Tuesday, March 3, 2009

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் சிறுகதை பயிலரங்கம்



கடந்த மாதம் 14-15 ஆம் திகதிகளில் தேசிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கம் கோலாலம்பூரில் நடந்தது. நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்கள் பட்டறையை வழிநடத்தினார். சுமார் 20 இளைஞர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர்.






சல்மா, முனிஸ்வரன்(மலாயாப்பல்கலைக்கழகம்), காமினி கணபதி, விக்னேஸ்வரன், ஈஸ்வரி, சத்யாவாணி போன்ற இளையவர்கள் இலக்கியத்தின் பால் ஆர்வமுள்ளதால் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டு முழுநேர ஈடுபாட்டை வெளிப்படுத்தினர்.






முதல்நாள் பட்டறையில் சிறுகதையின் தொடக்கம், மொழிநடை, உலக சிறுகதைகள் ஒரு பார்வை என்று விரிவாகப் பேசப்பட்டது. இரண்டாம் நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அந்தக் கருத்தாரங்கில், ரெ.கார்த்திகேசு, மா.சண்முகசிவா, சை.பீர்முகமது, நான் என்று நால்வரும் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் இலக்கியம் குறித்தான எங்கள் மனநிலைகளையயும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம்.



என் அனுபவ பகிர்வு பெரும்பாலும் நவீன இலக்கியம் குறித்த விழிப்புணர்வை இவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலே அமைந்திருந்தது. உலகத் திரைப்ப்படன்ங்களில் கையாளப்ப்படும் உத்திகளை மேற்கோள் காட்டி அவர்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினேன். இன்றளவும் அகிரா குரோசாவா, சத்ய ஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் சினிமாக்கள் வாழ்வை மிக நெருக்கமாக அணுகுவதுடன், வாழ்வை பார்வையிடும் உத்திகளை மாற்றுக் கோணத்தில் காண்பிப்பத்துடன், பார்வையாளனின் கவன நோக்குகளையும் வளர்த்தெடுக்க்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது எனலாம். இங்கிருந்து நவீன உத்திகளைப் புரிந்து கொள்ள தொடங்கினாலும், அது சிறப்பானதாகவே கருதலாம்.



Saturday, February 28, 2009

தனிமையின் உக்கிரம் சுமக்கும் வீடுகள்



1
இனி
என் வீட்டில்
இருக்கப்போவது
நான் மட்டுமே
என்கிற தீர்மானங்களுடன்
கரைகிறது
எனக்கான வெறுமை

2
எனது
பொழுதுகளை
தொலைத்துவிட்டு
சன்னலில்
எக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அமைதியாக
இயங்கிக் கொண்டிருக்கும்
உலகை

3
இனி
யார் வரப்போகிறார்
என்கிற விரக்தியில்
கதவு அடிக்கடி
சாத்திக் கொள்ளும்
பழக்கத்திற்கு
ஆளாகியிருந்தது



தனிமையின் வீதி


1

யாரோ
அழைக்கிறார்கள்
. . . .

சூன்ய வெளிக்குள்
புகுந்தபின்
இன்னும் என்ன
அழைப்பு?
பிரமை!

கடந்துவிடுகிறேன்





2

மீண்டும்
உற்பத்திக்கும்
ஆற்றல் இருந்திருந்தால்
அந்த 14 நாட்களின்
தொடக்கத்தை
உருவாக்கியிருப்பேன்


3
எல்லாமும்
நடந்தேறிவிட்டது
இனி நான் யார்
என்ற கேள்விகளுடன்
நிற்கிறது
எனது சாலை


அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி

அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி
போட்டி முடிவுகள்

சென்னை, பிப்ரவரி 26, 2009


கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:

முதல் பரிசு (ரூ.20,000)
திரு. தமிழ்மகன், தமிழ்நாடு


இரண்டாம் பரிசு (ரூ. 10,000)
திரு. தி. தா. நாராயணன், தமிழ்நாடு


சிறப்பு பரிசுகள் (ரூ.10000 வீதம்)

இந்தியா
திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு


ஆசியா-பசிபிக்
திரு. கே. பாலமுருகன், மலேசியா


வட அமெரிக்கா
திரு. வ. ந. கிரிதரன், கனடா


இலங்கை
திரு. ஆர். எம். நௌஷத், இலங்கை


பரிசு பெற்றோர்களுக்கான பரிசுகள் சென்னையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன. மேலதிக விவரங்களுக்கு

ஆழி பதிப்பகம்12, முதல் பிரதான சாலை

யுனைட்டட் இந்தியா காலனி

கோடம்பாக்கம்

சென்னை 600024

சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் நூல் வெளியீடு சைபீர் அவர்களின் சிறுகதை தொகுப்பு








22.02.09 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தங்கமீன் பதிப்பகத்தால் வெளியிடபட்ட மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமுது - வின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் வெளியீடப்பட்டது. நான், திரு கோ.புண்ணிய்வான் மேலும் வித்யசாகர் அவர்களும் நிகழ்வில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றிருந்தோம்.

சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கலாந்துரையாடல் அங்கத்தில் சிறுகதை குறித்தான கேள்விகளை முன்வைத்தனர். அவர்களின் தேடல் மகிழ்ச்சியளித்தது.

சிங்கை கவிஞர்களும் எழுத்தாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டது மேலும் சிறப்பாக இருந்தது. நாம் இதழாசிரியர் பாண்டித்துரை, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இரா.கண்ணபிரான், சின்னபாரதி, பாலுமனிமாறன் மேலும் பலர்.














Friday, January 16, 2009

சிறுகதை - ஓர் எழுத்தாளனின் கடைசி சில நாட்களுக்கு முன்பான அவனது அறை

ஓர் எழுத்தாளனின் கடைசி சில நாட்களுக்கு முன்பான அவனது அறை'
கே.பாலமுருகன்

1
மதிய வெயில் உடைந்து சிதறியது. சன்னலின் வழி ஒழுகிய வெளிச்சத்தைச் சுவாசித்துக் கொண்டிருந்தான். எதிர்வீட்டு சன்னலில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்கூட்டத்தின் நெளிவு கண்களைக் கூசியது. கைகளின் வழியாக வழிந்தோடிய வியர்வை சுருள் தரையில் வீழ்ந்தது.

2
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டர் தாட்கள் சலசலத்துக் கொண்டிருந்தன.உத்தரத்தை அண்ணாந்தபடி கால்கள் இரண்டையும் அகட்டிக் கொண்டு சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தான்.
வெளியே முணுமுணுத்துக் கொண்டிருந்த இருளின் அடர்த்தி அதிகரிக்கத் துவங்கின.வலது மூலையில் வைக்கப்பட்டிருந்த மேசையில் பாதி எழுதப்பட்டு அப்படியே விடப்பட்டிருந்த கதை மெல்லிய அலறலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

3
விடிந்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியிருக்கும்பள்ளி மாணவர்கள் மெல்ல நடக்கத் துவங்கினர்.
அவன் எழுந்து சன்னலில் அமர்ந்துகொண்டு, வேடிக்கைக்குத் தயாரானான்.ஊரும் கூட்டத்தின் நடுவே யாரோ சில மாணவர்கள் மட்டும் அவனைப் பார்த்துவிட்டு நகர்ந்தனர்.
சன்னல் கம்பிகளின் இடுக்கில் முகத்தின் சதைகளை இறுக்கிக் கொண்டு காலை நகர்வுகளை வெறித்துக் கொண்டிருந்தான்.

4
சன்னல் கம்பிகளில் கைவிரல்களை அலையவிட்டுக் கொண்டிருந்தான்.இறுக்கம் அறை முழுவதும் பரவியபடியே இருந்தது.
சுவரில் சிரித்தபடியே இருந்த அவனது 5 வயது புகைப்படத்தில் எறும்புகள் மிகக் குறைவான வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தன.
காற்று இல்லாத சூன்யம் அவனையும் அறையையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

5
கடிகாரம் செயலிழந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தன.நகராத கடிகாரத்தின் ஊடே இறுகிப் போன நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.
அறைக் கதவில் சிறு இடைவெளி விட்டுப் போயிருந்தது.
வெளி உலகத்தின் சப்தம் மெல்ல உள்நுழையத் துவங்கின.
அறைக்கு வெளியிலிருந்து சூன்ய ஒலிகள் வடிந்து கொண்டே அறைக்குள் நுழைந்த கால அடையாளத்தைக் கட்டிலில் சாய்ந்து கொண்டே மறக்க முயன்ற¡ன்.கைகள் நீண்டன. கால்கள் சுருண்டன. தலை கரைந்து மறைந்தது. உடல் அந்தரத்தில் தவழத் துவங்கின.
நிஜ உலகின் கவனப் பிடியிலிருந்து தப்பி, அவனுடைய அறை மாய உலகத்தில் சிக்கிக் கொள்ள ஆரம்பித்தது.

7
மதிய வெயில் மீண்டும் அறையை இரண்டாகப் பிளந்து கட்டியது.வெயிலின் ஒலி கீற்றினூடே யாரோ சிலர் அறைக்குள் நுழைய எத்தனிப்பது போன்ற பிரமை தட்டியது.
யாராக இருக்கும்?
உடலின் நேர்கோடு விலகி, கோணியவாறே அறைக்குள்ளே நடந்து கொண்டிருந்தான்.பித்துநிலை அதிகரிக்க, உச்சத்தில் கொதித்தது மதிய வெயிலின் உக்கிரம்.

8
உடல் முழுக்க காயங்கள்.
நேற்றிரவு நகங்களால் வயிற்றுப் பகுதியையும் முதுகையும் கிழித்துக் கொண்டு படுத்தவன் காலையில் எழுந்ததும், தொடையைக் கிழித்து, அந்த இரத்தத்தைச் சுவரில் கீறினான்.
நகங்கள் உடைந்து சிதறின.
மீதமிருந்த உடல் பகுதிகளை என்ன செய்ய நினைத்தானோ, அதற்குள்ளாக சூழலைப் பற்றிய தெளிவு மங்கி, மயங்கினான்.

9
சுவரில் சலசலத்துக் கொண்டிருந்த காலண்டரில் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.கட்டிலிலிருந்து சரிந்த போர்வை, தரையில் விரிந்து கிடந்தது.
மாலை வெயில் அடங்கிக் கொண்டிருந்த சமயம் இருள் அறைக்கு அப்பாலிலிருந்து பரவிக் கொண்டிருந்தது.

10
வெளியுலக இறுக்கம் அவிழ்ந்து சொற்கள் சொட்டு சொட்டாக அறைக்குள் புகுந்து கொண்டிருந்தன.
அவன் காதுகளைப் பொத்திக் கொண்டு, கட்டிலுக்கடியில் நுழைந்து பார்த்தான்.சன்னலின் வழியாக வெளியேற முயன்றான்.
கயிற்றை இறுக்கி உற்றத்தில் தொங்கவிட்டான்.
உடல் செயலிழந்து தரையில் வீழ்ந்து துடித்தது.

12
அந்த எழுத்தாளன் எழுதியிருந்த முடிக்காத அந்தக் கதையின் தலைப்பு :‘ஓர் எழுத்தாளனின் கடைசி சில நாட்களுக்கு முன்பான அவனது அறை'
அந்தக் கதையில் இருந்த கடைசி வரி :
எழுத்தாளனின் மாய உடல் அகற்றப்பட்டு சரியாக ஒரு நாள் ஆகியிருந்தது.

நன்றி
உயிரோசை வார இதழ்

“மணமகள் தேவை விளம்பரம்” சிறுகதை




“மணமகள் தேவை விளம்பரம்”

கே.பாலமுருகன்




பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்ததும் எல்லோரும் என்னை அடையாளம் கண்டுக் கொண்டார்கள். வாசலிலேயே அமர்ந்திருக்கும் கணபதி ஐயா விருட்டென திரும்பிக் கொண்டு நாளிதழை புரட்டத் தொடங்கினார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் டைப்பிஸ்ட் சுதாவும் அவ்வளவாக என்னைப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

“என்னா தம்பி வேணும்?”

“வெளம்பரம் கொடுக்கனும்?”

“எத்தனை பக்கத்துக்கு?”

“எத்தனைப் பக்கம் வரைக்கும் கொடுக்கலாம்?”

“கால் பக்கம், அரை பக்கம், முழு பக்கம், ஆனா ஒரே பக்கம்தான் லிமிட்டேட்”

“சரி அப்பனா ஒரு முழு பக்கம் கொடுத்தரலாம். எவ்ளெ?”

“100 வெள்ளி வரும் தம்பி. எதைப் பத்தி கொடுக்கப் போறிங்க?”

“மணமகள் தேவைனு”

“அதுக்கு யேன் முழுப் பக்கம்?”

“காசு தந்துடுறேன். . முழுப் பக்கமே போட்டுருங்கெ, இந்தாங்க வெளம்பரம் பத்தி எல்லாமே இருக்கு இதுலே”



மணமகள் தேவை

என் பெயர் அசோகன்.(பேசும்போது நடிகர் அசோகனைப் போல கை கால்களெல்லாம் அசைக்க மாட்டேன், கவலை வேண்டாம்). வயது 32. இன்னமும் திருமணம் ஆகவில்லை, முதல் திருமணம்கூட ஆகவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. தொடர்ந்து முயன்று வருகிறேன். பக்கத்து வீட்டுக் கிழவி சொன்னாள், ”கடைசி காலத்துலே பேச்சு துணைக்காவது ஒரு துணை வேண்டும்” என்று, ஆதலால் பேச்சுத் துணைக்காகவும் நான் ஒரு மனைவியைத் தேடுகிறேன் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிற்சாலையில் கண்கானிப்பாளராக 12 வருடங்கள் தேய்கிறேன். உயரமான தோற்றம், சுமாரான நிறம், கண்களுக்குக் கீழ் கருவலையங்கள் இருக்கும்(பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுக்கப் பல கட்டுரைகள் எழுதிய நேரங்களில் தூக்கம் கெட்டதால் இந்த அடையாளம்).

முகத்தில் இரண்டு இடங்களில் தடிப்பான பருக்கள் இருக்கும். பெரிய மீசையெல்லாம் இல்லை. மிகவும் எளிமையாகக் காட்சியளிப்பேன். அடிக்கடி காய்ச்சல் வரும். நான் வேலை செய்யும் தொழிற்சாலையில் அன்னிய நாட்டுத் தொழிலாளிகளுடன்தான் புழங்குகிறேன். அவர்களின் வாழ்க்கைமுறைக்கு எதிரான பின்னனி என்னுடைய கலாச்சாரம். ஆதலால் அடிக்கடி காய்ச்சல் வரும்.(எப்படி? ரொம்ப யோசிக்க வேண்டாம்)

மணமகள் எப்படி இருக்க வேண்டும்?

மணமகள் சுமாரான நிறத்தில் இருந்தாலும் கன்னத்தில் மச்சம் மட்டும் இருக்கக்கூடாது. இரவில் திடிரென்று விழித்து அவள் முகத்தைப் பார்க்க நேர்ந்தால் எனக்கு மீண்டும் காய்ச்சல் வந்துவிடும்.(பூச்சாண்டியைக் கண்டால் எனக்குப் பயம். பூச்சாண்டிகளுக்குக் கன்னத்தில் தடிப்பான மச்சம் இருக்கும் என்று என் பாட்டிக் கதை விட்டிருக்கிறாள்) அடுத்தப்படியாக மணமகளின் எடை 55 கிலோக்குக் குறைவாகவும் 48 கிலோவிற்குக் கூடுதலாகவும் இருக்க வேண்டும்.( நான் அவ்வப்போது என் மனைவியைத் தூக்கிக் கொண்டு கடற்கரையோரமாக நடக்க வேண்டும் என்று இலட்சியம் கொண்டவன். அப்படியே கடலில் தூக்கி வீசிவிடுவேன் என்று அச்சம் கொள்ள வேண்டாம்)

மணமகள் சினிமா பைத்தியமாக இருக்கக்கூடாது, அதிலும் சீரியல் பைத்தியமாக இருக்கவே கூடாது. பழி வாங்கும் எண்ணங்களையும் பழித் தீர்க்கும் வழிமுறைகளையும் கற்றுக் கொடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தப்படும் தமிழ் சீரியல்களை நான் என் வீட்டுக்குள் அனுமதிப்பதே கிடையாது.(வீட்டிற்கு வெளியே வேண்டுமென்றால் தொலைகாட்சியைப் பொறுத்தி சினிமா பார்ப்பதைப் பற்றி பிறகு ஆலோசிக்கலாம்)

நான் அவ்வப்போது அயல்நாட்டு கலைப்படங்களைச் சலிக்காமல் உறங்காமல் பார்த்துத் தொலைவேன். என்னுடன் சேர்ந்து கொண்டு அந்தப் படத்தை இரசித்துப் பார்க்க வேண்டும். கொஞ்சம்கூட கண் சிமிட்டாமல் கலைப்படங்களின் அபாரத்தில் கரைந்துவிட வேண்டும். அடுத்தப்படியாக இரவில் குரட்டைவிடும் மனைவியாக இருந்தால் சிறப்பு. என்னுடன் போட்டி போட ஒரு ஆள் கிடைத்தால் மகிழ்ச்சிக் கொள்வேன்.

மணமகள் திறந்த மனப்போக்கு உடையவளாக இருந்தால் நல்லது. நான் அடிக்கடி நகைச்சுவை கதைகள் சொல்வேன். சிரிப்பு வரவில்லையென்றாலும் பாசாங்குத்தனமாகச் சிரித்தாவது என்னைத் திருப்திப்படுத்த வேண்டும். என் மனம் மகிழ்ந்து, இன்னும் நிறைய கதைகள் சொல்லத் தொடங்கினால், ஓயாமல் சிரித்து கோமாளியாக வேண்டும். (விழுந்து சிரித்தாலும் அது எனக்கு அளிக்கும் கௌரவம்தான்)

மணமகள் எல்லாவிதமான ஆடைகளையும் அணியக்கூடியவளாக இருக்க வேண்டும். என்னால் கடைகளுக்குச் சென்று துணி தேர்வில் ஈடுபட முடியாது. மனம் அதில் இலயிக்காது என்பதால் மணமகள் துணி தேர்வில் தனது ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பப்படி ஆடை இராஜ்யம் நடத்திக் கொள்ளலாம்.



மணமகள் அடிக்கடி என்னிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அவள் அவளுடைய அம்மா வீட்டிற்குக் கிளம்பிப் போய்விடலாம். இரண்டு நாள் கழித்து தகவல் கொடுத்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். முக்கியமாகச் சொல்லவேண்டுமென்றால், மணமகள் காணவில்லையென்றால் ஊரைக் கூட்டி ஆரவாரம் செய்யும் குணம் எனக்கில்லை. கடைசியாக நான் மணமகளுக்குக் கொடுக்கும் சுதந்திரம், நான் கட்டுப்பாடிழந்து அவளை அடிக்க நேர்ந்தால், அவளும் தமது கட்டுப்பாட்டினை இழக்கும்போது என்னை அடிக்கலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே கட்டுப்பாட்டை இழக்கப்போவதைப் பற்றித் தெரிவித்துவிட வேண்டும்.

(பின்குறிப்பு: இந்த மணமகளுக்கான விளம்பரம் அடுத்த மாதம் கடைசிவரை செயல்பாட்டில் இருக்கும். பிறகு கட்டுப்பாடுகள் மாற்றியமைக்கப்படும். முந்துவோருக்கு முதல் சலுகை. என்னைத் திருமணம் செய்து கொள்ளும் மணமகளுக்கு இலவசமாக ஒரு வீட்டை அவள் பெயரில் எழுதி வைப்பேன்.( ஆனால் அந்த வீடு கடனில் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பற்றிப் பிறகு விளக்கமாகத் தெரிவிக்கிறேன்) நன்றி. அவசரம். 8 வருடமாக முயற்சி செய்கிறேன். மணமக்கள்களே முந்துங்கள்.

2

மீண்டும் ஒரு புதிய விளம்பரத்துடன் உள்ளே நுழைந்ததில் பலருக்கு அதிருப்தி போல. பத்திரிக்கை ஆசிரியர் வெறுப்புடன் என்னைப் பார்த்தார். முகத்தில் சலிப்புத் தட்டியது. எப்படியும் இரண்டு வாரத்தில் வந்துவிடும். என் விளம்பரம் குறித்து பலமான எதிர்வினைகள் வந்து கொண்டே இருப்பதாகப் பலர் சலனப்பட்டுக் கொள்வதுண்டு. அதில் ஒன்றை எடுத்து அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் என்னிடம் காட்டினார்.


அன்புள்ள ஆசிரியருக்கு,

கடந்த வாரம் தங்களின் பத்திரிக்கையில் மணமகள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். யார் அந்தக் கோமாளி? இந்த மாதிரியான விளம்பரங்களை எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள்? காசுக்காகவா? வேண்டுமென்றால் அந்தப் பணத்தை நான் இலவசமாக உங்களின் பத்திரிக்கை முன்னேற்றத்திற்காக அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து பெண்களை இழிவுப்படுத்தும் இந்த மாதிரியான சில்லறைத்தனமான விளம்பரங்களைப் போடாதீர்கள். அந்த ஆளைச் சந்தித்தால், அவன் முகத்தில் பளார் என்று அறைய நான் காத்திருக்கிறேன் என்று தெரியப்படுத்துங்கள். அவனுக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் ஆகாது என்பதையும் என் சார்பாகச் சொல்லிவிடுங்கள்.

நன்றி-மணிமேகலை


“என்னா சொல்றீங்க இதுக்கு?”

“பாவம் சார் இந்தப் பொண்ணு! அதுக்கும் பல வருஷம் கல்யாணம் ஆகல போலே. . ஆர்வமா விளம்பரத்தெ பார்த்திருக்கும். . அதான். . விடுங்க சார். . பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தாகூட தப்பா போச்சி சார். . காலம் காலமா ஒரே மாதிரியான வாழ்க்கையெ வாழ எனக்கு விருப்பம் இல்லெ சார். . இந்தாங்க புது விளம்பரம். . போட்டுருங்க சார்”

“மன்னிச்சிருங்க சார் .. போட முடியாது. வாசகர்களுக்கிட்டருந்து பயங்கரமான கடிதம்லாம் வருது. மன்னிச்சிருங்க”

“சரிங்க சார். . எனக்குக் கல்யாணமே ஆகாதுனு நாகரிகமா சாபம் விடுறிங்களா?”

“அப்படிலாம் இல்லெ. .”

“சரி சார்.. நான் வேற பத்திரிக்கைலே இந்த விளம்பரத்தெ கொடுத்துப் பாக்கறேன். . கண்டிப்பா என் கல்யாணத்துக்கு உங்களுக்கும் அந்த மணிமேகலைக்கும் பத்திரிக்கை கொடுப்பேன். . வரேன் சார்”


ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

Tuesday, November 18, 2008

அநங்கம் மலேசிய தீவிர சிற்றிதழ்






அநங்கம்
மலேசிய தீவிர சிற்றிதழ்



மலேசிய ஆளுமைகளை எழுத்தாளர்களை வாசகர்களை இணைப்பது






ஆசிரியர்
கே.பாலமுருகன்






து.ஆசிரியர்
ஏ.தேவராஜன்






ஆசிரியர் குழு
ப.மணிஜெகதீஷ்
கோ.புண்ணியவான்
செ.நவீன்
மோ.கவிதா






ஆலோசகர்கள்
ம.நவீன்
மஹாத்மன்

Sunday, November 16, 2008


“காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”

1


“வணக்கம். நான்தான் இயக்குனர் பாராங்மணியம், சார் இருக்காங்களா?”

“ஒகே. . உள்ள வாங்க, சார் உக்கார சொன்னாரு”

உள்ளே நுழைந்ததும் அலுவலகத்தின் வரவேற்பறையில் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள் இருந்தன. தயாரிப்பு கம்பெனி என்று சொல்வதைவிட அதிகமான சவுக்காரம், பல் துளக்கும் பிராஸ், முகக் கண்ணாடி, போன்ற பொருட்களின் விளம்பரத் தயாரிப்புகள்தான் நடந்துள்ளன. அதனால் அந்த இடத்தை குளியலறை விளம்பரக் கம்பெனி என்றுகூட சொல்லலாம். அதன் தயாரிப்பாளர் திறந்த மனப்பான்மையுடையவர். ஒரு தடவை துண்டு விளம்பரத்தை தயாரித்திருந்தார். மோடல்? அவரே நடிக்கத் தயாரானார். விளம்பரம் இப்படித்தான் இருந்தது:

காராவாடை பளபள துண்டு-விளம்பரம்

வெகுநேரம் பின்புறம் மட்டும் காட்டப்படும் ஓர் உருவம் தெரிகிறது. கால்களில் அடர்த்தியான சுருள் முடிகள் குளோசாப்பில் காட்டப்பட்டு, காமிரா மேலே ஏறுகிறது. பிட்டம் மறைத்த கலர் துண்டின் முழு வடிவம் தெரிகிறது. துண்டு கட்டியிருப்பவர் இலகுவாக நடந்து குளியலறையிலிருந்து வெளியேறுகிறார். வெளியே வந்ததும் துண்டைக் கழற்றுகிறார். இப்பொழுது முகம் மட்டும் காமிராவில் தெரிகிறது. யூனிட்டே வயிறு குழுங்கச் சிரித்து, பிறகு அது காமெடி கலக்கலாக மாறியது வேறு கதை. காமிராவில் நம் தயாரிப்பாளர் காண்டாமணி. சிரித்துக் கொண்டே சொல்கிறார், “ ஆ! ஆ! என்ன குளுமை. . கதகதப்பு. . உடலில் இருக்கும் நீரை வழித்து எடுத்துவிடும். . வாங்கிப் பயன்படுத்துங்கள், காராவாடை பளபள துண்டு! துண்டு ! துண்டு!”

துண்டு ஒரு வாரத்திலே கலர் மங்கிவிடும் என்பதைப் பற்றி காண்டாமணி தந்திரமாக மறைத்ததுதான் விளம்பரத்தின் வெற்றி.

2

“வாங்க! வாங்க! மணியம். எப்படி இருக்கிங்க?”

“நல்லாருக்கன் சார்.”

“நான் சொன்ன மாதிரி 3 படத்துக்கான கதைகளை ரெடி பண்ணிட்டிங்களா? அவசரம் மணியம். காசு கையிலே இருக்கும் போதே எடுத்தறனும். . 2 படமாவது ஆஸ்காருக்குப் போகனும் மணியம். நம்ப நாட்டுலே தமிழ்ப்படங்கள் பெறும்பாலும் பேய்படங்கள் மட்டும்தான் வருது. நல்ல படங்கள் இல்லை. இந்தியா அளவுக்கு நம்பளும் படம் எடுத்து முன்னேற இதான் வாய்ப்பு”

“எல்லாம் கதையும் ரெடி சார்! ரெண்டு வாரமா துக்கம் இல்லாமே கதைங்களே உங்களுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிட்டேன் சார்”

“வேரி கூட். இப்படித்தான் இருக்கனும். . சரி ஒன்னு ஒன்னா சொல்லுங்க மணியம்”

முதல் படம்: கார் வருது மோட்டார் போகுது

“சார் இந்தப் படத்துலே மொத்த நடிகர்களே 4 பேர்தான். . ரெண்டு காதல் ஜோடிகள். படம் முழுக்க ரோட்டுலதான்”

“யேன்பா ரோட்டுல?”

“கடசியா அங்கத்தானே வரப் போறிங்க”

“என்னயா?”

“இல்ல சார், வித்தியாசம் சார். . ஒரு காதல் ஜோடிகள் கார்ல வராங்க, இன்னொரு காதல் ஜோடிகள் மோட்டார்லே வராங்க சார். . இந்த ரெண்டு ஜோடிகளும் மாறி மாறி மோட்டார்லயும் கார்லயும் எங்கயோ போறாங்க, அதையே காட்டறம், 18 காதல் பாட்டுகளும் கூடவே வருது, 2 டீம் மியூசிக்.”

“யாருப்பா இசை?”

“வெளிநாட்டுலேந்து இறக்குமதி பண்றம் சார், முடிஞ்ச வரைக்கும் 10 இசைக் கலைஞர்கள். ஒரு ஆளுக்கு ஒரு கோடி தரனும். . .”

“ஆ! அற்புதம்யா”

“”மோட்டரு, காரு, மோட்டரு, காரு, மோட்டரு ,காரு. . கடசில ரெண்டு காதல் ஜோடிகளும் அடிப்பட்டு செத்துர்றாங்க. . நம்ப படத்தெ முடிக்கறம். .”

“ஏன்ப்பா சாவறாங்க?”

“அப்பத்தான் பரிதாபத்தைச் சம்பாரிக்க முடியும். படம் ஓடனுமா இதான் வழி. . கடசி கட்டத்துலே படம் முடியும்போது, மோட்டார்லெ வந்த ஹீரோ மட்டும் சாவறத்துக்கு முன்ன ஒரு வசனம் பேசறாரு சார். . உலக சினிமாவலே யாரும் சாவறத்துக்கு முன்ன பேசாத வசனம் சார்”

“என்ன வசனம் மணியம்?”

“ரெண்டு நிமிசம் ஹீரோ எச்சில் துப்பறாரு, ரத்தமா கொட்டுது. . “ஆ! ஆ! வாழ்வே மாயம்ப்பா. . .this was a good accident!” என்று சொல்லிட்டு பட்டுனு இழுத்துகுது, ரெண்டு நிமிசம் துடிச்சிட்டு செத்துறார்ரு”

“வாவ். . . அருமை! அருமை!”

இரண்டாவது படம்: “அப்பறம் வீட்டுப் பக்கமா வாங்க”

“சார் இந்தப் படம் இதுவரை யாருமே பேசாத கள்ளக் காதல் கதை. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நூற்றாண்டின் சிறந்த கதை சார். . அசத்தலாம்.”

“நல்ல நல்ல கதையா கொண்டு வரப்பா நீ, ரியலி கூட்”

“சார் மாற்றுச் சிந்தனை வேணும். அப்பத்தான் தனித்துத் தெரிய முடியும். . ஓகே சார் கதையில ஒரு 200 தடவை “அப்பறம் வீட்டுப் பக்கமா வாங்க” என்ற வசனத்தைப் பயன்படுத்தறம் சார். ஒவ்வொரு தொனியில. ஒரு பெண்ணும் பல கள்ளக் காதலன்களும்தான் இந்தப் படத்துலே நடிக்கனும்”

“அவ்வளவு நடிகர்களா? யாரை நடிக்க வைக்கப் போறீங்க?”

“சார் நம்ப அசல் சினிமா தரனும். அதான் லேட்டஸ். அதனாலே பேப்பர்ல விளம்பரம் தரலாம், “கள்ளக் காதல் படத்துக்கு நடிகர்கள் தேவை, அசலான சினிமா என்பதால் யாரெல்லாம் உண்மையாக சமீபக் காலமாகக் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறீர்களோ அவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்’ எப்படி சார்?”

“யோசனை கிங் நீங்க”

“அப்பறம் படம் முழுக்க ஒரே கள்ளப் பாட்டு சார். .”

“கள்ளப் பாட்டா? அது எப்படி?”

“கள்ளப் படம் எடுக்கறம்லே, அதனாலே ஏற்கனவே வந்த படத்தோட பாட்டை காப்பி பண்ணி கள்ளத்தனமா போடச் சொல்லிரலாம்”

“என்ன ஒரு மூளைப்பா ஒன்னோட”

“கள்ளக் காதலெ நியாயப்படுத்திக் காட்டி, வரலாறுலே இடம் பிடிக்கப் போது சார் இந்தப் படம். . கடசி கட்டம்தான் உலக திருப்பம். . எல்லாரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் கடசி கட்டம் இந்தப் படத்துலே இருக்கு சார்”

“அது எப்படிப்பா?”

“கடசி கட்டம், கள்ளக் காதலனோட இருக்கும்போது அவளோட புருஷன் உள்ள வந்து அந்தக் காட்சியெ பார்த்துடறான் சார்”

“ஐயோ! அப்பறம்?”

“உடனே அவன் முகத்து உணர்ச்சிகள கிட்டத்துலே காட்டறம். மிகையான எந்த வெளிபாடும் இல்லாம மார்லன் பிராண்டோ மாதிரி, இலேசான முனகல். . அப்பறம். . இலேசான ஆ! ஆ! ஆ! என்ற முனகல். . அப்பறம் சடார்னு ஒரு வசனம் பேசறாரு. . “ தம்பி! உலகத்துலே இன்னிக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களோட எண்ணிக்கை 25 கோடியே 40 லட்சம், அதுலே நல்லா வாழ்றவங்களோட எண்ணிக்கை 18 கோடி 23 லட்சம், புருஷனெ பிரிஞ்சி வாழ்ற மனைவிகளோட எண்ணிக்கை 8 கோடியே 13 லட்சம், கள்ளக் காதல் வச்சிருக்கும் ஆண்களோட எண்ணிக்கை 12 கோடியே 13 லட்சம், கள்ளக் காதல் வச்சிருக்கும் பெண்கள் 10 கோடியே 35 லட்சம், அதுல புருஷனுக்குத் தெரிஞ்சே கள்ளக் காதல் வச்சிருக்கும் பெண்கள் 85 லட்சம். . இப்பெ 85 லட்சத்து ஒன்னு. . ஆ! ஆ! ஆ!”


“தம்பி உலக சினிமாவே தோற்றுப் போயிரும்பா”

“ஆமாம் சார். . இதுலெ வரும் 5 பாட்லயும் மழை பேயுது சார். . “குட்டி மழையே சட்டி தலையா, பெட்டி எங்கெ, முட்டிக்கோடா. . அப்படினு ஒரு பாட்டு சார். . அப்படியே 45டிகிரலே மழை பேயுது, இந்தக் கிராபிக் இதுவரைக்கும் யாருமே பண்ணிருக்க மாட்டாங்க சார்”


மூன்றவது படம்: கிங் மேக்கரும் எருமைமாடும்

“சார்! இந்தப் படம் இதுவரைக்கும் வெளிவந்த எல்லாம்வகையான கதாநாயகத்துவ சினிமாக்களையே தோற்கடிச்சிரும் சார்! அந்த அளவுக்கு ஹீரோஷம் சார்”

“சரிப்பா. . கதையே சொல்லு”

“படத்துலே கதையே இல்ல சார். . அங்கத்தான் வெற்றியே இருக்கு! மாத்தி மாத்தி அதே ஹீரோவெ பல ஏங்கள்ளே காட்டிக்கிட்டே இருக்கோம், படம் முழுக்க அதுதான், 32 இடங்களுக்குப் போய் 8 பாட்டுக்கு சாட் போடறம். . 54 ஹீரோன்யிகளை வரவழைக்கறோம், எல்லாமே செக்ஸி உடைகள், ஒரு சினிமாவுக்கு உடைக்கு மட்டும் உலகத்துலே வேற எங்கயும் செலவு பண்ணிருக்கக்கூடாது சார். . 43 கோடி சார். எப்படி?”

“தம்பி என்னயே எங்கயோ கொண்டு போறிங்க.. தாங்க முடிலே”

“சார், இதுக்கே இப்படிச் சொல்றீங்க. இன்னும் இருக்குலே. . ஒரு கட்டம் ஹீரோ நடந்து வரும்போது பின்னனி சத்தம் கொடுக்கறம் சார், 4 புல்டோசர், 8 லாரி, 15 இடி இயக்கி இயந்திரம், 32 வகையிலான இயந்திர ஒலி. . அப்படியே பாக்கறவங்களோட காது ஜவ்வு கிளிஞ்சி தொங்கனும் சார், உலக சினிமாவுலே இல்லாத சத்தம், அதும் ஒரு ஹீரோ நடந்து வரும்போது”

“தம்பி! இப்பயே எனக்கு கிறங்குது”

“அப்பறம் சார், ஒரு கட்டத்துலே ஹீரோ கோபமா நடந்து வறாரு, அப்ப காமிராவே மக்களோட பார்வையிலேந்து காட்டறம், அவுங்க கண்ணுக்கு ஹீரோ திடீர்னு புலி மாதிரி தெரியறாரு, அந்த இடத்துலே மிருககாட்சி சாலையில உள்ள எல்லா மிருகம் மாதிரியும் ஹீரோவெ காட்டறம், திடீர்னு காண்டாமிருகம் மாதிரி, திடீர்னு யானை மாதிரி, திடீர்னு வண்ணாத்தெ பாம்பு மாதிரி, திடீர்னு குதிரை மாதிரி, இப்படி எல்லாம் மிருகத்தையும் குளோசாப்லே ஹீரோ வர்ற சீனுக்குப் பயன்படுத்தறம் சார். . எது ஹீரோணு மக்கள் குழம்பி போகனும் சார்”

“ஆஹா! ஆஹா! அற்புதம்”

“ஒரு கட்டத்துலே சார், ஹீரோவே கமிராவுலே வச்சி கிராபிக் பண்ணி நாலு பிம்பமா காட்டறம், அப்படியே பிரிச்சி எடுக்கறாரு சார் ஹீரோ, நாலு எதிரிகளை ஒரே நேரத்துல வேற வேற எடத்துலே வச்சி அடிக்கறாரு சார். . உலக அற்புதம் சார். . அப்படியே கழுத்துலே கயிறு கட்டி பறக்க விடலாம் சார். . தொங்கிக்கிட்டே போய் அடிக்கறாரு”

“தம்பி. . இதுலாம் கேட்டுவிட்டு ஒரு பெரிய நம்பிக்கையே வந்துருச்சிப்பா. . இந்திய சினிமாவே காப்பிப் பண்ணாமே ரொம்ப சுயமா யோசிச்சி அசத்தியிருக்கீங்க. . இந்த 3 படத்துக்கும் 78 கோடி செலவு பண்ண நான் தயார்ப்பா”

“சார், அந்த மூணாவது படத்தோட கடசி கட்டத்துலே நீங்க வர்றீங்க சார்”

“நானா? எதுக்குப்பா?”

“சும்மா ஒரு தமாஸ¤க்கு சார்! கடசியா வந்து ஒரு வசனம் பேசிட்டு ஒரு பாட்டுக்கு நம்ப எல்லாம் சேர்ந்து டான்ஸ் ஆடலாம் சார். . படத்துலே வேலை செஞ்ச யூனிட்டே டான்ஸ் ஆடலாம் ஹீரோகூட, இதுதான் படத்தோட கடசி கட்டம் சார்”

“ஓகேப்பா. என்ன வசனம் எனக்கு?”

“அவன் பல்லி அடிக்கிறது சில்லி! துள்ளி அடிக்கிறதுல கள்ளி! மொத்தத்துலெ அவன் ஒரு குள்ளி” ன்னு சொல்லிட்டு “உலக கில்லிகளே. . உலக பல்லிகளே. . அமசோன் காடும் உன்னை அழைக்கும். . ஜட்டியே ஒழுங்கா போடு. . எருமைமாட்டுப் பயலே நீ வா. . before you go, I want with you” அப்படினு பாட்டு முடிய படமும் முடியுது சார்”

“தம்பி படத்தோட பேரு ‘கிங் மேக்கரும் எருமைமாடும்’ ன்னு சொன்னிங்க, ஆனா படத்துக்குச் சம்பந்தமா வரலியே?”

“சார் உங்களுக்காகவே அந்தப் பேரு வச்சேன் சார். . நீங்க கடசி கட்டம் வரும்போது எருமைமாட்டுலே உக்காந்துகிட்டுதான் வர்றீங்க, எப்படி? அப்பக்கூட உங்க தலைலே முகத்துலே சுருள் சுருளா நிறைய முடி தொங்குது. . நீங்க மூனு விதமா குரல் மாத்தி மாத்தி பிறழ்வு ஸ்டைல்ல பேசறீங்க. . குரல் மாறும் போது உங்க தலைமுடியும் மாறி பிரபஞ்ச அதிசியத்தைக் காட்டப் போறீங்க சார். . குண்டலகேசி கும்மா மண்டலகேசி கம்மானு அடிக்கடி டைலாக் விடுறீங்க”

தயாரிப்பாளர் தலை சுற்றி ஆனந்த பெருவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அடுத்த தலைமுறையின் தமிழ் சினிமா எழுந்து திடமாக நின்றது.

முடிவு



--------------------------------------------------------------------------------


ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

எல்லாமும் நகர்வில்தான்


உலகம்
நகர்கிறது
கிழமைகளும்
கரைகின்றன
காலம் ஊர்கிறது
என் சவத்தின் மீதேறி



இங்கு
எல்லாமும்
நிகழ்ந்து முடிந்து
மீண்டுமொரு நகர்தலில்
தொடங்குகிறது
நேற்றிருந்த நினைவுகளை
விழுங்கி தின்று தீர்த்தவாறு