Wednesday, April 29, 2009
படைப்பாளிகள் எஸ்.ராமகிருஷ்னன் ஜெயமோகன் போன்றவர்களைக் காக்கா பிடிப்பது எப்படி?
எது காக்கா பிடிப்பது என்று சொல்ல முடியும்?
நாம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள காக்கா பிடிக்கலாம். அந்தச் சமயத்தில் சில உத்திகளைக் கையாள வேண்டும் போல. அந்த நமது காக்கா பிடிக்கும் படலத்தில் பலியாகப் போகும் நபரிடம் இல்லாத ஒன்றையும் இருப்பது போல புகழ்ந்து தள்ளுவது அல்லது இருப்பதை மிகைப்படுத்தி சொல்வது, கூடுமான வரை அவரை உச்சத்தில் வைத்துப் புகழ்வது. (உச்சம் என்கிற அளவுகோல் மிக முக்கியம்). சும்மா சாதரண புகழ்ச்சிக்கெல்லாம் சிலர் மயங்கிவிட மாட்டார்கள்.
மேலும் அவரின் மூலம் உங்களை நீங்கள் முன்னிறுத்த வேண்டுமென்றாலும் காக்கா பிடிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு மனத்திருப்தியோ அல்லது ஆதாயமோ இருப்பதற்கு வாய்ப்புண்டு.
ஒரு சிலர், அவரை அழைத்துக் கொண்டு போய் அவர் குடிகாரராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மலிவான மது முதல் உயர்தர மதுவரை வாங்கிக் கொடுத்து அசத்தி பேர் போட்டுக் கொள்ளலாம்.
முடிந்தால் அவரை அழைத்துக் கொண்டு போய்(சொந்த வாகனமாக இருந்தால் நீங்கள் காக்கா பிடிப்பது அவ்வளவு வெளிப்படையாக தெரியாது) நகரத்தையோ அல்லது புராதான இடங்களுக்கோ செல்லலாம். அவர் உங்களின் நேர விரயத்தையும் தியாகத்தையும் கண்டு மனம் நெகிழும் தருணத்தில் உங்களின் காக்கா பிடிக்கும் படலம் வெற்றி அடைந்துவிட்டது என்று அர்த்தம். சிலர் இப்படித்தான் காக்கா பிடித்துக் கொண்டு அலைகிறார்கள். மிகவும் நுட்பமான முயற்சிகள் இது. யாரும் எளிதில் கண்டு கொள்ளாதவாறு.
நானும் அனுதினமும் பெரும்பாடுபட்டும் பல கோயில்கள் ஏறி இறங்கி, அங்கபிரதேசம் செய்து, இன்றைய தமிழ் கூறும் நல்லுலகின் முக்கிய படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களிடம் மின்னஞ்சல் மூலமாக என்னால் முடிந்தவரை இறை அருளால் காக்கா பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஜெயமோகன் படைப்புகளின் 2 வருட வாசகன் என்கிற முறையில் அவரின் பெரும்பாலான படைப்புகள் என் ஆழ்மனதைப் பாதித்துள்ளன. பலமுறை எதையோ தேடி என்னையே கண்டடையும் பெரும் முயற்சிகளில் ஒரு மகா வெளிக்குள் உள்நுழைந்து பிசகி, தொலைந்து பலமுறை காணாமல் போயிருக்கிறேன் ஜெயமோகன் படைப்புகளில்.
மூத்த படைப்பாளியான அவருக்கு, இன்று மிக பரபரப்பாக அச்சு இதழ்களும், இனையத்திலும் இயங்கிக் கொண்டு ஆழமான தத்துவம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவருக்கு, என் மின்னஞ்சல்களெல்லாம் அவர் பதில் போடுவதே நான் செய்த அங்கபிரதேசத்தின் பலன் தான். வேண்டுமென்றால் இந்த வருடம் காவடி எடுத்து 1000 குடங்களை உடலெல்லாம் குத்திக் கொண்டு அடுத்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைக் காக்கா பிடிக்கும் படலத்தில் வெற்றி காணப் போகிறேன். இதனால் எனக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால், அவர்களின் தரமான படைப்புகள் பற்றி எனது மானசீகமான வாசக மனதை பகிர்ந்து கொள்ள ஒரு சிறு சந்தர்ப்பமே. மேலும் கொஞ்சம் அங்கீகாரமும் கிடைத்துவிடும் போல என்கிற சிறு நம்பிக்கையும். என்ன அங்கீகாரம், “ஆமாம் தம்பி! உங்களோட கதைகளையும் இணையத்திலும் அச்சு இதழ்களிலும் பார்த்து படித்திருக்கிறேன்..” என்கிர சொல்தான். இது கெஞ்சல் அல்ல. நான் நேசிக்கும் படைப்பாளிகளின் கவனம் நம் மீது படாத என்கிற எதிர்ப்பார்ப்பு. சில நல்லுள்ளங்கள், என்றுமே யாரையும் சாராத நல்லுள்ளங்கள் வேண்டுமென்றால் இதைக் கெஞ்சல், காக்கா பிடித்தல் என்றெல்லாம் முழங்கி கொள்ளட்டும். கவலையே இல்லை.
இது ஒரு வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் உள்ள உறவு, தொடர்பு. வார்த்தைகளால் பிறரின் படைப்பை பற்றி நேர்மையாக சொல்ல பகிர்ந்து கொள்ள எனக்கு வாய் வரவில்லையென்றால், பிறகென்ன படைப்பாளி?
எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில் மனதைப் பறிக்கொடுக்காதவர்கள் இருப்பார்களா? இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது அவர்களின் வாசக மனம் சார்ந்தது. அப்படி அவரின் எழுத்தில் வசம் கொண்டால்தான் என்ன தப்பு? குற்றசெயலா? எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேரடியாகச் சந்திக்கும் போது அவர் தான் ஒரு எழுத்தாளன் என்கிற கர்வத்தையும் எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நண்பனைப் போல அவரும் கோணங்கியும் புத்தகம் திருடிய கதைவரை பகிர்ந்து கொண்டார்.
இங்கு காக்கா பிடித்தலோ, நரி பிடித்தலோ வெறும் வசை சொல்லாடலாக தேங்கி நின்றுவிடும். மனிதம் மட்டுமே. சக மனிதனிடம் நாம் கொள்ளும் அன்பு, ஒரு படைப்பாளியின் மீது நாம் கொள்ளும் நட்பு, எதிர்பார்ப்பு. . இப்படி வாசக- படைப்பாளி உலகம் தர்க்கத்திற்குள் கட்டுபடாதது.
இறுதியாக எழுத்தாளர் ஜெயமோகனிடம் நான் காக்கா பிடித்து மின்னஞ்சல் அனுப்புவதால், அவர் எனக்கு இலவசமாக ஒரு புத்தகம் போட்டோ, அல்லது தனிபட்ட முறையில் எனக்கு அவர் பணம் அனுப்பியோ, அல்லது இதன் மூலம் எங்களின் பேங்க் பேலன்ஸ் நிரம்பி வழிதலோ, ஆகிவிடாது.
குறிப்பு: சாரு அவரிடம் ஒருமுறை என் கதையை அனுப்பி வைத்தேன். இன்னும் புளோக் அல்லது வலைப்பதிவு இல்லாத காலகட்டம் என்பதால் எப்படிப் பிரரின் பார்வைக்கு மதிப்பீடுகளுக்கு நமது படைப்பைக் கொண்டு போவது என்ற வழி தெரியாததால்தான். பிறகு இப்பொழுதெல்லாம், என் கதைகள் படைப்புகள் யுகமாயினி, உயிரெழுத்து, வார்த்தை போன்ற இதழ்களின் வருவதால், மேலும் திண்ணை.காம், உயிரோசை.காம் போன்ற இணைய இதழ்களிலும் வருவதால், எனகென்று சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருப்பதாலும் என் கதைத் தனியாக பிரதியாக்கி யாருக்கும் அனுப்ப வேண்டும் என்கிர கட்டாயம் எனக்கில்லை. அப்படியே அனுப்பி கருத்து கேட்டால், யாருக்கு அப்படி என்ன முதுகு வலி?
வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
கே.பாலமுருகன்
Monday, April 27, 2009
சக உயிரின் மரணம் - 2003இல் ஒரு பதிவு
என் கைகளில் பாவத்தின் அறிகுறியும் ஜோனியின் மரணவாடையும் நிலைத்த சூன்யமாய் . . . . . கைகள் இரண்டையும் உதறிப் பார்க்கிறேன் ஜோனி நன்றியுணர்வுடன் என் கைகளைப் பற்றிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. ஜோனியின் வாழ்க்கையின் அரைகுறைகள் என் முதுகிலிருந்து பாவ அடையாளங்களாய் விரிந்துகொண்டிருக்கின்றன. இழந்த சக உயிருக்காக 6 வருடம் கழித்தும் நினைவு கூர்கிறேன். நாய் வளர்ப்பது என்பது நமது பால்ய காலத்தின் மிகப்பெரிய கனவு எனலாம். நாம் வளர்த்த செல்ல பிராணிகளின் வழி நமது பால்யத்தை மீட்டுணரலாம். அதிலும் நாய்கள் காட்டும் நன்றியும் அன்பும் , மனிதர்களோடு ஏன் இந்த இனம் மட்டும் இவ்வளவு நெருக்கமான உறவை வெளிப்ப்படுத்திக் கொள்கிறது என்ற வினாவும் எழுகிறது. சிறுவயது முதல் ஏதாவது ஒரு நாயின் மரணம் நம் வாழ்வின் நீங்க மறுக்கும் பதிவுகளாக பின் தொடர்ந்து வந்திருக்கும். நினைக்கும்போது அது வெறும் நாய்களின் பெயர்கள் அல்ல, அதையும் கடந்த நமது அன்பைப் பகிர்ந்து கொண்ட இன்னொரு உயிரின் அடையாளமாகவே நீள்கிறது. அன்புடன் கே.பாலமுருகன் |
“நெளிந்தோடும் பால்யத்தின் மீதான வார்த்தைகள்”

தேட தேட
முடிவில்லா நதியைப் போல
சப்தங்களை இரைச்சல்களை
விழுங்கியபடி
நெளிந்தோடுகிறது
பால்யம்”
பால்யம் தொட்டு, பல கவிஞர்கள் தமது பதிவை கவிதைகளாக கதைகளாக, பத்திகளாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எழுத எழுத மீண்டும் மீண்டும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது பால்யம் மட்டுமே எனக்கூட தோன்றுகிறது. இயக்குனர் சத்ய ஜித்ரே அவர்களின் “பாதேர் பஞ்சாலி” படம், மிக நீள் துயரத்தின் படிமங்களில் மூழ்கி படைப்பின் மிக துல்லிய தருணத்தில் உலகை எட்டிப் பார்க்கும் ஒரு பால்யத்தின் நெடுங்கதைதான்.
அந்தப் பால்ய நதியின் கரைகளில் இன்றும் நமது மூப்பின் பிம்பங்கள் வளர்ந்து விரைத்து, உடைந்து, சிதைந்து, மீண்டு, வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் பால்யத்தின் தரிசனங்களை எவ்வித சலனமுமின்றி நீர் குமிழின் சிறு பிளவுகளைப் போல கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன. அந்தத் தரிசனங்களுக்கு மத்தியில் ஒரு கானல் நீரைப் பார்ப்பது போன்ற மனோபவத்துடன் வாழ்வு தந்திருக்கும் எல்லாம் சம நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சமாளித்துக் கொண்டு பால்யத்தை ஒரு கனவு போல எதிர்கொண்டவர்களாய் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

“மிக சுமாரான
ஓர் உறக்கத்தில்
தொலைந்திருந்தபோது
சடாரென துள்ளிக்குதித்து
மிதக்கின்றன பால்யத்தின்
முகங்கள்”
பால்யத்தைக் கவிதைகளில் கையாளும் ஒரு சில எழுத்தாளர்கள், அதன் குறியீடாக பொம்மைகளைக் கொண்டு வருகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கட்டிலுக்கடியில் கிடக்கும் தலை அறுந்த பொம்மைகளைப் பால்யத்தின் நினைவுகளென சொல்கிறார். அந்த மாதிரி எல்லாரின் வீட்டிலும் தமது பால்யத்தை ஏதோ ஒரு பொருளைச் சேமித்து வைத்திருப்பதன் மூலம் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நான் எனது 6ஆவது வயதில் பயன்படுத்திய பெங்குயின் பொம்மை விளையாட்டு இயந்திரத்தை அப்படியே வைத்திருக்கிறேன். பெங்குயின் பொம்மைகள் அந்த இயந்திரத்தின் மின்சக்தியால் படிகளில் ஏறி சொந்தமாக சறுக்கி விளையாடும். ஸ்காப்ரோ 2-இல் இருக்கும் போது அப்பா வாங்கி வந்து கொடுத்தது.

இப்பொழுது அந்தப் பெங்குயின் பொம்மைகள் சறுக்கி விளையாடும் சக்தியை இழந்து பழுதுபோன பொருளாக கிடக்கின்றன. ஆனால் என்னவோ அந்தப் பொம்மைகளைப் பார்க்கும் போது மனம் தானாக பால்யம் என்கிற படிகளின் வழியாக இறங்கி வந்து என் 5 ஆவது வயதை எட்டிப் பார்க்கத் தூண்டுகிறது.
“பெங்குயின் பொம்மைகள்
போல
இருந்துவிட்டால்
சறுக்காமல் இருந்திருக்கும்
பால்யம்”
இப்படியாகக் கவிஞன் தனது கவிதை மொழியின் வாயிலாக இழந்த பால்யத்தின் கொண்டாட்ட பொழுதுகளை, தோழர்களின் கதறல்களை, தூக்கி வீசி விளையாடிய பொம்மைகளை என்று எல்லாவற்றையும் தமது நிகழ் உலகத்திற்குள் படிமங்களாகக் கொண்டு வந்து மீள் உருவாக்கம் செய்ய முற்படுகின்றான். அவனது பால்யத்தை தமது வார்த்தைகளால் தனக்குள் சேமித்துக் கொள்கிறான். அந்தவேளையில் அவன் முகம் சிறுத்து, கை கால்கள் சுருங்கி, தொலைத்த பால்ய பொம்மையைத் தேடி ஓடுகிறான். ஒவ்வொருவரும் தமது பால்யத்தை நினைவுகூறும் பொழுதெல்லாம் தமக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளை மிகவும் சுதந்திரமாக எல்லார் முன்னிலையும் ஒரு குழந்தையைப் போல பகிர்ந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது.
“குளுகுளு நான்சுவர் அறையில்
காட்சிக்கு வைக்கப்பட்ட
பொம்மைப் போல
படுத்திருக்கும் என்னை
வாநீர் ஒழுக
வீட்டின் வாசல்படியில்
படுத்துறங்கிய
நாட்களுக்குள்
கொண்டு செல்வது
இந்தப் பால்யத்தின்
மீத நினைவுகளே”
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
Friday, April 24, 2009
நகரத்தில் வாழும் கிழவர்கள் - ஒரு நகரமும் சில மனிதர்களும்

“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்”
பழைய சைக்கிள்கடையோரமாக இந்த மாதிரியான பழைய பாடலின் வரிகளைக் கேட்கும் போது சக்கரச் சுழற்சியில் இயங்கிக் கொண்டிருந்த உடல் சட்டென்று சிறிது நேரத்திற்கு நின்றுவிடுகிறது. உள்ளம் அந்த வரிகளைக் கேட்டு என்னவோ செய்துவிடுகிறது. அந்தக் குரலில் தெரிந்த தளர்வும் தனிமையும் மன உணர்வுகளைப் பிளிவது போல் இருக்கும். நிமிர்ந்து அந்தப் பாடல் வந்த திசைகளில் பார்க்கும்போது அது யாரோ ஒரு கிழவராகத்தான் இருக்கும். முகத்தில் சோர்வும் மெலிந்த தேகமாகவும் வெயிலின் உச்சக்கட்ட கொந்தளிப்பில் அமர்ந்துகொண்டு இலேசான சிரிப்புடன் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள்.
“ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலேயே!”

நகரத்தில் மிகவும் நேர்த்தியான ஒரு தற்செயலில் நான் சந்திக்கும் கிழவர்கள் ஏதாவது ஒரு பழைய பாடலுடன்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் அந்தப் பழைய பாடல்கள் ஒரு அங்கமாக இன்றளவும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
நகரம் கொடுக்கும் பயங்கரக் கனவுகளிலிருந்து விடுபட்டு அவர்களைத் தனித்து காட்டுவதே அவர்களின் இந்தப் பழைய பாடல்களின் வரிகள்தான். பெரும்பாலும் கோயிலுக்குச் செல்லும் வழியில் கோவில் மண்டபங்களின் ஓரங்களில் பாலத்தின் அருகேயுள்ள மரத்தடியில் என்று வாழ்விடமின்றி கசங்கிப் போன ஆடைகளுடன் தாடி வளர்ந்து ஒட்டிய வயிறுடன் கிடக்கும் கிழவர்கள்கூட பழைய பாடலின் வரிகளை இராகம் தப்பிப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்கும்போதுதான் குற்ற உணர்வு மேலோங்குகிறது. அதற்கு மேல் அவர்களைக் கடக்க முடியாமல் இயந்திரக் கால்கள் நடுங்குகின்றன.
“இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா”
வாய் முழுக்கச் சிரிப்பாக பசியையும் கடந்த ஒரு ஏகாந்த நிலையில் அமர்ந்து கொண்டு அந்தக் கிழவர்கள் பாடும் வரியில் பழைய நூற்றாண்டையே தூக்கி வந்து நகரத்தில் எறிவது போல இருக்கும்.
கோவில் மணடபத்தின் ஓரங்களில் அமர்ந்திருக்கும் கிழவர்கள்
அந்தக் கிழவர்களின் முகங்கள் யாவும் கடவுளின் சிந்தனையையே மறக்கடித்துவிடும். உறவுகளைத் தொலைத்த பிறகு ஏதோ ஒரு வெயில்பொழுதில்தான் அவர்கள் அங்கே வந்து என்ன செய்வதென்று தெரியாமல் நகரம் கொடுத்த வெறுமையில் பழைய பாடல்களைப் பாடத் துவங்கியிருக்க வேண்டும்.

நிஜ வாழ்க்கை ஏற்படுத்திய மனஅழுத்தத்தில் சுயத்தெளிவை இழந்து கடந்தகால வாழ்வின் மகிழ்ச்சிகளைச் சமாதானத்திற்காக நினைவுகூறும்போதுதான் எங்கிருந்தோ அந்தப் பழைய பாடல்களின் வரிகள் உதிர்ந்து கொள்கின்றன. மீண்டும் மீண்டும் அவர்களின் இளமைகால சாட்சியாக அந்தப் பாடல்கள் மட்டுமே மீதமிருக்கின்றன.
“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா!
வருவதை எதிர்க்கொள்ளடா”
கர்ணன், கட்டபொம்மன், கைலாச சிவன், வைக்குண்டத்தின் பெருமாள், தமிழ்க் கடவுள் முருகர், இராகவேந்திரா, சை பாபா, என்று எல்லாரும் அவர்களின் பாடலில் எங்கோ ஓர் இடத்தில் வந்து போகிறார்கள். சமயச் சொற்பொழிவு கொடுக்கும் ஆன்மீகத் தன்முனைப்பைவிட அவர்களின் பாடல் வரிகள் உள்ளூக்குள் எதையோ தட்டி எழுப்பிவிடும்.
அந்தக் குரல்கள் உச்சரிக்கக்கூடிய சொற்கள் சோகத்தின் இசையாக வந்து உடலையும் உள்ளத்தையும் ஆக்கிரமிப்புச் செய்துவிடுகின்றது. கோவிலின் உள்ளே அமர்வதைவிட வெளியே அவர்களின் பாடல்களைக் கேட்டவாறு அவர்களுக்குத் தெரியாமல் அமர்ந்திருப்பதில்தான் மனம் ஆறுதல் கொள்கிறது.
“கெஞ்சோற்றுக் கடன் தீர்க்க- சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா!”

வீட்டுப் பிரச்சனைகள் தரும் பரபரப்பை தாங்க முடியாமல் போகும் கணங்களில் அந்தக் கோவில் பக்கமாகப் போய்விட்டு வர மனம் தூண்டுகிறது. என்னைப் போல பலர் அந்தப் பாடல்களைக் கேட்பதற்காகவே அங்கு அந்த மண்டபத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். நகர இருளுக்குள்ளிருந்து அந்தக் கிழவர்களின் பழைய பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.
எப்பொழுதாவது அவர்களை நெருங்கி 5 வெள்ளியோ 2 வெள்ளியோ நீட்டும் போது, பாடலை நிறுத்தாமலே அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் பாடலை உற்சாகம் நிறைந்த குரலுடன் அவர்கள் தொடரும் போது பிறவி புண்ணியம் அடைந்துவிட்டது போல இருக்கும்.
என்னைப் போல பலர் அந்தக் கிழவர்களின் பாடலைக் கேட்டு, பணம் தந்துவிட்டுப் போவார்கள்.
கிழவர்கள் தொலைத்த வாழ்க்கையைப் பற்றி யாருக்குமே அக்கறை இல்லை. நகர மனிதர்களின் இழுப்பறி வாழ்விற்கும் அவர்களின் நகரப் பிரச்சனைகளுக்கும் அந்தக் கிழவர்கள் பாடக்கூடிய பழைய பாடல்களின் வரிகள் ஏதோ ஒருவகையில் ஆதரவாகவும் கணநேர உற்சாகமாகவும் இருந்துவிடுகின்றன.
“பகவானே மௌனமேனோ?
இது யாவும் நீதிதானோ? பரிதாபம் என்னைக் கண்டு
கருணையில்லாததேனோ?”
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
(மக்கள் ஓசை நாளிதழில் தொடராக வந்த கட்டுரை- பகுதி 3)
Thursday, April 23, 2009
எழுத்துலகில் தொடர்ந்து போராடுங்கள்
தங்களின் சிறுகதையை ரசித்துப் படித்தேன். தொடர்ந்து பல நல்ல படைப்புகளை மலேசிய மண்ணில் ஈன்றெடுக்க எனது வாழ்த்துகள்.
அண்மைய காலமாகவே தங்களின் பெயரை கலங்கடிக்கும் வகையில் இணைய ஊடகங்களில் காழ்ப்பு மிகுந்த விவாதங்கள் தலையெடுத்து வருகின்றன. இலக்கிய சர்ச்சை பலருக்கு நன்மையில் முடியும். ஆனால் தனிமனித தாக்குதல்கள் என்றும் யாருக்கு பயனளிக்க போவதில்லை.
தங்களுடைய படைப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்கிற முறையில் ஒரு சிறிய வேண்டுகோள்.
மனம் தளர வேண்டாம். எழுத்துலகில் தொடர்ந்து போராடுங்கள். வீண் வம்புகளில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டாம். தூற்றுவார் தூற்றட்டும்! எழுத்து, பேச்சைவிட கர்மவீரராக இருந்து செயலாற்றுங்கள். உங்கள் மனசாட்சிக்கு சரியென்பதை எண்ணம், எழுத்துகளில் கொண்டுவர துணியுங்கள். பிறரின் தூற்றுதலையும் போற்றுதலையும் உள்வாங்கிக் கொண்டு சுயத்தை இழந்து விடாதீர்கள்!
உங்களை பாலமுருகனாகவே பார்க்கவிரும்புகிறோம். பிறர் வடித்த / வடிக்க நினைக்கும் சிலையாக அல்ல!
என்னைப் போன்ற வாசகர்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்!
வெற்றி உங்களுக்கே....
அன்புடன்,
கி.சதீசு குமார்
மிகுந்த வருத்தங்களுடன்
இனி வருந்துவதாகவோ மன்னிப்பு கேட்பதிலோ அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. எனது எழுத்து சார்ந்து தர்கங்களுக்கு மட்டும் என்னை ஒருமுகபடுத்த அதீத காலம் தேவைப்படலாம். இனி அதற்கான சிந்தனைகள் மட்டுமே எனக்குள்.
மிகுந்த வருத்தங்களுடன்
பாலமுருகன்
Wednesday, April 22, 2009
சிறுகதை-இரவு மணி 12- நான் கேசவன் குன்மா பாதுகாவலர்

“ப்பா. . ப்பா. . ஏஞ்சிருங்க”
“என்னங்க. . என்னங்க. . மணியாச்சு ஏஞ்சிருங்க”
சரியாக இரவு மணி 9க்கு வழக்கமாகி போன அதே அழைப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும். அறையின் இருட்டில் இந்த உடல். 60 வயதான உடல். தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த அறை மணி நேரத்திற்குள் மஞ்சள் கோட்டுடன் கிளம்பி வீட்டுக்கு வெளியில் நின்று கொள்ள வேண்டும்.
“தொற அங்கிள் ஏசிகிட்டே இருக்காரு, எப்பவும் நீங்க லேட்டாம். . சீக்கிரம் ஏஞ்சி கெளம்புங்க. . ப்பா”
பகலெல்லாம் எதாவது ஒரு காரணத்திற்காக அலட்டலே பிரதானமாக திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கும் இந்த வீட்டு வரிசையில் இரவில் எழுந்து பல் துலக்கி கொண்டிருக்கும் வெகுளி அல்லது கிழட்டு காமெடியன் அனேகமாக நானகத்தான் இருக்க முடியும். 10 நிமிடத்திற்கு மேல் குளியலறையில் இருந்து விட்டால், மீண்டும் அதே அழைப்பு. அதே வலியுறுத்தல்கள்.
“என்னாங்க, மணியாயிகிட்டே இருக்கு, இன்னும் என்னா பண்றிங்க? சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க”
எதுவும் பேசுவதற்கு முன்பதாக மனைவி, மேசையில் இரவு உணவைத் தயார்ப்படுத்துவதில் மும்முரமாகிவிடுவாள். அதையும் மீறி பேசிவிட்டால் மீண்டும் அதே வலியுறுத்தல்கள். காது கொடுத்து கேட்கவே வரம்பு மீறிய ஒரு அருவருப்பு. கண்ணாடி கிளாசில் நீர் நிரம்பும் சத்தம்கூட எதையோ அவசரமாக என் மீது சுமத்திக் கொண்டிருப்பது போல இருக்கும். வலுக்கட்டாயமான ஒரு திணிப்பு.
அன்று ரசமாக இருந்துவிட்டாலும் அதையும் கடைசிவரை உறிஞ்சி குடித்துவிட்டுதான் போக வேண்டும். என்றாவது நேரத்தையெல்லாம் சிறிது நேரத்திற்கு மறந்துவிட்டு ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வரவேற்பறையில் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் குலுக்கல் நடனத்தில் இதுவரை மெய்யிழந்து கொண்டிருந்த மகன் திடிர் விழிப்பில் மீண்டும் அதை ஞாபகப்படுத்தி விடுவான்.
“தொற அங்கிளு ஏசிகிட்டே இருக்காரு. . எல்லாரும் மாதிரி அவரும் லேட்டா போவ முடியுமா?. . சீக்கிரம் கெளம்பி போய் நில்லுங்க”
மறுபடியும் ஒர் அமைதி. மீண்டும் குலுக்கல் நடனத்தில் இணைந்து கொண்டிருப்பதற்கான ஆய்த்த நிலை. பிறகு மஞ்சள் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ளும்வரை இருக்கையின் கதகதப்பில் சாவகாசமாய் வசதிகளை அனுபவித்துக் கொண்டிருப்பான். கால்களை கீழே இறக்கி நீட்டிக் கொள்வான், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி உடலை நெளித்துக் கொள்வான். அவனுக்கு மட்டும் இத்தனை வசதியா? அப்படியென்ன ஒரு வசதி தேவைபடுகிறது இவனுக்கு? எங்கே போய் ஒளிந்து கொண்டதோ என்னுடைய முந்தைய அதிகாரங்கள்? வீட்டைச் சுற்றிலும் பார்த்துக் கொண்ட பிறகு மீண்டும் ஒரு தோல்வி.

உனக்கு வயசாச்சிடா கேசவா.. மறந்துட்டியா? இப்ப நீ சின்ன பப்பாடா. . ஒன்ன ஓட ஓட வெரட்டுவாங்க, பால் போத்தைல பால ஊத்தி வாயில திணிப்பாங்க, தொட்டில போட்டு முகத்துல எச்சல் தெரிக்க பாட்டு பாடி தூங்க வைப்பாங்க. . ஒனக்கு வயசாச்சிடா கேசவா. . முதுவுலாம் நோவுமே. . வயிறு எப்பவும் பெரட்டிகிட்டே இருக்குமே. . இன்னும் கொஞ்ச நாள்ல யப்பாடானு சாய போற. . அதுக்குள்ள என்ன அவசரம்? அப்பறம் வசதிலாம் கெடைக்கும், இந்த ஊர்ல இல்லாத கவுர்மெண்டு ஆஸ்பித்திரியா என்ன? ஒனக்கு பக்கத்துல மீட்டர்லாம் ஓடும்டா. . அத நீ கேட்ககூட முடியாது. இருந்தாலும் பரவாலடா கேசவா. . ஒன்னோட ஒடம்பு இப்படி ஆவுதுனு கவலபடறியா? அத மொத விட்டுத் தள்ளு. . அப்பறம் வொயர்லாம் பூட்டி ஒன் ஒடம்ப பாதுகாப்பாங்க குலுகுலு ரூம்புல. . அதுவரைக்குமாது இவுங்க ஒன்ன ஓட ஓட வெரட்டுட்டுமே. . இப்ப என்னா ஆயி போச்சி. . போடா. போடா. . தொற அங்கிள் வரப் போறாருனு அடுத்த வலியுறுத்தல் வர போது”
“மா. . என்னாமா செய்யறாரு இவுரு. . ராஜா மாமா அன்னிக்கே சொன்னாரு. . சும்மா சும்மா தூங்கிகிட்டே இருக்காறாம். . அங்க உள்ளவனுங்களாம் ஏசறானுங்களாம்”
“என்னாங்க. . என்னாங்க. . ரூம்புல இன்னும் என்னா பண்றிங்க. . வாங்க”
“ தோ வந்துட்டேன்” என்றெல்லாம் இந்த குறுகிய அவசரத்திற்கு மத்தியில் நான் அப்படிக் குரல் ஏதும் கொடுத்ததில்லைதான். தூக்கக் கலக்கத்தில் கைகள்கூட பாரமாகி போயிருக்கும். இறுக்கமான ஜீன்ஸ் கால்களைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு எதையோ வலியுறுத்திக் கொண்டே இருக்கும். எழுந்து நிமிரும் போது பிட்டத்திலிருந்து ஒரு பலமான குசு. அந்த ஜீன்ஸ் சிலுவாரிலிருந்து அவை வெளியேறுவதற்கு கொஞ்சம் தாமதமாகும். இரண்டு கால்களையும் அகல விரித்துக் கொண்டு மறுபடியும் மீதமிருந்த குசுவை வெளியேற்றிவிட்டு அறை கதவைத் திறக்கும் போது 5 நிமிடம்தான் இருக்கும் துறை வருவதற்கு.

“ தாங்க, சோத்த டப்பால போட்டுட்டேன். . நீங்க ஒக்காந்து சாப்டுகிட்டு போறதுக்குள்ள விடிஞ்சிரும். . அப்பறம் அவன் கத்திகிட்டே இருப்பான். . .”
அகலமான ஒரு பிளாஸ்ட்டிக்கில் அந்த சோறு டப்பாவும், பெரிய கைலாம்பும், கொசு மருந்து இரண்டு துண்டுகளும், பிறகு கடைசியாக ஒரு தலையணையும் போர்வையும், எடுத்து வலது கையில் பிடித்துக் கொண்ட போது, தோள் பட்டையில் ஒரு வலி. “யப்பாடா. . ராமகிருஷ்ண பகவானேனு அந்த கூஷன் இருக்கையில் சாய்ந்து கொண்டு மகனுடைய கையிலிருந்த தூர இயக்கியைப் பிடுங்கி தொலைக்காட்சி பார்க்க வேண்டும் போல இருந்தது.
அப்படிச் செய்துவிட்டாலும்.. வலியுறுத்தல்களின் முழு சுயரூபமும் அனல் தெறிக்க என் உடலை ஊதி வெடித்துவிடும். யம்மாடியோ. . என்று சிலிர்த்துக் கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் போது எவ்வளவு வசதியாக ஆடிக் கொண்டிருக்கிறது அவன் தலை தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே.
துணு துணுக்கு துணுக்குனு முன்பு ராஜாவுடன் அவன் வீட்டில் அவனுடைய குழந்தைகள் வேடிக்கை பார்க்க தொப்பை வயிற்றுடன் ஆட்டம் போட்டது ஞாபகத்திற்கு வந்ததும், காலுறைகள் போடும் போது சின்னதாய் கால்களில் ஒரு ஆட்டம். “இப்ப என்னா அவசரம்? எவன் குடி முழுகிற போது” என்று அலட்சியமாய் சொல்லிவிட்டு ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் முகத்திற்கு நேராக நீட்டிக் கொண்டு, பங்கரா நடனம் ஆட வேண்டும் போல இருந்தது. துணுக் துணுக்கு துணுக் துணுக்கு தா. . தா. . தா. .” மகன் எட்டிப் பார்த்துக் கொண்டான். மனைவி வீட்டு வாசலுக்கு வந்தாள். நான் தொலைந்து போகும்வரை அங்கிருந்து நீங்கமாட்டாதவளாய் முன் வாசல் கேட்டில் கைகளை வசதியாக வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் வயதுக்கு இந்த வசதி நியாயமானதுதான்.
பக்கத்து வீட்டு மலாய்க்காரன் கார் கழுவிக் கொண்டிருந்தான் மிகவும் வசதியாக. இந்த நேரத்தில் இவன் கார் கழுவுவதற்குக் காரணம் இருக்கலாம்தான். அவனது வீட்டின் உட்புறத்தை எட்டிப் பார்த்துக் கொண்டேன். அந்த வரவேற்பறையிலும் யாரோ தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கலாம்தான் அல்லது தலையை ஆட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லைதான்.
“யா. . கேசவன். . பெர்கி கெர்ஜாகா?” ஒரு நீல வாளியை எடுத்து உயரமாக பிடித்துக் கொண்டு காரின் மேற்பரப்பில் ஊற்றும் போது நான்கு பக்கமும் வழிந்து கொண்டிருந்தது எனக்கென்னமோ அவனது இயலாமைகள் போலதான் தெரிந்தன.

இந்த வீட்டுக்கு வீடு வசதி அனுபவிப்பாளர்களை அனைவரையும் கம்போங் ராஜா ஆற்றில் குவித்து இந்தப் பக்கம் அசுரர்களும் மறுபக்கம் நானும் அந்த மலாய்க்காரனும் நின்று கொண்டு ஊலகுப்பான் பாம்புகளைக் கொண்டு கடைய வேண்டும் போல இருந்தது. இவர்களெல்லாம் எனக்கென்னமோ ஆமைகளாக உருவெடுத்து சோர்ந்து போய் கிடப்பது போலதான் இருந்தது. வசதிகளுக்கு ஓர் அற்புதம் இருக்கிறது போலும். ஆமையைப் போல வசதிகளுக்காக சோம்பலைச் சுமந்து கொண்டு வீட்டின் வரவேற்பறையில் எத்தனை காலம் இப்படி ஊர்ந்து கொண்டிருப்பார்களோ? என்னுடைய மகன்தான் அதற்கும் தலைவனாக இருக்க முடியும்.
“ஐயோ கேசவா என்னா போறாம படறியா?. . ஒனக்கு கெடைக்கலனு போறாம படறியா? வேண்டாம்டா. . விறுவிறுனு வாசல் கேட்டுகிட்ட போய் நில்லுடா. . தொற வரப் போறாரு” முன் வாசல் கதவோடு இலேசாக சாய்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போதுதான் இன்னமும் உடலில் ஏறி அமர்ந்து கொள்ளாத மஞ்சள் கோட் அக்குளில் குவிந்து கிடக்கும். சடாரென அந்தக் கோட்டை உதறிவிட்டு தோளில் சாத்திக் கொண்ட பிறகு, சாய்ந்து கொள்வதற்குள் துறை வந்து கொண்டிருப்பார். அவரும் அந்த மஞ்சள் கோட்டை அணிந்து கொண்டிருப்பார். அந்த மஞ்சள் கோட்டின் பின்புறத்தில் “குன்மா செகுரிட்டி” என்று எழுதப்பட்டிருக்கும். இதுவும் ஒரு வலியுறுத்தல்தான். அந்தக் கோட்டின் நிறம் மஞ்சள் இல்லைதான். ஏறகுறைய என் கண்களுக்கு மஞ்சளாகத்தான் தெரிகிறது போல. எந்தக் கலராக இருந்தால் என்ன? இதுவும் ஒரு வலியுறுத்தல் கலர்தானே.
“வாங்க கேசவன். . கெளம்பலாம் மணியாவுது”
துறையின் ஆர் சி மோடார் அவ்வளவாக எரிச்சலைக் கொடுக்கவில்லைதான். உள்ளேயே மறந்து வைத்துவிட்டிருந்த அந்தக் குறிப்பு புத்தகம், மோட்டாரில் ஏறி அமர்ந்து கொண்ட பின்தான் வலியுறுத்திக் கொண்டிருந்தது.
“தொற தோ இருப்பா. . வந்துர்றேன் புக்க மறந்துட்டேன்” எழுந்து வீட்டுக்குள் புகுந்து அந்தக் குறிப்பு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுவதற்குள் எத்தனை வலியுறுத்தல்கள். . மோட்டாரில் ஏறி அமர்ந்து கொண்ட பின் துறையிடமிருந்து அந்த முணகல். நன்றாக கேட்டது, இருந்தாலும் எந்த அலட்டலும் இல்லாத அமைதி. அந்தப் பக்கத்து வீட்டு மலாய்க்காரன் தொடர்ந்து காரைக் கழுவிக் கொண்டே இருந்தான். குளிரில் அவனுடைய கால்களிரண்டும் நடுங்கி கொண்டிருப்பதை நான் கவனிக்க விரும்பவில்லைதான். உள்ளேயிருந்த அனைத்து வசதிகளும் தற்காலிகமாய் அவன் துறந்திருக்கலாம், பறிக்கப்பட்டிருக்கலாம். எனக்கென்ன?
“இன்னிக்கு உள்ளது எழுதிட்டிங்களா, , அப்பறம் ராஜா ரவுண்டு வரும் போது கத்த போறாரு. .”
புத்தகத்தை இலேசாக திறந்து பார்த்துக் கொண்டேன். முதல் வரி, இரவு மணி 10- நான் கேசவன் குன்மா பாதுகாவலர் பண்டார் முத்தியாராவில் பதிந்து கொள்கிறேன், என்று மிகச் சரியாக தடுமாறிய எழுத்தில் குறிப்பிட்டிருந்தன. இந்தப் பேனாவைப் பிடித்து வடிவமாக எழுதும் நிதானத்தையெல்லாம் நான் கடந்துதான் இருந்தேன். ஒரு ஓலை கொடுத்திருந்தால் எங்களைப் பற்றிய மகாபாரதம் எழுதிவிட்டிருப்பேன். ஓலை உடைந்திருந்தால் சடாரென, கோரை பல்லைப் பிடுங்கி அதில் எழுதிவிட்டு கம்போங் ராஜா பேச்சு வரலாற்றில் இணைந்திருக்கலாம்தான். பிறகு வசதிகளுக்கா சொல்ல வேண்டும்?
அந்த பண்டார் முத்தியாரா வீட்டுக் குடியிருப்பு பகுதிக்குள் துறையின் மோட்டார் நுழைந்து கொண்டிருந்தது. எந்தவித சலனத்திலும் ஈடுபடித்திக் கொள்ளாமல் அந்தச் சில வீடுகள் ஆழ்ந்த இருளுக்குள் உறங்கி கொண்டிருந்தன. மூச்சிரைப்பை பல நாட்களாக கேட்டுப் பழகிதான் போயிருந்தேன். யார் யாரோ சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் காதுக்கு சமிபத்தில்.
“ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ கரட்டா போயிரு கேசவா. . அந்த சீனன்லாம் இல்லாத கொறலாம் சொல்றானுங்க பாத்து” இறுதியான வலியுறுத்தலுடன் நகர்ந்து அடுத்த தாமான்க்குள் மறைந்து கொண்டிருந்தார் துறை என்ற அந்த மற்றுமொரு வலியுறுத்தலின் உருவம் அல்லது வலியுறுத்தபடுவதற்கான காரணி என்றுக்கூட அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் சிறிது நேரத்தில் ஒரு சுற்று போக வேண்டும். அந்தக் காலி வீட்டில் இருக்கும் பழைய கப்சாய் மோட்டாரை எடுத்துக் கொண்டுதான் போக வேண்டும். இது ராஜாவின் வலியுறுத்தல்.
நான்கு வரிசைக் கொண்ட அந்த குடியிருப்பு பகுதிக்குள் அந்த மோட்டாரின் எரிச்சலைத் தூண்டும் சத்தம் அவ்வளவாக கேட்டுவிடக்கூடாது, ஆனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை யாராவது அதே சத்தத்தைக் கண்டிப்பாக கேட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் வேலை செய்கிறேன் என்ற திருப்தி ஏற்படுமாம். தூக்கத்திலும் நிம்மதியில்லாமல் இப்படியொரு நிம்மதி தேவையா? ஐயோ ஆண்டவா இந்த வலியுறுத்தல்களின் நீளம் எவ்வளவாக இருக்கும்? இன்னும் எத்தனை தளங்களில் இது விரிந்து கிழைவிட்டுக் கொண்டே போக வேண்டும்? மொத்தமாக இருளில் மறைந்துவிட்ட வீடுகளில் அதிகமான கவனம் வைக்க வேண்டுமாம். ஏன்? இருளுக்குள் எதாவது நடந்துவிட்டால்? தற்செயலாக என்னவேண்டுமானாலும் நடந்துவிடலாம்தான்.
மோட்டாரின் சத்தத்தைக் குறைத்துவிட்டு மோட்டாரின் வக்கிளில் இருக்கும் பெரிய கைலாம்பை எடுத்து எல்லாம் வீடுகளிலும் இருமுறையாவது ஒளிப்பரப்ப வேண்டும். இது அடுத்த வலியுறுத்தல். ஒவ்வொரு வரிசை வீடுகளில் நுழையும் போதும் அந்த கைலாம்பு எல்லாம் வீடுகளின் முகத்திலும் பாய வேண்டும். யாராவது திருட்டுப் பயல்கள் இருந்துவிட்டாலும்கூட அதையும் நான் தான் கவனித்து பாதுகாக்க வேண்டும். இந்த வலியுறுத்தல்தான் கொஞ்சம் அசட்டுத்தனமாக இருக்கிறது.
“டேய் கேசவா. . ஒன் கிட்ட இல்லாத சொத்துடா. . சரி சரி இனி இருக்க போறதும் இல்ல. . இருந்தாலும் அதலாம் பாதுகாக்க ஒனக்கு கெடைச்ச பாக்கியம்டா இது. . கருப்பு கண்ணாடி போட்டு எப்படி இருட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கானுங்க பாரு. . நம்பிக்கையே இல்லாத பையனுங்க. . அதனாலதான் ஒன்னையும் ஒன் தூக்கத்தையும் வெல பேசிருக்கானுங்க. . போடா. . போடா. . அவனுங்கள போறுத்தவரைக்கும் நீ கோட்டான். . அவன்லாம் ராத்திரி நேரத்து ஆமைங்கடா. . ஊர்ந்துகிட்டு இருப்பானுங்க. . போடா. . போ. . போய். . கைலாம்ப பாய்ச்சி அந்த ஆமைங்களோட ஓட்டுல”
கருப்பு கண்ணாடிகளை வாசல் கதவுகளாக கொண்ட வீட்டில் அந்தக் கருப்பு கண்ணாடியில் கைலாம்பின் வெளிச்சத்தை ஒளிபரப்பக் கூடாது. இதுவும் அடுத்த வலியுறுத்தல்தான். ஒரு தடவை தவறுதலாக அந்த மாதிரி செய்துவிட்டேன். 8ஆம் நம்பர் வீட்டில்தான்.
கைலாம்பிலிருந்து வெளிப்பட்ட மஞ்சள் பல்பின் ஒளி அந்தக் கருப்பு கண்ணாடியில் பாய்ந்த போது, உள்ளேயிருந்த ஒரு தொலைக்காட்சி, அந்தத் தொலைகாட்சியின் வலது புறத்தில் ஆபாசமான ஒரு ஓவியம், மற்றும் திறந்திருந்த அறைக்கதவிலிருந்த ஜன்னல் துணி என்று இப்படி சிதறிய ஒளியிலிருந்து கண்டு கொண்ட காட்சிகள். இப்படி பல முறை அந்த வீட்டின் இருளில் புதைந்து கிடக்கும் இன்னும் சில பொருள்களைக் காண வேண்டும் என்ற சபலம், மறுநாள் வலியுறுத்தல்களாக மாறி, அடுத்த நாளிலிருந்து கைலாம்பின் வெளிச்சம் கருப்பு கண்ணாடியில் தவறியும் ஊடுருவிடக்கூடாது.
“ஜோர்ச் லைட்ட ஒழுங்கா யூஸ் பண்ணனும். கரண்டுலாம் என்ன சும்மாவா வருது. .அங்கட்டும் இங்கட்டும் தேவ இல்லாம அடிச்சிகிட்டு இருக்காதிங்க”
கப்சாய் மோட்டாரை மீண்டும் அந்தக் காலி வீட்டின் முகப்பில் வைக்கும் போது மணி 11 ஆகியிருக்கும். 12 அல்லது 1 மணிவரை குடியிருப்பு பகுதியின் 1ஆம் நம்பர் சாலையில்தான் கொஞ்ச நேரம் திரிந்து கொள்வதும் கொஞ்ச நேரம் அந்தச் சாலையின் விளிம்பில் அமர்ந்து கொள்வதுமாக இருக்க வேண்டும். அந்த நேரத்திலெல்லாம் இரவு வேலையை முடித்துவிட்டு வரும் சீனர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தலையசைத்துவிட்டு கையை மேலே உயர்த்தி “உள்ளேன் ஐயா” என்று அசடு வழிய வேண்டும். இதுவும் வலியுறுத்தல்தான். நான் வேலை செய்கிறேனா அல்லது விழிப்பில் இருக்கிறேனா என்ற அடையாளத்தின் வலியுறுத்தல்தான். சிலர் மது போதையில் வந்து சிறிது நேரம் உற்றுக் கவனித்துவிட்டு போவதும் உண்டு.
“ இரவு மணி 12- நான் கேசவன் குன்மா பாதுகாவலர். . அனைத்து வீடுகளும் பாதுகாப்பான சூழ்நிலையில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன என்று மலாய்மொழியில் வழக்கம் போலவே எழுதிவிட வேண்டும். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் சுற்று போய்விட்டு வந்த பிறகு இப்படிதான் செய்தாக வேண்டும். சில வேலைகளில் வீட்டிலேயே எல்லாவற்றையும் எழுதிவிட்டுதான் வருவேன். டூங்கே வந்துவிட்ட பிறகு அந்தச் சாலையில் அமர்ந்து கொண்டு எழுதுவது போல் பாவனைச் செய்து கொண்டிருப்பேன். எந்த வீட்டிலிருந்து யார் வேண்டுமாணாலும் பார்த்துவிடலாம்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு என்ன செய்வது? வெறும் இருளும் கைலாம்பின் மஞ்சள் பல்பின் ஒளியும் மேலும் அமைதியான ஒரு சூழ்நிலையும். டூதற்கிடையில் அந்தச் சாலையையொட்டியிருக்கும் திடலில் கட்டப்பட்டிருக்கும் சின்ன உட்காரும் இடம் என்னை அழைத்துக் கொண்டிருக்கும்.
“டேய் கேசவா. . ஒடம்பு நோவுதாடா. . முதுகுலாம் உட்காந்தே வலிக்குதாடா. . அந்த எடத்துல போய் படுத்துகிட்டு கொசு மருந்த பத்த வச்சா சொகமா இருக்கும்னு நெனைக்கிறியா?. வேண்டாம்டா. . இந்த ரோட்டுலே இப்படி ஒக்காந்துகிட்டு தூங்கு. . கொஞ்ச நேரம் தூங்குடா. . அது போதும். . அதான் ஒனக்கு நல்லது”
அப்படியே அந்தச் சாலையின் விளிம்பில் கையில் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும் கைலாம்புடன் விழித்திருக்க முயற்சி செய்து கொண்டிருப்பேன். முடியாதபோது தூக்கம் கண்களை இருட்டிக் கொண்டு வரும். முடியாதுதான். இலேசான தூக்கம். “யப்பா. . ராம கிருஷ்ண பகவானே. . ராத்திரி தூக்கம் எவ்ள சொகமானுது. . வீட்டு கட்டில்ல படுத்து காத்தாடி சுத்த அப்படியே சுருண்டுகிட்டு படுத்தா எவ்ள சொகமா இருக்கும். .”
காரின் மஞ்சள் ஒளி பட்டு, திடிர் விழிப்பு. மணி 2 ஆயிருந்தது. அந்தக் காரிலிருந்து அமர்ந்து கொண்டே கண்ணாடியைத் திறந்தான் அவன். தலையை வெளியே நீட்டிக் கொண்டு ஏதோ வலியுறுத்திவிட்டு போனான். ஒருவேளை திட்டியும் இருக்கலாம்தான். தூங்கி வழிவது இந்த இடத்தில் பெரிய குற்றம்தான். அதற்கான தண்டனைகளை மனு சாஸ்த்திர தொகுப்பில்தான் மேற்கொள்ள வேண்டும் போல. எழுந்து மறுபடியும் அந்தக் காலி வீட்டில் கிடக்கும் மோட்டாரை எடுத்துக் கொண்டு வலம் வர வேண்டும். நான் விழித்திருபதினாலோ என்னவோ அந்த இடத்தின் சில வீடுகளின் நாய்கள் கூட எனக்குத் துணையாக விழித்திருக்கும். முதல் சில நாட்களில் நான் ஊர்வலம் வரும் போதெல்லாம் குறைக்க தொடங்கும் நாய், பிந்தைய நாட்களில் என்னை பழகிக் கொண்டது. எவ்வளவு பெரிய சமரசம் இது? ஆச்சரியம்தான்.
மணி 2ஐ கடந்து கொண்டிருக்கும் போதுதான், அந்த 12ஆம் நம்பர் வீட்டிலிருந்து அந்த நபர் வெளியே வந்து நடந்து கொண்டிருப்பார். தூக்கத்தைத் தொலைத்த மனிதர்தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு ஆன்மீகவாதி என்று பிறகுதான் அடையாளப்படுத்திக் கொண்டேன். கையில் ஒரு துணிப்பையை மாட்டிக் கொண்டு, வாயில் ஏதோ கடவுளின் நாமத்தை உச்சாடனம் செய்துக் கொண்டே அந்தச் சாலையில் நடந்து கொண்டிருப்பார். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை இப்படி வருவார். அவர் வரும் போதெல்லாம் அவரின் இருப்பும், அந்த ஹரே கிருஷ்ண ஹரே ராம நாமமும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.
இரண்டுமுரை என்னை நெருங்கி விசாரித்துவிட்டு போயிருக்கிறார். பிறகு பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொள்வதுண்டு. “இன்னும் மால முடிக்கல. . அதான்.” என்று குறைவான வார்த்தைகளுடன் என்னை கடந்து அவர் போகும் போதெல்லாம் அவருடைய அந்த இரவு நேர உற்சாகம் ரொம்பவே பிடித்திருந்தது.
மணி 4ஐ நெருங்கி கொண்டிருந்தது. அடுத்த நகர்விற்குத் தயாராக வேண்டும். காலி வீட்டில் நுழைந்து மோட்டாரை எடுத்துக் கொண்டிருக்கும் போது 3ஆவது வரிசை வீடுகளிலிருந்து திடிரென்று ஒரு பயங்கரச் சத்தம். யாரோ அலறிக் கொண்டிருப்பது போன்ற சத்தம். உடனே மோட்டரை அப்படியே போட்டுவிட்டு கைலாம்பின் மஞ்சள் ஒளி சிதறிக் கொண்டிருக்க வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். . .
“ இரவு மணி 4- நான் கேசவன் குன்மா பாதுகாவலர். . அனைத்து வீடுகளும் பாதுகாப்பான சூழ் நிலையில் கட்டுப்பாட்டில் இருக்கின்றன” என்று ஏற்கனவே எழுதியிருந்த குறிப்புடன் புத்தகம் சாலையின் விளிம்பில் கிடந்தது.
ஆக்கம்: கே. பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, கெடா
Tuesday, April 21, 2009
அதிகாரம்- ஆணவம்- எதிர்வினை
உங்களுக்கு(நவீன்) மீண்டும் பதிலளிப்பதில் உண்மையில் வெட்கம்தான் படுகிறேன். நான் அனுப்பிய கட்டுரையின் தலைப்பை மாற்றி உங்கள் வசதிக்கு எனது கருத்துகளை சிவப்பு வர்ணத்திலும் உங்கள் கருத்துகளை மிகத் தெளிவான வர்ணத்திலும் போடுவது போல போட்டு உங்கள் நியாயங்களை தர்கிப்பதில் ரொம்பவே அக்கறை காட்டி மழுப்புகிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் நான் அனுப்பிய கட்டுரையில் சில பகுதிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உங்கள் மின்னஞ்சலுக்கு கருத்துகளை அனுப்பினேன் என்று வேறு சொல்கிறீர்கள். இவ்வளவு நாளா என்னையும் உட்பட பலரும் அப்படித்தானே அனுப்புகிறார்கள். இப்பொழுது மட்டும் என்ன திடீர் புலம்பல்?
அஞ்டியை நீங்கள் நிர்வகிப்பதால் எடுத்துக் கொண்ட சந்தர்ப்பம். நீங்கள் சொல்வதெலெல்லாம் உண்மை என்று ஆகிவிடாது.
என்னைப் பற்றிய விஷயங்கள் பேசப்படும் இடத்தில் நான் வந்து பேசுவது தவறென்றால், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டுமா? வராவிட்டால் பயந்து தலைமறவாகிவிட்டேன் என்று ஒரு பலி, வந்துவிட்டால் வெட்கமின்றி ஒட்டிக் கொள்வதாக பேச்சு! அப்படியென்றால் எதற்கு ஆரம்ப கட்டுரையில் புத்திமதி சொல்வது போல் எல்லாவற்றையும் புளோக்கில் போட்டுவிட்டு, போன் செய்து அஞ்சடியைப் பாருங்கள் என்கிற அங்கலாய்ப்பு.
ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்கள். அவர்களின் படைப்பு மீது தனி ஈர்ப்பும் அபிமானங்களும் எனக்குண்டு. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி என் கதையைப் படிக்க சொல்வதும், அவர்களின் படைப்புகளைப் பற்றி பேசுவதும் குறித்து உங்களுகென்ன அங்கலாய்ப்பு? அது வாசகன் – எழுத்தாளன் சம்பந்தப்பட்டது. அதில் ஏன் உங்கள் பொறாமை மூக்கை நுழைக்கிறீர்கள். பாவம். .
என்னைக் கேட்காமலேயே என் கவிதையை ஜனசக்தியில் பிரசுரித்தது குறித்து நான் கேள்வி எழுப்பவில்லையே. மேலும் மஹாத்மன் என்னைத் தொடர்புக் கொண்டு கதையை அனுப்பும்படி அவரே கேட்டுக் கொண்டதோடு, மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்தார். அது அவரின் உரிமை / நட்பு என்றால், நானும் அதே பாணியில்தான் என் கதையைப் பிரசுரிக்கும்படி உரிமையுடன் கேட்டேன். (விவாதம் எனது கருத்துகளுத்தான்- எனக்கு அல்ல)
என் முதுகின் வலுவைப் பற்றி தயவு செய்து கவலையை விடுங்கள் நவீன். முதலில் உங்கள் முதுகில் தெறித்துக் கிடக்கும் எச்சங்களைச் சரி செய்ய முயலுங்கள்
நண்பர்கள் என கொஞ்சம் உரிமை எடுத்து மன்னிப்பு கேட்டதற்கு அதை அங்கலாய்ப்பு என கூறி உங்களின் கெட்ட குணத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். எனது பழைய கட்டுரையை மீண்டும் போட்டு உங்கள் முகத்தை கழுவிக் கொள்கிறீர்கள்.
என் மீது காழ்ப்பா பொறாமையா என்று ஒருவர் கேட்டதற்கு, அது பாலமுருகனுக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு, உடனே எனக்கு இரகசியமாக குறிந்தகவல் அனுப்பி, “நண்பா எப்படி இருக்கீறீர்கள்? உங்கள் படைப்பாற்றல் பாதிக்கக்கூடாது, பார்த்துக் கொள்ளுங்கள்” என புத்திமதி வேறு. என்ன ஒரு அக்கறை?
ஆமாம் உண்மைதான். உங்களிடம்தான் அந்த விசயங்களில் ஆலோசனை கேட்டேன், அது குலைவு என்றால், என்னை சுங்கைப்பட்டாணியில் ஒரு இதழ் தொடங்குமாறு சொன்னது என்ன குலைவா? இரண்டுமே அக்கறை சார்ந்த விஷயம்தானே. அநங்கத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால் என்னிடம் பேசியிருக்க வேண்டும் என்றுதானே நான் சொல்லியிருந்தேன். அதை விடுத்து புளோக்கில் பேசியதற்காகத்தான் உங்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதி இல்லை என்று சொன்னேன்.
ஒருவர் சொல்லும் கருத்து, நேரடியான முறையில் தீர்மானிப்பது அவ்வளவு சரி இல்லை. அவர் எந்த சூழ்நிலையில் எந்த மனநிலையில், சொல்லியிருக்கிரார் என்பதற்கு கொஞ்சம் மதிப்பளிக்க வேண்டும். மேலும் அந்த ஒரு கருத்தே இறுதியானது என்றும் ஆகிவிடாது.
நுக்மான் விஷயத்தில் அவருக்கு நாதியே இல்லாமல் நான் விட்டுவிடவில்லை. ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர் கடாரம் வந்தது, கெடா மாநில எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் கலந்துரையாடல் நிகழ்விற்கு, அதன் உபரி நிகழ்வுதான் அநங்கம் அறிமுகம். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நான் எங்கும் ஓடவில்லை. இன்றளவும் யாரிடமும் மேற்கொண்டு பணம் கேட்காமல் கிடைத்த பணத்தைக் கொண்டே அநங்கத்தை வெளியீட்டுக் கொண்டிருக்கிறேன். மேலும் பணம் கொடுத்து வாங்கும் வாசகர்களின் பணத்தை அடுத்த அநங்கத்தின் தரத்தை உயர்த்தவே பயன்படுத்துகிறேன்.
பகையையெல்லாம் ஏற்படுத்தவில்லை. உங்களின் அம்பலப்படுத்தும் பாணியிலேயே சில உண்மைகளைச் சொன்னேன்.
உங்களின் குறுந்தகவலை சேகரித்து பாதுகாத்து சந்தர்ப்பம் தேடி அலையும் திட்டங்களுக்கு சபாஸ் சொல்கிறேன்.
நீங்கள் மட்டுமே மலேசிய இலக்கியத்தை வளர்ப்பது போல வேறு பேசியுள்ளதோடு இதில் சில மேற்கொள்கள் வேறு. இவர் பாணியில் அவர் பாணியில் என்று.
இதழுக்காக படைப்பு கேட்டு ஒருவர் உங்களை நச்சரிப்பார், நீங்கள் படைப்பைப் பிரசுரிப்பது பற்றியோ அல்லது உங்கள் படைப்பைப் பற்றியோ நண்பர் என்ற முறையில் கருத்து கேட்டால், நாளை ஒரு பிரச்சனை என்று வரும்போது அந்த மின்னஞ்சல்களை மிகப் பத்திரமாக சேமித்து வைத்து உங்களயே அடிப்பார். அப்படியொரு சந்தர்ப்பவாதி தலைநகரத்தில் உள்ளார் நவீன். கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்
கே.பாலமுருகன்
நாடகக் குரலுக்கு எதிரான எனது குரல்
"அஞ்சடியை" இயக்கிக் கொண்டு சுய திருப்தி அடைந்து கொள்ளுங்கள்
எனது நாடகங்களை சிரமம் பாராமல் புலம்பலாக (நிதானமாக என்று அறிவிப்பு வேறு) அம்பலப்படுத்தியதற்கு மிக்க நன்றி நவீன். அது நாடகமா இல்லையா என்பதை பற்றி நான் கவலைப்படுவதற்கில்லை. ஆனால் நீங்கள் ஆடும் தொடர் மெகா சீரியல் நாடகத்தை மிகவும் கவனமாக கையாளுகிறீர்கள். அது என்று வெளிச்சத்திற்கு வரும் என்று காத்திருக்கவும் எனக்கு நேரமில்லை.
12 மணி இல்லை நவீன். சுங்கைப்பட்டாணியிலிருந்து ஜொகூருக்கு 10.30 மணியே கடைசி பேருந்து. என்ன நவீன் நீங்கள்? எதையும் சரியாகக் கவனிக்காமல்தான் பேசுவீர்களோ? ஓடவில்லை நவீன், நல்லா சொகுசாக பேருந்து சீட்டில் அமர்ந்து கொண்டுதான் சென்றேன். பழைய கதை என்று நீங்களே குறிப்பிட்ட பின் அதை மீண்டும் பேச எனக்கு விருப்பமில்லை.
நீங்கள்தானே வல்லினம் ஆசிரியர்? உங்களிடம்தான் படைப்பு குறித்தும் பிரசுரிப்பது குறித்தும் கேட்க வேண்டும் பேச வேண்டும். ஒருவகை ஆணவம்தான் உங்களுக்கு. இதற்கு முன் வல்லினத்திற்க்காக வங்கியில் பணம் சேர்ப்பிக்க 3-4 முறை மின்னஞ்சல் வந்துவிடும். அது எந்தவகைக் கெஞ்சல்? இதழை நடத்த நீங்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு அனுப்பும் மின்னஞ்சலை, என்னச் சொல்லலாம்? உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால். தரமான இதழ் வல்லினம்,ஆதலால் அதில் நம் படைப்பு பிரசுரம் ஆகுவது குறித்து நினைவூட்டல் வகையில் கேட்டால், அது என்ன நாடகமா? நாடகம் என்றால் என்ன என்பதில் உங்களுக்குப் பிசகல்.
யுவராஜனுக்கு நன்றி சொல்லும் நீங்கள் அதே அன்றைய தினம், “அவனை (யுவராஜனை) பார்க்க நான் விரும்பலா, பாத்தனா அவன மூஞ்சிலே குத்திருவேன்னு” உங்கள் நண்பரிடம் சொன்னது மறந்து போயிற்றா நவீன்? என்னமா நாடகம் இது?
நீங்கள் செய்தால் அது எதிர்வினையாக்கும், நாங்கள் செய்தால் அது புலம்பலாக்கும். எனக்கான சாவி உங்களிடத்தில் இல்லை நவீன்.
உங்களின் ரெட்டத்தன நாடகமும் அஞ்சடி வாசகர்கள் அறிந்ததுதான். பா.ம விஷயத்தில் மூக்கை நுழைத்து நாட்டாமையெல்லாம் பண்ணிவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்டதை என்ன “செல்வி” நாடகத்திற்கு இணையான “செல்வன்” நாடகன் என்று சொல்லலாமோ? பா.மவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு அஞ்சடியில் கூழை கும்பிடுவை நன்றாகவே போட்டுள்ளீர்கள்.
மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா குறித்து எல்லோரையும் எங்களுடன் சேர்ந்து கொண்டு குரலெழுப்புங்கள் என்று ஏன் வற்புறுத்த வேண்டும்? நீங்களே முதுகெலும்பை வளைக்கும் கழகத்தைத் தொடங்கிவிடுவீர்கள் போல?
முதலிலிருந்து ஒரு பாலர் பள்ளி மாணவனுக்கு சொல்வது போல சொல்ல வேண்டும் போல உங்களுக்கு. போலி கண்ணிரும் அநங்கமும் என்கிர கட்டுரையின் மூலம் நான் அநங்கத்தின் நிலைபாடுகளைச் சொன்னதற்குக் காரணமே உங்களின் முதல் கட்டுரையும் அதன் பிறகு வந்த நக்கல் கட்டுரையும்தான். ஆலோசனை வழங்க உங்களுக்குத் தெரியவில்லை. எப்படி ஒரு இதழ் குழுவை அணுக வேண்டும் தெரியாமல் புத்திமதி சொல்லும் அளவிற்கு வளர்த்துவிட்டதாக மமதை வேறு. ஆமாம் நீங்கள் இதழியல் துறையின் மிகப் பெரிய தூண். நீங்கள் விலகுவதால் மனம் வலிக்கத்தான் செய்கிறது. அட போங்கப்பா!
'இறுதியாக நவீனுக்கு: அதுதான் மின்னஞ்சலிலேயே அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டீர்களே! பிறகு ஏன் இங்கேயும் பதிவு செய்ய வேண்டும்? பகீங்கரமாக எல்லோரும் அநங்கத்தைவிட்டு வெளியேறுவதை இப்படிப் பொதுவில் அம்பலப்படுத்த வேண்டுமா?
இதற்கே இன்னும் பதிலில்லை. ஏற்கனவே நீங்கள் பேசுவதெல்லாம் காழ்ப்பு என்றுதான் நினைக்கத் தூண்டியது. சக நண்பருக்கு புத்திமதி சொலவது போன்ற ஒரு நாடகத்தை அஞ்சடியில் அரங்கேற்றி அதில் பலரின் கவனம் பெற வேண்டும் என்பதற்காக எனது அஞ்சடி புளோக்கைப் பாருங்கள் என்று குறுந்தகவல் பிரச்சாரம் வேறு.
ஒருவரின் எழுத்தை வெகுசன எழுத்து என்று ஒட்டு மொத்தமாக முடிவுக்கட்டும் அளவுக்கு அவ்வளவு நுட்பமாக யாரும் சொல்ல இயலாது. தமது எழுத்தில் எங்கேனும் சில சமயங்களில் வெகுசன அம்சங்களோ வணிகத்தனமான சொல்லாடல்களோ வெளிப்படலாம். அதை தொடர் பயிற்சியின் மூலமே நீக்கவோ குறைக்கவோ இயலும்.
அஞ்சடியை இயக்கிக் கொண்டு சுய திருப்தி அடைந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன உண்மையைப் போட்டுக் கிழித்தாளும் - படைப்பும் படைப்பாளனும் அவன் சார்ந்த சுதந்திரத்துடன் எதிர்வினைகளுக்குப் பயந்து தன்னை ஒடுக்கிக் கொள்பவன் அல்ல. அதிகாரத்திற்கு இரண்டு முகம் இருப்பது போல ஒருவரின் நியாய-கற்பிதம்-உண்மைக்கும் கூட இரண்டு முகங்கள் உண்டு.
கூட்டணி சேர்த்து எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எல்லாம் மின்னஞ்சல்களையும் மிகப் பத்திரமாக இன்னும் தொலைபேசியில் வைத்திருபதற்க்காக மிக்க நன்றி.
ஒன்றத் தெரிந்து கொள்ளுங்கள். படைப்பாளன் உருவாக்கப்படுவதில்லை. அவனே உருவாகுகிறான், பல தளங்களில், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு மனநிலைகளுடன். உங்கள் ஆதிக்கத்தனத்தை, கிண்டல் கேலியை, மாற்று சிந்தனை என்கிற போர்வையில் நாடகமாடுகிறீர்கள் என்றால் நடத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.
கே.பாலமுருகன்
Monday, April 20, 2009
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்- 2008-2009க்கான சிறந்த சாதனையாளராக தேர்வு
(எழுத்தாளர் கே.பாலமுருகனுக்கு டத்தோ சுப்ரமணியம் சிறப்பு நினைவு பரிசினை எடுத்து வழங்குகிறார்)
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் என்னுடைய 2009ஆம் ஆண்டின் சாதனைகளையொட்டி சிறப்புச் செய்யப்பட்டது. வழக்கம் போல பல புதிய தீர்மானங்கள் எழுத்தாளர் கூட்டத்தில் பேசப்பட்டு முடிவுச் செய்யப்பட்டன. மேலும் சக அரசு சார்பாற்ற இயக்கத்திலிருந்து வந்திருந்தவர்களும் கல்வி இலாகாவைச் சேர்ந்தவர்களும் எழுத்தாளர் சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தருவதாகக் கூறியிருந்தார்கள்.
இயக்கம் ஒரு சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும். இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லவும் மக்களை வாசகர்களை எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் எழுத்தாளர் இயக்கம் தொடந்து வலுவான செயல்பாடுகளுடன் இயங்க வேண்டும் என்று முடிவுச் செய்யப்பட்டது. இயக்கம் அரசியல் சார்ந்து இல்லை, இலக்கியம் சார்ந்துதான் இருக்கின்றது என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
கெடா மாநில எழுத்தாளர் இயக்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பல இளம்-மூத்த எழுத்தாளர்கள் பங்கு கொண்டு வெற்றியடைந்து, இன்றைய தினத்தில் அவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதல் பரிசுக்குரிய வெற்றியாளர் தவிப்புகள் எனும் கதையை எழுதிய திரு.இலட்ச பிரபு அவர்கள். பாடாங் செராயாய் சேர்ந்த தமிழாசிரியர்.
மலேசிய தேசிய பல்கலைகழகம் நடத்திய கவிதை போட்டியில், சி.கமலநாதன் சுழற் கிண்னத்தை வென்றதோடு, உலக அளவில் நடத்தப்பட்ட சுஜாதா நினைவு அறிவியல் புனைக்கதை போட்டியில் ஆசியா-பசிபிக் பிரிவில் சிறந்த சிறுகதைக்கான பரிசை வென்றதையொட்டி சிறந்த 2008-2009 ஆண்டிற்கான சாதனையாளர்-எழுத்தாளர் என்று கௌளரவிக்கப்பட்டு நினைவு கேடயமும் வழங்கப்பட்டது எனக்கு. சால்வையும் மாலையும் இல்லாமல், இந்த வழக்கத்தைத் துறந்த கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்திற்கு சபாஷ்!