Peter sattaler இயக்கி இவ்வருடம் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான படம் ஆகும்.
அநேகமாக அடுத்த ஆண்டில் பல விருதுகளைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் படமாகும்.
தன்னுடைய சிறுநகரத்தைவிட்டு இராணுவத்தில் சேரும் ப்லோண்டி எனும் ஓர் இளம் பெண்ணுக்கும்
Guantanamo சிறையில் 8 வருடமாக அடைப்பட்டிருக்கும் அல்கைடா தீவிரவாதி என நம்பப்படும் அலி
என்பவருக்கும் இடையில் உருவாகும் ஒரு மெல்லிய நட்புதான் படத்தின் கதை. குவாண்டனமோ 1990களில்
நிறுவப்பட்ட உலகின் மிகவும் கொடூரமான மனித வதைகள் நடந்த சிறைச்சாலையாகும்.
11 செப்டம்பர்
சம்பவத்திற்குப் பிறகு பல இஸ்லாமியர்கள் அல்கைடாவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லி அங்கு அடைக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர்தான்
ஜெர்மனிய விரிவுரையாளர் அலி. ஆனால், திவீரவாதி என்றே அங்கு 8 வருடங்களைத் தனிமையில்
கழிக்கிறார். அன்பான உரையாடல்கள் இல்லாத, கவனிப்புகள் இல்லாத பெண் வாடையே இல்லாத ஒரு
பயங்கர நரகமாக மாறியிருக்கிறது அவரின் அறை. ஆனால், படத்தின் முதன்மை கதைப்பாத்திரமான
ப்லோண்டி எனும் இளம் பெண் அவர்களின் வருகை, அலி என்பவனின் வாழ்க்கைக்குள் ஒரு கிளர்ச்சியை
உருவாக்குகிறது. அது நெடுங்கால இறுக்கத்தின் உடைவாக மாறி அலி மீண்டும் ஒரு மனிதனாக
மாறும் தருணம். படத்தில் மனித வதைகள் காட்டப்படவில்லை. அப்படியென்றால் குவாண்டனமோ மிகவும்
அமைதியில்தான் இருந்தது போன்ற ஒரு தவறான எண்ணம் எழுகிறது.
கதையில் வரும்
அலி, தான் குற்றவாளி அல்ல என்றே அந்த எட்டு வருடங்களும் கத்தி கதறி சொல்லி உச்சமான
மன எழுச்சிக்குப் பலமுறை ஆளாகி தன்னை வருத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமாக வருகின்றான்.
கடைசிவரை அவன் உண்மையில் அல்கைடா தீவிரவாதியா அல்லது இல்லையா என்பது படத்தில் முதன்மையாக
விவாதிக்கப்ப்டவில்லை. சில நேரங்களில் தன் மீதான குற்றத்தைச் சாடும் வகையில் அமெரிக்கா
இராணுவத்தைப் பழிக்கின்றான். சில சமயங்களில் தான் குற்றவாளி அல்ல என முனகுகின்றான்.
ப்லோண்டி அங்கு
வந்த நாட்களில் முதலில் அவளை அவமானப்படுத்துகிறான். தன் மலத்தை அள்ளி அவள் மீது வீசுகிறான்.
அவனுடைய அந்தச் செயல் முதலில் அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால், பிறகு மெல்ல
அவனை அவனது 8 வருடத் தனிமைக்குள் வைத்துப் புரிந்து கொள்கிறாள். அலி அவளிடம் சதா தனக்கு
ஹாரி போட்டர் நாவல் வேண்டும் எனக் கேட்கிறான். குவாண்டனாமோவில் அந்த நாவல் முன்பு இருந்ததாக
வாதிடுகிறான். ஆனால், அவளுக்கு அந்த நாவல் தட்டுப்படவில்லை. அதுவே அலிக்கு மிகவும்
ஏமாற்றமாக இருக்கிறது.