Tuesday, September 22, 2015

சிறுகதை: கொலையாளிக்கும் கொலைக்கும் கொல்லப்படுபவனுக்கும்



“என்னால ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியாது…உன்னைக் கடத்த சொன்னாங்க…கொலை செய்ய சொன்னாங்க…அவ்ளத்தான்”

“கொஞ்ச டைம் கொடுங்க. நான் பேசணும். சாகப் போறவனோட கடைசி ஆசைனு நினைச்சிக்குங்க சார்”

“பேசு…நீ பேசி முடிஞ்சோன உன் கழுத்தை இந்தக் கத்தியால அறுப்பேன்”

“எனக்கு ரெண்டு பிள்ளைங்க. இப்பத்தான் ஒன்னுக்கு 5 வயசு இன்னொன்னுக்கு 2 வயசு. மனைவி இல்ல. ஒரு விபத்துல செத்துட்டாங்க”

“உன் குடும்பக் கதைய ஏன் என்கிட்ட சொல்ற?”

“கேளுங்க சார்…ப்ளிஸ்… என்ன சாகடிக்கப் போற நீங்க யாருன்னும் தெரியல. ஏன் என்னைக் கொலை செய்யப் போறீங்கன்னும் தெரியல. உலகத்துல இப்படிப்பட்ட சாவுத்தான் கேவலமானதுன்னு நினைக்கறன் சார்”

“உனக்கே தெரியுதுல. அப்ப செத்துரு”

“ப்ளிஸ்…முதல்ல நான் பேசறத கேட்டுருங்க… எனக்கும் என் சொந்தக்காரவங்களுக்கும் நிறைய சொத்து பிரச்சனை. என் அக்காவோட பையன நான் படிக்க வைக்கலனு, என் அக்கா கோச்சிக்கிட்டுப் போச்சி. எனக்கு ஒரே மாமா அவரும் வெளிநாட்டுக்குப் போய்ட்டாரு. மத்தப்படி எல்லாமே தூரத்து சொந்தம்தான். இப்ப இவுங்க யாருகிட்டயும் உதவி கேட்கவும் முடியாது…யாரும் உதவிக்கும் வரமாட்டாங்க. என் பிள்ளைங்க அனாதையா நிக்குங்க சார்”

“டேய்ய்ய் உன் வாயில இந்தக் கத்திய சொருவி வயித்துல எடுத்துருவன்…நானும் அனாதைத்தான் தெரியுமா? யாரும் இல்லாத்தைப் பத்தி என்கிட்ட கதை அளக்காத…நான் மடிய மாட்டென்”

“அனாதையா வாழ்றதோடு கொடுமை உங்கள விட வேறு யாருக்கும் தெரியும் சார்? நீங்களே புரிஞ்சிக்கலன்னா எப்படி?”
“தெரியவும் வேணாம் புரியவும் வேணாம்…எனக்கு காசு கொடுத்துருக்காங்க. என் வேலைய செஞ்சிட்டு நான் போய்க்கிட்டே இருப்பேன்”

“சார் சார்…நீங்க கொலை செய்யும்போது உங்களால கொலை செய்யப்படறவனோட கண்ணைக் கடைசியா பார்த்திருக்கீங்களா?”

“இல்ல…ஏன்?”

“சார் ஒரு தடவ பாருங்க சார்…கொலை செய்றதுக்கு முன்னால என் கண்ணை மட்டும் பாருங்க…சார் வாழ்றதோட அருமை சாவின் கடைசி நுனிக்குப் போற வரைக்கும் தெரியாதாம்…நான் அங்கத்தான் சார் இருக்கென். எனக்கு நல்லா தெரியுது சார்”

“டேய்ய்ய்! சும்மா பேசிக்கிட்டு இருக்காத…எனக்கு எந்த ம…..தெரிய வேண்டாம்…எனக்கு மணியாச்சி”

“சார் உங்களுக்கொரு குடும்பம் மனைவி பிள்ளைங்க இருந்திருந்தா இப்படி யோசிப்பீங்களா?”

Saturday, September 12, 2015

சிறுகதை: சொல்லின் நெடி


இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி உடலில் நெளிகிறது. பயணங்களில் கிடைக்கும் ஓர் அர்த்தமற்ற தனிமை விசாரணைகளற்றது. எவ்வித யோசனையுமின்றி வெறுமனே வெளியைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தவம். காலையில் வேலைக்குப் போனால் மீண்டும் திரும்ப இரவாகும் நாட்களில் அது நமக்கு கிடைக்காது.

‘The next station is Butterworth’

என்னை நான் கவனிக்கும் ஒரு தருணம் எப்பொழுதும் கிடைத்ததில்லை. அவசரமாகத் தலை சீவும்போது கண்ணாடியில் நான் என்னைக் கவனித்ததில்லை. அதுவொரு சடங்கைப் போல பகட்டுமேனியைக் கவனிக்கும் நேரம் மட்டுமே. ஆனால், அன்று முதன்முறையாகப் பல நாட்களுக்குப் பிறகு என்னை நான் உற்றுக் கவனிக்கும் ஓர் இடைநிலைப்பள்ளி மாணவனாக மாறினேன். என் எதிர் நாற்காலியில் வந்தமர்ந்த பெண் யாராக இருக்கும்? அவளை நான் அத்தனை ஆச்சர்யமாகப் பார்ப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு பெண்ணை, அதுவும் நமக்கு அறிமுகமில்லாத ஒரு பெண்ணை அப்படி நான் பார்த்ததில்லை. வாய் சொல்லில் இருக்கும் வீரம் ஒரு பெண்ணின் கண்களை எதிர்க்கொள்ளும்போது தாவி குதித்து உள்ளுக்குள் போய் கொடூரமாகச் சுருண்டு படுத்துக்கொள்ளும் இரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். அன்று அவளை அப்படிப் பார்த்த மாத்திரத்தில் நான் என்னை வெகுநாட்களுக்குப் பிறகு துல்லியமாகக் கவனிக்கத் தொடங்கினேன். காற்சட்டையின் ஓர் இடத்தில் ஏதோ அழுக்குப் படிந்திருந்தது.

கால் மேல் காலைப் போடுவதைப் போல செய்து அதனைத் துடைத்தேன். கண்ணாடியில் வெளிக்காட்சியைப் பார்ப்பதைப் போன்று முடியைச் சரி செய்தேன். மீண்டும் அவளைப் பார்த்தேன். ஓர முடி அவள் வலது கண்ணை மறைத்தவாறு குறுக்காக விழுந்து கிடந்ததுபெண்களின் அனைத்தையும் இரசிக்கும் ஒரு சுபாவத்தை ஆண்களுக்கு இயற்கை வழங்கிவிட்டிருக்கிறது. சட்டென எழுந்துபோய் அவள் அருகில் அமர்ந்து கொள்ள மனம் துடித்தது.

நான் ஒரு பேச்சாளன். நாடு முழுவதும் சென்று தன்முனைப்பு உரை வழங்குபவன். பெரும்பான்மையான பேருக்கு என்னைத் தெரியும். நான் இப்படி அற்பத்தனமாக நடந்து கொள்வது சரியா? மீண்டும் கால் மேல் காலிட்டு உசுப்பும் என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயன்றேன். ஒரு பேச்சாளனுக்கே உரிய ஞானப்பார்வையை வரவழைக்க முயன்று தோற்றேன். மீண்டும் கண்கள் அவளைத் தேடின.

ஏதாவது பேச வேண்டும் என மனம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. யாரோ குச்சியைவிட்டு மனம் என்ற பிரமையான ஒன்றைத் திடப்பொருளாக்கி உள்ளே கணக்க வைத்துவிட்ட திடீர் அலர்ஜிக். அவள் தன் கைப்பேசியையே கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் அப்படிக் குனிந்து கொண்டு கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் தோரணையும் உதட்டில் சட்டென உருவாகி மறையும் மெல்லிய சிரிப்பும் எப்பொழுது வேண்டுமென்றாலும் களையலாம் என்கிற நுனியில் தத்தளித்துக் கொண்டிருந்தன. இந்தியப் பெண்கள் எப்பொழுதும் உடனே பேசிவிட மாட்டார்கள். ஒரு எளிய சிரிப்புக்குக்கூட ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

அவள் கண்கள் விரிந்து மீண்டும் அமைதி கொள்வதில் என்னால் அப்படி மட்டுமே அனுமானிக்க இயன்றது. கண்ணாடியில் தெரியும் அவளின் பிம்பத்தைக் கவனித்தேன். சற்று திரும்பி என்னையும் பார்த்தேன். பாதி விழுந்துவிட்ட வழுக்கை. திடீரென மனம் என்னிடமிருந்து விலகி நின்றது. அவள் பளிச்சென்ற நிறத்தில் இருந்தாள். என்னைவிட இளமையாகவும் தெரிந்தாள்.