மொழிப்பற்றுடைய அன்பிற்கினிய தி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களுக்கும் அலைவரிசையின் தலைமைத்துவத்திற்கும், ஒரு கவிதையுடன் இக்கடிதத்தைத் தொடங்கும் இந்தத் துரோகியை மன்னித்தருளும்.
“எவ்வளவு முயன்றும்
தவிர்க்க இயலாமல்
கேட்டுத் தொலைகிறேன்
அவசர பயணத்தின்போதும்
கோபம் தலைக்கேறிய சமயங்களிலும்
சில சமயங்களில் வழியில்லாமலும்
இந்த அலைவரிசையை.
பலமுறை வற்புறுத்தி
உறுதிப்படுத்திக் கொள்கிறேன்
இந்த அலைவரிசை தமிழுக்காகவும்
தமிழ் இனத்திற்காகவும் அறிவுடைய சமூகத்தை
வளர்த்தெடுக்கவும் என.
ஆனால் உதிர்ந்த இலைகளின் சாட்சியங்களாக
விரக்தியோடு தேங்கிக் கிடக்கிறது
எனது கனவுலகத்தின் வசந்தகாலம்
எல்லாமும் பொய்யென
கரைந்துவிடுகிறது.
தொலைத்தூர மாயையென
ஒரு சிலரின் குரல்கள்
ஒலிக்கத் துவங்குகின்றன
“enjoylaaaa”
ஒவ்வொருநாளும் காலையில் விழித்ததும் உங்களின் அலைவரிசையின் குரலில்தான் கழிக்கிறேன், மன்னிக்கவும். . . . முழிக்கிறேன், தங்களின் குரல்களுக்கு நான் அடிமையின் அடிமை, மிகுந்த பக்தி நிறைந்தவன் என்றெல்லாம் ஒப்புவிக்க எனக்கும் ஆசைத்தான். அடுத்த திரேத்தா யுகத்தில்(இராமாயணம் நிகழ்ந்த காலக்கட்டம் என்பார்கள், கலியுகம் தீர்ந்ததும் பூமி தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும், உலக வளர்ச்சி மீண்டும் தொடங்கும் என்பது வேத வழக்கமாகும்) இந்த அலைவரிசை மீண்டும் தொடங்குமென்றால், அப்பொழுது கண்டிப்பாக தங்களின் அலைவரிசையின் அற்புதமான அறிவுத்திறமிக்க குரல்களுக்கு நிச்சயம் ஓர் அடிமையாகப் பிறப்பேன். அது என்னுடைய 20 ஆவது அவதாரமாகவும் இருக்கக்கூடும்.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)
அவ்வப்போது மிகவும் எதார்த்தத்தின் மோதல்கள் போல தற்செயலாக தங்களின் தமிழ் அலைவரிசையைக் கேட்டுவிடுவதுண்டு. அந்தச் சொற்ப நிமிடங்களில் அல்லது நான் கேட்கும் நிமிடங்களில்லெல்லாம் தங்களின் அறிவிப்பாளர்கள் மிகவும் ஆரோக்கியமான மொழியில் தரமான தமிழில் உரையாடுவதைக் கண்டு “ நானும் ஒரு தமிழாசிரியனா?” என வெட்கப்பட்டதுண்டு. இருந்தால் தி.எச்.ஆர் ராகாவின் தூயத்தமிழில் உரையாடும் மொழி ஆற்றல்மிக்கவனாக இருந்து தொலைய வேண்டும் இல்லையென்றால் மதம் மாறி வேறு மொழியைப் பேசித் தொலைய வேண்டும் என்கிற ஆவேசம்வரை எனக்கு எழுந்துள்ளது.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)
திருக்குறளுக்கும் தன்முனைப்பு கவிதைகளுக்கும், ஏன் திருமந்திரத்திற்கும் நிகரான தங்களின் அறிவிப்பாளர்களின் எழுச்சிமிக்க குரலும் வாசகங்களும் என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்திவிடும் அபாயமும் எனக்குள் நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொள்கிறேன். குறிப்பாக “எஞ்சாய்லா. .” என்கிற தமிழ் அலைவரிசையின் தமிழ் வார்த்தையைத் தாரக மந்திரம் போல தமிழ்ச் சமூகத்திற்காக ஒலிக்கப்படும் இனிமையான சொல் போல அனைவரும் பருகி இன்பம் அடைந்து, வாழ்வின் அடையாளங்களைக் கண்டடையும் அதிசயத்தைப் பார்க்கும்போது, வீதி முழுக்க, வீடு முழுக்க “எஞ்சாய்லா. . எஞ்சாய்லா. . “ என இந்தத் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்த எழுச்சிக் குரலாக ஒலிக்க வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனம் எழுந்து என்னை இம்சிக்கின்றது.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)
இத்துடன் எனக்குள் ஏற்படும் இம்சை தீர்ந்துவிட்டாலும் பரவாயில்லை, அவ்வப்போது ஆண் அறிவிப்பாளர் ஒருவர் அரவாணியின் குரலில் அவர்களைக் கேலி செய்வது போல ஒலிப்பது பெருமைப்படுவதற்குரிய ஒரு விசயமாகும். தரமிக்க நமது தமிழ் சினிமாவைப் பற்றியும் அதில் நடித்து நமது நாகரிகத்தைப் புதுப்பிக்கும் நடிகர்களைப் பற்றியும் கேட்கப்படும் கேள்விக்கு யாராவது பிழையாகப் பதில் சொல்லிவிட்டால், உடனே ஒலிக்கிறது அந்த ஆண் அறிவிப்பாளரின் குரல் இப்படி, “ஆஆஆ பிழையா போச்சே. .”.. பெண் குரலைப் போல நகல் ஒலியை ஒலிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தின் பெயரில் அது அரவாணிகளைக் கேலி செய்யும் ஒரு குரலாக மாறிவிடும் நுட்பம் அறிந்திறாத அந்த ஆண் அறிவிப்பாளரின் அறிவாற்றலுக்கு முன் நான் மண்டியிட்டு அழ வேண்டி வந்துவிடுமோ என்கிற அச்சம் மண் புழுப் போல நெளிகிறது.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)
இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என 100 தேங்காய்கள் உடைத்தும் வேண்டுதல்கள் போலியாகிவிடுகின்றனவே. அடுத்ததாக நகைச்சுவை என எண்ணி மீண்டும் மீண்டும் பெண் குரலிலேயே அந்த ஆண் அறிவிப்பாளர் முயன்று வருவது, ஒட்டு மொத்த பெண் இனத்தையே நகைச்சுவைக்குரியவர்கள் என்கிற புரிதலாலா அல்லது பெண் குரலை ஓர் ஆண் நகலெடுத்தால் அது நகைச்சுவையாகிவிடும் என்கிற அடையாளக் கோளாறினாலா என்கிற பட்டிமன்றத்தைத் துவக்கி வைக்கும் அளவிற்கு தமிழ் தாகங்களை உற்பத்தி செய்து வரும் தி.எச்.ஆர் என்கிற தமிழ் அலைவரிசைக்கு எனது வணக்கங்கள் எவ்வளவு கொட்டித் தீர்த்தாலும் அடங்காது.
“இது எப்படி இருக்கு?” எனும் பிரமாண்டமான எவ்வித போலித்தனமும் நடிப்பும் இல்லாத பயன்மிக்க அதிர்ச்சி மதிப்பீடுகளை அள்ளி வீசும் தி.எச்.ஆர் ராகாவின் தமிழ் அலைவரிசையின் நிகழ்வு மிகவும் பிடித்தமானவை. ஒவ்வொரு நாளும் பல பக்தர்கள் இந்த நிகழ்வைத் தவம் கிடந்து கேட்கிறார்கள் என்பதை அறியும்போது, அந்த வாய்ப்பை அவ்வப்போது இழந்துவிடும் நான் ஒரு மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு உட்பட்டவன் ஆகிறேன்.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)
தி.எச்.ஆர் ராகா தமிழ் அலைவரிசையின் அறிவிப்பாளர்களான இருவர் என்ன செய்வார்களென்றால்: நண்பர்களின் மூலமாகவோ அல்லது உறவினர்களின் மூலமாகவோ குறிப்பிட்ட ஒரு நபரின் தொலைப்பேசி எண்ணைக் கண்டறிந்து அவருக்குத் தற்செயலாகத் தொடர்புக் கொண்டு வேறு ஒரு நபரைப் போல பேசி, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது அல்லது முட்டாள்களாக்குவது என்ற வடிவமைப்பில், கேட்டுக் கொண்டிருக்கும் அத்துனை இரசிகர்களையும் முட்டாளாக்கிவிடும் (சத்தியமாக இராதிகாவின் மெகாத் தொடர்கள் செய்யும் அதே அதீமேதாவித்தனம்தான்) ஆற்றல்மிக்க ஒரு நிகழ்வு அது. கண்டிப்பாக காலையில் அவசரமாகக் குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு வேலை இடத்திற்குப் பரப்பரக்கும் சமூகத்தின் எல்லாத்தரப்பினருக்கும் மிக ஏற்புடைய அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஓர் அற்புதமான நிகழ்வு. ஏமாளியாக தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் அந்த நபருக்குக் காலையிலேயே இவர்கள் உச்சரிக்கும் மந்திரம், “இது எப்படி இருக்கு?”.
அம்புலிமாமா அவர்கள் தனது பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
“இது எப்படி இருக்கு நிகழ்வு பற்றி என்ன நினைக்கிறீங்க?”
“அது அற்ப ஏமாளித்தனம். காலையிலேயே ஒருத்தன போன் பண்ணி ஏமாத்துறதெ ஒரு தமிழ் சார்ந்த அலைவரிசையே செய்துன்னா, தமிழ் சமூகத்திற்கே கேடுத்தான். . எந்த மொழியா இருந்தா என்னா? தப்பு தப்புத்தான். இதுலே பேசறாங்களே இவுங்களோட குரலே கேட்டா என்னா நமக்கு தெரியாதா? அதான் அன்னாடம் கேட்டுத் தொலையுறமே. . இவுங்களுக்கெல்லாம் பல குரல்லே பேசற ஆற்றலும் வல்லமையும் இருந்தாலும் ஏதோ நம்பலாம், ஆனா ஒவ்வொருத்தருக்கும் குரலோட தனி அடையாளம் இருக்கு, அதையும் அன்னாடம் கேட்கறோம், சீக்கிரமே பரிச்சயம் ஆயிடும், அப்பறம் என்னா “இது எப்படி இருக்கு? அது நொப்படி இருக்குனு” ஆளையே ஏமாத்துறாங்க?”
“சும்மா ஒரு ஜாலிக்குத்தானே”
“அது வேலை வெட்டி இல்லாதவங்க பண்ற வேலை, மக்களெ மகிழ்ச்சிப்படுத்த அதுவும் அங்கீகாரமும் பொருளாதார பலமும் இருக்கற அலைவரிசைக்கு வேற வழியா இல்லெ. எல்லாத்தையும் குறை சொல்லலிங்க, இதே அலைவரிசை ஏழ்மையான குடும்பங்களுக்காக நிகழ்ச்சி நடத்தி எவ்வளவோ உதவி பண்ணிருக்கு. அதை மறுக்கல. ஆனா அதுக்காக இவுங்க செய்யற மத்த தவறுகளையும் பலவீனங்களையும் கேள்வியே கேட்கக்கூடாதுன்னா, நாங்கலாம் என்னா அடிமையா?”
அம்புலிமாமா அவர்கள் கோபத்தில் அவசரமாக எழுந்து கழிவறைக்குச் சென்றுவிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களையும் கருத்துகளையும் ஏற்படுத்தும் அந்த நிகழ்வின் வருகைக்காக எனது ஆதரவு கொடியை உயர்த்துகிறேன். “இது எப்படி இருக்கு?” ஓங்குக, வாழ்க, வளர்க.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)
அடுத்ததாகவும் சில விமர்சனங்கள் எனக்கும் வழி விட்டுவிடு என முந்துகின்றன.
அந்த அலைவரிசையில் ஒரு தமிழ் சினிமாவின் பாடல் ஒலிக்கிறது. இதென்னாய்யா, அலைவரிசைன்னா அதுவும் தமிழ் அலைவரிசைன்னா தமிழ் பாடல் ஒலிக்கத்தானே செய்யும். பாடலையும் ஒலிப்பரப்புவதற்க்குத்தானே வானொலி நிலையங்கள்? ஆமாம், உண்மைத்தான். ஆனால் அந்தப் பாடல் முடிவடைந்ததும் தவறாமல் ஒரு விளம்பரக் குரலும் ஒலிக்கும். “இந்தப் பாடலை உங்கள் கைத்தொலைப்பேசிக்கு டவுன்லோட் செய்ய வேண்டுமா, உடனே நம்பரை அழுத்தி இந்த எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பிவிடுங்கள்” என. ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஏற்படும் இரசிகர்களின் திருப்தியும் அமைதியும் உடனே களையும்படி மிகத் திவீரமாக தனது விளம்பர குரலை ஒலிப்பரப்பும் அலைவரிசையை உற்சாகத்துடன் பாராட்டுகிறேன். வாழ்க நின் தமிழ் சேவை. மன்னிக்கவும் பல வியாபார நிறுவனத்திற்கு நின் வழங்கும் விளம்பர சேவை.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)
நள்ளிரவில் எதார்த்தமாக திறந்தாலும் சரி, மதியத்தில் தெரிந்தே திறந்தாலும் சரி இந்தத் தமிழ் அலைவரிசையில் கண்டிப்பாக யாரோ ஒருவரின் வியாபாரக் குரல் தனது வியாபாரத்தைப் பற்றியும் அதன் இயங்குத்தலத்தைப் பற்றியும் மிக விமர்சியாக பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். அவ்வப்போது இடைவேளையாக விளம்பரம் போல மக்களை மகிழ்ச்சிப்படுத்த அல்லது விடுதலையளிக்கும் வகையில் பாடல்கள் ஒலிப்பரப்பாகும். ஒருமுறை பயண நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் வசதிகளையும் வாய்ப்புகளையும் தெரிவித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன், அது சிறிது நேர விளம்பரம் என எண்ணி பாடலுக்காகக் காத்திருந்தேன். அரைமணி நேரம் கடந்தும் அவரே பேசிக் கொண்டிருந்தார், திடீரென அதிர்க்குள்ளாக்கும் வகையில் ஒரு பாடலைப் போட்டார்கள். சமாதனமாகக் கேட்டேன். பாடல் முடிந்ததும் அறிவிப்பாளர் பேசுவார் என நினைத்தேன், அடேங்கப்பா. . மீண்டும் அதே வியாபாரக் குரல். அதிர்ந்து போனேன், அலைவரிசையின் குரலில் மெய் மறந்து போனேன்.
தங்களின் அலைவரிசையும் அறிவிப்பாளர்களும் வலுவான முறையில் தரமான தமிழ் உச்சரிப்புகளுடன் (தங்களின் தமிழ் பயன்பாட்டைக் கண்டு எப்பொழுதும் வியக்கும் ஒரு சராசரி இரசிகனின் வேண்டுகோள்), தமிழ் சமூகத்தை உயர்த்தியும் அவர்களின் சிந்தனைகளை வளர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகளோடு, யாரையும் ஏமாளிகளாக மாற்றாத விவேகத்துடனும் இப்பொழுது போலவே எப்பொழுதும் இயங்கும் என பெரும் எதிர்ப்பாப்புகளுடன் இருக்கிறேன்.
மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)
இறுதியாக மீண்டும் ஒரு கவிதையோடு முடித்துக் கொள்கிறேன் என்கிற குற்ற உணர்ச்சி அதிகமடைகிறது.
“ஒரு மண்புழுவைத்
தேடுவதற்கு நிகரான
மும்முரத்துடன் கிளறி கிளறி
தேடிக் கொண்டிருக்கிறேன் தமிழையும்
நால்லாளுமைமிக்க வரிகளையும்
பாடலையும்
கிடைக்கவில்லை என்கிறபோது
தூரத்திலிருந்து ஒலிக்கிறது
எனது மங்கிப் போன வானொலி
“எஞ்சாய்லா. . . இது எப்படி இருக்கு?"
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி