அடுக்குமாடி வீடுகளின் வாசலில்
யாராவது காலணிகளைத்
தேடிக் கொண்டு
வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்!
3வது மாடி
சிவகுமார் அண்ணனின்
காலணி 4வது மாடியின் வாசலில்
எங்காவது சிரித்துக் கொண்டிருக்கும்!
ஒவ்வொரு நாளும்
காலணியைத் தேடிக் கொண்டு
பலர் மாடி ஏறுகிறார்கள்
இறங்குகிறார்கள்!
பொருந்தாத காலணிகளைக்
கால்களில் சுமந்து கொண்டு
முகம் தெரியாத சிறுவர்கள்
மாடிக்கு மாடி
ஓடுகிறார்கள்!
காலணி பஞ்சம்
ஏற்படும் போதெல்லாம் அ
டுக்குமாடி சிறுவர்களைத்தான்
தேட வேண்டும்!
இங்குள்ளவர்கள் எதையாவது
தேடிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்
காலணியைத் தொலைத்துவிட்டு
நிற்கும் சிறுவனைப் போல!