சமூகப் பிரச்சனைகளுக்குப் பின்னணியில் அரசியல், கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் எனப் பல அரிய விரிவான தாக்கங்கள் உண்டு. அவையனைத்தையும் எந்த அறிவுசார் புரட்சியும் மெனக்கெடலும் இல்லாமல் ஒரு மாஸ் கதாநாயகனை வைத்துத் தீர்க்க முடியும் என மீண்டும் மீண்டும் இந்த வகை தமிழ்சினிமா நம்மிடம் அம்புலிமாமா கதைகளையே சொல்லிக்கொண்டிருக்கின்றன.
ஜில்லா - வீரம் இரண்டுமே பொங்கல் வெளியீடு. சாமர்த்தியமாக இரு படங்களுக்கும் ஒரே மதிப்பெண்ணை வழங்கித் தப்பித்துவிடும் சில அக்கறையற்ற வலைப்பதிவாளர்களும் தனித்தனியே இரு படங்களையும் உயர்த்திக் கொண்டாடும் இரசிகர்களும் இப்படங்களின் மீது நிஜமான விமர்சனங்களை வைப்பதில்லை. எல்லாம் மசாலாவையும் கலந்து தடவி கோழியைப் பொறிச்சி அதில் அம்மாவிற்கு ஒரு துண்டு , தங்கைக்கு ஒரு துண்டு, அப்பாவிற்கு ஒரு துண்டு, மிச்ச எலும்பை காதலிக்கு, எனப் பகிர்ந்தளிக்கும் வழக்கமான மசாலாத்தான் 'ஜில்லா'.
தொட்டுக்கொள்ள கொஞ்சம் சமூக அக்கறை மற்றும் சமூகப் பிரச்சனை. சமூகத்தில் நடக்கும் எல்லாம் பிரச்சனைகளையும்(அதன் தனித்தனியான அரசியல் அறியாமல்) தீர்ப்பதற்கு ஒரு மாஸ் கதாநாயகன் வேண்டும். (ஒரு சூப்பர்மேனைப் போல). 'இவன் வேற மாதிரி' படம்கூட அந்த வகையைச் சேர்ந்தது என்றாலும் பாண்டிய நாடு என்பதும் சமூகக் கதை என்றாலும் அவை இரண்டிலும் கதைக்கான கச்சிதம் இருக்கும்.