும் அதே அறைக்குள் ஒன்றாகக் கிடந்தோம். அபாரமான அமைதி. அவன் மீண்டும் அதே போல ஒலியற்ற சொற்களின் மூலம் பேசத் துவங்கியிருந்தான். அவனின் உடல்மொழி எனக்கு இன்னும் நெருக்கமாகியிருந்தது. அதே இருள் மெல்ல வளர்ந்துகொண்டிருந்தது. நான் பிரக்ஞையை இழக்காமல் இருக்க வேண்டும். நாசிக்குள் புதிய வாடை தென்படத் துவங்கியது. அவனுடைய துவைக்காத வியர்த்த சட்டையின் வாடையை இன்னொரு புதிய வாடை ஆக்கிரமித்தது. அப்பு மாமா வந்து கொண்டிருக்கிறார். அவரை இன்றோடு கொலை செய்தாக வேண்டும். இனி என் கனவுக்குள் அவருக்கு இடமில்லை. கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. அந்த நபர் உள்ளே வந்தார்.
நான் விழிக்கக்கூடாது. கனவிலிருந்து எழுந்திருக்கக்கூடாது என என்னை அழுத்திப்பிடித்துக்கொண்டேன்.
2 comments:
நீங்க இணைச்சிருக்குற படத்தை பார்த்ததுமே இது எந்த மாதிரியான பதிவுன்னு தெரிஞ்சுபோச்சு... நான் இந்த ஆட்டத்துக்கு வரலைடா சாமி...
be cool. patatram vendaam
Post a Comment