Monday, August 9, 2010

சிறுகதை: மூனாம் நம்பர் அறை எங்க இருக்கு?

தாத்தாவிடம் சொல்லிக்கொள்ளாமல் வந்திருக்கக்கூடாதுதான். என்ன செய்வது? பின்வாசல் கதவைச் சத்தமில்லாமல் திறந்து மூடும்போது தாத்தாவின் முகம் ஒரு பூச்சாண்டியைப் போல விரிந்து எழ, ஒரு சிறு தடுமாற்றம். எப்படியோ அவருக்குத் தெரியாமல் பள்ளிக்கு வந்தாயிற்று. 10 நிமிடம் நடந்தால் தாத்தா பள்ளியை வந்தடைந்துவிடும் அளவிற்குப் பள்ளியின் நெருக்கம் மேலும் பயமுறுத்தியது. தாத்தா இன்று காலையிலேயே குடித்திருந்தார்.

“டெய் உங்கப்பன் மவனே!” எனக் கத்திக் கொண்டே தாத்தா பள்ளியின் வாசல்வரை வந்து நின்றுவிட்டால், அன்று நான் தொலைந்துவிடுவது நிச்சயம். குறிப்பாக என் வகுப்பில் பயிலும் குமரனும் தர்மேந்திரனும் அடுத்த ஒரு வாரத்திற்கு என்னைப் பற்றி அரட்டையடிக்க கிளம்பிவிடுவார்கள்.

வழக்கமாகச் சொல்வது போல “குடிக்கார தாத்தா பெத்த மவனே” என்பார்கள். என்னை என் தாத்தா பெற்றெடுக்கவில்லை எனச் சொன்னாலும் நம்பமாட்டார்கள். தாத்தாவுடன் இருக்கும் ஒரு காரணத்திற்காக தாத்தா வெளியில் வாங்கிக் கட்டிக் கொண்டு வரும் அவப்பெயர்களில் எனக்கும் சிறிய பங்குக் கிடைத்துவிடுவது உறுதி. உயரமான தோற்றம், மெலிந்துபோன உடல், நரைத்துப் போன மயிர். தடிப்பான மீசை. ஏறக்குறைய தமிழ் சினிமாவின் வில்லன் போலத்தான் இருப்பார். அமைதியாகப் பேசுவதோ அல்லது மலாய்மொழி கலக்காமல் பேசுவதோ தாத்தாவிற்குக் கைவராது.

போட்டிக்கு வந்திருக்கும் அனைத்து மாணவர்களையும் அழைத்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் இலக்கியப் போட்டிகள் துவங்கப்படவுள்ளது. கவிதை ஒப்புவிக்கும் போட்டிக்காகப் பாரதியார் கவிதை ஒன்றைத் தேர்வு செய்து பயிற்சியும் எடுத்துவிட்டு, இன்று எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் நின்றிருந்தேன்.

“டெ. கவிதையும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். இன்னிக்குத்தான் சுக்குள் நாள் இல்லையே, எவன் வைக்கறான் உனக்குப் போட்டி?”
“தாத்தா. . இந்த மாதிரி போட்டிலாம் சனிக்கிழமைத்தான் வைப்பாங்க. பிளிஸ் தாத்தா. ஒரு வாட்டி போய்ட்டு வந்துர்றேன்”

“அடி. . பிஞ்சிரும். ஒழுங்க வீட்டுலெ இரு. அப்பறம் இன்னிக்கு வேற உனக்கு காசு தரனும். காசா முளைக்குது இங்க?”

தாத்தா காலையிலேயே கத்திவிட்டு மீண்டும் படுத்து தூங்கிவிட்டார். அணிந்திருந்த பள்ளிச்சீருடையுடன் கையில் வைத்திருந்த பாரதியார் கவிதையும், இன்னும் விடியாத வெளி இருளும் மங்கிக் கொண்டிருந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என யாரிடமும் சொல்லாமல் ஓடி வருவது மிரட்டலாக இருந்தது. யாரோ பின்னால் துரத்திக் கொண்டு வருவது போன்ற பிரமையில் இதயம் படபடக்க பள்ளிக்கு வந்து சேர்ந்தேன்.

“கவிதை ஒப்புவித்தல், மூன்றாவது அறைக்குச் செல்லலாம்”

ஞாபகம் திரும்பியதும் நான் நின்றிருந்த மாணவர் வரிசை மெல்ல நகர்ந்தது. தூரத்தில் தாத்தா பள்ளியின் வெளிவாசல் கதவைத் திறந்துகொண்டு வருவதும் தெரிந்தது. பகீரென்றிருந்தது. கால்களும் கைகளும் நடுங்கத் துவங்கின. வரிசையிலிருந்த மாணவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டே படி ஏறிவிட்டேன். தாத்தா கட்டாயம் யாரிடமாவது என்னைப் பற்றி விசாரிப்பார். அல்லது ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டு என்னைத் தேடி அலைவார், அல்லது தலைமை ஆசிரியரைப் பார்த்து அவமரியாதையாகப் பேசுவார். ஏதாவது ஒன்று நடந்தாலும் என்னை அவர் தரதரவென பள்ளியிலிருந்து வெளியிலுள்ள சாலைக்கு இழுத்துக் கொண்டு போவது உறுதியாகிவிடும். போட்டிக்கு வந்திருக்கும் வேறு பள்ளி மாணவர்களுக்கும் என்னைப் பற்றி தெரிந்துவிட்டால்?

மூன்றாவது மாடியை அடைந்ததும், கீழே எக்கிப் பார்த்தேன். தாத்தா கோபு வாத்தியாருடன் பேசிக் கொண்டிருந்தார், கட்டாயம் என்னைத் தேடி வருவார் என உறுதியாகிவிட்டது. கவிதை ஒப்புவிக்கும் போட்டியும் அதன் போட்டியாளர்களும் என்னைவிட்டுத் தூரமாக விலகிச் செல்வது போல ஆகிவிட்டது. எனக்குப் பிடித்ததைச் என்னால் செய்ய முடியாதா? கையில் வைத்திருந்த பாரதியார் கவிதையை ஒருமுறை உற்றுப் பார்த்தேன். அதன் சொற்கள் இடம் மாறி நகர்வது போல தோன்றியது. மீண்டும் கீழே எக்கிப் பார்த்தேன். தாத்தா படிக்கு அருகில் வந்து நின்றிருந்தார். பாக்கேட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் அருகில் யாரோ ஒருவரை அழைத்து எதையோ கேட்டுக் கொண்டிருந்தார்.

“மூனாம் நம்பர் ரூம்பூ எங்க இருக்கு?” எனத் தாத்தா கட்டாயம் கேட்டிருப்பார். அந்த நபர் கையை மேலே உயர்த்தி இந்த மூன்றாவது அறைக்கு வரும் வழியைக் காட்டியிருக்கக்கூடும். இன்னும் 5 நிமிடத்தில் தாத்தா இங்கு வந்து என்னை அடித்து இழுத்துக் கொண்டு போகும்போது, “பொய் சொல்லிட்டு வீட்டுலேந்து ஒடியாந்துட்டியா” எனச் சொல்வார். அப்பொழுது எல்லோருக்கும் தெரிந்துவிடும் நான் பொய்க்காரன் என. இங்கிருந்து ஓடிவிடலாம் எனவும் தோன்றியது. போட்டிக்கான முதல் நபரைக் கவிதையை ஒப்புவிக்க அழைத்தார்கள். நான் மூன்றாவது போட்டியாளர். ஒருவேளை தாத்தா கொஞ்சம் தாமதமாக இந்த மூன்றாவது அறையைக் கண்டுபிடிக்க நேர்ந்தாலும், எனது கவிதையை ஒப்புவித்து முடித்துவிடுவேன்.

மீண்டும் அறைக்கு வெளியே தலையை நீட்டி பார்த்தேன். மூன்றாவது மாடியின் வரந்தா கோடியில் தாத்தா ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தார். எனக்கு வயிறு வலிப்பது போல் இருந்தது. கைகளின் நடுக்கம் அதிகரித்திருந்தது. மனதை எப்படித் திடப்படுத்துவது எனக்கூட தெரியவில்லை. கையில் வைத்திருந்த பாரதியார் கவிதை இனி பயன்படாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அதை எடுத்து சுருட்டி பாக்கெட்டில் வைத்துவிட்டேன். தாத்தா மூன்றாவது அறையின் வாசலில் வந்து நின்றார்.

“சுகுமாறன் இருக்கானா?” கவிதை ஒப்புவிக்கும் போட்டியை நடத்திக் கொண்டிருப்பவரைப் பார்த்து தாத்தா சத்தமாகக் கேட்டார். எனக்குப் பாதி உயிர் போய்விட்டது. வீட்டிலிருந்து ஓடிவரும் போது பின்வாசல் கதவை அடைக்க மறந்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது.

“சுகுமாறன் யாரு?”

எழுந்து நின்றேன். தாத்தா கையைக் காட்டி வெளியில் அழைத்தார். பயத்துடன் வெளியில் போய் நின்றேன். அறையில் இருந்த எல்லோரும் என்னையும் தாத்தாவையும் பார்த்தார்கள். தாத்தா அருகில் நெருங்கி வருவதைப் பார்த்ததும் அநேகமாக இங்கு ஒரு குட்டி யுத்தம் நிகழப் போவதை எல்லோரும் வேடிக்கைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள் எனத் தீர்மானித்துவிட்டேன். புறமுதுகைக் காட்டியவாறு திரும்பினேன். தாத்தா என் கையை இழுத்துப் பிடித்தார்.

“டெ! வந்துட்டெ சரி. . காசு வாங்கனயா? என்னத்தெ சாப்டுவெ? இந்தா பிடி 1 வெள்ளி இருக்கு. வச்சிக்க” எனக் கூறிவிட்டு தாத்தா மீண்டும் நடக்கத் துவங்கினார்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா