இப்படத்தின் வியாபாரம் மலேசிய சூழலில் கொஞ்சம் வித்தியாசமானவை. கார்த்திக்
ஷாமலன் என்கிற மலேசிய இளைஞரால் இயக்கப்பட்டு டீவிடியின் மூலம் இப்படம் வெளியாகியுள்ளது.
நண்பர்கள், முகநூல் மூலம் இப்படம் தொடர்பான பகிர்வுகள், விமர்சனங்கள் பரவியப்படியே
உள்ளன. இன்று பதாகைகளோ அல்லது பத்திரிகைகளோ அவையனைத்தையும்விட முகநூல், தகவல்களைச்
சேர்ப்பதிலும் மக்களை இணைப்பதிலும் முதன்மை வகித்து வருகின்றது. கார்த்திக் ஷாமலனால்
முகநூலில் இப்படம் குறித்து பெரிய அலையை உருவாக்க முடிந்துள்ளது. அடுத்து வரும் இளம்தலைமுறை
படைப்பாளர்கள் பத்திரிகைகளில் காலில் விழாமலும் விளம்பர நிறுவனங்களுடன் சமரசம் செய்துகொள்ளாமலும்
மக்களை அடைய இதுபோன்ற முயற்சிகள் அவசியம் என்றே கருத முடிகிறது.
கதை
படித்த மேல்தட்டு பெண்ணொருவரின் (ஸ்வஸ்னா) வாழ்வில் நிகழும் ஒரு துர்சம்பவத்தைச்
சுற்றிய கதை இது. புகைப்பழக்கமுள்ள ஒரு துணிச்சலான பெண்ணாகக் காட்டப்படும் அவர் ஒரு
நாள் வேலை முடிந்து வரும் வழியில் லோரோங் சந்தில் இன்னொரு பெண் ஒரு ஆசாமியால் பாலியல்
வல்லுறவு செய்யப்படுவதை நேரில் பார்த்துவிடுகிறார். அங்கிருந்து அவர் மிகப்பெரிய பாதிப்பிற்க்குள்ளாகுவதாக
மீதிப்படம் நகர்கிறது. அதாவது இப்படத்தை இரண்டு விதமாகப் பிரித்துணர முடிகிறது. ஒன்று
கற்பழிப்பு சம்பவத்திற்கு முன்பான அவருடைய வாழ்க்கை அடுத்ததாக அந்தக் கற்பழிப்புச்
சம்பவத்திற்குப் பிறகான அப்பெண்ணின் வாழ்க்கை. ஒரு கற்பழிப்புச் சம்பவம் கதையின் மையமாக
இருந்து கதையின் இருவழி பாதையைத் தீர்மானிக்க உதவுகிறது.